கணங்களில் தளிர்க்கின்ற ஜீவிதம் – சுப்பிரமணியன் ரமேஷ் கவிதைகள்

ramesh_singaporeசுப்பிரமணியன் ரமேஷின் முதல் கவிதைத் தொகுப்பான ‘சித்திரம் கரையும் வெளி’ வெளிவந்து பத்து வருடங்களுக்குப் பிறகு படிக்கிறேன். கவிஞர் எழுதி ஆறப்போட்டு பல வருடங்களுக்குப் பிறகு வெளியான கவிதைகள் என்பதையும் சேர்த்துப்பார்த்தால் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களைக் கடந்து வந்திருக்கின்றன இக்கவிதைகள். கடந்த வருடம் எழுத்தாளர் கி.ரா வீட்டில் ரமேஷை சந்தித்தபோது நவீன ஓவியரென நண்பர் சிவாத்மா அறிமுகப்படுத்தினார். ஓவியருக்கு நவீனத் தமிழிலக்கியத்திலும் ஆழமானப் பயிற்சி இருப்பது ஆச்சர்யப்படுத்தியது. தொடர்ந்து பல வருடங்களாக எழுத்தாளர்கள் பலரைச் சந்தித்து உரையாடுபவராகவும் ஓவியர்கள் பலரோடு நெருங்கிப்பழகியவராகவும் அவரை அறிந்துகொண்டேன். அவருடைய நண்பர்கள் தமிழ் இலக்கிய உலகின் பட்டியலாக இருக்கக்கண்டதும் அவரது பன்முகம் பொறாமை கொள்ள வைத்தது. பின்னர் ஒரு இணையக் குழுவில் நவீனத்துவக் கவிஞராக ரமேஷ் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆச்சர்யப்படுவதை நிறுத்திக்கொண்டேன். அங்கு பகிரப்பட்ட அவரது ஓவியங்கள் பலதும் தேர்ந்த ரசனைக்காரரின் கையெழுத்தாகத் தெரிந்தன. இதுக்கு மேல் தாங்காது என ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குள் அவரது கவிதைத் தொகுப்பை எழுத்தாள நண்பரான சிவா கிருஷ்ணமூர்த்தி கொடுத்தார்.ஓரிரு நாளில் தொகுப்பு முழுவதையும் படித்து முடித்தேன். அதில் ரசித்த பல கவிதைகள் தொடர்ந்து நினைவுக்கு வந்தபடி இருந்தன.

சின்னப் பயல் சீனுவுக்கு

சிறகுகள் ஏதும் தேவையாயில்லை

மேஜையின் விளிம்பிலிருந்து தயக்கமாய் நீண்ட

கைகளைக் குறிவைத்துப் பாய்ந்தான்

காலத்திற்கும் அ-காலத்திற்கும்

இடைப்பட்ட ஒன்றில்

கணத்தினைக் கூறுகளாக்கி

ஒன்றில் தயங்கி

ஒன்றில் சரிந்து

ஒன்றில் மிதந்து

ஒன்றில் மீண்டான்

யுகங்களைப் புறந்தள்ளி

கணங்களில் தளிர்க்கின்றது ஜீவிதம்

இணையற்ற அன்பும், யாருக்கும் யாரும் தேவையில்லை எனும் இரு நிலைகளும் உணர்வுரீதியாக இருதுருவமாக இருந்தாலும் அலைவுறும் கவிஞனுக்கு அவை தாவிவிளையாடும் ஐஸ்பாய் ஆட்டம் தான். ஊசலாடும் கணத்தில் அன்பிற்கு அடைக்கலம் தேடும் ஆன்மா நினைவுகளின் பாரத்தைத் தாங்க முடியாது அங்கிருந்து அகலப்பார்க்கிறது. நவீன மனிதனின் ஆகப்பெரிய சிக்கல் தனக்கான கூண்டை எப்படி வரையறுப்பது என்பதுதான் – ஜன்னல் வைத்த கூண்டு வேண்டும். தப்பும் வழிக்கு ஏதுவாக கம்பியின் இடைவெளிகள் இருப்பது நலம். பக்கத்து இருக்கைக்காரன் நுழையும்படி இருந்துவிடக்கூடாது இலகுவாக நுழையும் இடைவெளி. விரிந்த வானம் கைக்கெட்டும் தூரம் இருப்பது கூடுதல் பலம். ஆனால் தூரத்து ஒற்றை மரம் கண்சிமிட்டும் நட்சத்திரமாக இன்மைக்கும் இருப்புக்கும் இடையே தள்ளி நிற்பது அவசியம். நவீன மனிதனின் சிக்கல்களைக் கச்சிதமாகப் படம்பிடிக்கும் கவிதைகள் பலவும் இத்தொகுப்பில் உள்ளன.

ஓவியத்தில் ஸ்டில் லைஃப் எனும் வகைமையைப் போல இக்கவிதை சொற்களில் உறைந்த கணங்களிலிருந்து ஜீவிதத்தை மீட்டெடுக்கும் முயற்சி தெரிகிறது. மீட்டெடுத்த கணமே அதற்கும் தனக்கும் உண்டானத் தொடர்பை துண்டித்துவிடும் முனைப்பும் அதிதீவிரமாகிறது. ‘கவலையில்’ என்றொரு கவிதை இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

மண்ணெண்ணெய் லாரியை

ஒட்டி வரும் கவலையில்

இடுங்கிய கண்களால் சிரிக்கும்

சீனத்தாத்தாவின் சிரிப்பு

ஏனோ

தாய்நாட்டில் பிரிந்து வளரும்

பிரிய மகளின் புன்னகையை

நினைவெழுப்பியது

ஆறுதலாய்

முன்னுரையில் இக்கவிதையை சுய அனுபவம் தாண்டி பிற குழந்தைகளையும் தனதெனக்காணும் குறளுடன்விக்ரமாதித்யன்  ஒப்பிட்டிருந்தார்.  பிரிய மகளின் புன்னகையை மீட்டெடுத்த அதே கணத்தில் எவ்விதமான உணர்ச்சியும் எழும்பாத குழந்தையின் சிரிப்பைத் தேடும் இடத்தில் கவிஞரின் மனம் எட்ட நினைக்கும் இடம் கனிந்த ஞானியரின் இயல்புக்கு ஒத்திருப்பதை காண முடிகிறது. கிட்டத்தட்ட அயல் வாழ்வில் தனிமை கொண்டு வாழும் வாழ்வின் ஏக்கத்தை ஒத்திருப்பது போன்ற தொடக்கம் சென்று சேரும் இடமோ அகன்ற ஞானப்பாதை. இப்பார்வை கவிதையை அதன் இயல்பான பிரிவு அழகியலை மீறிச் செல்கிறது. ஒருவிதத்தில் அந்த தகப்பனுக்கு பாரத்திலிருந்து விடுதலைக்கான வழியாகவும் இது அமையக்கூடும்.

இழப்பும், தனிமையும் இவரது கவிதைகளில் நிரந்தரப் பேசுபொருளாக இருக்கிறது. வீடுகளுக்குள்ளே வாழும் அனாதைகள் என ஒரு வரியில் தனிமைக்கு மற்றொரு அர்த்தத்தைத் தர முடிந்திருக்கிறது. வீடு என்றாலே விடுபடல், சமூகத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருக்கும் இடம் என்பதுதான். வீட்டிலும் ஒருவன் துணைக்கு ஏங்கி அனாதையாக இருப்பானென்றால் அந்த வீடு தரும் பாதுகாப்புணர்வு என்ன பொருள் தரும்?

கால் மாற்றி

கால் மாற்றி நின்று

பார்த்துக் கொண்டேயிருந்தேன்

மத்தாப்புகளின் நினைவுகளோடு

வெல்டிங்கை

பார்க்காமல் இழந்திருந்தேன் நான்..

பார்த்துப்பார்த்தே இழந்திருந்தான் அவன்!

ஞாபகங்களை மீட்டெடுப்பதே அதில் மீண்டும் வாழத்தான் எனும்போது நினைவுக்குத் திரும்பியவை நிகழ்காலத்தை மறைத்துவிடுமென்றால் அந்த நினைவு என்பதும் ஒரு பாரம் தானே. மறதியும் மருந்தாகும் வேளையில் ஞாபகமும் பிணியாகும். இங்கு இருவேறு வாழ்வு முறைகள், இருவகை மறக்கும் வழிகள், ஒற்றை வெல்டிங்கின் பொறியில் இணைகிறது. சுவாரஸ்யத்துக்காக எழுதப்பட்ட கவிதையாக இருப்பதால் இவரது பிற கவிதைகளின் வார்த்தைக் கோர்வைகள் இருந்தும் வாசிப்புக்கணத்தைத் தாண்டிவளரவில்லை.

குழந்தைகளின் உலகம் கவிஞர்களுக்கு பிரமாதமான கச்சாப்பொருள். சிறு சொப்புச்சாமான்களோடு விளையாடிய குழந்தை பிரபஞ்சத்தை உருவாக்கிவிட்டதாக ப்ளே திங்க்ஸ் கவிபாடிய தாகூரின் உலகம் ஒரு பக்கம். அவை அன்றாட நிகழ்வுகளிலிருந்து உருவாகும் அசாத்திய தரிசனங்களை நமக்குக் காட்டுபவை. அதில் ஒரு ஆன்மிக அனுபவம் உள்ளது. கவிஞர் ரமேஷ் எதிர்கொள்ளும் குழந்தை உலகம் ஆச்சர்யத்தை அடக்கிய அதே வேளையில் அக ஸ்தம்பிப்பையும் உருவாக்கிவிடுகிறது.

‘பெரிசுகளுடன் பிரச்சனையில்லை என்றும்’ எனத் தொடங்கும் கவிதை குழந்தைகளின் அடிப்படைக் கேள்விகளில் தவிடுபொடியாகும் மானுட தர்க்கங்களை உள்ளடக்கியது. ஆலெப்போ நகரிலிருந்து தப்பிப்பிழைத்து ஓடிவரும் அகதிகளில் பெரும்பாலான குழந்தைகள் கூடாரங்களிலும் முகாம்களிலும் நோய்வாய்ப்படுகின்றன. சிகிச்சைக் கிடைக்க வழியில்லாது இறந்தும்போகின்றன. இது இன்றைய நிதர்சனம். லட்சக்கணக்கில் வீடு தேடி ஓடிவருபவர்களில் குழந்தைகளுக்கு பாதுகாப்புத் தரவேண்டும் எனும் அடிப்படை மானுட மனசாட்சிகூட இல்லாத அறமும் கொள்கையும் நிலைத்து என்ன சாதிக்கப்போகிறது?

அப்பா நம் செல்லக் கோழி ஆனதென்ன யிப்படி?

எளிமையான வார்த்தைகளை

எதிர்கொள்ள நேரிட்டால்

அதிராமல் இருப்பதெப்படி?

‘பொடிசுகளுடன் போராட முடியவில்லை என்னால்’, எனச் சேர்த்துப்படித்தால் பொடிசுகளின் கேள்விகளும், அவர்களின் பார்வைகளுமே நம் அறநிலைப்பாடுகளைப் பொசுக்கிவிட வேண்டாமா? இத்தனை எளிமையான கேள்விகளுக்கு பதிலலிக்காத தர்க்கங்கள், தத்துவசாரங்களில் தலை முழுகிக்கிடக்கிறோமே.

ramesh

நமது அன்றாட வாழ்க்கை தான் எத்தனை சுவாரஸ்யமானது. உண்மை எளிய வேஷத்தை மட்டுமே பூண்டு வரும். அதில் ஒரு சிறு தனிமனித அனுபவம் நேனோ நேரத்தில் சாமான்ய உண்மையைத் தாண்டிவிடும் ரசானுபவம் கவிதையின் உச்சகட்ட சந்தோஷம். விளக்கமுடியாத திருப்தி. அப்படி ஒரு கவிதை நிறைய இத்தொகுப்பில் கிடைப்பதே நிறைவான வாசிப்பாக்குகிறது. ஒரு சிறு விளையாட்டு, காட்சியாக மாறி நிற்கும் சொல் வரிசை கோர்வை, தன்மைய அனுபவம் பிறனாக மாறும் சிறு தவ்வல், இவை போதும் கவிதையை பல முறை அசைபோட. அப்படி மாறிட முடிந்த மற்றொரு கவிதை:

வண்ணம் மாறும்

சோப்புக் குமிழிகளை

கையிலேந்த ஓயாமல் துரத்திடும் சிறுமி

அவள் புன்னகையை

சேகரித்துக் கொண்டிருக்கிறான்

குமிழ் ஊதுபவன்..

குமிழாக சில காலம்

புன்னகையாய் சில காலம்

கழிந்தழியும் வாழ்நாள்.

எத்தனை வெவ்வேறு காட்சிகளை இச்சிறு வார்த்தைப் பெட்டகத்தில் அடைத்து வைத்திருக்கிறார்! நாம் அன்றாடம் கடந்துசெல்லும் எத்தனை இயல்பாக காட்சிகள். /கையிலேந்த ஓயாமல் துரத்திடும் சிறுமி/ – அவளது கையில் கிடைத்ததைவிட வண்ணக்குமிழிகள் பத்திரப்படுத்திய சிரிப்புகள் பல இருக்கும். அப்படி குமிழிகளில் சேகரிக்கும் சிரிப்புகளைவிட எட்ட நின்று அச்சந்தோஷக்கணத்தை சேகரிக்கும் குமிழ் ஊதுபவனின் வரவு எத்தனையிருக்கும்? கரைந்தெழுந்தபின் அந்த வெளியில் எஞ்சுவது என்ன? குமிழ் தெறிப்புகளும், சிரிப்பொலிகளும் மட்டும்தானே? அவனது வாழ்நாளின் சம்பாத்தியமாக எஞ்சுவதும் அவைதான். /குமிழாக சில காலம்/ என்பதில் எத்தனை வாழ்க்கைகளை உள்ளடிக்கிவிடுகிறார் கவிஞர்! கவிஞரின் வார்த்தையைக் கடன் வாங்குவதென்றால், அக்கணங்களில் தளிர்க்கின்றதல்லவா ஜீவிதம்.

நான் யாருக்கேனும் எழுதும்

வரிகளிலும் உனக்கான

வார்த்தைகள் இருக்கும்

..ஆழ் பரப்பில்

அர்த்தப்படுகின்ற எல்லா வரிகளும்

எல்லாருக்குமான பாடல்களும்

அகன்ற நதின்யொன்றும் கிளைப்பது சிறு நீர்க்குமிழிலே. அதுபோன்ற எல்லா பாடல் வரிகளும் யாருக்கேனும் எங்காவது அர்த்தப்படுகின்றன.

கவிஞர் ரமேஷ் தொடர்ந்து கவிதை எழுதி வந்தாரா எனத் தேடிப்பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டிய தொகுப்பு. அடையாளச்சிக்கல்களும் அமானுஷ்யக் கவிதைகளும் முயங்கி நிற்கும் இக்கவிதைகள் என்.டி.ராஜ்குமார், பாலைநிலவன் இருவரின் கவிதை மரபில் இணைகிறது. இருப்புக்கும் இன்மைக்கும் இடையே சஞ்சாரம் செய்யும் கவி மரபைத் தொடருவதால் இம்மூவரும் தனித்துவமான கவிதை அழகியலை கொண்டவர்களாகின்றனர். நவீனத்துவத்தின் வீழ்ச்சியைப் பேசுபொருளாகக் கொண்டவை இன்று வந்து சேர்ந்திருக்கும் அடர்த்தியான செவ்வியல் கருப்பொருளை இயல்பாகச் சேர்ந்திருப்பதை என்.டி.ராஜ்குமாரின் கவிதைகளின் காணலாம். கவிஞர் ரமேஷ் இந்த மரபில் எப்படி வந்து சேர்ந்திருக்கிறார் என்பதை அவரது இன்றைய கவிதைகளைப் படித்தபின்னே அறிந்துகொள்ளலாம்.

முன்னுரையில் கவிஞர் விக்ரமாதித்யன் சொல்கிறார் – ‘நதி ஒன்றுதான். அதன் சாயைகள் வேறுவேறானவை…தலைக்காவிரிதான் அகன்ற காவிரியாகிறது’. ஓவியர் கவிஞர் சுப்ரமணியன் ரமேஷுக்கும் இக்கூற்று பொருந்துகிறது. கவிஞரின் நுண்ணுணர்வும், ஓவியரின் பார்வைக்கோணமும் வெவ்வேறு சாயைகள் கொண்டவையானாலும் ஒரே கலாரசனையினால் பட்டைத் தீட்டப்பட்டவை. ஒன்றிலிருந்து மற்றொன்றை எட்டிப்பிடிக்கும் எத்தனம் தெரிவதில் ஆச்சர்யமில்லை. பன்முகப்பார்வை கொண்ட நண்பர் ரமேஷ் சுப்ரமணியன் தொடர்ந்து எழுதும் தருணங்கள் வாய்த்தால் நவீனத்தமிழ் கவிதை உலகின் புதுக்குரலாக அவரது கவிதைகள் பேசப்படும் என்பதற்கான ஆரம்பங்கள் அனைத்தும் இத்தொகுப்பில் உள்ளன.

**

சித்திரம் கரையும் வெளி

அகரம் பதிப்பகம் (2006)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.