தானோட்டிக் கார்கள் – தானியக்க வரலாறு

திடீரென்று தானோட்டிக் கார்கள் ஒன்றும் முளைத்து விடவில்லை. பல திரைப்படங்கள் மற்றும் விஞ்ஞானக் கதைகள் இவற்றைப் பற்றிக் கடந்த 60 ஆண்டுகளாகக் கற்பனை செய்து வந்துள்ளன. ஹாலிவுட் திரைப்படமான ஸ்பீல்பர்கின் Back to the Future, Minority Report (2002) திரைப்படங்களில், கார் தானே செலுத்திக் கொள்ளும். அதே போல, Total Recall (1990), Demolition Man, I Robot (2004), The Car (1967)  போன்ற ஹாலிவுட் திரைப்படங்களும் தானோட்டிக் கார்களை நல்லனவாகவும், கொடுமை எந்திரங்களாகவும் கற்பனை செய்து பொது மக்களின் சிந்தனையைச் செதுக்கியுள்ளன.  இந்தக் கட்டுரை சினிமாவைப் பற்றியது அல்ல – எப்படி, படிப்படியாக கார்களில் தானியக்கம் தோன்றியது என்பதைப் புரிந்து கொள்வதைப் பற்றியது.

நிஜ வாழ்க்கையில், சினிமா போல எல்லாம் உடனே நடக்கும் விஷயமல்ல. படிப்படியாக கார் தயாரிப்பாளர்கள் சின்ன சின்ன முன்னேற்றங்களை, கடந்த 60 ஆண்டுகளாகச் செய்து வந்துள்ளார்கள். முக்கியமாக, இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கார் தயாரிப்பாளர்கள், புதிய அம்சங்களை எல்லா கார்களிலும் புகுத்துவதில்லை. அதிக விலை விற்கும் மாடல்களில் முதலில் புகுத்தி விட்டு, சில வருடங்களுக்குப் பிறகு, சாதாரணக் கார்களில் இந்த அம்சங்களைக் கொண்டு வருவார்கள். கார் தொழிலைப் பின்னோக்கிப் பார்க்கையில் ஒரு முக்கிய வரலாற்றுப் புள்ளி விவரம்;

எந்த ஒரு பாதுகாப்பு முன்னேற்றமும் ஒரு கார் நிறுவனத்தின் உயர் மதிப்புள்ள மாடலிலிருந்து சாதாரண மாடலைச் சென்றடைய 30 ஆண்டுகள் பிடித்துள்ளது.

முதலில், கடந்த 100 ஆண்டுகளில், பொதுவாகத் தானியக்கம் எப்படி அறிமுகப்படுத்தப்பட்டது என்று பார்ப்போம்:

1960 –க்குப் பிறகே கார் சம்பந்தப்பட்ட தானியக்கம் தொடங்கியது. 1980 –களில் நுண்கணினிப் புரட்சி (microcomputer/chip revolution) கார்களை உடனே பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பொதுவாக, கார்களில், தானியக்கம் என்பது முதலில் ஓட்டுனருக்கு உதவி புரியும் ஒரு பாதுகாப்பு அம்சமாகவே அறிமுகப்படுத்தப்பட்டன.

கீழே உள்ள பட்டியல், இவ்வகை முக்கிய அறிமுகங்கள்;

அறிமுக ஆண்டு புதிய பாதுகாப்பு அம்சம்
1903 கண்ணாடி நீர் துடைப்பான் (windshield wiper) அறிமுகம். இதற்கு முன், மழை வந்தால் கார் ஓட்ட மாட்டார்கள்!
1911 முதல் மின் கார் துவக்கம் – ignition. அதுவரை, ஒரு சுழற்றி மூலமே (crank) காரை உயிரூட்ட முடியும்
1914 திருப்பு குறிகாட்டி (turn indicators) அறிமுகம். அதுவரை, சைக்கிள் ஓட்டுபவரைப் போல, கை காட்டியே திரும்பினார்கள்
1926 பாதுகாப்பு கண்ணாடி (shatter proof glass) கார்களில் பொருத்தப்பட்டது. இதற்கு முன் கார்களில் கண்ணாடி விபத்தில் சுக்கு நூறாகிப் பயணிகள் மற்றும் ஓட்டுனரைக் காயப்படுத்தி வந்தது
1928 நாம் இன்று எல்லா கார்களில் எதிர்பார்க்கும் கியர் பாக்ஸ் அறிமுகம் (synchromesh transmission by Cadillac)
1930 கார்களில் ரேடியோ அறிமுகப் படுத்தப்பட்டது. இவை வால்வ் ரேடியோக்கள். இன்றும் வட அமெரிக்காவில், காரின் ஸ்டீரியோவை, ரேடியோ என்று அழைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
1934 பயணம் கரடு முரடாக இல்லாமலிருப்பதற்கு, உலோக சுருள் (coil spring suspension) அறிமுகப்படுத்தப்பட்டது
1946 முதல் கார் தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் ராட்சசத் தனமாக இருந்ததை யாரும் பொருட்படுத்தவில்லை
1947 டியூப் இல்லாத டயர்கள் அறிமுகப் படுத்தப்பட்டது. இன்று radial tires  என்பதை எல்லோரும் எதிர்பார்க்கிறோம்
1948 கியர் அற்ற கார்கள் அறிமுகம் செய்யப்பட்டது (automatic transmission by Buick). இன்று பெரும்பாலும், வட அமெரிக்காவில் கியர் அற்ற கார்களே விற்கின்றன
1956 ஸ்டியரிங் ஒடிப்பது என்பது இந்திய லாரி டிரைவர்கள் சொல்லும் கைமுறை. மோட்டார் உதவியுடன் ஸ்டியரிங் எளிதாக்கப்பட்ட (power steering) ஆண்டு
1958 வேக சுயக்கட்டுப்பாடு அல்லது Cruise control கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டுனர் ஒரு வேகத்தை செட் செய்தால், கார் அதே சீரான வேகத்தில் செல்லும் ஒரு வசதி. மிகப் பெரிய தானியக்க முன்னேற்றம் இது. இந்த வசதியால், வெறும் ஸ்டியரிங்/பிரேக் மட்டுமே ஓட்டுனர் கவனமாக இருக்க வேண்டும்.
1959 இருக்கை வார் வோல்வோ நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது
1971 ஓடும் காரை எளிதாக நிறுத்த, antilock braking அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது
1973 காற்றுப்பை (air bag) அறிமுகப்படுத்தப்பட்டது
1982 மின்னணு எரிபொருள் உட்செலுத்தல் (electronic fuel injection) அறிமுகம்
1983 மின்னணு உறுதிநிலைக் கட்டுப்பாடு (electronic stability control)  அறிமுகம். இந்த அம்சத்தினால், ஒடும் கார் வழுக்கினால், கார் ப்ரேக்கை தானாகவே செலுத்தி காரை நிறுத்த உதவி செய்யும்
1996 கார்களின் பிரச்னைகளைக் கணினி மூலம் குறிகளாய் (diagnostic codes) வெளிப்படுத்தும் முறை அறிமுகம்
2001 கார்களில் புளூடூத் மூலம் செல்பேசித் தொடர்பு அறிமுகம்
2003 மோதல் தவிர்ப்பு முறைகள் (collision avoidance systems)  அறிமுகம்
2008 கார்களில் WiFi அறிமுகம்
2014 டெஸ்லாவின் மாடல்-S மின் கார் 426 கி.மீ. ஒரே மின்னேற்றத்தில் பயணம்
2016 தானோட்டிக் கார்கள் பற்றிய பூச்சாண்டி காட்டல் ☺

 

இப்படி, பல முன்னேற்றங்கள், கடந்த 100 ஆண்டுகளாக அறிமுகமாகிக் கொண்டுதான் இருந்துள்ளது. ஆனால், சில புதிய பாதுகாப்பு அம்சங்கள், எப்படியோ தானியக்கம் என்று தவறாக நம்முன் தம்பட்டம் அடிக்கப்பட்டன.

  1. காரை நிறுத்தும் உதவி அம்சம் (park assist): நம்மில் பலருக்கு காரை நிறுத்துவது அலுப்பு அல்லது சரியாக வருவதில்லை. காரை நிறுத்த முற்பட்டு இந்த அம்சத்தை முடுக்கிவிட்டால், காமிரா உதவி கொண்டு கார் தானாகப் பின்நோக்கிச் சென்று அழகாக நிற்கும். இதற்கு இரு தேவைகள் – ஒன்று, நிற்குமிடம், சரியாகக் கோடிடப்பட வேண்டும்; இரண்டு, சரியாக அளப்பதற்காக பக்கத்தில் இன்னொரு கார் இருக்க வேண்டும்
  2. வரைபாதையிலிருந்து சறுக்கு எச்சரிக்கை அம்சம் (lane departure warning). நாளெல்லாம்  வேலை செய்த அல்லது கார் ஓட்டிய களைப்பில், கவனக் குறைவினால், கார் அடுத்த வரைபாதைக்குச் சறுக்கும் பொழுது காமிரா கொண்டு, இந்த அம்சம் எச்சரிக்கிறது. அத்தோடு, சில மாடல்களில், தானாகவே, காமிரா உதவியுடன் உங்களது வரைபாதைக்கு காரை கொண்டு வருகிறது.
  3. சாலையில் சூழலுக்கேற்ப வாகனத்தில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் அம்சம் (adaptive cruise control). மற்ற வாகனங்கள் 60 கி.மீ.வேகத்தில் பயணம் செய்தால், உங்களது வாகனமும் அதே வேகத்தில் பயணிக்க வேண்டும். அத்துடன், உங்களது வாகனத்திற்கும் அதற்கு முன்னிருக்கும் வாகனத்திற்கும் பாதுகாப்பான இடைவெளி இருந்தால்தான் விபத்து நேராமல் இருக்கும். இதைப், பயிற்சியில் அனைவரும் பயில்கிறோம். ஆனால், நடைமுறையில் முன்னிருக்கும் வாகனத்திற்கும் நாம் ஓட்டும் வாகனத்திற்கும் 1 அடி கூட இருப்பதில்லை. இந்த அம்சம் இவ்வாறு நேர விடாமல் பார்த்துக் கொள்ளும்
  4. வெற்றுப் புள்ளி தவிற்பு அம்சம் (active blind spot assist) : வரைபாதை மாற்றும் பொழுது, திருப்புக் குறிகாட்டியைப் பயன்படுத்தினாலும், மிக அருகாமையில் வரும் பக்கத்து வரைபாதை வண்டி ஓட்டுனருக்குத் தெரியாது. இதைப் பார்வையில் வெற்றுப் புள்ளி போன்றது. இன்றைய கார்கள், ராடார் கொண்டு, அருகில் வாகனங்கள் இருந்து, வரைபாதை மாற்றப் பார்த்தால், எச்சரிப்பதோடு நிற்காமல், தேவைப்பட்டால், சரியான நேரத்தில் ப்ரேக்கைப் பயன்படுத்தி விபத்தையும் தவிர்க்கும் சக்தி வாய்ந்தவை

இதுபோன்ற அம்சங்களை வைத்து, ஊடகங்களும், மக்களும் பல வகைக் கற்பனைகளை வளர்த்து வந்துள்ளார்கள். குறிப்பாக;

  • இப்படியே போனால், இன்னும் 2 வருடத்தில் தானோட்டிக் கார்கள் வந்துவிடும்
  • இப்பொழுதே பல தானோட்டி விஷயங்களை கார்கள் செய்கின்றதே – அடுத்த கட்டம், அதாவது முழுத் தானோட்டிக் கார், வெகு நெருக்கம்தான்
  • இது போன்ற அம்சங்கள் வெறும் முன்னோடிதான். கார் கம்பெனிகள் சும்மா ஆழம் பார்க்கின்றன. இவர்கள் ஏற்கனவே தானோட்டிக் கார்களைத் தயாரித்து வைத்துள்ளார்கள்

முதலில், இவை அத்தனையும் வெறும் கட்டுக்கதை. அவ்வளவு அருகாமையில் தானோட்டிக் கார்களின் சாத்தியம் இல்லை. இந்தக் குழப்பத்திற்குக், சரியாக, இதன் பின்னணியையும் தொழில்நுட்பத்தையும் புரிந்து கொள்ளாததே முக்கியக் காரணம் (இதில் ஊடகங்களும் அடங்கும்). இதைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு, தானோட்டிக் கார்களின் சமீப வரலாறு முக்கியம்.

சமீப தானோட்டிக் கார் சரித்திரம்

டார்பா (DARPA – Defense Advanced Research Project Agency)  என்ற அமைப்பு, பல தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு வழி வகுத்துள்ள ஒரு அமெரிக்க ராணுவ அமைப்பு. குறிப்பாக, நுண்செயலிகள், இதர்னெட், இணையம் செயல்படும் IP போன்ற இன்றைய முக்கியத் தொழில்நுட்பங்கள், இந்த அமைப்பு உருவாக்கியது. சிறு முன்னேற்றங்கள் என்று காலத்தைத் தள்ளி வந்த வாகன தொழிலைப் புரட்டிப் போடும் வகையில், இந்த அமைப்பு, 2004 –ஆம் ஆண்டு ஒரு சவாலை முன்வைத்தது. 150 மைல் (அல்லது 240 கி.மீ.) தொலைவை, ஓட்டுனர் இல்லாத கார்கள் தானாகவே கடக்க வேண்டும். அதிக நடமாட்டமில்லாத அமெரிக்க நிவேடா மாநிலத்தில் உள்ள மோஹாவி பாலைவனத்தில் நடைபெற்றது. எந்தப் போட்டியாளரும் 150 மைல்களைத் தாண்டவில்லை. 7 முதல் 8 மைல்களுக்கப்பால், பல வண்டிகள் ஏதோ ஒரு பிரச்னையில் சிக்கி செயலிழந்தன. இதில் போட்டியிட்ட குழுக்கள் பெரும்பாலும் பல்கலைக்கழகக் குழுக்கள்.

2005 –ஆம் ஆண்டு, மீண்டும் இதே போட்டி நடத்தப்பட்டது. இம்முறை போட்டியிட்ட 23 குழுக்கள், 2004 –ன் 7.32 மைல்களைக் கடந்து சென்றன. 5 குழுக்கள், 150 மைலையும் வெற்றிகரமாகத் தானியக்கத்தில் ஓட்டி முடிந்ததன. இதில் 3 குழுக்கள், கார்னகி மெலன் மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகக் குழுக்கள். மனித சரித்திரத்தில், 150 மைல்கள் எந்த ஓட்டுனரும் இன்றி கடந்த முதல் 5 கார்கள் இவை. இத்தனைக்கும், இந்தப் பாதையில், அதிக இடது மற்றும் வலது திருப்பங்கள் மற்றும் மலைப் பிரதேச திருப்பங்களும் அடங்கும். இந்தக் குழுக்கள் பெரும்பாலும், சந்தையில் கிடைக்கும் கார்களுக்கு, பல உணர்விகள், காமிராக்கள் இணைத்து ஓட்டிக் காட்டின. இந்த முறை இன்று வரை தொடர்கிறது. கூகிள் ஒரு கார் தயாரிப்பாளர் அல்ல. கிடைக்கும் கார்களில், உணர்விகள் மற்றும் காமிராக்களைப் பொருத்தியே கூகிள் இன்றுவரை சோதனை செய்து வருகிறது.

அடுத்தக் கட்டமாக, டார்பா 2007 –ல் நகர்புற சூழ்நிலையில் அதே போட்டியை நிகழ்த்தியது. இம்முறை, வட அமெரிக்க நகரங்களில் இருப்பதைப் போல, வரை பாதைகள், சிக்னல்கள், பாதசாரி கடக்குமிடங்கள் (zebra crossings) , மற்றும் 3-வழி, 4-வழி நிறுத்தங்கள் என்று ஒரு பழைய விமானப் படை தளத்தை மாற்றி, பயணிக்கும் படி சவால் விட்டது. ஆறு மணி நேரத்தில், 60 மைல்களைக் கடக்க (96 கி.மீ.) வேண்டும் என்பதும் சவாலில் அடக்கம். வெற்றி பெற்ற குழுவிற்கு 2 மில்லியன் டாலர்கள் பரிசு.

இம்முறையும் பல பல்கலைக்கழகப் போட்டியாளர்கள், வாகனத் தயாரிப்பாளர்களுடன் கைகோர்த்துப் போட்டியிட்டார்கள். முதல் 3 குழுக்கள், 5 மணி நேரத்திற்குள் வெற்றிகரமாக இந்தப் போட்டியின் 60 மைல்களைத் தடைகள் எதுவுமின்றி முடித்தார்கள். கார்னகி மெலன், ஸ்டார்ஃபோர்டு மற்றும் வர்ஜினியா டெக் பல்கலைக்கழகங்கள் முதல் மூன்று இடத்தில் இடம்பெற்றன. MIT, UPenn, Cornell  அடுத்த மூன்று பல்கலைக்கழகங்கள். சில முக்கிய விஷயங்கள், இந்தப் போட்டியின் தன்மையைப் புரிந்து கொள்வதில் உள்ளது.

  1. அறுபது மைகளில் இந்த வாகனங்கள், சந்தித்த மற்ற வாகனங்கள், பெரும்பாலும், இவற்றைப் போன்ற போட்டி வாகனங்கள். மனித ஓட்டுனர்கள் உள்ள வாகனங்கள் அல்ல
  2. நெடுந்தூரம் செல்வது இந்தப் போட்டியின் அடிப்படை அல்ல. அது ஒரு நெடுஞ்சாலைப் போட்டியாகிவிடும். இதில் மிக முக்கியச் சவால், எந்த ஒரு போட்டி வாகனத்தின் மீதும் மோதக் கூடாது
  3. சரியாக 3-வழி, 4-வழி நிறுத்தங்களில் வரை கோட்டிற்கு முன்னால் நிற்பதுடன், முதலில் சந்திப்பிற்கு வந்த வாகனத்திற்கு வழி விட வேண்டும். சந்திப்பில் எந்த வாகனமும் இல்லாத தருணத்தில் கிளம்ப வேண்டும்
  4. சிக்னல்களில் ஆரஞ்சு வந்தவுடன் நகரக் கூடாது. சிகப்பு வந்தால் நிற்க வேண்டும். பச்சை நிற சிக்னலில் நேராகப் போவது பெரிய விஷயமல்ல. தானோட்டிக் கார்கள், சில சமயம் வலதுத் திசையில் திரும்பவும் வேண்டும்

இவ்வாறு, இத்தனை முடிவுகளை உடனுக்குடன் செய்யக் கணினி மென்பொருள் மிகவும் முன்னேற்றம் அடைய வேண்டும். உணர்விகள், காமிராக்கள் மற்றும் ரேடார்கள் பொருத்துவது என்பது அவ்வளவு சவாலல்ல. நொடிப் பொழுதில் முடிவெடுக்கும் மென்பொருள் மிகப் பெரிய சவால்.

முதலில் யூபர், கார்னகி மெலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களைத் தன்னுடைய ஆராய்ச்சிக்காக அணுகியதைப் பற்றிச் சொல்லியிருந்தோம். கூகிளிற்கும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திற்கும் ஏராளமான சம்பந்தமுண்டு. 2007 –ன் வெற்றி பெற்ற ஆராய்ச்சியாளர்கள், இன்று தானோட்டிக் கார்கள் முன்னேற மிகவும் உழைப்பவர்கள், கூகிள், இந்த ஆராய்ச்சியாளர்களுடன் தொடங்கிய கூகிள் கார் ப்ராஜக்ட் இன்று 1 மில்லியன் மைல்களைக் கடந்து சோதித்து வருகிறது.

இந்த ஆராய்ச்சிப் பின்னணி இந்தத் துறையைப் புரிந்து கொள்ள மிகவும் முக்கியம். ஆரம்பத்திலிருந்தே, அரசாங்கம், வாகன நிறுவனங்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதில் பங்கேற்றதால், மாநில அரசுகள் இன்று பொதுச் சாலைகளில் தானோட்டிக் கார்களின் சோதனை ஓட்டத்தை அனுமதிக்கின்றன.

2014 –ல், கூகிள், ஸ்டீயரிங் இல்லாத ஒரு தானோட்டிக் காரை அறிமுகப்படுத்தியது. வழக்கமாகச் சந்தையிலிருந்து வாங்கிய கார் அல்ல இது. முழுவதும் ஓட்டுனரே இல்லாத காரை வடிவமைத்து அறிமுகப்படுத்தினார்கள். 1 மில்லியன் மைல்கள் இத்தகைய கூகிள் கார்கள் பல அமெரிக்க மாநிலங்களில் பயணம் செய்து, பயண அனுபவத்தைக் கொண்டு, மென்பொருளை கூகிள் மெருகூட்டி வருகிறது.

தமிழ்ப் பரிந்துரை

தமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். கார் சம்பந்தமான பல தொழில்நுட்பச் சொற்கள் தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லை. உதாரணம், ஆக்ஸிலரேட்டர் மற்றும் ப்ரேக். இதை தமிழில் மொழிபெயர்த்தால், நம்மில் பலருக்கும் புரியாது. இதனால், இது போன்ற வழக்குச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
Microcomputer/chip revolution நுண்கணினிப் புரட்சி
Windshield wiper கண்ணாடி நீர் துடைப்பான்
Electric ignition மின் கார் துவக்கம்
Turn indicator திருப்பு குறிகாட்டி
Cruise control வேக சுயக்கட்டுப்பாடு
Electronic fuel injection மின்னணு எரிபொருள் உட்செலுத்தல்
Car diagnostic codes கார் ப்ரச்னை குறிகைகள்
Collision avoidance systems மோதல் தவிர்ப்பு முறைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.