ஜார்ஜ்டவுன் மாடிப் பூங்காவிலிருந்து, பவழக்காரத் தெருவுக்குள் நுழைந்து வலதுபுறமாகப் பார்த்துக் கொண்டு வந்தீர்கள் என்றால், முதலில் ஒரு மூத்திரச் சந்து. அதிலிருந்து சற்று தள்ளி கொஞ்ச தூரத்தில் காளாஸ்தீஸ்வரர் கோவில். அங்கிருந்து சற்று தள்ளிச் சென்றால் பவழக்காரத் தெருவில் வலமும் இடமுமாக சிறு தெருக்கள் பிரியும் சிறிய நாற்சந்தி. அதன் வலது மூலையில், அன்று…அதாவது அறுபதுகளில் இருந்தது ரமணா லெண்டிங் லைப்ரரி. ஜார்ஜ் டவுனுக்கே உரித்தான பாணியில் அமைந்த ஒரு வீட்டின் இருண்ட முன்னறையில் அது இயங்கியது. இடம், இருட்டோ… வெளிச்சமோ! என் ஹிருதய விலாசத்தில் நிரந்தர இடம் பெற்ற ஓவிய மேதை கோபுலுவையும் காவிய மேதை த.நா.குமாரசாமியையும் நான் கண்டுபிடித்த இடம் இதுதான்.
அப்போது நான் ஐந்தாவதோ ஆறாவதோ ஃபெயிலாகி கச்சாலேஸ்வரர் அக்ரஹாரத்தில் இருந்த என் பெரியப்பாவின் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். என் சின்ன அண்ணா பாலாஜி இந்த லெண்டிங் லைப்ரரியில் இருந்து விகடன், கல்கி, கலைமகள் உள்ளிட்ட வார மாத இதழ்களையும் கதைப் புத்தகங்களையும் கொண்டு வருவான். அக்ரஹாரத்தின் பெரும்பாலான வீடுகளைப் போல, நானிருந்த வீடும் ஒண்டுக் குடித்தனம். கசகசவென மனிதர்கள் புழங்கும் இந்த வீட்டின் ஆட்களால் இப்புத்தகங்கள் படித்துத் தீர்க்கப்பட்டன. குறிப்பாக, அந்த அசௌகரியமான மூணு நாட்களில், ஒதுங்கி உட்கார்ந்திருக்கும் பெண்களுக்கு இதுவொரு இலக்கிய சேவையாக இருந்தது. பெரியப்பா வீட்டில் நான் படித்தேனோ இல்லையோ… இந்தப் புத்தகங்களையெல்லாம் படித்து, பிஞ்சில் பழுத்தேன்.
கோபுலு – சிறுவர் கதைச் சித்திரங்கள்
இடைவிடாமல் காரைகள் உதிரும் வெளிச்சக் குறைவான அறை ஒன்றில் மூட்டைப் பூச்சிகள் நிறைந்த மரத் தடுப்பில் முதுகைச் சாய்த்தபடி, த.நா.குமாரசாமியின் அன்பின் எல்லை நாவலைப் படித்து முடித்தேன். அவர் எழுதி நான் படித்த முதல் புத்தகம் இதுதான். விகடனில் தொடராக வந்த அதை, பைண்டு செய்து வைத்திருந்தார்கள். (ஒருவேளை படத்துடன் கூடிய மங்கள நூலகம் போட்ட பதிப்போ?…நினைவில்லை.)
அன்பின் எல்லைக்குப் படம் வரைந்தது கோபுலு. கோபுலுவின் படங்களைப் பார்த்ததும் அதுவே எனக்கு முதன் முறை. இதற்கு முன்பு, விகடன்களைத் தொடர்ந்து படித்து வந்த போதும், ஓவியர்கள் யாரென உற்றுக் கவனிக்கப் பழகவில்லை. இந்தத் தொடர்தான் முதன் முதலில் ஓவியம் பற்றிய ஆர்வத்தை என்னுள் விதைத்தது. இது கோபுலுவின் ஓவிய மாயம். சித்திர நுட்பங்களை அறியாத என் மனத்தில் அவர் தீட்டிய படங்கள், புதிய ரசனையை மொட்டுவிடச் செய்தன. அதன்பின், விகடனை எடுத்தால், முதலில் கோபுலுவின் படங்களை ஒரே மூச்சில் பார்த்துத் தீர்ப்பேன்.
இப்படியாக அன்பின் எல்லையில் குமாரசாமியின் எழுத்தும் கோபுலுவின் ஓவியமும் சேர்ந்து, என் உள்ளத்தில் செய்த ரசவாதம்தான் என் முதல் இலக்கிய அனுபவம்.
அன்பின் எல்லையில் ஒரு காட்சி
கல்யாணக் கோலம் கலையாத மணமகன், தாகத்துக்கு நீர் அருந்த சமையல் அறைக்குள் வருகிறான். அங்கு யாருமற்ற தனிமையில் தன் இளம் மனைவியைச் சந்திக்கிறான். அவள் கொடுத்த மோரை வாங்கிக் குடிக்கும் போது அதை அவனது தமக்கை பார்த்துக் கைதட்டி கேலி செய்கிறாள். சமையலறை ஓரம் சற்றே காலை வளைத்து முகம் கவிழ்த்து நாணி நிற்கும் மணமகள். கூச்சப் புன்னகையுடன் நெளியும் மணமகன்; இந்தக் காட்சி பருவத்தின் புதிர்கள் அரும்பு கட்டிய மனத்துள் ஒரு ரகசிய கிளுகிளுப்பைத் தந்தன.
மற்றொரு காட்சி
தன் பெற்றோரைப் பிரிந்து, அவர்களைக் காண மனத்துள் ஏங்கும் புக்ககத்து நாட்டுப் பெண். அப்பா வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறாள். அவள் ஏக்கமே உருவெடுத்தது போல, அவள் தந்தை இரு கைகளில் சீர் மூட்டைகளுடன் உள்ளே நுழைகிறார். அவளுக்கு எதிர்பாரா இன்ப அதிர்ச்சி. விழிகள் விரிந்து அன்பு கசிய, துள்ளி வருகிற பெண்; தகப்பனின் மலர்ந்த வதனமும், அதில் தளும்பும் சாந்தமும்… பழைய பாணி வீட்டில், அத்தனை உள்ளலங்கார விவர நுட்பங்களும் பின்னணியில். இந்த உணர்ச்சிகரமான காட்சியின் சித்திர ஜாலத்தில் என் இளம் மனம் இனம் புரியாமல் மயங்கியது. இது எனது முதல் சித்திர இலக்கிய அனுபவம். என் நினைவின் திரையில் நிறம் மங்காத தடம்.
பின்னாளில், தி.ஜானகிராமனின் மோகமுள் போன்ற பேரனுபவங்கள் எனக்கு வாய்க்க என்னுள் விதைக்கப்பட்ட ‘தெள்ளிய ஆலின் சிறு பழத்தொருவிதை’தான் அது.
ஐம்பதுகளில் மோகமுள் சுதேசமித்ரனின் வார மலரில் தொடராக வந்த போது, அதற்கு படம் வரைந்தவர் ஓவியர் சாகர். பின்னாளில்தான் எனக்கு பைண்ட் செய்யப்பட்ட மோகமுள் தொடர் பார்க்கக் கிடைத்தது. ஓவியர் சாகர் ஒன்றும் ஏப்பைசாப்பையானவர் அல்ல. இருந்தாலும், மோகமுள்ளுக்கு கோபுலு வரைந்திருந்தால்….”மாணிக்கம் தித்திக்கில் என்னாகும் மற்ற மதுரங்களே”, என்றானே கவி, அந்த வாக்குதான் நினைவுக்கு வருகிறது.
அன்று நான் ஜார்ஜ்டவுனில் வசித்த இடமும், அதன் சூழலும்தான் எனது சித்திர இலக்கிய ரசனைகளை புதிதாக வடித்தன. அன்றைய கும்பகோணத்திலிருந்து, பிடுங்கி எடுத்து ஜார்ஜ் டவுனில் பிரதிஷ்டை செய்தது போலிருந்தது நான் வசித்த கச்சாலேஸ்வரர் அக்ரஹாரம். அந்த அக்ரஹாரத்தின் முன் பகுதி கும்பகோணம் என்றால்,அதன் முதுகுப் பகுதி துறைமுகத் தொழில் நகரம். அக்ரஹாரத்தின் முன் பகுதியில் வீடுகளின் செம்மண் தீட்டிய முகப்புகளும், கோலமிட்ட வீதியில், வேம்பின் வில்வத்தின் நிழலாடும் கோவில் மதிலும், நீர் ததும்பும் திருக்குளமுமாக உள்ளே நிற்பவருக்கு ஏதோ தஞ்சை ஜில்லாவில் இருக்கிற பிரமையை ஏற்படுத்தும்,. அக்ரஹாரக் குளத்தைச் சுற்றி உள்ள மூன்று தெருக்களின் முதுகுகளையும் பின்புறத்தில் வளைத்தோடுவது மூக்கர் நல்லமுத்துச் செட்டி தெரு, செம்புதாஸ் தெரு, முத்துமாரிச் செட்டி தெரு ஆகியவை. கோவிலின் ஜாம பூஜைக்கான கண்டாமணி நாதத்தை விழுங்கும் பார லாரிகளின் கர்ஜனைகள், மீன்பாடி வண்டிகளின் ஓலங்கள், துறைமுகத்தில் கடல்வெளியையே நிரப்பும் கப்பலின் பிளிறல் (இதை ஒரே அடியில் உயிர் துறக்கும் விலங்கொன்றின் கர்ஜனை என்பார் ஜேகே). அக்ரஹாரத்தைச் சார்ந்து இப்படி முதுகோடு முதுகொட்டிய இருவேறு உலகங்கள்.
இவ்விரு உலகின் சங்கமத்தில் வாழக் கிடைத்த என்னை நகரத்தையும் நாட்டுப்புறத்தையும் ஒருங்கே செரித்து, தூரிகையில் உயிர்ப்பித்த பெருங்கலைஞர் கோபுலுவின் படங்கள் கவர்ந்து ஈர்த்ததில் வியப்பில்லை. கோபுலுவே கும்பகோணத்தில் பிறந்து இந்த மாநகருக்குள் தூக்கி எறியப்பட்டவர்தானே.
பெருநகரத்தின் நடைபாதை வாழ்வு சார்ந்த செங்கல்பட்டு, வட ஆற்காடு உழைப்பாளி மக்களை மிக வேகத்துடனும், துல்லியத்துடனும் அவர் வரைந்திருப்பார். ஜார்ஜ் டவுன் ஜனப்பிரவாகத்தில் அவர் வரைந்த பல முகங்களை நான் பல முறை எதிர்கொண்டிருக்கிறேன். செம்புதாஸ் தெரு கார்ப்பரேஷன் பள்ளியில் என்னுடன் படித்த என் பால்யகால சகியும், நடைபாதை வாசியுமான பாஞ்சாலியின் முகச் சாயலை கோபுலுவின் ஏதோ ஒரு கோட்டோவியத்தில் பார்த்து வியந்திருக்கிறேன். பாஞ்சாலி மட்டுமன்று; நடைபாதைகள் சேரிகளின் பல குணச்சித்திரங்கள் அவர் தூரிகையில் உயிர் பெற்று எழுந்தார்கள். பிராமண முகங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். குறிப்பாக தஞ்சை மாவட்ட பிராமண முகங்களின் அத்தனை வகைகளையும் அவர் வரைந்து தீர்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.
அன்று விகடனில் அவர் வரைந்த தொடர்கதைகளுக்கு தலைப்பு எழுத்துகளை ஒட்டி சின்னதாக ஒரு முகப்போவியம் வரைந்திருப்பார் பாருங்கள்! இரண்டு விரற்கடை இடத்துக்குள் எத்தனை விவரணைகள். தேவன் எழுதிய ஸ்ரீமான் சுதர்ஸனம் நாவலின் முதல் அத்யாயத்தில் ஒரு முகப்போவியம். இரு புறங்களிலும் அடர்ந்த கட்டிடங்களும் வாகனங்களும் மனிதக் கூட்டமுமாக நீண்டு கிடக்கிற சாலை. மிரட்டும் நகர வேகத்தில் மிரண்டு கவலையோடு விழித்துக் கொண்டு நிற்கிற அப்பாவி குமாஸ்தா முகம். அவன்தான் சுதர்ஸனம். கதையின் சாரத்தையே சொல்லிவிடுகிற முகப்புப் படம்.
அதுபோலவே மிஸ்டர் வேதாந்தத்துக்கு வரைந்த முகப்புப் படங்கள். காவேரியில் கால்நனைத்து நிற்கும் கும்பகோணம் காலேஜ்; டிராம் ஓடும் கல்கத்தா வீதி; சரளைக் கல் சாலையில் நகரும் ரெட்டை மாட்டுவண்டியும் வாய்க்காலுமாக ஒரு தஞ்சை கிராமக் காட்சி; இப்படி சில முகப்புகள். தில்லானா மோகனாம்பாளில் ஒரு சாலையோரச் சாவடி; அந்த நாள் செருகோட்டுக் கூறையும் முன் வளைவுமாக ஒரு அற்புதப் படம்; இப்படிச் சொல்லிக் கொண்டெ போகலாம். அவருடைய ஸ்ட்ரோக்குகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புது மாற்றங்கள்; பாணியில் தெரியும் புதுமைகள்; இவையனைத்தும் விகடனுக்கு புதுப் பொலிவேற்றின. பின்னாளில் விகடனில் வெளிவந்த பல்வேறு மாநிலம் பற்றிய சிறப்புக் கட்டுரைகளிலும் மலர்களிலும் தேசத்தின் வெவ்வேறு கலாசாரம் சார்ந்த பல்வேறு இனக் குழுக்களின் முகங்களை, முக பாவங்களை, உடல் இயக்கங்களை, அற்புதமாக வரைந்திருந்தார். பல்வேறு நிலவெளிகளின் பல வர்ணமுள்ள வாழ்வின் காட்சி ரசங்களை எல்லாம் தனது சித்திரத்தில் தேக்கி பிரமிக்க வைத்தார் அந்த மேதை.
கோபுலு – மனிதர்கள்
என் முப்பது வயதுக்கு மேல், சில ஆண்டுகள் கழித்து, இப்பெருமகனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் பத்திரிகை வாழ்க்கை தொடங்கி, பல ஆண்டுகள் கழித்து, சுமார் 95 வாக்கில்தான், முதன்முதலாக நேரில் அவரை சந்தித்தேன். அப்பொழுது நான், தினமணிக்கதிர் ஆசிரியர் குழுவின் மூத்த ஆசிரியன். ஆண்டு தோறும் டிஸம்பர் மாதம் தினமணிக்கதிரின் இசைச்சிறப்பு இதழைத் தயாரிக்கும் பொறுப்பாசிரியன். அப்போதைய தினமணி ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம், இசை இதழ் தயாரிப்பில் ஒரு சிறு தலையீடுகூட இல்லாமல், எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். இசைச் சிறப்பிதழுக்கு ஓவியம் வரைய கேட்டுக்கொள்ளும் சாக்கில், கோபுலுவைச் சந்திக்க அவர் வீட்டுக்குப் போனேன். ஈஸ்வரனுடைய கல்யாண குணங்களில் ஒன்று அவனுடைய சௌலப்யம். அதாவது அதிசுலபமாக பக்தர்கள் அவனை அணுக அனுமதிக்கிறவன்; ஈஸ்வரனைப் போலவே படைக்கிற கலைஞர் கோபுலுவும் மிக எளிதாக அணுகக்கூடியவர். சாதாரணமானவர்களை கிட்ட அண்டவிடாமல் துரத்தி அடிக்கும் ‘மேதைக் கிறுக்கு’ அவரிடம் தலைகாட்டவில்லை. எல்லாம் நிறைந்த வாழ்வு வாழ்ந்த அந்த கலைஞனின் எளிமை எனக்கு ஆச்சரியம் அளித்தது. அவருக்கு இருந்த சங்கீத அபிமானமும், என் இசை ஆர்வத்தைக் கண்டு அவர் என்னிடம் கொண்ட பரிவும்தான், எங்கள் நட்புக்கு அஸ்திவாரம்.
கோபுலு – கோட்டுச் சித்திரங்கள்
ஒரு காரியமும் இல்லாவிட்டால்கூட இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது, அவரை சந்தித்து அரட்டை அடிப்பது எனக்கு வழக்கமாயிற்று. டிஸம்பர் மாதம், நான் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுவேன். என் குரல் கேட்டவுடனேயே, “என்ன சிவகுமார், டிஸம்பர் வந்தாச்சா? எல்லாம் ஜமாத்துவிடலாம்!” என்பார். அவர் வரைவதற்காக நான் கொண்டுபோய் கொடுக்கும் கட்டுரைகளை ஆவலாக படித்து, அதுபற்றி சுவாரஸ்யமாக பேசுவார்.
சில சமயம் நான் எழுதும் தலைப்பை ஒட்டி, தான் அறிந்த அரிய சம்பவங்களை, என்னைக் கேட்காமலேயே வரைந்து அனுப்பிவிடுவார். பிறகு எனக்கு ஃபோன் செய்வார். “சிவா, வித்வான்கள் பொடி போடும் வழக்கம் பற்றி எழுதியிருக்கிறாய் இல்லையா? நான் திருவாலங்காடு சுந்தரேசய்யர் படம் வரைந்து அனுப்பியிருக்கிறேன். அவர் எப்படி பொடி போடுவார் தெரியுமா?” என்று படுசுவாரஸ்யமாக ஒரு விஷயத்தை சொல்வார். “பொருத்தமாய் பட்டால், சேர்த்துக்கொள்ளேன்” என்பார். நான் அதை எழுதி சேர்த்துக்கொள்ளுவேன். தினமணி இசை சிறப்பிதழுக்காய் அவ்வளவு ஈடுபாடுடன் ஒத்துழைத்தவர் அவர். எனது இசைக் கட்டுரைகளை முதலில் படிப்பவர் அவர்தான். அவரது பாராட்டுகளை என் தொழிலில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன்.
ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி. நான் ஆண்டுதோறும், இசைச் சிறப்பிதழில், இசை தொடர்பாக ஒரு சிறு கதையை மலரில் சேர்த்து வந்தேன். நண்பர் இரா.முருகன் இசை மலரின் ரசிகன். ஆர்.கே.நாராயணன் எழுதிய கதை ஒன்றை என்னிடம் சொல்லி, இதை மொழிபெயர்த்துப் போடுங்களேன் என்று சிபாரிசு செய்தார். எனக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. அதை உடனே நண்பர் சச்சியைக் (கி.அ.சச்சிதானந்தம்) கொண்டு மொழிபெயர்த்தேன்.
ஆர்.கே. நாராயணன் அப்போது தி. நகரில், தன் சம்பந்தியான லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் இக்கதையை இசை மலரில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதி கேட்டேன். கிழவர், கேலிச் சிரிப்புடன் “இந்தக் கதையை யாராவது படிப்பார்கள் என்று நினைக்கிறாயா” என்றார். “தாராளமாக மொழிபெயர்த்துப் போடு” என அனுமதி தந்தார்.
கதைச் சுருக்கம் இதுதான். சங்கீத சபை நடத்துபவர், ஒரு பாடகியின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்துவிட்டார். நிகழ்ச்சியை நடத்த ஒரு இடம் கிடைக்கவில்லை. இடம் தேடி சலித்துப்போய், ஒரு ரயில்வே யார்டில் கச்சேரியை நடத்த ஏற்பாடு செய்கிறார். ரயில் வராத அந்த யார்டில், மிளகாய் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பாடகி இருமிக் கொண்டும் தும்மிக் கொண்டும் பாடுகிறாள்.பிளாட்பாரத்தில் விரிக்கப்பட்ட கோணியிலிருந்து ஏதேதோ பூச்சிகள் கடிக்க ரசிகர்கள் சொறிந்துகொண்டே பாட்டு கேட்கிறார்கள். என்ன துரதிருஷ்டம் பாருங்கள்! வண்டியே வராத அந்த யார்டில் அன்று அதிசயமாக புகைக்கக்கியபடி நுழைகிறது ஒரு கூட்ஸ் வண்டி. அவ்வளவுதான் கச்சேரிக்கு கோவிந்தநாம சங்கீர்த்தனம்!
இந்த கதைக்கு கோபுலு வரைந்த படம்!
இதழ் வெளிவந்த கையோடு ஆர்.கே. நாராயணனைப் பார்த்துக் கொடுத்தேன். கோபுலுவின் அமர்க்களச் சித்திரத்தை மிகவும் ரசித்து சிரித்தவர் : “கோபுலு ரொம்ப பிரமாதம்பா!” என்று வாய் நிறைய பாராட்டினார்.
அப்போது அவரிடம் நான், “உங்கள் கற்பனை ரொம்ப நன்றாக இருந்தது” என்றேன். கிழவர் என்ன சொன்னார் தெரியுமா? “கற்பனையாவது கத்ரிக்காயாவது! நிஜம்மாகவே இது நடந்ததய்யா..ரொம்ப காலத்துக்குமுன் கோயம்புத்தூரிலோ மைசூரிலோ ஒரு கச்சேரியை ரயில்வே யார்டில் நடத்தி ஒரே கூத்தாகிவிட்டது!” என்றார்.
பின்னர் கோபுலுவை சந்தித்தபோது, ஆர்.கே.என் அவரது ஓவியத்தை லயித்துப் பாராட்டியதை சொன்னேன். வழக்கம்போல ஒரு சிறு புன்னகை. பாராட்டுக்களை ஒரு சிறு புன்னகையுடன் கடப்பது அவரது வழக்கம்.
ஒரு தடவை நான் அவரிடம் ஆர்.கே.லக்ஷ்மணின் கார்ட்டூங்கள் பலதொகுப்புகளாக வருவதைச் சொல்லி , “உங்கள் படங்களில் சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு காஃபி டேபிள் புக் ஆகப் போடலாமே” என்று கூறினேன். “இதெல்லாம் விற்கும் என்று நினைக்கிறாயா? யார் இதை வாங்கப் பொகிறார்கள்?” என்று என் யோசனைகளைப் புறந்தள்ளிவிட்டு வேறு ஏதோ விஷயத்தைப் பேச ஆரம்பித்து விட்டார். புகழ்க்கூச்சத்தில் தி.ஜானகிராமனுக்கு அண்ணன் இவர். ஜானகிராமனின் புகழ்க்கூச்சம் பற்றி அவருக்கு நெருங்கி இருந்தவர்கள் சொல்லி அறிவேன்.
கோபுலுவிடம் எனக்கு ஒரு சின்ன குறை. இத்தனை வருஷம் என்னுடன் பேசிப் பழகியிருக்கிறார். அவர் மகன் வயதிலிருந்த என்னிடம் நீங்க..வாங்க..என்று பகு வசனமாகவே பேசுவார். இந்த பன்மை விளியை நிறுத்தி ஒருமையில் அழையுங்கள் என்று பலதடவை நான் அவரிடம் கோரியதுண்டு. உஹூம்.. மாட்டவே மாட்டார். வழக்கம்போல ஒரு புன்னகையில் என் கோரிக்கை நிராகரிக்கப்படும். இக்கட்டுரையில் அவர் பேசிய இடங்களை ஒருமையில் போட்டு ஆத்ம திருப்தி அடைகிறேன். ஏனென்று கேட்க அவர்தான் இல்லையே.
கோபுலு – வண்ணச் சித்திரங்கள்
Dear Sivakumar,
Well written homage to Gopulu. Where can I get your Dinamanikathir Isai sirappithaz ? Please send email.
Thanks