வில்லியம் காஸின் ஐம்பது இலக்கியத் தூண்கள் – (பாகம் நான்கு)

கல்லூரி முதல் வருடம் வரையிலும் நான் ஸ்டைனைப் படித்திருக்கவில்லை என்றாலும் தயாராக இருந்தேன். எந்த உரைநடையுமே என்னை இவ்வளவு பலமாகத் தாக்கியதில்லை. .. புத்தகத்தின் மையக்கதையான ‘மெலங்க்தா’ – வைப் படித்துவிட்டு அவர் எழுதியதனைத்தையும் எப்படி தீவிரமாக கவனிக்காமல் இருக்கமுடியும்? அதைப் படிக்கையில் எனக்கேற்பட்ட கிளர்ச்சி கிட்டத்தட்ட காய்ச்சலையே வரவழைத்து விட்டது. அதிகாலை ஒரு மணிக்கு அதைப் படித்து முடித்தவுடன் (அதைப் படிப்பதற்கே நினைத்திராத நான், வசீகரத்தால் ஏமாற்றப்பட்டு அதனுள்ளிழுக்கப்பட்டேன்) மீண்டும் முதலிலிருந்து படிக்கத் தொடங்கினேன்…. என் இலக்கியப்பணி மணந்து கொள்ளப்போகும் பெண்ணை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்பதையும் அறிந்து கொண்டேன். அதன் விளைவாக என் மணிப்பர்ஸ் எப்போதுமே மூன்று பெரும் முகங்களை சுமந்திருக்கிறது: வெர்ஜீனியா உல்ஃப், கொலெட் மற்றும் கெர்ட்ரூட் ஸ்டைனின் முகங்கள். ஒரு சினிமா படைவீரன் திரைப்பட பதுங்கு குழியில் கேட்பது போல் நீங்களும் கேட்பீர்களானால் அவற்றை வெளியே எடுத்து உங்களுக்கும் காண்பிப்பேன்.