பார்வையற்றவர்களுககு கிட்டுமோ பார்வை

புதியதாகக் கிளம்பியுள்ள இரு நிறுவனங்கள் ஒளி மரபியல் அறிவையும் (ஆப்டோஜெனட்டிக்ஸ்) மிகவும் ப்ரகாசமாயுள்ள கண்ணாடியையும் ஒன்றிணைத்து பார்வையற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன் வந்துள்ளது. இதை புரிந்து கொள்ளுமுன் நம் விழிகள் எவ்வாறு நாம் பார்ப்பதை மூளைக்கு கொண்டு செல்கிறது என்பதை அறிய வேண்டும். முதலில் வெளியிலிருந்து உட்ச்செல்லும் ஒளி இறுதியில் கண்ணின் பிற்பகுதியிலுள்ள விழித்திரை (ரெடினா)யை அடைகிறது. இந்த ஒளி முதலில் உணர்பொறிகளால் (போடோரிசெப்டார்ஸ்) வாங்கி கொள்ளப்படுகிறது. இந்த உணர்பொறிகள் கம்பு (ராட்) கூம்பு (கோன் ) என இருவகைப்படும். கம்பு உணர்பொறிகள் மங்கிய வெளிச்சத்தினால் தூண்டப்படுபவை. கூம்பு பொறிகள் பிரகாசமான வெளிச்சத்தினாலும் பச்சை, நீலம், சிவப்பு நிறங்களினாலும் தூண்டப்படும். இந்த ஒளியை நாம் பார்க்கும் உருவமாக மாற்றுவது இதற்கடுத்துள்ள கங்கிளியான் உயிரணுக்கள் ஆகும்.இங்கிருந்து ஒளி நரம்பின் (ஆப்டிக் நெர்வ்) மூலமாக மூளைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

ஜென்சைட் பயலாஜிக்ஸ், பயானிக் சைட் என்ற இந்த இரண்டு நிறுவனங்களும் சிறிது சிறிதாக உணர்பொறிகளை அழித்து பார்வையை சிதைக்கும் ரெடினைடிஸ் பிக்மென்டோசா எனும் நோயினால் தாக்கப்பட்டவர்களை இச்சிகிச்சை முறைக்கு உட்படுத்த முனைந்துள்ளது. இது வெற்றியடைந்தால் ஒளி வாங்கிகளை (போட்டோ ரிசெப்டார்ஸ்) சிதைக்கும் எல்லா நோய்களுக்குமே இந்த முறை அனுகூலமாகும்.

ஆப்டோஜெனெடிக்ஸ் என்பது மரபணு சிகிச்சையை சேர்ந்தது. முதலில் ஒளியை உணரச்செய்யும் புரதங்களை உற்பத்திசெய்யும் கடற் பாசியிலிருந்து பிரித்தெடுத்த மரபணுக்கள் நுண்ணிய கிருமிகளில் அடைக்கப்பட்டு கண்ணினுள் ஊசியின் மூலம் செலுத்தப்படுகிறது. இந்த மரபணுக்கள் கங்கிளியான் உயிரணுக்களையே ஒளி வாங்கிகளாக மாற்றி அமைக்கின்றது. பிறகு இந்த நோயாளிகள ஒரு நவீன கண்ணாடியை அணிகிறார்கள். இக்கண்ணாடி முதலில் உருவத்தை புகைப்படம் எடுத்து பின் அவ்வுருவத்தை மிகப்பிரகாசமானதாகவும் சிவப்பு நிறமுள்ளதாகவும் மாற்றி உயிரணுக்களால் அடையப்பட்டு அதை சுலபமாக உணரவும் வழி செயகிறது.

இம்முறையை கண்ணிழந்த குரங்குகளிடமும் எலிகளிடமும் செயல் படுத்தி வெற்றியடைந்துள்ளதாக ஜென்சைட் முதல்வர் அறிவித்துள்ளார். நோயாளிகளை இந்த வருடம் இப்பரிசோதனை முறையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறுகிறார். டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ரிட்ரோசென்ஸ் தெரபியுட்டிக்ஸ் என்னும் நிறுவனம் மேற்சொன்ன மரபணு முறையை நான்கு நபர்களிடம் மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்நால்வரும் பார்வையை திரும்பிப் பெற்றனரா என்பதை வெளிப்படுத்தவில்லை. இம்முறையினால் அறியப்படும் உருவம் எவ்விதமாயிருக்கும் என்பதும் சரியாக தெரியவில்லை. நோயாளிகள் அறிந்து சொன்ன பிறகே தெரியும். கார்னெல் பல்கலை கழகத்தை சேர்ந்த ஷீலா நீரெம்பர்க் ஒளியை நரம்பமைப்பாக மாற்றித்தரும் கண்ணாடியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேனியல் பலங்கர் என்பவர் இந்த உயிரணுக்கள் முப்பது வகையானாதால் இவையெல்லாவற்றையும் ஒரே அமைப்பினால் தூண்ட முடியாது என்கிறார்.

இந்நற்செயதியை படித்தபின் விழியற்றவர்க்கெல்லாம் விரைவில் விடிவு காலம் வந்து விடும் என்றே தோன்றுகிறது.

ஆதாரம் : Companies plan Tests of “Optogenetic Goggles” to Restore Sight by Emily Mullin, MIT Technology Review ;February 15, 2017.