தமிழில் எழுதப்பட்டுள்ள சுயசரிதைகளில் மிக முக்கியமான ஒன்று ஔவை.தி.க.சண்முகம் அவர்களின் ‘’எனது நாடக வாழ்க்கை’’. அவர் அதனை நாடக வாழ்க்கை எனக் கூறினாலும் அது அவரது வாழ்க்கையே தான். ஒரு நாடகக் கலைஞராக அவர் தன் வாழ்க்கையைத் தொகுத்து எழுதும் போது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான தமிழின் சமூகவியல் ஆவணமாகவும் அந்நூல் மாறுகிறது. மனிதர்களுக்கு உலகியல் நேரடியானதும் மறைமுகமானதுமான எல்லைகளை உருவாக்குகிறது. பலர் அந்த எல்லைக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் அமைந்து விடுகின்றனர். சிலர் அந்த எல்லைகளுடன் திருப்தி அடையாமல் அதனைத் தாண்டி பயணிக்கின்றனர். புதிய அனுபவங்களைப் பெறுகின்றனர். புதிய விஷயங்களைக் கண்டடைகின்றனர். அவர்களிடமிருந்து ஒரு புதிய துவக்கம் நிகழ்கிறது. மாற்றத்தை உருவாக்க பணியாற்றியவர்களாகவும் மாற்றத்தை உருவாக்கியவர்களாகவும் வரலாற்றில் அவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
மானுடர்களின் நீண்ட நெடிய வரலாற்றில் தங்களைத் திரட்டிக்கொள்வதின் நன்மைகளை அடையத் துவங்கியது என்பது சமூக உருவாக்கத்தின் துவக்கப்புள்ளியாக இருந்திருக்கிறது. அவ்வாறு தன்னைத் திரட்டி தொகுத்துக் கொள்ள முற்பட்ட மானுட இனங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சேகரித்திருக்கும் மானுட ஞானத்தின் வெவ்வேறு பக்கங்களாகவே அறிவியல்,தொழில்நுட்பம்,பொருளியல்,சமயம்,நுண்கலை,கலை,சட்டம் மற்றும் இலக்கியம் ஆகியவை இருக்கின்றன. இன்றும் இவற்றின் மொழிதான் உலகின் அனைத்துச் செவிகளுக்கும் சென்று சேர்வதற்கான ஒரு பொதுத்தன்மையுடன் இருக்கிறது. இவற்றின் மூலம் மனிதர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்; மனிதர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தம் செய்திருக்கிறார்கள்; யுத்தத்தைக் கைவிட்டிருக்கிறார்கள். அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் தகவல் தொடர்பிலும் பெரும் புரட்சி நிகழ்ந்துள்ள இக்காலகட்டத்திலும் இன்னும் மேலான ஒரு சமூகத்தை உருவாக்கிக் கொள்ள மனிதன் கனவு கண்டவாறே இருக்கிறான். உலகம் ஒரு குடும்பமாக ஆக வேண்டும் என்ற கனவுடன் மெல்ல- மிக மெல்ல நகரத் துவங்குகிறான்.
ஜெயமோகனின் முன்சுவடுகள் நூல் வழியாக ஔவை.தி.க.சண்முகம் அவர்களின் ‘’எனது நாடக வாழ்க்கை’’ நூல் பற்றி அறிந்தேன். Tamilvu(dot)org இணையதளத்திலிருந்து அதனை தரவிரக்கம் செய்து வாசித்தேன். மிக பிரும்மாண்டமான ஒரு வாழ்க்கை ஔவை சண்முகம் அவர்களுடையது. நூலின் வழியாக அறிய நேரிடும் அவரது ஒரு நாள் என்பதே மிகவும் பரபரப்பானது. காலைப்புலரியிலிருந்து நள்ளிரவு வரை உழைக்கும்-சிந்திக்கும்-கற்கும்-கற்றுத்தரும்-பல்வேறு விதமான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும்- நாடகங்களை நிகழ்த்தும்-மக்கள் முன் நடிக்கும் ஒரு வாழ்க்கை முறை என்பது அவரது வாழ்நாளின் பெரும்பாலான நாட்களுக்கு இருந்திருக்கிறது. இமைப் பொழுதும் சோராதிருக்கும் வாழ்க்கைமுறையை- அந்த அற்புதப் பரிசை- வாழ்க்கை சிலருக்கே அளிக்கிறது. அத்தகைய அற்புதமான வாழ்க்கையைப் பற்றிய ஆவணமே ‘’எனது நாடக வாழ்க்கை’’.
தமிழ் நாடகங்களின் பிதாமகர் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் ஆர்வமிக்க ஒரு சிறுவனாக இணைகிறார் திரு.சண்முகம் அவர்கள். கற்றுக் கொள்வதில் தீரா ஆர்வத்துடன் இருப்பவர்களை எந்த ஓர் ஆசானும் எளிதில் அடையாளம் கண்டு கொள்கின்றனர். ஔவை சண்முகத்தின் திறமைகளை சங்கரதாஸ் சுவாமிகள் அறிந்து கொள்கிறார். அந்நூலில் ஒரு இடம் வருகிறது. ஒரு மகத்தான புனைவுத் தருணம் போன்ற உண்மைத் தருணம். சிறுவனான சண்முகம் முக்கிய வேடம் ஏற்று நடிக்கக்கூடிய வகையில் எந்த நாடக கதாபாத்திரத்தை வழங்கலாம் என நாடகக் குழுவினர் ஒரு முன்னிரவில் விவாதிக்கின்றனர். முடிவு எய்தாமல் அவர்கள் கலைந்த பின்னர் சங்கரதாஸ் ஸ்வாமிகள் சண்முகத்துக்காக ‘’வீர அபிமன்யு’’ என்ற புதிய நாடகத்தை ஒரே இரவில் எழுதி முடிக்கிறார். அந்நாடகம் எழுதிய போது அவர் மானசீகமாக தன்னை துரோணராக உணர்ந்திருப்பாரா? அச்சிறுவன் அடையப்போகும் பெருங்கீர்த்தியை தன் உள்ளுணர்வால் சங்கரதாஸ் சுவாமிகள் அறிந்திருப்பாரா? தான் கற்ற அனைத்தையும் எதுவும் மிச்சமில்லாமல் முன்வைத்த அந்த ஆசான் பெற்ற நிறைவு எவ்விதமானது?
ஔவை சண்முகம் குறிப்புகள் வழியாக சங்கரதாஸ் சுவாமிகளின் ஆளுமைச்சித்திரத்தை வாசகனால் உருவாக்கிக் கொள்ள முடிகிறது. பெரும் கலைஞனாகவும் சிறந்த அறிஞராகவும் ஒப்பற்ற ஆசானாகவும் விளங்கும் சுவாமிகள் தனக்கென சமரசம் இல்லா மதிப்பீடுகளைக் கொண்டவராக இருக்கிறார். அவரது மதிப்பீடுகள் அவரது சீடர் வழியாக நாடகத் துறையில் நிலைபெறுகின்றன. ‘’நர ஸ்துதி’’ செய்ய மாட்டேன் என்பது சங்கரதாஸ் சுவாமிகளின் கொள்கை. சிலர் சில சந்தர்ப்பங்களிலாவது அதனை தளர்த்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர். கொண்ட கொள்கையில் மாற்றம் இல்லை என உறுதியாக இருக்கிறார். தான் இயற்றும் எந்த பாடலிலும் தனது பெயரை ஈற்றுச்சீராக அமைத்துப் பாடுவதில்லை என்னும் வழக்கம் உடையவர் சுவாமிகள். அவரைச் சந்திக்கும் மற்றுமொரு கலைஞர் தான் ஒரு பாடல் இயற்றியிருப்பதாகக் கூற அதனைப் பாடிக் காட்டுமாறு சுவாமிகள் கேட்டுக் கொள்கிறார். ஈற்றுச்சீரில் தனது பெயரை வைத்து இயற்றியிருப்பதால் சுவாமிகள் முன் எப்படி பாடுவது என்று தயங்குகிறார். அவரது தயக்கத்தைப் புரிந்து கொண்டு தனக்கு எந்த மனத்தடையும் இல்லை; தாராளமாகப் பாடுங்கள் எனக் கூறி பாடி முடித்ததும் அவரிடம் ஊக்கமான சொற்களைக் கூறுகிறார்.
ஒரு குருகுலமாகவே நாடக சபா இருக்கிறது. அனைவரும் ஒன்றாக இருக்கின்றனர். ஒன்றாக கற்கின்றனர். ஒன்றாக வேலை செய்கின்றனர். நாடக சபா அதன் உறுப்பினர்களிடையே ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்குகிறது. அந்த ஒருங்கிணைப்பின் மூலம் அவர்கள் கற்கும் கல்வியால் பல விஷயங்களில் நாடக நடிகர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகின்றனர். கடவுளராக பூத கணங்களாக அவதார புருஷர்களாக சரித்திர நாயகர்களாக நாளின் பெரும் பகுதியில் ஒத்திகை பார்த்துக் கொண்டும் மக்கள் முன் காட்சியளித்துக் கொண்டிருக்கும் அக்குழுவினர் நாடகம் முடிந்து தங்கள் வேடத்தைக் கலைத்துக் கொள்ளும் போது நாள் முழுதும் அளித்த கடும் உழைப்பின் பயனாய் மெல்ல உறக்கத்திற்குச் செல்கின்றனர். கனவுலகிலும் தேவலோகங்களிலும் கைலாசத்திலும் பாற்கடலிலும் ராஜசபைகளிலும் பிரவேசிக்கின்றனர்.
இந்நூலை வாசித்த போது நான் ஒரு விஷயத்தை அவதானித்தேன். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒட்டுமொத்த மாநிலத்திற்குமான ஒரு பொதுவான விஷயமாக சபா நாடகங்களே இருந்துள்ளன. ஒரே நாடகத்தை அவர்கள் விருதுநகரிலும் அரங்கேற்றியுள்ளனர். மதுரையிலும் நிகழ்த்தியுள்ளனர். கும்பகோணத்திற்கும் அதே குழு வந்துள்ளது. காஞ்சிபுரம் சென்றுள்ளது. சென்னையிலும் தங்கியிருந்து நாடகம் போட்டுள்ளனர். சேலம் சென்றுள்ளனர். அங்கேயிருந்து நாகர்கோவில் போயிருக்கின்றனர். பல நாடகக் குழுக்கள் பல ஊர்களில் இவ்வாறான நாடகங்களைப் போட்டுள்ளனர். பல குழுக்களுக்கு ஆசானாக சங்கரதாஸ் சுவாமிகள் இருந்துள்ளார். பாரதியார் பாடல்களை மாநிலமெங்கும் கொண்டு சேர்க்கும் பணியை இக்குழுக்களே செய்துள்ளனர். வெகுஜன மக்களின் ரசனைத் தளத்தை இவர்களே உருவாக்கியுள்ளனர். இவ்வாறு உருவான தளத்தின் பலத்தை அறிந்தே திராவிட இயக்கம் நாடகங்களை தங்கள் அரசியலுக்கும் பரப்புரைக்கும் பயன்படுத்துகின்றனர். தங்கள் அரசியல் மேடைகளில் நாடக மேடைகளைப் போல பல்வேறு விதமான உணர்ச்சிகளுடன் பேசி பரப்புரை செய்கின்றனர். அதன் தொடர்ச்சியாக சினிமா என்ற காட்சி ஊடகத்தையும் பயன்படுத்தினர். ஒரு நடிகன் தமிழ் மக்களால் விரும்பப்படும் ஏற்கப்படும் சமூக உளவியல் இந்நாடக மேடைகளிலிருந்தே துவங்குகிறது எனப் படுகிறது. தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் பார்வையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அணுகும் முறையும் நாடக சபாக்களும் சினிமாவுக்கும் இருந்ததன் தொடர்ச்சியே சென்ற நூற்றாண்டின் தமிழ்நாட்டு அரசியல் என்று தோன்றுகிறது.
மக்களுக்கும் நாடக அரங்குக்கும் இடையில் இடப்படும் நாடகத் திரையில் டி.கே.எஸ் சகோதரர்கள் ’’Labours of all lands, unite’’ என்ற வாசகத்தையும் அதனை தமிழில் ‘’உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’’ எனவும் எழுதி அது அவர்களின் நாடகங்களில் நெடுங்காலம் இடம்பெற்றிருக்கிறது. பின்னர் அதற்கு பதில் வேறொன்று எழுதி வைக்கலாம் என்று தோன்ற பொதுவுடமைத் தலைவர் ஜீவாவிடம் ஆலோசனை கேட்கிறார்கள். அவர் ‘’Life is short; Art is great’’ என்ற வாசகத்தை சொல்கிறார். அதனை திருலோக சீதாராம் ‘’வாழ்வு சிறிது; வளர்கலைப் பெரிதே!’’ என மொழிபெயர்த்துத் தருகிறார். அவ்விரு வாசகங்களும் இடம் பெறுகின்றன.
அந்நாளைய நாடகக் கலைஞர்களின் நாடக வாழ்க்கைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் எந்த இடைவெளியும் இல்லாமல் இருக்கிறது. ஊர் ஊராக நகர்ந்து கொண்டேயிருக்கிறார்கள் கலைஞர்கள். யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்பது அவர்களுக்கு அனுபவமாகி அர்த்தமாகியிருக்கக் கூடும்! எல்லா ஊரிலும் மக்களை மகிழ்வித்து தங்கள் லௌகிகத் தேவைகளை ஓரளவுக்கு நிறைவேற்றிக் கொண்டு நாடக கம்பெனி இயக்கத்தில் வரும் நிர்வாகப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொண்டு அக்குழுக்கள் அலைந்து கொண்டே இருக்கின்றன. அவர்களுடைய நாடோடி வாழ்வில் கலைஞர்களுக்கே உரிய உணர்ச்சி மோதல்கள், உளச்சிக்கல்கள், குடி போன்ற உடல்நல பாதிப்புகள் அனைத்தும் ஏற்படுவதன் குறிப்புகளை நூல் முழுதும் காண முடிகிறது.
ஒரு தனி மனிதன் தன் வாழ்வில் சந்திக்க நேரிட்ட பிரும்மாண்டமான சாத்தியங்களைப் பற்றி அறியவும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ் சமூகத்தின் கலை மற்றும் சமூக வாழ்வை அறியவும் ஆர்வமுடைய எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் ஔவை சண்முகம் அவர்களின் ‘’எனது நாடக வாழ்க்கை’’