வெங்கட்  சாமிநாதன்: விமர்சன படைப்பாளி

vesa2a-resized

ஆயிரத்தி தொளாயிரத்து அறுபதுகளின் பிற்பகுதியில்தான் நான் சிற்றிதழ்களை படிக்கத் துவங்கினேன் எழுத்து பத்திரிகை அப்போது நின்று விட்டிருந்தது. வெங்கட் சாமிநாதன் ‘எழுத்து’ பத்திரிகையில்தான் எழுத ஆரம்பித்தார். அவற்றை பின்னர் பாலையும் வாழையும் தொகுப்பில் படிக்க நேர்ந்தது. அவரது எழுத்துகளை கணையாழி நடை கசடதபற யாத்ரா ஞானரதம் ஆகியவற்றில் உடனுக்குடன் படித்தேன். அச்சமயத்தில் தமிழ் சிற்றேடுகளில் இரண்டு விதமான பிராந்திய எழுத்துகள் தென்பட்டன. ஒன்று தமிழ் நாட்டில் உள்ள எழுத்தாளர்களின் எழுத்து. மற்றொன்று டெல்லி வாழ் எழுத்தாளர்களின் எழுத்து. அதை டெல்லி எழுத்து என்றே சொல்லலாம். கணையாழி அந்த எழுத்துகளுக்கு அதிக இடமளித்தது. கி. கஸ்தூரி ரங்கன் அதன் ஆசிரியர். அவர் கட்சி சாராத அரசியல் கட்டுரைகளை எழுதினார். தமிழகத்தில் அவ்வாறான கட்டுரைகள் எழுதப்பட்டவை அப்போது குறைவு இந்திரா பார்த்தசாரதி உளவியலுக்கு அழுத்தம் தருகிற கதைகள், நாடகம் ஆகியவற்றை டெல்லி வாழ் மனிதர்களை மையப்படுத்தி எழுதினார். ஆதவன் தனிமனிதவாத கதைகள் எழுதியவர். அவற்றிலும் டெல்லி வாழ்க்கை பிரதிபலித்தது. அம்பை பெண்கள் தங்களை தனித்து உணர்கிற அனுபவங்களை கதைகளாக எழுதினார். அது இன்றைய பெண்ணியவாதம் அல்ல. அந்த வரிசையில் வெங்கட் சாமிநாதனின் விமர்சனக் கட்டுரைகளும் டெல்லி வகையை சார்ந்தவையாக முதலில் எனக்கு அறிமுகமாயின. டெல்லியில் வாழாதிருந்திருந்தால் அவருக்கு அத்தனை பரந்துபட்ட துறைகளில் அனுபவமும் அறிவும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். அல்காஷி நாடகம், கலைப்படங்கள், நவீன ஓவியக்கண்காட்சிகள், பல்வேறு மொழிசார்ந்த எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் ஆகியன மட்டுமின்றி நாட்டார் கலைகளிலும் அவருக்கு ஆர்வம் ஏற்பட டெல்லி அனுபவம் உதவியது. அவற்றையெல்லாம் அவர் நன்கு பயன்படுத்திக்கொண்டார். அவரது எழுத்து எல்லாவற்றிற்கும் டெல்லிதான் காரணம் என்று கூறவில்லை.
vslவெ. சாமிநாதன் தமிழ் எழுத்துலகில் மிகவும் வேறுபட்ட விமர்சகர். தமிழ் விமர்சகர்கள் சி .சு. செல்லப்பா, கா.நா சுப்ரமணியம், பிரமிள் போன்ற பலரும் கதைகள் நாவல்கள் கவிதைகள் ஆகியன எழுதுபவர்களாக உள்ளனர். படைப்பாக்கம் மிக்கவன் புனை இலக்கியம் படைப்பவன் மட்டுமே என்கிற மரபான கருத்தை தனது செயலாலும் கருத்தாக்கங்களாலும் நிராகரித்தவர் சாமிநாதன் . அக்ரகாரத்தில் கழுதை படத்திற்கு திரைகதை வசனம் எழுதியதைத் தவிர அவர் எழுதியனவெல்லாம் கட்டுரைகள் தாம்.
இலக்கிய படைப்பாளிகளும் வாசகர்களும் இலக்கியத்திற்கப்பால் சினிமா, ஓவியம், இசை, நாடகம், ஆகிவற்றின் மீது ஈடுபாடு கொள்வதன் மூலமே மனித வாழ்வின் முழுமையை புரிந்து கொள்ளமுடியும் என்று கருதி செயல் பட்டவர். விமர்சனம் செய்யும் போது கடுமையாக செய்வார் இடித்துரைக்கும் சுபாவமுடையவர். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற பாவனையிலும் அவரது எழுத்தின் தொனி அமைந்திருந்ததாக நான் அப்போது நினைத்ததுண்டு. தனிமனித தாக்குதல்களை அவர் தவிர்த்திருக்க வேண்டும் என்பது அப்போதும் இப்போதுமான எனது எண்ணங்கள். தமிழனின் கலாச்சார வறுமையை சுட்டிக்காட்டுமுகமாக அதிரடியான விமர்சனங்களையும் செய்தார். தமிழர்களிடம் கலையில்லை எல்லாமே தொழில் திறன் தான் என்றார். தனித்துவமிக்க பார்வை வெளிப்படாததால் சிற்பம், ஓவியம், கட்டடம் போன்றவற்றில் கலை உருவாகவில்லை என்றார். இது ஒப்புக் கொள்ளக் கூடியதல்ல. கூட்டு முயற்சி கலைக்கு எதிரானதல்ல. இசை, நடனம் ,நாடகம், சினிமா, கட்டடம் போன்றவை ஒரு தலைமைக்கு கீழ் செயல்படுபவை. அதே சமயம் பல கலைஞர்களின் தனித்துவமான பங்களிப்புகளும் அதில் இடம் பெறுகின்றன. தங்கள் பெயரைப் போட்டுக்கொள்ளவில்லை என்பதால் அவற்றில் பணியாற்றியவர்கள் கலைஞர்கள் அல்லர் என்பதை ஏற்க முடியாது.
அதே சமயம் கலைத்திறமைக்கும் தொழில் திறனுக்கும் அவர் கொடுத்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இருந்தது. சூழ்ச்சிக்காரனான தச்சன் செய்கிற நாற்காலி நேர்த்தியாக இருக்கும். அங்கே தொழில் திறன் இருந்தால் போதும் ஆனால் ஒரு வன்புணர்வில் இடுபடுபவன் ராமாயணத்தின் சிறப்பை ஓத முடியாது. அவன் சத்திய தரிசனம் அற்றவனாக இருக்கும் பட்சத்தில் அது சிறக்காது என்று எடுத்துக் கூறினார். தமிழனுக்கு நாடகப் பாரம்பரியம் இல்லை என்பதை உரத்துக்கூறினார். தெருக்கூத்து பற்றிய சமகால விழிப்புணர்விற்கு அவரது பங்கு கணிசமானது.
சாமிநாதன் முன் வைத்த முக்கியமான கோட்பாடு உள்வட்டம் வெளிவட்டம் என்பதாகும். ஒரு செழுமையான பயிற்சி பெற்ற சிறுபான்மைக்குழுவின் இயக்கத்தை உள்வட்டம் என்றும் அதனிலிருந்து தாக்கம் பெறுகிற பெருவட்டத்தை வெளிவட்டம் என்றும் குறிப்பிடுகிறார். பெருவாரியான கலாச்சாரத்தை வழி நடத்தவும் உற்சாக மூட்டவும் ஒரு சான்றோர் கூட்டம் தேவை என்பதை அவர் வலியுறுத்தினார். சிறு பத்திரிகை கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் அது ஒரு உள்வட்டமாக செயல்பட்டு வந்திருப்பதையும் அதன் பாதிப்புகள் சிறுபத்திரிகை என்னும் சிறு வட்டத்தைக் கடந்து வார, மாத, தினசரி இதழ்களிலும் இருப்பதை பார்க்க முடிகிறது.
அவர் முக்கியமாக வணிக எழுத்துகள் பண்டித எழுத்துகள் திராவிட எழுத்துகள் மார்க்ஸிய எழுத்துகள் மீது கடும் விமர்சனம் கொண்டிருந்தார். அவையாவும் இன்று இல்லாமல் போய்விட்டன. ஒரு எழுத்தாளரின் தொடர்கதை வருகிறது என்ற அறிவிப்பினால் எந்த பத்திரிகையும் இன்று அதிக விற்பனைக்குள்ளாவதில்லை கல்விப் பின்புலம் கொண்டவர்கள் இன்று அதிக அளவில் நவீன இலக்கியம்பால் திரும்பிவிட்டிருக்கிறார்கள். இலக்கியம் புராணம் ஆகியனவற்றின் மீது புரிதல் இன்றி தாக்குதல் நடத்திய திராவிட எழுத்துகளும் இன்று காலாவதியாகி விட்டன. ஒரு கவிதையோ கதையோ பாட்டாளி மக்களுக்கு எதை சொல்கிறது என்கிற கேள்வியை முன்வைத்து முற்போக்கு பிற்போக்கு என்றெல்லாம் செய்த விமர்சனங்கள் மறைந்து போயின. மார்க்ஸிய சிந்தனைகள் இன்று பெண்ணியம், மொழியியல் குறியீட்டு இயல் போன்றவற்றின் வாயிலாக தமிழில் செழுமையான இடத்தை பெற்றுள்ளன. மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையில் அவரது விமர்சனங்களும் அவற்றின் நேரடியான பாதிப்புத்தன்மையை இழந்து விட்டிருப்பதாய் தோற்றமளிக்ககூடும். ஆனால் அவற்றை அவரது காலத்துடன் பொருத்தி வாசிக்க வேண்டும். அப்போது தான் நாம் கடந்து வந்த பாதை எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது புரியும். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் மொழி பெயர்ப்பு பற்றிய அவரது அன்றைய அவதானிப்புகள் எவ்வாறு இருந்தன என்பதாகும் சார்ல்ஸ் டிக்கன்ஸ், பெர்ல். எஸ். பெர்க் போன்றோர் மொழிப் பெயர்க்கப்படுகின்றனர்.ஆனால் காப்கா, கான்ராடு போன்றோர் மொழி பெயர்க்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார். அன்றைய நிலவரம் அது. அவ்வாறெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாலேயே இன்று காப்கா, கம்யு,ஒர்கான் பாமுக், மார்க்வெய்ஸ் போன்ற பலரும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளனர். தமிழிலிருந்தும் ஆங்கிலத்திற்கு நிறைய மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
சாமிநாதன் இறுதி வரை எழுதிக்கொண்டே இருந்தார். பல புதிய எழுத்தாளர்களை படித்து விட்டு அவர்களைப்பற்றி உற்சாகமாக எழுதினார். ஆனால் அவர் தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளவில்லை. கனிமொழியை அவர் பாராட்டி எழுதியது திராவிட எழுத்தை அவர் ஒப்பு கொண்டது போல் ஆகிறதே என்று ஒரு சந்தேகத்தை சிலர் எழுப்பினர். திராவிட பாரம்பரியமான யாப்பு கவிதையிலிருந்து பிரிந்து புதுக்கவிதை எழுதியவர் கனிமொழி. அரசியல்வாதியாகும் வரை அவரது கவிதைகளில் திராவிடம் தென்பட்டதில்லை.
சாமிநாதன் தமிழ் சூழலில் வேண்டிய பல மாற்றங்கள் அவரது காலத்திலேயே நிகழ்ந்துள்ளன. அவரது பணி நிறைவானது.

(23-10-2015 மாலை சென்னையிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நவீன விருட்சம் ஏற்பாடு செய்திருந்த வெங்கட் சாமிநாதன் அஞ்சலி கூட்டத்தில் பேசியதன் எழுத்து வடிவம்)