தசம்

தசம் எனில் பத்து. செயற்கரிய அவதானங்கள் செய்பவர்களை அவதானிகள் என்பார்கள். பின்பு நவீன சொற்பரப்பில் அவதானித்தான் என்றொரு சொல் ஆளப் பெற்றது. கூர்ந்து கவனித்தல், நிதானித்து யோசித்தல் எனப் பொருள் கொண்டோம். பண்டைய நினைவாற்றல் மரபில், எட்டு அவதானங்கள் செய்தவர் அஷ்டாவதானி, பத்து அவதானங்கள் செய்தவர் தசாவதானி, பதினாறு அவதானங்கள் செய்தவர் சோடசாவதானி, நூறு அவதானங்கள் செய்தவர் சதாவதானி என அறியப்பட்டார்கள். சதாவதானி செய்குத் தம்பி பாவலரை அறிந்திருக்கலாம். தசாவதானி ஆறுமுகம் பிள்ளையையும் அறிந்திருக்கலாம். இருவருமே நாஞ்சில் நாட்டுக்காரர்கள். அறிந்தென்ன ஆகப்போகிறது என்பார்கள் சிலர். ஆனால் ஒரேயொரு படத்தில் வந்து குண்டியை ஆட்டி, முலைகளைக் குலுக்கி, கைகளை உயர்த்தி, தொடைகளை நெரித்துப் போன குத்துப்பாட்டு நடிகையை ஆயுளுக்கும் அறிந்து வைத்திருக்க வேண்டிய சமூகப் பொறுப்பு நமக்கு உண்டு. யார் சொல்லுவார் மயிலே, பிற்காலத்தில் அவர் தமிழ் நாட்டின் முதல்வராக நேர்ந்து விட்டாலோ!
தசம் எனும் சொல்லின் நடு எழுத்து திரிந்து தயம் என்று மாறும் தமிழில். அதற்கான இலக்கணம் உண்டு. தமிழாசிரியரிடம் கேளுங்கள், சொல்லக் கூடும். பேச்சு வழக்கில் ‘ய’ என்பதும், ‘ச’ வாக மாறும் எடுத்துக் காட்டுகள் உண்டு. பாண்டிச்சேரி பேராசிரியர் முதுமுனைவர் இரா.கோதண்டராமன் போன்றவர்கள் விளக்குவார்கள். ஆழமான நீர்நிலையின் பகுதியைக் கயம் என்பர் மூதாதையர். நாஞ்சில் நாடு அதைக் கசம் என்றது. ‘ஊழிக் காலம்’ நாவல் எழுதிய ‘தமிழ்க்கவி’ அசதி எனும் சொல்லுக்கு மாற்றாக, அயதி எனும் சொல்லைப் பெய்கிறார். ‘அயர்ந்து போனேன்’ என்பதை மாற்றி ‘அசந்து போனேன்’ என்கிறோம் நாம்.
பாஞ்சாலி சபதத்தில், அடிமைச் சருக்கத்தில், பாரதி,

வாயில் காத்து நிற்போன் – வீட்டை வைத்திழத்தல் போலும்
ஆயிரங்களான – நீதி அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்திழந்தான் – சிச்சீ! சிறியர் செய்கை செய்தான்

என்கிறார். வயம் என்பதைத்தான் வசம் என்கிறோம். தன்வயமாதல்தான் தன் வசமாதலும். பிரபஞ்சன் நாவல் ஒன்று, ‘வானம் வசப்படும்!’ கலயம் நமக்குக் கலசமாகும். பங்கயம், பங்கசமாகும். ஆகாயம் ஆகாசமாகும். பாண்டிச்சேரி பக்கத்தில் ஆகாசம்பட்டு எனும் ஊரின் எழுத்தாளர் பெயர் ஆகாசம்பட்டு சேஷாசலம். தேயம் என்பதை தேசம் என்போம். மசிர் என்பார் மயிரையும். இயக்கியை எங்களூரில் இசக்கி என்பார்கள். இசக்கிமுத்து, இசக்கியப்பன், இசக்கியம்மை எனப் பெயர் சூடிக் கொண்டார்கள்.
தசரதனை எஞ்ஞான்றும் தயரதன் என்றே குறிப்பான் கம்பன். கம்பராமாயணத்தின் பாலகாண்டத்தில், குலமுறை கிளத்துப் படலத்தில், விசுவாமித்திர முனிவர், இராம இலக்குவரை அறிமுகப் படுத்துபோது, ‘அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை’ என்கிறார். கார்முகப் படலத்தில் சிவ தனுசை ஒடித்த இராமனை வியந்து, மிதிலை நகர் மக்கள் கூற்றாகக் கம்பன், இராமனைச் சொல்வது,

தயரதன் புதல்வன் என்பார்
தாமரைக் கண்ணன் என்பார்

என்று. மற்றுமோர் பாடலில், ‘ அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை’ என்பார். தயரதனைக் குறிக்க, கம்பன் தரும் சொற்றொடர்கள், தயரதப் பெயரினான், தயரதன் தொல்குலத் தனயன், தயரத ராமன், தயரதன் சேய், தயரதனார் என்பன.
கிறித்துவ மதத்தின் சில பிரிவுகள், சபை உறுப்பினர்களின் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை வேதக் கோயிலுக்கு வரியாகக் கோரும். அதற்குத் தசம பாகம் என்று பெயர். ஆன்மீக வணிகம் செய்யும் அமைப்புகள் சில, தமது அருளால் இலாபம் ஓங்கி வளரும் என்ற நம்பிக்கையை ஏற்றி, தொழில் முனையும் தமது அடியார்களிடம் இலாபத்தின் சப்த பாகம் கோரும் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள் எனத் தகவல் உண்டு. தொழில் முனைவோரின் ஐந்தொகையை ஆன்மீக வணிக நிறுவனங்கள் தணிக்கை செய்யுமா என்பதறியோம்.

திருமாலின் பத்து அவதாரங்களைத் தசாவதாரம் என்பார்கள். அந்தப் பெயரில் சினிமாவும் வந்ததாக நினைவு. ‘பத்துத் தலை ராவணனை ஒற்றைத் தலை ராமன் வென்றான்’ என்றொரு பாடல் வரியுண்டு. கம்பர் தமது கவித்திறன் குவித்து யாத்த செய்யுட்கள் பல இராவணனைப் பற்றியது. அவருடைய செல்லக் கதாபாத்திரம் அவன். இலங்கை வேந்தனுக்குப் பத்துத் தலைகள். இராவணனைத் தயமுகன் என்பார் கம்பர். பத்து இரதங்களை உடையவன் தசரதன். பத்துத் தலைகளை உடையவன் தசமுகன் எனும் தயமுகன். சுந்தர காண்டத்தில், ‘தய முகன் தருக என்று ஏய மன்னுடைச் சேனை’ என்கிறார். ‘ஆக்கரிய மூக்கு, உங்கை அரியுண்டான் என்றாரை நாக்கு அரியும் தயமுகனார்’ என்பார், ஆரணிய காண்டத்து சூர்ப்பணகைப் படலத்துப் பாடலில். யாவராலும் செய்தற்கு அரிய ஒப்பற்ற மூக்கை, உன் தங்கை அரியக் கொடுத்தாள் என்று சொன்னவரின் நாக்கை அரியும் இராவணன் என்பது பொருள்.

சுந்தர காண்டத்தில், காட்சிப் படலத்தில், இராவணனைச் சீதை கேட்கிறாள், ‘ அறிவு இல்லாதவனே, சிறப்பு அற்றவற்றைப் பேசிப் பத்துத் தலைகளையும் சிந்திப் போகச் செய்து கொள்வாயோ’ என்று. முழுப்பாடலும் தரலாம்.

மேருவை உருவ வேண்டின், விண் பிளந்து ஏக வேண்டின்,
ஈர் ஏழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின்,
ஆரியன் பகழி வல்லது, அறிந்திருந்து, அறிவிலாதாய்
சீரிய அல்ல சொல்லி, தலை பத்தும் சிந்துவாயோ?

சிறந்தவனான இராமனின் அம்பு, மேருவை உருவும், விண் பிளந்து ஏகும், ஈரேழு பதினான்கு உலகையும் அழிக்கும் வலிமை உடையது.’ அதை அறிந்திருந்தும் அறிவில்லாதவனே, சீரிய அல்ல சொல்லித் தலை பத்தும் சிந்துவாயோ? என்பது பாடலின் எளிமையான பொருள்.

வாலியின் தம்பி, இராமனின் தோழன், அனுமனின் தலைவன், கிட்கிந்தையின் அரசன் சுக்ரீவனை அறிவோம். தசக்கிரீவன் தெரியுமா? பத்துக் கழுத்து உடையவன் என்று பொருள். பத்துத் தலை உடையவன் தானே பத்துக் கழுத்தும் உடையவனாக இருக்க இயலும்? நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழியின் பாடல்,

அலை நீர் இலங்கைத் தசக்கிரீவற்கு
இளையோற்கு அரசை அருளி’

என்கிறது. ‘கடலலை சூழ் இலங்கையின் வேந்தன் இராவணனின் தம்பி வீடணனுக்கு அரசு நல்கி’ என்பது பொருள்.

தச கண்டன் என்றாலும் இராவணனே! கண்டம் எனில் கழுத்து. கரு நீலகண்டன், திரு நீல கண்டன், பெரு நீலகண்டன் என்பார்கள், ஆலகால விடம் தங்கிய, நீலம் பாரித்த கழுத்தை உடைய சிவனை.
இனிமேல் தசம் பற்றிய சில அகராதிப் பதிவுகள் பார்ப்போம்.

 • தச – பத்து.
 • Bite – கடி என்னும் பொருள் கொண்ட வட சொல்.
 • தசக்கிரீவன்- இராவணன்
 • தச கண்டன் – இராவணன்
 • தச முகன் – இராவணன்
 • தசகம் – பத்துச் செய்யுள் கொண்ட பிரபந்த வகை. சதகம் எனில் நூறு செய்யுள் கொண்ட பிரபந்த வகை. ’குமரேச சதகம்’, ’தண்டலையார் சதகம்’, ‘அறப்பளீசுர சதகம்’ என்பன சில குறிப்பிடத் தகுந்த சதகங்கள்.
 • தச காரியம் –
 •  The ten spiritual experiences of the soul in its path towards final deliverance. தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவ ரூபம், சிவ தரிசனம், சிவ யோகம், சிவ போகம் எனும் ஆன்ம  அனுபவ நிலைகள்.[நான் என்ன எழுதிச் சென்றாலும், ‘சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’]
  • பண்டார சாத்திரத்துள் அம்பலவாண தேசிகர், தட்சிணா மூர்த்தி தேசிகர், சுவாமிநாத தேசிகர் என்ற மூவரால் இயற்றப்பட்ட சைவ சித்தாந்த நூல்கள்.
  • சிதம்பர நாத தேசிகர் இயற்றிய சைவ சித்தாந்த நூல்
  • மாய ரூபம், மாயா தரிசனம், மாயா சுத்தி, சீவ  ரூபம், சீவ தரிசனம், சீவ சுத்தி, பிரம ரூபம், பிரம தரிசனம், தேக கைவல்லியம், விதேக கைவல்லியம் என்ற ஆன்ம நிலைகள்
  • தச கூலி – பயிரிடும் தொழிலில் கொடுக்கும் பத்துவகைக் கூலிகள்
 • தச சீலம் – பௌத்தத் துறவிகளுக்குரிய பத்து வகையான ஒழுக்கங்கள்
 • தச தானம் – அந்தணருக்குக் கொடுக்கும் பத்துத் தானங்கள்
 • பசு, பூமி, எள், பொன், நெய், ஆடை, வெல்லம், நெல், வெள்ளி, உப்பு என்பன.
 • தச திக்கு – பத்துத் திசைகள். நான்கு பெருந்திசைகள், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, தெற்கு என்பன. நான்கு கோணத் திசைகள், வடகிழக்கு, தென் கிழக்கு, தென் மேற்கு, வட மேற்கு என்பன. மேல், கீழ் என இரண்டு திசைகள். ஆகப் பத்து திசைகள்.
 • தச நாடி – The ten tubular vessels of the human body, believed to be the principal channels of the vital spirit.
 • இடை, பிங்கலை, சுழு முனை, காந்தாரி, அத்திசிங்குவை, சங்கினி, பூடா, குகு, கன்னி, அலம்புடை என்னும் பத்து வகைப்பட்ட பிராணவாயு இயங்குவதற்குரிய வழியாகிய நாடிகள்.
 • தசப் பிரசாபதி – Lords of created beings, numbering ten. மரீசி, அத்திரி, அங்கிரசு, புலஸ்தியர், புலகர், கிரது, வசிஷ்டர், தக்ஷர், பிருகு, நாரதர் எனும் பத்து உப பிரம்மாக்கள்.
 • தசப் பிராதுற்பவம் – திருமாலின் பத்து அவதாரங்களைப் பற்றிக் கூறும் நூல்
 • தசப் பொருத்தம் – பத்து வகைத் திருமணப் பொருத்தங்கள்
 • தச பந்தம் – செலுத்த வேண்டிய வரியில், பத்தில் ஒன்றை, குளம் வெட்டுதல் போன்ற பொதுக்காரியங்களுக்காக மாற்றி வைத்தல்.
 • தச பந்தவினாம் – பொதுத் தருமங்களை நடத்துவதற்காக, வரி குறைத்து விடப்பட்ட மானியம்.
 • தச பலன் – புத்தன்
 • தச பாரம் – தச பாரமிதை. புத்த பதவிக்குரிய தானம், சீலம், க்ஷமை, வீரியம், தியானம், பிரக்ஞை, உபாயம், தயை, பலம், ஞானம் எனும் பத்துக் குணநலன்கள்.
 • தசம் – சிவிகை
 • தசம் – பத்து. ‘தச நான்கு எய்திய பணை மருள் நோன் தான்’ – நெடுநல் வாடை. இங்கு தச நான்கு எனில் நாற்பது.
 • தசமம் – பத்தாவது
 • தசமி – பத்தாம் திதி. தசமி திதியில் உண்ணும் ஒரு பணியாரம்
 • தசமுக நதி – கங்கை
 • தசமுகன் -இராவணன்
 • தச மூலம் – Ten medicinal roots. கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி, வில்வம், பெருங்குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை எனும் பத்து மருத்துவ வேர்கள்.
 • தச மொழி – மோசை விதித்த பத்துக் கட்டளைகள். Ten commandments
 • தசரதன் – அயோத்தி அரசன். இராமன் தந்தை
 • தசரா – A festival of 10 days in honour of Durga in the bright fortnight immediately after Mahalaya Amavasai.
  • துர்க்கா தேவியின் பொருட்டு மாளய அமாவாசையை அடுத்து நிகழ்த்தப்படும் பத்து நாள் பண்டிகை.
 • தசரிப்பு – தஸ்ரிஃப் எனும் அரபியச் சொல். Reward, present, இனாம்.
 • தச வந்தம் – தச பந்தம்
 • தச வருக்கம் – Tenfold division of horoscope.
  • ஜனன கால சக்கரத்தை இராசி, ஓரை, திரேக் காணம், சத்தமாங்கிசம், நவாங்கிசம், தசாங்கிசம், துவாத சாங்கிசம், கலாங்கிசம், திரிஞ்சாங்கிசம், சஷ்டியாங்கிசம் எனப் பத்து வகையாகப் பிரிக்கும் பிரிவு.
 • தசாவதாரன் – பத்து அவதாரங்கள் எடுத்த திருமால்
 • தச வாயு – The ten vital airs of the body
 • பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்ற பத்து வாயுக்கள்.
 • தசனப் பொடி – கரிய நிறமுள்ள பற்பொடி
 • தசனம் – பல். கவசம். மலைமுடி.
 • தசனோற்பவம் – Teething. பல் முளைத்தல்.
 • தசாக் கரி – A melody. பண் வகை.
 • தசாகம் – இறந்தவர்க்குப் பத்து நாள் செய்யும் சடங்கு.
 • தசாங்கத் தியல் -ஆசிரிய விருத்தத்தால் அரசியல் உறுப்புகள் பத்தினையும் பாடும் பிரபந்த வகை.
 • தசாங்கப் பத்து – நேரிசை வெண்பாவால் அரசியல் உறுப்புகள் பத்தினையும் பாடும் பிரபந்த வகை.
 • தசாங்கம் – The ten constituents of a kingdom.
 • நாமம், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி (திருவாசகம்).
 • யானை, நாடு, ஊர், ஆறு, மலை, குதிரை, தேர், முரசு, தார், கொடி (வெண்பாப் பாட்டியல்)
 • யானை, நாடு, ஊர், ஆறு, மலை, குதிரை, தானை, முரசு, தார், கொடி (சூடாமணி நிகண்டு).
 • தார் என்றால் மாலை. தானை எனில் சேனை, படை. அரசாட்சியின் இன்றைய அங்கங்கள்- சாராய ஆலை, மணல்-கல் குவாரி, சுரங்கங்கள், எஸ்டேட், பலகோடி விலையுள்ள கார்கள், கப்பல்கள், தீவுகள், கல்லூரிகள், பண்ணை வீடு, கொலையும் குற்றமும் கூசாமல் செய்யும் வாரிசுகள் (கும்ப முனி).
 • தசாங்கப் பொடி – பத்துவகை வாசனைத் திரவியங்களாலான தூபப் பொடி
 • தசாங்கிரம் – இராசியைப் பத்தாகப் பிரித்துக் கிரகங்களின் நிலையைக் குறிக்கும் சக்கரம். தசாமிசம்
 • தசா சந்தி – கிரகங்களின் சந்திப்பு
 • தசாட்சரி – தசாக்கரி
 • தசா நாதன் – தசைக்குத் தலைமை வகிக்கும் கிரகம்
 • தசா பலன் – கிரக ஆட்சி காலத்தின் பயன்
 • தசார் – பெர்சிய மொழிச் சொல், தயார்
 • தசாவதாரம் – திருமாலின் பத்து அவதாரங்கள்
 • மத்ஸ்யம் (மீன்), கூர்மம் (ஆமை), வராகம் (பன்றி),நரசிங்கம் (ஆளரி), வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி.
 • தசானனன் – தசமுகன்
 • தசியு – தஸ்யு. ஆரியன் அல்லாத சாதி வகை
 • தாசர் – திருடன்.
 • தசிர தேவதை – அசுவினி தேவர். மகாபாரதத்தில் குந்தி மூலம் இவருக்குப் பிறந்தவர்களே நகுலன், சகாதேவன்.
 • தசோப நிடதம் – ஈசம், கேனம், கடம், பிரசினம், முண்டகம், மாண்டூக்கியம், தைத்ரியம், ஐத்ரேயம், சாந்தோக்கியம், பிரகதாரணியம் எனும் பத்து சிறப்பான உப நிடதங்கள்

தசம் எனில் பத்து எனில் தசத்துக்கு ஒப்பும் மிக்கும் உடைய நமக்கான சொற்கள் இல்லையா என்ன? பத்து எனும் மூன்றெழுத்துச் சொல்லுக்கு மூலச் சொல் பஃது. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் 445 ஆவது நூற்பா பஃது எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. பஃபத்து என்றால் பத்துப் பத்து. நூறு என்கிறது தொல்காப்பிய உரை. பத்து எனும் சொல்லையும் தொல்காப்பியம் பயன்படுத்துகிறது. ‘ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி’ என்பது எழுத்ததிகார நூற்பா 475.

இனி பத்தின் சில சொற்களைக் காண்போம்.

 • ஒன்பதோடு ஒன்று கூடிய எண் 10.
 • நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் பத்துப் பதிகம் கொண்ட பகுதி.
 • தசமி திதி. The tenth titi of a lunar fortnight.
 • இறந்த பத்தாம் நாள் செய்யும் பிரேதச் சடங்கு.
 • வயல். வடக்குப் பத்து. தெற்குப் பத்து, கீழப் பத்து, மேலப் பத்து.
 • பத்தி. பக்தி. ‘பத்துடை அடியவர்க்கு எளியவன், பிறர்களுக்கு அரிய வித்தகன், மலர் மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்’ என்பார் நம்மாழ்வார்.
 • பத்துக் கட்டு – குடியானவர் சாகுபடி செய்யும் நிலம்.
 • பத்துக் காடு – வயற்காடு.
 • பத்துக் காலோன் – பத்து கால்கள் உடைய நண்டு  அல்லது ஞெண்டு.
 • பதிகம் – கடவுளைப் பத்துச் செய்யுட்களாகப் பாடும் பிரபந்தம்.
 • பதிற்றந்தாதி – வெண்பா அல்லது கலித்துறையில் பத்துப் பாடலாய் அந்தாதித் தொடையாகப் பாடப்படும் பிரபந்தம்.
 • பதிற்றுப் பத்தந்தாதி – பத்துப் பாடல்களுக்கு ஒரு சந்தமாக, பத்து சந்த பேதம் உடைய 100 செய்யுட்களால் அந்தாதியாகப் பாடப் பெறுவது. மதுரை பதிற்றுப் பத்தந்தாதி.
 • பதிற்றுப் பத்து – எட்டுத் தொகை நூல்களில் ஒன்று. சேர மன்னர் பத்துப் பேரைப் பத்துப் புலவர் பாடிய நூல். இவற்றுள் இன்று முதலாம் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கவில்லை.
 • பத்துப் பாட்டு – சங்க இலக்கிய நூல்கள் பத்துக் கொண்ட பகுப்பு. எட்டுத் தொகை நூல்கள் எட்டினுள் அடங்கும் பாடல்கள் 2420. இன்று கிடைப்பன 2350.
 • பத்துப் பாட்டு நூல்கள் மொத்தம் 3551 அடிகள். பத்துப் பாட்டு நூல்கள் மொத்தம் பத்து. எட்டுப் புலவர் பாடியது. பழகி வந்த பாவினங்கள் ஆசிரியப்பாவும், வஞ்சிப் பாவும். இவற்றுள் புறத்திணை நூல்கள் 6, அகத்திணை  நூல்கள் 3, அகப்புறத் திணை நூல் ஒன்று. இரு நூல்களை எழுதிய புலவர்கள் நக்கீரரும் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும்.
 • பத்துப் பாட்டு நூல்களைக் குறிக்கும் வெண்பா ஒன்று.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வள மதுரைக் காஞ்சி- மருவினிய

கோல நெடுநல்வாடை கோல் குறிஞ்சி பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து.

திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடு கடாம் என்பன.

 • பஃது, பத்து என்பன போல பதின் என்றாலும் பத்துத்தான். Teen age எனும் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் பதின்பருவம். ஐம்பதாண்டுகட்கு, முன்னர், தமிழில் இந்தச் சொல் இல்லை. ஆனால் பதின்மர் எனும் சொல்லை தக்கயாகப் பரணியும், நன்னூலும் பயன்படுத்தியுள்ளன. பதின்மர் எனில் பத்துப் பேர். பதின்+ஆயிரம்= பதினாயிரம். பதின்+எட்டு= பதினெட்டு.
 • முருகனைப் பதினெண் கண்ணன் என்பார்கள். பதினெட்டுக் கணங்களைப் பதினென்கணங்கள் என்பர். பதினெட்டு நூல்கள் கொண்ட தொகை, சங்க இலக்கிய நூல்கள், பதினெண் கீழ்க் கணக்கு எனப்படும்.

பதினெண் குடிகள், பதினெண் குற்றம், பதினெண் சித்தர், பதினெண் புராணம், பதினெண் பாடை (பாடை- பாஷை- மொழி) பதினெண் பூமி, பதினைந்தாம் புலி, பதினோராம் திருமுறை எனப் பதினைச் சார்ந்தும் பல சொற்கள். பதினெண் பாடை என்று பதினெட்டு மொழிகளத் தமிழ் இலக்கியம் பேசுகிறது. இந்தப் பதினெட்டு வடமொழி நீங்கலானவை. அவை, சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கு, கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கவுடம், கோசலம், தமிழ் என்பன.

’பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ என்பார்கள். நற்குணங்களான அந்தப் பத்துக்கும் பட்டியல் உண்டு. பசி வந்தாலும் அவற்றைப் பறந்து போக விடாத தன்மை உடைய மரபும் நமக்கு உண்டு. ‘ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்’ சான்றோர் பழிக்கும் வினை செய்யாத மாந்தர் உண்டு.

எட்டு எட்டாகத்தான் மனித வாழ்வைப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று இல்லை. பத்துப் பத்தாகக் கூடப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்றும் பழுதாகி விடாது. இஞ்ச், அடி, ஃபர்லாங், மைல் என்றவர் தாமே நாம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு! இன்று மில்லி மீட்டர், சென்டி மீட்டர், மீட்டர், கிலோ மீட்டர் என்று ஆகவில்லையா?

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று முதுமொழிக்காஞ்சி கூடலூர்க்கிழார் இயற்றியது. பத்து அதிகாரங்கள். ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து குறள் தாழிசைச் செய்யுள்கள். அதிகாரத் தலைப்புகள் சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப் பத்து, எளிய பத்து, நல் கூர்ந்த பத்து, தண்டப் பத்து என்பன.

எளிய பத்தில் ஒரு பாடல்-  ‘உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது!’

மிக்க உணவை விரும்புகிறவருக்கு மிகுந்த நோய் எளிதில் உண்டாகும் என்பதாம் பொருள். கொங்கு நாட்டில் ஒரு கல்யாண விருந்தில் உட்கார்ந்தால் நிறையப் பேர் நோயாளிகள் என்பது தெரியும். நல்கூர்ந்த அதிகாரப் பத்தில் ஒரு பாடல், ‘சொல் செல்லா வழிச் சொலவு நல்கூர்ந்தற்று’ என்கிறது.

தன் சொல் மதிக்கப்படாத இடத்தில் ஒன்றைச் சொல்லுதல் வறுமையுறும் என்பது பொருள். இந்தப் பாடலில் ‘சொலவு’ என்றொரு பழைய ஆனால் இன்று நமக்கு நூதனமாகத் தெரியும் புதிய சொல்லை அறிமுகம் ஆகிறோம். சொலவு என்றால் சொல்லுதல் என்று அறிந்து கொள்கிறோம். சொலவு எனும் சொல்லின் உடன் பிறப்புகளே சொலவம், சொலவடை என்று உணர முடியும்.

எண்கள் பற்றிய முன்பின்னாக எழுதப் பெற்ற, பத்துக் கட்டுரைகளும் இத்துடன் முற்றுப் பெறுகின்றன. பன்னிரண்டு, பதினெட்டு, நூற்றெட்டு என்று மேலும் சில கட்டுரைகள் எழுதலாம் தான். உலகத்து அத்தனை விதத் தேறல்களையும் பருகிக் களித்து விட இயலாது. ‘துய்ப்போம் என்பன தப்புந பலவே!’

இந்தக் கட்டுரைகள் அனைத்துமே எனதான ஒரு அகராதிப் பயிற்சியே ஆகும். பயிற்சியில் கண்டவற்றைப் பதிவு செய்தேன், அவ்வளவே! அகராதி பயில்வதை, அகராதிகள் ஊடாகப் பயணம் மேற்கொண்டதை, ‘அகராதி’ என்று ‘திருநெல்வேலிக் குசும்பு’ செய்தவர் உண்டு. மூடை மூடையான குசும்புகளை ஞாபககஞாபகக் கிட்டங்கிகளில் சேமித்து வைத்து மொத்த வியாபாரமும், பதுக்கல் வியாபாரமும் கேட்கிறார், குறுவியாபாரியான நம்மைப் பார்த்து, ‘வெள்ளாளக் குசும்பு’ என்று. கவிஞர் தாணு பிச்சையா கேட்டது போல, நண்பர் செல்வேந்திரன் கேட்டது போல, நானும் கேட்கலாம் நான் என்ன வகை வெள்ளாளன் என்று! அடித்தூர் கறுத்த செம்புப் பானை, சிலமுறை அடுப்பில் ஏற்றப்பட்ட கிண்ணத்தைக் கறுப்பி என்றதாம்.

எந்த நற்சொல்லையும் எதிர்மறைப் பொருள் கொண்டு புழங்கப் பெறுவதுண்டு. நாற்றம் என்ற சொல்லுக்கு நறுமணம் என்பதே ஆதிப் பொருள். ‘பூவினுள் நாற்றம் நீ’ என்கிறது பரிபாடலின் கடுவன் இளவெயினனார் பாடல். முழுப்பாடலுமே தரலாம் அதன் அருமை கருதி.

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;

வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;

வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ.

இப்பாடலின் நாற்றத்தின் பொருள் என்ன, இன்று நாற்றம் என்றால் என்ன?

இலக்கிய ‘நுண் அரசியல்’ பேசப் புகாமல் நேரடியாகச் சொன்னால், இந்தப் பத்துக் கட்டுரைகள் எழுதியதன் மூலம், சொற் பெருவனத்தில் உலாவும் அனுபவம் ஏற்பட்டது எனக்கு. நான் பல மரம் கண்ட தச்சன் என்றாலும் சில மரங்கள் வெட்டுகிறவன்.

இந்த எண்கள் பற்றிய அகராதிப் பயணத்தின்போது, பயிற்சியின் போது, சொற்களின் மாக்கடல் கரையில் நிற்கும் எளிய மாணவனாகவே உணர்ந்தேன். முலையிரண்டும் உடையாளும் பெண் காமுறக் கூடாதா என்ன? கம்பன் சொல்வது, ‘ஓசை பெறு உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை, முற்றவும் நக்குபு புக்கென’ என்று. மேலும் அடுத்த பாடலில், ‘நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்’ என்பான். தமிழின்  முன்னால் நிற்கும்போது எனக்கு அவ்வாறே தோன்றுகிறது.

இந்தக் கட்டுரைகள் நான் எழுதியவை என்றாலும், அதில் பெரும்பங்கு தமிழ் அகராதிகள், நிகண்டுகள், Lexicon, சொற்றொடர் அகராதி இவற்றுக்கு உண்டு.

தமிழுக்குத் தமிழ் எங்ஙனம் நன்றி பாராட்டும்.

உதவிய நூல்கள் – இணைப்பு பட்டியல்:

உதவிய நூற்கள் பட்டியல்

 1. Tamil Lexicon, University of Madras, 1982
 2. பெருஞ் சொல்லகராதி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1989
 3. சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1986
 4. சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்,2007
 5. A word index for Cankam literature, Insititute of Asian Studies, 199?
 6. தமிழ்ச் சொற்றொடர் அகராதி, மெய்யப்பன் பதிப்பகம், 2003
 7. அயற்சொல் அகராதி, வேரியம் பதிப்பகம், 2007
 8. பிங்கல நிகண்டு, வசந்தா பதிப்பகம், 2000
 9. திவாகர நிகண்டு
 10. அபிதான சிந்தாமணி, Asian educational services, 2001
 11. அபிதான கோசம், Asian educational services, 1985
 12. அபிதான மணிமாலை, டாக்டர். உ.வெ.சாமிநாதையர் நூல் நிலையம், 1988
 13. எதுகை அகராதி, சந்தியா பதிப்பகம், 2009
 14. யாழ்ப்பாண அகராதி, தமிழ் மண் பதிப்பகம், 2005
 15. தமிழ்- தமிழ் அகர முதலி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1985
 16. திருக்குறள் சொல்லகராதி, காசித் திருமடம், திருப்பனந்தாள், 2008
 17. கம்ப ராமாயண அகராதி, அ.சே. சுந்தர ராஜன், 1971
 18. திருவாசகச் சொல்லகராதி, தாயக வெளியீடு, 2011
 19. இலக்கியச் சொல்லகராதி, சந்தியா பதிப்பகம், 2009

 

 

One Reply to “தசம்”

 1. ஐயா,இந்தக் எண்களைப் பற்றிய இந்தக் கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். நவம் பற்றி அடுத்தக் கட்டுரை வரும்தானே???? 9 என்ற எண்ணை நாம் ‘ஒண்பது’ என்று கூறுகிறோம்,ஆனால் அதை ‘ஒண்’ என்றுதானே சொல்ல வேண்டும். ஒண்பது என்றால் ‘90’ என்று அர்த்தமாகிறது.இது இப்படியே தொடர்ந்து ‘90-தொண்ணூறூ’,’900-தொள்ளாயிரம்’ என வருகிறது.இது சரியில்லை எனத் தோன்றுகிறது.

  இதைப் பற்றி நீங்கள் கண்டிப்பாக எழுதுவீர்கள் என எதிர்ப்பார்த்திருந்தேன்.

  ஆனால்,நீங்கள் இக்கட்டுரையை முடித்த விதத்தை முற்றிலும் எதிர்ப்பார்க்கவில்லை.நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.