கவிதை எனும் வேதாளம்

roadatnight

முடிவிலியென உறைந்திருக்கும்
காத்திருப்பின் அலமாரியிலிருந்து
சட்டென இன்று
தனித்துத் தெரியும்
ஒற்றைப் புத்தகத்திற்குள்
குவிந்து விழுந்தெழுந்து மனம்
கொத்திக்கொண்டுவரும் ஒற்றைவரியில்
எஞ்சியிருக்கிறது
ஒரு வேதாளத்தின் கைவெப்பம்
அந்த வெப்பத்தில் வேர்விடுகின்றன
எப்போதோ விழுந்த விதைகள்,
முளைவிடுகின்றன குருதியும் கோழையும் வடியும்
உதிரிச்சொற்கள்
மெல்ல மெல்ல உறக்கத்தில் நழுவும்
நள்ளிரவில் கவனித்தால்
யாரோ யாரையோ முத்தமிடும் காட்சி
மனதின் எல்லாப் பக்கங்களிலும்
வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது
எந்தபெண்ணோ நிராகரித்து
வீதியில் வீசிவிட்டுப்போன ஒரு பூவின்மீது
வண்டிச்சக்கரம் ஏறி நசுக்கும்
‘சதக் சதக்’ சத்தம்
நிகழ்ந்து நீண்டுகொண்டே இருக்கும் காலத்தின்
ஒவ்வொரு கணப்பிரதியிலும் ஒலிக்கிறது
பழுக்கக்காச்சிய கம்பியின்மீது வந்தமரும்
பட்டாம்பூச்சிகளைப்போல
உதிக்கும் சொற்களெல்லாம்
உதிர்ந்து விழுகின்றன
சற்றும் தளராத மனம்
தனித்து நடக்கத் தொடங்குகிறது
சூரியன் உலவாத இடமோ காலமோ நோக்கி
இருள் வழியும் மரக்கிளையில் எங்கோ
தலைகீழாகத் தொங்கும் வேதாளம்
மௌனம் குவியும் ஒரு கணத்தில்
மெல்ல மண்டைக்குள் புகுந்துகொண்டு
எனக்காக முன்வைக்கிறது
ஒரு புதிர்க்கேள்வியை
ஆரத்தழுவும்
ஆயிரம் கணங்களில் ஒரு கணத்தில்
காதல் பழுத்துதான்
காற்றோடு போகிறதா இலை,
வெறும் காலம் முடிந்தா?
என்று.
கேள்வியின் கனம் தாங்காது அதை
கிறுக்கி வைக்கிறேன் காகிதத்தில்
உயிர்கொண்டு நெளிகிறது
ஒவ்வொரு வரியும்
மௌனம் கலைந்ததென்று
மறைந்துவிட்ட வேதாளத்தைத்தேடி
மீண்டும் நுழைகிறேன்
மனவெளியின் அடர் இருளுக்குள்.

2 Replies to “கவிதை எனும் வேதாளம்”

  1. யாரும் கருத்தெழுதியதாகத் தெரியவில்லை. எல்லோரும் மிகச் சிறப்பாகப் புரிந்து கொண்டு விட்டார்கள் போலிருக்கிறது. படு முட்டாளாகிய எனக்கு இந்தக் கவிதை என்ன சொல்கிறது என்று புரியவில்லை. முடிந்தால் இதன் உட்பொருள்பற்றி ஓர் அடிக்குறிப்பிடுங்கள். வாசித்துப் புரிந்து கொள்கிறேன். படம் அழகாக இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.