வசந்த மண்டபம்

வேயுறு தோளிபங்கனை நான் சந்தித்தது ஒரு புத்தகக் கண்காட்சியில். அது ஒரு தற்செயலான சந்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும். சிதம்பரம் பூசலார் மடத்தில் தேசிய புத்தக நிறுவனத்தின் புத்தகக் கண்காட்சி நடந்த போது நூல்கள் வாங்க அங்கு சென்றேன். உலகின் பல பகுதிகளில் பிழைப்புக்கான பணியைப் பார்த்தவன் என்ற அடிப்படையில் எனக்கு பிராந்திய இலக்கியங்கள் மேல் ஆர்வம் இருந்தது. வாழ்க்கை என்பது மிகப் பெரிய நிலப்பரப்பாகவும் இலக்கியங்கள் அதில் பரவிக் கிடக்கும் மனிதர்கள் போலவும் நினைத்துக் கொள்வேன். வெங்கடேஷ் மாட்கூல்கர் காட்டும் பன்கர்வாடி தானே இந்தியா! ’’ஒரு குடும்பம் சிதைகிறது’’ எல்லா கிராமங்களின் கதையும் தானே. வட இந்தியாவை ‘’அக்னி நதி’’ வாசிக்காமல் புரிந்து கொள்ள முடியுமா? சாகித்ய அகாடமிக்கும் தேசிய புத்தக நிறுவனத்துக்கும் தனிப்பட்ட கவனம் கொடுத்து இந்திய நிலமெங்கும் இந்திய மண்ணின் கதை மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார் ஜவஹர் லால் நேரு. இன்று அவர் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார்கள். நேருவுக்கு ஒரு சின்ன சௌகர்யம் இருக்கிறது. காந்தி மீது எறியப்பட்டது போக மீதி கற்கள் தான் நேருவிடம் வருகிறது. நேரு போல நாட்டை நேசித்த- வறுமையாலும் வாய்ப்பின்மையாலும் – சீரழிந்து கிடந்த ஒரு மாபெரும் நாட்டின் ஏழை மக்களுக்காக சிந்தித்த ஒரு அரசியல்வாதி மீது கல்லெரிவது இயல்பானதே! தன் மீது கல்லெறிபவர்கள் தரப்பு என்ன என்று அவர் கேட்க விரும்பினார். அவர்கள் பேச்சை விட கற்களை விரும்பினார்கள். நேருவுக்குப் பின் இந்தியப் பிரதமரான எவரும் மானசீகமாக அவரையே பின்பற்றினார்கள். அந்த நாற்காலியின் ராசி அப்படி. எவ்வளவு தான் தடைகளையும் சூழ்ச்சிகளையும் தாண்டி வந்தாலும் ஆட்சியாளன் தன் குடிகளுக்கு தந்தை போல் இருக்க வேண்டியவன் என்பது அந்நாற்காலியில் அமர்ந்தவுடன் தெரிந்து விடுகிறது. அவரவர் பாணியில் அவரவர் முயற்சிக்கின்றனர்.

சீர்காழியில் வாழ்க்கையின் முதல் பதினேழு வருடம் இருந்தேன். பெற்றோரும் இரண்டு தம்பிமார்களும். அப்பா மளிகைக் கடையில் கணக்கு எழுதிக் கொண்டிருந்தார். கடை முதலாளி அப்பாவின் நண்பர். எனது தாத்தாவும் அவரது அப்பாவுமே நண்பர்கள். சின்ன ஊர்தானே! பெரிய கோவில் வடக்கு மட விளாகத்தில் வீடு. கோயிலும் உற்சவமுமே வாழ்க்கை என அந்த வாழ்க்கை முறைக்கு பழகிய ஒரு சமூகம். அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதால் அதைப் பற்றியும் முழுதாகத் தெரியும் என்று சொல்லி விட முடியாது. கோயிலில் சாமி கும்பிட்டு உற்சவத்தில் கலந்து கொண்டால் கடவுள் அருள் கிடைத்து லௌகிகம் செழித்து விடும் என்ற ஆழமான நம்பிக்கை ஊடுறுவிய சமூகம். என் விதி என்னை வேறுவிதமாக கொண்டு சென்றது. பிளஸ் டூ முடித்ததும் சென்னையில் பொறியியல் பட்டயப்படிப்பு. ஒரு பட்டறையில் படிப்பு முடித்ததும் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என் முன் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. சக பணியாளர்களின் மனோ உலகத்தில் இருந்து கொள்வது அல்லது பணியாளர்களுக்கும் முதலாளிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில் மானசீகமாகப் பொருத்திக் கொள்வது. இரண்டாவது முடிவை எடுத்தேன். அது முதலாளிக்கு நெருக்கமாகக் கொண்டு சென்றது. அவருக்கு ஆந்திரா சித்தூரில் ஒரு லாரி கம்பெனி இருந்தது. அதன் முழுப் பொறுப்பை என்னிடம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

ஒரு குட்டி முதலாளி போன்ற வாழ்க்கை. சித்தூருக்கு முன்னால் இரண்டு கிலோமீட்டரில் கிராமம். மெயின் ரோட்டை ஒட்டி ஒரு ஏக்கர் நிலம். அதில் தான் லாரி புக்கிங் ஆஃபிஸ் இருந்தது. வழக்கமான புக்கிங் ஆஃபிஸ்களைப் போலத்தான் தூசி படிந்து பழைய பொருட்களுடன் ஒழுங்கு இல்லாமல் கிரமம் இல்லாமல் கிடந்தது. வசிக்கும் இடத்திலும் பணி புரியும் இடத்திலும் தேவையில்லாததை நீக்க வேண்டும் என்பது முதல் விதி. அதுவே பாதி சிக்கலைத் தீர்க்கும். வாழ்க்கையில் தேவையில்லாததைத் தான் சேர்த்துக் கொள்கிறோம். தேவையில்லாததைச் சேர்த்துக் கொள்வதைத் தான் வாழ்க்கை என நம்பிக் கொண்டிருக்கிறோம். புற ஒழுங்கு கொண்டுவரப்படும் போது பணி ஒழுங்கு நிகழ்கிறது. நான் அப்போது வயதில் சிறியவன். கடுமையான உடல் உழைப்புப் பணிகளுக்கு அப்போதுதான் பழகியிருந்தேன். தொழிலாளர்களால் என்னை ஏற்க முடியாது. என்னுடைய எல்லைகளை அவர்களுக்கே உரிய விதத்தில் சுட்டிக் காட்டுவார்கள். பேச்சில் லேசான அவமரியாதை இருக்கும். எள்ளல் இருக்கும். லாரியில் லோடு ஏற்றிச் செல்லும் போது வேசிகளுடன் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து என் காதுபட அவர்களுக்குள் சத்தமாகப் பேசுவார்கள். மொழி புரியாது என்பதை சாதகமாக எடுத்துக் கொள்வார்கள். அவமரியாதையும் ஒழுங்கீனமும் கொண்ட அன்னிய மொழி வார்த்தைகள் அர்த்தத்தால் அல்லாமல் உச்சரிக்கும் விதத்தாலும் புரிந்து கொள்ளப்படுகின்றன. நானும் அங்கே வந்து மாதங்கள் ஆகியிருந்ததால் அவர்கள் பேசுவதை ஓரளவு உள்வாங்க செவிக்குப் பழக்கமிருந்தது. லோடு இறக்கி விட்டு ஷெட்டுக்குத் திரும்பியதும் ஆஃபிஸில் கணக்கு தாக்கல் செய்யாமல் சக டிரைவர்களிடம் காமச் சித்தரிப்பு நிகழ்த்திக் கொண்டிருந்த கம்பெனியின் சீனியர் டிரைவரை நான் செருப்பால் அடித்தேன். என்னை மீறி வந்த கோபம். இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் அது எனக்கு ஒரு வாழ்க்கைப்பாடத்தை சொல்லிக் கொடுத்தது. சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள செய்ய வேண்டியதைச் செய்ய தயங்கவே கூடாது. ஆஃபிஸைச் சுற்றி பத்து பதினைந்து பேர் இருந்தனர். விடுவிடுவென வந்து செருப்பைக் கழட்டி அடிக்க ஆரம்பித்தேன். நான் அப்படிச் செய்வேன் என யாரும் நினைக்கவில்லை. அங்கு உருவான திகைப்பின் இடைவெளி எனக்கு சாதகமானது. ஒரு செருப்பு காலில் இருந்தது. முகம், தோள்கள், மார்பு என என்னுடைய முஷ்டியால் தாக்கினேன். டிரைவருடைய உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. கொட்டிய ரத்தம் எனது கைகளில் பிசுபிசுத்தது. காலில் இருந்த ஒற்றைச் செருப்பைக் கழட்டி விட்டு ஆஃபிஸ் கொட்டகை வாசல் முன் நின்று கொண்டேன். டிரைவர் மெல்ல நடந்து அந்த இடத்தை விட்டு சென்றார். அந்த இடத்தில் குண்டூசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு ஒரு அமைதி உருவானது. எல்லாரும் அவரவர் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அப்படியே நின்றேன். அப்பா ஞாபகம் வந்தது. அம்மா சொல்லும் கதைகள் ஞாபகம் வந்தது. அப்பூதி அடிகள் கதை. தம்பிகளுடன் மைதானத்தில் விளையாடியது. சம்பந்தமில்லாமல் பல ஞாபகங்கள் வந்தன.  குளியலறைக்குச் சென்று வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து தலையில் மாறி மாறி ஊற்றினேன். ஆஃபிஸ் வந்து விநாயகர் படத்துக்கு அருகம்புல்லையும் ஏழுமலையான் படத்திற்கு காய்ந்த துளசி இலையையும் போட்டு விட்டு சம்பந்தரின் திருநீற்றுப் பதிகம் சொன்னேன். மனதில் துக்கம் அடைத்துக் கொண்டு வந்தது. என்னுடைய வழக்கமான வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.

ஒரு வாரம் கழித்து முதலாளி வந்தார். அந்த மாதத்தின் கணக்கினைக் காட்டினேன். வரவு பற்று விபரங்கள். வங்கிக் கணக்கின் இருப்பு. சில நிமிடங்களில் எல்லாம் பார்த்து விட்டார். நடந்த சம்பவம் பற்றி நானும் எதுவும் கூறவில்லை; அவரும் கேட்கவில்லை. அவரிடம் நடந்ததை பணியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அன்று மாலை டிரைவரின் மனைவி ஆஃபிஸுக்கு வந்திருந்தார். டிரைவர் மகனை தன்னுடைய சென்னை பட்டறைக்கு வரச் சொல்லி விட்டார். டிரைவருக்கு தர வேண்டிய சம்பளத்தை தன் கையிலிருந்து கொடுத்து விட்டு ரேணிகுண்டாவில் தன் நண்பரின் லாரி சர்வீஸ் முகவரி கொடுத்து டிரைவரை அங்கே போகச் சொன்னார். நான் நேற்று வந்தவன். டிரைவர் பல வருடம் வேலை பார்த்தவர்.

மூன்று வருடம் அங்கே போனது. பலவிதமான தொழிலாளர்களுடன் பழகக் கூடிய அனுபவம் கிடைத்தது. டிரைவர்கள், லோடுமேன்கள், ஹோல்சேல் மண்டிகள், விவசாயிகள், காட்டன் மில், அரசாங்க ஆட்கள் என பலவிதமான ஆட்களுடன் தொடர்பு இருந்தது. பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்கு வரும் லாரி டிரைவர்களின் பையன்களை கண்டித்து பள்ளிக்கு திருப்பி அனுப்பியிருக்கிறேன். அவர்கள் அட்மிஷனுக்காக பள்ளியிலும், பாலிடெக்னிக்கிலும் கல்லூரியிலும் சென்று பேசியிருக்கிறேன். நோய்வாய்ப்பட்டிருந்த தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். அவர்களுக்கு பலவிதமான விஷயங்களில் ஆலோசனை சொல்லியிருக்கிறேன். எல்லா இடத்திலும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய சுக துக்கங்களும் விருப்பு வெறுப்புகளுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. அங்கேயிருந்து பம்பாய். ஒரு ஃபேக்டரியில் சூப்பர்வைசர் வேலை. லாரி கம்பெனி வேலை எனது சக்திக்கு சிறியதாகத் தோன்றியது. ஊரிலிருந்து என்னுடைய ஒன்று விட்ட தம்பியை அந்த வேலையில் அமர்த்தி விட்டு பம்பாய் பயணமானேன். சீர்காழி, சென்னை, சித்தூர் மார்க்கமாக பம்பாய்.

பம்பாய் என்னை யார் என்று அடையாளம் காட்டியது. காலை ஷிஃப்டுக்கு டெர்மினஸுக்கு வந்து நிற்கும் போது அங்கு பொங்கிப் பிரவாகிக்கும் மனிதத் திரள் வாழ்வின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவனாக ஆக்கியது. நகரத்தில் மனிதன் தவிர்க்க முடியாத ஒருவனாகி விடுகிறான். கூடும் மனிதர்கள் ஒரு சக்தியாக உருவாகிவிடுகின்றனர். அங்கு தான் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன். பல ஹிந்துஸ்தானி கர்நாடிக் கச்சேரிகளுக்குச் சென்று இசை கேட்க ஆரம்பித்தேன். ஆங்கில ஹிந்தி சினிமாக்கள் பார்த்தேன். எனக்கான அபிப்ராயங்களை உருவாக்கிக் கொண்டேன். பொதுவாக இந்தியாவில் முதலாளிகள் மீது ஒரு கெட்ட அபிப்ராயம் உருவாகி விட்டது. வாழ்க்கையின் நிச்சயமின்மைகளுக்கு முன்னால் கைமுதலினைக் காப்பாற்றிக் கொள்வது என்பது கயிற்றில் நடப்பது போன்றது தான். உலகம் முழுக்க உழைப்புச் சுரண்டல் நிகழ்கிறது தான். மத அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறவர்கள் மக்களின் நம்பிக்கையை சுரண்டுவதை விட அரசியல்வாதிகள் சமூகத்தின் கருத்தியலை சுரண்டுவது விட அவர்களுக்குச் சமமாக அல்லது அவர்களைத் தாண்டி முதலாளிகள் சுரண்டி விட்டார்களா? லட்ச ரூபாய்க்கு தொழில் செய்பவனும் முதலாளி கப்பல் வைத்திருப்பவனும் முதலாளி . முதலாளி என்ற பேர் கொண்டவர்கள் எல்லாருக்கும் ஒரே அணுகுமுறை என்று இந்தியாவில் முடிவு செய்து விட்டனர். வாழ்க்கையின் உயிர்த்துடிப்பு கொப்பளிக்கும் பம்பாய் மாநகரம் மனிதன் உருவாக்கிய எல்லா விஷயங்களின் கண்காட்சி என்று சொல்லலாம். அங்கேயிருக்கும் யூத ஆலயங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆயிரக்கணக்கானோர் தொழுகை செய்யும் மசூதிகள். தேவி ஆலயங்கள். கணேஷ் உற்சவங்கள். அரசியல் கூட்டங்கள். சினிமா ஸ்டூடியோக்கள். பறவையியல் ஆர்வலர்கள். நாட்டிய நிகழ்ச்சிகள். பணம் உருவாக்கிய இயங்குமுறை என நினைத்துக் கொள்வேன். மாநகரின் இயங்குமுறையில் பணம் அடிப்படையாக இருப்பதால் வருடத்துக்கு ஓரிரு முறை நிகழும் கலவரங்களும் அதனுள் அடங்கியிருந்தது. ஊரடங்கு உத்தரவின் போது அறைக்குள்ளேயே இருப்பது. பக்கத்து அறைவாசிகள் அனைவருடனும் வெவ்வேறு மொழிகளில் பேசிக் கொள்வது. கலவரம் முடிந்த அடுத்த நாளே பம்பாய் தன் வழக்கமான முகத்துக்குத் திரும்பும்.

டெக்னிகல் பிரிவிலிருந்து என்னை சேல்ஸுக்கு மாற்றினார்கள். அகமதாபாத், ஜெய்ப்பூர், தில்லி பெங்களூர் என அலைச்சல். சந்திப்புகள். பேரங்கள். பின்னர் அதிலிருந்து கொள்முதல் பிரிவு. ஃபேக்டரிக்குத் தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்யக் கூடிய வாய்ப்புள்ள எனது மேன்ஷனில் வசித்த வங்காள இளைஞனிடம் என் ஃபேக்டரிக்கு எழுதச் சொன்னேன். அவர்களுக்கு இருந்த தேவைக்கு உடனே அப்ரூவல் செய்தார்கள். சந்தீபுக்கு தேவையான முதலில் பாதியை நான் என்னுடைய சேமிப்பிலிருந்து கொடுத்தேன். தொடர்ந்து ஆர்டர் கிடைத்து ஊக்கத்துடன் உற்பத்தி செய்து கொடுத்துக் கொண்டிருந்தான். அவனுடன் எனக்கு இருந்த பழக்கத்தை நான் ஃபேக்டரியில் சொல்லி விட்டேன். தரமான பொருள் கட்டுப்படி விலையில் கிடைத்தால் அதுவே நல்ல விஷயம் என ஒரே வார்த்தையில் சொல்லி விட்டார்கள். கம்பெனி என்னை வளைகுடாவுக்குப் போகச் சொன்னார்கள். அங்கே மூன்று வருடம். அப்போதுதான் இரண்டு தம்பிகளும் மாநில அரசாங்கத்தில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்தார்கள். பள்ளி ஆசிரியையாக பணி புரிந்த எனது உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன். சந்தீப் நான் வெளிநாட்டில் இருந்த போதும் கிரமமாக எனக்கு சேர வேண்டிய லாபத்தை மாதா மாதம் வங்கியில் செலுத்தி விடுவான். நான் ஊரிலிருந்து பலரை வளைகுடா நாடுகளுக்கு வரச் சொன்னேன். அதில் எனக்கு கணிசமான லாபம் இருந்தது. ஒரு கட்டத்தில் ஊருக்குப் போகலாம் என்று தோன்றியது. பம்பாய் வந்தேன். சந்தீப் மாதா மாதம் செலுத்திய லாபம் போக எனது முதலீட்டுக்கு ஒன்றரை மடங்கு பணம் தந்தான். கம்பெனியில் ஊருக்குப் போகப் போவதாக சொன்னேன். அவர்களும் கணிசமான ஒரு தொகையைத் தந்தனர். ஊருக்கு வந்து பூர்வீக வீட்டை செப்பனிட்டேன். ஒரு வேலி நிலம் வாங்கினேன். நாலு பசுமாடு வாங்கினேன். ஒரு பார்சல் கம்பெனிக்கு புக்கிங் ஆஃபிஸ் ஆரம்பித்தேன். எஸ்.டி.டி பூத் நடத்தினேன். வாழ்க்கை ஒரு விதமாகப் போகிறது. நிறைய மனிதர்களைப் பற்றியும் நிறைய வாழ்க்கையைப் பற்றியும் எனக்குத் தெரியும் என்பதால் என்னிடம் பலவிதமான கதைகள் இருந்தன. தினமும் மாலை நேரங்களில் மனைவிக்கு பலவிதமான கதை சொல்வேன். ஒரு சிறிய ஊரில் பிறந்து அதிலேயே வாழ நேர்ந்து விட்ட வாழ்க்கைமுறை அவளுக்கு. ரொம்ப ஆர்வமாகக் கதை கேட்பாள். என் மீது அவளுக்கு மனதில் மெல்லிய  பெருமிதம் உண்டு. வாழ்க்கை சௌகர்யமாகப் போகிறது. இரு குழந்தைகள். இன்னும் பள்ளியில் சேர்க்கவில்லை.

ஒரு நாள் மனைவி ஆச்சர்யமாகக் கேட்டாள். ‘’எப்படிங்க உங்களால எல்லா விஷயத்தையும் பத்தி உங்களுக்குன்னு ஒரு அபிப்ராயம் வச்சுக்க முடியுது?’’.

’’பல பேர் மத்தவங்க சொல்றதை கேட்டுக்கறாங்க. சில பேர் எந்த விஷயத்தையும் சொந்தமா யோசிச்சுப் பாக்கறாங்க. அது உலகத்தோட இயல்பு மீனா.’’

ஊருக்கு வந்து விட்டாலும் என்னால் அங்கே முற்றிலும் மனம் பொருந்தி இருக்க முடியவில்லை. சிறிய விஷயங்களில் மட்டுமே ஆர்வம் உள்ள மக்கள். அறிதலிலோ கற்றலிலோ வளர்ச்சியிலோ நம்பிக்கை இல்லாத சமூகத்தில் பொருத்திக் கொள்ள வேண்டியிருந்தது. சீர்காழியிலும் அதன் அருகில் உள்ள கிராமங்களிலும் உள்ள இளைஞர்களுக்கு வாலிபால், நெட் ஆகியவை வாங்கிக் கொடுத்து வாலிபால் அணிகளை உருவாக்கினேன். அந்த அணிகள் பயன்படுத்துவது போன்ற நூலகம் ஒன்றை எனது பார்சல் ஆஃபிஸின் ஒரு பகுதியில் நடத்தினேன். இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகளின் நூல்கள் உள்ள நூலகம். வைக்கம் முகம்மது பஷீர், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சிவராம் காரந்த், தாரா சங்கர் பானர்ஜி, தாகூர், குர் அதுல் ஐன் ஹைதர் மற்றும் பிரேம் சந்த். இந்திய கிராமத்தையும் இந்திய நகரத்தையும் எழுதும் ஒவ்வொரு படைப்பாளியும் இந்தியாவின் துடித்துக் கொண்டிருக்கும் ஒளி வீசும் உயிராக ஒன்றைக் கண்டடைகிறான். இந்தியப் படைப்பாளி எப்போதுமே ஒரு ஜன சமுத்திரத்தின் முன் நின்று அதனைக் காண்பவனாக இருக்கிறான். சிலர் அக்கடலுக்குள் சென்று கரை திரும்புகின்றனர். சிலர் கரையிலேயே நின்று கடலின் வெவ்வேறு வண்ணங்களைக் காண்கின்றனர். எப்படியாயினும் அவர்கள் எப்போதும் ஒரு கடலின் முன் நிற்கின்றனர். வரலாற்றின் கடல். பண்பாட்டின் கடல். மக்கள் கடல்.

வேயுறு தோளிபங்கனுக்கு இலக்கிய ஆர்வம் இருந்தது. அவன் வின்செண்ட் ஷீன் காந்தி பற்றி எழுதிய நூலை வாங்கினான். நான் தாரா சங்கரை வாங்கினேன்.

பில் போடும் பெண்ணிடம் தன் பெயரைச் சொல்லி சீர்காழி என்றான்.அவனுக்கு மீதி கொடுத்து அனுப்பிய பின் என்னுடைய பில் போட்டு மீதி கொடுத்தாள். நான் அவசரமாக நடந்து சென்று தெருவில் எனக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த அவனுடன் சென்று சேர்ந்து கொண்டேன்.

‘’வணக்கம் தம்பி! என்னுடைய பெயர் சபாபதி. சொந்த ஊர் சீர்காழி.’’

’’வணக்கங்க. என்னுடைய பேர் வேயுறு தோளிபங்கன். சீர்காழிக்குப் பக்கத்தில் சட்டநாதபுரம் என்னோட ஊர்’’.

’’சைவக் குடும்பமா? தேவாரத்தில இருந்து பேர் வச்சுறுக்காங்களே. வேயுறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன். கோளறு திருப்பதிகம் இல்லையா?’’

’’ஆமாம் சார்.’’

’’வித்யாசமான பேர் தம்பி’’

’’என்ன படிச்சிருக்கீங்க’’.

’’பி.காம் படிச்சுருக்கன். போன வருஷம் தான் டிகிரி முடிச்சன்.’’

சிதம்பரம் பேருந்து நிலையம் வந்து காரைக்கால் செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டோம். நான் என்னுடைய நூலகம் பற்றி சொன்னேன். வீட்டுக்கு அழைத்தேன். அவன் தயக்கம் இல்லாமல் வீட்டுக்கு வந்தான். அன்று மீனா வீட்டில் இருந்தாள். எங்களுடன் வேயுறு தோளிபங்கனும் உணவருந்தினான்.  சட்டநாதபுரத்தில் இருக்கும் அவனுடைய வீட்டுக்கு என்னை மீனாவையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வர சொன்னான்.

சில நாட்களுக்குப் பின் என்னுடைய சைக்கிளை எடுத்துக் கொண்டு சட்டநாதபுரம் சென்றேன். சந்நிதித் தெருவில் அவனுடைய வீடு இருந்தது. பழைய ஓட்டு வீடு. விவசாயப் பின்ணணிக்கே உரிய தயக்கங்கள் அவனது வீட்டுப் பொருட்களில் இருந்தது. பல வருட நாற்காலி. வலுவானது. ஆனால் கைப்பிடி மெல்லிய சணலால் கட்டி சரி செய்யப்பட்டிருந்தது. தேய்ந்து தேய்ந்து மெருகேறிய தேக்கு ஊஞ்சல். ஆடும் போது லேசாகக் கிரீச்சிட்டது. ஒரு ஷெல்ஃப் முழுக்க நிரம்பியிருந்தது இயங்காத வால்வு ரேடியோ. அதன் பக்கத்தில் சிறிய ஃபிலிப்ஸ் டிரான்ஸிஸ்டர். பித்தளை அண்டாக்கள் நீர் நிரப்பி முற்றத்தில் வெயில் ஏந்திக் கொண்டு அமர வைக்கப்பட்டிருந்தன. இரண்டாம் கட்டில் அடுக்கப்பட்டிருந்த விறகு கதவைத் திறக்கும் போது கண்ணில் பட்டது.

வேயுறு தோளிபங்கன் வீட்டில் அவனது தாத்தாவும் பாட்டியும் மட்டும் இருக்கின்றனர். அவனது சிறு வயதிலேயே அம்மாவும் அப்பாவும் தவறி விட்டார்கள். தாத்தா மரபான விவசாயக் குடும்பத்தின் பண்ணையார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

’’ஆறுமுகம் பிள்ளை மகனா நீ! டவுனுக்கு வந்தா உங்க கடையில தான் மளிகை வாங்கறது. பல வருஷ பழக்கம்பா. நீ என்ன செய்யற’’

பாட்டி மணல்மேட்டில் இருக்கும் தன் மகள் வீட்டுக்கு சென்றிருந்தார்.

வேயுறு தோளிபங்கன் அவர்களுடைய கோவிலுக்கு அழைத்துச் சென்றான். அறுநூறு ஆண்டுகள் பழமையான கோவில் என்று சொன்னதும் எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. மூன்று கிலோமீட்டருக்கு ஒரு கோவில் இருக்கும் பிராந்தியம்தான் என்றாலும் ஒரு குடும்பத்தின் பொறுப்பில் இருக்கும் புராதானமான சிறு கோவில் என்பது ஆச்சர்யமாக இருந்தது. சிவன் மங்களநாதர். அம்மன் மங்களாம்பிகை. ஆனைமுகன், ஆலமர்க் கடவுள், குமரன், ஆடல்வல்லான் ஆகியோரின் சிலைகள் ஈர்க்கக் கூடியதாய் இருந்தன. சமயக் குரவர்கள் நால்வரும் ஆடல்வல்லானை பார்த்துக் கொண்டிருந்தனர். உப்பனாற்றாங்கரையில் சைக்கிளில் ஒன்றரை மைல் சென்று ஒரு வயலுக்கு நடுவில் இருந்த வசந்த மண்டபத்தைக் காட்டினான். சுற்றி இருந்த வயல் அவர்கள் பொறுப்பில் இருப்பதாகச் சொன்னான். ஆற்றுக்கு அருகில் இருந்தாலும் வெள்ளம் ஏறி வந்தாலும் மண்டபத்துக்கு பாதிப்பு வராத அளவுக்கு அடித்தளத்தை உயர்த்திப் போட்டிருந்தனர். கல் கைப்பிடி செதுக்கப்பட்டிருந்த கற்படிக்கட்டுகள் மேலே ஏறிச் செல்ல அமைக்கப்பட்டிருந்தன. எண்கோண வடிவில் அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தின் எட்டு கற்தூண்களின் நான்கு பக்கங்களிலும் இராமாயண சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. ராமர் பட்டாபிஷேகம், அனுமர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு தாவிச் செல்வது. இராவணன் கைலாய மலையைத் தூக்குவது, சிவன் அவனை கால் விரலால் அழுத்துவது, குகன் கதை, விபீஷ்ண சரணாகதி ஆகிய சிற்பங்கள் இருந்தன.

’’அறுநூறு வருஷமாகவே கோடை காலத்தில இராமாயண காலட்சேபம் நடந்துருக்கு. இப்பவும் நடத்திக்கிட்டு வர்ரோம். சாயந்திரப் பொழுதில பட்டர் வந்து காலட்சேபம் செய்வார். அது முடிஞ்சதும் பறை வாத்தியத்தில  ராமாயணக் கதையைப் பாடி நிகழ்ச்சி நடக்கும். இப்ப சம்பிரதாயத்துக்கு இங்க ஆரம்பிச்சுட்டு கோயில்லயே காலட்சேபம் வச்சுடறோம். முடிக்கிற அன்னிக்கு இங்க கதை சொல்லி முடிச்சிக்கிறோம்’’

’’அடுத்த ஊர்ல தான் இருக்கோம். இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கறது இத்தனை நாளா தெரியலையே. ஆச்சர்யமா இருக்கு’’

’’இந்த கோவில் அறுநூறு வருஷமா எங்க குடும்பத்தோட பராமரிப்புல தான் இருக்கு. எங்க குடும்பத்தில ஒவ்வொரு வருஷமும் கோவிலோட வரவு செலவை பனையோலைல எழுதியிருக்காங்க. செல்லரிக்கற மாதிரி இருந்தா புது ஓலை எழுதி வச்சுட்டு பழசை மாத்தியிருக்காங்க. அந்த வகையில தாத்தா அவரோட தாத்தா அவருக்குப் பாட்டனார்ன்னு நூற்று ஐம்பது பேரோட தலைமுறை வரிசை எங்ககிட்ட இருக்கு. ஒரு தடவை கூட சந்ததி அறுபடல.’’

’’நாங்களும் கோயில மட்டுமே பாத்துக்கிட்டு இருக்கோம். குருக்கள் குடும்பமும் தலைமுறை தலைமுறையா எங்களுக்கு ஒத்தாசையா இருக்காங்க’’.

எனக்கு ரொம்ப வித்யாசமாக இருந்தது. பிரமிப்பாக இருந்தது.

’’எங்க குடும்பத்தில நாங்க யாருமே வெளியூர்ல உத்யோகம் வச்சுக்க மாட்டோம். வீட்டு ஆம்பளைங்க ஒரு கால பூஜையிலயாவது முழுக்க இருப்போம். வெளியூர் போகணும்னா ஒரு கால பூஜை முடிஞ்சு நிவேதனம் ஆனதும் கிளம்புவோம். மறுநாள் ஏதாவது ஒரு காலம் நிவேதனம் ஆகறதுக்குள்ள திரும்பிடுவோம்.’’

சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டாக்கள், ஆங்கிலேயர் மற்றும் இந்தியக் குடியரசு என பல ஆட்சிகளின் சித்திரங்கள் மனதில் வந்து போனது.குலோத்துங்க சோழனிலிருந்து நரசிம்ம ராவ் வரை வரலாறு அலையலையாய் ஆர்ப்பரித்து கொந்தளிப்பது போல் இருந்தது.

‘’இந்த காலத்தில சமயத்தை வேண்டாம்-னு நினைக்கறாங்க. சமயத்தை நீக்கிட்டா எல்லாம் சரியாயிடும்னு சொல்றாங்க. சமயம் மனுஷ வாழ்க்கைக்கு ஒரு ஒழுங்கை உருவாக்கவும் சமூகத்துக்காக வாழக் கூடிய மனுஷங்களுக்கு ஸ்தாபன பலம் கொடுக்கவும் உருவானதுதான். உலகம் முழுக்க அப்படித்தான் இருந்திருக்கு. அதுல ஏதாவது சிக்கல்னா அது மனுஷங்களால உருவானதுதான். அத சரி செய்யணும். சமயத்தை அடிச்சு நொறுக்கிட்டா எல்லாம் சரியாயிடும்னு நினைக்கறது தப்பு’’

வீடு திரும்பி போய் வந்த கதையை மீனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இரவு பாதி நேரத்தில் விழித்துக் கொண்டு ஈசி சேரில் அமர்ந்து கொண்டேன். தூக்கம் கலைந்த மீனா பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.

’’ஏன் தூக்கம் வரலியா’’

’’என்னன்னு தெரியல. தூக்கம் கலைஞ்சுடுச்சு.’’

’’அந்த கோயிலையும் மண்டபத்தையும் பத்தி நினைச்சுட்டு இருக்கீங்க.’’

அவள் என் மனதைப் பின் தொடரும் விதம் வியப்பைத் தந்தது.

’’அறுநூறு வருஷமா ஒரு குடும்பம் ஒரே விஷயத்தை எடுத்துக்கிட்டு செய்யறதுன்னு நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. எத்தனை தடை வந்திருக்கும். எவ்வளவு பிரச்சினைகளை பாத்திருப்பாங்க. எத்தனை சுக துக்கம். எத்தனை கால மாற்றம்.’’

’’அவங்களுக்கு கோயில்ங்கறதும் ஸ்வாமியும் ஸ்தூலமா இருக்கறதால அவங்க என்ன செஞ்சிருக்காங்கன்னு யோசிச்சு பார்த்து புரிஞ்சுக்க முடியுது. ஒவ்வொரு மனுஷனும் அவனோட அடுத்த தலைமுறைக்கு ஏதோ ஒரு அறிவுரையை அனுபவத்தை தர்மத்தை கொடுத்துட்டுத்தானே போறான். அது நமக்கு கிடைச்சிட்டுக்கிட்டே இருக்கறதால தான நாம இப்ப இப்படி இருக்கோம்’’

அவள் சட்டென சொன்ன அந்த உண்மை எனக்கு ஒரு பேரதிசயமாய் தெரிந்தது.

’’உனக்கு எப்படி மீனா இவ்வளவு அறிவு’’ என்று கேட்டு அவளை இழுத்து அணைத்துக் கொண்டேன்.

’’எல்லாம் உங்கள்ட்ட இருந்து வந்ததுதான்’’ என்று காதில் மெல்ல சொல்லி முத்தமிட்டாள்.

~oOo~

One Reply to “வசந்த மண்டபம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.