அவதானத்தின் அறிவியலை அறிய வேண்டாமா?

ஒரே நேரத்தில் நம்மால் எத்தனை விஷயங்களை ஆழ்ந்து கவனிக்க முடியும்? கவனித்து உள்வாங்க முடியும்? உள்வாங்கி அவற்றை நம்முள் தொகுத்தும் பிரித்தும் இணைத்தும் அறிந்து கொள்ள முடியும்? உதாரணமாக நாம் ஒரு பாடலைக் கேட்கிறோம். கேட்கும் போது அது எந்த படத்தில் உள்ளது என்பது தொடங்கி அது என்ன ராகம் என்பது வரை எத்தனையோ தரவுகளை நம் மனது உள்ளே பின்னத் தொடங்குகிறது. இது அதன் போக்கில் நடக்கிறது. அதைக் கேட்டுக்கொண்டே மனது இப்படி பின்னிக் கொண்டிருக்கும் போது நாம் மற்றொரு வேலையையும் செய்து கொண்டிருக்கிறோம். கணினியின் விசைப்பலகையில் எதையோ தட்டச்சு செய்து கொண்டிருக்கிறோம். எழுதுகிற கட்டுரையின் போக்கு ஒரு பக்கம், காதில் விழுகிற இசையும் அதனுடன் தொடர்புடைய விஷயங்களும் இன்னொரு பக்கம். இப்படி நம் மனது செயல்படுகிறது. பல சமயங்களில் நாம் இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட புலன் வழி வரும் விஷயங்களை அவதானிக்கிறோம். ஆனால் இவை நனவுதளத்தில் நிகழ்வதில்லை. நனவுக்கும் நனவிலி (unconscious) மனங்களுக்கு இடையே எங்கேயோ நிகழ்கின்றன.
ஆனால் இந்தியாவில் இதை நனவுணர்வுடன் செய்வதை ஒரு கலையாக மாற்றினார்கள். ஒரே நேரத்தில் எட்டு அவதானிப்புகள், 16 அவதானிப்புகள், எனத் தொடங்கி சதாவதானம் சஹஸ்ராவதானம் என்று சென்றுள்ளது இந்த கலை. நனவுணர்வுடன் புலனுணர்வு தரவுகளை ஒன்றுக்கும் மேற்பட்ட அவதானங்கள் மூலம் எதிர்கொள்வது என்பது எளிதான விஷயமல்ல.
தமிழ்நாட்டின் தென்கோடியிலிருந்து ஒரு தமிழ் அறிஞர், சென்னையில் தமிழ் பணி செய்ய வந்திருந்தார்.  நல்ல அறிஞர். அபரிமிதமான நினைவாற்றல் கொண்டவர். சைவ சமய இலக்கியங்களிலும் தமிழ் இலக்கணத்திலும் ஆழக்கால் பட்டவர். இஸ்லாமியர். அவரைப் பார்க்க மதுரைக்கு அடுத்துள்ள முதுகுளத்தூர் எனும் ஊரைச் சார்ந்த கலியாண சுந்தரம் பிள்ளை என்பவர் வந்திருந்தார். இருவரும் அளவளாவிக் கொண்டிருந்தனர்.  பேச்சு அவதானக்கலைக் குறித்து திரும்பியது. அவதானக் கலை என்பது பொய்யும் புரட்டும் நிரம்பியது என்றார் அந்த இஸ்லாமியர். பிள்ளை அவர்களோ இல்லை என்றார். அவதானக் கலையில் கண்டப்பத்திரிகை என்றொன்று உண்டு. ஒரு செய்யுளில் உள்ள எழுத்துக்களை தனித்தனியே வெட்டி எண் எழுதி குலுக்கி போட்டு எடுத்து எண்ணையும் எழுத்தையும் சொல்வர். இது ஒவ்வொரு சுற்றிலும் ஒரு எண்ணும் ஒரு எழுத்தும் எண் பிறழச் சொல்லப்படும். இறுதியில் எண்ணையும் எழுத்தையும் மனதில் பதித்து முழுப்பாடலையும் சொல்ல வேண்டும். இதை செய்து காட்டுவதாக பிள்ளை சொன்னார்.
மறுநாள் பிற்பகல் இந்த கண்டப்பத்திரிகையை செய்வதாக ஏற்பாடு. நம் முஸ்லீம் தமிழறிஞர் அவரே ஒரு வெண்பாவைத் தேர்ந்தெடுத்தார். முழு வெண்பாவை இந்த பரீட்சைக்கு நடுவராக இருந்த பொது நண்பர் குப்புசாமி நாயுடுவிடம் கொடுத்தார். பின்னர் வெண்பாவின் ஒவ்வொரு எழுத்துக்களையும் துண்டு தூண்டாக வெட்டி எண்ணிட்டு வைத்தார். அதனை எண் பிறழ பிள்ளையவர்களிடம் சொன்னார். ஒவ்வொரு எழுத்தையும் மாற்றி எண்ணிட்டு சொன்ன பின்னர் பிள்ளையவர்கள் முழுப்பாட்டையும் சொன்னார். நம் தமிழறிஞர் தாம் அவதானம் பொய் என சொன்னமைக்கு மன்னிப்பு கோரினார். அவதானக் கலையில் அவருக்கு ஒரு ஆர்வம் பிறந்தது.
விரைவில் கடும் பயிற்சியுடன் அவருக்கு ஏற்கனவே இருந்த தமிழ் அறிவும் இணைய அவர் சோடச-அவதான நிகழ்ச்சி ஒன்றை தம் சொந்த ஊரில் வெற்றிகரமாக அரங்கேற்றினார். இந்த முஸ்லீம் தமிழறிஞர் யார் என ஊகித்திருப்பீர்கள். செய்குத்தம்பி பாவலர்தான் அவர்.
குமரி மாவட்டத்தில் அப்போது ஒரு இஸ்லாமிய ஞானி தங்கி இருந்தார். அவர் பெயர் ‘ஹசரத் செய்யிது முகமது அபுபக்கனால் ஐதுநூல் தங்கல்’. அவர் முகமதுவின் வழித் தோன்றல் என கருதப்படுபவர். அவர் தலைமையில் இடலாக்குடி அரிப்புத் தெருப்பள்ளியில் அவதானக்கலை அரங்கேற்றம் நடந்தது.
அவதான நிகழ்ச்சியின் போது இறைநாமத்தை இடையறாது உச்சரிக்க வேண்டும். பாவலர் கூறும் இறைநாமம் சிலேடை அழகுடன் திகழும்: ‘மெய்ஞானநாதா மெய்ஞான நா தா’ என்று அவதானத்தின் போது கூறுவார் அவர். சோடச அவதானம் என்பதில் இருப்பவை 1. இறைநாம உச்சரிப்பு 2. கைப்பணி [தொடர்ந்து இலாடச்சங்கிலியை பூட்டி கழட்டியபடி இருக்க வேண்டும்.] 3. அவதானம் நிகழும் போது தொடர்ந்து ஒரு பொருள் குறித்து உரையாட வேண்டும் 4. சுவைப்புலனறிவு: பல நீர்நிலைகளிலிருந்து கொணர்ந்த நீர்கள் அந்நீர்நிலைகள் பெயருடன் அளிக்கப்படும். பின்னர் பெயரறியாமல் அவற்றில் ஒரு நீர் பருக அளிக்கப்படும் அதை பருகி அந்த நீர்நிலை பெயரைச் சொல்ல வேண்டும். 5. இலக்கிய வினாக்களுக்கு பதிலளித்தல், 6. இலக்கண வினாக்களை அவையோர் வினவுவர் அதற்கு பதிலளிக்க வேண்டும். 7.வெண்பா கேட்டுக் கூறுதல் 8. கண்டப்பத்திரிகை: ஏற்கனவே மேலே இதை விளக்கியிருக்கிறோம். 9.கவி பாடுதல் 10. வெவ்வேறு நிறை கொண்ட பாத்திரங்கள் எழுப்பும் ஒலியிலிருந்து நிறையை கூறுதல். 11. நெல் எறிதல்: 12. கல் எறிதல் முதுகில் எறியப்படும் நெல்லையை சிறுகல்லையும் எண்ணி இறுதியில் எத்தனை நெல் எத்தனை கல் என கூறுதல்.14. கண்டத்தொகை. 15. கிழமை கூறுதல் (ஆயிரம் ஆண்டுகளுக்கு எந்த தேதிக்கும் கிழமை சொல்லுதல்).15. நூறு சொல்லுதல் 16. சீட்டாடுதல்.
பின்னர் மகாவித்துவான் இராமசாமி நாயுடு அவர்கள் செய்குத்தம்பி பாவலரிடம் சோடசாவதானம் பலரும் செய்வதுதான் எனவே சதாவதானம் செய்ய வேண்டும் என்கிறார்.  அதாவது ஒரே நேரத்தில் நூறு நுண்ணோக்கு செயல்களைச் செய்ய வேண்டும்.  இவை மேற்கூறிய 16 செயல்களின் மேலதிக செயல்களாக இருக்கும். உதாரணமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு எந்த கிழமை என்பதுடன் எந்த உடுநாள் (திதி) என்பதையும் கூறவேண்டும்; மாதம், தேதி, கிழமை ஆகியவற்றைக் கூற,  அதற்கு உரிய ஆண்டைக் கூற வேண்டும் – இவை போன்ற செயல்கள்.
சதாவதானம் பிரபவ ஆண்டு மாசித்திங்கள் 27 ஆம் நாள் சென்னையில் நடைபெற்றது. இது ஒரு வேடிக்கை விநோத நிகழ்ச்சி அல்ல. அத்தகைய எண்ணத்துடன் அதைக் காண வருவோர் ஒரு சிறுபாகமே. அவையோர் முழுக்க தத்தமது துறைகளில் வல்லுனர்களாக இருப்பர். அத்துடன் நடுவர் மன்றம் அன்றைய அறிவுலகின் மிக முக்கிய பிரமுகர்களாக இருந்தனர். காஞ்சி மகா வித்துவான் ராமசாமி நாயுடு, தஞ்சாவூர் சதாவதானி சுப்ரமணிய ஐயர், பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் திருவேங்கடசாமி நாயுடு,புலவர்  கா.நமசிவாய முதலியார், இந்து-சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் ஜி.சுப்ரமணிய ஐயர், திரு.வி.கலியாண சுந்தரனார், அன்று சட்டக்கல்லூரியில் இருந்த டி.கே.சிதம்பரநாத முதலியார் ஆகியோர் அங்கிருந்தனர்.
இந்த அவதான நிகழ்ச்சியில் ஒரு பிரிட்டிஷ் பிரமுகரும் கலந்து கொண்டதாக தெரிகிறது. மேலை நாட்டு மனோதத்துவ சாத்திரங்கள் மனதின் திறன் குறித்துக் கொண்டுள்ள கோட்பாடுகளுக்கு இந்நிகழ்வு சவால் விடுத்ததாக அவர் கூறினாராம். அவதான நிக்ழ்ச்சியின் முடிவில் செய்கு தம்பி பாவலருக்கு, தஞ்சை சதாவதானி சுப்பிரமணிய ஐயர் ‘மகாமதி சதாவதானி’ எனும் பட்டம் வழங்கினார். ஆதி சேடனும் ஐந்திரம் கற்ற தொல்காப்பியரும் அவதானத்தில் சிறந்தவர்கள் என்பது மரபுவழி ஐதீகம். இம்மரபில் வந்தவராக செய்குத்தம்பி பாவலர் புகழப்பட்டார்.
as
இவை அனைத்திலும் உறைந்திருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் நம் மரபில் இந்த அவதானக்கலை என்பது வெறும் கலை மட்டுமல்ல. அதைச் செய்வோர் பல நுண்ணறிவுத்திறன்களை எந்த அளவுக்கு மனிதர் மேலெடுத்து செல்ல முடியுமென்பதற்கான உயரதிக எல்லையை நமக்குக் காட்டும் ஒரு முயற்சியாகவும் சவாலாகவும் அதை வைத்துள்ளனர். சில விஷயங்களை நாம் கவனிக்கலாம். இந்த அவதானக்கலை உறைந்து போன ஒன்றாக இல்லை. புதிய விஷயங்கள் அதில் இணைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக சீட்டாடுதல், ஆங்கில ஆண்டு தேதிகளுக்கு கிழமை சொல்லுதல் – ஆகியவை இந்த அவதானக்கலை தன் சூழலிலிருந்து நுண்ணோக்குத் தேர்வுகளை உருவாக்கிக் கொண்டது என்பதற்கான எடுத்துக் காட்டு.
ஒரு காலகட்டத்தில் ஊருக்கு ஊர் சதாவதானிகளும் சோடசாவதானிகளும் இருந்த நிலை துரதிர்ஷ்டவசமாக மாறி,  இவர்கள் ஒரு அரிய மானுட வர்க்கமாகி விட்டார்கள். இந்த அவதானக் கலைகளை பயில எவ்விதமான பயிற்சிகள் இருந்தன நமக்கு தெரியாது. இன்று நாம் எவ்வித அறிவு சார்ந்த அல்லது உணர்வு சார்ந்த செயல்களில் ஈடுபடும் போது நம் மூளையில் உள்ள நரம்பியக்க செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை அறியும் கருவிகள் உள்ளன. உதாரணமாக ஸ்பெக்ட் (SPECT – Single-photon emission computed tomography). ஒருவர் அஷ்டாவதானமோ தசாவதானமோ செய்யும் போது அவரது மூளை நியூரானிய இயக்கங்கள் செயல்படும் விதம் இவ்வித நவீன கருவிகளால் அறியப்பட்டால் மானுட மனதின் அதி ஆழ செயல்பாடுகள் குறித்த ஒரு சித்திரம் நமக்கு உருவாகலாம்.
அவதான நிகழ்வுகளின் போது ஏன் தொடர் இறைநாம உச்சரிப்பு ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது? ஒருவித மாற்று பிரக்ஞை தளத்திற்கு (altered state of consciousness) அவதானியை அழைத்து செல்லவா? அதன் மூலம் அவரது நுண்ணறிவுத் திறன்கள் அதிகரிக்கின்றனவா? அப்படி இருக்கலாம் என கருதத்தக்க ஒரு கருத்தை செய்குத்தம்பி பாவலரே சொல்லியிருக்கிறார்: “அவதானத்திற்கென்று மேடை ஏறிவிட்டால் ஒரு தனி உணர்வு உடலை எழுப்பும்; உள்ளத்தை மலரச்செய்யும்; அறிவை ஒளிரச் செய்யும்.; பிறகே என் வாயினின்றும் சொற்கள் வெளிவரும். அவ்வாற்றல் எங்கிருந்து வருகிறது என்று சொல்ல இயலாது.”
இவ்வாறு பன்மை நுண்ணறிவு மேலோங்கிய ஒரு மாற்றுப் பிரக்ஞை தளத்துக்கு செல்லும் அறிவியல் ஒன்று நம் கல்வி மரபில் பரவலாக இருந்திருக்கிறதா? அதன் நிகழ் கலை வெளிப்பாடுதான் அவதான நிகழ்ச்சியா? இன்று நம்மிடம் அருகி மறைந்து கொண்டிருக்கும் ஒரு முக்கிய விஷயம் இது. தன்னுணர்வு (consciousness) மேலும் நம் நரம்பியக்க- மூளை செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகள் அவதானக்கலை செய்யப்படும் விதத்தை நுணுகி ஆராய்வதன் மூலம் மானுடத்தின் அக சாத்தியங்கள் பலவற்றை கண்டடையலாம். மூளை-மனம் சார்ந்த நோய்கள் பலவற்றுக்கு தீர்வுகளை இக்கலையும் அதற்கான பயிற்சியும் தம்மில் கொண்டிருக்கலாம். அதை அறிவியல் பூர்வமாகக் கண்டடைவது நம் கடமையாக அமைகிறது.
பயன்படுத்தப்பட்ட நூல்: வித்துவான் சி.குமரேச பிள்ளை, அவதானக் கலைஞர், கலைமகள் காரியாலயம், 1968
பின்குறிப்பு:  செய்குத் தம்பி பாவலரின் விரிவான வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் இந்நூல் ஒரு சைவ சித்தாந்த அறிஞரால் எழுதப்பட்டது. அந்நாட்களில் இந்நூல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு துணைப்பாட நூலாக வைக்கப்பட்டிருந்தது. இன்றைய துணைப்பாடநூல்களை நோக்கும் போது நாம் கல்வித் தரத்தில் கீழே விழுந்த நிலையும் புரிகிறது. இந்நூலில் செய்குத்தம்பி பாவலரின் அழ்ந்த தத்துவ புலமை, நம் பண்பாடு குறித்து அவருக்கு இருந்த அறிவு, அவரது சமய சமரசத்தன்மை ஆகியவை வெளிக் கொணரப் பட்டுள்ளன. அத்துடன் அவதானக்கலைக் குறித்த  நல்ல ஒரு அறிமுகமாகவும் அமைந்திருக்கிறது.

3 Replies to “அவதானத்தின் அறிவியலை அறிய வேண்டாமா?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.