பெரியாரும் பாசிசத்தின் கூறுகளும்

பொதுவாகச் சொன்னால், இந்த இதழ் வரையில் சொல்வனம் தமிழகத்தின் பல அரசியல் இழுபறிகள், பண்பாட்டுச் சர்ச்சைகள் போன்றனவற்றில் அனேகமாக ஈடுபடவில்லை. ஆக்க பூர்வமானவற்றையே கவனித்திருந்தால் போதும் என்று நினைத்தது ஒரு காரணம்.
ஓரளவு இந்திய அரசியல்பொருளாதார நிலைகள் பற்றியும், பெருமளவு பன்னாட்டுத்தளத்து நிகழ்வுகளையும் பற்றி மட்டும் கவனித்திருந்தோம். இந்த இதழில் ஈ.வெ.ராமசாமி அவர்களின் இயக்கம் பற்றிய ஒரு கட்டுரையைப் பிரசுரிக்கிறோம். இது போன்ற சில கட்டுரைகளை அவ்வப்போது பிரசுரிக்கலாம் என்று ஒரு யோசனை எழுந்ததால் இப்படித் துவங்கி இருக்கிறோம்.
இங்கு வாசகர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது.
இந்தக் கட்டுரைகள் சொல்வனம் குழுவினரின் கருத்துகள் அல்ல. இவை அந்தந்தக் கட்டுரைகளை எழுதும் ஆசிரியர்களின் கருத்துகளே.
இக்கட்டுரைகள் குறித்து வாசகர்களின் மறுவினைகள் கட்டுரை ஆசிரியர்களுக்குத் தெரியப்படுத்தப்படும், அவர்கள் ஏதும் பதில் தெரிவித்தால் அவற்றை வாசகர்களுக்குக் கொடுப்போம். பொதுவாகக் கட்டுரைகளுக்கான மறுவினைகள், பதில்கள் ஆகியனவற்றை ஓரிரு இதழ்களைத் தாண்டி நீடிக்கச் செய்யவியலாது என்பதையும் கவனிக்கக் கோருகிறோம்.
வாசக மறுவினைகளைச் சுருக்கவோ, குறுக்கவோ நேரலாம் என்பதையும் தெரிவிக்கிறோம். ஏற்கக் கூடிய விதமான வெளிப்பாடுகளை மட்டுமே பிரசுரிப்போம் என்பதும், சொல்வனம் பதிப்புக் குழுவின் முடிவுகளே இறுதியானவை என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை.
– பதிப்புக் குழு

Periyar_Evr_Anna

பெரியார் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தாரா என்ற கேள்விக்கு தெளிவான பதில்கள் அவரது வாழ்க்கையிலிருந்து கிடைக்கின்றன.

ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது?

இந்தியா ஒரு முழு ஜனநாயக நாடு ஆக வேண்டும்  என்று 1928 ம் ஆண்டு வெளிவந்த மோதிலால் நேரு அறிக்கை   கூறியது.  நாடு முழுவதும் மக்கள் கண்ட கனவும் அதுவாகவே இருந்தது.
ஆனால் பெரியாரின் நிலைப்பாடு என்ன?
19 நவம்பர் 1930 குடி அரசு இதழில் இரு கேள்விகளுக்கு பெரியார் இவ்வாறு பதில் அளிக்கிறார்:

  • இந்தியாவிற்கு ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது?

இந்தியாவில் 100க்கு 90 பேர் கல்வி அறிவில்லாத எழுத்துவாசனைகூடத் தெரியாத பாமர மக்களாய் இருப்பதை முன்னிட்டு அவர்களுக்கு நன்மை தீமைஇன்னதென்று அறிய முடியாதவர்களாக இருப்பதால் தான்.

  • ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பதுதான் ஜனநாயக ஆட்சி
கிரிப்ஸ் குழு
பெரியாரின் திராவிடக் கழகம் தேர்தல்களில் பங்கு பெறவில்லை அதனால் அதில் ஜனநாயக நடைமுறைகளை எதிர்பார்ப்பது தவறு என்று கூறுபவர்கள், திராவிடக் கழகம் 1944ம் ஆண்டுதான் பிறந்தது என்பதையே மறந்து விடுகிறார்கள். அதற்கு முன்னால் பெரியார் நீதிக் கட்சியின் தலைவராக இருந்தார். நீதிக் கட்சியிலிருந்து திராவிடக் கழகம் உருவானதே ஒரு சுவாரசியமான நிகழ்வு.
1942 ம் வருடம் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் தலைமையில் பிரித்தானிய அரசு  இந்தியாவிற்கு சுய ஆட்சி வழங்குவது குறித்து இந்தியத் தலைவர்களின் கருத்தை அறிவதற்காக ஒரு குழுவை அனுப்பியது. நீதிக் கட்சியின் சார்பில் பெரியார் தலைமையில்  சில தலைவர்கள் கிரிப்ஸைச் சந்தித்தார்கள். அவரிடம் என்ன பேசினார்கள் என்பது பற்றிய விவரம் The Transfer of Power என்ற தலைப்பில் 1970 ஆண்டு வெளிவந்த ஆங்கிலபுத்தகத்தின் முதல் தொகுதியில் கிடைக்கிறது.  பார்ப்பனர் பிடியிலிருந்து மீள்வதற்காக மதராஸ் மாகாணம் இந்திய யூனியனிலிருந்து பிரிந்து தனிநாடாக  ஆக வேண்டும் என்று அவர்கள்  விரும்பினார்கள். ஆனால் அதற்கான ஆதரவு மதராஸ் மாகாணச் சட்டப் பேரவையிலிருந்தோ அல்லது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியோ பெற முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இல்லை. எனவே அவர்கள் கிரிப்ஸிடம் விடுத்த கோரிக்கை விசித்திரமானது.  எங்களுக்குத்  தனி வாக்குரிமை கொடுங்கள்,  எந்த அளவில் கொடுத்தால் பெரும்பான்மை பெற முடியுமோ  அந்த அளவில் கொடுங்கள் என்று கேட்டார்கள். கிரிப்ஸ் சொன்ன பதிலின் சாரம் இது: நீங்கள் சென்னை மாகாண மக்களை உங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கும் வரை, ஜனநாயக முறைப்படி நீங்கள் விரும்பும் பெரும்பான்மையை உங்களுக்குத் தர இயலாது.
கிரிப்ஸுடன் நடந்த கூட்டத்தில் என்ன நடந்தது என்பதைப் பெரியார் கட்சிக்குத் தெரிவிக்கவில்லை.  எனவே நீதிக் கட்சியில் பெரியார் ஜனநாயக முறைப்படி நடந்து கொள்ளவில்லை என்று பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மே 1942ம் ஆண்டு இளம் நீதிக் கட்சியினர் பெரியார் கட்சி வேலைகளில் கவனம் செலுத்துவதில்லை, கட்சி கூட்டங்களை நடத்துவதில்லை  போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து கட்சியின் தலைமை மாற வேண்டும், சண்முகம் செட்டியார் தலைமை ஏற்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றினர். அண்ணாவும் சண்முகம் செட்டியார் தலைமை ஏற்பதைப் பெரியாரே விரும்புவார்  என்று திராவிட நாடு பத்திரிகையில் எழுதினார்.  பல திருப்பங்களுக்குப் பின்னால் திராவிடக் கழகம் பிறந்தது. நீதிக் கட்சியின் பழுத்த தலைவர்கள் பெரியார் ஜனநாயக முறைகளைப் பின்பற்றவில்லை என்று குறை கூறிக் கொண்டிருந்தாலும், கட்சித் தொண்டர்களுக்கு இடையே பெரியாருக்கே செல்வாக்கு இருந்தது என்பதை மறுக்க முடியாது.
சேலம் மாநாடு
திராவிடக் கழகத்தின் தலைமையை ஏற்ற பிறகும், அவர் மாறவில்லை.  பெரியார் பெரியாராக இருந்ததால் அவரிடம் ஒளிவு மறைவு இல்லை.
1944ம் ஆண்டு நடந்த சேலம் மாநாட்டில் அவர் பேசியதின் சாரம்:
நான் தலைவராக இருந்தபோது எனக்குத் தோன்றியதைச் செய்தேன். யாருடைய கருத்தையும் நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் நினைத்தது  எப்போதுமே சரியென்றுதான் இருந்தேன். என்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்ள எந்தத் தேவையும் ஏற்படவில்லை. நான் தலைவனாக இருக்கிறபடியால் மற்றவர்கள் நான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்.
இந்தக் கெடுபிடி அண்ணாவிற்குப் பிடிக்கவில்லை.
1947 ஆகஸ்டு பதினைந்தாம் நாளை “திராவிடருக்குத் துக்கநாள் என்று பெரியார் எவரையும் கலக்காமல் உள்ள நிலையை ஆராயாமல் அறிக்கை விடுத்தார்.  இவ்வறிக்கையை அண்ணா வரவேற்கவில்லை. மாறாக தனது எண்ணத்தை திராவிடநாடு இதழில் எழுதி பெரியாரின் பகைமையைத் தேடிக் கொண்டார்” என்று பார்த்தசாரதி தனது ‘திமுக வரலாறு’ நூலில் சொல்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம்
இருவருக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் போராக மாறியது மணியம்மையாரைப் பெரியார் திருமணம் செய்தபோது.
தானே தலைவனாய், எழுத்தாளனாய் பேச்சாளனாய், என்று தான் ஒருவரால் மட்டுமே இயக்கம் வளர்வதாகப் பெரியார் இதுவரை கூறிவந்தார். அவரது மதிப்பைக் காலிழந்தும், கண்ணிழந்தும் பொருளிழந்தும் தியாகத் தழும்புகளைப் பெற்ற தொண்டர்கள்  பெற்றதில்லை. கட்சியின் வளர்ச்சி தன்னால் தான் என்று சொல்லி வந்தாரே தவிர உண்மையாக யாரால் என்பதை அவருடைய உள்ளம் உரைத்தது கிடையாது.  கழகத் தொண்டர்களை அவர் பாராட்டியது இல்லை என்பது மட்டுமல்ல; அவரது மிரட்டலுக்கும் ஆடும்படியும் வைத்து வந்தார்.” என்று அண்ணா எழுதினார்.
இதுமட்டுமல்ல, பெரியாரை ஒரு பாசிசவாதி என்றும் அண்ணா சொன்னார்.
பாசிசத்தையும் பழைமையையும் நாட்டிலே படையெடுக்க விடக்கூடாது – அது போல கழகத்தில் பாசிசத்தை வளர்த்துள்ள தலைமையில் இனியும் இருந்து பணியாற்றவும் கூடாது. நாட்டைப் பாழ்படுத்தும் சக்திகளை எதிர்த்துப் போராடும் செயலையும் மறக்கக் கூடாது – அதுபோல், ஜனநாயகத்தை – தன்மானத்தை அழிக்கும் போக்கினை மேற்கொண்டுவிட்ட தலைவரிடம் இனிக்கூடிப் பணியாற்றுவது என்பது முடியாத காரியம்.
ஏன் நம்பிக்கை இல்லை?
ஜனநாயகத்தின் மீது அவருக்கு ஏன் நம்பிக்கை இல்லை என்ற கேள்விக்கு அவரது எழுத்துக்களில் விடை இருக்கிறது.
1931ம் ஆண்டில் சொன்னது: ”இன்றைக்கு வெள்ளைக்கார ஆட்சியோ ஆதிக்கமோ ஒழிய வேண்டும் என்று சொல்கிறவர்களில்  காந்தி அவர்கள் உட்பட 100க்கு 90 பேரின் எண்ணமெல்லாம் மனித தர்ம ஆட்சியை இந்த நாட்டில் தலைகாட்டச் செய்யாமல் இருக்கச் செய்யவும் மனுதர்ம ஆட்சியை நிலைநிறுத்தச் செய்யப்படும் முயற்சியில்தான் உள்ளது எனச் சொல்ல வேண்டும். இதைப் பாமர மக்கள் சரிவர உணராமல் மோசம் போய்க் கொண்டிருப்பதனால் இந்த நிலைமை வளர்ந்து கொண்டே இருக்கின்றது
தன்னைச் சுற்றியிருப்பவர்கள்  மனுதர்மத்திற்குப் பலிகடா ஆகிவிடுவார்களோ என்ற எண்ணம் அவருக்குக் கடைசி வரைப் போனதாகத் தெரியவில்லை. மனுவின் மாறுவேடம் ஜனநாயகமாக இருக்கலாம் என்ற  அடிப்படைச் சந்தேகம் அவருக்கு இருந்தது.
அந்தச் சந்தேகமே அவரை வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் விடாப்பிடியான நிலைப்பாடுகளை எடுக்க வைத்தது என்று கருத இடம் இருக்கிறது.  இது அவர் கீழ்வெண்மணிக் கொலைகள் நடந்தபோது சொன்னது:
ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது.
இதுவும் அவர் பார்ப்பனருக்கு மத்தியில் பேசும்போது சொன்னது:

பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.
இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

ஆங்கில நாட்டுத் தன்மையை ஜனநாயகம் இல்லாமல் எப்படிக் கொண்டுவருவது?  இரண்டு வழிகள் அவர் காலத்தில் பேசப்பட்டன. ஒன்று கம்யூனிசம். மற்றொன்று பாசிசம். பெரியார் கம்யூனிஸ்டுகளைப் பற்றி என்ன நினைத்தார் என்பதை அறிய அவரது கடைசிச் சொற்பொழிவைக் கேட்கலாம்.
இது மற்றொரு தருணத்தில் சொன்னது:
கம்யூனிஸ்டுகள் என்போர் ஏதோ சில பணக்காரர்களைத் திட்டுவதும், அதிலே கஷ்டப்படும் தொழிலாளி ஜே போடுவதையுந்தான் பொதுவுடைமை என்று இந்நாட்டிலே கருதப்படுகிறதேயன்றி, பார்ப்பனர்களில் மட்டும் ஏன் பாடுபடும் தொழிலாளி இல்லை என்பதற்குக் காரணங்கள் என்ன கற்பிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவைகளை ஒழித்து யாவரும் சரிநிகர் சமானமாயிருக்க வழி வளரச் செய்தார்களா?
மிஞ்சியிருப்பது எது?
ஒரு குறிப்பிட்ட குழுவினரை வெறுப்பதின் மூலமே எல்லாம் சரியாகி விடும் என்று அவர் திடமாக நம்பினார். யூதர்களை அழித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று ஹிட்லர் நம்பியது போல.
அவர் தெளிவாகச் சொல்கிறார் நான் வெறுப்பது பிராமணர்களைத்தான் என்று:
நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன். திருடனை வெறுக்கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பதுபோல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன்திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுத் தனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான்பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை ஒழிக்கப் பாடுபடுகிறேன்.
இன்னும் தெளிவு வேண்டுமா? இதைப் படியுங்கள். 1968ல் அவர் சொன்னது:
அரசர்களை ஒழிப்பதற்கென்று பல நாளாகக் கிளர்ச்சிகள் குடிமக்களாலேயே செய்யப்பட்டு, சில அரசரைக் கொன்றும் சிலரை விரட்டியும் விட்டு, அரசனல்லாத ஆட்சியையே உலகில் பெரும்பாகத்தில் மக்கள் ஏற்படுத்திவிட்டார்கள் என்றாலும், அதாவது அரசன் ஒழிக்கப்பட்டு விட்டான் என்றாலும், அரசன் செய்து வந்ததுபோல் மக்களை அடக்கி ஆளும் ஆட்சி என்பதாக ஒன்று இன்று மக்களுக்கு அவசியம் வேண்டியதாகவே இருக்கிறது.
இப்படி தேவையிருக்கும் ஒரு ஆட்சிக்கு “அரசன் என்பதாக ஒருவன் தேவை இல்லை. மக்களாகிய நாமே ஆட்சித் தலைவனாக இருந்து கொண்டு ஆட்சி நடத்திக் கொள்ளலாம்” என்று மக்கள் கருதியது அல்லது யாரோ சிலர் கருதியது என்பது மாபெரும் முட்டாள்தனம் அல்லது அயோக்கியத் தனமேயாகும். இதன் பயன் என்னமாய் முடியுமென்றால், மக்களுக்கு ஏற்கெனவே இருந்து வரும் கெட்ட குணங்கள், கூடாத குணங்கள் என்று சொல்லப்படுபவையான பொய், புரட்டு, பித்தலாட்டம், ஏமாற்றுதல், வஞ்சித்தல், கொலை, கொள்ளை, பலாத்கார காலித்தனம், அமைதி இன்மை, குழப்பம் முதலிய சமுதாய வாழ்வுக்குக் கூடாததான காரியங்கள் நடைபெறவும், நாளுக்குநாள் மக்கள் இவற்றில் ஈடுபடவுமான, மக்களின் சமூக வாழ்வுமுறை கெடவுமான நிலை ஏற்பட்டுத் தாண்டவமாடு வதுதான் விளைவாக இருக்கும், இருந்தும் வருகிறது.
இவற்றைப்  பாசிசத்தின் கூறு என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
பெரியார் ஹிட்லர் நடந்த பாதையில் நடக்கவில்லை என்பது உண்மை. அவர் தனிப்பட்ட முறையில் நயத்தக்க நாகரீகத்தைக் கடைப்பிடித்தவர் என்பது உண்மை. வன்முறையை என்றுமே விரும்பாதவர் என்பதும் உண்மை. கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதெல்லாம் கோபத்தில் கூறியது.
ஆனால் ஜனநாயகத்தின் மீது அவருக்கு இருந்த அடிப்படை அவநம்பிக்கையும் சந்தேகமும் அவரை பாசிஸ்டுகள் எடுத்த நிலைப்பாட்டை, அவரை அறியாமலே, எடுக்க வைத்தது என்று நான் கருதுகிறேன்.  ஆனால் அவரது இன்றையத் தொண்டரடிப்பொடிகள், அத்தகைய நிலைப்பாட்டை அறிந்தே எடுக்கிறார்கள். தாங்கள் இதுநாள் வரை நடத்தி வந்த சமதர்ம நாடகம் மக்களுக்குப் புரிந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக எடுக்கப்படும் நிலைப்பாடு அது.  இவர்களுக்கும் பெரியாரைப் போல ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. உண்மையில் நம்புவது பாசிசம்தான். அவர் அறியாமல் வெளிப்படையாகச் சொன்னார். நம்பினார். இவர்கள் அறிந்து மறைமுகமாகச் சொல்கிறார்கள்.

17 Replies to “பெரியாரும் பாசிசத்தின் கூறுகளும்”

  1. பாசிசம் என்றால் என்ன என்று இதுவரை இருந்து வரும் அர்த்தத்திற்கு நேர்மாறான ஒரு அர்த்தத்தை தரும் கட்டுரையை எழுதி உள்ளது வியப்பை தருகிறது
    1930 களில் யார் யாருக்கு வோட்டுரிமை இருந்தது,வோட்டுரிமை பெற அடிப்படை தகுதிகள் எவை ,வோட்டு போடும் உரிமை பெற்றவர்கள் எத்தனை சதவீதம் என்பதை விளக்கி இருந்தால் பல உண்மைகள் விளங்குமே.மக்கள் தொகையில் மிக குறைந்த மக்களுக்கே வோட்டுரிமை இருந்த காலகட்டம் அது. உலகெங்கும் வோட்டுரிமை பெற்றவர்கள் எண்ணிக்கை வெகு குறைவு.வோட்டுரிமைக்கு தகுதி இல்லாதவர்கள் தான் மிக பெரும்பான்மை.பெண் என்பதால்,சொத்து இல்லாததால்,குறிப்பிட்ட பகுதி,கூட்டத்தை சார்ந்தவர்கள்,குற்ற பரம்பரையினர்,பழங்குடிகள் என்று வோட்டுரிமை மறுக்கப்பட்டவர்கள் தான் அதிகம்.
    வோட்டுரிமையை பெரும்பான்மை மக்களுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையை திரித்து அன்று இருந்த சிறுபான்மை மக்களுக்கு மட்டுமான வோட்டுரிமையை உண்மையான மக்கள் ஆட்சி,அனைத்து மக்களுக்குமான ஒன்று போல எழுதுவது நியாயமான செயலா.அனைவருக்கும் வோட்டுரிமை இருப்பது போலவும் அதை மாற்ற வேண்டும் என்று பெரியார் கூறியதற்கு வெள்ளைகார துரை நியாயமற்ற கோரிக்கை என்று மறுத்தார் என்று எழுதுவது நல்ல நகைச்சுவை
    பெரியார் பெரும்பான்மை மக்கள் நம்பிய பல விஷயங்களுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தவர்.இன்றும் சாதி கடந்த திருமணம்,பெண்களுக்கு சொத்துரிமை ,ஒரே கோத்திர திருமணம் ,ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம்,எளிதான மணவிலக்கு மதம் மாறும் உரிமை வேண்டுமா வேண்டாமா என்றால் பெரும்பான்மையினர் வேண்டாம் என்று தான் முடிவு எடுப்பார். அப்படி அவர்கள் முடிவு எடுத்தால் அது சரி என்று ஆகி விடுமா
    இன தூய்மைக்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வந்தவருக்கு எதிராக எவ்வளவு வன்மம்.இதை அவர் சொன்னவற்றிற்கு எதிரானவன் என்பவர் செய்தால் புரிந்து கொள்ளலாம்.ஆனால் இட ஒதுக்கீடு,பெண் விடுதலை,மதம் மாறும் உரிமை,சாதி கடந்த திருமணங்கள் ,மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவன் என்று சொல்லி கொள்ளும் கடவுள் நம்பிக்கை அற்ற ஒருவர் செய்வதை தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
    பெரியார் வெள்ளையர்களிடம் இருந்து ஆட்சி மத வெறியர்களிடம் செல்வது பெரும்பான்மையான ஏழை,எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கும் என்று நம்பினார். அதை வெளிப்படையாக சொல்லவும் செய்தார் . நீங்களும் பெரியார் வழியில் தமிழ் தேசியம்,தனி தமிழ்நாடு என்பது ஏழை எளிய மக்களுக்கு தீங்காக தான் இருக்கும் என்று நம்புவது போல.
    பெரும்பான்மையான நாக இன மக்களோ,கஷ்மீரிகளோ ,தமிழர்களோ தங்கள் இன தூய்மையை பாதுகாக்க வெளியாட்களை வெளியேற்ற வேண்டும் எனு பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு தீர்மானம் இயற்றினால் அதை எதிர்ப்பவர்கள் மக்கள் ஆட்சிக்கு எதிரானவர்கள் ,பாசிஸ்ட்கள் என்பீர்களா . நீங்கள் இன்று இந்தியாவோடு இருப்பது தான் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள,ஏற்று கொள்ள முடிகிறது.அதே தான் மத வெறியர்களின் கையில் ஆட்சி சிக்குவதை விட neutral umpire வெள்ளையன் மேல் என்று பெரியார் எண்ணியதன் பின் உள்ள நியாயமும் என்பதை உங்களால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை
    தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று எழுதிய பாரதியை உலகையே அழிக்க எண்ணிய கொலைக்காரன், ஒரு வேலை உணவு கிடைக்கவில்லை என்பதற்காக அனைவரையும் கொல்ல வேண்டும் என்று பாடியவன் என்று வசைபாடுவதற்கும் நீங்கள் பெரியார் மீது பொழியும் வசைகளுக்கும் வித்தியாசம் கிடையாது.

  2. Periyar is icon/symbol of social reforms. He may have his flaws. But that does not reduce social evils he fought against.
    By discrediting/belittling him, you can not douse the fire he started and injustices that were and are prevalent.
    you better talk on how it could have been done differently. That would be constructive.
    You are following age old trick.

  3. ஜனநாயத்தை அறவியலுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். அதிகாரம் கையில் இருப்பவர்கள் மறைமுகமாக தங்கள் காரியங்களுக்கு ஜனநாயகப்பூர்வமாக ஒப்புதலை வாங்கி விடுவார்கள். பாசிசத்தின் நிகழ் உதாரணமாகக் காட்டப்படும் இட்லர் கூட, ஜனநாயகப்பூர்வமாக ஜெர்மானிய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவன்தான்.
    ஒருவரிடம் இருக்கும் பாசிச கூறுகளை அவரது அறவியலை வைத்துதான் மதிப்பிட முடியம். அவர் பெறும் வாக்குகளை வைத்தல்ல. இன்று ஜனநாயகத்தை manipulate செய்து அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும், உண்மையில் அராஜகவாதிகள்.
    ஜனநாயகம் என்பதே மாற்றுக் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்கும் பண்புதான். அதன் மூலம் தனது கருத்துகளை சீர்தூக்கிப் பார்த்துச் செம்மைப் படுத்திக் கொண்டிருப்பதுதான். அதைப் பெரியார் செய்து கொண்டுதான் இருந்தார்
    .

  4. What was the intention of this writing? It seems the author struggled so much connect Periyar to fascism, its almost repeated once in every paragraph and also the fact 90% of people were illiterate by then also gets keep repeating.
    Almost, it feels like, if the author keeps repeating things, someone will take it for true.
    If at all, the author used his backbone s to fight or state current day issues, at least you would thing he has a point. Where he plays it safe till the end of article and make a point and ends the article abrupt.
    Where he succeeded in his novel going through less known pages of history of Tamil nadu, here he fails miserably trying to rewrite history. The public empathy is against Dravidian political parties, but it will never go back to the golden days of brahmins and you would never able to tarnish Periyar’s achievements.

  5. என் நண்பர்கள் சிலர் சொல்வனத்துக்கு இந்த அரசியல் அக்கப்போர் எல்லாம் தேவையா என்று அலுத்துக் கொண்டார்கள். ஆனால் சொல்வனம் இந்தக் கட்டுரையைப் பதித்தது என் கண்ணில் சரியே.
    ஆம் இதனால் அக்கப்போர் உருவாகும்தான். ஆனால் ஒரு பத்து பேராவது பிஏகே சொல்வதில் உள்ள உண்மைகளைப் புரிந்து கொள்ள மாட்டார்களா? சொல்வனத்தின் குறிக்கோளே அந்தப் பத்து பேர்தான் என்று நினைக்கிறேன், அது நல்ல விஷயம்தான்.
    ஒரு காலத்தில் ஈவெராவால் தமிழகத்தில் ஜாதி உணர்வு வட மாநிலங்களை ஒப்பிடும்போது ஓரளவாவது குறைந்தது என்று நினைத்திருந்தேன். இப்போது அவரால் ஒன்றும் கிழிக்க முடியவில்லை, ஜாதி உணர்வு ஓரிரு தலைமுறைக்கு மறைக்கப்பட்டிருந்தது, இப்போது இன்னும் தீவிரமாக வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன். அவரால் முடிந்தது ஒன்றுதான் – அரசியல் தலைமை இடைநிலை ஜாதிகளுக்கு மாறுவதை கொஞ்சம் விரைவுபடுத்தினார். அதை விரைவுபடுத்த தடாலடியாக நிறைய பேசி இருக்கிறார், அது வெறுப்பு அரசியலாகத்தான் உருவாகி இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அவர் ஒரு “புனிதப்பசு”, ஏறக்குறைய இறைத்தூதர், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர். இங்கே கூட அவரை ஆதரித்து எழுதும் எவரும் பிஏகேவின் மேற்கோள்களைப் பற்றி வாயைத் திறக்கமாட்டார்கள், அவர் நல்லவர்-வல்லவர் அதை செய்தார்/இதை செய்தார் என்று மட்டும்தான் எழுதுவார்கள். பிஏகே மாதிரி நாலு பேர் முன்வந்தால்தான் அவர் சொன்னதில் எதை நிராகரிக்க வேண்டும் என்று கொஞ்சமாவது பிரக்ஞை இருக்கும்.
    கோல்வால்கர் தேசபக்தர்தான், ஆனால் அவரது வெறுப்பு அரசியல் பற்றிய பிரக்ஞை இருக்கிறது. ஈவெராவால் இரண்டு மூன்று தலைமுறைக்காவது ஜாதியை மறந்துவிட்ட மாதிரி நடித்தார்கள், ஜாதி அரசியலை வெளிப்படையாக செய்ய முடியாத நிலை இருந்தது, ஆனால் அவரது வெறுப்பு அரசியல் பற்றி பிராமணர்கள் தவிர வேறு யாரும் பேசுவதாக எனக்குத் தெரியவில்லை. சரி அவர்களாவது தொடரட்டுமே! பிஏகேவை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன், அவர் பிராமண ஜாதியில் பிறந்தவர், பிராமணர் அல்லர். ஆனால் இங்கே அவரை மறுத்துப் பேசுபவர்கள் பலரும் அவர் ஜாதியை இழுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

  6. பெரியாரை பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் தன் வாழ்வின் பெரும்பகுதியை கழித்த பிராமணராக பிறந்த விடுதலைக்காக பாடுபட்ட தியாகி ஒருவரின் கருத்து. அவர் பெரியாரை பற்றி கூறும் வார்த்தைகளில் இருந்து அவர் பெரியாரை பற்றி வைத்திருந்த எண்ணம் விளங்கும்
    http://gandhiashramkrishnan.blogspot.in/2011/09/blog-post_3020.html
    நான் பிறந்ததும் 20 வயது வரை வாழ்ந்ததும் சன்னியாசிக் கிராமம் என்ற அக்கிரகாரத்தில். மிகுந்த வைதிக எண்ணங் கொண்ட பிராமணர்கள் (அய்யர், அய்யங்கார்கள்)தான் அந்த இரட் டை வரிசையான சுமார் அறுபது வீடுகளில் வாழ்ந்தார்கள். நாடார்கள், பள்ளர் கள், சக்கிலியர் போன்றவர்கள் அந்தத் தெரு வழியாக நடந்து போகக் கூடாது. இந்த இனத்தவர் யாவரும் பாடுபட்டு உழைத்து ஜீவனம் செய்பவர்கள். கண்ணியமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள். இந்தத் தெருவும் நெல்லை நகராட்சிக்கு உட்பட்டது. குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆற்றின் கரை யோரமாக வசிப்பவர்கள். அக்கிரகார வீடுகளில் சாப்பிட்ட பின் வெளியே தூக்கியெறியும் எச்சில் இலைகளில் ஏதாவது மிச்சம் கிடைக்குமா என நாய்களுடன் போட்டி போட்டுக் கொண்டு எவ்வித அவமான உணர்ச்சியும் இல்லாது வாழ்ந்தவர்கள். இவர்கள் அக்கிரகாரத்துக்குள் வந்து போவதில் அந்தத் தெருக்காரர்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஒரு முறை அந்தத் தெருவுக்கு ரோடு போட நகராட்சி ஏற்பாடு செய்தது. குறவர்கள் மற்றும் அந்தத் தெருவுக்குள் வரத் தகுதி பெற்றிருந்த இதர வகுப்பினரைக் கொண்டுதான் ரோடு போட வேண்டும் என்றும் வரத் தகாதவர்களைக் கொண்டு ரோடு கூடாதென்றும் தங்கள் ரோட்டுக்கு சரளைக்கல் போட வேண்டாமென்றும மூர்த்தண்யமாக மறுத்து விட்டார்கள். இது 1921 ஆம் ஆண்டில் நடந்தது. Modern Review என்ற ஆங்கிலப் பத்திரிகையில் (கல்கத்தாவிலிருந்து வெளியிடப்பட்டது) The Holy Lunatics of Sannyasigramam – Tirunelveli do not want any civic amenities because of their caste bigotry என்று எழுதிற்று.
    இன்று அப்படியா? பிராமணப் பெண்கள் பலர் அன்றைய தீண்டத் தகாத இனத்தவர் மனைவிகளாக உள்ளனர். அந்தத் தெரு வீட்டு மாடிகளில் இதர இனத்துப் பையன்கள் வாடகைக்குத் தங்கி கல்லூரிகளில் படிக்கின்றார்கள். எத்தனையோ சீர்திருத்த வாதிகள் அவ்வப்போது தோன்றி ‘குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று வலியுறுத்தி வந்திருக்கி றார்கள். காந்தி யடிகளின் அறிவுரைகளால் அகில இந்திய ரீதியிலும், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தினால் தமிழகத்திலும், மற்றும் மத்திய மாநில சட்டங்களாலும் சாதி ஏற்றத் தாழ்வு வெளித் தோற்றத்தில் வெகுவாகக் குறைந்துதான் காணப்படுகிறது. ஆயினும் அன்று அத்தனை சாதி ஏற்றத் தாழ்வுகளுக் கிடையேயும் அன்பும் மரியாதையும் பரஸ்பரம் இருந்து வந்தது. ஆனால் இன்றோ துவேஷ உணர்ச்சியும் மரியாதைக் குறைவும் வெளிப்படை யாகக் காணப்படுகின்றது. இவையெல்லாம் இயற்கையின் வளர்ச்சிப் பரிமாணங்கள் (Evolution) என்றே கொள்ள வேண்டும். விஞ்ஞான வளர்ச்சி காரணமாக ரயில் பஸ் பயணங்கள், சினிமா, காப்பி ஓட்டல், பொருளாதார ஏற்றங்கள் போன்றவற்றால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன வென்றும் காந்திஜிக்கோ, தந்தை பெரியாருக்கோ, அறிஞர் அண்ணாவுக்கோ விசேஷ ஏற்றங்கள் காட்டித் துதிக்க வேண்டியதில்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து. It is a natural social evolution due to various causes but these leaders have quickened the pace.

  7. இடைநிலை சாதிகள் என்று பொதுவாக எந்த எந்த சாதிகளை சொல்கிறீர்கள்.மொத்தம் முன்னூறுக்கு அதிகமான சாதிகள் தமிழ்நாட்டில் மட்டும் இருக்கின்றன.
    இதில் எந்த எந்த சாதிகள் வன்கொடுமைகளில் முன் நிற்கின்றன.எந்த சாதிகள் மிகவும் பாதிக்கபடுகின்றன .நீங்கள் மிகவும் வியந்தோந்தும் அதிக வோட்டுக்கள் கிடைத்தால் அவர்கள் செய்வது அனைத்தும் சரி,அந்த முறையை எதிர்ப்பவர்கள் பாசிட்டுகள் எனும் மக்கள் ஆட்சி முறை வன்னியர்,முக்குலத்தோர்,கொங்கு கௌண்டர் போன்ற 3.4 சாதிகளுக்கு மட்டும் தான் எண்ணிக்கை பலத்தின் காரணமாக ,குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கும் பெரும்பான்மை காரணமாக அதிக அரசியல் அதிகாரம் கிடைக்க காரணமாக இருக்கிறது.
    எப்படி ஹிந்து மத வெறியை தூண்டி 20 ஆண்டுகளில் குஜராத்தில் ஒரு இஸ்லாமியர் கூட தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் ஆளும் கட்சியாக பா ஜ க இருக்க முடிகிறதோ அதே போலே தன்னால் ஒடுக்கப்படும் சாதிகளின் வோட்டுக்கு அவசியமே இல்லாமல் தர்மபுரியிலும்,உசிலம்பட்டியிலும்,தொண்டாமுதூரிலும் வெற்றி பெற முடிகிறது.
    மேலே கூறப்பட்ட சாதிகளின் முக்கிய எதிரி பெரியார் தான்.மற்ற அனைத்து மாநிலங்களிலும் உயர்சாதி அல்லது அதிக எண்ணிக்கை இருக்கிற இடைநிலை சாதிகளில் இருந்து பெரும்பாலான கட்சிகளின் தலைமை மற்றும் முக்கிய பொறுப்புக்கள் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் மிக குறைவான எண்ணிக்கை கொண்ட போட்டு கட்டி விடும் வழக்கத்தை கொண்ட சாதிகளில் இருந்து அண்ணாதுரை மற்றும் கலைஞர்,சாதிவிலக்கம் செய்யப்பட்டு சண்டாளராக மாற்றபட்டவருக்கும் அன்றைய தீண்டத்தகாத சாதியான ஈழவருக்கும் பிறந்த எம் ஜி ஆர் தலைமைக்கு வர முக்கிய காரணம் பெரியார் என்பதே எண்ணிக்கை அதிகம் உள்ள சாதிகளின் சாதி தலைவர்களின்,சாதி வெறியர்களின் எரிச்சல்.
    குறிப்பிட்ட பகுதிகளில் எண்ணிக்கை அதிகம் உள்ள சாதிகள் மற்ற அனைத்து சாதிகளையும் அடக்கி ஆள முயற்சித்து வருவது,சில இடங்களில் வெற்றியும் பெறுவது தான் இன்றைய கட்சிகளில் இட ஒதுக்கீடு இல்லாத தேர்தல் ஜனநாயகத்தின் சாதனை.அவர்களுக்கு எதிராக போராடும் அளவுக்கு எண்ணிக்கையும் துணிவும் இருக்கின்ற சாதி குழுக்கள் பட்டியல் இனத்தின் கீழ் வரும் சாதிகள் தான்.
    கட்சிகளுக்குள் இட ஒதுக்கீடு வரும் போது,ஒவ்வொரு கட்சியும் கட்டாயம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிறுபான்மையினருக்கு ,சாதி குழுக்களுக்கு ,பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும்.கட்சியின் முக்கிய பொறுப்புக்கள்,பொது குழுவில் குறிப்பிட்ட சதவீதமாவது இவர்களில் இருந்து கட்டாயம் இருக்க வேண்டும்.அமைச்சரவையில் குறிப்பிட்ட சதவீதம் இவர்களில் இருந்து இருக்க வேண்டும் என்ற மாற்றங்கள் வரும் போது ஒரு சாதி,ஒரு மத கட்சிகளான முஸ்லிம் லீக் ,பா ஜ க,பா ம க,கொங்கு மக்கள் கட்சி போன்ற கட்சிகள் மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
    மற்ற மாநிலங்களில் அதிக எண்ணிகையில் இருக்கும் சாதிகளின் கீழ் தேசிய கட்சிகளும் ,மாநில கட்சிகளும் இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் அது இல்லாத நிலைக்கு யார் காரணம் என்று ஆராய்ந்தால் பெரியாரால் ஏற்பட்ட மாற்றம் விளங்கும்.ஆர் எஸ் எஸ் இல்,பா ஜ க வில் பல ஆண்டுகள் இருந்தாலும் எடியுரப்பா பின் செல்பவர்,வருபவர் அவர் சாதி மக்கள் தான். அவருக்கு பின் முதல்வரான ஆர் எஸ் எஸ் காரர் கௌடா பின் கட்சிக்கு உள்ளேயே ஆதரவு இருப்பது அவர் சாதி மக்களிடம் மட்டும் தான்.முன்னாள் முதல்வராக,பிரதமராக இருந்தாலும் தன் மாநிலத்திற்கு என்று பலவற்றை கொண்டு வந்தாலும் தேவ கௌடா பின் பெரும்பான்மையாக இருப்பவர்கள் அவர் சாதியை சேர்ந்தவர்கள் தான்
    சாதிகளை கடந்து பல்வேறு சாதிகளை சார்ந்தவர்களால் தலைவர் என்று கொண்டாடப்படும் தலைவர்கள் இங்கு தான் உண்டு. மற்ற மாநிலங்களில் சினிமா நடிகர்களுக்கு கூட சாதி சார்ந்த ஆதரவு தான் அதிகம்.
    மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது பொது பிரிவினர் ,பின்தங்கிய வகுப்பு,பட்டியல் இனத்தவரின் வளர்ச்சி இங்கு அதிகம். இதில் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்களின் வளர்ச்சி /அரசியல் அதிகாரம் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் மிக அதிகம் என்பதற்காக பெரியார் தூற்றபடுவது தான் விளங்கி கொள்ள முடியாத ஒன்று.
    ஒரு சில சாதிகள் அதிக அளவில் அரசியல் அதிகாரம் பெற ,மற்றவர்களின் உதவி தேவைபடாததால் அவர்களை மதித்து உறவாட வேண்டிய அவசியம் இல்லாத நிலை இருக்க முக்கிய காரணம் நாம் இன்று பின்பற்றும் தேர்தல் முறை தான்

  8. பெண்கள் ,பெண் விடுதலையை நோக்கி போராடியவர்கள் ஆண்களை பற்றி எழுதியதை ,கூறியதை படித்தால் இதை விட பலமடங்கு ஆண்களின் மீதான ஆத்திரம் வெளிப்படும்.
    மற்ற சாதிகளோடு சேர்ந்து பிராமண மாணவர்கள் உணவு அருந்த தடை இருந்த காலகட்டம் அது.எந்தெந்த சாதிகள் அக்கிரகாரத்தில் நுழைந்து சாலை போடலாம் என்று பிராமணர்கள் போராடிய காலகட்டம் அது.குறிப்பிட்ட சாதிகள் வந்து தான் சாலைகள் போட வேண்டும் என்றால் எங்களுக்கு சாலைகளே வேண்டாம் என்று போராடிய காலத்தில் முக்கிய பொறுப்புக்களில் இருந்து பாராமுகமாக இவற்றை ஆதரித்த,தேவதாசி முறையை எங்கள் கலாசாரம் அதில் தலையிடாதா என்று கூக்குரலிட்ட பிராமண தலைவர்களுக்கு எதிராக எழுந்த குரல் அது
    கைம்பெண்ணான தன் மகள்,தங்கை,அக்காவிற்கு,தோழிக்கு மீண்டும் திருமணம் நடைபெற தடையாக இருந்தவர்களை,அவர்கள் சொல்லை கடவுளின் வாக்காக பார்த்து பெண்களை இழிவாக நடத்துவதை பார்த்து பொங்கி எழுந்த குரல் அது
    எனக்கும் Ananthakrishnan Pakshirajanஅவர்களுக்கு மிகவும் பிடித்த அல்லோபதி மருத்துவத்தை தந்த ,கீழ்சாதி என்று இருந்த புலையர்,ஈழவர் ,மஹர்,பள்ளி,பள்ளர்,பறையர் இனத்தில் இருந்து ராணுவ வீரர்களை உருவாக்கிய வெள்ளையனை எதிர்த்து பிராமண தலைவர்கள் பேசாத பேச்சா
    கைம்பெண் மணம் எவ்வளவு பெரிய பாவம் ,தரிசு நிலம்,கைம்பெண் எப்படி வாழ வேண்டும் என்று இன்றுவரை பேசும் எழுதும் பிராமணர்களுக்கு ,ஆச்சாரியர்களுக்கு குறைவு கிடையாது.
    கேவலம் மாட்டு கறி உண்ணும் மிலேச்சன் ,பஞ்சமன் என்று தானே அரசு அதிகாரியை சுட்டு கொன்ற வாஞ்சிநாதன் ஐயர் தன் கடிதத்தில் எழுதி இருந்தார்.கேவலம் மாட்டு கறி உண்பவன்,மாமிசம் உண்பவன் என்று சொல்பவர்களை கடவுள் என்று எண்ணாதே அவர்களும் மனிதர்கள் தான்,கடவுள் அல்ல என்று அறியாமையில் இருந்த மக்களுக்கு எப்படி உணர்த்துவது.
    ஆண் இனத்தை திட்டாமல் ,அவர்கள் தேவையே இல்லை ,எந்த ஆணும் வாய்ப்பு கிடைத்தால் பெண்ணிடம் வன்முறையை பிரயோகிக்க தயங்க மாட்டான் என்று கடிந்து கொள்ளும் பெண்ணிடம் உள்ள நியாயத்தை உணர்ந்து கொள்பவர்கள் பெரியாரை புரிந்து கொள்ள முடியும்.ஆனால் சாதி பெருமை கொண்டவர்களை ,பொட்டு கட்டி விடுதல் ,குழந்தை திருமணம் , எங்களின் பெருமைமிகு கலாசாரம் என்றவர்கள்,வெள்ளையனை ,பிறரின் உணவை வைத்து அவர்களை இழிவாக எண்ணியவர்களை ,பிலேகு நோய் பரவ காரணமான எலிகளை ஒழித்த வெள்ளைய அரசு அதிகாரிகளை கொன்றவர்களை ,இது போன்ற கொலைபாதக செயல்களை செய்ய தூண்டியவர்களை தியாக சீலர்களாக கொண்டாடுபவர்களுக்கு பெரியார் மிக பெரிய மூர்க்கராக/பாசிஸ்டாக தான் தெரிவார்.
    வெள்ளைய அதிகாரிகளை, வெள்ளையர்களின் மனைவி ,குழந்தைகளை வெறிகொண்டு அழிதவர்களில் பெரும்பான்மையானோர் எந்த சாதி குழுவை சார்ந்தவர்கள் என்று பார்க்கலாமா
    This is one of your post sir and I will quote your reply where you eulogise people who attacked ,killed whites including women and families just because they where whites
    https://www.facebook.com/pakshir…/posts/931163116909873…
    Ananthakrishnan Pakshirajan This is not a complete list, but there are Bengalis, Mahrashatrians, UP wallahs, Punjabis, Manipuris, Assamese, and Biharis, A in it. The sentences were carried out in several jails. Any person who has patience may check the list and point out errors. I am sure there are a few. Nobody is making heroes of these persons. All of them were driven by the idea of Freedom and their hatred of the British and their rule. They also saw the collaborators with the British as enemies of the Nation. Almost all of them were hopeless amateurs and were swatted like flies. I, for one, would never approve of their acts. But it is good to remember them on this day, if one believes in the idea of India and the complexities involved in its birth. It is your choice if you don’t want to remember them. Allow at least others to do so.
    படுகொலை புரிந்தவர்களை புரிந்து கொள்ள முடிகிறது.அவர்களின் அடிப்படை எண்ணம் எவ்வளவு ?உயர்ந்தது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
    ஆனால் அதிகாரத்தை கையில் வைத்திருந்த ஒரு சாதி குழுவை நோக்கி வீசப்பட்ட சில கேள்விகள் பெரும் குற்றமாக இருப்பது ஞாயமா .மேலே உள்ளது போல பெரியாரின் காரணமாக ஏற்பட்ட குற்றங்கள் என்று ஒன்றையாவது சுட்டி காட்ட முடியுமா

  9. அண்ணா ஈவெராவை ஃபாசிஸ்ட் என்று அழைத்ததற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்ன? தகராறு வந்தால் அண்ணா கூட அளந்து பேசமாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.

  10. So far as any view on EVR is concerned, from whom it comes is very important to know and take the view serioulsy.
    Tamil brahmins are the wounded community of TN and the wounds, as they hold, were inflicted first by him; which later done by others – for all kinds of reasons on their part, not only on his part. The wounds were painful when he lived; and, began to fester after he died. But they aren’t comparable to the ones inflicted on Jews by Hitler because the social structure is different here. To read a judgement on EVR pronounced in the form of an article as the one here, by a member of the victimised community is like the conclusion om God by an atheist. The judgement is a foregone conclusion and we don’t even derive academic interest from such product of one-sided mindset.
    The Tamil brahmins are mortals like any one, i.e. humans with average prejudices or predilections. The feeling of vicitimsation due from EVR’s acts regarding them, is a natural outcome any human will experience if he or she is vilified. To hate EVR is a sacred duty a Tamil brahmins owes to his forefathers. No TB will care to examine whether their view on him is fair or foul: because human mind never forgets and forgives. The hatred of the man wronged aginst the man who wronged smoulders life long and all TBs carry the hatred of EVR to their graves. And, they are not to blame as they behave like an average humans only.
    If we accept this basic human nature, we must reject this article by P A Krishnan as a cry of a wounded soul cursing the man who was responsible for the wounds that fester. He cries for his whole community. As readers, we can empathise with that cry of pain. but thus far, no farther. I mean, as an analysis, it should be discarded however rich it is full of quotes. Devil can recite scriptures to prove his point – we cannot avoid this proverb here. Sorry !
    I presume the above thoughts must have crossed the minds of this magazine editors, hence their self-explanation lest they should be mistaken for being a party to the views in favour of a single community.
    They can do better to commission another writer – who should have no mental affinity or prejudice, either covertly or overtly, not only with Tamil brahmins but with all communities of TN.
    I reiterate that the caste of the author writing on EVR ought to be first known as it will alert us to prepare for a painful cry from a victim. – to just empahise and forget. No more no less. The writer may come with a lot of impressive credentials as P A Krishan has, but when it comes to EVR, he falls victim to basic human instinct of my people, my pain, my justice !
    Prof Nicholas Dicks of Columbia University Sociology department has authored a thick book which analysed the social scene of India when EVR and Ambedkar lived. A Chapter therein is title Periyar and Ambedkar. It is a good read for persons who are disparately seeking a disinterested social view.
    Solvanam may search for such authors if they need an article on EVR. To ask any Tamil brahmin to write on EVR is to ask a victim to judge his attacker.
    (The above is w/o prejudice to those academics (who happen to be born in the said community) who have written and will write on EVR and their conclusions based on their own fair minded research are received well)

  11. கேவலம் மாட்டு கறி உண்ணும் மிலேச்சன் ,பஞ்சமன் என்று தானே அரசு அதிகாரியை சுட்டு கொன்ற வாஞ்சிநாதன் ஐயர் தன் கடிதத்தில் எழுதி இருந்தார்.கேவலம் மாட்டு கறி உண்பவன்,மாமிசம் உண்பவன் என்று சொல்பவர்களை கடவுள் என்று எண்ணாதே அவர்களும் மனிதர்கள் தான்,கடவுள் அல்ல என்று அறியாமையில் இருந்த மக்களுக்கு எப்படி உணர்த்துவது. ///////
    வெள்ளைகாரனக்கு சொம்பு எடுத்தவன் தானே இங்கே தியாகி …
    அதே வெள்ளைக்காரன் வா.வு.சி , மற்றும் தியாகி சிவாவை மற்றும் திருப்பூர் குமரனை என்ன பாடு படுத்தினார்கள்…
    ஓஹோ … வெள்ளைக்காரன் செய்தால் தப்பில்லை .. வாஞ்சி மற்றும் பகத் சிங்க் செய்தால் தப்பா?

  12. திரு பூவண்ணன் மேற்கோள் காட்டியுள்ள மறைந்த காந்திஆசிரமம் கிருஷ்ணன்
    அவர்களின் இளைய மகன் நான்.
    என் தந்தையாரின் சாதி பற்றிய நாட்குறிப்புக் கருத்து பிராமணர்களிடம் ஏற்பட்ட மன மாற்றத்தையே சுட்டுகிறது.அந்த மன மாற்றம் ஏற்படக் காரணமாக சொல்லியுள்ள கீழ்க்கண்ட செய்திக்குத்தான் அழுத்தம் கொடுக்க வேண்டுமே அல்லாது, பிராமணர்கள் சாலை போட தலித்களை அனுமதிக்கவில்லை என்பதற்கல்ல!
    “ஆயினும் அன்று அத்தனை சாதி ஏற்றத் தாழ்வுகளுக் கிடையேயும் அன்பும் மரியாதையும் பரஸ்பரம் இருந்து வந்தது. ஆனால் இன்றோ துவேஷ உணர்ச்சியும் மரியாதைக் குறைவும் வெளிப்படை யாகக் காணப்படுகின்றது. இவையெல்லாம் இயற்கையின் வளர்ச்சிப் பரிமாணங்கள் (Evolution) என்றே கொள்ள வேண்டும். விஞ்ஞான வளர்ச்சி காரணமாக ரயில் பஸ் பயணங்கள், சினிமா, காப்பி ஓட்டல், பொருளாதார ஏற்றங்கள் போன்றவற்றால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன வென்றும் காந்திஜிக்கோ, தந்தை பெரியாருக்கோ, அறிஞர் அண்ணாவுக்கோ விசேஷ ஏற்றங்கள் காட்டித் துதிக்க வேண்டியதில்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து. It is a natural social evolution due to various causes but these leaders have quickened the pace. –

  13. திரு பூவண்ணன் குறிப்பிட்டுள்ள‌ என் தந்தையாரின் சொற்களுக்கு முன்புள்ள பத்தி இது.திருச்செங்கோடு காந்திஆசிரமத்தில் தந்தயாருடைய முதல் நாள் அனுபவம்:
    “ராகி(கல்கி) இரண்டு தினங்களுக்கு முன் மாயவரம் திருத்துறைப் பூண்டி முதலிய இடங்களுக்குச் சென்றுள்ளதாகவும் மறு நாளோ அதற்கு அடுத்த நாளோ வந்து விடுவாரென்றும், அது வரை தன் ரூமில் தங்கலாமென்றும், தன் ரூமைக் காட்டினார். சாமான்களையெல்லாம் அவர் ரூமில் வைத்தேன். அவர் தன் பெயர் ஏ.கே. ஸ்ரீனிவாஸன் என்று அறிமுகம் செய்து கொண்டார்.
    தன் வேலையை முடித்துக்கொண்டு ஸ்ரீனிவாஸன் ரூமுக்கு வந்தார். ‘சாப்பிடலாமா?’ என்றார். ‘நான் குளிக்க வேண்டுமே!’ என்றேன். தலை யைச் சொறிந்தார் நண்பர். பின்னர் தன்னைச் சமாளித்துக் கொண்டு, ‘முனுசாமி’ என்று குரல் கொடுத்தார். ஒருவர் வந்தார். ‘ஏன் முனுசாமி, எல்லைக் கிணற்றிலே ஏத்தக் குழியிலே தண்ணீர் இருக்குமா? இவர் புதிதாக வந்திருக்கி றார். ஒரு குவளையை எடுத்துக் கொண்டு இவருடன் சென்று வருகிறாயா?’ என்றார். நான் முனுசாமி என்பவருடன் புறப்பட்டேன். ஒரு ஃபர்லாங் தூரம் நடந்து சென்று அங்கு ஒரு கிணற்றைக் காட்டினார். சுமார் இருபதடிக்கு இருபதடி சதுரமான நாற்பதடி ஆழமான ஒரு கிணற்றைக் காட்டினார். ஒழுங்காகப் படிகளில்லை. எட்டிப் பார்த்தேன். அடியில் சிறிது நீர் இருப்பது தெரிந்தது. இம்மாதிரிக் கிணறுகளை நான் எனது இருபத்திரண்டு வயது வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. ‘நீங்க இறங்கி தண்ணி வாத்துக்கிட்டு வாங்க. நான் இங்கே குந்திக்கிட்டு இருக்கேன்.’ என்றார். நான் உயிரைப் பிடித்துக் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் கிணற்றுக்குள் இறங்கினேன். 4’ X 4’ சதுரம் 2’ ஆழம் குழியில் சிறிது தண்ணீர் இருந்தது. குளிக்கும் தொட்டியில் உட்கார்ந்து குளிப்பது போல் கையில் கொண்டு போயிருந்த குவளையால் தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றிக் குளித்தேன். ஒருவாறு குளிப்பு நடந்தது. அங்கு குழியில் 12 மணி வெய்யிலிலும் வெளிச்சம் இல்லை. மீண்டும் மிகுந்த எச்சரிக்கையுடன் சிரமப்பட்டு மேலே ஏறி வந்து பார்த்தால், உடம்பெல்லாம் – இரவில் நக்ஷத்தி ரங்கள் மின்னுவது போல் – சிறு சிறு துளிகள் மினுமினுத்தன. அவை மைக்கா – அபரேக் – துகள்கள் என முனுசாமி சொன்னார். பின்னர்தான் தெரிந்து கொண்டேன். அப் பகுதிகளில் மைக்கா படிவங்கள் உண்டு என.
    சில நாட் களுக்குப் பின்னர்தான் முனுசாமி அரிசன வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் குடியானவர்கள் – கொங்கு வேளாள கவுண்டர்கள் – புழங்கும் கிணறுகளில் அரிசனங்கள் இறங்கக் கூடாதென்றும், அது காரணமாகத்தான் அவர் என்னுடன் அக்கிணற்றில் இறங்கவில்லை யென்றும், தெரிந்து கொண்டேன்.”
    நான்:
    இன்று பிராமணர்களிடம் கலப்புத் திருமணங்கள் மிக சகஜமாகிவிட்டது.
    நாயக்கர்கள், நாயுடுக்கள், க‌வுண்டர்கள், தேவர்கள் மறவர்களிடம் இதைப்பற்றி பேசினால் ‘திருப்பாச்சி’தான் திரும்பப் பேசும்.
    சென்ற வருடம் ப‌ள்ளர் மணமகன், பறையர் மணமகள் காதலர்களைச் சேர்த்து
    வைக்க என் மகள் நடையோ நடையென இரு வீட்டார்களிடையே நடந்து அவர்களின் சுடு சொற்களையெல்லாம் தாங்கிக்கொண்டு திருமணத்தை முடித்துவைத்தாள்.
    மாற்றம் இன்னும் மற்ற சாதியினரிடம் வர வேண்டும். பூவண்ணன் is barking the wrong tree.

  14. சார் நான் சொல்ல வந்தது உங்கள் தந்தை பெரியாரை பற்றி எழுதும் முறை.அவர் மீது எந்த வெறுப்பும் இல்லாமல் அவரை,அவர் முயற்சிகளை அலசும் விதம் தான்.பெரியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பிராமணர்களை விட பல மடங்கு அதிக வெறுப்பு இன்று இருப்பது ஏன் எனபது தான் விளங்கவில்லை.
    எண்ணிக்கை அதிகம் இருக்கும் சாதிகள் ஆடும் ஆட்டதிற்கு இன்றைய தேர்தல் முறையில் அவர்கள் எண்ணிக்கை தரும் மிருகபலம் தான் காரணம். எண்ணிக்கை அதிகம் இல்லாத பல நூறு சாதிகள் பிராமணர்களை போல சாதி தாண்டிய காதல் என்றால் கத்தியை எடுக்காமல் அமைதி வழிகளை கொண்டு தான் காதலை எதிர்க்கிறார்கள்.
    பிராமணர்கள் வலுவாக உள்ள ,அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மாநிலங்களான பீகார்,உதர்ப்ரதேசம் போன்றவற்றில் அரிவாள் தான் காதலுக்கு எதிராக பேசுகிறது.உதர்ப்ரதேச பிராமணர் ஊர் விட்டு ஊர் வந்து மும்பையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவை மணந்து கொண்ட தங்கையை,அவள் கணவனின் குடும்பத்தை கொலை செய்வதும் நடக்கிறது.
    நாகா,குக்கி,மீனா என பழங்குடி இனத்தவரும் தங்கள் இன பெண்களின் வேறு இனத்தவர் உடனான காதலுக்கு அருவாள் தான் தூக்குகிறார்கள்.பெண்கள் தங்கள் தடைகளை உடைத்து சுயமாக முடிவு எடுக்கும் நிலையை அடைவதை எந்த சாதி/மத குழுவும் விரும்புவது இல்லை.இந்த உரிமைக்காக போராடிய பெரியாரை இந்த நிகழ்வுகளை வைத்து கொண்டு எப்படி திட்ட முடிகிறது என்று தான் விளங்கி கொள்ள முடியவில்லை.
    எந்த சாதியினரும் இந்த தொழில் நாங்கள் மட்டும் தான் செய்வோம் என்று மற்றவரை உள்ளே விடாமல் தடுக்கவில்லை.ஒரு சாதியை தவிர்த்து.விவசாயமோ,ராணுவம் ,காவல் துறையில் பணியோ,முடி வெட்டுதலோ,துணி,நகை கடை,உணவகம் துவங்குதலோ நாங்கள் மட்டும் தான் செய்வோம் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று இன்று வரை தங்கள் சாதிக்கு மட்டுமே குறிப்பிட்ட பணியை வைத்து கொண்டு இருக்கவில்லை.
    எங்கள் தெருவில் தேர் வர கூடாது உங்கள் பகுதிக்குள் வேண்டுமானால் விட்டு கொள்ளுங்கள் என்று சொல்வது தவறு எனபது அனைவருக்கும் புரிகிறது.ஆனால் நான்,என் சாதி மட்டும் தான் பூசை செய்வேன் என்று சொல்வது ஞாயம் ,வேண்டுமானால் புதிதாக கோவில் கட்டி நீங்கள் பூசாரி ஆகுங்கள் என்று சொல்வது மாறி வீட்ட சமுதாயம் எனபது நியாயமான ஒன்றா
    தீண்டாமை அதிகமாக இருக்கும் கிராமங்களில்,கீரிபட்டியில் ,தேர் கொளுத்தப்பட்ட கிராமத்தில் இருந்து பலரை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து திருபதியிலும்,ஸ்ரீரங்கத்திலும் ,கடலூர் திருவந்திபுரதிலும்,மயிலாபூரிலும் அர்ச்சகர் ஆக்குவதை விட அதிகமாக தீண்டாமையை கடைபிடித்தவர் முகத்தில் கரி பூசமுடியுமா ,அவர்களை வெட்கி தலைகுனிய வைக்க முடியுமா
    இதை செய்ய விடாமல் தடுப்பது அரசா,திராவிட கட்சிகளா,
    கொளுத்தப்பட்ட தருமபுரி கிராமத்தில் 9 சாதிமறுப்பு திருமணம் செய்த சோடிகள் வாழ்ந்து வந்தனர்.2000 வன்னியர் 80 தலித் மக்கள் வாழ்ந்து வந்த சேஷசமுத்திரம் கிராமத்திலும் வன்னிய பெண்ணை சாதிமறுப்பு காதல் திருமணம் செய்த ஒரு குடும்பமும் உண்டு. கடவுளின் பெயரால் வெறியேற்றி பழி தீர்த்து கொள்ளும் நிகழ்வுக்கு பெரியார் எப்படி பொறுப்பாவார்.
    குறிப்பிட்ட சாதிகள் மட்டுமே வகித்து வந்த பதவிகள்,கோவில் அறங்காவலர்கள்,செய்து வந்த தொழில்கள் அனைத்திலுமே இன்று அனைத்து சாதியினரும் காணப்படுகின்றனர்,அதிக எண்ணிக்கை இருக்கும் சாதிகளும் தாங்கள் மிருக பலத்தோடு இருக்கும் இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் அடங்கி விட்டனர்.
    விடாபிடியாக தன் சாதிக்கு மட்டுமே சொந்தம் என்று இருப்பவர்களை பார்த்து பார்கிங் அட் the wrong tree எனபது ஞாயமா .உதர்ப்ரதேசம் போல இங்கு பிராமணர் எண்ணிக்கை இருந்து இருந்தால் வன்னியர்,தேவர் எல்லாம் பிச்சை வாங்கும் அளவு வன்முறை இருந்திருக்கும் என்பதை தானே அந்த மாநில நிகழ்வுகள் காட்டுகின்றன
    பெரியார் சாதி ஒழிய வேண்டும் என்று தானே வாழ்நாள் முழுவதும் கத்தி வந்தார்.எதை வைத்து தலித் மக்கள் மீதான வன்முறைகளுக்கு அவர் தான் காரணம் என்ற குற்றசாட்டு வீசபடுகிறது என்பதை யாரவது விளக்குங்களேன்.

  15. உத்திரப் பிரதேசத்தில் சுமார்9‍=10 சதவிகிதத்தினரே பிராமண‌ர்கள்.வோட்டு வங்கி அரசியலில் மாயாவதி பிராமணர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதுபோல காட்டிக் கொண்டு, மேளாவெல்லாம் நடத்தி, வெற்றி பெற முடிந்தது.இன்று சாதியை நிலை நிறுத்துவது அரசியலும்,அரசியல்வாதிகளுமே.
    உத்திரப் பிரதேசத்திலோ மற்ற மாநிலங்களிலோ ஓரிரு இடத்தில் நடந்த‌ நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டி இங்கும் அப்படித்தானே நடந்திருக்கும் என்று கூறுவது ‘ஹைபதெடிக‌ல்’
    ஸ்ரீரங்கத்தில் பி ஜி நாயுடு ஸ்வீட்ஸ் ஸ்டால் இருக்கும் தெருவிலேயே பிராமணாள் ஹோட்டலுக்கு எதிரான போராட்டம் திக நடத்தும். திருச்சி மாவட்டம் முழுவதும் ‘ஐயங்கார் பேக்கரி’என்ற பெயரில் மற்ற சாதியினர் நடத்தும் கடைகள் முன்னால் சாதி ஒழிப்புப் போராட்டம் கிடையாது.இப்ப்டி சாதி ஒழிப்பில் குழப்பமான நிலைப்பாட்டினை திக எடுப்பது, பெரியார் எடுத்த குழப்பமான நிலைப்பாட்டின் தொடர்ச்சியே என்று நினைக்கிறேன்.

  16. வன்னியர், முக்குலத்தோர், கொங்கு கவுண்டர் //சாதிகளின் முக்கிய எதிரி பெரியார் தான்.மற்ற அனைத்து மாநிலங்களிலும் உயர்சாதி அல்லது அதிக எண்ணிக்கை இருக்கிற இடைநிலை சாதிகளில் இருந்து பெரும்பாலான கட்சிகளின் தலைமை மற்றும் முக்கிய பொறுப்புக்கள் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் மிக குறைவான எண்ணிக்கை கொண்ட போட்டு கட்டி விடும் வழக்கத்தை கொண்ட சாதிகளில் இருந்து அண்ணாதுரை மற்றும் கலைஞர்,சாதிவிலக்கம் செய்யப்பட்டு சண்டாளராக மாற்றபட்டவருக்கும் அன்றைய தீண்டத்தகாத சாதியான ஈழவருக்கும் பிறந்த எம் ஜி ஆர் தலைமைக்கு வர முக்கிய காரணம் பெரியார் என்பதே எண்ணிக்கை அதிகம் உள்ள சாதிகளின் சாதி தலைவர்களின்,சாதி வெறியர்களின் எரிச்சல்.//
    இது உண்மையல்ல… [சாதிகளில்] பார்ப்பன எதிர்ப்பு என்பது மட்டுமே தம் agendaவாகக் கொண்டவர் ஈ.வெ.ரா. நிற்க.. தமிழகத்தில் மிகச்சிறுபாமைச் சாதிகளின் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்றவர்கள் ஏற்கப்பட்டதற்கு ஈ.வெ.ரா. அல்ல காரணம்… ஓரளவு எண்ணிக்கை வலுவுள்ள எந்த சாதியும் மற்றொரு சாதியைச் சேர்ந்தவரின் தலைமையை ஏற்க விரும்பாது.. எடுத்துக்காட்டாக, எண்ணிக்கையில் முதல் இரு இடங்களிலுள்ள வன்னியர், பறையர் ஆகிய சாதியினர் ஒருவரை ஒருவர் ஏற்க மாட்டார்கள்… நாடார், முக்குலத்தோர் ஒருவரையொருவர் ஏற்கமாட்டார்கள்… கொங்குவேளாளர் மற்ற வேளாளர் ஒருவரையொருவர் ஏற்கமாட்டார்கள் என்பதால் ஏதோவொரு சிறுபான்மைச் சாதி இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைப்பது ஒரு பக்கம். மற்றோர் பக்கத்தில் இப்படி சிறுபான்மை சாதியை வைத்துக்கொண்டு பின்னால் இருந்து செயல்படும் சக்திகள் யார் என்பதை எவரும் அறிவார்… பழி எனில் அந்தத் தனிநபருக்கும் புகழெனில் தம் சமூகத்திற்குமாகக் கோருவதற்கும் இது ஒரு வாய்ப்பு…. இதுவே மிகச்சிறுபான்மை எண்ணிக்கைச் சாதியினரை ஏற்பதற்குக் காரணமேயன்றி.. ஈ.வெ.ரா. அல்லர்.

Leave a Reply to சொ.பிரபாகரன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.