இனிக்கும் முத்தம்

பள்ளிக்கூடம்  முடிந்து உள்ளூர்ப்பிள்ளைகள் வீட்டிற்கு சென்றிருந்தனர். ஐந்தாம் வகுப்புப் பிள்ளைகள் தோட்டத்திற்கு அருகிலிருந்த தரைத்தொட்டியிலிருந்து நீரெடுத்து  ஊற்றிக்கொண்டிருந்தனர். நடுவில் பாதைவிட்ட  மதிலோரத்தோட்டம்.

ஆங்கிலேயர் காலத்துப் பாதுகாப்பு முறையாக மதிலின் மேல்காரையில் உடைந்த கண்ணாடிச்சில்லுகள் மதில்நெடுக உச்சியில் குத்தி வைக்கப்பட்டிருந்தன.சிலிர்த்து நிற்கும் முள்ளம்பன்றி முதுகென நிற்கும் மதிலருகே செல்ல நினைத்தாலே சில்லுகளைப் பார்த்தவுடன் பின்வாங்கும் மனசு.

கருங்கற்களால் வரம்பு கட்டப்பட்டு மைதானத்திலிருந்து பிரிக்கப்பட்டிருந்தது. மஞ்சள், நீல, இளஞ்சிவப்பு  மலர்கள் நிறைந்த நிறங்களின் வரிசைகளாய் செடிகள். பிள்ளைகள்  உலைத்ததால் வண்ணத்துப்பூச்சிகள் எழுந்துபறந்தன. பறந்தவைகளின் பின்னே பிள்ளைகள் கைநீட்டியபடி தாவிக்கொண்டிருந்தனர்.

“போதும்மா…போய் விளையாடுங்க. பஸ் வர நேரமிருக்கு,”என்றார் ஏஞ்சலின் சிஸ்டர்.மேற்கே வானம் செம்மையேறிக் கொண்டிருந்தது.

கை தவறித் தரையில் சிதறிய மணிகளாய் மைதானத்தில் பரவினர் பிள்ளைகள். நொண்டி, ஓடிப்பிடித்தல், கயிறுதாண்டுதல் என்று அவரவர் விருப்பப்படி ஆடிக்கொண்டிருந்தார்கள்.

வெள்ளைச்சட்டை ஊதாபாவாடையிட்டு, ஓடும்போது பாவாடையைச் சுற்றிக் காற்றிலாடி உப்பவைத்து அமர்ந்து விரிந்த, சிறகு கொண்ட வண்ணத்துப் பூச்சிகளாய் ஓரிடத்தில் நில்லாமல் மாறியபடியிருந்தனர்.

சிந்து கிழக்குக் கட்டிடத்திற்கான நீண்டபடிகளில் ஏறி வராண்டாவிலிருந்த  பெரிய தூணில் சாய்ந்து  முட்டியை உயர்த்தி அமர்ந்தாள். கீழே  ரோஜாத்தோட்டத்தின்  மெலிந்துயர்ந்த தண்டுகளில் மலர்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.

பெரிய இரும்புக் கதவங்களின் மேலே இருபுறமும் மதிலில் சிறகுவிரித்த தேவதை சிலைகளின் கடல்வண்ண, பறக்கும் உடைகளைப் பார்த்தபடியிருந்தாள். அந்த  உயரம் வரை ஏறியிருந்த அந்திமல்லிச் செடியில் மொட்டுகள்  சிதறிய அரிசிப்பொரிகளெனக் கூம்பியிருந்தன.

“யாரது…? பப்பி ஷேம்ல பாவாடையை மடக்காம உட்காந்திருக்கிறது….”என்ற குரல் கேட்டுத் திரும்பினாள் சிந்து. ஐஞ்சாம்மா சிஸ்டரைக் கண்டதும் எழுந்தாள்.

“இங்க வா,” என்றழைத்தார்.

சிவந்த மெல்லிய உடலுடன் அரைப்பாவாடையைப் பிடித்தபடி படியிறங்கும் சிந்துவைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“இதைக் கையில பிடிச்சுக்கிட்டு எங்கூட வா,”என்று பூக்கூடையை அவளிடம் தந்தார். பனையோலையில் செய்த அகன்ற செவ்வகப்பெட்டியை இருகைகளிலும் பிடித்துக்கொண்டாள்.

வெள்ளை அங்கியைத் தூக்கிப் பிடித்தபடி சிலுவை வயிற்றில் ஆட நடக்கும் அவரைப் பார்த்துக் கொண்டு தோட்டத்திற்குள் இறங்கினாள் சிந்து. ஈரம் மண்ணோடு சேர்ந்து கால்களில் கொழகொழத்தது.

கையில் கத்தரியுடன் ஒவ்வொரு செடியாய் வளைத்துப் பார்த்து முதிர்ந்த மலர்களைத் தேடிக் கொண்டிருந்தார்.

“சிந்து ஏன் விளையாடப் போகல?”என்று கேட்டார்.

“விளையாடப்புடிக்கல சிஸ்டர்…”

“உடம்பு சரியில்லயா?”

“நல்லாயிருக்கேன் சிஸ்டர்…”மஞ்சள் பூவொன்று அவள் வைத்திருந்த கூடையில் விழுந்தது.

“பஸ் வருதான்னு பாத்துட்டிருந்தியா?”என்றார் சிஸ்டர்.

“இல்ல… பஸ்வந்தா வீட்டுக்கு போகனுமே…”என்றாள்.

“ஆமாம்…”என்றார். அவர் கால்பட்டு  கருப்புசிகப்புச் சங்குசக்கரமெனச் சுருண்ட மரவட்டையிடமிருந்து விலகி அடுத்த செடிக்கு நகர்ந்தார்.

குனிந்து தரையைப் பார்த்தபடி உதட்டைப்பிதுக்கிக் கொண்டிருந்தவளை சிஸ்டர் திரும்பிப் பார்த்து புன்னகைத்தபடி மலரைப் பறித்து கூடையில் போட்டார். கொசுக்கள் எழுந்து பறந்து சூழ்ந்து வந்தன.

“காலையில அம்மாவோட சண்டைப் பிடிச்சியா?”

“இல்ல,”என்று பளிங்குக் கண்களைச் சிமிட்டினாள்.

“பின்ன ஏன் விளையாடப்பிடிக்கல?”

“வீட்டுக்குப் போனதும் பால் குடிச்சிட்டு தாத்தாவீட்டுக்கு போவேன்…இன்னிக்கு போகமுடியாது…அதனாலதான்….”என்று குனிந்தவளின் கைக்கூடையில்வெண்ணிற அடுக்குமல்லி  விழுந்தது.

“ஊருக்குபோனா வரப்போறாங்க….”

“இனிமே வரவேமாட்டாராம்…”

சிஸ்டர் காய்ந்தகிளை கையில் கீற கையை உதறிக்கொண்டு சற்று நின்றபின் மீண்டும் பூக்கள் தேர்ந்தார். அமர்ந்திருந்த சிட்டு ”கிச்” என்று ஏதோ சொல்லிப் பறந்தது.

“பாட்டாவா…?”என்றார்.

“இல்லங் சிஸ்டர் ….எங்க வீடு தாண்டி ஒருமொடக்கு இருக்குல்ல அந்த சந்துல போனா பெரியகல்லு போட்ட வீடு தாத்தாவீடு…”

“ம்….அப்படியா?”எதிர்பாராமல் பத்துநாட்களுக்குமுன் வைத்த செவ்வந்தி பூத்திருந்தது கண்டுபுன்னகைத்து நடந்தார்.

“தாத்தா வீட்ல யாரெல்லாம் இருக்காங்க?”

“பெரியபோட்டாவுல காந்தி தாத்தா,நேரு மாமா இன்னும்நிறையபேர் …போட்டோ பாத்தா பேர்சொல்வேன். தாத்தா சொல்லி கொடுத்துருக்கார். அந்த மல்லியப்பூசெடி மாதிரி தாத்தாவீட்லயும் இருக்கு…எங்ககூட  தாத்தாவும் பூப்பறிப்பார். பின்னாடி பாட்டி இருப்பாங்க..”பெரியசெடியிலிருந்த செவ்வந்திகளைப் பறித்து கூடையிலிட்டார்.

“தாத்தாவீட்டுக்குபோய் என்னசெய்வ…விளையாடுவியா?”அந்தி  மல்லிகை மணம் காற்றிலேறிக் கொண்டிருந்தது. சிஸ்டர் மூச்சை இருமுறை ஆழ உள்ளிழுத்தார்.

“ம் ..விளையாடுவேன்.முதல்ல பாடம் படிக்கனும், சீக்கிரமா வீட்டுப்பாடம் எழுதனும்…தாத்தா சொல்லித் தருவாரு…கடைசியா தாத்தா ஈச்சரை சுத்தி நாங்க ஓடிப்போய் எடம்பிடிப்போம்”

“நீ எங்க இடம்பிடிப்ப?” என்றபடி காற்றில்பறந்த வெண்தலையங்கியை சரிசெய்தார்.

சிறுபூச்சிகள் பறந்து கண்களிடமே வந்து பறந்துகொண்டிருந்தன.கைகளை ஆட்டியபடி இருவரும் நடந்தனர்.

“தாத்தா கைகிட்ட…கையப் பிடிச்சுக்குவோம். இல்லாட்டி தாத்தா கையப் பிடிச்சுக்குவார். கதை சொன்னதும்…நாங்க முத்தம் கொடுப்போம்..தாத்தாவும் கொடுப்பார். ’முத்தம் இனிக்குதே’ன்னு பொய்சொல்வாரு..”

“ம்…”என்று புன்னகைத்த சிஸ்டரின் கன்னங்கள் குழிந்தன.

“ஞாயித்துக்கிழம எங்களை  டீ.வி பாக்க போகச் சொல்லிருவாரு.  நான்மட்டும் தாத்தாக்கூட வயலுக்குப்போவேன். நீயும் போ…இன்னக்கி மட்டும்தானே படம் போடுறாங்கம்பார். எனக்கு கதைசொல்லுங்கன்னு சொல்வேன்.வரப்பில நடக்கையில கையப் பிடிச்சிப்பார். கிணத்துக்கு போனதும் பப்பிஸேம்ல குளிப்பார்…”என்று ஒருகையால் கண்ணைமூடிக்கொண்டாள்.

“அப்படின்னா?”

“கோமணம் கட்டிட்டுக் குளிப்பார்…நான் மேல படிக்கட்டுல ஒக்காந்திருப்பேன். கதை சொல்லிக்கிட்டே இருப்பார். அவரு ஒரு  மந்திரப்பெட்டி வச்சிருக்கார். அதிலருந்து கதை எடுப்பாராம்.எனக்கு ஒருநாள் காட்டினார்…”என்று புன்னகைத்தாள். கலைந்திருந்த முன்மயிர் இளவியர்வையில் நெற்றியில் ஒட்டியிருந்தது.

“என்ன கதைகள் சொல்வாரு?”

“ம்…நெறய கத, கொக்கு கத, மைனா கத,சாமியார் கத பாதிதான் சொன்னாரு.”

“சரி. நாளைக்கு அந்தக்கதைய சொல்றேன்.”

“உங்களுக்கு தெரியுமா?”

“……..”     “தாத்தா சொன்னத நீ சொல்லு. மீதிய நான் சொல்றேன்.“

“ம்… ஆனா நீஙக நாளைக்கு பூப்பறிக்க வருவீங்களா? ஆபீஸ் ரூமிலருப்பீங்களா?” என்று முன்னால் ஓடினாள்.

தோட்டத்திற்கு வெளியே கிளைநீட்டி அடர்பச்சையில் ஆடிக்கொண்டிருந்த வேம்பினடியில் அமர்ந்திருந்த ஏஞ்சலின் சிஸ்டரை பார்த்து ”ஏஞ்சலின் இவளுக்கு ‘வளரும் இளமை’ கிளாஸ்க்கு நீங்கதானே?”என்றார்  சிஸ்டர்.

“ஆமா சிஸ்டர்,”என்றவரிடம் தலையாட்டிவிட்டு  பூச்செடிகளினிடையே நடந்தார்.

குழிக்கல்லில் இருந்த நீரை கால்களால் எத்திவிட்டு, வட்டமான சிறு சிமெண்ட்  குளத்தில் மலரத் துவங்கியிருந்த அல்லிகளை மண்டியிட்டு பார்த்துக் கொண்டிருந்த சிந்துவிடம்,

“வா போகலாம்” என்று பள்ளியின் இறைக்கூடம் நோக்கி நடந்தார். வடக்குப் புறமிருந்த நீண்டபடிகளில் ஏறி மரஇருக்கைகள் கடந்து சிஸ்டர் மேசைமேல் வைத்திருந்த நீர்கோப்பையில் பூக்களை மிதக்கவிட்டபடி,

“எங்கப்பாவும் ஒருநாள் வராமலாயிட்டார்… தாத்தாமாதிரி, ஏசப்பாவ அப்பாவா நினைச்சுக்கிட்டேன்.”என்றதும் சிந்து நிமிர்ந்து சிலுவை யேசுவைப் பார்த்துவிட்டு குனிந்துகொண்டாள். கீழே ஒற்றை மெழுகு உருகிக்கொண்டிருந்தது.

“என்ன சிந்து?”

“தாத்தா கருப்பா இருப்பார். சிரிச்சுக்கிட்டேயிருப்பார்…”என்று மீண்டும் நிமிர்ந்து பார்த்தாள். சிஸ்டர்  ஜெபம்சொல்லும்வரை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தவள் ஓடிப்போய்  எக்கிநின்று  அறையப்பட்டகால்களில் முத்தமிட்டாள்.

வெளியே சின்ன சிஸ்டர் “பஸ் வந்திடுச்சு வரிசையா வாங்க…”என்ற குரல் கேட்டது. மதிலின் பின்புறமிருந்த அரசமரத்தில் கூடணைய வந்தபறவைகளின் “கச்கச் கிச்கிச்“கள் இணைந்து  ஒரே ஒலியாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

“தேங்யூ சிஸ்டர்..”என்றபடி படியிறங்கி பையை எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டு ஓடுகையில் தவறிவிழுந்திருந்த சிறுரோஜாவோடு முள் சிந்துவின் கால்களில் தைத்தது…எடுத்து கையில் இலவசப் பேருந்துச் சீட்டுடன் பூவையும் பிடித்துக்கொண்டு வாயிலைக்கடந்தாள்.

படிகளில்நின்று அவளையே பார்த்துக்கொண்டிருந்த சிஸ்டர்  “அப்பா…”என்று படிகளில் கண்களைமூடி அமர்ந்தார்.

விழிதிறந்து உள்ளே பார்த்தார்.மெல்லிய இருள்சூழ ஒற்றைமெழுகின் ஒளியில் தேவகுமாரன் மட்டும் இருளிலிருந்து பூத்த மெழுகுமலரெனத் தெரிந்தார்.

சற்றுநேரம் பார்த்துக்கொண்டேயிருந்தவர்  புன்னகைத்து  “ இனிப்பதெதுவோ அதுவே புளிக்கும்.புளித்ததிலிருந்து திரள்வது நீயல்லவா எந்தையே… “என்றபடி  விளக்கைப் போடுவதற்காக எழுந்தார்.எங்கிருந்தோ வாலாட்டியபடி வந்து அவர் பார்வைப்பட்டதும் தன்னுடலையே வாலாக்கியபடி ஓடிவந்த ஜிம்மி ஈரமூக்கால் அவர் முகத்தைத் தடவியது.

அதன் மென்கழுத்தில் கைகளைத் தடவி “என்ன? எங்கபோய் சுத்திட்டு வர்ர?”ஜிம்மி தலையை ஆட்டியது. மீண்டும் மூக்கினால் அவர் முகத்தைத் தொட எம்பியது.

3 Replies to “இனிக்கும் முத்தம்”

  1. கடந்த மூன்று கதைகளை விட எளிதில் புரிந்தது. உவமைகள் அற்பதம். நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளைக் காட்டுவதால் தங்களின் மற்ற கதைகளை விட சறப்பு. அந்த தாத்தா போன்ற ஏசப்பாக்கள் நிறைய பேர் உண்டு. ஆனால் மனிதர்கள் சிலைகளை தரிசிக்க ஏங்குகின்றனர். நிஜ ஏசப்பாக்களை மறக்கின்றனர். இதை தெளிவு படுத்தியுள்ளீர்கள்

    வாழ்த்துக்கள்.

  2. வணக்கம்.
    இந்த கதையில் வரும்,கதை சொல்லும் தாத்தாக்களை தான் இந்த காலத்து குழந்தைகள் எதிர்பார்க்கின்றனர்
    ஆனால் கதை சொல்ல தாத்தாக்களை யாரும் கூட வைத்துக்கொள்வதில்லையே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.