நானறிந்த வெ.சா

வெ.சா அவர்களுடன் எனக்கு இருந்த நட்பு ஒரு அடுத்தவீட்டு பெரியவரிடம்  இருப்பதுபோலத்தான் இருந்தது. அவருடைய செலிப்ரிடி ஸ்டேடஸ் எதுவுமே தெரியாத ஒரு அசட்டு ஃப்ரெண்ட் போலத்தான் அவருடன் பேசி இருக்கிறேன். அதனால்தான்அஞ்சலியாக பதிப்பிக்கும் அளவு நான் எழுத எதுவும் இருக்கிறதாக எனக்குத் தெரியவில்லை. சில நினைவுகளை பகிர்ந்துகொள்கிறேன்.
vslசாதாரணமாய் அவரிடமிருந்து காலை 11 மணி வாக்கில்தான் போன் வரும். சாவகாசமாக பேசி விட்டு ‘ஆமாம். காலையிலேஉங்களுக்கு சமையல் வேலை எல்லாம் ஒண்ணும் கிடையாதா. இப்படி என்னோட இத்தனை நாழி பேசிக்கொண்டுஇருக்கிறீர்களே’ எனக் கிண்டல் செய்வார். வீட்டில் வயதான் பெண்கள் இருந்தால் ‘நன்னா இருக்குடீம்மா. காலம்காத்தாலேமணிக்கணக்கில் போன் பேசிக்கொண்டு” எனச் சொல்வார்கள் எனப் பேசிக்காட்டுவார். நானும் தஞ்சாவூர் பகுதியைச்சேர்ந்தவள் என்பதால்  அப்பகுதி வழக்குகளை  உபயோகிக்கையில் மனம்விட்டு சிரிப்பார். ஆனால் அவருக்குதிருநெல்வேலி பாஷை மிகவும் பிடிக்கும். மிகவும் அழகான பிரயோகங்கள் என்பார்.
இதழ் வெளியீடு தேதியை கன்ஃபர்ம் செய்துகொண்டு அதற்கு இரண்டு நாட்கள் முன்பு கட்டுரைப்பகுதியை அனுப்புவார்.அனுப்பும்போது மறக்காமல் ஒரு வரி இருக்கும். ‘சொன்ன தேதிக்கு முன்பே அனுப்பி விட்டேன். அதை பாராட்டி இரண்டுவார்த்தைகள் சொன்னால் தப்பில்லை’. சொன்ன தேதிக்கு இதழ் வெளிவரவில்லை என்றாலும் கோபப்படுவார். ’யாருடையகட்டுரைக்கும் காத்திருக்கக் கூடாது. இதழ் வெளியீடு தேதி முடிவு செய்து விட்டால் வெளியிட்டு விடவேண்டும்’ என்பார்.படைப்புகள் பற்றி வாசகர்களிடமிருந்து கருத்துப் பரிமாற்றம் இல்லை என்பது அவருடைய குறை. நமது வாசக சூழலேஇன்று இப்படித்தான் இருக்கிறது என அங்கலாய்ப்பார். அவர்களுக்கு சொந்தக் கருத்தே இல்லையா. அல்லது சொல்லத்தயக்கமா அல்லது எதற்கு எதையாவது சொல்லி வம்பில் மாட்டிக் கொள்வது என்கிற நினைப்பா எனப் புரியவில்லைஎன்பார்.
இலக்கிய ஆர்வம் இருக்கும் இன்றைய இளைஞர்களின் நேரம் அனைத்தையும் அவர்களுடைய அலுவலகப் பொறுப்புகள் ஆக்கிரமித்துவிடுகின்றன எனக் கவலைப்படுவார். ’நான் அரசு வேலையில் இருக்கும்போதும் அலுவலக நேரம் முடிந்தபின் ஒருநிமிடம்கூட அங்குஇருக்க மாட்டேன். இலக்கிய நண்பர்கள், திரைப்பட விழாக்கள், நாடகம், இசை/நடன கச்சேரி என்று எங்காவது போய் விட்டு10 மணிக்குத்தான் வீடு. மனைவிக்கு தொந்திரவு கூடாது என்று சாப்பாட்டை எடுத்து வைத்துவிடச் சொல்லியிருப்பேன். ஓவர்டைம் என்று செய்திருந்தால் பணம் கிடைத்திருக்கும். ஒரு புடவை வாங்கிக் கொள்ளலாம் என்று ஒருநாள்கூட மனைவிசொன்னதில்லை’ என்பார். ’அதெல்லாம் சரி மாமிக்கு உங்களுடன் பேச எப்போது நேரம் கொடுத்தீர்கள்’ என்பேன்.
இலக்கிய விமரிசனமாக என்னிடம் எதுவும் பேசியதில்லை. சில எழுத்தாளர்களைப் பற்றி personal anecdotes  சொல்லுவார்..சி.சு.செல்லப்பா அவர்களைக் கடைசியாகப் பார்க்கப் போன போது கொஞ்சம் பழங்கள் வாங்கி போனதாகவும் ’அதைக்கூட மாமி கையில் வாங்கவில்லை. செல்லப்பா சொன்ன பிறகுதான் வாங்கிக் கொண்டார். அத்தனை சுயகௌரவம் அவர்களுக்கு’   என்பார்.  இதுபோல் சிலரைப் பற்றிப் பேசுவார். சிலரைப் பற்றி பேசுகையில் ‘உங்களுக்கெல்லாம் அவர்கள் பற்றி இருக்கும் நல்ல அபிப்பிராயத்தை நான் கெடுக்க விரும்பலை’ என்பார்.ஜெயமோகனின் படைப்புத் திறமை பற்றி உயர்வாகச் சொல்லுவார். ’எத்தனை விசாலமான படிப்பு அதற்கு நிகரான உழைப்பு’ என்பார். அவர் எழுதும் வேகத்துக்கு என்னால் படிக்கக்கூட முடியாது என்பார். சுகாவின் ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும்.ஒரு முறை சென்னைக்குப் போகிறேன் எதாவது புத்தகம்வேண்டுமா எனக் கேட்ட போது மூங்கில் மூச்சு வேண்டும் என்று கேட்டார். அது கிடைக்கவில்லை என்று என்னிடம் இருந்த புத்தகத்தை அவருக்கு அனுப்புவதற்காக அவருடைய விலாசம் கேட்டேன். அதற்கு அவரிடம் இருந்து வந்த குறும்பான பதில்;
’என்ன வேடிக்கை பாருங்கள். என்னுடைய முகவரி என்ன, இன்னும் என்னென்ன விவரங்கள் வேணுமோ அனைத்தும்ஒபாமாவுக்குக் கூட  விக்கிலீக்ஸ் ஸ்னோடன் மூலமா கைவசம் இருக்கு. பங்களூர் வாசி, ஒரு முறை வீட்டுக்கு வந்தஉங்களுக்கு என்னிடம் கேடக வேண்டியிருக்குஇன்னிக்குக் கூட காலம்பற டிவியிலோ என்னவோ  (சொன்னர்கள்) ஆதார் கார்ட் விவரங்கள்அனைத்தும் அமெரிக்காவுக்குப் போய்விட்டதாம் போதாததுக்கு. ஆக, விக்கிலீக்ஸ் திருடியதை ஆதார் கார்ட்திருட்டிலிருந்து பார்த்து சரி செய்து கொள்ளலாம். ரண்டு source.
 சரி அது அமெரிக்கா நீங்கள் என்னைக்  கேட்டுத்தான் ஆகணும்.’
நான் புத்தகம் அனுப்பிய உடனே கவரின் மேல் இருந்த என்னுடைய விலாசத்தைப் பார்த்து ’என் பார்வையில்’ என்ற அவருடைய விமரிசனங்களின் தொகுப்புப் புத்தகத்தை கையெழுத்திட்டு அடுத்த கூரியரிலேயே அனுப்பியிருந்தார்.

IMG_1542

லோக்சபா, டிடி பாரதி சேனல்களையும் அவை காட்டும் திரைப்படங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். இன்று இந்தப் படம் வருகிறது பாருங்கள் என்பார். மறுநாள் போன் செய்து பார்த்தேனா என கன்ஃபர்ம் செய்துகொள்வார். நன்றாகஇருக்கும் படங்களைப் பார்த்து அவற்றின் யதார்த்தம், விஷுவல் ஃபீல், நடிப்பு இவற்றைப் பற்றி சொல்லிவிட்டு நம் படங்கள்பற்றி அங்கலாய்ப்பார். சனி ஞாயிறுகளில் இந்தி சேனல்களில் வரும் படங்களைப் பற்றி அவருக்கு லிஸ்ட் அனுப்புவேன்.படம் பிடித்திருந்தால் மறுநாள் போன் செய்து நன்றி சொல்வார். சமீபத்தில் அவருக்கு பிடித்தவை பிகு(PIKU))  மற்றும் காக்காமுட்டை. நல்ல படம் என்றால் திரும்ப திரும்ப பார்ப்பார். ’எத்தனை தடவை ஒரே படத்தைப் பார்ப்பீர்கள்’ என்பேன். ’சில படங்களில் ஒவ்வொரு முறையும் புதிதாகக் காணக் கிடைக்கிறது என்பார். ஒரு அசாமிய படத்தில் மரங்களை வெட்டி பிரம்மபுத்ராவில் படகில் எடுத்துச் சொல்லுவதை எப்படி படம் எடுத்திருக்கிறார்கள் பாருங்கள். இதுக்கு செட் போட முடியாது. ரீடேக் எடுக்கமுடியாது. எப்படி எல்லாம் எடுக்கிறார்கள் பாருங்கள்’ என்று ரசிப்பார்.
பெங்களூரில் தெரிந்தவர்கள் எல்லாம் ஒவ்வொரு மூலையில் இருப்பதால் அடிக்கடி பார்த்துக் கொள்ளக்கூட முடியவில்லைஎன வருத்தப்படுவார். ‘பாருங்கோ நினைச்சா உங்க வீட்டிலே வந்து வத்தல் குழம்பு சாப்பிட முடிகிறதா?’ என்பார். வரேன் என்று சொல்லுங்கள். காரில் கூப்பிட்டுக் கொண்டு வருகிறேன் என்று சொன்னால் ‘ காரில் அத்தனை தூரம் உட்கார்ந்து வர என் முட்டி ஒத்துழைக்காதே’ என்பார்.
இந்த மே மாதம் அவர் வீட்டுக்குப் போன போது வாசற்கதவைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். செக்யுரிடி போன் செய்திருக்க வேண்டும். ‘சிரமப்பட்டு எதற்கு நின்று கொண்டிருக்கிறீர்கள். இத்தனை தூரம் வந்தவளுக்கு உங்கள் ஃப்ளாட்டை கண்டுபிடிக்க முடியாதா என்றேன்.’ சிரித்தார். அவருக்குப் படிக்க சௌகரியமாக இருக்கட்டும் என ஒரு எல் ஈ டி படிக்கும் லைட் கொண்டு சென்றிருந்தேன். சின்னக் குழந்தை போல அதை வாங்கி முன்னும் பின்னும் பார்த்து விட்டு ‘ இதை எப்படி உபயோகப்பபடுத்தணும்னு என்று சொல்லிக் கொடுத்துவிட்டு போங்கோ இல்லைன்னா அப்புறம் நான் தடுமாறுவேன்’என்றார். ’ஒண்ணும் ராக்கெட் டெக்னாலஜி இல்லை சார்’ எனக் காண்பித்தேன். ‘இப்படித்தான் ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு தடுமாறுகிறேன். என் பன்னிரெண்டு வயது பேத்தி ’தாத்தா உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை. இட் இஸ் ஸோ ஸிம்பில் என்கிறது. எனக்குத்தான் இதெல்லாம் ஒன்றும் தெரியலை’ என்றார்.
வீடு வந்ததுமே மின்னஞ்சலில்  அவர் எனக்கு  a sincere unqualified apology என்று சப்ஜெக்ட் போட்டு அனுப்பிய ஒரு  அஞ்சல்;

அன்புள்ள உஷா அவர்களுக்கு
நீங்கள் போனதும் ப்ரியா (மருமகள்) சொன்னாள். இங்கு வர  நீங்கள் கடந்து வந்த தூரம் கிட்டத்தட்ட  , 35 லிருந்து 40 கிலோமீட்டருக்கு குறையாது கூடவே இருக்கும் என்றாள். முதலில் உங்களுக்கு கொடுக்க வேண்டியது நானாக இருக்க, இங்கு வந்துவாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னதே அபசாரம். இங்கு வருவதில் இருக்கும் தூரம், போக்குவரத்து நெருக்கடிகள், மதியவேளை, எல்லாம் இதில் சேர்ந்த்து என் பாபத்தின் பளுமை அதிகாமாக்கியிருக்கிறது. ப்ரியா இன்னம் ஒன்று சொன்னது,ப்ளூ டார்ட்டிடம் சொன்னால் அவர்களே எவ்வவள்வு பளுவானதாக இருந்தாலும் அவர்கள் அதை அழகாக பாக் செய்துஎடுத்துச் சென்று அன்றே டெலிவர் செய்தும் விடுவார்கள் என்றாள்,. நான் அவளை முன்னரே விசாரித்திருக்கலாம். கேட்டுத்தெரிந்திருக்கலாம். அதுவும் செய்யவில்லை. டெலெபோன் இருக்கு, சொன்னால் போச்ச்சு என்ற ரீதியில் உங்களைஇவ்வளவு தூரம் கடக்க வைத்து சிரமப் படுத்தியிருக்கிறேன். அதுவும் என் காரியத்துக்கு. இவ்வளவும் படுத்தியது தனக்கும்வேலைகள் நிறைய இருக்கும் ஒரு குடும்ப ஸ்திரீயை. இந்த பாபத்திற்கு என்ன, எப்படி விமோசனம்? முதலில் ஒரு பெரியமன்னிப்புக்கோரல்.மன்னித்து விடுங்கள். அடுத்து இதற்கு என்ன செய்து விமோசனம் பெறுவது என்பதை யோசிக்கிறேன்.நீங்களும் முடிந்தால் சொல்லி உதவலாம்.

எத்தனை மென்மையான மனிதர் பாருங்கள், சின்னக் குழந்தை போல…
’பிராயச்சித்தமா?நீங்களும் ஒரு தரம் 40 கி மி கடந்து என் வீட்டுக்கு வரவேண்டும்’ என்று சொல்லியிருந்தேன்.
செப்டம்பர் மாதத்தில் எம் எஸ் சுப்புலக்ஷ்மி பற்றி தூர்தர்ஷன் காட்டும் தொடரைப் பார்க்கச் சொல்லி நினைவு படுத்திக் கொண்டேஇருந்தார். நான் பார்க்கத் தவறிய போதெல்லாம் ‘ இதெல்லாம் பாக்காமல் என்ன பண்றேள் நீங்க சன் டிவி லெ சீரியல்பாக்கறேளோ ’ எனச் சீண்டினார். என்னென்ன காட்டினார்கள், எத்தனை ethereal  ஆக இருந்தது என்றெல்லாம் விவரித்து சிலாகித்தார். மாலை 5 மணிக்கு டிடி பாரதியில் இந்திய architecture monuments பற்றிய நிகழ்ச்சி அவருடையஃபேவரைட்.அப்போது போன் செய்தால் திரும்பக் கூப்பிடுகிறேன் என வைத்துவிடுவார். நிகழ்ச்சி முடிந்ததுமே போன்செய்து’ உங்களுக்கு எத்தனை தரம் சொல்லுவது. நீங்கள் பார்க்கலையா?’ என்பார். ‘ என்ன செய்வது. வயசாயிண்டுபோறதா. மறந்து போய் விடுகிறேன்’ என்றால், ‘எனக்குத் தெரிந்து தனக்கு வயசாகி விட்டது என்று சொல்லும் ஒரே லேடி நீங்கதான்’ என்பார்.
ஒரு மாதம் முன்பு போன் செய்து ‘உங்களிடம் ஒன்று கேட்கணும்., ஆனால் தயக்கமாக இருக்கிறது’ என்றார். ‘என்ன காசாபணமா கேளுங்கோ’ என்றேன்.’ 2/ 3 கட்டுரைகள் மொழிபெயர்க்கணும். சொல்வனத்துக்கு இல்லை. முடியுமா?’ என்றார். ‘அவசரமா, இல்லை நான் ரிஷிகேஷ் போய் வந்த பிறகு கொடுக்கலாமா’ என்றேன். முடிந்தால் முதல் கட்டுரை ஊருக்குப் போகும் முன் அனுப்பிவிடுங்கள். மற்றவை பின்பு பார்க்கலாம். என்றார். அனுப்பியதும் ‘ quick work. உங்களை சிரமப்படுத்தி விட்டேன்’ என்றார். Thanks தவிர மொழிபெயர்ப்பு பற்றி ஒன்றும் கமெண்ட் சொல்லமாட்டார். ஆனால் மொழிபெயர்த்தவர் பெயர்விடுபட்டுப்போனால் கண்டிப்பார். முதல் முறை யாமினி பற்றிய தொடரின் சில பகுதிகளை அனுப்பியதும் ‘ இத்தனை சீக்கிரமாகசெய்து முடித்துவிட்டீர்களே, என் ஆங்கிலம் உங்களுக்குப் படிக்க சுலபமாக இருக்கிறதா?’ என்று கேட்டார். ’ கஷ்டமாகத்தான் இருக்கிறது. அந்தக்கால ஆங்கிலமாக இருக்கிறது.’ என்றேன். ’ஆமாம் க நா சு கூட அப்படித்தான் சொல்வார். என்ன செய்ய. அப்படித்தான் எனக்கு எழுத வருகிறது’ என்றார்.
அக்டோபர் 18 அன்று மதியம் 2 மணிக்கு போன் செய்தார். டிடி பாரதியில் இப்ராஹிம் அல்காஷி (நேஷனல் ஸ்கூல் அஃப் டிராமாவின் முன்னாள் டைரக்டர்)  பற்றிய நிகழ்ச்சி வருகிறது  பார் என்று. வெ சாவின் தெருக்கூத்து கட்டுரையை மொழிபெயர்க்கையில் அல்காஷி பற்றி எனக்குச் சொல்லியிருக்கிறார். இவர் ஒரு அராபியர். இந்தியாவில் வாழ்ந்தவர்.  அந்தா யுக் என்ற நாடகம்தான் அன்றுவரை, நாடகத்தையும் அதன் மற்ற ரூபங்களையும் வெறுத்துப் புறமொதுக்கி வந்த வெ சா வுக்கு நாடகத்தை ஒரு கலைவெளிப்பாடாகக் காட்டியது, அதை இயக்கிவர்  இந்த அல்காஷி எனச் சொல்லியிருக்கிறார்.
சிலவருடங்களுக்கு முன்புகூட மலர்மன்னன் , டோண்டு ராகவன் இவர்களின் இறப்பும் அவரது அன்புக்குரிய இன்னும் சிலரின் உடல்நிலையும் அவருக்கு  மிகுந்த மனவேதனை கொடுத்தபோது இதைப்பற்றி எழுதியிருந்தார்;

நெட் வேலைசெய்யவில்லை. பி.ஆர். ஹரன் SMS அனுப்பினார் மலர்மன்னன் இறந்துவிட்டார் என்று. என் மிக அரிய நெருங்கிய நண்பர். இன்று காலை நெட்டைத் திறந்ததும் டோண்ட் ராகவனும் அதற்கு முன்னாலேயே மறைந்துவிட்டது தெரிந்தது. இப்படி யெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே சமயத்தில் தாக்கவேண்டுமா? டோண்டு ராகவன் நங்கநல்லூரிலிருந்து என் மடிப்பாக்கம் வீட்டுக்கு வருவார். morning walk  என்பார்.எனக்கு கம்ப்யூட்டரில் பிரசினை இருந்தால் சொல்லிக்கொடுப்பார். மலர் மன்னனை ஏமாற்றிவிட்ட துக்கம் எனக்கு.  இந்த இழப்புக்களைப் பற்றியும் டெலெபோனில் பேசமுடியாது.  என்ன செய்ய? தர்மவீர் பாரதியின் அந்தா யுக் நாடகத்தில் காந்தாரியும், அஸ்வத்தாமனும் கடைசியில் நிகழ்ந்த பேரழிவைக் காட்டி கண்ணனை காச்சு காச்சு என்று காச்சி எடுப்பார்கள்.இந்த அழிவில் தான் நீ உன் தர்மத்தைக் காக்கப் போகிறாயா? இந்த முடிவுக்குத்தானே ஆரம்ப முதல் சதி செய்தாய் என்று திட்டுவார்கள். அதுபோகட்டும். அந்த அழிவின் மத்தியில் நின்று கொண்டு எல்லோரையும் இழந்த அவர்கள் சோகம் மகா பயங்கரமானது. 1961-ல் பார்த்த அந்த நாடகம்இன்று நினைவுக்கு வருகிரது. உங்கள் டெலெபோன் நம்பரைக் குறித்து வைத்துக் கொள்கிறேன். பிறகு எப்போதாவது தொடர்பு கொள்கிறேன். இந்த சோகக் காட்சிகள் பின்னால் நகர்ந்த பிறகு…’

தனக்கு உடல்நிலை சரியாய் இல்லாததினாலும் , கணினித் தொல்லையினாலும் மலர்மன்னனின் புத்தகத்துக்கு விமரிசனம் எழுதமுடியாமல் போக அதற்குள் அவர் இறந்து போனதில் இவருக்கு அவரை ஏமாற்றி விட்டோம் என்ற உணர்வு! நல்ல நண்பர்களை எல்லாம் அடுத்தடுத்து இழந்தது அவரை மிகவும் பாதித்தது.
திங்களன்று (19.10.2015) ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.  ’வைரல் ஜுரத்துக்குப் பின் இன்னும் சோர்வாக இருக்கிறது. திராவிட இயக்கம் பற்றிய இரண்டாவது கட்டுரையின் மொழிபெயர்ப்பை இன்னும் இரண்டு நாட்களில்அனுப்புகிறேன்’ என்று.உடனே  அவரிடமிருந்து போன்  வந்தது ‘எனக்கும் 4 நாளாய் ஜுரம். உடம்பு வலி. வீட்டுக்குள்ளேயேதான் இருக்கிறேன். எப்படி இதெல்லாம்வரதுன்னு தெரியலை’ என்றார். நான் இதை டெங்கு ஜுரம் என நினைத்துவிட்டேன். பிறகு என்னிடம் ‘ நானும் உடம்புசரியான பிறகுதான் மொ பெ சரிபார்க்க முடியும். ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேண்டாம். மெதுவா பண்ணுங்கோ. ​Take it easy​ ’ ​ என்றார்​
அதுதான் அவர் பேசிய கடைசி கால் போலிருக்கிறது. அதனால்தான் அவருடைய மருமகள் அவருடைய கைப்பேசியிலிருந்து எனக்குப் போன் செய்து அவர் ஆஸ்பத்திரியில் இருந்ததை சொல்லி தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லச் சொல்லியிருக்கிறார். மறுநாள்  காலையில்  5:15-க்கு மீண்டும் அவர் தொலைபேசியிலிருந்து போன் வந்தபோது எல்லாம் முடிந்து விட்டிருந்தது.
IMG_2460
 
​சொல்வனத்துடன் இணைந்த பிறகுதான் இந்த மூன்றரை வருடங்களாகத்தான் அவரைத் தெரியும் ஆனால் அதற்குள் தனது அன்பு, பரிவு, நட்பு இவற்றால் ஒருஉறவினர் போல ஆகிவிட்டிருந்தார்.​ ​ இந்த வருட ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒரு விதத்தில் அடிக்கடி அவருக்கு உடம்பு சுகமில்லாமல் இருந்துகொண்டே இருந்தது வருத்தமாக இருந்தது.  ’இன்னும் எத்தனை நாட்கள் இருப்பாரோ’ என்று சில சமயம் நினைத்தபோதும் அவர் ஒவ்வொரு முறையும் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும்போது இத்தனை சீக்கிரம் அதுநடந்துவிடும் என நினைக்கவில்லை. கடந்த சில நாட்களாய் இணையத்தில் பலரின் அஞ்சலியைப் படிக்கிறேன்.  அவர் எனக்குப் படிக்கக் கொடுத்த சனிமூலை என்ற புத்தகத்தில் கி.பென்னேஸ்வரன் (ராகவன் தம்பி)  சொல்கிறார்;

‘தமிழ் கலை இலக்கிய சிந்தனையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய வெங்கட் சாமிநாதன் பரந்த அளவில் டெல்லியின் தமிழர்களுக்குத் தெரியாமல் போனது இந்த சமூகத்தின் அவலம்தான். தமிழ் நாடகத்தில், திரைப்படங்களில், சிறு பத்திரிகைகளின் போக்கில் மாபெரும் மாற்றங்கள் நிகழ ஒரு உந்து சக்தியாக இருந்தவர் வெங்கட்சாமிநாதன். சாமிநாதன் எங்களுக்குத் திறந்து வைத்த சாளரங்கள் ஏராளம். அவர் காட்டிய உலகத்தின் ஒரு சிறு பகுதியின் ஒரு சிறு எச்சத்தைக் கூட இன்னும் என்னால் முழுமையாக தரிசனம் செய்ய முடியவில்லை என்கிற உண்மை  என்னை எப்போதும் உறுத்திக் கொண்டே இருக்கும்.’

இவற்றை எலாம் படிக்கும்போது  இவ்வளவு பெரிய இலக்கிய ஆளுமையிடமா நாம் இத்தனை சர்வசகஜமாக பழகினோம்என ஆச்சரியமும் பிரமிப்பும் வருகிறது. அதை எல்லாம் கொஞ்சமும் வெளிக்காட்டாமல் அவர் என்னுடன் பழகியது அவர் எத்தனை பெரிய மனிதர் என்பதை எனக்குக் காட்டுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.