டாம் ஆல்ட்டர் என்றொரு  கலைஞர்

டாம் ஆல்ட்டர் – பெயரைப் பார்த்தாலே ஒரு இந்தியராகத் தெரியவில்லையே என்கிறீர்கள். ஆமாம். ஆனால் இந்தியாவின்   உத்தராகண்ட் (Uttarakhand) மாநிலத்தின் கோடை வாசஸ்தலமான மஸ்ஸூரி நகரில், அமெரிக்க வம்சாவளி பெற்றொருக்கு தாமஸ் பீச் ஆல்ட்டர் (Thomas Beach Alter)–ஆக 1950-ல் பிறந்து, அங்கேயே படித்து, வளர்ந்தவர். இந்திய மண், கலாச்சாரம் என மனம் ஒன்ற, அமெரிக்க பாஸ்போர்ட்டைத் தூக்கிப்போட்டுவிட்டு இந்தியர் ஆனவர். இந்தியம் என்பதை நாம் வரித்துக் கொள்ளவும் முடியும் என்பதற்கு ஒரு நட்சத்திர உதாரணம் டாம் ஆல்ட்டர்.

ஆல்ட்டரின் மூதாதையர்கள் அமெரிக்காவின் ஒஹையோவிலிருந்து இந்திய சுதந்திரத்துக்கு முன்பே கிறிஸ்தவ மதபோதகர்களாக வந்து இந்தியாவிலேயே தங்கிவிட்டவர்கள். இளம் பிராயம் முழுதும் டாம் ஆல்ட்டருக்கு இல்லம் என்பதும், வாழ்க்கை என்பதும் முஸ்ஸூரி, அருகிலுள்ள டேராடூன் மற்றும் தொடர்பான மலைப்பிரதேசமும், பள்ளத்தாக்கும்தான். பிறகுதான் இந்திய திரைப்பட, நாடக உலகங்கள் இளம் ஆல்ட்டரை இழுத்துப்போட்டுக்கொண்டன.

பொதுவாக ஒரு புகழ்பெற்ற நடிகரின் வாழ்க்கைபற்றிக் குறிப்பிடுவதென்றால் அவருடைய வாழ்நாளின் சிறந்த திரைப்படங்கள் அல்லது நாடகங்கள், வாங்கிய விருதுகள் எனச் செல்லும் கதை. ஆனால் டாம் ஆல்ட்டரின் கலைவாழ்வு அப்படி ஒரு சிறுவட்டத்திற்குள் முடங்கியதல்ல.  பன்முகத்திறன் வாய்க்கப்பெற்றிருந்த கலைஞரான அவருக்கு சினிமா, நாடக வெளிகளைத் தாண்டி, விளையாட்டு, மொழி, எழுத்து என விரிந்தது உலகம். இளம் வயதில் ஹரியானாவில் ஒரு பள்ளி ஆசிரியராகத்தான் வாழ்க்கை துவக்கம் காட்டியது அவருக்கு. ஆனால், 1969-ல் வெளியான ராஜேஷ் கன்னா-ஷர்மிளா டாகூர் நடித்து சூப்பர்ஹிட்டாகிக் கலக்கிய காதல் காவியமான ’ஆராதனா’ ஹிந்திப் படத்தை அவர் பார்க்க நேர்ந்தது அவருக்குள் ஒரு பொறியைக் கிளப்பிவிட்டது.  ஹிந்தி திரை உலகின்பால் ஈர்க்கப்பட்ட டாம் ஆல்ட்டருக்கு நடிப்பின்மேல் ஆசை கனலென எழுந்தது.  புனேயின் புகழ்பெற்ற ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து படித்தார். பின்னாளின் பல பாலிவுட் திரைப் பிரபலங்கள் அங்கு பயின்றவர்கள்.  ஹிந்தி நடிகை ஷபானா ஆஸ்மி அங்கே இவருக்கு ஒரு வருடம் முன்னரும், பாலிவுட் திரைப்பட மற்றும் நாடக ஆளுமையான நஸிருத்தீன் ஷா ஒரு வருஷம் அடுத்தும் பயின்றார்கள்.

பாலிவுட் திரைப்பட இயக்குனரான ராமானந்த் சாகரின் ‘சரஸ்’(Charas) என்கிற படத்தின்மூலம் ஹிந்தித் திரை உலகில் காலடி எடுத்துவைத்தார் டாம் ஆல்ட்டர்.  ஹிந்தியின் பல ஜனரஞ்சக வெற்றிப்படங்களோடு, சத்யஜித் ராய், மஹேஷ் பட், ஷ்யாம் பெனகல் போன்ற தரமான இயக்குனர்களின் படைப்புகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர் ஆல்ட்டர். அஸ்ஸாமியா, தெலுங்கு, குமாவூன் மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார் டாம் ஆல்ட்டர்.  300 திரைப்படங்கள், நாடகங்கள் என இந்தியக் கலை உலகில் பலவருடங்களாகப் பிரகாசித்த ஆளுமை.

சத்யஜித் ராயின் 1977 படமான ’ஷத்ரஞ் கே கிலாடி’ (The Chess Players), கிழக்கிந்திய கம்பெனியின் காலத்தில் மத்திய பாரதத்தின் ஒவ்வொரு சிற்றரசாக வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் வீழ்வதைச் சோகமாகப் படம்பிடித்துச் செல்கிறது. அதில், இந்திய ராஜ்யம் ஒன்றைக் கவிழ்க்கும் ரகசிய வேலை கொடுக்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியின் கேப்டன் வெஸ்டனாக ஒளிர்கிறார் டாம் ஆல்ட்டர். ஷ்யாம் பெனெகலின் ஜுனூன் [Junoon (Obsession),1979] மற்றும் ஹிந்தி வர்த்தக சினிமாவின் பிரபல இயக்குனர்களான ஹ்ருஷிகேஷ் முகர்ஜி, மன்மோஹன் தேசாய், ராஜ் கபூர், சுபாஷ் காய் (Subhash Ghai) விது வினோத் சோப்ரா ஆகியோரின்  படங்களில் பணிபுரியும் வாய்ப்புகள் கிடைத்தன ஆல்ட்டருக்கு.  மனோஜ்குமாரின் ’க்ராந்தி’, ராஜ் கபூரின் ‘ராம் தேரி கங்கா மேலி’, மஹேஷ் பட்டின் ’ஆஷிகி’ (Aashiqui), விது வினோத் சோப்ராவின்  ’பரிந்தா’ (’அண்ணாவாக வரும் நானா படேகருடன் நிழலுலக தாதா மூஸாவாக நடித்தார்), கேத்தன் மேஹ்தாவின் ‘சர்தார்’ (லார்ட் மௌண்ட்பேட்டனாக) மற்றும் பிரியதர்ஷனின் ’காலாபானி’ ஆகிய குறிப்பிடத்தக்க படங்களில் கவனம் கவரும் பாத்திரங்கள் அமைந்தன.  இரண்டு ஹாலிவுட் படங்கள் –  சர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் (Sir Richard Attenborough) விருது வென்ற ‘காந்தி’ யில் ஒரு சிறிய ரோல். மகாத்மாவின் காதில் அவரது மனைவி மரித்த செய்தியை சொல்லும் பிரிட்டிஷ் டாக்டராக வருகிறார். தனக்குப் பிடித்தமான ஹாலிவுட் நடிகரான பீட்டர் ஓ’டூலுடன் (Peter O’Toole) ‘One night with the King’ என்கிற படத்தில் நடித்துள்ளார். ஆல்ட்டர் நடித்த கலைப்படமான  (art film) ’Ocean of An Old Man’ என்கிற படம் உலகின் பல்வேறு திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு கவனம் ஈர்த்தது. இந்தியாவின் ஆங்கில மொழி எழுத்தாளரும் கவிஞருமான ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) எழுதிய சிறுகதையின் அடிப்படையில் பார்கவ் சைகியா (Bhargav Saikia) சமீபத்தில் எடுத்த  குறும்படமான The Black Cat -ல் ரஸ்கின் பாண்டாகவே நடித்திருக்கிறார் ஆல்ட்டர்.

பாரத் ஏக் கோஜ் (India – A search), கேப்டன் வ்யோம், ஷக்திமான், ஜுகல்பந்தி முதலான ஏகப்பட்ட ஹிந்தி டிவி சீரியல்களில் சீரிய பங்களித்திருந்தார் ஆல்ட்டர். கேமராவுக்கு முன் தன் சிறப்பான செயல்பாடு என ஹிந்தி டிவி தொடரான ஜுனூன்–இல் தன் நடிப்பைப்பற்றி அவரே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். ஸ்டார் ஹிந்தி சேனலில் ’ரிஷ்த்தோன் கா சக்ரவ்யுஹ்’ (சொந்தங்களின் சக்ரவியூகம்) எனும் நடப்புத்தொடரில் பிரதான பாத்திரங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார் அவர்.

அவருடைய வாழ்நாளின் பெரும்பகுதி நேரத்தை சினிமா, டிவி ஆகியவை உண்டபோதிலும், டாம் ஆல்ட்டரின் கவனம் நாடகத்துறையின் மீதிருந்தது. எண்ணற்ற வாய்ப்புகளை பாலிவுட் அவருக்கு அளித்தது என்பது உண்மை. ஆயினும், அவருக்குள் இருந்த படைப்புக்கலை தன்னை முழுதுமாகக் காட்டிக்கொள்ள அவை போதுமானதாக இல்லை.  பல ஆண்டுகளின் கடும் உழைப்புக்குப்பின், ஆல்ட்டருக்குள் உறங்கிக்கிடந்த கலாதேவியை இந்திய நாடக உலகம் முழுதுமாக வெளிக்கொணர்ந்தது. தியேட்டர் எனப்படும் நாடகக்கலை, டாம் ஆல்ட்டரின் கலைத் திறனுக்கு செம்மையாக மெருகூட்டிப் பன்மடங்காக்கிப் பரிமளிக்கச்செய்தது. காலப்போக்கில் தேர்ந்த நாடகக் கலைஞரென நாடக ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களை, மரியாதையை அவரிடம் கொண்டுவந்து சேர்த்தது. பாலிவுட் இயக்குனரும் நாடக நடிகருமான ப்ரகாஷ் ஜாவுடன் லாரின்ஸ் ஸாஹிப் (Larins Saheb), The Arms and the Man ஆகிய புகழ்பெற்ற நாடகங்களில் டாம் ஆல்ட்டர் பாராட்டத் தக்க பங்களிப்பை அளித்திருக்கிறார். நஸிருத்தீன் ஷா, பெஞ்சமின் கிலானி ஆகியோருடன் சேர்ந்து மோட்லீ (Motley Productions) எனப்படும் நாடகக்குழுவை 1979-ல் நிறுவி தரமான நாடக ஆக்கங்கள் மேடையேற உதவியுள்ளார். மௌலானா ஆஸாத் என்கிற பெயரில் உருதுவில் இரண்டரை மணி நேரம் நிகழும் ஸோலோ நாடகம் (dramatic monologue) உட்பட, காலிப் கே கத் (Ghalib – காலிபின் கடிதம் -உருது), லால் கிலே கா ஆக்ரி முஷைரா (செங்கோட்டையின் கடைசிக் கவியரங்கு-உருது), தீஸ்வீன் ஷதாப்தி (முப்பதாம் நூற்றாண்டு -ஹிந்தி), பாபர் கே ஔலாத் (பாபரின் வாரிசு -ஹிந்தி), த்ரிஸங்கா (ஹிந்தி), கோபன்ஹேகன் (ஆங்கிலம்) ஆகிய நாடகங்கள் கலைத்தரத்திற்கும் ஆல்ட்டரின் உன்னத நடிப்பிற்குமாகக் குறிப்பிடப்படுபவை.  The Becoming Room என்று பெயரிடப்பட்ட ஆங்கில நாடகமொன்றில் சைக்கோ-அனலிஸ்ட் வில்ஃப்ரெட் பயன் (Wilfred Bion)-ஆக வருகிறார் ஆல்ட்டர். ஆங்கில (ஸ்காட்டிஷ்) எழுத்தாளரான வில்லியம் டேல்ரிம்பிலின் கிட்டத்தட்ட ஒரு நாவலைப்போல் எழுதப்பட்ட டெல்லிபற்றிய பயணநூலான ‘சிட்டி ஆஃப் ஜின்ஸ்’(William Dalrymple’s City of Djinns-A year in Delhi -1993) ஐ, டெல்லியின் ராஹுல் புல்கேஷி ‘சிட்டி ஆஃப் ஜின்ஸ்’ என்கிற நாடகமாய்த் தயாரித்தளித்தபோது, அதில் எழுத்தாளர் வில்லியம் டேல்ரிம்பிளாக மேடையேறி அசத்தியவர் டாம் ஆல்ட்டர்.

’மோகன் ஸே மகாத்மா தக்’ (மோகனிலிருந்து மகாத்மா வரை), எனும் டாம் ஆல்ட்டர் நடித்த கடைசி நாடகம் ஒன்று, 1917-ல் காந்தி சம்பாரணில் நிகழ்த்திய முதல் சத்யாக்ரஹ போராட்டத்தை அரங்கிற்குக் கொண்டுவந்தது. அந்த நாடகம் சம்பாரண் மற்றும் டெல்லியில் இந்த ஜூலையில் மேடையேறி ரசிகர்களை வியப்பிலாழ்த்தியது. அதில் மகாத்மா காந்தியாக நடித்திருக்கும் டாம் ஆல்ட்டர், காந்தியின் நடை, உட்காருதல், பேச்சு, தலையசைப்பு, அமைதியான புன்னகை எனப் பலவித பாவனைகளைக் காட்டிக் கலக்கியிருந்தார்.  அந்த நாடகத்தில் அவர் அளித்திருப்பது சிறப்பான கலைஅனுபவம் என்கின்றனர் ரசிகர்களும், விமரிசகர்களும். ஆனால் அந்த நாடகத்தில் தன் நடிப்பு பற்றி டாம் ஆல்ட்டர் இவ்வாறு கூறினார்: ’மகாத்மா ஒரு ஒல்லியான குஜராத்தி. நான் அவரது பேச்சு மற்றும் உடல்மொழியைமட்டும் மேடையில் நகலெடுக்க முயற்சிக்கவில்லை. மாறாக, மகாத்மாவிற்கு மரியாதை செய்ய முயன்றேன். சம்பாரணில் ‘நாம் அதைச் செய்வோம், இதைச் செய்வோம்’ என்று முழங்கவில்லை காந்தி. ஆனால் செய்யவேண்டியதை செய்துகாட்டினார்’.

2017-ன் ஆரம்பத்தில் டாம் ஆல்ட்டர், தான் நடித்த ஹிந்தி, உருது, ஆங்கில மொழி நாடகங்களில் 19 அடங்கிய ஜஷ்ன்-ஏ-மாஜி [Jashn-e-Maazi (The Play of History)] என்கிற நாடகத் தொகுப்பை ஒரு நாடகவிழாவாக அரங்கேற்றிக் காட்டினார். அதில் அடங்கியிருந்தனர் சரித்திர புருஷர்களான மௌலானா ஆஸாத், மிர்ஸா காலிப், சாஹிர் லூதியான்வி, ரவீந்திரநாத் டாகூர், ஆல்ஃப்ரெட் ஐன்ஸ்டீன், மகாத்மா காந்தி போன்றோர். நாடகக் கலாரசிகர்களுக்கு ஆல்ட்டரிடமிருந்து மேலும் ஒரு விருந்து.

சமீபகாலம்வரை இந்தியாவின் புகழ்பெற்ற பூனே ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட்டின் நடிப்புத்துறைக்குத் தலைமை வகித்திருந்தார் அவர்.

டாம் ஆல்ட்டருக்குக் கிரிக்கெட்டில் திகட்டாத ஆர்வமிருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னைக் கிரிக்கெட்டில் பிணைத்திருக்கிறார்போல் தெரிகிறது. கிரிக்கெட் ஆட்டக்காரர், பத்தியாளர், ஒரு சமயம் பயிற்சியாளர் எனக்கூடப் பன்முக வெளிப்பாடுகளைக் காண்பித்தவர். கிரிக்கெட் அவருக்குள் ஆழத்தில் போய் உட்கார்ந்திருந்தது. முறையாகக் கிரிக்கெட் பயிற்சிபெற்று விளையாடி மகிழ்ந்தவர். முதல்தர கிரிக்கெட் லெவலில் விளையாடவில்லையே தவிர பாம்பே கிரிக்கெட் வட்டத்தில் அடிக்கடி தென்படுபவராக, கலந்துகட்டியான அணிகளில் அவ்வப்போது விளையாடுபவராக இருந்திருக்கிறார்.  இந்தியா தனது முதல் கிரிக்கெட் உலகக்கோப்பையை 1983-ல் வென்றபின், சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி ஒன்று அமெரிக்கா சென்றது –அங்கு கிரிக்கெட் ஆட்டத்தைப் பரவலாக அறியச்செய்யவென, அமெரிக்க அணி ஒன்றுடன் விளையாடியது. ஒரு ஃபெஸ்டிவல்-லுக் இந்திய அணி அது. அதில் மொஹிந்தர் அமர்நாத், ரோஜர் பின்னி, மதன் லால், சந்தீப் பாட்டீல் போன்றோரோடு டாம் ஆல்ட்டரும் இடம்பெற்றிருந்ததோடு அந்த ஆட்டத்தில் ஆடவும் செய்தார் அவர்! ஆர்வமாக, விஷய ஞானத்துடன் கிரிக்கெட் பத்திகள் எழுதிய அவர், எண்பது, தொண்ணூறுகளில் மதிக்கப்பட்ட கிரிக்கெட் பத்தியாளர் என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறார். அப்போது வந்துகொண்டிருந்த ஸ்போர்ட்ஸ்வீக், டெபொனேர் (Debonair) ஆங்கில இதழ்களிலும், அவுட்லுக்(Outlook) வார இதழிலும் வெளியான இவரது கிரிக்கெட் விமரிசனக்கட்டுரைகள்,  விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

கிரிக்கெட் உலகின் கடவுளாகக் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கரை, அவர் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே,  மும்பை அணியின் பதின்மவயது சிறுவனாக அபாரத்திறன் காட்டி ஆடிய காலத்திலேயே பேட்டி கண்டிருக்கிறார் டாம் ஆல்ட்டர். அந்த நேர்காணலில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர்கள், இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட்பற்றிய ஆல்ட்டரின் கேள்விகளுக்கு இளம் டெண்டுல்கர் கவனமாக பதில் தருகிறார்! ஆல்ட்டரின் இந்த சுவாரஸ்யமான நேர்காணல்தான் சச்சின் எனும் கிரிக்கெட்டின் பின்னாளைய கடவுள், கிரிக்கெட் உலகிற்கு அளித்த முதல் நேர்காணல் என அறியப்படலானது.

டாம் ஆல்ட்டருக்கு உருது மொழியின் மீதிருந்த காதல் கிட்டத்தட்ட நம்பமுடியாதது. உருது எனும் உன்னத மென்மொழியின் லயம், லாவகம், ஆழம் கைகூடிவர அவர் நிறைய உழைத்திருக்கவேண்டும்; கவிதைகளையும் நூல்களையும் ஆர்வமாய்ப் படித்திருக்கவேண்டும். பேசிப்பேசிப் பழகியிருக்கவேண்டும். சுத்தமான, அழகான உருதைத் தெளிவாகப் பேசி மொழியின் வித்தகர்களையே அசர வைத்திருக்கிறார்.  “மனுஷன் எப்படி உருது பேசுவார் தெரியுமா?  ஒரு வெள்ளைக்காரர் இப்படி சுத்த உருது பேசுவதைக் கற்பனை செய்து பாருங்கள். இந்த மே மாதம் ஒரு குறும்படத்திற்கான ஷுட்டிங்கின் இடைவேளையில் டாம் உருது ஷயரிகளை (உருதுக் கவிதைகளை) முணுமுணுத்துக்கொண்டிருந்தார். ஆச்சரியப்பட்ட நான், சிலவற்றை எனக்காக அவரை மொழிபெயர்க்கவைத்துக் கேட்டு அனுபவித்தேன்!’’ – என்கிறார் ஆல்ட்டரின் நண்பரும் இயக்குனருமான சுபாஷ் கே. ஜா.

ரே-யின் ஹிந்தி படமான ‘ஷத்ரஞ் கே கிலாடி’யில் உருது மொழி ஞானமும் அதன் ஷயரிகளில்(கவிதைகளில்) மயக்கமும்கொண்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கேப்டன் வெஸ்டன் வேடத்தில் வரும் டாம் ஆல்ட்டர், தாங்கள் திட்டமிட்டுக் கவிழ்க்கப்போகும் இந்திய ராஜ்யங்களின் முஸ்லிம் ராஜாக்கள், தங்கள் நாட்டைப்பற்றிய கவலையின்றி மது, சதுரங்கம், ஆட்டபாட்டங்களோடு ஷயரியிலும்  மயங்கிக் கிடப்பதைக் கவலையோடு கவனிப்பார். வருத்தப்படுவார்!

கிரிக்கெட் பத்தியாளர் என்கிற நிலைக்கு அப்பாற்பட்டு, தன்னை ஒரு ஆங்கில எழுத்தாளராகவும் நிறுவிய ஆளுமை டாம் ஆல்ட்டர். அவரை நடிகராக மட்டும் அறிந்திருக்கும் பலருக்கு இது தெரியாது. இரண்டு ஆங்கில நாவல்கள் அவரிடமிருந்து: The Longest Race – மாரத்தான் ஓட்டக்காரனாக வர முயற்சிக்கும் இளைஞனை மையமாகக்கொண்டு எழுதப்பட்டது. Rerun at Rialto மஸ்ஸூரியின் பின்னணியில் நிகழும் ஒரு த்ரில்லர் கதை. டாம் ஆல்ட்டர், பாப் க்ரிஸ்டோவுடன் சேர்ந்து எழுதிய ‘Flashback: My Life and Times in Bollywood and Beyond’ என்கிற ஆங்கிலப் புத்தகத்தை ’பெங்க்வின் இந்தியா’ வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரும் எழுத்தாளருமான ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) ஆல்ட்டருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். ரஸ்கின் பாண்டும் டேராடூனில் வளர்ந்தவர். இங்கிலாந்தில் ஆரம்பித்து இந்தியா வந்து செட்டிலானவர். இலக்கியம், கலாச்சாரம், இந்தியா என்கிற மாபெரும் நாடு என அவர்களின் மனதை நிறைய விஷயங்கள் இணைத்துவைத்திருந்தன. ’இந்தியக் கலாச்சாரத்தின் பெரும் தாக்கமுள்ளவர் டாம். இந்தியக் கலாச்சாரப்படியே, யாருக்கு அவசியமென்றாலும் உடனே உதவ முயல்பவர். பேர் தெரியாத பலருக்கு பலவிதமாக அவர் உதவியிருக்கிறார்,’ என்கிறார் ரஸ்கின் பாண்ட். ஹிந்தி, உருது ஆகிய மொழிகளில் டாம் ஆல்ட்டரின் புலமை தன்னை வெகுவாக ஆச்சரியப்படுத்தியதாக சொல்கிறார் பாண்ட். இலக்கியத்தில் பெரும் ஈடுபாடுடையவர் ஆல்ட்டர் என்றவர், தன்னை சந்திக்கும்போதெல்லாம் இந்திய இலக்கிய வளம், இந்திய நாட்டின் பதிப்பகத்தொழில் என்றெல்லாம் ஆர்வமாகப் பேசுவார் என்கிறார். தன்னுடைய முதல் நாவலான The Room on the Roof –க்கு ஆல்ட்டர் முன்னுரை எழுதியிருப்பதாகக் கூறுகிறார் பாண்ட்.  தான் எழுதிய The Last Tiger கதை படமாக்கப்பட்டிருப்பதாகவும் அதில் டாம் ஆல்ட்டர்  நடித்திருப்பதாகவும் கூறுகிறார் ரஸ்கின் பாண்ட். (படம் இன்னும் வெளியாகவில்லை).  ஆல்ட்டர் ஒரு இயற்கை ரசிகர் எனவும் ஜிம் கார்பெட் நேஷனல் பார்க்கிற்கு ஒருமுறை அவர் அம்பாசடராக நியமிக்கப்பட்டிருந்தார் எனவும் மேலும் கூறுகிறார் ரஸ்கின் பாண்ட். மேலும், டாம் பழகுவதற்கு மிகவும் இனிமையான, நல்ல மனிதர்; எந்தக் கெட்ட பழக்கமும் அவரை நெருங்கியதில்லை. தன்னை எப்போதும் ‘ஃபிட்’-ஆக வைத்திருந்தார் என்கிறார்

இந்தியக் கலைத் துறைக்கு டாம் ஆல்ட்டரின் சிறப்பான பன்முகப்பங்களிப்பை மெச்சி, இந்திய அரசு, உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருதை 2008-ல் அவருக்கு வழங்கி கௌரவித்தது.

தோல் புற்றுநோயினால் கஷ்டப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த டாம் ஆல்ட்டர் கடந்த செப்டம்பரில் மும்பையில் மறைந்தார். ’அவருக்கு இன்னும் செய்யவேண்டியது நிறைய இருந்தது. நிறையப்பேருக்கு எவ்வளவோ ஒத்தாசையாய் இருந்த மனிதர். இப்படி ஒரு துன்பத்தைக் கொடுத்துப் போய்விட்டாரே’ என்கிறார் இயக்குனர் சுபாஷ் கே. ஜா.

டேராடூனின் பத்திரிக்கையாளரும், ஆல்ட்டருடன் பலவருடம் நெருங்கிப் பழகியவருமான ராஜ் கன்வர், முழுக்க முழுக்க மஸ்ஸூரி-டேராடூன் மலைப்பகுதிகளில் கதை அமைந்து ஷூட் செய்யப்படுமாறு ஒரு ஹிந்தி படத்தைத் தயாரித்து டைரக்ட் செய்யவேண்டும் என்பது டாம் ஆல்ட்டரின் கனவாக இருந்தது எனக் குறிப்பிடுகிறார். மஸ்ஸூரியின் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர் ஆல்ட்டர். தான் பிறந்து வளர்ந்த மஸ்ஸூரிக்கு உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற சிந்தனையில் இருந்தவர். மஸ்ஸூரிக்கென  ஒரு மாரத்தான் ஓட்டப்போட்டியை  எப்படியும் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திவிடவேண்டும் என்பது அவரது நீண்டநாள் ஆசையாம். அதற்காக ’நாலு லட்சம் ரூபாய்கள் சேர்த்துவிட்டேன். இன்னும் ஐந்து லட்சம் தேவைப்படுகிறது; விரைவில் நடத்திவிடலாம்,’ என்று ஆர்வமாகத் தன் நண்பர் ஒருவரிடம் கூறிக்கொண்டிருந்திருக்கிறார் டாம் ஆல்ட்டர்.

தன் உடல்நிலை கடந்த ஒரு வருடமாக மோசமாகப் போய்க்கொண்டிருந்தும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாது நாடகம், சினிமா எனத் தன் கலை வெளிப்பாட்டில் கண்ணாயிருந்தார். இறப்பதற்கு முன் வரை அவரது முதல் நாவலான Rerun at Rialto-வின் அடிப்படையில், மஸ்ஸூரியை கதைக்களமாக வைத்துத் தயாரிக்கப்படும் படமொன்றில் நடித்துக்கொண்டிருந்திருக்கிறார். தான் பிறந்து வளர்ந்த டூன் பள்ளத்தாக்குப் பகுதியின் கலாச்சார, இலக்கிய வளர்ச்சிக்கு நல்லதொரு பங்களிப்பு செய்யவேண்டுமென்று பேராவலுடன், கனவுடன் வாழ்ந்திருக்கிறார் இந்தக் கலைஞர். அவரது கடைசி நாட்களில் அவரது சிந்தனையை இது வெகுவாக ஆட்கொண்டிருக்கக்கூடும். வாழ்க்கையின் நிறைவேறாத லட்சியக்கனவுகளும், ஆசைகளும் டாம் ஆல்ட்டர் என்கிற அருமைக் கலைஞனை இந்தியாவிலேயே மீண்டும் பிறக்கவைத்திடுமோ ?

**

3 Replies to “டாம் ஆல்ட்டர் என்றொரு  கலைஞர்”

  1. தெரிந்து கொண்டேன். நீங்கள் சொல்லி இருக்கும் படங்களில் ஆஷிக்கி, ஆராதனா,போன்ற படங்கள் பார்த்திருக்கிறேன். இரண்டு படங்களிலும் என்ன கேரக்டரில் வந்தார் என்று தெரியவில்லை.

  2. பெயரும் கொஞ்சம் மட்டுமே (திரைப்படங்கள் மூலம் குறிப்பாகக் காலாபானி படத்தின் மூலம்!!) அறிந்திருந்த ஓர் ஆளுமை பற்றி தங்களின் கட்டுரை மூலம் பல அறிய முடிந்தது. வியக்கவைத்துவிட்டார் இந்தப் பன்முகத் திறமையாளர்! அதுவும் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் இங்கு நம் நாட்டிலேயே தங்கி கலையுலகில் எத்தனை மிளிர்ந்திருக்கிறார். தோனியைப் பற்றிக் கூட அவர் எழுதியது கொஞ்சம் சர்ச்சையைக் கிளப்பியது இல்லையாஅ?

    நல்லதொரு கட்டுரை.

    கீதா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.