[stextbox id=”info” caption=”போலந்து”]
வாழ்க்கை ஒரு வட்டம். சரித்திரம்; மீண்டும் மீண்டும் திரும்பி நடக்கும் – என்பதெல்லாம் தேய்வழக்குகள். ஆனால், போலந்தைப் பொருத்தவரைக்கும் அரசியல் அதிகாரம் சுழன்றாலும் படைத்துறையின் அடக்குமுறையும் இராணுவத்தின் ஆட்சியும் இன்னும் விலகவில்லை. கம்யூனிஸ்ட்கள் படைத்துறைச் சட்டத்தை அமல்படுத்தி 35 ஆண்டுகள் நிறைந்ததை நினைவுறுத்தும் வகையில் ஆயிரக்கணக்கானோர், தற்போதைய அரசாங்கத்தை எதிர்த்து, பெண்களின் அடிப்படை உரிமைக்காகவும் கல்வித்துறையில் சுதந்திரத்திற்காகவும் போராடத் துவங்கியுள்ளனர். குடிமக்களை நசுக்குவதில் என்னவோ 1981ல் கம்யூனிஸ்ட்டுகள் கால்கோள் இட்டாலும் இன்றைய வலதுசாரி ஆட்சியாளர்களும் அதே கம்யூனிஸ்ட் நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனராம். பெயர் என்னமோ சட்டம் & நீதி கட்சி (Law and Justice Party, or PiS) எனக் கொண்டிருந்தாலும் பொதுவுடைமைவாதிகளுக்கும் மரபுசார்புவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொன்னால் கோபம் மட்டும் வருகிறதாம்.
https://www.theguardian.com/world/2016/dec/13/thousands-protest-in-poland-against-rightwing-government
[/stextbox]
[stextbox id=”info” caption=”இந்தோனேஷியா”]
உலக நாடுகளிலேயே மிக அதிகமான இஸ்லாமியர்களைக் கொண்ட நாடு இந்தோனேசியா. அங்குள்ள ஜகார்தா-வின் கவர்னர் பஸுகி (Basuki Tjahaja Purnama) தான் தெய்வ நிந்தனை எதுவும் செய்யவில்லை என்று கண்ணீர் மல்க வேண்டுகிறார். ஒருபுறம் ‘அல்லாஹூ அக்பர்’ என்று முஸ்லீம்கள் கவர்னரை சிறையில் அடைக்க கோஷம் எழுப்புகிறார்கள். அதன் எதிர்ப்புறம் சீனக் கிறித்துவர்கள் தேசிய கீதம் பாடி அவரை மன்னிக்கக் கோருகிறார்கள். அப்படி கவர்னர் என்ன சொன்னார்? ‘குரான் என்னும் மதநூலை வைத்து அரசியல் பிரச்சாரம் செய்யாதீர்கள்!’ என்றாராம். அவருக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதியின் மகன் போட்டியிடுகிறார். ஃபெப்ரவரியில் இஸ்லாமிய மார்க்க அரசியல் வென்றதா அல்லது இவருக்கே இரண்டாம் முறை பதவி கிடைத்ததா எனத் தெரிந்துவிடும்.
http://www.reuters.com/article/uk-indonesia-politics-court-idUSKBN1430TR
[/stextbox]
[stextbox id=”info” caption=”நல்ல காலம் வரப்போகுது?”]
வருங்காலம் ஜெகஜ்ஜோதியாக இருக்கிறது. தானியங்கி கார்கள் வரப்போவதால் வண்டியோட்டும் போது கூட போக்கிமான் கோ விளையாடலாம். உங்களுக்கு நீங்களே எஜமான் என்பதால், கூலி உயர்வு என்றெல்லாம் போராடாமல், திறமைக்கான முழுச்சம்பளத்தையும் அப்படியே பையில் போட்டுக் கொள்ளலாம். ஆனால், உங்களுக்கு திறமையைக் கற்றுத் தராத சூழலில் நீங்கள் வளர்ந்திருந்தால், மேலும் நசுக்கப்படுவீர்களோ? வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளான தண்ணீர், சுகாதாரம், வாழ்வுரிமை பாதுகாப்பு போன்றவை இல்லாத இடங்களில் இருப்பவர் எப்படி 21ஆம் நூற்றாண்டின் சாதனைகளை அனுபவிப்பார்? இந்த சிக்கல்களை மெக்கின்ஸி மேலாண்மையின் துணையோடு நிர்வாகத்திற்காக ஆராய்கிறது.
எல்லாவற்றையும் ரோபோக்களும் தன்னால் இயங்கிக் கொள்ளும் சாதனங்களும் செய்துவிட்டால் சாதாரணருக்கு என்ன வேலை பாக்கி இருக்கும்? ஆப்பிரிக்காவில் எல்லோர் கையிலும் செல்பேசி இருக்கிறது; ஆனால், மின்சாரப் பற்றாக்குறை கோர தாண்டவமாடுகிறது. உலகில் நிலவும் இப்படிப்பட்ட எரிசக்தியற்ற நிலையையும் திறன்கல்வி சார்ந்த மேற்கத்திய சூழலையும் எப்படி சமன் செய்யப் போகிறோம் என ஸ்டீவன் ஹாகிங் கேள்வி எழுப்புகிறார்.
https://www.theguardian.com/commentisfree/2016/dec/01/stephen-hawking-dangerous-time-planet-inequality
[/stextbox]
[stextbox id=”info” caption=”சிரிய நாட்டை அடக்கியாள உதவுகிறதா ஃபேஸ்புக்”]
இணையம் மூலமாகத்தான் அடுத்த புரட்சி துவங்கும் என்பதை அரபு வசந்தத்தில் கொஞ்சம் போல் பார்த்தோம். எகிப்தில் ஆட்சி மாற்றம், டுனிஸியாவில் தேர்தல் என்றெல்லாம் குடிமக்களை ஒன்றிணைக்க ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் உதவின. அப்படியென்றால் அதே போல் சிரியாவை அடக்கியாளும் மன்னர் பஷார் அல் அஸாத்திற்கு எதிராகவும் சிரியா மக்கள் கைகோர்த்து பொங்கியெழுந்திருக்க வேண்டாமா? ஏன் அவ்வாறு நிகழவில்லை என்பதற்கு சில காரணங்களை அல் ஜசீராவின் இந்தக் கட்டுரை ஆராய்கிறது. வலையில் உட்கார்ந்திருக்கும் நாமெல்லொரும் ஒரு லைக், இன்னொரு சோக முகம் என்று பொத்தான் சொடுக்கல் முடிந்தவுடன் நம் கடமை முடிந்தது என்று குற்றவுணர்ச்சியில் இருந்து விடுதலை பெற்று அரசியல் பொறுப்பையும் நிறைவேற்றியதாக திருப்தியும் பெற்று, வேறு கேளிக்கைகளில் மூழ்கிவிடுகிறோம். இது சமூக ஊடகத்தின் பயனற்ற செயலூக்கத்தின் பரிமாணம். இன்னொரு புறம், சிரியாவில் அலெப்போவிலும் டமாஸ்கஸ் நகரிலும் எங்கிருந்து இணையத்திற்குள் செல்கிறார்கள் என்று வேவு பார்க்கவும் ஃபேஸ்புக் போன்ற ஊடகங்கள் கொடுங்கோல் அரசுகளுக்கு உதவுகின்றன.
http://www.aljazeera.com/indepth/opinion/2016/12/facebook-hurt-syrian-revolution-161203125951577.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”கண்காணிப்பு”]
நமது வண்டியை அளவிட்ட வேகத்தைவிட அதிகமாக ஓட்டி மாட்டிக்கொண்டு ஃபைன் கட்டுகிறோம்; வருடாந்திர வரியைத் தாமதமாகக் கட்டுவதால் கூடுதலாகக் கட்டுகிறோம்; தவறுதலாக மகனின் ரயில் கார்டைக்கொண்டு பயணம் செய்து மாட்டிக்கொள்கிறோம்; இணையம் வழியாக நிறைய தடைசெய்யப்பட்ட/புரட்சியாளர்களின் புத்தகங்களை வாங்குகிறோம் – இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டனை பெற்றாலும், இந்த பலதரப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து உங்களது ‘குற்றப்பட்டியல்’ தயார் செய்யப்பட்டு அதன் மூலம் சமூகத்தில் நீங்கள் எந்தளவு கெட்டவர் எனக் கணக்கிட முடியுமானால் அது எத்தனை மனசாட்சியற்ற விதிமுறையாக இருக்கும்? மேலே சொன்ன தப்புகள் பலவும் தவறுதலாகச் செய்ததாக இருக்கலாம், ஏதோ ஒரு கவனக்குறைவு, மறதி, தனிப்பட்ட சிக்கல்கள் காரணமாக உருவானவையாக இருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் நீங்கள் மேல்முறையீடு செய்யமுடியாது. இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு உங்கள் குற்ற எண்ணும் தண்டனையும் அளிக்க முடியுமென்றால் அது கொடுங்கனவாக இருந்தாலும் எதிரிக்கும் நடக்கக்கூடாது என்றுதானே நினைப்போம்? இத்தனை பயங்கரமான தகவல் தொடர்பு இணைப்பை உருவாக்க முடிந்தால் அது எந்தளவு நமது சிறு அசைவுகளையும் கண்காணிக்கும்! தனிமனித சுதந்திரம் என்பது இதைவிட கேலிக்கூத்தாக மாறமுடியுமா? என் எல்லா அசைவுகளையும் மேலே ஒருவர் பார்க்கிறார் என்பது போதாமல் பெரிய அண்ணனும் தனது இரும்புக்கரத்தைக் கொண்டு என் தின நடவடிக்கைகளை குற்றப்பட்டியலின் கூட்டல் (கழித்தலுக்கு இடமே இல்லை!) சமன்பாடாக மாற்ற முடியுமென்றால் நாளை மற்றொரு நாளே என எப்படி மனிதன் நிம்மதியாக உறங்கப்போகமுடியும்? சமூகத்தை கட்டுப்பாடோடு வைத்திருக்கும் வழிமுறை இதுதானா? மேற்சொன்னவற்றை செய்வதுதான் சீன அரசு தனது பதிமூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் பிரதானக் கொள்கையாக அறிவித்திருக்கிறது. BIG DATA தகவல் தொழிட்நுட்பம் மூலம் பலதரப்பட்ட வகைகளில் சேகரிக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் அவதாரமாக பெரியண்ணன் உருவாகப்போகிறார். இதை ஆர்வெலின் 1984 நாவலைப்போன்ற ஒரு சித்திரம் என பலரும் குறிப்பிடுகிறார்கள். அதைப் பற்றி நெடிய கட்டுரை கீழே:
http://blogs.wsj.com/chinarealtime/2015/11/06/china-wants-to-tap-big-data-to-build-a-bigger-brother/
[/stextbox]