அமெரிக்கர்களால் ஏன் சேமிக்க முடியவில்லை?

இது ஒரு பொருளாதாரம் சம்பந்தப்பட்ட கட்டுரை. மருத்துவ வேலை யில் இருப்பவன்  பொருளாதாரத்துறைக்குள் எதற்கு அனாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டும்? மேலும், அமெரிக்க மருத்துவர்களின் பொருளாதாரம் மற்ற நாட்டு மருத்துவர்களின் பொறாமைக் கனலைத் தூண்டும்படி அல்லவா உள்ளது என்று கூட சிலர் நினைக்கலாம். உலகத்திலேயே மிகப்பெரிய பணக்கார நாடாகக்  கருதப்படும் அமேரிக்கா எவ்வாறு உலகத்திலேயே மிகப் பெரிய கடனாளியாகவும் இருக்க முடியும் என்பதை போன்ற விஷயங்களை அடிக்கடி சிந்தித்துப்  பார்த்தும்  அதற்கு சரியான விடை காண முடியாமலிருக்கும் ஒரு சில மருத்துவர்களில் நானும் ஒருவன். ஒருவருடைய பொருளாதார நிலை மற்றவர்களுடைய பொருளாதார நிலைக்கு உட்பட்டதேயாகும் என்ற தீர்மானமான முடிவும் எனக்கு  இத்துறையில் ஆர்வம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம். அமெரிக்காவில் மருத்துவர்களுடைய நிதி நிலை இதனால் அதிகமாக  பாதிக்கப் படாமல் இருக்க காரணம் அரசாங்கமும், காப்பீட்டு நிறுவனங்களும் மருத்துவ சங்கங்களும் கலந்து மருத்துவர் வேலைகளுக்கு விலையை  நிர்ணயிப்பதே ஆகும். எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ கொண்டு போகிறேனே  என்று நினைக்க வேண்டாம். அமெரிக்க மத்திய வர்க்கத்தினரின்  பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்க கூடியவை இளைஞரின் கல்லூரிச் செலவும் முதியோரின் மருத்துவச் செலவுமே என்பதனாலேயே இதை சொல்ல வேண்டி இருந்தது. ஒருவருக்கு உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு நிதி நலமும் முக்கியமானது என்றே பொருளாதார வல்லுநர்கள் சொல்லுகின்றனர். ஒரு காலத்தில் பொருளாதார சுதந்திரம் என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள் இது பெரும்பான்மையான அமெரிக்கர்களால் அடைய முடியாத கனவு என்பதை தெரிந்து கொண்டு ஒரு படி கீழே இறங்கி பொருள் நலத்தை பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.மேலும் பொருட்குறைவினால் உடல் நலமும் பாதிக்கப்படுகின்றது என்று உடலியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்.  இந்த கட்டுரை அமெரிக்கர்களை பற்றியதாக இருந்தாலும் இதில் உள்ள கருத்துகள் எல்லாருக்குமே பொதுவானதாகதான் எனக்கு தோன்றுகிறது..
ஒருவருடைய பொருள் நலம் எவ்வாறு கணிக்கப்படுகிறது? அவசரத்தேவைக்கு  வேண்டிய பணம், பங்கு சந்தை போன்ற விஷயங்களில் முதலீடு செய்த பணம் , திரும்பித்தரவேண்டிய கடனளவு இந்த மூன்றின்  அளவே ஒரு தனி நபரின் பொருள் நலத்தை நிர்ணயிக்க உதவுகிறது. நிறைய அமெரிக்கர்களின் நிதி நிலமை பற்றாக்குறையாகவே உள்ளது. இந்த தரப்பினரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்; சேமிக்க இயலாதவர்கள்,சேமிக்க முயலாதவர்கள். சேமிக்க இயலாதவர்கள் வருமானம் அவசரத்தேவையையோ,நெடுங்கால சேமிப்பிற்கோ கடனைஅடைப்பதற்கோ போறாததாக உள்ளது.பாதிக்கும் மேலான அமெரிக்கர்கள் கட்டுப்பாடான வாழ்க்கை முறையை  கடைப்பிடித்தும் கூட அவர்களது நிதிக்குறைவை நிவர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. இதில் பலர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.வருமான பற்றாக்குறை இல்லாத அமெரிக்கர்களிடையேயும் சேமிப்பின் அளவு குறைந்தே இருக்கிறது.  தவறான செலவுகளும் பிற்கால சேமிப்பை விட உடனடி ஆசைகளை தீர்த்து கொள்வதில் நாட்டமும் காரணாமாக இருக்கலாம். சமீப காலத்தில் பொருளாதார நடத்தை ஆராய்ச்சியாளர்கள்(பிஹேவியரல் எகனாமிஸ்ட்ஸ்) இப்பகுதியினரின் முடிவெடுக்கும் திறனில் உள்ள பாகுபாடுகள் இதற்கு காரணமாயிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
இந்த மூன்று வகையான பணத்தைப் பற்றி   சிறிது தெரிந்து கொள்வோம். அவசரத் தேவைகளுக்கு வேண்டிய பணம் இல்லாவிடில்  மனா அதிர்ச்சியும் அதன் விளைவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கார்கள் அதிகமாக உள்ள இந்நாட்டில் விபத்துகளும் அதிகம்.ஒரு சிறிய சேதாரத்தை சரிப்படுத்த குறைந்தது 700 டாலராவது தேவைப்படும்  என்று கணக்கிட்ட  ஒரு நிறுவனம் பெரும்பான்மையான நபர்களிடம் அந்த அளவு பணமும் இல்லை; அந்த அளவு பண உதவி செய்வோரும் இல்லை என்கிறது. இந்த பணம் மாதாந்திர வரவு செலவு பட்டியலில் சேர்ந்தது அல்ல. இது திடீர் தேவைகளுக்காக ஒதுக்கி வைக்கப்பட வேண்டிய பணம். பியூ ஆராய்ச்சி மையம் 2016ல்  60 சதவிகித குடும்பங்களுக்கு அவசரத் செலவுக்காக குறைந்த பட்சம்  2000 டாலர் வேண்டியிருந்தது  என்று  சொல்கிறது. நிதித்துறையில் இருப்பவர்கள் 2, 3  அல்லது 6 மாத சம்பளத்தை திடீர் தேவைக்காக ஒத்தி வைக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். கீழ் பாதியில் இருக்கும் அமெரிக்கர்களிடம் இரண்டு வார ஊதிய அளவு சேமிப்பு கூட இல்லை.  85000க்கும் மேலாக சம்பாதிப்பவர்களில் பாதி பேரிடம் 40 நாள் சேமிப்புதான் உடனே எடுத்து செலவழிக்குமாறு உள்ளது. அடுத்தது, வீடு, பங்கு சந்தை போன்றவைகளில் முடக்கப்படும் பணம். இது வேலையிலிருந்து ஒய்வு பெற்ற பின் நம் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பணம். போட்ட முதலை விட  பல மடங்காக விரிய வேண்டிய சேமிப்பு ஆகும். அரசாங்கமும் இதற்கு வரியை தள்ளுபடி செய்வதன் மூலம் சேகரிப்பை அதிகமாக்க உதவுகிறது. இந்த சேமிப்பு முதலை விட பல மடங்கு ஏன் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்கள்; முதலாவது நாம் வேலையிலிருந்து ஒய்வு பெற்ற  பிறகு ஊதியம் நின்று போவது இரண்டாவது பண வீக்கத்தினால் ஏற்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு. ஒய்வு பெற்ற பின்னும் வாழ்க்கை முறையை மாற்றாமல் வாழ சம்பளத்தில் அறுவது சதவீதமாவது வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 2013ல் ஒரு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் 25லிருந்து 34 வயதுள்ளவர்களில் 38  சதவீதமே சேமிப்பு திட்டங்களில்  பங்கு கொள்கிறார்கள். 21 லிருந்து 24 வயதுள்ள வேலை செய்பவர்களில் 20 சதவீதம்தான் இத்தகைய சேமிப்புகளில் பங்கேற்கிறார்கள்.கடைசியில் சேமிப்பை தடுப்பதும் குறைப்பதும் கடன் தொகையே,.பெரும்பாலான அமெரிக்கர்களின் நிதி நலனை சீரழிப்பது அவர்களுடைய கடனேயாகும்.2015ல் ஒரு குடும்பத்தின் சராசரி கடன் அட்டை (கிரெடிட் கார்டு)யில் உள்ள கடன் 5883 டாலர். கல்லூரி கடநும் அமெரிக்க குடும்பங்களின் சேமிப்பை மிகவும் குலைக்கிறது.2015ல் கல்லூரி கடன் 30000 டாலரை எட்டி விட்டது.கடனுக்கு கொடுக்கும் வட்டி முதலீட்டிலிருந்தும் சேமிப்பிலிருந்தும் வரும் வருவாயை விட அதிகமாக இருப்பதால் சேமிப்பு சேதமடைகிறது.
முதலில், சேமிக்க இயலாதவர்களை  நான்கு விதமாகப்  பார்ப்போம்  இந்த நான்கு உதாரணங்களிலும் சொல்லப்படுபவர் 30 வயதான தனி நபர். முதலில் அவர் வருமானம் சராசரி வருமானமான  35613 டாலராகக் காட்டப்படுகிறது. 558 டாலர் வரிப்பிடிப்புக்கு பின் அத்தியாவசிய தேவைகளுக்கு வேண்டிய பணம் 1924 டாலர். இது போக வல்லுநர்கள் சொல்வது போல் 20% சேமிப்பு திட்டத்தில் சேர்த்தால் மீதி இருப்பு நாலு டாலர் மட்டுமே. சேமிப்பு திட்டத்தில் 10% சேர்த்தால் மீதி சில்லறை செலவுகளுக்கு கையில் 254 டாலர் தங்கும். ஆனால், அவசரத்தேவைக்காக மூன்று மாத பணம் வங்கியில் சேர்ப்பதற்கு வேண்டியது இரண்டரை வருடங்கள். வருடத்திற்கு 31500 டாலர் சம்பாதிப்பவரையே அமெரிக்காவில் நடுத்தர வகையை சேர்ந்தவராகக் கருதுகிறார்கள். இந்த சம்பளத்தில் 10% சேமிப்பு கூட இயலாததாகி விடுகிறது. இதே நபருக்கு முன் சொன்னது போல் 5000த்துக்கும் மேலான கடன் இருந்தால் அதை மாதா மாதம் அடைக்கவே 10 வருஷங்களாகும் .இந்த சமயத்தில் சேமிக்கவே வழி இல்லை.  இதிலிருந்து தெரிவது என்னவென்றால் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு நிதி நிலைமையில் சுதந்திரம் என்பது ஒரு எட்டா கனவாகவே இருக்கிறது. இது இவ்வாறிருக்க, பண முடை இல்லாத அமெரிக்கர்கள் சேமிக்காதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சேமிப்பதற்கு தேவையாயிருப்பதாக சொல்லும் காரணங்கள் அர்த்தமற்றதாக தோன்றலாம்; வேறு மாதிரி வழியில் சொத்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்; பிற்காலத்தில் வருமானம் அதிகரிக்குமபோது  சேமிப்பதைப்  பற்றி எண்ணினால் போதும் என்றிருக்கலாம்; அவசரத்தேவைகளுக்கு உறவினரையோ நண்பர்களையோ எதிர்பார்க்க கூடுமாய் இருக்கலாம். இவையெல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் மனத்திற்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள சம்பந்தமே என்று அமெரிக்க பொருளாதார நடத்தையை உன்னிப்பாக கவனித்து எழுதும் நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்கர்கள் தங்களிடம் உள்ள பணத்தை உடனடியாக செலவழிக்கலாமா அல்லது சேமிக்கலாமா என்று தீர்மானிக்க வேண்டியதாய் இருக்கிறது. இவ்வகையான முடிவெடுப்புகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொருளாதாரர்கள் இதை அகால விருப்பங்கள் என்று வரையறுக்கின்றனர். மேலும் கையிலிருக்கும் பணத்தை நழுவ விடுவதற்காண வழிகள்  மிகவும் சுலபமாகி விட்டன. அமெரிக்கர்கள் தங்களுடைய  ஆசைகளை உடனடியாக திருப்தி செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். உதாரணமாக, அமெரிக்காவில் உடல் எடை கூடியவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதற்கு காரணம், அளவுக்கு  மீறி சாப்பிடுவதால் எடை கூடுகிறது என்று தெரிந்தும், எடையை கூட்டும் பண்டங்கள்  கண்ணெதிரேயும்  கைக்கெட்டும் வகையிலும்  இருப்பதால் வாயினில் போடுவது தவிர்க்க  முடியாததாகி விடுகிறது. இது போலவே, கவர்ச்சிகரமான சாதனங்கள் மனதை  கவரும் வகையில் கண்ணை அகல விடாமல் விளம்பரப்படுத்தப்படுகின்றன. வேண்டுமோ வேண்டாமோ என்று எண்ணக்கூட இடம் கொடுக்காமல் உடனடியாக  பொருட்களை வாங்குவதற்கு வாகனங்களும் இணையதளங்களும் வழிசெயது கொடுக்கின்றன. நிதி நிறுவனங்களும் கடன் வாங்குவதையும் கடனளவை அதிகரிப்பதையும் விறல் நுனியில் கொண்டு நிறுத்தியுள்ளன. இவ்வாறிருக்க, செலவை தள்ளி போடலாமே என்று நினைக்கக் கூட இயலாமல் போய் விடுகிறது.  மேலும் சுற்றியுள்ள மற்றவர்களை போலவே தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்  கொள்ள எண்ணுவதும் புலியை  பார்த்து பூனை சூடு போட்டு கொண்டது  போல அனாவசியமான செலவுகளை இழுத்து விடுகிறது.
சுருக்கமாக சொல்வதென்றால், அமெரிக்காவில் சேமிப்பு குறைவாயிருப்பது. சேமிக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள்; சேமிப்பதில் இஷ்டமில்லாதவர்கள் என்ற இரண்டு வகையினரால். சேமிக்க முடிந்தும் சேமிக்காமலிருப்பவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பலவழிகளுள்ளன. சேமிப்பு திட்டங்கள்,, செலவுக்கு முன்பே சேமிப்பில் ஓரளவு பணத்தை சேர்த்தல் போன்ற பல வழிகளுள்ளன. ஆனால், சேமிக்க இயலாதவர்களின்  நிலையை நிவாரணம் செய்யக்கூடிய வழிகளான வரிக்குறைப்பு, பொருட்கள் விலை குறைப்பு, வருமான அதிகரிப்பு, பொருளாதார சலுகைகள் ஆகியவைகளில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக தெரியவில்லை. ஏழ்மையை எதிர்த்து போராட்டம் என்பது தீர்க்க முடியாததாக இருப்பது போல் அமெரிக்கர்களை சேமிக்க வைப்பதும் தீர்க்க முடியாததாகி விடுமோ என்று நினைக்க தோன்றுகிறது.
ஆதாரம்: Why can’t Americans save? A research brief by Max Gulker,Ph.D. Senior Research Fellow, American Institute for Economic Research.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.