தான்ஸானியாவின் தேர்தல்

tanzania

அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி, தான்ஸானியாவில் உள்ள நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே, எல்லோரும் சொன்னது – தான்ஸானியாவின் வரலாற்றையே புரட்டிப் போடக் கூடிய தேர்தல் இம்மாதம் 26 ஆம் தேதி நடக்கிறது. முதல் முறையாக  ஆளும் chama Cha Mapinduzi (CCM) தோல்வியைச் சந்திக்கலாம். எதிர்க் கட்சியான  chama Cha Demokrasia Na Maendeleo  என்னும் Chadema வெல்லும் வாய்ப்புகள் இருக்கிறது எனச் சொல்லப் பட்டது. எதிர்க்கட்சி வென்றாலும், தோற்றாலும், வன்முறை வெடிக்கும் என எதிர்பார்க்கப் பட்டது.
ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்குக் கடற்கரையோரத்தில் இருக்கும் தான்ஸானியா கொஞ்சம் வித்தியாசமான நாடு. இதன் தந்தை ஜூலியஸ் நைரேரே இந்தியாவுக்கு அறிமுகமானவர். கிட்டத் தட்ட 5 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு குட்டி நாடு.  பெரும்பாலும் வேளாண்மைப் பொருளாதாரமாக இருந்த இந்நாட்டின் தென்பகுதியில், கடந்த பத்தாண்டுகளில், நிலக்கரி, இரும்பு மற்றும் கடலில் பெருமளவு இயற்கை எரிவாயு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.  உடனே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் மூக்கு வேர்த்து, தான்ஸானியாவுடன் அன்பு பாராட்டத் துவங்கியிருக்கிறார்கள்.  இந்தியா இன்னும் குறட்டை விட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
சிசிஎம் ன் அதிகார வேட்பாளர்,  ஜான் பொம்பே ஜோஸஃப் மகுஃபுலி என்னும் ஜான் மகுஃபுலியும்,  சிசிம் ல் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படாத எட்வர்ட் லோவாஸா (இவர் சடேமா என்னும் எதிர்க் கட்சிக் கூட்டணிக்கு கடைசி நிமிடத்தில் தாவினார்) வும் போட்டியிட்டார்கள். ஊடகங்கள் அதிகம் இல்லாததால், இக்கட்டுரை எழுதும் எனக்கு, தேர்தல் பிரச்சாரத்தின் அளவுகள் புரியவில்லை.  அதனால், குழப்பமாக இருந்தது. பொருளாதாரத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள்  பெரும்பாலும் சிசிம் ஆதரவாளார்களாகவும், கொஞ்சம் படித்த, இளைஞர்கள் சடேமாவின் ஆதரவாளர்களாகவும் தென்பட்டார்கள்.  ம்வான்ஸா என்னும் ஊரில் பயணம் செய்து கொண்டிருந்த போது, நாட்டின் மிக உள்ளடங்கிய கிராமங்களில் இன்னும் நைரேரே ஆட்சி செய்து கொண்டிருப்பதாக நம்பும் வயதானவர்கள் இருக்கிறார்கள் என நண்பர் ஒருவர் சொன்னார்.. எனக்கு 60 களின் இந்தியா நினைவுக்கு வந்தது.. கொஞ்சம் மொபைல் போன்ற அடிப்படை வசதிகள் இருப்பதால், சற்று பிந்திய கால இந்தியா என மதிப்பிடலாம்.
ஒரு நாள் எனது நிறுவனத்தின் தலைவர் அழைத்தார். அவர் தான்ஸானியாவில் வாழும் மூன்றாம் தலைமுறை குஜராத்தி. என்றால் கோபித்துக் கொள்வார். சௌராஷ்ட்ரர்.  தேர்தல் நிகழ்வுகள் கவலையூட்டுகின்றன. எனவே, மனிதவள மேம்பாட்டுத் துறையை அழைத்து, அனவருக்கும் சம்பளத்தை 20 தேதியே கொடுத்து விடு என்று சொன்னார். அதை நீயே அவர்களை அழைத்துச் சொல்லிவிடு என்றார். முதன் முறையாக எனது நிறுவனத்தில் பணிபுரியும் உழைப்பாளிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கப் போகிறேன். கொஞ்சம் பதட்டமாக இருந்தது.  எனக்கு ஸ்வாஹிலி தெரியாததாலும், மிகப் புதிது என்பதாலும், நான் கூட்டத்தைத் தலைமை தாங்க, மிக நீண்ட நாட்களாகப் பணிபுரியும் மூத்த சகா ராஜா ஸ்வாமிநாதன் பேசுவதாக முடிவெடுத்தோம். 20 தேதியே சம்பளம் வழங்கப் படும். அதன் பின்னர், தேர்தல் நடக்கும் வாரத்தில், யாரேனும் அலுவலகம் வர முடியாத நிலை ஏற்பட்டால், ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும், நாங்கள் புரிந்து கொள்வோம் என்றோம். அதற்கு அவர்களின் முகத்தில் நிம்மதியும் மகிழ்வும் தெரிந்தது. கிபாஸா என்னும் மேலாளர் எழுந்து, ”நாங்கள் நிர்வாகத்துக்கு மிகவும் நன்றி சொல்கிறோம்” என்றார். இது எனக்குப் புதிது.
அந்த ஞாயிறு தேர்தலின் போதே வன்முறை வெடிக்கும் என்றார்கள். மாலை வரை ஒன்றும் நடக்கவில்லை. கை பேசியில் எல்லோருமே இதை உறுதி செய்தார்கள். பின்னர் திங்கள் முதல் வாக்கு எண்ணிக்கைகள் துவங்கும். திங்கள் மாலையிலிருந்து வன்முறை துவங்கலாம் என்றார்கள். அலுவலகத்தில் மிகவும் பதட்டத்துடன் காத்திருந்தோம். முதல் முடிவுகள் செவ்வாய் மதியவாக்கில் துவங்கியது. சிசிம் முன்னிலை என்றார்கள். மெல்ல மெல்ல முடிவுகள் வரத்துவங்கின.  வியாழன் காலை மகுஃபுலி தான் என்று முடிவாகியது. முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என, லோவாஸா, அன்று மாலை நான்கு மணிக்கு, தலைநகர் டார் எஸ் ஸலாமில் பெரும் பேரணி நடத்துவார் என்றார்கள். அலுவலகத்தில் பலரும் மதிய உணவுக்குப் பின் கிளம்பி விட்டார்கள். நானும் வீட்டுக்குச் சென்றேன். ஊர்வலம் நடக்கவில்லை. மாலை அருகிலுள்ள சாலையில் அமைந்திருந்த பேக்கரிக்குச் சென்றேன். பெரும் ஊர்வலம். சிசிஎம்மின் வெற்றி ஊர்வலம். சிறு சிறு வண்டிகள், பைக்குகள், ஓட்டை கார்கள் என ஊர்வலம் செல்ல.. பலர் – அதிக அளவில் பெண்கள் உற்சாக நடனமிட்டுச் சென்றார்கள். இம்மக்களின் நடனத்தின் போது, அவர்கள் உடல் மொழியில் வெளிப்படும் உற்சாகமும், சக்தியும் நம்மைத் தொற்றிக் கொள்பவை..  பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு காரின் கண்ணாடி பைக்கில் மோதி உடைந்தது. நான் நேரில் கண்ட உச்ச கட்ட வன்முறை இதுதான்.
தான்ஸானியா ஒரு மதச்சார்பில்லா, மக்களாட்சி, சோசலிஸ நாடு. இங்கு தேர்தலில், தலைவரும், எம்பிக்களும் தேர்ந்தெடுக்கப் படும் முறை.  ஒரு புதுமையும் உண்டு. கட்சிகள் வாங்கிய வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், பெண்கள் பின்பு எம்.பிக்களாக நியமிக்கப் படுகிறார்கள்.  வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், கட்சிகள் பெண்களை நியமிக்கின்றன. இவர்கள் தொகுதியில்லா எம்.பிக்கள். 2015 ஆண்டு பாராளுமன்றத்தின், 369 எம்.பிக்களில், 110 எம்.பிக்கள் இவ்வாறு நியமிக்கப் பட்ட பெண் எம்.பிக்கள் ஆவர்.
தான்ஸானியாவில் ஒரு தன்னாட்சி பெற்ற ஒரு தீவு ஸான்ஸிபார். இது அரேபியர்களின் ஆதிக்கத்தில் இருந்து 1963 ல் விடுதலை பெற்றது. 1961 விடுதலை பெற்ற தான்கினிக்கா என்னும் தேசமும், ஸான்ஸிபார் தீவுகளும் இணைந்து, தான்ஸானியாவாக  உருவானது. இங்கே நடந்த தேர்தல் செல்லாது என ஸான்ஸிபார் தேர்தல் ஆணையர் அறிக்கை வெளியிட, அங்கே தகராறுகள் துவங்கின.  ஆனால், கிட்டத் தட்ட இரண்டு கோடி வாக்காளர்கள் உள்ள தான்ஸானியாவில், ஸான்ஸிபாரில் வெறும் 5 லட்சம் ஓட்டுக்கள் மட்டுமே. இன்னும் தேர்தல் முடிவுகள் வெளியிடப் படாமல் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கின்றன. கொஞ்சம் இடியாப்பச் சிக்கல்தான். இதை வைத்து, மொத்த தான்ஸானியாவில் நடந்த தேர்தலே சிக்கல் என்பது போல், சில மேற்கத்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. ஆனால், இத்தேர்தலை மேற்பார்வையிட்ட சர்வதேச தேர்தல் பார்வையாளர் குழு, தான்ஸானியாவில் நடந்த தேர்தல்களிலேயே, மிகவும் நேர்மையான தேர்தல் இது என சான்றளித்துள்ளது. முரண்டு பிடிப்பது போல் அறிக்கைகள் வெளியிட்ட லோவாஸா விரைவிலேயெ மாயாவியானார்.
2010 தேர்தல், முந்தைய அதிபர் கிக்விட்டே, 63 % வாக்குகள் பெற்று, 185 எம்.பிக்களுடன் ஆட்சியமைத்தார். இம்முறை, தோற்கக் கூடும் என எதிர்பார்த்த சிசிஎம், 58% வாக்குகள் பெற்று, 188 எம்.பிக்களுடன் ஜான் மகுஃபுலி ஆட்சியமைத்திருக்கிறார்.  லோவாஸா தனது சுயநலத்துக்காக, கடைசி நிமிடத்தில் கட்சி தாவி, எதிர்க் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டதை, மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள். இதைச் சொல்ல வல்லுநர்கள் தேவையில்லை போலத் தோன்றுகிறது.  இந்தியா, லங்கா போல, மக்களாட்சி இங்கே  இன்னும் முதிர்ச்சியடைவில்லை.

ஜான் மகுஃபுலி – பாயும் புலி!

டார் எஸ் ஸலாம் நகரின் ரமாடா இன்  13 ஆம் மாடியில் அமைந்திருக்கும் திறந்த வெளி உணவகத்தின் ஓரத்தில், அந்தி மயங்கும் கதிரவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, என் தலைவரைக் கேட்டேன். “சார்.. தான்ஸானியாவின் புதிய தலைவர் எப்படி?”  “மோதி மாதிரி” என்றார். அவரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்ததால், இந்தப் பதிலைக் கொஞ்சம் எதிர்பார்த்தேன். குஜ்ராத்தை விட்டு மூன்று தலைமுறைகளானாலும், மண் வாசம் விடுமா? இவருக்கு காந்தி பாயை விட, மோதி பாய் பிடிக்கும் என்றே தோன்றியது.. தொழிலதிபரல்லவா?
புல்டோஸர் என்று மக்களால் அன்போடு அழைக்கப் படும் ஜான் பொம்பே ஜோஸஃப் மகுஃபுலி, உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியான விக்டோரியா ஏரியை ஒட்டிய ம்வான்ஸா பிரதேசத்தில், ஒரு வேளாண் குடியில் பிறந்தவர். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். சில அறிவியல் கட்டுரைகள் அவர் பெயரில் வெளியாகி உள்ளன.  அவற்றைப் பெரும் சாதனை என்று சொல்வதற்கில்லை. முனைவர் பட்டம் பெறத் தேவையான விஷயமாகவும் இருக்கலாம். படிப்புக்கிடையில், இரண்டாண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், ஒரு கூட்டுறவு நிறுவனத்தில் வேதியியலாளராகவும் பணியாற்றினார். அவர் மனைவி, இவர் அதிபராகும் வரை பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றினார் என்பது ஒரு முக்கியமான புள்ளி விவரம். இவர் குழந்தைகள், இன்னும் அரசுப் பள்ளியில் தான் படிக்கிறார்கள் என்பது அதைவிட முக்கியமான புள்ளி விவரம்.
இரண்டு முறைகளாக தலைவர் பணியாற்றி, கொஞ்சம் காசு பார்த்திருப்பாரோ என்னும் ஒரு சந்தேகத்தில் வெளியேறும்  முந்தைய தலைவர் கிக்விட்டே மந்திரி சபையில், பொதுப் பணித் துறை அமைச்சராகப் பணியாற்றினார் மகுஃபுலி.  பொதுப் பணித்துறையில், தான்ஸானியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பெரும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.  பாகமாயோ என்னும் துறைமுக நகரை, சீனர்கள் 11 பில்லியன் டாலர் (72000 கோடி) செலவில் கட்டமைக்கிறார்கள். கிட்டத் தட்ட பாரதம் போல், கடந்த 10 ஆண்டுகளில் 7 சதம் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள தேசம் தான்ஸானியா.  இதில், பொதுப்பணித்துறை மந்திரிப் பதவி, தான்ஸானியாவின் மிகப் பெரும் செல்வந்தராகும் வாய்ப்பு. ஆனால், அதிபர் தேர்தலில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப் பட்டதும், அதற்கான ஈட்டுத் தொகையைக் கட்ட மகுஃபுலியிடம் பணமில்லை என்பது அவரின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு என்கிறார்கள் சிசிஎம் தலைவர்கள்.. உண்மையைக் காலம் தான் சொல்ல வேண்டும்.
மகுஃபுலி தலைவரானதும் நடந்த விஷயங்கள் ஒரு இந்திய மசாலா சினிமாக்களை, குறிப்பாக சங்கரின் முதல்வனை நினைவு படுத்துகின்றன.  அன்று ரமாடா இன் விருந்தில், இன்னீர், சோம, சுரா பானங்களுக்கிடையே, மிகச் சுவையான சம்பவங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
அதில் முதலாவது – தான்ஸானியாவின் அரசு அதிகாரிகள் வீட்டுத் திருமணத்தில், அரசு கார்களும், அரசின் கட்டமைப்பும் உபயோகப்படுத்தப் படுவது எழுதப்படாத விதி. மகுஃபுலி பதவியேற்ற முதல் வாரத்த்தில் ஒரு பெரும் அரசு அதிகாரி வீட்டுத் திருமணம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு ஒரு செய்தி சென்றதாம். “ஐயன்மீர், நீங்கள் செய்து கொண்டிருப்பது விதிகளுக்கு முரணானது.  உங்கள் இல்லத் திருமணத்துக்காக இயங்கும் அரசு மகிழ்வுந்துகளும் மற்ற விதி மீறல்களும் சேர்ந்து அரசுக்கு இத்தனை பில்லியன் ஷில்லிங்குகள் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளன. எனவே, இந்நிகழ்வில் பங்கெடுக்கும் அத்துணை அரசு அதிகாரிகளும் உடனடியாக வேலை நீக்கம் செய்யப் படுகிறார்கள். உடனடியாக அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டி விட்டு, உங்களை ஏன் திரும்பவும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய ஒரு விண்ணப்பம் அனுப்பவும்” என.
அவர் பதவியேற்ற சில நாட்களில் ஒரு கோப்பு அவர் உத்தரவுக்காக வந்தது. 40-45 அதிகாரிகள் காமன்வெல்த் நாடுகளுக்கு அரசு முறைச் சுற்றுப் பயணம் செல்லும் திட்டம்.  அதை உடனடியாக ரத்து செய்தார். வெளிநாட்டுப் பயணம் எனில், அதிகாரிகள் அனைவரும் பிஸினஸ் க்ளாஸில் (முதல் வகுப்புக்கும் மேலே) பயணம் செய்வார்கள். இனி, தலைவர், உப தலைவர், பிரதமர் தவிர அனைவரும் பொது வகுப்பில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்னும் உத்தரவையும் பிறப்பித்தார். பாராளுமன்றம், டார் எஸ் ஸலாமில் இருந்து 450 கி.மீ தொலைவில் உள்ள  டோடோமா என்னும் தலைநகரில் நடைபெறுகிறது. ஆனால், அரசின் முக்கிய அலுவலகங்கள், தலைவரின் அலுவலகம் முதலியவை வர்த்தகத் தலைநகரமான, டார் எஸ் ஸலாமில் உள்ளன. வழக்கமாக, பராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பயணத்தை, அனைத்து அமைச்சர்களும் ஒப்பந்த வானூர்திகளில் செய்வார்கள். இம்முறை, மகுஃபுலி காரில் பயணம் சென்றார். இவரின் சிக்கன நடவடிக்கைகள், ‘மகுஃபுலி என்ன செய்வார்’ (whatwillmagufulido?) என்னும் ட்விட்டர் கொம்பில் மிகப் பிரபலமாக இருக்கின்றன.
டார் எஸ் ஸலாம் ஒரு துறைமுக நகரம். ஏற்றுமதி/ இறக்குமதிக்காக இங்கு வந்த 300 மேற்பட்ட கண்டெயினர்கள் கடந்த சில ஆண்டுகளில், காணாமல் போயின. இது அரசு தரப்பு செய்தி. உண்மை என்னவெனில், ஏற்றுமதிக்காக / இறக்குமதிக்காக வந்த கண்டெயினர்கள், ஏற்றுமதி/இறக்குமதி வரிகள் செலுத்தாமல், அதிகாரிகள் உதவியோடு மாயமாகின.  அரசுக்குக் கிட்டத்தட்ட 240 கோடி ரூபாய் நஷ்டம். தமிழகம் அளவே உள்ள தான்ஸானியாவில், இது பகல் கொள்ளை. துறைமுக அதிகாரிகளைச் சந்தித்த அரசின் பிரதமர் மஜலிவா காஸிம் மஜலிவா, காணாமல் போனதாகக் கணக்குக் காட்டப்பட்ட 349 கண்டெயினர்களை பாதுகாப்பாக கையாளத் செய்யத் தவறிய  குற்றத்துக்காக, தான்ஸானிய நிதித் துறை அதிகாரி ரிஷேத் பதே மற்றும் 5 மூத்த அதிகாரிகளை, உடனடியாக ஸஸ்பெண்ட் செய்தார்.
அடுத்ததாக இன்னும் ஒரு அதிசயம். தான்ஸானியாவின் சுதந்திரக் கொண்டாட்டங்களை நிறுத்தி, அதற்கான செலவுத் தொகையை, (கிட்டத்தட்ட 10-12 கோடி இருக்கலாம்) ஒரு சாலை அகலப்படுத்தும் பணிக்கு ஒதுக்கினார். (2011 ல், தான்ஸானியாவின் விடுதலை வெள்ளி விழாக் கொண்டாட்டங்கள் 200 கோடி பட்ஜெட்டில் நடத்தப் பட்டன) அன்று அவர் மேற்கொண்ட பணியும் வித்தியாசமானது. பொதுவெளிகளைச் சுத்தம் செய்வோம் என்னும் கோஷத்தோடு, களமிறங்கிச் சாலைகளைச் சுத்தம் செய்தார். இது வெறும் புகைப்படச் சந்தர்ப்பமாகக் கொள்ளாமல், உண்மையாகவே 3-4 மணிநேரம் சுத்தம் செய்தார் என்கிறார்கள்.
பாராளுமன்றத் துவக்க விருந்துக்கான பட்ஜெட்டை 1 லட்சம் டாலரில் இருந்து 7000 டாலராகக் குறைத்து, மீதி நிதியை, டார் எஸ் ஸலாம் பொது மருத்துவமனையின் மேம்பாட்டுக்காக ஒதுக்கினார். அப்பொது மருத்துவமனைக்கு ஒருமுறை ரகசியப் பயணம் சென்ற போது, நோயாளிகள் அங்கே படுக்க இடம் இல்லாமல், தரையில் படுத்ததைக் கண்ட அவர், அம் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவை உடனடியாக நீக்கி உத்தரவிட்டார். நோயாளிகள் படுக்க உடனடியாகக் கட்டில்கள் வாங்கப் பட்டன.
அவர் மந்திரி சபையை அமைக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் எடுத்துக்கொண்டார். இறுதியில், 18 பேர் கொண்ட மந்திரிசபையை அறிவித்தார். கல்வி, பொதுப்பணித்துறை, சுற்றுலா, நிதி ஆகிய மிக முக்கியத் துறைகளுக்கு இன்னும் தனி அதிகாரம் கொண்ட மந்திரிகள் நியமிக்கப் படவில்லை. அவற்றை, நேரடியாகக் கையாளலாம் எனத் தெரிகிறது. இந்த மந்திரிசபை முந்தைய அரசில் பாதி அளவு.  ஆப்பிரிக்க நாடுகளில், மந்திரிகள் மற்றும் அவர்களின் அல்லக்கைகளின் செலவு மிக அதிகம் – மகுஃபுலியின் இந்த நடவடிக்கை, அரசுச் செலவை மிகக் குறைக்கும். மிகச் சிறிய மந்திரிசபையின் செயல்திறனும் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள். செயல் திறன் வெளிப்பாடு, பதவிக்காலத்தின் முடிவில் தான் தெரியும். இப்போதைக்கு, செலவு குறைவு என்பதும், நாட்டின் முக்கிய துறைகள் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பது மட்டுமே வெளியில் தெரிகிறது.
அண்டை நாடுகளான, உகாண்டாவின் தலைவர் யோவேரி முஸூவேணி யையும், கென்யாவின் உஹுரு கென்யாட்டாவையும், அந்த ஊர்ப் பத்திரிக்கைகள், நீங்கள் ஏன் மகுஃபுலியைப் போல சிக்கன நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது எனக் கேட்கின்றன. இது தான்ஸானியாவுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி.
தான்ஸானியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து, நாட்டை ஆண்டு வரும் கட்சி சிசிஎம்.  நம்ம ஊர் காங்கிரஸ் போல. ஆனால், மிக முக்கியமான வித்தியாசம், கட்சிக்கு ஒரு பலம் வாய்ந்த நிர்வாகக் குழுவும், ஆலோசனைக் குழுவும் இருக்கிறது.  ஆலோசனைக் குழுவில், முன்னாள் அதிபர்கள் (அலி ஹசன் ம்வேணி, பெஞ்சமின் காப்பா போன்றோர்) மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மிக உயிரோட்டமான அரசியல் நிறுவனம் சிசிஎம். அதிபர் தேர்வுக்குப் போட்டியிடும் நபர், முதலில் உள்கட்சித் தேர்தலில் பங்கு கொள்ள விண்ணப்பிக்க வேண்டும்.. அதன் ethics and safety committee  முதலில், கட்சித் தேர்தலில் போட்டியிடும் நபரின் பின்புலத்தை ஆராய்ந்து அலசி, தகுதிச் சான்றிதழ் தரும். அதன் பின்னர் நடக்கும் உள்கட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டும். போட்டியிடும் வேட்பாளர் விண்ணப்பத்தில், குறைந்த பட்சம் 40 கட்சி நிர்வாகிகள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இந்தப் பிரயாணத்தில், மிக வலுவான கட்சி அரசியல்வாதிகள் மட்டுமே ஜெயித்து வரமுடியும். ஆனால், மகுபுலி, இந்தக் கட்சி அரசியல் வட்டத்தில் பெரும்புள்ளி அல்ல.  முந்தைய கிக்விட்டே அரசியலில், நேர்மையான பொதுப்பணித் துறை மந்திரி. அவர் செயல்படும் வேகத்தைக் கண்டு, மக்கள், அவரை, ”புல்டோஸர்” என்று அழைத்தார்கள். அவ்வளவே.
முந்தைய அதிபர் கிக்விட்டே அரசில், பிரபலமாகவும், பிரதமராகவும்  இருந்த லோவாஸா தான் இம்முறை அதிபர் தேர்தலில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த போது, ஒரு அரசியல் விளையாட்டு நிகழ்ந்தது. லோவாஸா, கிக்விட்டே அரசில் பிரதமராக இருந்த காலத்தில், ஒரு ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலக நேர்ந்தது. கிக்விட்டே, லோவாஸாவை ஆதரிக்காமல், பெர்னார்ட் மெம்பே என்னும் முன்னாள் வெளியுறவு மந்திரியை முன்னிறுத்தினார். தலைவர் தேர்தலுக்கு, கட்சி சார்பாக நிற்க ஆசைப்படும் போட்டியாளர்களை, சிசிஎம் கட்சியின் ethics and safety கமிஷன் ஆராய்ந்து, தேர்ந்தெடுத்த போட்டியாளர்களில், லோவாஸா இல்லை. இதை, வெளியே செல்லும் அதிபர் கிக்விட்டேதான் செய்திருக்கக் கூடும் எனப் பொதுவாக நம்பப்படுகிறது.
இறுதி லிஸ்ட்டில் ஐவர் இருந்தார்கள். இந்த ஐவரில் ஒருவர், சிசிஎம்மின் அதிகார பூர்வ வேட்பாளராக, சிசிஎம் நடத்தும் உள்கட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். லோசாஸாவின் ஆதரவாளர்கள், கிக்விட்டேவைப் பழி வாங்க, அவரின் ஆதரவாளரான பெர்னார்ட் மெம்பேயைத் தோற்கடித்தார்கள். இந்த உள்கட்சி அரசியல் விளையாட்டில், ஒரு விபத்து போல ஜெயித்து வந்தார் மகுஃபுலி. இதுதான் மகுஃபுலி தலைவரான வரலாறு.
தலைவரான பின்பு, மகுஃபுலியின் நடவடிக்கைகள், அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளன என்பது மிக வெளிப்படையாகத் தெரிகிறது.  மகுஃபுலியின் நடவடிக்கைகள், ஒரு புறம் நாட்டை மாற்றியமைக்கும் ஒரு பெரும் தலைவரின் செயல் போலும், இன்னொரு புறம், மக்கள் ஆதரவோடு தனது அதிகாரத்தைக் காத்துக் கொள்ளும், அதிகாரத்தின் ஊற்றுக் கண்ணை மாற்றிக் கொள்ளும் அரசியம் சதுரங்கம் போலவும் தோன்றுகிறது.
வழக்கமான எமது பயணங்களில், சாலன்ஸியா என்னும் ஊரில், ஒரு சாலையோரக் கடையில் சிற்றுண்டி உண்போம். விடுதியின் காப்பாளர், ஒரு சீட்டில் ரசீது தருவார். இம்முறை ஒரு சிறு மாற்றம். ஈ.எஃப்.டி என்னும் தான்ஸானிய அரசின் முத்திரை பெற்ற, அரசின் வருவாய்த்துறையின் கஜானோவோடு இணைக்கப் பட்ட மின் அணுக்கருவியில் அச்சிட்ட ரசீது கொடுத்தார். “ஏன்” எனப் புருவம் உயர்த்தினோம்.. ”திஸ் மகுஃபுலி இஸ் டேஞ்ஜரஸ்” என்றார் தலையில் அடித்த படி.. ”அந்த பயம்” என்னும் வடிவேல் வசனம் நினைவுக்கு வந்தது.

4 Replies to “தான்ஸானியாவின் தேர்தல்”

  1. அரசன் எவ்வழியோ, குடிகள் அவ்வழி என்பதைத்தான் திஸ் மகுஃபுலி இஸ் டேஞ்சரஸ் என குடிகளை சொல்ல வைக்கிறது. ஒரு ஆப்ரிக்க நாட்டு தேர்தல் வன்முறையின்றி நடந்து முடிந்ததே ஓர் மிகப்பெரிய சாதனை

  2. இத்தகைய அரிய, அன்னிய நாட்டுச் செய்திகளை நல்ல தமிழில் அளித்தமைக்காக உங்களுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி
    அ. இலட்சுமணலால்

Leave a Reply to A. LakshmanalalCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.