சொல்வனம் வழங்கும்..

இந்தியாவில் பிறந்து வளர்ந்து, அதன்பின் அமெரிக்காவில் படித்து பணியாற்றி வரும் பல பொறியாளர்களைப் போன்றதுதான் என் பின்புலமும் என்று நிச்சயம் சொல்லலாம். நான் 1970களில் பயின்றதெல்லாம் கிராம அல்லது சிறுநகர, மிகவும் சாதாரண அரசாங்க தமிழ் மொழி வழிப் பள்ளிகளில்தான். மிகப்பெரும்பாலான என் பள்ளி நண்பர்களைப் போலவே எங்கள் வீட்டிலும் எனக்கு முந்தைய தலைமுறைகளில் யாருக்கும் கல்லூரி செல்லும் வாய்ப்புக்கள் இருந்ததில்லை. எனவே வீட்டில் நூலகம் போல் புத்தகங்கள் வைத்துக்கொள்ளும் பழக்கமோ அல்லது நல்ல நூலகங்களைத் தேடிப் பிடிக்கும் வழக்கமோ எதுவும் கிடையாது. நல்ல சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற விஷயமே அப்போதெல்லாம் எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. பிளஸ் 2 வாக்கில் அந்த பிரக்ஞை வந்தபோதும் தமிழில் மூளையைக் கிளறி யோசிக்க வைக்கும் புத்தகங்கள் நிறைய சுலபமாய் கிடைத்ததில்லை. ஓரிரு பத்தாண்டுகளுக்குப் பின் நான் வளர்ந்த கிராமங்கள், சிற்றூர்களை சென்று பார்த்தபோதும் நிலைமை அப்படி ஒன்றும் முன்னேறி விட்டதாய்த் தோன்றவில்லை.

கடந்த பத்தாண்டுகளில் வலையின் வருகையும், திறன்பேசிகளின் பரவலான உபயோகமும் தேவையான தகவல்களை தேடிப்பிடித்து படித்துக்கொள்ள ஓரளவு வழி செய்திருக்கின்றன என்றாலும், சினிமா அரசியலைத் தாண்டி, தமிழ் கூறும் வலையுலகில் உருப்படியான தகவல்கள் அவ்வளவு நிறைய எழுத/பகிரப் படுவதாகத் தெரியவில்லை. இந்தக் குறையை நிவர்த்திக்க என்னாலான சிறு முயற்சியாய் சில வருடங்களுக்கு முன் தமிழில் எனக்குத் தெரிந்த துறைகளைப் பற்றி, குறிப்பாக தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை சொல்வனம் தந்த பக்கங்களில்  எழுத ஆரம்பித்தேன். எண்ணெய்யும் தண்ணீரும்பழைய மூளைக்குள் சில புதிய மூலைகள்தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சிஆயிரம் வருடங்கள் வாழ்வது எப்படி? போன்ற கட்டுரைத்தொடர்கள் அப்படி வெளிவந்தவை. அந்த முயற்சியின் ஒரு பகுதியாய் நான் எழுதிய சிந்தனைச்சோதனைகள் என்ற தொடரை நீங்கள் படித்திருக்கலாம்.

பன்னிரண்டு பகுதிகளாய் சொல்வனத்தில் வெளிவந்த அந்தத்தொடரில் தத்துவம், கணிதம், கணினியியல், இயற்பியல், பெண்ணியம், வணிகவியல் முதலிய பல துறைகளில் இருந்துவரும் பிரச்சினைகளை அலசவும், கருத்துக்களை விளக்கவும் உலகெங்கிலும் உருவாக்கப்பட்ட சிந்தனைச்  சோதனைகளைத் தொகுத்து வழங்கி இருந்தேன்.  செயற்கை நுண்ணறிவு பற்றிய   சீன அறை வாதம் (Chinese Room argument ), இயற்பியலில் பல காலமாய் பேசப்பட்டு வரும் ஷ்ரோடிங்கரின் பூனை (Schrodinger’s cat ), முடிவிலி (Infinity) என்ற ஒன்றை விளக்க முயலும் Hotel Infinity என்ற கணித சோதனை, நியாயம்/தர்மம் போன்ற கொள்கைகளை நடைமுறைப் படுத்த மதம் தேவையா என்று அலசும் ட்ரொலி பிரச்சினை ( Trolley Problem ) போன்ற பல சோதனைகள் அந்தத்தொடரில் தலை காட்டி இருந்தன. கடந்த ஒரு வருடமாக அந்தத் தொகுப்பை இன்னும் நிறைய மெருகூட்டி, புதிதாக ஜனநாயகம், மருத்துவம் பற்றிய அத்தியாயங்களையும், ஆழ்ந்த அறிதல் (Deep Learning) முதலிய விவாதங்களையும் சேர்த்து ஒரு புதிய மின் புத்தகமாக “சிந்தனைச்சோதனைகள் – பணச்செலவில்லா பிரபஞ்சச்சுற்றுலா” என்ற பெயரில் வெளிக்கொணர்ந்து இருக்கிறோம். சொல்வனம் ஆசிரியர் குழுவின் உதவி/ஆசியுடன் வெளிவரும் இப்புத்தகம், ஒரு சொல்வனம் பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. புத்தகத்தை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வலை இணைப்புகளின் மூலமாகவோ அல்லது அருகிலிருக்கும் QR குறியீட்டை உபயோகித்தோ நீங்கள் வாங்கலாம்.

கூகிள் இணைப்பு : https://goo.gl/5qufqJ

அமெஸான் இணைப்பு  : https://goo.gl/vzaD3f

சுமார் 180 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலையை $1.99 என்று நிர்ணயித்திருக்கிறோம். புத்தகத்தை விற்பதில் இருந்து கிடைக்கும் லாபமனைத்தும் சொல்வனம் தளத்தைப் போய்ச்சேரும். சுய முயற்சியில் ஓரளவு தரமான ஒரு புத்தகத்தை பிரசுரிப்பது என்பது, அது மின்-புத்தகமாக இருந்தாலும் கூட, அவ்வளவு சுலபம் இல்லை என்பது இந்த அனுபவத்தின் மூலம் புரிய வந்தது. இது பொருளாதார எதிர்பார்ப்புகள் அதிகம் இன்றி ஒரு தன்னார்வ சமூக சேவையாக தரமான விவாதங்களையும், கருத்து அலசல்களையும் பொதுமக்களிடையேயும், மாணவர்களிடையேயும் ஏற்படுத்தவே படைக்கப்படும் புத்தகம் என்ற விளக்கங்களுக்கு அப்புறமும் ஓரிரு படங்களை புத்தகத்தில் உபயோகித்துக்கொள்ள அனுமதி கோரியபோது ஆயிரக்கணக்கில் பணம் கேட்ட சில ஊடகங்கள், ஆகவே அந்தப் படங்களை எடுத்து விட்டு என் சகோதரன் சாரதியை வரைந்து கொடுக்கச் சொல்லி சேர்க்கப்பட்ட படங்கள், புதிதாக ஆர்டர் கொடுத்து உருவாக்கிய அட்டைப்படம், பணம் செலவழித்து உரைநடையை பிழை பார்த்து திருத்தம் செய்ய ஆள் தேடிய அனுபவம், சொல்வனம் ஆசிரியர் குழுவினருடன் சேர்ந்து புத்கத்திற்கான ISBN எண் வாங்கிய கதை என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு வழியாக எல்லாம் முடிந்து புத்தகம் நீங்கள் வாங்குவதற்கு ரெடியாக வலையில் இப்போது உட்கார்ந்திருப்பது சந்தோஷமாய் இருக்கிறது.

எங்கள் செலவிலேயே காகித வடிவிலும் சில நூறு பிரதிகள் அச்சிட முயன்று வருகிறோம். நிச்சயம் படித்து மாணவர்களிடையே சுவையான அலசல்களை நடத்துவார்கள் என்று தெரியும் உற்சாகம் மிகுந்த சில ஆசிரியர்/ ஆசிரியைகளுக்கும், படித்துப்  பயனுறுவார்கள் என்று தெரியும் சில தமிழ் மாணவ/மாணவியர்களுக்கும்   அந்த காகித பிரதிகளை இலவசமாக அஞ்சலில் அனுப்ப எண்ணம். எனவே இப்புத்தகம் சம்பந்தமான மூன்று கோரிக்கைகளை உங்கள் முன் வைக்கிறோம்.

  1. புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கி படித்துப் பாருங்கள். கூகிள் வழியாக வாங்கினீர்களானால், சொல்வனம் 52% ராயல்டி பெறும். அமெஸான் வழியாக வாங்கினீர்களானால் 35% ராயல்டி கிடைக்கும். உங்களுக்கு எதன் வழியாக வாங்குவது சுலபமோ அதன் வழியே வாங்குங்கள். முடிந்தால் இன்னும் நான்கு பிரதிகள் வாங்கி நண்பர்களுக்கு பரிசாக வழங்குங்கள்.
  2. ஒரு நாவலை படிப்பதுபோல் விறுவிறுவென்று படித்து முடிக்க முயலாமல், முன்னுரையில் சொல்லியிருப்பதுபோல், மெதுவாக புத்தகத்தைப் படித்து, இணைய தளங்களில் புத்தகத்தின் குறை நிறைகளை விமரிசனம் செய்யுங்கள். நானும் சொல்வனம் குழுவினரும் எதிர்காலத்தில் பிரசுரிக்க இருக்கும் புத்தகங்களின் தரத்தை உயர்த்த உங்கள் விமரிசனங்கள் மிகவும் உதவும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் புத்தகத்தை வாங்கிப் படித்து விமர்சிக்குமாறு கொஞ்சம் விளம்பரம் செய்யுங்கள்.
  3. இந்தப் புத்தகத்தை நிச்சயம் படித்து ரசித்து விவாதிப்பார்கள் என்று உங்களுக்குத் தோன்றும் ஒரு சில ஆசிரிய/மாணவ/மாணவிகளின் முகவரிகளை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவியுங்கள். அச்சுப் புத்தகம் வெளிவந்தவுடன் எங்கள் செலவில் ஆளுக்கு ஒரு பிரதி அனுப்ப முயற்சிக்கிறோம்.

அன்புடன்
சுந்தர் வேதாந்தம்

 


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

5 Replies to “சொல்வனம் வழங்கும்..”

  1. அன்பார்ந்த திரு.சுந்தர் வேதாந்தம், உங்கள் கட்டுரைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். ஆழமான அறிவியல் தொழில்நுட்பக் கருத்துகளை எளிதாகக் கொண்டு வந்த அருமையான கட்டுரைகள். தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுவது மிக நல்ல பணி. வாழ்த்துக்கள்.

    நான் வாங்குகிறேன்.

    என் நண்பர்களுடனும் பகிர்கிறேன்.
    அன்புடன்
    சுதாகர் கஸ்தூரி.

  2. சுந்தர் வேதாந்தம் எழுதி சொல்வனம் வலைதளத்தில் பல்வேறு காலங்களில் தனித்தனி கட்டுரைகளாக வெளிவந்த சிந்தனை சோதனைகள் தற்போது மின்நூல் வடிவில் விற்பனைக்கு வந்துள்ளது. மின்நூல் என்கிற நூல் வடிவம் பெறுவதற்காக சில புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பது தொகுப்பின் சிறப்பு.. இதனை படித்துவிட்டு தற்போது எழுதப்போகும் எனது மதிப்பாய்விற்கு முன்னதாக நான் சில உண்மைகளை போட்டு உடைத்துவிடுவது சரியாக இருக்கும்.
    சுந்தர் 30 ஆண்டுகளுக்கு முன்பாக ONGC நிறுவனத்தில் கடலில் அமைக்கப்பட்டிருக்கும் எண்ணைத்தளத்தில் பணிபுரிந்த போது சந்தித்த அனுபவங்களை முன்னதாக எண்ணையும் தண்ணீரும் என தொடராக சொல்வனத்தில் எழுதி வந்த போது, அந்த தமிழ் எழுத்தின் வசீகரத்தால், அந்த அனுபவ பகிர்வு உருவாக்கிய வியப்பினால் ஈர்க்கப்பட்டு உடனுக்குடன் படித்து வந்தேன். அறிவியல் சார்ந்து பல விபரங்களையும் புதிய சொற்களையும் தமிழில் தெரிந்து கொள்ள பேருதவியாக இருந்தது. எனது உறவினர்கள், நண்பர்கள் பலருக்கு எண்ணை கிணறுகள் பற்றி, அதன் பணிகள் பற்றி அறிந்து கொள்ள பேருதவியாக இருக்கும் கட்டுரைகள், எனவே அவசியம் படியுங்கள் என பரிந்துரையும் செய்திருக்கிறேன்.
    அதே ஆர்வத்துடன் சிந்தனை சோதனைகளைப் படிக்கத் துவங்கியவுடன் எனக்கான சோதனையும் ஆரம்பமானது. நான் பொது நிர்வாகவியல் சார்ந்து முதுகலை பட்டத்திற்காக அஞ்சல்வழியில் பாடங்கள் படிக்கும் போது ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 3 சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள் ஒரே பொருள் சார்ந்து எப்படியெல்லாம் வெவ்வேறு விதமாக சிந்தித்தார்கள் என 4 வரி மேற்கோள்கள் (Quotes) இருப்பதை மனதில் நினைவில் கொள்வதையே சிரமமாக கருதியிருக்கிறேன். அப்படியான ஆய்வாளர்கள், குறிப்புகள் என்பது சற்று கடினமான விதத்தில் புரிதலுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்கிற pre concluded மனநிலையில் இருந்துதான் இந்த மின்நூலை படிக்கத் துவங்கினேன்.
    ஆனால் அனுபவ புரிதல் என்பது பல்வேறு கால கட்டங்களில் பல விஷ‌யங்களை எளிதாக புரிந்து கொள்ள உதவியிருக்கிறது. உதாரணமாக இன்று மிகக் குறைவான கல்வித் தேர்ச்சியுடன் முறை சாரா பணிகளில் இருக்கும் தொழிலாளர்கள் பலர் தமது கைபேசியில் எளிதாக தமக்கு வேண்டிய செயலிகளை நிறுவிக் கொள்ளவும், அதனை பயன்படுத்தவும் காலம் கற்றுவித்திருக்கிறது. மற்றொரு உதாரணம் கல்வியறிவு மிகக் குறைந்த கூலித் தொழிலாளர்கள் கூட தமது மகன், மகள் நன்று கற்று கல்லூரிக்கு செல்லும் நிலை வரும் போது கல்லூரிகளின் தரங்கள் பற்றி, கவுன்சிலிங் பற்றி சிறிதளவாவது விவாதித்து அறிந்து கொள்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இத்தகைய புரிதல் இப்புத்தகத்தை படித்துப் புரிந்து கொள்ளவும் உதவலாம்.
    இனி புத்தக விமர்சனத்திற்கு வருவோம். நான் இதிலு்ள்ள அத்தியாயங்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக விவரிக்க போவதில்லை. மாறாக இந்த புத்தக வாசிப்பு என்பது நிச்சயமாக முகப்பில் குறிப்பிட்டிருப்பது போல் பணச்செலவில்லா பிரபஞ்ச சுற்றுலா என்கிற அனுபவத்தை நிச்சயமாக அளித்திருக்கிறது என்பதை மட்டும் குறிப்பாக பதிவிட விரும்புகிறேன்.
    பாரபட்சம் (discrimination) , கோடல்கள் (bias), நுட்பக் கோடல்கள் (micro bias) ஆகியவை நாம் பல நூறு ஆண்டுகளாக சந்தித்து வருபவை. வேற்றுக் கிரகத்தில் ஒரு ஆண், ஒரு பெண்ணை சென்றடையச் செய்து அவர்களைப் போல் குளோனிங் முறையில் பலரை உருவாக்கினாலும், அதிலும் பாகுபாட்டை முதலில் சுட்டிக்காட்டும் மனநிலை உள்ளுர ஓடிக்கொண்டிருப்பதை உணரமுடிகிற வகையில் ஒரு அத்யாயத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாராருக்கு இருக்கிற advantage அவர்களால் உணரப்படுவதில்லை என்பனவற்றை விவாதித்த பின் இன்றும் சாதிய மோதல்கள், பாகுபாடு மோதல்கள் ஏன் தொடர்கிறது என்பது பற்றி ஒரு புரிதல் ஏற்படுகிறது. மனிதன் சிந்திக்க சிந்திக்க பல்வேறு வளர்ச்சிகளும், சாதனைகளும் சாத்தியமாயிருக்கிறது.
    கணணி பயன்பாட்டில் மிகுந்த தூரம் கடந்து வந்து இயந்திர கற்றல் என்பது தற்போது மிகவும் விவாதிக்கப்படும் பொருளாக உள்ளது. அதைப்பற்றி எளிதாக புரிந்து கொள்ள ஓட்டுனரில்லா கார் இயக்கம், உள்ளாட்சி அமைப்புகள் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு சார்ந்த பணிகளை எவ்வாறு திட்டமிட்டுக் கொள்வது, மருத்துவத் துறையில் இயந்திர கற்றல் பயன்பாட்டின்போது சந்திக்கும் இடர்கள் எவை என்பது பற்றியெல்லாம் நன்றாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.
    உடலுறுப்புகள் தானம் என்பது தற்போது மக்களிடைய பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக மனித மூளையை மட்டும் தனியாக எடுத்து வைத்து அதிலிருந்து கட்டளைகள் பிறப்பிக்க வைக்க முடியுமா? என்கிற கேள்வி சிந்தனை சோதனையாக விவாதிக்கப்பட்டிருப்பது இன்று வியப்பாக தோன்றினாலும் சாத்தியமானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
    கணிதம் சார்ந்த சிந்தனையில் எண்களை தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே சென்றால் முடிவிலி (infinite) என்பது ஏற்கக் கூடியது என்றாலும், அதனை தொடர்ந்து ஹில்பர்ட்டின் தங்கும் விடுதியில் எத்தனை பேர் வந்தாலும் தங்க வைக்கும் வகையில் முடிவிலி அறைகள் என விவாதித்திருப்பதன் வழியாக என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1896ல் ஒளிக்கற்றையின் மீது அமர்ந்து பயணித்தால் எவ்வாறிருக்கும் என சிந்தித்ததன் விளைவு இன்று தகவல் தொடர்பில் செயற்கை கோள்களிலிருந்து பூமியில் ஒவ்வொரு தெருவிற்கும் வழிகாட்ட, கடக்க ஆகும் நேரத்தை துல்லியமாக கணித்துச் சொல்வது போன்றவையெல்லாம் சாத்தியப் பட்டிருக்கிறது என்பதை அருமையாக புரிந்து கொள்ள முடிகிறது.
    இந்த மின்நூலில் விவாதிக்கப்பட்டுள்ள பல்வேறு சிந்தனைகளிலிருந்து ஒவ்வொரு விவாதத்திலும் எத்தனை வகையான சாத்தியக் கூறுகள் இருக்கிறது என சிந்திப்பது வளர்ச்சியை கொடுத்துக் கொண்டே யிருக்கும் என்பதை புரிய வைக்கிறது. ஒவ்வொரு பெரிய நிறுவனங்களிலும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தேவையான மாற்றம் (R & D) நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. விளம்பரங்கள், மாற்றங்களின் வாயிலாக கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒருவரை ஒருவர் விழுங்குவது என்பதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.
    மொத்தத்தில் சுந்தரின் சிந்தனை சோதனைகள் படித்தது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்தது. நான் நிச்சயம் என் பெண்களுடன் இதை விவாதிப்பேன். ஆய்வாளர்களின் மேற்கோள்கள் (Quotes) என்பனவற்றை பார்க்கும் போதே இவையெல்லாம் சற்று ரம்பம் என்கிற எண்ணப்போக்கு இந்த புத்தகத்தை படித்த பிறகு மாறியிருக்கிறது, இனிமேல் அவற்றையெல்லாம் படிக்கிறபோது சற்று ஆழந்து கவனிக்க வேண்டும் என்கிற ஆவலை உண்டாக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
    பொறுமையாக இந்நூலை ஒன்றிரண்டு முறை படித்துவிடுவது நிச்சயமாக நமது சிந்தையை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. வளமான தமிழில் சொல்லாடிய சுந்தருக்கு வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ஸம்பத் ஸ்ரீனிவாசன், மதுரை

    1. இவ்வளவு நீண்ட ஒரு கடிதத்துக்குப் பதிலாக, ஒரு மதிப்புரையாக எழுதி அனுப்பி இருந்தால் அதைப் பிரசுரித்திருப்போமே!
      இதை எழுதியதற்கு நன்றி. தமிழகத்தில் இப்புத்தகத்தைப் பரவலாக வாசித்தார்களானால் நல்விளைவுகள் இருக்கும் என்று நம்புகிறோம். என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.
      மைத்ரேயன்
      பதிப்புக் குழு சார்பில்

Leave a Reply to gj25051977Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.