வெண்முரசு நாவல் – சொல்வளர்காடு – ஒரு பார்வை

மஹாபாரதத்தில், குருக்ஷேத்திரப் போர்ப்பகுதியைத் தவிர்த்துவிட்டால், மிகப் பெரிய பகுதி வனபர்வம்தான். சொல்லப்போனால், நிகழ்வுகள் ஒரு தலை தெறிக்கும் வேகத்தில் சென்று முடியும் சபாபர்வத்தின் இறுதி பகுதிகளுக்கும், பின்னர் தொடங்கவிருக்கும் போர்ப்பகுதிகளுக்கும் இடையில், வன பர்வம் சற்றே தொய்வு ஏற்படுத்தும் ஒன்று. அளவில் சிறியதான, விராட பர்வம்கூட கீசக வதம், இறுதியில் வரும் அர்ச்சுனன்- கௌரவ படைகளின் இடையேயான யுத்தம் என்று சுவாரஸ்யங்களைக் கொண்ட பகுதி. ஆனால், 12 ஆண்டு கால வனவாசம் அப்படி அல்ல. அதனால்தானோ என்னவோ அதில் ஏகப்பட்டக் கதைகள் இணைக்கப்பட்டுள்ளன. வெண்முரசு நூலாசிரியர் ஜெயமோகன் சொல்வது போல, பாரத தேசத்தின் பல்வேறு கதைகளையும் அதில் கொண்டு வந்து விடும் ஒரு நோக்கம் தெரிகிறது. ராமாயணம் முழுமையாகச் சொல்லப்படுகிறது. சத்தியவான் சாவித்திரி கதை, நள தமயந்தி கதை ஆகியவை அதில் மிக முக்கியமானவை. பின் அர்ஜுனன், பீமன் ஆகியோரின் நீண்ட இரு பயணங்கள், இடையே ஜயத்ரதன், சித்ராங்கதன், ஆகியோருடன் போர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அப்படியும் பாரதத்தின் தொய்வான பகுதி இதுவே என்றுதான் தோன்றும். மகாபாரதத்தை மறு உருவாக்கம் செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்த வனபர்வம் மிகுந்த சவால் அளிக்கக்கூடியது. அதில் எதை விடுத்து எதைச் சொல்வது?

இந்தக் குழப்பம் தனக்கும் இருந்தது என்று ஜெயமோகன் தன் சொல்வளர்க்காடு முன்னுரையில் எழுதியிருக்கிறார். அதனால், வனபர்வத்தின் நிகழ்வுகளில் மிக முக்கியமானவற்றை மட்டும் தொகுத்து தனது வெண்முரசு தொடரில் மூன்று நூல்களாக எழுதி முடித்துவிட்டார். சொல்வளர்க்காடு, கிராதம், மாமலர், மூன்றுமே வனத்தில் பாண்டவர்கள் தங்கியிருந்த காலம் பற்றியது என்பதைவிட, அவர்கள் பயணம் செய்தது பற்றிய நூல்கள் என்பதே சரியான விவரிப்பாகும். இவற்றில் சொல்வளர்க்காட்டில் திரௌபதியும், பாண்டவர்களும் ஒவ்வொரு வனமாக பயணம் செய்தாலும் அதில் உள்முகப் பயணம் அமையப் பெறுபவர் யுதிஷ்டிரர்தான். தருமன், அந்தப் பயணத்தின் மூலம் தர்மர் ஆகிறார் என்பதே சொல்வளர்க்காடு நாவலின் மையம்.

பாண்டவர்களுக்கு பெரும் அவமானத்தில் முடியும் சபாபர்வத்தின் பின் வாசகன் மனதில் எழும் கேள்வி ஒன்றுண்டு. இந்த அவமதிப்பை, கீழ்மையை, அதையும் தாண்டி, பாண்டவர்களுக்குள்ளும், திரௌபதிக்கும் அவர்களுக்கும் இடையேயும் உருவாகும் மன வேற்றுமையை அவர்கள் எப்படி கடந்து சென்றிருப்பார்கள் என்பதும்,, ஒவ்வொருவருக்கும் இடையேயான உறவு எப்படிப்பட்டதாக மாறியிருக்கும் என்பதே கேள்வி. அதற்கு மூல நூலில் பெரிய விளக்கமில்லை.அவ்வப்போது பீமனும், திரௌபதியும் வெளிப்படுத்தும் சீற்றங்களைத் தவிர கிட்டத்தட்ட எதுவுமே நடக்காதது போலவே அவர்கள் தங்கள் வீழ்ச்சியைக் கடந்து செல்கின்றனர். ஆனால் சொல்வளர்க்காடு நாவலின் ஒரு முக்கியமான அம்சம், திரௌபதி தர்மனிடம் கொள்ளும் விலக்கமும், அதை எதிர்கொள்ள முடியாத அவரது தவிப்பும், பின் அதைக் கடக்க தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளுதலும் ஆகும். அதே போல, பாண்டவ சகோதரர்களுக்குள் நடைபெறும் உரையாடல்களைக் கொண்டு, குறிப்பாக பீமன் அர்ஜுனன் ஆகியோரிடையே நடக்கும் உரையாடல்களைக் கொண்டு, அவர்களுக்குள் இருக்கும் அன்பும், நெருக்கமும், மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பீமனின் கசந்த, கூரிய நகைச்சுவை, அதனை சமன்படுத்தும், கசப்பு கலவாத எளிய அன்பை வெளிப்படுத்தும் அர்ஜுனனின் நகைச்சுவை, மற்றும், சகதேவனின் முழுமையான சமநிலை வாய்ந்த ஞானச் சொற்கள் என்று சகோதரர்களுக்கு இடையேயான உரையாடல்கள் நிகழும் பகுதிகள் ஆழமான அர்த்தம் பொதிந்தவையாய், தனி அழகு கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு வனமாக பாண்டவர்கள் பயணிப்பதை ஒவ்வொரு வனத்திலும் ஒரு உபநிஷதத் தத்துவச் சிந்தனை அறிமுகமாவதாக இணைத்து ஒரு தத்துவப் பயணமாகவும் செல்கிறது நாவல். உபநிஷத்துக்கள் பிறந்து, பெரிதும் விவாதிக்கப்பட்ட காலகட்டமாக உருவகித்து இது புனையப்பட்டுள்ளது என்று சொல்லவேண்டும். உபநிஷத்துக்கள் மட்டுமின்றி, அருக நெறி, பௌத்த நெறிகளும் இதில் விவாதப் பொருள் ஆகியிருக்கின்றன.

எவ்வளவோ தத்துவங்களைக் கேட்டு தன் மனதிலிருக்கும் குற்ற உணர்வைப் போக்கிக் கொள்ள தர்மன் முனைந்தாலும் எதுவும் அவரை சமாதானப்படுத்துவதில்லை. ஏனெனில், தனது தவறு மன்னிக்க முடியாத ஒன்று என்று அவருக்குத் தெரிந்தே இருக்கிறது என்பது மிக அருமையாக வெளிப்பட்டிருக்கிறது. பாண்டவர்களின் வனவாசத்தின்போது கிருஷ்ணன் அட்சய பாத்திரத்தை திரௌபதிக்கு அளிக்கும் கதைகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. மாறாக, அவர் பாண்டவர்களை வனத்தில் சந்திக்கும் சந்தர்ப்பம், கிருஷ்ணன் அஸ்தினபுரியில், சூதாட்டம் நடக்கும் வேளையில் ஏன் பாண்டவர்களுக்கு உதவ முன்வரவில்லை என்பதை விளக்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது. கிருஷ்ணனின் யாதவ குலத்தில் பிளவு உருவாகி விட்டதாகவும், அது பலராமரையும் கிருஷ்ணரையும் பிரிவுக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் கதை கட்டமைக்கப்பட்டுள்ளது. பாரத போரின் போது, பலராமர் நடுநிலை வகித்து தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டு விடுவதையும், யாதவர்களின் பெரும்பகுதியினர் கிருஷ்ணருடன் இல்லாமல் எதிர்த்தரப்பில் போர் புரிவதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், கிருஷ்ணன் தன் சகோதரனையும் சமூகத்தையும் மட்டுமல்ல, தன் காலத்தையும் கடந்த பார்வையைக் கண்டடையும் பயணம் ஒன்றை மேற்கொள்வதை நோக்கியே வெண்முரசின் இந்தப் பகுதியில் கதை பின்னப்பட்டுள்ளது புலப்படுகிறது. இது புரிந்து கொள்ளக்கூடியதுதான்.

இந்தப் பகுதியில்தான் மீண்டும் தனது நோக்கத்தை, தனது வேதாந்தத்தை, உபநிஷத்துக்களை அடிப்படையாக வைத்து தான் உருவாக்க நினைக்கும் சமூகம் குறித்து பேசுகிறார் கிருஷ்ணர். இதுவரை இருந்த வேத நெறிகளை விலக்கி, அல்லது இணைத்து, ஒரு புது ஞான நெறியை கிருஷ்ணர் உருவாக்கும் போக்கினை சொல்வளர்க்காடு படம் பிடித்துக் காட்டுகிறது. அது சாந்தீபனி முனிவரின் சமன்வய கொள்கை எனும் பெயரில் விவாதிக்கப்படுகிறது. ஜெயமோகனைத் தொடர்ந்து வாசிக்கும் ஒருவருக்கு இதில் சொல்லப்படுவது அவரது செல்லக் கோட்பாடான முரணியக்கம் எனும் தத்துவமே என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. “ஒன்றின் எதிர்நிலையும் அந்நிலை அளவே உண்மையானது என்று சாந்தீபனி கல்விநிலை சொன்னது’ என்ற வாசகத்தின் மூலம் இது தெளிவாகிறது. இதில் தருமன் கண்டு உரையாடும் சாந்தீபனி முனிவரின் வாய்மொழியாக கிருஷ்ணன் சங்காசுரனை வென்று பாஞ்சஜன்யத்தை கைப்பற்றுவதும், குருதட்சிணையாக கடல் கொண்டதாக நம்பப்பட்ட தன் ஆசிரியரின் மகனை (இந்த முனிவர்தான் அவர்) மீட்டளிப்பதும் வழக்கமான கதையிலிருந்து விலகி மிக வித்தியாசமான ஒரு கோணத்தில் சொல்லப்படுகிறது. இதற்கெல்லாம் அடிப்படையாக, வாழ்வு என்பது ஒரு லீலையா, அல்லது மாயையா, எனும் விவாதத்தில் அவன் தன் ஆசிரியரிடம் முரண்படுவதும், அதன் பயனாய், அவரிடம் தீச்சொல் பெற்று, ,அதுவே அவன் கண்டடையும் புதிய நெறிக்கு அடிப்படையாக அமைவதும் மிகச் சிறந்த உரையாடல்களின் மூலம் சொல்லப்பட்டுள்ளது.

நாவலின் ஒரு முக்கிய அம்சம் இது என்றால், திரௌபதியின் கடும் கோபத்தையும், தனக்கு கௌரவர் சபையில் நேர்ந்தது குறித்த கழிவிரக்கத்தையும், எதிர்கொள்ளும் கிருஷ்ணன் அவளிடம் சொல்லும் பதில் விவாதிக்கத்தக்க, முக்கியமான பார்வையாகும். இதுவரையில், திரௌபதி சபையில அவமானப்படுத்தப்பட்டதை ஒரு அபலைக்கு நேர்ந்த மிகத் துயரமான சம்பவமாகவே படித்து, கேட்டு, பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு இங்கு கிருஷ்ணன் அளிக்கும் விளக்கங்கள் அதிர்ச்சியையே ஏற்படுத்தும். அரசி என்று களமாட வந்ததற்குப்பின் பாஞ்சாலிக்கு நேர்ந்த அவமானங்கள் ஒரு எளிய பெண்ணுக்கு நேர்ந்தவை அல்லவென்றும் அரசியல் தோற்ற அரசிக்கு நேர்ந்ததென்றும் சொல்லி, அந்த நிகழ்வுகளுக்கு அவளையே பொறுப்பாக்குகிறான் கிருஷ்ணன். பாரதத்தை ஆளும் சக்ரவர்த்தியாக விரும்பியவர் தருமன் அல்லவென்றும் திரௌபதிதான் என்றும் கிருஷ்ணர் இங்கு சொல்வதற்கேற்ப முதலிலிருந்தே திரௌபதியின் பாத்திரம் கட்டமைக்கப்பட்டிருப்பது இங்கு பொருந்தி வருகிறது. பாரதத்தை அணுகிய நவீன இலக்கியகர்த்தாக்கள், சிந்தனையாளர்கள், அனைவரிடமிருந்தும் இந்நூலின் ஆசிரியர் விலகி நிற்கும் புள்ளி என்று இந்த இடத்தைச் சொல்லலாம்.நான் படித்தவற்றுள், பாரதி, ஐராவதி கார்வே, பி.கே பாலகிருஷ்ணன், எம்.டி. வாசுதேவன் நாயர், பைரப்பா, ஆகிய யாரும் இப்படியோர் திரௌபதியை உருவாக்கவில்லை. பாரதத்தின் மைய அச்சு துரியனின் மண்ணாசை என்பதைத் தாண்டி,, இங்கு திரௌபதியின் மண்ணாளும் ஆசை, பாரதத்தின் சக்கரவர்த்தினியாக முடிசூடும் பெருவிழைவு, என மாற்றுவது வெண்முரசின் முக்கியமான அம்சங்களில் தலையாயது. இது விவாதத்துக்குரியது என்பதிலும் சந்தேகமில்லை. கிருஷ்ணனுக்கும் திரௌபதிக்கும் இடையே நடக்கும் விவாதம், இந்நாவலின் இரு சிறந்த உச்சகட்டங்களில் ஒன்று.

இரண்டாவது, நிச்சயமாக வனவாசத்தின் இறுதியில் (வெண்முரசு தொடரைப் பொறுத்தவரையில், இந்த நாவலின் இறுதியில்) வரும் யக்ஷப் பிரச்னம். உண்மையில் இந்த நாவலின் 57 மற்றும் 58ம் அத்தியாயங்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த பகுதிகள் என்று எதிர்காலம் கொண்டாடும் சிறப்பு வாய்ந்தவை. பாரதத்தில் தருமனைத் தவிர இதர பாண்டவர்கள் வீழ்ந்துபட்ட விஷச் சுனையருகே யக்ஷன் ஒருவனால் தருமனை நோக்கிக் கேட்கப்படுபவையாக வரும் கேள்விகளை இங்கு தருமனின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, அவனது மூதாதையரும், ஆசிரியர்களும், சுற்றமுமே, அக்கேள்விகளின் தன்மைக்கேற்றவாறு எழுப்புவது போல அமைத்திருப்பது ஜெயமோகனின் அபாரமான கற்பனைக்கும் மேதைமைக்கும் சான்றாகும். இந்தப் பகுதிகளை நான் அவை வெளிவந்தது முதல் கணக்கற்ற முறை படித்து மகிழ்ந்திருக்கிறேன்.

பொதுவாகவே, வெண்முரசில் முதல் நாவலிலிருந்தே மேற்கோள் காட்டத்தக்க வகையில் மின்னும் வரிகள் வந்து கொண்டேயிருக்குமென்றாலும், சொல்வளர்க்காடு நாவல், தத்துவங்களுக்கு அதிகம் இடம் கொடுக்கும் ஒன்று என்பதால், அம்மாதிரியான வரிகள், புதிய அரிய, உச்சத்தைத் தொடுகின்றன. நான் ரசித்த சில வரிகளை தருகிறேன்.

“அன்பிலிருந்து விலங்குகளுக்கு விடுதலையே இல்லை. அன்பை அறுக்கத் தெரிந்த ஒரே உயிர் மானுடனே”

“மானுடம் உறவுகளால் பின்னப்பட்டது. பற்றே இதன் இயக்க விசை. அன்பென்று அதை சொல்கிறோம். இரக்கமென்று பிறிதொரு தருணம் கூறுகிறோம். நெஞ்சுருகாதவன் வாழ்வதே இல்லை. இங்குள்ள அனைத்தும் அவனுக்கு மறுக்கப்பட்டுள்ளது.”

“இவ்விசும்பும் புடவியும் பிரம்மத்தின் விளையாட்டுக்கள். செயலுக்குத்தான் தேவையும் இலக்கும் உண்டு. ஆடல் ஆடலின் இன்பத்திற்கென்று மட்டுமே நிகழ்த்தப்படுவது. அது ஆடியும் கன்னியுமாகி தன்னை பார்த்துக் கொள்கிறது. சிம்மமும் மானுமாகி தன்னைக் கிழித்து உண்கிறது. புழுவும் புழுவுமாகிப் புணர்ந்து புழுவாகப் பிறக்கிறது. அலைகளினூடாக தன்னை நிகழ்த்திக் கொள்கிறது கடல்.”

“கதைகளில் உள்ள ஒத்திசைவு வாழ்க்கையில் இல்லை. எனவே நாம் கதைகள் வாழ்க்கையை வழிநடத்தவேண்டுமென விழைகிறோம். கதை போல வாழ்க்கையை ஆக்க நம்மையறியாமலேயே முயல்கிறோம். அப்படியே கதை போல நிகழ்ந்தது என்பதே நாம் ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லும் உச்சநிலை பாராட்டு. அது கதையல்ல என்றால் கதையென்றாக்கிக் கொள்வோம். கதையென ஒத்திசையாத ஒன்றை நினைவிலிருந்தே அகற்றுவோம்.”

பீமனின் விருகோதரன் எனும் பெயருக்கு ஒரு அற்புதமான ஒரு விளக்கம் அளிக்கப்படுகிறது-

“அவருடைய பசி அதிலிருக்கிறது. அவர் சமைக்கும் உணவை உள்ளத்தால் உண்டு விடுகிறார். அவருள் அது சமைக்கப்பட்டு நம் நாவுக்கு இனிதாக மீண்டு வருகிறது. உண்டு புறந்தருதலால்தான் அவர் ஓநாய் வயிற்றர் எனப்படுகிறார்”.

மேலே உள்ளவற்றைப் போல சொல்லிக் கொண்டே போகலாம். இவை அளிக்கும் வாசிப்பின்பத்துக்காகவே சொல்வளர்க்காடு நாவல் படித்து ரசிக்கத்தக்கது.

தவிர, சாந்தீபனி ஆசிரமத்திலிருந்து வெளியேறும் கிருஷ்ணன், தன் ஆசிரியரின் இறந்த மகனை மீட்டுக் கொண்டு வரும் கதை, மாய மந்திர நிகழ்வுகள் நீக்கப்பட்டு, யதார்த்த தளத்தில் புனையப்பட்டிருக்கும் விதமும் சிறப்பானது.

இவ்வளவு சிறப்புகளுக்கிடையே ஒரு சில நெருடல்களும் இருப்பதைச் சுட்டத்தான் வேண்டியிருக்கிறது.

முதலாவது, மகாபாரதத்தின் சிக்கல்களுக்கும் பின் வரும் யுத்தத்திற்கும் பாஞ்சாலியின் தன்முனைப்பையே முதன்மைக் காரணமாக்குவது. இது காலகாலமாக பாரதத்தை அறிந்தவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். வெண்முரசு தொடரைப் பொறுத்தவரையில், இதற்கான பின்னணி துவக்கத்திலிருந்தும், குறிப்பாக வெய்யோன் நாவலில், பாஞ்சாலி இந்திரப்பிரஸ்தம் அமைக்க இடம் தேடும் தருணத்திலும் தரப்பட்டிருக்கிறது.(கூடவே, நாவலின் துவக்கத்திலிருந்தே குந்தி தேவியின் பாத்திரம் சற்றே குறுகிய மனமும் காழ்ப்பும் கொண்டதாகவே காட்டப்பட்டிருப்பதும், திருதிராஷ்ட்ரன் எப்போதும் பேரறத்தான் என்றே குறிப்பிடப்படுகிறது). இந்தக் கோணம் ஆண்களின் ஆணவமும் அதிகார ஆசையும் பின்னால் தள்ளப்பட்டு பெண்களின் தன்முனைப்பும், விழைவுகளுமே ஒரு பேரழிவுக்கு முழுமையான காரணம் என்பது போல புரிந்து கொள்ளப்பட இடம் தருகிறது.

இரண்டாவது நெருடல் , நாவலின் கட்டுமானத்திலும் சம்பவங்களின் முன்னுக்குப் பின்னுமான முரண்சித்தரிப்பிலும் உள்ளது. இந்நாவலில் கிருஷ்ணன் கம்சனைக் கொல்ல, தன்னை அக்ரூரர் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்திலிருந்து அழைத்துப் போவதாகச் சொல்கிறான். ஆனால், வெண்முரசு தொடரின் நீலம் நாவலில், இந்தச் சம்பவம், கோகுலத்தில் நடப்பதாகவே (ஒரு அற்புதமான அத்தியாயம் அது) எழுதப்பட்டுள்ளது. பின் மீண்டும், இப்போது வரும் ‘எழுதழல்’ நாவலின் 74 வது அத்தியாயத்தில், அக்ரூரர் இப்படிச் சொல்கிறார்- “நிமித்திகர் குறிதேர்ந்து கோகுலத்திற்குச் சென்று இளைய யாதவரையும் மூத்தவரையும் இங்கு இட்டு வந்தவன் நான்.” இது தொடரின் ஒருமையைச் சீர்குலைப்பதாகவே அமைகிறது.

இந்த நெருடல்கள் இருப்பினும்,, அண்மைக்கால நாவல்களில் அபூர்வமான வாசிப்பின்பத்தை வழங்கியதோடு, பல வகைகளில் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ள வகையிலும், இந்தியாவின் தொன்மையான தத்துவங்கள் மேல் பெரும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அமைந்த ஒரு படைப்பு என்பதிலும் வெண்முரசு தொடரிலேயே, முதற்கனல், நீலம் ஆகியவற்றோடு முதல்வரிசையில் நிற்கக்கூடிய படைப்பு இது என்பதில் சந்தகமேயில்லை.

பாரதத்தில் யக்ஷப் பிரச்னத்தோடு பாண்டவ வனவாசம் முடிந்து விடுகிறது, ஆனால், வெண்முரசு தொடரில், இன்னும் இரு நாவல்களிலும் பாண்டவ வனவாசம் தொடர்கிறது. அவை குறித்து இன்னொரு சமயத்தில் பார்க்கலாம்.

ISBN: 9788184937305
வெளியீடு: கிழக்கு
ஆண்டு: 2017
பக்கங்கள்: 728
வண்ணப் புகைப்படங்கள்: 58
செம்பதிப்பு: ₹ 1200.00
மென்னட்டை: ₹ 750.00

One Reply to “வெண்முரசு நாவல் – சொல்வளர்காடு – ஒரு பார்வை”

  1. வழக்கம் போலவே காத்திரமாகவும் கச்சிதமாகவும் சிறப்பாக எழுதியிருக்கிறார் சுரேஷ். மகாபாரத வனபர்வத்தின் அழகியலைக் குறித்து கட்டுரையின் தொடக்கத்தில் அவரது அவதானிப்புகள் அவரது தேர்ந்த இலக்கிய ரசனையைக் காட்டுகின்றன.

    // இந்த நாவலின் 57 மற்றும் 58ம் அத்தியாயங்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த பகுதிகள் என்று எதிர்காலம் கொண்டாடும் சிறப்பு வாய்ந்தவை. யக்ஷன் ஒருவனால் தருமனை நோக்கிக் கேட்கப்படுபவையாக வரும் கேள்விகளை இங்கு தருமனின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, அவனது மூதாதையரும், ஆசிரியர்களும், சுற்றமுமே, அக்கேள்விகளின் தன்மைக்கேற்றவாறு எழுப்புவது போல அமைத்திருப்பது ஜெயமோகனின் அபாரமான கற்பனைக்கும் மேதைமைக்கும் சான்றாகும் // என்கிறார் சுரேஷ். இவற்றிலுள்ள கற்பனை வசீகரமாகவும் ரசனைக்குரியதாகவும் உள்ளது என்பது உண்மையே. ஆனால் யக்ஷ பிரஸ்னத்தின் அழகு என்பதே எளிமையான கேள்வி பதில்கள் மூலம் தர்மத்தின் ஆழத்தையும் அகலத்தையும் விளக்கிவிடுவது தான். அதை இவ்வளவு உள்சிக்கல்களுடனுடன் மாய யதார்த்தக் கூறுகளுடனும் சித்தரிப்பது அழகிய ஈரவிழிகளில் அளவுக்கதிகமாக மையை எடுத்து அப்பி பயங்கரமாக ஆக்குவது போல இருக்கிறதே என்றும் சிலர், குறிப்பாக பொதுவான வாசகர்கள் கருத வாய்ப்பிருக்கிறது 🙂 இதே பாணியில் அட்சய பாத்திரம் குறித்த கதையையும் புனைந்திருக்கலாம். ஏனோ, அதை முற்றிலுமாக விட்டுவிட்டார்.

    // பாரதத்தின் மைய அச்சு துரியனின் மண்ணாசை என்பதைத் தாண்டி,, இங்கு திரௌபதியின் மண்ணாளும் ஆசை, பாரதத்தின் சக்கரவர்த்தினியாக முடிசூடும் பெருவிழைவு, என மாற்றுவது வெண்முரசின் முக்கியமான அம்சங்களில் தலையாயது // என்பது முக்கியமான புள்ளி. சத்யவதி, குந்தி, திரௌபதி என எல்லா மகாபாரதப் பெண்களும் வெண்முரசில் ஏறக்குறைய இதே பாணியில் சித்தரிக்கப் படுகிறார்கள். இலக்கிய, உளவியல் ரீதியாக இதற்கு ஏதேனும் காரணம் அல்லது பின்னணி இருக்கக் கூடுமா என்பது சுவாரஸ்யமான ஒரு கேள்வி.

    பாண்வர்கள் வனம் விட்டு வனம் செல்வதை ஒரு “தத்துவப் பயணமாக”வும் அமைத்திருப்பது சிறப்பானது தான். //உபநிஷத்துக்கள் மட்டுமின்றி, அருக நெறி, பௌத்த நெறிகளும் இதில் விவாதப் பொருள் ஆகியிருக்கின்றன // என்பது முகம்சுளிக்க வைக்கிறது. நல்லவேளை கிறிஸ்தவம், இஸ்லாம், முரண்பாட்டு இயங்கியல் ஆகியவை வரவில்லையே என்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளவேண்டியது தான் 🙂

    விஷ்ணுபுரம் நாவலை வாசித்த போது மெய்மைக்கான எனது தேடலில் அது சில திறப்புகளை அளித்தது என்பது உண்மை. ஆனால், இப்போது நான் வந்தடைந்துள்ள மனநிலையில் சொல்வளர்காடு அப்படியிருக்குமென்று தோன்றவில்லை. இந்த நாவல் வந்துகொண்டிருந்த போது “இளைய யாதவர்” தோன்றும் சில அத்தியாயங்களை மட்டும் வாசித்திருந்தேன். பிறகு தொடரவில்லை. ஆதாரபூர்வமான தத்துவ, வரலாற்று நூல்களை சம்ஸ்கிருதம், ஆங்கிலம். தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் நேரடியாகவே தொடர்ந்து கற்று வருபவன் நான். எனவே, இந்தியத் தத்துவங்களை அறிவதற்காகவோ அல்லது அவற்றின் வளர்ச்சியையும் முரண்களையும் வரலாற்று ரீதியாக புரிந்துகொள்வதற்காகவோ, இந்த நாவலை வாசிப்பதற்கான தேவையும் ஆர்வமும் எனக்கு இல்லை. ஆனால், கணிசமான வாசகர்கள் அவ்வாறு வாசிக்கக் கூடும். அதன்மூலம் சில ஆக்கபூர்வமான அறிதல்களோடு சில குத்துமதிப்பான, அரைகுறையான புரிதல்களை வந்தடையவும் கூடும் என்ற சாத்தியமும் உள்ளது. வேறு வழியில்லை. காத்திரமான விஷயங்கள் ஒரு இலக்கியப் படைப்புக்குள் உருமாற்றம் பெற்று வரும்போது எப்போதுமே நேர்வது தான் அது. எப்படியானலும் இவற்றை வாசிப்பவர்கள் சராசரி எழுத்துக்களை மட்டுமே வாசிப்பவர்களை விட தங்கள் பண்பாட்டுப் புரிதலில் பல படிகள் மேலே வந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஒரு இலக்கியப் படைப்பாக இந்த நாவல் கட்டாயம் வாசிப்பிற்குரியது என்றே தோன்றுகிறது.

    சொல்வளர்காடு என்ற அருமையான தலைப்பு சங்கரர் வாக்கிலிருந்து வருகிறது.

    ஶப்தஜாலம் மஹாரண்யம் சித்தப்ரமணகாரணம் | அய: ப்ரயத்னாத் க்ஞாதவ்யம் தத்தவக்ஞைஸ் தத்வமாத்மன: ||

    சொற்களின் (மாய) வலைப்பின்னல் என்னும் பெருங்காடு மனம் திரிந்து அலைவதற்கே காரணமாகிறது. தத்துவத்தை விழைபவன் அரிதின் முயன்று அவற்றின் உண்மைப் பொருளை அறிய வேண்டும்.

    – விவேக சூடாமணி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.