மகரந்தம்


[stextbox id=”info” caption=”குவென் ஐஃபில்”]

gwen_ifill_us_faces

சி.என்.என்., ஏ.பி.சி., என்.பி.சி என்று எந்தத் தொலைக்காட்சி செய்திகளின் முக்கியஸ்தர்களை பார்த்தாலும், அவர்கள் ஆண்களாகவே இருப்பார்கள். அவர்களில் தனித்துவமாக இருந்தவர் க்வென் ஐஃபில் (Gwen Ifill). வெறும் செய்தி வாசிப்பாளராக ஒதுக்கப்பட்ட காலகட்டத்தில் வித்தியாசமான ஆனால் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களை கேள்விகளாக்கி அதை தக்க சமயத்தில் ஜனாதிபதி முதல் சி.ஈ.ஓ. வரை கேட்டவர். பெரிய இடங்களில் இருப்பவர்கள் மழுப்பலாக பதிலளித்தால், அதற்கு துணைக் கேள்விகளும் ஆதாரங்களும் கொடுத்து மக்கள் மன்றத்தில் தெளிவை உருவாக்க ஒலித்த குரலாக ஐஃபில் விளங்கினார். இதில் பெண்ணாகவும் கருப்பராகவும் இருப்பதால் வரும் சிக்கல்களையும் மீறி செயல்பட்டவர். ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு தங்களின் முகமாகத் தெரிந்தவர் திங்கள் (நவம்பர் 14, 2016) அன்று மறைந்தார். அவர்களுக்கு அஞ்சலி.

http://www.npr.org/sections/thetwo-way/2016/11/14/502031518/gwen-ifill-host-of-washington-week-pbs-newshour-dies
[/stextbox]


[stextbox id=”info” caption=”காசில்லாத உலகம்”]

cashless-society-dollars_money_currency_no_zimbabwe

இந்தியாவில் நவம்பர் 9, 2016 முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய பிரதமர் நரோந்திர மோதி அறிவித்தார். ஆனால், இருபதாண்டுகளுக்கு மேலாக ஜிம்பாப்வேயில் பலவிதமான பொருளாதாரச் சிக்கல்கள் நடைமுறை வாழ்வை மொத்தமாக மாற்றியிருக்கின்றன. 2009ல் நூறு ட்ரில்லியன் டாலர் ($100,000,000,000,000) நோட் அச்சடித்தார்கள். அச்சடித்த சூட்டோடு அது செல்லாது என்றார்கள். அதன் பின் அமெரிக்க நாணயங்களை புழக்கத்தில் வைத்து பார்த்தார்கள். அதிலும் கள்ளச்சந்தை, கறுப்பு பணம், பதுக்கல் எல்லாம் நடக்க ஆரம்பிக்க இப்போது ரூபாய் நோட்டோ, நாணயமோ இல்லாத சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். மாதா கோவிலில் ஆரம்பித்து மாடவீதி வரை தவணை அட்டைகளும் கடன் அட்டைகளும் செல்பேசி மூலம் பணம் பரிமாறும் வர்த்தகமும் கோலோச்சுகின்றன. ஜிம்பாப்வே நாட்டிற்குள் சில பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பண்டமாற்று வியாபாரம் ஜரூராக நடக்கிறது. இதெல்லாம் ட்ரம்ப்பின் அமெரிக்காவில் கூட வரலாம் என நீங்கள் நினைத்தால் அதற்கு அமெரிக்காவின் கடன் ஜவாப்தாரி ஆகாது.

http://www.nytimes.com/2016/11/04/world/africa/zimbabwe-robert-mugabe-cash-debit-cards.html?_r=1
[/stextbox]


[stextbox id=”info” caption=”காக்கைக்கும் நரிக்குமா கல்யாணம்?”]

sikh_indian_weddings_marriages_inter_region_caste_community_punjab_states_national

இது ஒரு விசித்திரமான சம்பவமாகத் தெரியலாம் ஆனால் இந்நிலைக்கு மிகத் தெளிவான ஒரு பாதை இருக்கத்தான் செய்கிறது. இங்கிலாந்து சமூகம் பலவித நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் சமூகமாகவே இதுவரை இருந்துவருகிறது. பல மதத்தினரும், நம்பிக்கையாளர்களும், நம்பிக்கை யற்றவர்களும் ஒன்றாக இருக்கும் நிலம் என்பதை இங்கு தலைமுறைகளாகத் தங்கள் நாடெனக்கொள்ளும் பஞ்சாபிகளும், குஜராத்திகளும், வங்காளிகளும், பங்களாதேஷ் நாட்டவர்களும், பாகிஸ்தானியர்களும், ஆப்பிரிக்க இந்தியர்களும் கட்டாயம் ஒத்துக்கொள்வார்கள். சமீப காலங்களில் இரு வெவ்வேறு மத நம்பிக்கையாளர்கள் குடும்ப பந்தத்தில் ஒன்றாக இணைவதில் வரும் சிக்கல்களைப் பற்றிய பலவிதமானச் செய்திகள் வருகின்றன. இவை ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் தங்கள் இருப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகப் பார்ப்பதால் வரும் விஷயமாக மட்டும் தெரியவில்லை. இந்தச் செய்தியில் ஜைன மதப்பெண் ஒருத்தி சீக்கிய இனத்துப் பிள்ளையைத் திருமணம் செய்த நாளன்று சீக்கிய இன வெறியர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த முகமூடி அணிந்த சீக்கியர்கள் இப்படி பல கலப்பு மணங்களை எதிர்த்து வருவதைப் பற்றிய கட்டுரையை கீழே படிக்கலாம். இங்கிலாந்தில் பிறந்து வளரும் இந்த இளைஞர்களை பயமுறுத்தும் அம்சம் எது?

https://www.theguardian.com/world/2016/nov/03/i-never-thought-id-be-terrorised-by-my-fellow-sikhs-at-a-wedding
[/stextbox]


[stextbox id=”info” caption=”சொல்வதையும் செய்வேன்! செய்யாததையும் சொல்வேன்!!”]

manipulate_voice_communications_photoshop_text_adobe-project-voco

புகைப்படங்களில் வேண்டிய பலவிதமான மாற்றங்களை செய்ய மென்பொருட்களுக்குக் குறைவில்லை. அதேபோல காணொளிகளில் எடிட்டிங் செய்து மாற்றங்களை உருவாக்க முடியும். கைப்பேசியில் கூட இந்த மாற்றங்களைச் செய்ய முடிவதால் பொழுதுபோக்குக்காக பலரும் படங்களை எடிட் செய்து வலைத்தளங்களில் பகிர்வதை பார்த்து வருகிறோம். ஆனால், ஒலித் துண்டுகளை எடிட் செய்து கொலாஜ் போல ஒன்று உருவாக்குவது சவாலாகவே இருந்துவந்தது. இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு சில ஒலித்துண்டுகளை மாற்றம் செய்யலாம் ஆனால் மொழிக்கும் ஒலிக்கும் இருக்கும் தொடர்பை எடிட் செய்யமுடியாது. அடோபி எனும் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் பிராஜெக்ட் வோக்கோ எனும் மென்பொருள் வழியில் ஒலிக்கும் மொழிக்கும் இருக்கும் தொடர்பை கட்டுப்படுத்தும் வழிமுறையை உருவாக்கியுள்ளது. மொழி ஆய்வு வல்லுனர்களும் ஒலி அமைப்பு தொழில்நுட்ப ஆய்வாளர்களும் இதைக் கொண்டு ஒலியமைப்பில் பலவிதமான மாற்றங்களை இதில் கொண்டுவரமுடியும் என நம்புகிறார்கள். நாம் வழக்கம்போல் இத்தொழில்நுட்பத்தைக் கொண்டு மாஸ் சினிமா வசனங்களை மாற்றி சமூக வலைத்தளங்களில் பகிர்வோம் என்பதில் சந்தேகம் இல்லை.

http://www.theverge.com/2016/11/3/13514088/adobe-photoshop-audio-project-voco
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.