எங்கோ பயணத்தில் கேட்ட ஒரே ஒருமுறை கேட்டு, நம் மனதை பல நாட்கள் அலைக்கழித்த பாடலை பின் பல வருடங்கள் கழிந்து தொலைக்காட்சியில் காண்கையில் அடையும் ஒரு நிறைவு, பொற்கொடியும் பார்ப்பாள் கதையை அ.முத்துலிங்கம் அவர்களின் தொகுதியில் கண்டபோது கிடைத்தது. அதைப் படித்தபோது அதை எழுதியவர் யார் என அறிந்திருந்தவனும் அல்ல. அது வெளியாகி பத்துவருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் அப்போது நடந்த இன ஒழிப்பையும் போராளிகளையும் நினைக்கையில் பொற்கொடியும் குறிப்பாக றேணுகாவும் நினைவில் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அ.மு அவர்கள் மீதான விமர்சனங்களில் ஒன்று அவர் ஈழ மக்களுக்காக அங்குள்ள சமுதாய அமைப்பிற்காக பெரிதாக குரல் கொடுத்ததில்லை மற்றும் அவர்களின் போராட்டத்தை தன் எழுத்துக்களில் தொடர்ந்து கொண்டுவரவில்லை என்பது. இந்த கட்டுரை அதை சார்ந்தோ மறுத்தோ ஆவணங்களைக் கொட்டி எழுதப்படும் ஒன்று இல்லை. இதில் வாசகனாக அவரை அணுகி உணர்ந்த வாசிப்பனுபவத்தை மட்டுமே எழுத உத்தேசித்திருக்கிறேன். அந்தவகையில் தன் மண்ணின் சரித்திரத்நை வெகுஜன ஊடகங்களில் தன் சிறுகதைகள், தொடர்கதை மற்றும் கேள்விபதில்கள் மூலம் சேர்த்தவர்களில் மிகவும் முக்கியமான ஆளுமை அ.முத்துலிங்கம் அவர்கள் என்றே நான் உணர்கிறேன்.
வேடிக்கை பார்க்கும் சிறுவனின் கண்கள் கொண்டே எந்த ஒரு சூழ்நிலையையும் வர்ணிப்பது என்பது அ.மு. அவர்கள் கைகொண்டிருக்கும் யுக்தி. படிக்கையில் சிறிய புன்சிரிப்பை உண்டாக்கிவிடும் வார்த்தையலங்காரங்கள். மூளை என்னமோ ஞானியுடையது. “இதை வரைந்தவனுக்கு அம்புக்குறியிடுவதிலேயே மிகவும் லயித்திருக்க வேண்டும் . நெருக்கமாக அம்புக்குறி இடப்பட்டிருந்த்து” என்ற வரிகளின் மூலம் புன்னகைக்க வைத்தே பாத்திமாவின் கதைக்குள் இட்டுச்செல்கிறார்.. (மொசுமொணுவென்று சடை வைத்த வெள்ளைமுடி ஆடுகள்). அவளின் வாழ்க்கைத்துயரம் இறுதியில் கணவனை சாகவிட்டு தான் வாழ்வதில் முடிகிறது. “வாயில் கூழாங்கற்களை வைத்துக்கொண்டு ‘குலேபகாவலி’ எனச் சொல்லும்போது ஒரு சத்தம் வருகிறதல்லவா. அதுதான் அவர் பெயர். நான் எழுத்தில் கொண்டுவர இயலாமல் சாரா என வைக்கிறேன்” (புளிக்க வைத்த அப்பம் ) என சொல்லி அவர் காட்டுவது 3400 வருடங்களாக தொடரும் விரட்டப்பட்ட மக்களின் வாழ்வின் மிச்சங்களை. இவைபோன்று பல உதாரணங்களை அடுக்குவது என் நோக்கமல்ல. இலக்கியவாதிகளில் மிகச்சொற்பமானவர்களே இப்படி மெல்லிய அங்கதத்தின் ஊடே எப்படிப்பட்ட பாரமான பத்தியையும் வாசிக்க வைத்திருக்கிறார்கள். அவர்களில் இவரே தலையானவர் என்றும் சொல்லலாம். இரு தலைமுறைகளாக கடுமையான இன ஒழிப்பு நடவடிக்கைகளும் பல தலைமுறைகளாக இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாமல் இன்னும் தலைவிரித்தாடும் சாதி சமூகவியலும் கொண்டது ஈழம். ஆனால், இவரது நூறு கதைகளில் சில கதைகளில் மட்டுமே பிறந்த ஊர் ஞாபகங்கள் மட்டுமே எட்டிப்பார்க்கின்றன. மற்றபடி எங்குமே அவர், நான்-பிறர், என் ஊர்- பிற ஊர் என்ற வேறுபாடு கொண்டிருப்பதை காணமுடிவதில்லை. அதையே முள்கிரீடமாக அவர்மீது சுமத்துபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர் எழுத்துக்களை தொடர்ச்சியாக படித்தவர்கள் உணரக்கூடியது, தன் நிலம் என்று அவர் கருதுவது எங்கும் அடக்குமுறைகளுக்கு ஆளாகும் உயிர்கள் உள்ள நிலங்களையே. மனிதர்கள் மட்டும்தான் என்றில்லை மலை ஆடுகள் வரை (வம்சவிருத்தி). தந்தங்களுக்காக கொல்லப்படும் யானைகள் வரை இன்னும் சொன்னால் சூழலியலைக்காக்கும் கிறிஸ்துமஸ் தவளைகள் வரையிலானது.
ஆப்பிரிக்கா கனடா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் சோமாலியா போன்ற நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வியலின் குறுக்குவெட்டுத்தோற்றம் இவர்கதைகளில் கிடைக்கப்பெறுகிறது. ஒருபுறம் மதம் சார்ந்த நம்பிக்கையில் வாரும் பழமைவாதிகள் மறுபுறம் அவர்களை கடந்து போகும் பெண்களின் உறுதியும் ஆழமும். இறந்துபோன தன் கணவனின் தம்பி என்பதாலேயே தான் தூக்கி வளர்த்த நியாஸை மணக்க காத்திருக்கும் ரஸீமா, ஏழு பெண்குழந்தைகளை தாண்டியும் தனக்கு ஆண்வாரிசு வேண்டுமென ஹஜ் பயணம் மேற்கோள்ளும் அஸ்காரி, வறட்சியில் இருக்கும் தன் கிராமத்திற்கு கிணறு வெட்ட வருபவர்களிடம் தனக்கு மசூதி கட்டித் தரச் சொல்லும் நூர் என இவர் விவரிக்கும் கதைகளில் எங்கும் நாம் வெளியாட்களை அயல்நாட்டு மனிதர்களை காணவில்லை. நம்மை சுற்றியிருக்கும் மனிதர்களைக்கூட ஒப்பிட்டுக்கொள்ளலாம். பாவப்பட்ட ஜீவன்கள் அனைவருமே எந்நிலத்திற்கும் பொதுவானவர்கள்.கடவுள் தொடங்கிய இடம் என்னும் தொடர்கதையுமே, கொழும்பிலிருந்து கிளம்புகிறான் என்பதை தவிர்த்துப் பார்த்தால் நிஷாந்தின் பயணம் உலகின் எந்தவொரு பகுதியிலும் இருக்கும் அகதியின் வாழ்க்கைக்கு பொருந்தக்கூடியது.
யாவரும் கேளிர் என்பதை பண்பாடாகவும் யாதும் வேறே என்பதை நடைமுறையாகவும் வைத்திருக்கும் தமிழ் மக்களின் இடையே சில விஷயங்களை எழுத்தாளர்கள் லேசில் எழுதிவிட முடியாது. தன் சமூகத்தையும் லேசாக பகடி செய்யும் உரிமையை வாசகர்களிடம் வெகுசிலரே பெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் அவருக்கு இணையானவர் நாஞ்சில்நாடன் அவர்கள். இருவரில் ஒருவரின் வரிகளைப் படிக்கையில் எனக்கு இன்னொருவரின் ஞாபகம் வந்துவிடும். இருவருக்குமான பொதுக்கருத்துக்கள் சில தோன்றுகின்றன. இருவருமே தன் அலுவல் நிமித்தம் வெவ்வேறு சமூக மக்களுடன் பழகியவர்கள். அவர்கள் மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்கக்கூடிய நிலைக்கு தன் வாசகர்களையும் எளிதாக இட்டுச்செல்கிறார்கள். தமிழன் மாராட்டியன் ஆப்பிரக்கன் என உயர்வு தாழ்வு பாராட்டுவதில்லை. இருவருமே கதையின் போக்கில் பல உள் விவரங்களை நுழைத்துவிடுகிறார்கள். அது உணவாக இருக்கலாம் ஒரு வகை மதுவாக இருக்கலாம் அல்லது சங்க இலக்கியப் பாடலாக இருக்கலாம். எங்கு வாசகனை கையைபிடித்து அழைத்துச்செல்லவேண்டும் எங்கு அவனுக்கு குறைவாக உரைத்தாலே போதும் என்கிற நுட்பம் உணர்ந்தவர்கள். நாஞ்சில் அவர்கள் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாலுடன் தோன்றிய வாய்ப்பன் என சில இடங்களில் கும்பமுனி அவதாரம் எடுத்துவிடுகிறார் ஆனால் அமு என்றும் எல்லைக்கோட்டை தாண்டியதாக நான் படிக்கவில்லை. சில குறியீடுகளோடு அதையும் சிறு எள்ளல் மற்றும் அங்கதத்துடனேயே கடந்துவிடுகிறார். ஊறுகாய்க்கும் உதவாத கசப்பும் நிறைந்த ஆனால் முள்ளும் கொண்ட நார்த்தை என அவர் வர்ணிப்பது அவர் ஊரைத்தான் எனத்தோன்றும்.
புலம் பெயர்ந்தவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேறும் வாய்ப்பு ஒருசதம்தான் என்கிறார் ஒரு சிறுகதையில் (ஒரு சாதம்) அந்த ஒரு சத வாய்ப்பில் தன் மொழியைப்பற்றியும் தன் உலகைப்பற்றியும் தன் மக்களைப்பற்றியுமான கரிசனங்களை வெளிப்படுத்துவது என்பது மகாத்மர்கள் செய்வது. விஸ்வரூபம் எடுப்பவர்களே,தனக்கு வழங்கப்பட்ட மூன்றடி மண்ணில் உலகை அளக்கிறார்கள். அ.முத்துலிங்கம் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.