சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம்

”மன்னீ! அண்ணா வந்துட்டான்” என்ற ஆரம்பத்திலிருந்து பக்கா பிராமண சமூகத்தின் கதை.

மன்னி அலமேலு நல்லவள். அண்ணா மட்டுமென்ன வில்லனா? சந்தர்ப்பங்கள் ஆங்காங்கே வில்லத்தனம் செய்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டு கதை. பதினைந்து அல்லது பதினாறு வயதில் சாவித்திரிக்குக் கலியாணமாகிறது.

சாவித்திரி புக்ககத்தினர் குறிப்பாக மாமியார் பழகும் விதத்தை ஜெராக்ஸ் எடுத்து ஒவ்வொரு மணமகள், மாமியாரிடமும் இலவசமாகத் தந்ததால் பாதி ஆண்களுக்காவது ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கலாம்.

22-வயது கிருஷ்ணமூர்த்தி – சாவித்திரியின் கணவன் – பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. மனைவி மறுமகிழ்ச்சிக்குப் பிறந்தகம் போன நேரம் படிக்கட்டுக் கிணறு என்றாலும் வழக்கமாய் இறங்குகிறவன் தலைக்குப்புற விழுந்து கல்லில் மோதி காப்பாற்றுவாரின்றி இறந்து போகிறான். கழிவிரக்கம் ஏற்படுத்துகிறான்.

சாவித்திரியை அரக்கப் பரக்க விஷயத்தை சொல்லாமல் அழைத்து வருகிறார்கள். அந்தாத்துக்கு – பிறந்தகம் – பத்து நாளைக்குள் போய் வந்தால் தான் அப்புறம் நிரந்தரமாய் தங்க முடியும் என்றழைத்து வருகிறார்கள்.

அதை நினைவில் வைத்துக் கொண்டால் தான் முடிவு சுவாரஸ்யம். மாமனார் காலமானதும் ‘பத்து நாளைக்குள் அந்தாத்தில் – புகுந்த வீடு – தங்கி விட்டு வருகிறேன்’ என்று மூட்டை கட்டிக் கொள்கிறாள் சாவித்திரி. நிரந்தரமாய் அதுவே அவள் தங்குமிடம் என்று சொல்லாமல் சொல்கிறாள் ஆசிரியர்.

சாவித்திரியின் தந்தை இருக்கும் வரை ஜீவனாம்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது கௌரவக் குறைவாய் கருதுகிறார். வெங்கடேசனுக்கு – தமையன் – சொல்பேச்சு கேட்கும் கதாபாத்திரம். அவன் மனைவி அலமேலுவுக்கு எதிர்காலம் பற்றிய தீர்க்கமான நோக்கு.

அனுபவ பாத்யதையாக எழுதித்தரும் நிலம் வேண்டாம் என்கிறாள். சாவித்திரியின் ஜீவன் இருக்கும் வரைதானே அதன் அம்சமான உடல் வாழ சாப்பாடு வேண்டும் என்று வாசகர்களுக்குத் தோன்றலாம். ஒருவேளை சாவித்திரி அகால மரணமடைந்து விட்டாலோ – தப்பு தப்பு… அப்படி அவள் நினைக்கவில்லை — தொண்ணூறு வயதே இருக்கட்டும். என்றாவது ஒரு நாள் மரணம் வரும்தானே!? அதற்குப் பின் அவள் நாலு குழந்தைகளில் ஒருவர் சாவித்திரியை சம்ரட்சணை பண்ண நிலத்தை விற்க அதிகாரம் வேண்டாமா? சாவித்திரிக்குப் பிஒறகு அவள் மச்சினன் கணபதிக்கு உரிமை என்றால் இது என்ன அநியாயம்…? அவள் வார்த்தைகளில் இந்த தொனி ஒலிக்கிறது.

வழக்கு கச்சேரிக்கு – கோர்ட்டிற்கு – வருகிறது. வாய்தா, வாய்தா என்று இழுத்தடிக்கிறார்கள்… வெங்கடேசனும் ஒருகை பார்த்து விடுவதென்று தான் அலைகிறான்!

கிருஷ்ணமூர்த்தி இறந்ததும் மொட்டை போடாமல் காப்பாற்றிய மன்னி மேல் பாசம் இருக்கிறது சாவித்திரிக்கு.

‘அவள் ஒரு வயிறு பெரிசா நமக்கு!’ என்கிற அண்ணாவிடமும் தாட்சண்யம்.

இந்த சமயத்தில்தான் மாமனார் இறந்த சூதகம் வருகிறது.

“கிணத்தடியிலே துணியைப் போட்டுட்டு வந்துட்டியே சாவித்திரி!”
“சனியனே! சூதகம் என்றால் புரிந்து கொள்ள மாட்டியா… அத்தை பக்கத்திலே போகாதே! அந்த வீட்டு சூதகம் இங்கே எதற்கு ஈஷிக்கணும்!”

அலமேலுவின் வார்த்தைச் சாட்டைகள் – ‘தான் எந்த வீட்டுக்கு சொந்தம்’ என்று சாவித்திரியை யோசிக்க வைக்கிறது.

தனியே படுத்து அசை போடுகிறாள். கண் தெரியாத மாமியார்… தடவித் தடவி நடக்கிறாளாமே! கணவன் செத்துவிட்டால் மாட்டுப்பெண் என்ற கடமையும் செத்து விடுமா? கிருஷ்ணமூர்த்தி இருந்தால் இப்படி நடப்போமா? புது இடம் என்று நாம் சங்கோஜப் படக் கூடாதென்று எத்தனை அரவணத்த ஜென்மம் அவள்!

“இத்தனை நாளா இவளா வந்து சமைத்துப் போடாள்? ரசம் ஜோராயிருக்கிறதென்று ஏந்தி ஏந்திக் குடிக்கிறதைப் பாருடியம்மா! கிருஷ்ணமூர்த்தி! நீயும் டம்ளரிலே வாங்கிக் குடி… ஏன் சங்கோஜப் படறே! என்ன இருந்தாலும் பட்டணம் பட்டணம்தான்! நான் பட்டிக்காடுதானே! குண்டு சட்டியிலே குதிரை ஓட்டறேன்! ராத்திரி சமையலும் இனி உன்னுதுதான்” பாராட்டுவதைக் கூட செல்லமாகச் செய்த அந்த வீட்டுக் கடமையில் இருந்து நான் நழுவுகிறேனா? சாவித்திரி கண்ணீரால் தலையணையை நனைக்கிறாள்.

கணபதி… ஐந்து வயது மச்சினன். ‘இனிமே நீ வரமாட்டியாமே! எனக்கு யார் பாடம் சொல்லிக் கொடுப்பா… கிருஷ்ணமூர்த்தியின் சூதகத்தில் அவனை யாரும் தள்ளிவைக்கவில்லை! அப்போ அவள் இருக்க வேண்டிய இடம்? அவள் ஜீவனின் அம்சம் அங்கேதான் என்பது புரிந்து போகிறது சாவித்திரிக்கு. துக்கம் கேட்கவே போகணுமா என்று யோசித்தவர்கள் நடுவில் மூட்டை கட்டிக் கொள்கிறாள் சாவித்திரி.

ஆசிரியர் நிறைய இடங்களில் கல் மனதையும் கண்ணீர் விட வைத்திருக்கிறார். ஜீவனாம்சம் ஒரு பொக்கிஷப் புதையல்.

~oOo~

சி.சு. செல்லப்பாவின் முன்னுரையில் இருந்து…

‘ஜீவனாம்சம்’ கதைக்குக் கொஞ்சம் நடப்பு ஆதாரம் உண்டு. ஆனால் இந்த ஆதாரத்தை எல்லாம் முழுக்க மறைத்துவிட்டு எழுந்த ஒரு கற்பனை படைப்பு ‘ஜீவனாம்சம்’. … சத்தும் அழகும் மதிப்பும் பெற இதை அப்படியே எழுதினால் போதாது என்று பட்டது. இந்த மதிப்பு ஏற்படத்தான் சாவித்திருக்குத் தன் பார்வை உருவாக்கி அவளுக்குள் உத்தேசத்தையும் ஏற்றி வைத்தேன்.

‘ஜீவனாம்சம்’மை ‘எழுத்து’வில் ஆய்வு செய்த விமர்சகர் டி.கே. துரைஸ்வாமி கூறி இருப்பது போல், ‘சாவித்திரி நாம் அறிந்த ஒரு குடும்பப் பெண்ணின் பரிபூரணப் பிரதிநிதியாக இருப்பதுதான்’ நான் விரும்பிய மதிப்பு. இந்தக் காலத்துக்கு அந்த மதிப்பு ‘அவுட்: டேட்: ட்’ – காலத்துக்கு ஒவ்வாத பழம் பதிப்பு என்பது போல் தோன்றக் கூடும். இன்று புதிய மதிப்புகளில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கு இன்றைய புது மதிப்பும் நாளை புதுமையை இழந்துவிடக் கூடுமே. எனவே சாவித்திரி அடிப்படைக் கேள்விக்கு விடை கண்டவள். அதனால் என்றைக்குமாக நிற்பாள்.

சத்தும் மதிப்பும் ஏற்றியாகி விட்டது. அழகு? கலைக்கு அழகுதானே முக்கியம். … ‘ஜீவனாம்சம்’மை ‘எழுத்து’வில் ஆய்வு செய்த விமர்சகர் தருமு சிவராமூ, ‘ஒரு சில இடங்களில் நனவோடைப் போக்கிலும் நாவல் நினைவுப் பாதையிலும் போவது மட்டுமல்ல. ஒரே பாத்திரம் மட்டும் தன் அவசங்களோடு, விசார ரீதியில் நாவலைத் தூக்கிச் செல்வது’ என்று கூறி இருப்பது போல் உத்திகள் தோன்றின. ஒரு இரண்டரை வருஷ காலத்தில் மூன்றே த்டவைகள் கோர்ட்டிலிருந்து வெங்கடேஸ்வரன் திரும்புகிற நேரமும் அதை அடுத்த ஒன்றிரண்டு மணி நேரமும்தான் கதையின் அப்போதைய நடப்பு. ‘விநாடிகளை அணுக்களாக்கி, அவற்றுள்ளேயே, உணர்ச்சி – நினைப்பு லோகங்களை சடபடவென்று ஒரே உலுப்பில் ஆயிரம் நாவல் பழங்களை உதிர்க்கிறாப்போல் சாவித்திரியிடமிருந்து உதிர வைத்த இயற்கைத்தன்மை’ என்று தருமு சிவராமூ குறிப்பிடும்போது என் உத்தேசத்தை நான் சொல்ல நினைப்பது போலவே சரியாகச் சொல்லிவிட்டார்.

வாடிவாசல்’ எழுதும்போது என் உத்தேசங்களில் ஒன்று செயல் இயக்கத்தை எவ்வளவு வேகமாகச் சித்தரித்துக் காட்ட முடியும் என்று பார்ப்பதுதான். அங்கே அது அவசியம். முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை ஒரு வேக இயக்கம். கதையின் போக்கில் மட்டும் இல்லாமல், சூழ்நிலை, பேச்சு இவற்றினூடும் தெரிய வேண்டும் என்பது. ‘ஜீவனாம்சம்’மில் அதற்கு மாறாக செயல் இயக்கம் – எவ்வளவு வேகமாக இருந்தாலும் சரி, அதை சித்தரிக்கும் போது, அணுவைப் பிளக்கிற மாதிரி அசைவையும் பீளந்து, சினிமாவில் ‘ஸ்லோ மோஷனில்’ காட்டுவது போல் அந்த அசைவை கண்களால் நிதானமாக தொடரும்படியாக, பிடித்து நிறுத்தித் தேக்கிக் காட்டுகிற மாதிரி செய்ய வேண்டும் என்று எனக்குப் பட்டது.

~oOo~

நாவலில் இருந்து ஒரு நறுக்

முதலில் அம்மா போனாள். அம்மாவோடு எல்லாமே அவளுக்கு, போய்விட்ட மாதிரி இருந்தது. ஆனால், அப்படி ஆகவில்லை.

தெய்வம் – விதி எதனால் என்ன?

குலுக்கிவிட்ட மரக்காலுக்குள்ளே எல்லாம் படிந்துதான் போய்விடுகிறது. ஏன், அந்த ஏக்கம், துக்கம் எல்லாம் மடிந்து கூடப் போய்விடுகிறது. இந்த மனசுக்கு எதையும் ஏற்றுக்க முடிகிறது. தள்ளவும் முடிகிறது. ஆனால் ஒன்று. அதுக்கு அந்த அக்கறை இருக்கணும்.

இந்த நாலு சாவையும் தான் பார்த்தாச்சு. நாலும் தன்னை ஒன்றைவிட ஒன்று போட்டி போட்டுக் கொண்டுதான் பாதிச்சிருக்கு. அவர் செத்து… தன்னை மூலையில் உட்கார்த்தி வைத்தது. அந்த அம்மாவே தன்னிடம் கதறிச் சொன்னாளே தன் முகத்தைப் பார்த்து: கிளி மாதிரி உன்னை மூளியாக்கி மூலையிலே உட்கார்த்தி வைக்கறதுக்கா என் வயத்துலே வந்து பிறந்தான் இந்த சண்டாளப் பாவி. தான் கூட, ஏம்மா, அவரைப் பற்றி சொல்றேள். நான் கிளியே இல்லேம்மா, நான் சாகுருவி. அவர் தலைக்கு மேலே பறந்து அவர் உசிருக்கு உலை வைத்தவள் என்று பதறிச் சொல்லவில்லையா. அவருக்கு முன்னாலே தான் போயிருந்தால். அப்பா கூட அதைத்தானே சொன்னார். உங்கம்மா கொடுத்து வைத்தவள். இந்தக் கண்றாவியைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டுவிட்டாள். நான் தான்… இதுக்கு நீ போயிருந்தால் கூடத் தேவளை. பெண் போயிட்டாள் என்று பத்துநாள் அழுதுட்டு அப்புறம் அப்படி ஒருத்தி இருந்தாள் என்று நினைத்துக் கொண்டு பிறகு மறந்துட்டு இருக்கலாம். இப்படிக் கண் முன்னாலே, குத்துகிற மாதிரி நீ இந்த அலங்கோலத்திலே நடமாடிண்டு இருக்கிறதை ஆயுசு பூராவும் பார்த்துக் கொண்டு இருக்கணும்னு…

புடவையைக் கல்லில் அறைந்து தோய்க்கிற வேகத்தில் ஏற்பட்ட படபடப்பில் ஒரு பெருமூச்சு வாங்கிக் கலந்தது.

இது கல்லாக இருக்கக் கண்டுதான் இவ்வளவு அறையைத் தாங்கிக்க முடிகிறது. தன் மனசுக்கு இந்த அழுத்தமும் பலமும் இல்லையே. இந்த நாலு சாவுனாலேயும் அமுங்கிக் கொடுக்கிறதே. தன்னை அமுக்கி விடுகிறதே. இந்த நாலுலே எது தன்னை ரொம்ப நசுக்கி இருக்கு.

ஜீவனாம்சம் – (குறு) நாவல்
ஆசிரியர்: சி. சு. செல்லப்பா
முதல் பதிப்பு: 1962
வெளியீடு: காலச்சுவடு
பக்கங்கள்: 136
விலை: 140

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.