கிடந்தும், தவழ்ந்தும் இருந்த குழந்தை புரண்டெழுந்து அழகாகக் குத்துவிளக்கு போல அமர்ந்து கொள்ளும்போது தாயும் பிறரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்து அக்குழந்தையை நோக்கிக் கைகளைச் சேர்த்துக் கொட்டிச் சப்தம் எழுப்புமாறு கூறிவிளையாடுவர். இதுவே ‘சப்பாணி கொட்டல்’ எனப்படும்.
மெல்லமெல்ல நகரக் கற்றுக்கொண்டுவிட்ட குழந்தை, தன்னைச் சுற்றியுள்ள உலகை வியப்புடன் நோக்கி ஆராய்ந்துபார்த்துத் தெரிந்து கொள்ளமுயல்கிறான். கைகளை ஆட்டிஅசைக்கிறான்; மகிழ்ச்சியில் கைகளைக் கொட்டுகிறான். தாயின் உள்ளம் பூரிப்பில் ஆழ்கின்றது! குழந்தையை உற்சாகப்படுத்த, ‘கைவீசம்மா கைவீசு,’ போன்ற பாடல்கள் அவள் வாயிலிருந்து பிறக்கின்றன!
புலவர் பெருமக்கள் வாயிலிருந்து தேனினுமினிய தமிழ்ப்பாசுரங்கள் பிறக்கின்றன!
யசோதை எனும் தாய் தன் குட்டனைச் சப்பாணி கொட்ட வேண்டுகிறாள் என்று கூறும் பெரியாழ்வார், ‘விதவிதமான பராக்கிரமங்களைச் செய்த கையால் சப்பாணி கொட்டுவாயாக,’ என வேண்டித் தனது உள்ளக்கிடக்கையைப் பத்துப் பாசுரங்களில் வெளிப்படுத்துகிறார்.
“மகாபலிச்சக்கரவர்த்தியிடமிருந்து அவன் நீரைவிட்டு தாரைவார்த்துக் கொடுத்த பூமியைப் பெற்றுக்கொண்ட கைகளால் நீ சப்பாணிகொட்டுவாயாக! நீ சப்பாணிகொட்டும்போது உனது காலில் அணிந்த மாணிக்கக் கிண்கிணிச் சதங்கையும், ஆணிப்பொன்னால் ஆன அரைச்சதங்கையும் அசைந்து இனிமையாக ஒலிக்கின்றன. கருங்குழல் குட்டனே! சப்பாணி கொட்டுக!” எனத் தாய் வேண்டுகிறாள்.
மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின்மேல்
ஆணிப் பொன்னால் செய்த ஆய்பொன் உடைமணி
பேணிப் பவளவாய் முத்திலங்க பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி,
கருங்குழல் குட்டனே! சப்பாணி!!
(பெரியாழ்வார்- திருவாய்மொழி-7)
“உன் தந்தை நந்தகோபன் மடியிலே அமர்ந்து சப்பாணி கொட்டுவாயாக!”
“முத்துப் பற்கள் மோகனப் புன்னகைகொண்டு பிரகாசிக்க, உன் தாய் யசோதை மடியிலமர்ந்து சப்பாணி கொட்டுக!”
“அம்புலீ, சந்திரா, என்னோடு வந்து நிலாமுற்றத்தில் விளையாடு, எனவழைத்தபடி நின்றுகொண்டு நந்தகோபர் மகிழும்படி சப்பாணி கொட்டுக!”
“பட்டிமேயும் கன்றுபோல் திரிந்து புழுதியையும் சேற்றையும் கொண்டுவந்து என்னை அணைந்து என்மேலும் பூசிவிடுகிறாய். எனக்குத் தெரியாமல் சட்டித் தயிரையும் வெண்ணெயையும் உண்டுவிடுகிறாய். பத்மநாபா! சப்பாணி கொட்டுக,” என அவன் செய்யும் குறும்புகளை ரசித்து, விவரித்து, கோபிக்காமல், கொண்டாடி மகிழ்ந்து கேட்கிறாள் அன்னை!
‘பட்டி மேயும் கன்றே!’ எனச் செல்லமாகக் கொஞ்சுகிறாள் யசோதை தன் குழந்தையை!
புட்டியில் சேறும் புழுதியும் கொண்டுவந்து
அட்டி அமுக்கி அகம்புக்கு அறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும்உண்
பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி,
பற்பநாபா கொட்டாய் சப்பாணி.
(பெரியாழ்வார்- திருவாய்மொழி-7)
‘சப்பாணி கொட்டுவது’ என்பது குழந்தை கிருஷ்ணன் தன் கைகளால் செய்யும் ஒரு சிறு செயல் தான். அடியார்களைக் காக்க, கடைத்தேற்ற, அரிய பெரிய, செயற்கரிய செயல்களைச் செய்த கைகளால் சப்பாணிகொட்ட வேண்டும்போது, அந்தச் செயல்களை அழகுற அடுத்தடுத்துவரும் பாடல்களில் தாய் யசோதையின் கூற்றாகப் பெரியாழ்வார் பாடியுள்ளார்.
“நூற்றுவரான துரியோதனாதியர் தாமே உலகுமுழுதுமாள ஆசைகொண்டு, உன்சொல்லைக்கேளாது, போரிட வந்துற்றனர்; அப்போது, உன்னையே நம்பியிருந்த பஞ்சபாண்டவருக்காக அன்று தேரோட்டிய உன்கைகளால் சப்பாணிகொட்டுக! தேவகி வயிற்றில் உதித்த சிங்கமே, சப்பாணி கொட்டுக!”
தாரித்து நூற்றுவர் தந்தைசொல் கொள்ளாது
போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாள
பாரித்த மன்னர் படப்பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி,
தேவகி சிங்கமே சப்பாணி.
(பெரியாழ்வார்- திருவாய்மொழி-7)
“நரசிம்மமாய் வந்து இரணியன் மார்பைக் கிழித்த கைகளால்,
“வாசுகி எனும் பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த கைகளால் சப்பாணி கொட்டுக,” எனக் கையின் திறத்தைப் பலவாறு போற்றி, “அந்தக் கைகள் இந்தப் பிஞ்சுக்கைகளாகி எம்மை மகிழ்விக்க ஒரு சப்பாணி கொட்டவேணும்,” என்று வேண்டிக்கொள்ளும் ஆர்வம் நிறைந்த அன்பு புல்லரிக்க வைக்கின்றது.
oOo
திருமாலைக் குழந்தையாக்கிக் கொண்டாடினால், அவனை மேலும் பலவிதங்களில் பாடி மகிழலாம் என்பது பல அடியவர்கள் உய்த்துணர்ந்த உண்மை. கிருஷ்ணன் பால், தயிர், வெண்ணெய் திருடியுண்டதும், மாடு மேய்த்ததும், தன்மேல் ஏவப்பட்ட பல அரக்க, அரக்கிகளை விளையாட்டாகவே கொன்று அழித்ததும், பல பாசுரங்களின் கருப்பொருள்கள் ஆகி, எத்தனைமுறை கேட்டாலும் அலுக்காத, சலிக்காத இனிமை நிறைந்தவை!
பெரியாழ்வார் மட்டுமன்று; திருமங்கை ஆழ்வாரும் அந்தக் குழந்தை இன்பத்தை மாந்தி அனுபவித்திருக்கிறார். கிருஷ்ணனின் குழந்தைப்பருவக் குறும்புகளை வாயினிக்கப்பாடி, ‘நீ சப்பாணி கொட்டுக,’ என வேண்டி நிற்கும் அவருடைய பாசுரங்களும் இனிமையானவை:
ஆய்ச்சியர், பாலையும் அதனைப் பலவாறு பக்குவப்படுத்தி தயிர், வெண்ணெய், நெய் என ஆக்கியும், விற்பனைக்காகத் தயார் செய்து வைத்துள்ளனர். அதனை விற்றுத் தான் அரிசி, பருப்பு எனும் வேறு உணவுப் பொருட்களை யும் உடை அணிமணிகளையும் அவர்கள் வாங்கவேண்டும். அவர்கள் வாழும் ஆய்ப்பாடியில் ஒரு சிறுகள்ளன் உலவுகின்றான். அவன் திருடுவதெல்லாம் இவர்கள் கட்டிக் காப்பாற்றி வைத்துள்ள இப்பொருட்களைத்தான்! எப்படி எங்கே ஒளித்து வைத்தாலும் கண்டுபிடித்து விடுகிறான் அந்தச் சிறுகள்ளன்- கண்ணன். அவர்கள் மனம் அதை எண்ணிப் பதைபதைக்கின்றது! அவனோ அவர்கள் தான் உண்பதற்காகவே அப்பொருட்களைத் தயாரித்து வைத்துள்ளனர் என எண்ணிக்கொண்டு வெகு உரிமையுடன் அவற்றை ஆசைதீர வாரி அமுது செய்கிறான். “அந்தக் கைகளால் நீ சப்பாணி கொட்டுவாய்,” எனத் தாயின் நிலையில் நின்று ஆழ்வார் வேண்டுகிறார்.
அக்கள்ளன் இவற்றை மட்டுமா திருடினான்? அவர்கள் உள்ளங்களையும் தான் திருடிக் கொண்டு விடுகிறான்.
தாயர் மனங்கள் தடிப்பத் தயிர்நெய்யுண்-
டேயெம் பிராக்கள், இருநிலத் தெங்கள்தம்
ஆயர் அழக அடிகள், அரவிந்த
வாயவ னே!கொட்டாய் சப்பாணி
மால்வண்ண னே!கொட்டாய் சப்பாணி.
(திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி- பத்தாம்பத்து)
கருவிளைப்பூவின் நிறம் கொண்ட அக்கள்ளக்கண்ணன் நந்தகோபன் வளர்த்த போர்க்காளை போன்றவன். பசுக்களை மேய்க்கும் கோவலன். பார்த்தாள் அன்னை யசோதை. இப்படி விடாப்பிடியாகப் பாலையும் தயிரையும் தேடித்தேடித் திருடித்தின்னும் இவனுடைய வயிறு சாமானியமானதல்ல எனும் ஞானோதயம் ஒருவழியாக அவளுக்கு ஏற்பட்டது! “அப்பா குழந்தாய்! உன் திருவயிறு நிரம்பும்படி, உன் ருசிக்குத் தகுந்தவாறு அப்பத்தினையும், அவலையும் தருவேன்; வேண்டுமளவு உண்பாயாக!” என அவனைக் கொஞ்சுகிறாள் தாய். அப்படியாவது பால் தயிர் திருடுவதை விட்டொழிப்பானோ எனும் நப்பாசை அவளுக்கு! எந்தத் தாயால் தான் அனுதினமும் தன் குழந்தையின்மேல் வரும் புகார்களை சமாளிக்க இயலும்? “குடக்கூத்தாடிய கண்ணா! நீ இவற்றை எல்லாம் தின்று விட்டு எனக்காக ஒரு சப்பாணி கொட்டாய்,” என்று அவனிடம் ஆசைமீதூர வேண்டுகிறாளாம்!
கேவல மன்றுன் வயிறு, வயிற்றுக்கு
நானவல் அப்பம் தருவன், கருவிளைப்
பூவலர் நீள்முடி நந்தன்றன் போரேறே,
கோவல னே!கொட்டாய் சப்பாணி
குடமா டீ!கொட்டாய் சப்பாணி.
(திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி- பத்தாம்பத்து)
ஒவ்வொரு அடியவரின் கற்பனைக்கும் ஏற்றவிதமாகக் கிருஷ்ணன் தனது குறும்புகளை அவர்கள் வாய்மொழிகளாக- பாசுரங்களாக- நிகழ்த்திக் காட்டிப் பரவசப்படுத்துகிறான்!
oOo
வாருங்கள்! ஆய்ப்பாடிக்குச் செல்வோம். ஒரு இனிய கண்கொள்ளாத காட்சியைக் காண வேண்டாமா?……..
புலர்ந்தும் புலராத இனிய காலைப்பொழுது. எல்லா வீடுகளிலிருந்தும் ஆய்ச்சியர் மத்தினால் தயிர் கடையும் அரவம் கேட்கின்றது!
நந்தகோபன் திருமனையும் இதற்கு விலக்கல்லவே! யசோதையும் கட்டி கட்டியாகத் தோய்ந்த தயிரினைக் கடைந்து கொண்டிருக்கிறாள். பெரிய பெரிய தயிர்ச் சட்டிகள்; சுவைமிகுந்த பசும்பாலினைக் குறுக்கிக் காய்ச்சி, கெட்டியாகத் தோய்த்த தயிர். இதனை நீண்ட பெரிய காம்பையுடையதும், கயிற்றினால் சுற்றிக் கொள்ளப்பட்டதுமான மத்தினால் கலக்கிக் கடைந்துகொண்டிருக்கிறாள் அவள். தினசரி நடவடிக்கை தான் இது. ஆனாலும் மெல்லியலாரைச் சிறிதாகினும் அயர்வடையச் செய்யும் வேலையன்றோ?
முன்னும் பின்னும் கைகள் சென்று மத்தின் கயிற்றை இழுப்பதனால் அவளுடைய மெல்லிடை தடுமாறுகின்றது; தலையில் முடிந்திருந்த கொண்டை அவிழ்ந்து குழல் கலைந்து தோளிலும் முதுகிலுமாக இறங்கி அலைகின்றது- கடைவதை நிறுத்திக் குழலை முடிந்து கொள்வதென்பது இயலாத காரியமாகும்; உடலில் பூண்டுள்ள அணிமணிகள்- கழுத்து நகைகள், கைவளைகள், காற்சதங்கைகள் முதலியன- ‘கல கல’வென ஒலியெழுப்புகின்றன. மொத்த உடலும் அசையும்போது இவை ஒலியெழுப்பாது என்ன செய்யுமாம்? காதிலணிந்துள்ள இரு குழைகளும் ஒலியெழுப்பாது அசைந்தாடுகின்றன! அழகுமிகுந்த முலைகள் மீதணிந்துள்ள முத்தாரமானது தயிர் கடையும் அசைவினால் தானும் அசையும்போது, அம்முத்தாரம் நிலவினைப் போலப் பளீரென ஒளிவீசுகின்றது.
என்ன அழகான வர்ணனை! தயிர் கடையும் ஒரு அழகிய பெண்ணை நேரில் காண்கிறோமல்லவா? அடுத்து என்னவெனப் பார்க்கலாமா?
தயிர் சிலும்புவதினால் அத்தயிருக்கே உரிய முடை நாற்றம் கமழும் தாழியிலிருந்து சிதறும் சிறு சிறு திவலைகள், வெள்ளை நிறத்தில் அவள் உடலில் (தொத்தி) பற்றிக் கொள்கின்றன. நிலவைப் போன்ற மதிமுகம் வியர்வையில் வாடுகின்றது. இவ்வாறெல்லாம் யசோதை தயிர் கடைந்து கொண்டிருக்கிறாள்.
புலவர், எத்தகைய நுணுக்கமான ‘கவனித்தல்’ கொண்டவராக இருந்திருக்க வேண்டும்? தயிர்கடையும் ஒரு இடைப்பெண்ணின் உடல் அத்தருணத்தில் அடையும் மாற்றங்களை அற்புதமாக நேரில் காண்பதுபோலப் பதிவுசெய்துள்ளாரே!
அது சரி! யசோதை தயிர்கடைவதற்கும் கிருஷ்ணன் சப்பாணிகொட்டுவதற்கும் என்ன தொடர்பு என்று எண்ணுகிறோம்! கட்டாயம் தொடர்பு இருக்கிறது!!
முனைப்பாகத் தயிர் கடைபவளின் கண்களை இரு பிஞ்சுக்கைகள் பொத்துகின்றன. சிறிதே தடுமாறினாலும், அந்தக் குட்டிக்கைகளின் தொடுதல் உணர்வில் (அவன் யாரென அறிந்தமையால்) – அவன் மாயக் கண்ணனல்லவா?-அவள் உள்ளம் நெகிழ்ந்து கனிந்து மயங்குகிறாள். அவள் மயங்கிய அந்தக் கணப்பொழுதில் தனது மலர்க்கைகளை வளைத்துத் தயிர்த்தாழியினுள்ளிட்டு வெண்ணெயைச் சிறிது அள்ளிக்கொண்டோடுகிறான் பச்சைமுகில் வண்ணனான அச்சிறுகுட்டன்!
யாரவன்? அவன் நீர்நிலைகள் நிறைந்த சோலைகளையுடைய திருமாலிருஞ்சோலைமலை அழகன்! தழைகள் நிறைந்த பூமாலைகளையும் துளபமாலையையும் அணிந்து நிற்கும் அழகன் அவன். அவனைத் தனது அந்த (வெண்ணெய் திருடிய) அழகிய கைகளால் ‘சப்பாணி கொட்டியருளுக’ எனத் தாயாக நின்று வேண்டுகிறார் அழகர் பிள்ளைத்தமிழினை இயற்றிய புலவர் பெருமகனார்.
கற்பனை அற்புதமாக இல்லை? பாடலில் மயங்குகிறோம்.
இடைதடுமாறக் குழல்புறமலைய மெய்ப்பூணொலிப்பவொலியா
இருகுழையூசற் றெழில்வரநிலவு முத்தாரமொப்பமுலைமேல்
முடைகமழ்தாழிப் புறமெறிதிவலை தொத்தாவெளுப்பமதிபோல்
முகம்வியர்வாடக் கயிறுடல்வரியு மத்தாலுழக்கியுறைபால்
கடையுமசோதைக் கருள்வரவிழிகள் பொத்தாமயக்கியுடனே
கரமலர்கோலித் தடவினிலிழுது தொட்டோடுபச்சைமுகிலே
தடமலிசோலைத் திருமலையழகா சப்பாணிகொட்டியருளே
தழையவிழ்தாமத் துளவணியழகா சப்பாணிகொட்டியருளே.
(அழகர் பிள்ளைத்தமிழ்- சப்பாணிப்பருவம்- கவி காளருத்திரர்)
(கோலுதல்- வளைத்தல்; இழுது-வெண்ணெய்)
oOo
மகரக் குழைக்காதர் பிள்ளைத்தமிழை இயற்றிய புலவர் காணும் காட்சி இன்னொன்று; அதை நாமும் காணலாமே!
சந்தனச் சோலைகள் செறிந்தது திருப்பேரை என்னும் ஊர். முகில்வண்ணனான ஒரு குழந்தை அங்கு இருக்கிறான். அழகிய பவளம்போலச் செக்கச்சிவந்த சடைமுடியை உடைய சிவபெருமான் தனது கண்கள் மகிழுமாறு ஒரு பெரும்செயல் செய்தவன் இக்குழந்தை. அவன் சங்கையும் சக்கரத்தினையும் ஏந்திச் சிவந்த கைகள் இன்னும் சிவக்குமாறு சப்பாணிகொட்டுகிறான். சப்பாணிகொட்டும் இப்பிஞ்சுக்கரங்கள் வில்லேந்திச்செய்த பெரும்செயல்கள்தாம் என்னே!
கருமை நிறங்கொண்ட தாடகையை அவள் கொழுங்குருதியைக் கக்குமாறும், அவளுடைய தசையினை நரி பிடுங்குமாறும் செய்தான்; யமன் அவளது கொடிய உயிரைக் குடிக்கும் வகையில் வில்லில் கணைகளையேற்றி மிக எளிதாகக் கொன்று, கௌசிகன் எனப்படும் விசுவாமித்திர முனிவனின் வேள்வியினை வேதமுறைப்படி முடித்துத் தந்தான். தாடகை முனிவனின் வேள்விக்கு மிக்க இடையூறு செய்ததனால் முனிவன் இராம-இலக்குவர்களைத் தன் வேள்வியைக் காக்க உடன் அழைத்துச் சென்றான் என்பது இராமகாதையின் ஒரு பகுதி.
அது மட்டுமின்றி, மிதிலை நகரில் சனக மன்னன் வைத்திருந்த சிவதனுசை, சிவனுடைய வில்லினைத் தன் கைகளில் எடுத்து, கண்டதுண்டமாக உடைத்தான் இந்த இராமன். அதனால் சிவபிரான் மனத்தினை மகிழ்வித்தான் என்கிறார் மகரக் குழைக்காதர் பிள்ளைத்தமிழின் ஆசிரியர்.
கக்கக் கொழுங் குருதி நரிபிடுங்கத்தசை
கவர்ந்துயிர் குடிப்ப மறலி
கருநிறத் தாடகையை வதை படுத்தசிலைக்
கடை குழைத்தடிகணை தொடுந்
தொக்கிற் பெருந்தவக் கௌசிகன் வேள்வியும்
சுருதிநூல் முறை முடித்துச்
சொல்லரிய முதிலாபுரிச் சனகன்வில்
கண்டதுண்டப் படுத்து மெங்கோன்
செக்கச் சிவக்குங் கொழும்பவள வார்க்கதிர்ச்
செஞ்சுடாவி மணிமுடிச்
சிவசங்கரக் கடவுள் கண்கள்களி கூரச்
சிறந்தருள் புரிந்து சங்கு
சக்கரத்துணை செங்கை யொக்கச் சிவப்பவொரு
சப்பாணி கொட்டி யருளே,
சந்தனச் சோலைசெறி தென்திருப்பேரை முகில்
சப்பாணி கொட்டி யருளே.
(மகரக் குழைக்காதர் பிள்ளைத்தமிழ்- சப்பாணிப்பருவம்- )
சப்பாணி கொட்டும் சிறுகுழந்தையினை- திருமாலை, இராமனாக உருவகிக்கும் புலவர்- அவன் கைவண்ணத்தைக் காட்டிப் போற்றுகிறார்.
மைவண்ண அரக்கியைக் கொன்ற கைவண்ணம் இங்கு கண்டோம்;
அடுத்து கால்வண்ணம் காண்போம்!
(கிருஷ்ணலீலைகள் வளரும்)
_