கருவிகளின் இணையம் – விவசாய உலகம் – பகுதி 15

உலகின் மிக முக்கிய, பழையத் தொழிலான விவசாயத்திற்கும், கருவி இணைய முயற்சிகளுக்கும் என்ன தொடர்பு? ஒழுங்காக நடந்து கொண்டிருக்கும் விவசாயத்தையும் இந்த கணினி ஆசாமிகள் கெடுத்து விடுவார்களோ என்று பல கேள்விகள் உங்களுள் எழலாம். அல்லது மேற்குலக விவசாய விஷயங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்குப் பயன்படாத விஷயம் என்றும் வாதம் செய்யலாம்.

இந்தத் துறையை ஆராய்ச்சி செய்யத் தொடங்கும் முன், என்னுடைய பார்வையும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது. ஆனால், இந்தத் துறை சார்ந்த சில பிரச்னைகள், சற்று அசைபோட வைத்தது. எப்படிப்பட்டப் பிரச்னைகள்?

2050 –க்குள், உலகின் ஜனத்தொகை 980 கோடியைத் தொட்டுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பயிரிட இருக்கும் நிலம் என்னவோ இன்றைய நிலையை விடக் குறைவாகவே இருக்கும். இந்தியா போன்ற ஏராளமான மக்கட்தொகை கொண்ட சிறு நாடுகளின் பாடு திண்டாட்டம்தான் – புதிய விவசாய முயற்சிகள் ஒன்றே வழி!

உலகின் மிகப் பெரிய நாடுகள் (ரஷ்யா, கனடா, அமெரிக்கா, பிரேஸில், ஆஸ்த்ரேலியா) உணவு உற்பத்தியை, இன்றைய நிலையை விடக் கூட்டினால்தான் மற்ற உலக நாடுகளுக்கு உணவு விஷயத்தில் உதவ முடியும்.

உலகின் தண்ணீர் வளங்கள் குறைந்த வண்ணம் உள்ளன. நம்முடைய அன்றாடத் தேவைகள், உற்பத்தி மற்றும் பயிரிடல் தேவைகளுக்கு இருக்கும் தண்ணீர் வளத்தை திறமையாக பயன்படுத்துவது ஒன்றே வழி.

உலகின் 980 கோடி மக்கட்தொகைக்கு தேவையான உணவு பயிர் மட்டும் அல்ல. கால்நடை பராமரிப்பு, உற்பத்தி ஏராளமாக பெருக்க வேண்டும்.

மேலே சொன்ன ஒவ்வொரு விஷயமும் (2-வது புள்ளியைத் தவிர) மேற்குலகப் பிரச்னைகள் அல்ல. மாறாக, பூதாகாரமான இந்தியப் பிரச்னைகள். ஒரு காலத்தில், உரம் மற்றும் எந்திரங்கள் பிரச்னைகளைத் தீர்த்துவிடும் என்று நினைத்தோம். இன்று, மக்கட்தொகை ஏராளமாக அதிகரித்து, இவற்றின் பயனை மேலும் நுண்ணறிவால்தான் இந்தப் பிரச்னைகளை ஓரளவாவது சமாளிக்க முடியும் என்பது மிகவும் தெளிவாகி விட்டது. படிக்கவில்லை, விவசாயத்தை பரம்பரை பரம்பரையாகச் செய்து வருகிறோம் என்ற பல்லவி எல்லாம் சரிப்படாது. கருவிகள் இந்த முயற்சிகளில் பெரிதும் உதவும் என்பதால், பல இந்திய முயற்சிகள் நம்பிக்கையூட்டுகின்றன.

இந்தப் பகுதியை நாம் சில சிறு உப பகுதிகளாகப் பிரித்து அலசுவோம்;

  • நீர் பாசன உதவிக் கருவிகள்
  • பூக்கள் விவசாயத்தில் ரோபோ கருவிகள்
  • எந்திர உதவிக் கருவிகள்
  • விவசாயத் திறன் உயர்த்தும் கருவிகள்
  • கால்நடை திறன் உயர்த்தும் கருவிகள்
  • இந்திய முயற்சிகள்

IOT part15-pic1

 

நீர் பாசன உதவிக் கருவிகள்

விவசாயக் கருவி இணைய முயற்சிகளின் மிகவும் பலனளிக்கும் முயற்சி, நீர்பாசன உணர்விகள். உலகின் பெரும்பாலான வயல்களில் உள்ளப் பெரும் பிரச்னை, தண்ணீரைப் பயன்படுத்தும் முறைகள். பொதுவாக, காலையில் இத்தனை மணி நேர நீர்ப் பாய்ச்சல் என்ற குத்து மதிப்பான அளவிலேயே உலகின் பெரும்பாலான வயல்கள் இயங்கி வந்துள்ளன, இன்றும் இயங்கி வருகின்றன.

நிலத்தின் தன்மைக்கேற்ப பயிருக்கு நீர் தேவைப்படுகிறது. அவ்வப்பொழுது செய்யப்படும் மண் பரிசோதனை மூலம் செய்யப்படும் பரிந்துரைகள் ஓரளவிற்கே பயனளிக்கின்றன. அத்துடன், புவி சூடேற்றத்தினால், நம்முடைய பருவ மழை மற்றும் பருவங்களின் நீளம் எல்லாம் மாறி வருகிறது. பழைய முறைகள் அத்தனைப் பயனளிப்பதில்லை. அதாவது, பயிரிடும் மண்ணின் தன்மை மாறி வருகிறது.

மண்ணின் ஈரப் பசையை அளக்கும் உணர்வி இந்த நிலமையை மாற்றும் சக்தி கொண்டது. ஈரப் பசை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைவாக இருந்தால், நீர் பாசன அமைப்பைத் திறந்து விடும் திறமை, வயலின் பல பகுதிகளில் பதிக்கப்பட்ட உணர்விகள் செய்ய வல்லவை. இந்த உணர்விகள் வயலின் கணினியுடன் இணைக்கப்பட்டால், அல்லது ஒரு திறன்பேசியில் உள்ள பயன்பாட்டோடு இணைக்கப்பட்டால், நீர் பாசன மோட்டார்களை நாளின் பல நேரங்களில், தேவையான அளவு திறந்து விட்டு மூடலாம். பூக்கள், மற்றும் பல பழங்கள் விவசாயத்தில், இவ்வகை நீர் தெளிப்பான்கள் நீரை சேமிப்பதுடன், அளவாக, தேவையான பொழுது தெளித்து, செடிகளை வாட விடாமல் பார்த்துக் கொள்கிறது. பொதுவாக, இந்த உணர்விகள் நீர்ப்பசை மற்றும் வெப்பம் இரண்டையும் அளக்கும் திறம் கொண்டது. இன்றுள்ள சில உணர்விகள் மண்ணின் ரசாயன அமைப்பையே அளக்கக் கூடியவை. இவற்றின் அளவுகளால், எப்பொழுது, எந்த உரம் சேர்க்க வேண்டும் என்ற முடிவுகளை எளிதில் விஞ்ஞான பூர்வமாக செய்யலாம்.

விவசாயத்தில் பூச்சிகள் இன்னொரு பெரிய பிரச்னை. பழத்தோட்டங்களில், பூச்சிகளால், பயிரே பயனற்று போகும் வாய்ப்புள்ளது. அங்கங்கே நிறுவப்பட்ட சின்ன பூச்சிகளை படமெடுக்கும் துல்லிய காமிராக்கள், பூச்சி முட்டையிலிருந்து, பூச்சியாகும்வரை மாபெரும் தோட்டம் முழுவதும் அலசி, நிலமை மோசமாவதற்கு முன் சொல்லிவிடுகிறது.

மருந்து தெளிக்க எத்தனை நாட்கள் உள்ளன என்று தோட்டத்தின் நிலமைக்கேற்ப சொல்லி விடுகிறது.

பாதுகாக்கப்பட்ட பயிரிடும் நிலையங்களில் (green houses) வளர்க்கப்படும் செடிகளின் ஊட்டச்சத்து பற்றி அறிந்து அதற்கேற்ப செயல்படுவது அவசியம். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சிறிய நிறுவனம், இவ்வகை நிலையங்களுக்கு, ஒரு நடமாடும் ஆராய்ச்சிசாலையையே கருவிகளின் உதவியுடன் உருவாக்கியுள்ளது, செடிகளின் நுண்ணூட்ட விவரங்களை உடனே திறன்பேசிக்கு அனுப்பி, அங்குள்ள விவசாயிக்கு, முக்கிய முடிவுகள் எடுக்க உதவுகிறது.

சரியாகப் பயன்படுத்தினால், வருடத்திற்கு, 50,000 கோடி கேலன் தண்ணீர் கருவி இணைய பயன்பாடுகளால், உலகெங்கும் சேமிக்க முடியும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

பூக்கள் விவசாயத்தில் ரோபோ கருவிகள்

பூக்கள், ஒரு மிகப் பெரிய விவசாயத் தொழில். வட அமெரிக்காவில், தோட்டக் கடைகளுக்கு பல கோடி டாலர்கள் விற்பனை ஒவ்வொரு வருடமும் நடை பெருகிறது. அழகாக, சில குறிப்பிட்ட அளவுகளில், தொட்டிகளில் பூச்செடிகளை பூ வளர்க்கும் பண்ணைகள் இந்த தோட்டக் கடைகளுக்குக் கொண்டு சேர்ப்பார்கள். இந்தத் தொழிலில் பெரும்பாலும், மனித உழைப்பையே நம்பி இருந்தது. பல்லாயிரம் பூந்தொட்டிகளை வகை வகையாகப் பிரித்து, லாரிகளில் ஏற்றி, கடைகளுக்கு அனுப்புவது ஒரு அலுப்பூட்டும் செயல். அமேஸான் நிறுவனத்தில் பயன்படும் கீவா ரோபோக்கள் போல, இன்று பல பூந்தோட்டப் பண்ணைகள், ரோபோக்களைப் பயன் படுத்தத் தொடங்கி விட்டன.

இந்த ரோபோக்களுக்கு கண்கள், உயரம், அகலம், தூரத்தை அளவிடும் திறன் எல்லாமே உண்டு. அவ்வப்பொழுது மின்னேற்றம் செய்து கொண்டு, அழகாக செயல்படும் மின்தொழிலாளிகளை இங்கே பார்க்கலாம்:

இதே போல, ரோபோக்கள், சில அமெரிக்கப் பண்ணைகளில், பல்வேறு அலுப்பு தட்டும் வேலைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். பேக் செய்வது பயிரை வெட்டுவது போன்ற வேலைகள், அலுக்காமல் செய்யும் ரோபோக்கள்:

எந்திர உதவிக் கருவிகள்
சில அமெரிக்க மற்றும் யுரோப்பிய விவசாய எந்திரக் கம்பெனிகள் கருவிகளின் இணையத்தைப் பயன்படுத்தி, தங்களுடைய எந்திரங்களை வாங்கும் விவசாயிகளுக்கு பல்வேறு முறைகளிலும் இணையம் மூலம் ஆலோசனை வழங்குவதோடு, உதவவும் செய்கிறார்கள்.

எந்திரப் பராமரிப்பு ஆலோசனைகள், எந்திரங்களை தானியக்க முறையில் இணையம் மூலம் இயக்கம் விவசாய ஆலோசனைகள், விவசாயிக்கு திறன்பேசி மற்றும் இணையதளத்தில் பயனுறப் பயிற்சியும் அளிக்கிறார்கள்.

இத்தகைய அமெரிக்க அமைப்பு இங்கே:

ஆஸ்திரேலிய முயற்சி இங்கே:

பல பெரிய விவசாய எந்திர தயாரிப்பாளர்கள், தங்களுடைய புதிய தயாரிப்புகளில், இணைய இணைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இதனால், விவசாயிகள் எந்திரப் பராமரிப்பு விஷயங்களில் எளிதாக ஆலோசனைப் பெற முடியும்.

விவசாயத் திறன் உயர்த்தும் கருவிகள்

விவசாயத் திறன் என்பதைப் பலவிதமாக அணுகலாம்.

உலகில் உள்ள எல்லா விவசாயிகளுக்கும் உள்ள பிரச்னை, அவர்களிடம் பயிரிட இருக்கும் நிலத்தின் பரப்பளவு. இந்த நிலத்தில், விவசாயத் திறனை எப்படி உயர்த்த முடியும்?

  • பருவநிலை மாற மாற, அதன்படி பயிரிடல், உரம், நீர்பாசனம் என்ற எல்லா உள்ளீடுகளையும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • அன்றாட விவசாய முடிவுகளைச் சரியாக எடுக்க, பண்ணையில் முழுவதும் என்ன நடக்கிறது என்ற விவரம் தரவுகளை வைத்து முடிவெடுத்தல் வேண்டும்.
  • பூச்சிகள் மற்றும் பருவ மழை பற்றிய விவரம் தோராயமாக அல்லாமல், துல்லியமாக ஜி,பி,எஸ். கொண்டு முடிவெடுக்க வேண்டும்

இது துல்லிய விவசாயம் என்று அழைக்கப்படுகிறது. பெரிய விவசாயப் பண்ணைகளில், கையளவு விமானம் மூலமாக, துல்லியமாக பல அளவுகளையும் அளந்து வரும் விசேட சேவை வந்துவிட்டது.

காமிரா மூலம் முழு பண்ணையையும் சென்டிமீட்டர் விடாமல் படம் பிடிப்பதுடன், மண்ணில் உள்ள பல வகை ரசாயன அளவுகளையும் இந்த விமானத்தில் உள்ள உணர்விகள் அளந்து விடுகின்றன. இந்த தரவுகள் கணினிக்கு அல்லது மேக வழங்கிகளுக்கு மாற்றி, அங்குள்ள நிரல்கள் நம் உடலுக்கு ரத்த பரிசோதனை போல அனைத்தையும் உடனே சொல்லி விடுகிறது. இதன் உதவியுடன், எந்தப் பகுதியில் எந்த பயிர், அல்லது, எந்தப் பகுதிக்கு அதிக உரம் தேவை என்பது போன்ற முக்கிய முடிவுகளை விவசாயி எடுக்கலாம்.

பூச்சிகள் வரும் முன்பு, அவை அரிக்கப்போகும் பயிரில் முட்டையிடும். மேலே சொன்ன கையளவு விமானங்கள், இவ்வகை முட்டைகள் எங்கு பண்ணையில் எத்தனை உள்ளன என்று கூட சொல்லிவிடும். கண்ணுக்கு தெரியாத முட்டைகளைக் கூட துல்லியமாக படமெடுத்து செய்தியாக விவசாயிக்கு காட்டும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

கால்நடை திறன் உயர்த்தும் கருவிகள்

உலகெங்கும் பண்ணைகளில் கால்நடைகள் ஒரு மாற்று வருமான வழியாகப் பயன்படுகிறது. ஆனால், இதுவரை இந்தத் துறையில் அதிகம் தொழில்நுட்ப ஊடுருவல் இல்லை என்பது உணமை, அதிக பட்ச ஊடுருவல், பால் பண்ணைகளில் மட்டுமே இருந்தது. அதுவும் பால் கறப்பதற்கு, மற்றும் பதப்படுத்துவதற்கு எந்திரங்கள் பல நாடுகளிலும் பயனில் உள்ளன. சிலெ பெரும் கால்நடைப் பண்ணைகள், மேல்நாடுகளில் RFID முறையில் கால்நடைகளை ஒரு பொருளைப் போல பதிவு செய்து கண்காணித்து வருகிறார்கள். இது ஒரு மிகச் சிறிய பயன்பாடு என்று சொல்ல வேண்டும்.
பண்ணைகளில் உள்ள ஒரு பிரச்னை, கால்நடைகளுக்கு கருவூட்டல். இந்தத் துறையில் செயற்கை கருவூட்டல் முறைகள் இருந்த பொழுதும், இயற்கையோடு சேர்ந்தே இவை செயல்பட வேண்டும். மாடு, கருத்தரிக்க, ஒரு தக்க சமயத்தில்தான் இந்த செயற்கை முறைகள் பயனளிக்கும். விவசாயிக்கு, தன்னுடைய கால்நடைப் பெருக்கம் மிக முக்கியம். ஆனால், செயற்கை கருவூட்டல் முறைகள் ஒரு குறிப்பிட்ட சின்ன கால இடைவெளிக்குள் (3 முதல் 4 மணி நேரம்) நடக்க வேண்டும். பல நூறு கால்நடைகள் இருக்கும் பண்ணையில் ஒவ்வொரு கால்நடையையும் கண்காணிப்பது இயலாத செயல்.

இங்குதான் கருவிகள் உதவுகின்றன. மாட்டில் காலில் பொருத்தப்பட்ட கருவி, மனித அணியப்படும் கருவிகள் போல, மாட்டின் நடை எண்ணிக்கையை அளக்கும். கருவூட்டல் காலத்தில் மாடுகள் வழக்கத்திற்கு அதிகமாக நடக்கும். மேலும் இவற்றில் உடல் வெப்பம் வழக்கத்திற்கு அதிகமாக இருக்கும். காலில் பொருத்தப்பட்ட கருவி, விவசாயியின் திறன்பேசிக்கு சரியான கருவூட்டல் நேரத்தை, அதில் உள்ள பயன்பாடு மூலம் சொல்லிவிடும். இதனால், விவசாயியின் ஒரு பெரும் பிரச்னையான கால்நடைப் பெருக்கம் எளிதாகத் தீர்க்கப்படுகிறது. இந்த கருவி இணைய தொழில்நுட்பம் இன்று சோதனை முறை பயனில் உள்ளது.

இந்திய முயற்சிகள்

இந்திய விவசாய ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆரம்ப முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும், இந்திய முயற்சிகள், மண்ணின் ஈரப்பதம், மற்றும் ரசாயன அமைப்பை கண்காணிக்கும் முயற்சிகளாக இருக்கின்றன. எந்திர முயற்சிகள் அதிகமில்லாததற்கு காரணம், நம் சமூகத்தின் தானியக்க எதிர்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவிலும், பல பகுதிகளில், விவசாய உழைப்பாளிகள் தட்டுப்பாடு இருப்பதும் உண்மை. அதே போல, இந்திய முயற்சிகளில், கால்நடைக் கருவி இணைய முயற்சிகள், இதுவரை என்னுடைய ஆராய்ச்சியில் சிக்கவில்லை.

இங்கே உள்ள சுட்டி, இந்திய முயற்சி ஒன்றைக் காட்டுகிறது. படு டெக்னிகலான காட்சியளிப்பு உங்களை பயமுறுத்தினால் நான் பொறுப்பல்ல.

பலவகை விவசாயக் கருவி இணைய முயற்சிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் அலசினோம். இன்னொரு முக்கியமான முயற்சி இந்தியா போன்ற நாடுகள் அவசியம் முயல வேண்டும். பயிர் என்றவுடன், ஏராளமான நிலம் என்பதுதான் நம்முடைய மனதில் தோன்றும் ஒரு விஷயம் – பல பழம், காய்கறிகளை, செங்குத்தான அமைப்பில் வளக்கலாம். அதாவது, பல மாடிக் கட்டிடம் போல, பல அடுக்குப் பண்ணைகள் இந்தியா போன்ற நாடுகளுக்குத் தேவை. எல்லா பயிர்களையும் இப்படி வளர்க்க இயலாது. ஆனால், பல காய்கறிகள், பூக்கள் மற்றும் பழங்களை இப்படி வளர்க்கலாம். கருவிகள் துணையோடு, இதை மேலும் திறனோடு செய்யலாம். பூச்சிகள், உரம், மற்றும் நீர்பாசனம் எல்லாவற்றையும் செங்குத்தான அடுக்குப் பண்ணையில் கண்காணித்து செயல்படுவது சற்று சிக்கலானாலும், செய்ய முடியும்.

இக்கட்டுரையில் சில பகுதிகள் பணக்கார நாடுகளின் விஷயங்களாகத் தோன்றினாலும், சில முக்கிய விவசாய அணுகுமுறைகள் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.

  • இருக்கும் நிலத்தை திறமையாகப் பயன்படுத்தல்
  • இருக்கும் நீரைத் திறமையாகப் பயன்படுத்தல்
  • வளர்க்கும் பயிரை வாட விடாமல் காப்பது
  • பூச்சிகளிடமிருந்து பயிரைத் தக்க நேரத்தில் காப்பது
  • விவசாயத் திறனை அதிகரித்தல்

இவை எல்லா நாடுகளும் செய்தே ஆக வேண்டியக் கட்டாயத்தில் உள்ளன. இணையமும் கருவிகளும், இந்த முக்கிய ஐந்து குறிக்கோள்களை ஒவ்வொரு நாட்டிற்கும், வெவ்வேறு விதத்தில் உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு தொடர்பியல் விஷயமாக ஆரம்பித்த இணையத் தொழில்நுட்பம், உணவு உற்பத்தியில் உதவினால், அதை விடப் பெரிய சாதனை கருவி இணையத் துறைக்கு இருக்க முடியாது.

இந்தப் பகுதி கருவி இணைய தொழில்நுட்ப பயன்பாடுகளின் மிக முக்கியப் பகுதி. விவசாய அமைப்புகள் உலகெங்கும் இதனால் பயன்பெற, இவ்வகை தொழில்நுட்பங்களின் விலை மட்டும் அல்லாது, சிக்கலும் குறைய வேண்டும். அதிக படிப்பறிவில்லாத விவசாயிகள் பயன்படுத்தும் அளவிற்கு எளிமையாக்கப்பட வேண்டிய நுட்பம் இது. உலகில் எங்கு விவசாயம் செய்தாலும் இதனால் பயன்பெற முடியும். அரசாங்கங்கள், இவ்வகை தொழில்நுட்ப செலவுகளுக்கு, விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் இது போன்ற ஊக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், இந்திய விவசாயிகள் பயன் பெறுவார்கள். ஏனென்றால், இந்தியாவில் தொழில்நுட்பத் திறனுக்கு குறை ஏதும் இல்லை. விவசாயத்திற்கு இவ்வகை ஊக்க முயற்சிகளை அரசாங்கங்கள் செய்தாலே போதும். இன்னொரு செல்பேசி புரட்சி போல இந்திய விவசாயமும் முன்னேறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.