முத்து – ஆழ் கடலில் ஓர் அமைதியான அழகு

அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் 39ம் படகுத்துறைக்கு (Pier 39) செல்பவர்களை  கட்டாயம் ஒரு காட்சி கவர்ந்திழுக்கும். அங்கே பல கடைகளில் முத்துக்கள் விற்கப்படுகின்றன. ஆனால் விஷயம் அதுவல்ல. பல கடைகளில் முத்துச் சிப்பியை உங்களுக்கு நேரே உடைத்து உள்ளிருந்து முத்து எடுத்துக்கொடுப்பார்கள். சிப்பியை தண்ணீர் தொட்டியிலிருந்து நீங்களே எடுத்துக்கொடுக்க வேண்டும். உடைக்கும்போதும், பின்னர் அதில் முத்து கிடைத்தவுடனும் கைகளையும் தாம்பாளத்தையும் தட்டி கல கலவென்று ஒருவித ஓசை எழுப்பி அந்த முத்தை உலகிற்கு வரவேற்பார்கள். நீங்கள் தேர்ந்தேடுத்துக்  கொடுத்த சிப்பியில் சில சமயம் முத்து இல்லாமலும் போகலாம். பரவாயில்லை. சிப்பியினுள் முத்து இருந்தால் மட்டுமே நீங்கள் முத்துக்கான  காசு கொடுக்க வேண்டும். காலி என்றால் இன்னொன்று தேர்ந்தெடுக்கலாம்.
சில நாட்கள் முன்பு இந்தப் படகுத்துறையில்  இதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது  பல வருடங்கள் முன்பு எகனாமிக் டைம்ஸ் செய்தித்தாளுக்காக முத்துக்கள் பற்றி நான் எழுதிய  கட்டுரை நினைவுக்கு வந்தது. அது இங்கே.

வருடம் – 1998.

உங்கள் கொள்ளுப்பாட்டியின் முத்து நெக்லஸ் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இயற்கையாக சிப்பியின் முத்தாக அவை இருக்கும் பட்சத்தில் அந்த முத்துக்களுக்கு நல்ல மதிப்பு மார்கெட்டில். 1917ல் புகழ் பெற்ற அணிகலன் விற்பனையாளர் கார்டியர் (Cartier) இரண்டு சரம் இயற்கை முத்துக்களைக் கொடுத்து நியூயார்க்கில் அவர்கள் கட்டிடத்தை வாங்கினர் என்று சரித்திரக் கதை சொல்லுகிறது. அன்று அதன் மதிப்பு 1 மில்லியன் டாலர்களாம்.
முத்தின் ஆரம்பம் பற்றி பல கதைகள் ஓடுகின்றன. வாஸ்கோ  ட காமா முதலில் சிப்பியினுள் முத்து இருப்பதைக் கண்டுபிடித்தார் என்பார்கள். அராபியர்களோ, முத்து கடவுள் கொடுத்த பரிசு என்பார்கள். முத்துக்களில் புறா  முட்டை சைசில் கிடைத்த முத்துக்களும் உண்டு. South Sea Pearl எனப்படும் கடல் முத்தின் அளவு 20.8 mm.
கடலிலிருந்து நேரடியாக பெற்ற இயற்கை முத்துக்களைத் தவிர சிப்பிகளை வளர்த்து முத்து எடுக்கும் முறை 13ம் நூற்றாண்டில் ஆரம்பித்தது.
செயற்கையாக சிப்பி வளர்த்து முத்து ‘அறுவடை’ செய்யும் முறைகளில் சிப்பியினுள் வெளியிலிருந்து உறுத்தலைக்  கிளப்பும் பொருட்கள்  செலுத்தப்படும்.  சிப்பியின் உள்பக்கத்தில் நேகர் (nacre)  என்ற திடப்பொருள் படர்ந்து இருக்கும். இந்த நேக்ரேவை மணியாக உருட்டி சிப்பியினுள் செலுத்தியபின் உறுத்தலை ஏற்படுத்தினால், சிப்பியில் உறுத்தலைக் குறைக்கும் திரவம் சுரக்க ஆரம்பிக்கும்.  சிப்பியிடமிருந்து சுரந்த அந்த  திரவம், மணியின் மேல் விழுந்து அதை முழுவதும் மூடிப் பின்னர் அது திடமாகி முத்தாகி விடும். முத்து உருவாக இரண்டு மூன்று வருடங்கள் கூட ஆகலாம்.
ஆரம்பத்தில் இந்த முத்து அவ்வளவு நேர்த்தியாக வரவில்லை. பின்னர் பல நூற்றாண்டுகள் கழித்து, வில்லியம் சாவில் கென்ட் (William Saville Kent) என்கிற ஆஸ்திரேலியர் செயற்கை முறையில் சிப்பியிலிருந்து  முத்து உருவாக்கினார். இந்த முறையை ஜப்பானில் கொண்டு வந்தவர்கள், டோக்கிச்சி நிஷிகாவா (Tokichi Nishikawa) மற்றும்  தத்சுபி மைஸ் – Tatsubei Mise – என்கிற ஜப்பானியர்கள். இவர்களது முத்துக்கள்   முழுமையான உருண்டையான வடிவத்தில் இருந்தது. ஏறக்குறைய இதே சமயம், கோகிச்சி மிக்கிமோட்டோ (Kokichi Mikimoto) என்ற ஜப்பானியரும் இதுபோல் சிப்பியினுள்  திரவம் சுரக்கச் செய்து முத்துக்கள் அறுவடை செய்து 1920 களில் தன செய்முறைக்கு காப்புரிமையும் பெற்றுக்கொண்டார். இன்று மிகிமொட்டோ முத்துகள் உலகப் பிரசித்தம். 1930 களில் அமெரிக்கா வருடத்துக்கு  வாங்கிய முத்துகளின் மதிப்பு ஏழரை  லட்சம் டாலர்களுக்கு மேல். இதில் பெரும்பாலானவை மிக்கிமோட்டோ முத்துக்கள்.

இயற்கையில் உருவான முத்துக்களுக்கு இணையான  பொலிவும் அழகும் செயற்கையாக பயிரடப்பட்ட முத்துகளிலும் இருந்ததால், நாளடைவில் இயற்கை முத்துக்களின் மதிப்பு சரிந்தது. 1917ல் மில்லியன் டாலர்கள் இருந்த அந்த கார்டியர் (Cartier) முத்துச் சரங்கள் 1967ல் 157000 டாலர்களுக்கு ஏலத்தில் விடப்பட்டது. இருந்தாலும், நாள்பட இயற்கை முத்துக்களின் பொலிவும் அழகும் மங்காமல் இருக்கவே அதன் மதிப்பு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது என்று முத்து வியாபாரிகள்  கூறுகின்றனர்.
ஆரம்ப நாட்களில்முத்து என்பது இயற்கையாக கடல் வாழ் ஜீவராசியான  சிப்பியிலிருந்துதான் எடுக்கப்பட்டது. அந்தக் காலத்தில் கடலுக்கடியில் சென்று  முத்துக்குளிப்பவர்கள் பெரும்பாலும் அடிமைகள். கடலுக்கடியிலிருந்து இவர்கள் கொண்டு வரும் சிப்பிகளிலிருந்து முத்து எடுப்பார்கள்.
இன்று இயற்கை முத்தெடுக்க முத்து குளிப்பது அறவே நின்றுவிட்டது. தமிழ் நாட்டில் தூத்துக்குடியில்தான் கடல் முத்து எடுக்க முத்துக்குளிப்பது வழக்கமாக இருந்தது. இன்று அங்கும் இந்தத் தொழில் அடியோடு காணாமல் போய்விட்டது. முத்து நகரம் என்ற பெயர் மட்டும் எஞ்சியுள்ளது.
எல்லா மொழிகளிலும் வர்ணனைகளில் முத்துக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. அதிகம் பேசாமல் என்றோ வார்த்தை உதிர்ப்பவர்கள் “முத்து” உதிர்ப்பவர்கள் ஆவார்கள். அதுவே அருமையாக பேசுபவர்களுக்கும் முத்து போல் வார்த்தைகள் விழுகின்றன என்ற வர்ணனை அமையும். முத்துக்கள்  இடம் பெரும்  இலக்கிய களங்கள் அநேகம்.  மகாபாரதத்தில் துரியோதநனின் “எடுக்கவோ – கோர்க்கவோ ” சொல்லாடல் பிரசித்தம்  என்றால், சிலப்பதிகாரத்தில் நீதி தவறி தன்  கணவனைக் கொன்ற  பாண்டிய மன்னனின் சபையில்  தன் சலங்கையில் இருந்தது மாணிக்கம், முத்துக்கள் அல்லவென்று  என்று  நிரூபித்து, மதுரையையே அழித்த கண்ணகியின் கதையில் முத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பல இலக்கிய வர்ணனைகளில் அதிகாலையில் இலைகளின் மீது படரும் பனித்துளிகளை முத்துக்கள் என்று வர்ணிப்பது பல எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் பிடித்த விஷயம். நவரத்தினங்களில் முத்துக்கு இப்படி ஒரு சிறப்பு இடம் எப்போதுமே உண்டு.
கடலிலிருந்தும் ஆற்று நீரிலிருந்தும் சிப்பியிலிருந்து எடுக்கப்படும் முத்து பிரத்யேகமாக சிப்பி வளர்க்கப்பட்டும் உற்பத்தி  செய்யப்படுவதுண்டு. நீர் வாழ் ஜந்துவான சிப்பியினுள் ஒரு திரவம் இருக்கும். மணல் அல்லது ஏதேனும் அன்னியப்பொருள் இந்தச் சிப்பியின் உள்ளே எரிச்சலை ஏற்படுத்தும்போது இந்த திரவம் அதிகம் சுரந்து, நாளடைவில் அது கெட்டியாக திட வடிவம் பெறுகிறது. முடிவில் அது முத்தாக மாறுகிறது.

mussel

இன்று சந்தையில் கிடைக்கும் முத்துக்கள் பெரும்பாலும் இருவகைப்படும். ஆற்று நீர் முத்து, கடல் நீர் முத்து. பொதுவாக சிப்பியிலிருந்துதான் முத்து கிடைக்கிறது என்றாலும், சிப்பி போன்றே இருக்கும் மசில் ( mussel) எனப்படும் இன்னொரு வகை பிராணியிலும் இதே போல் திரவம் சுரந்து முத்தாக மாறும். இந்த மசில் வகை ஜந்துக்கள் பெரும்பாலும் ஆற்று நீரில் வாழும். சிப்பி கடலில் வாழும் வகை. இந்த மசிலின் முத்தைவிட சிப்பியின் முத்துவில் பொலிவு இன்னும் அதிகம் – அதனால் விலையும் அதிகம். தவிர ஒரு சிப்பியில் ஒரு முத்துதான் கிடைக்கும். ஆனால்  மசில் ஒரே சமயம் 50 முத்துக்கள் கூட கொடுக்கும். இந்த முத்தின் அளவும் சிறிது. சிப்பியின் முத்து ஒன்றே ஒன்று என்றாலும் கீர்த்தி பெரிது! சிப்பியில் ஒரு முத்து எடுக்கும் நேரத்தில் மசிலில் 50 முத்துக்கள் எடுத்துவிடலாம்.
இயற்கையாக கிடைத்த முத்திற்கும் உற்பத்தி செய்யப்பட்ட முத்துக்கும் வித்தியாசம்  கண்டுபிடிக்க சில வழிகள் உள்ளன.  உற்றுப்பார்த்தால் அல்லது ஒரு எக்ஸ்ரே மூலம் பார்த்தால்  உள்ளே ஏதோ ஒரு உருண்டை  வடிவம் இருப்பதுபோல் இருந்தால் அது செயற்கையாக பயிரிடப்பட்ட முத்து. இயற்கை முத்தில் உள்ளே நோக்கினால் வெற்றிடமாக இருக்கும். மேலும், இயற்கை  முத்தின் வெளிப்புறம் கொஞ்சம் சொறசொறப்பாக இருக்கும். மசில் முத்து  அல்லது செயற்கை முத்துவின் வெளிப்புறம் மிகவும் வழ வழப்பாக இருக்கும். இயற்கை  முத்து எடையில்  சற்று லேசாகவும் இருக்கும். ஆனால் இமிடேஷன் முத்துக்களும் எடையில் லேசாகத்தான் இருக்கும். அதனால் நல்  முத்தைக் கண்டுபிடிக்க இன்னொரு வழி, முத்தைச் சற்று மெழுகுவர்த்திச் சுடரின் மீது வைக்க வேண்டும். நல் முத்தாக இருந்தால் அது பற்றிக்கொள்ளாது; உருகாது. பிளாஸ்டிக் உருகி விடுமல்லவா? அப்படி தீயில் காட்ட தயங்கினால், முத்தை சற்று பல்லில் உரசிப் பாருங்கள்; அது மிக மிருதுவாக இருந்தால் பிளாஸ்டிக். சற்று நர நரவென்று இருந்தால் உங்கள் கையில் இருப்பது சிப்பியில் அல்லது மசிலில் கிடைத்த முத்து!
அதுபோல், முத்தின் ஒளிர்வைக் கணக்கிட கடையில் பல சரங்களை அருகருகில் ஒரே மாதிரியான துணியின் அல்லது பலகையின் மீது வைத்து பார்வையிடுங்கள். கடைக்காரரை ஆயிரம் கேள்விகள் கேட்கத் தயங்க வேண்டாம். சில முத்துக்கள் சுண்ணாம்பு வெண்மையுடன் ஆனால், மிளிர்வு  குறைவாக இருக்கும். அதன் மேல் படும் பிம்பங்களையும் ஒளியையும் கவனியுங்கள். மங்கலாக, கலங்கியிருந்தால்  அது சற்று மதிப்பு குறைந்த முத்து. முழுமையாக உருண்டையாக இருக்கும் முத்துக்கள் செயற்கை முறையில் பயிரிடப்பட்டவை. இயற்கையில் உருவாகும் முத்துக்களில் பூரணமான உருண்டை மிக அரிது.
இந்தியாவில் ஹைதராபாத் நல் முத்துகள் பேர் பெற்றவை. ஆனால் கடலுக்குச் சம்பந்தமேயில்லாத நில மத்தியில் இருக்கும் இந்த ஊரில் எப்படி நல் முத்து டென்ட் போட்டு உட்கார்ந்தது?

986475d49faa9f8b61c58d1058912091

 
அதற்கு ஒரு கதை சொல்லுவார்கள். ஆதி கால ஹைதராபாத்  நிஜாமுக்கு முத்துகள் மிகவும் பிரியம். அதன் மென்மையான ஒளிர்வும், தூய்மையான அழகும் அவரை மிகவும் மயக்கியதாம். அதனால் உலகில் எல்லா மூலைகளிலிருந்தும் முத்துகளை வரவழைத்துவிடுவாராம். பணக்காரரான அவரைத் தேடி முத்து வியாபாரிகள் வந்த வண்ணம் இருப்பார்கள். அவரும் வாங்கிய வண்ணம் இருப்பார். நாளடைவில் அவரே முத்துச்  சிப்பிகளை வாங்கி தன ஊரிலேயே தன் விருப்பம்போல் வடிவமைக்கவும்  ஆரம்பித்தார். முத்தில் ஓட்டை போட்டவுடன் அதன் மதிப்பு சற்று குறைந்துவிடும். ஆனால் பணச் செழிப்புள்ள நிஜாமுக்கு அதைப் பற்றிய கவலை இல்லை. முத்துக்களை தன் உடையில் வைத்தார். ஆபரணங்கள் செய்து கொண்டார். அவர் மாளிகையிலும் ஊரில் செல்வந்தர்களின் வீட்டுப் பெண்களும் முத்தை ஆபரணமாக பலவிதங்களில் அணிந்ததோடல்லாமல், முத்தை அரைத்து உடம்பில் பூசவும் செய்தார்கள் – முத்து போல் பள பளப்பான சருமம் பெற !!
ஹைதராபாத்தில் நகை ஆசாரிகளும் முத்துக்களை வடிவமைப்பதில் தேர்ந்தவர்களாக ஆனார்கள். நுணுக்கமாகவும் மிக சிரத்தையோடும் முத்துக்கள் வடிவமைக்கப்பட வேண்டும். முத்தைச் சரமாகக் கோர்க்க, அதில் துளை போடுவதில் மிகுந்த கவனம் வேண்டும். மிகவும் கடினமான வேலை இதுதான். ஹைதராபாத்தில் சந்தம்பேட்  என்கிற பகுதியில் இப்படிப்பட்ட முத்து நகை ஆசாரிகள் பல தலைமுறைகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். துளை போடுவது மட்டுமல்ல, முத்துக்களை பலவித வடிவங்களில், உருண்டை, அரிசி, தட்டை, ஓவல், என்று பல  வடிவங்களில் – வடிவமைப்பதும் ஒரு கலை. இதனாலேயே முத்து இங்கு பிரசித்தி பெற்றுவிட்டது.
ஒரு முறை 1636ல் ஷாஜஹான் படையெடுத்து வந்த போது அவரிடம், கோல்கொண்டா கோட்டையின்  சுல்தான் சரணடைந்தார். அப்போது அவர் கப்பமாகக் கட்டியது அருமையான முத்துக்கள். அதன் பின் ஔரங்செப்பும் ஹைதராபாத் முத்துக்கள் மேல்  மோகம் கொண்டு தன் ஆட்சிக்குள் கொண்டு வந்தார். ஹைதராபாத் முத்துகளை தன்  விருப்பம்போல் நகாசு வேலைகள் செய்யச் செய்ததில், உடைகள், ஆபரணங்கள் சிம்மாசனங்கள் என்று எல்லாவற்றிலும்  மொகலாய ஆட்சியில் முத்து இடம் பெற ஆரம்பித்தது.
இதன் தொடர்ச்சியாகவே இன்றும் ஹைதராபாத் முத்துக்களுக்கு ஒரு சிறப்பு இருந்து வருகிறது. இன்று முத்துக்கள் உலகின் பல இடங்களிலிருந்து இங்கே கொண்டுவரப்பட்டு, தேர்ந்த ஆசாரிகளால் வடிவமைக்கப்படுகிறது. சார்மினார் அருகே பழைய ஹைதராபாத்தில் பெரும்பாலும் இந்த முத்து வேலைகளும் வணிகமும் இடம் பெறுகின்றன. உங்களுக்குத் தேவையான முறையில் வடிவமைத்துக் கொடுப்பார்கள்.
இங்கிலாந்து அரசிபோல் அப்படியே சரமாக அணிந்தாலும் சரி, நகைகளில் சேர்த்து கோர்த்தாலும் சரி, முத்தின் மென்மையான அழகு அனைவரையும் கவரத்தான் செய்கிறது. ஆனால் முத்தின் மீது எந்தவித வாசனை திரவியங்களும் பட்டுவிடாமல் பாதுகாக்க வேண்டும். இவை பட்டுவிட்டால், முத்தின் மேல் தோல் உரிந்துவிடும். அதனால் வாசனை திரவியங்களை  முதலில் அணிந்துவிட்டு, பின்னர் கடைசியில் முத்தை அணிய வேண்டும்.
முத்துக்கள் விலை காலப்போக்கில் விலையேறிக்கொண்டிருப்பதால் இதை ஒரு நல்ல முதலீடாகவும் கருதுபவர்கள் உள்ளனர். சமீப கால முத்துகள் எல்லாமே செயற்கை உருவாக்கம் என்பதால் மிகப் பழமையான – குடும்பங்களில் வழி வழியாக வந்த முத்துக்களுக்கு தொன்மையான ஆபரணம் என்ற மதிப்போடு, அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட இயற்கை முத்து என்ற மதிப்பும் சேர்ந்து கொள்கிறது. இன்றைய சூழ்நிலையில் இந்த முத்துக்கள் விலை மதிப்பற்றவை. தற்போது புழங்கும் செயற்கையாக
உருவாக்கப்பட்ட முத்துக்களுக்கே  வருடத்திற்கு 15 லிருந்து 20 சதவிகிதம் வரை விலை உயருகிறது என்கிறார் ஒரு சிங்கப்பூர் முத்து வணிகர். இதற்கு ஒரு முக்கிய காரணம் முத்து தயாரிக்கும் நிறுவனங்கள் தேவைக்கு மேல் அதிகம் உற்பத்தி செய்வதில்லை. ஓரளவு தேவையையும் உற்பத்தியையும் –  demand & supply – கணக்கில் கொண்டு  மார்கெட்டில் புழங்கும் முத்துக்களின் அளவைக் கணக்கிட்டு சிறிது சிறிதாக பயிரிடுவதால் மார்கெட்டின் தேவைக்கு  அதிகமாக முத்துக்கள் புழங்குவதில்லை. இதனால் முத்தின் விலை சரிவதில்லை; மாறாக ஏறுகின்றன என்று இந்த வணிகர் விளக்குகிறார்.
ஆதி காலங்களில் தலையிலும் கை கால்களிலும் மலர்கள் அணியும் பழக்கத்தின் தொடர்ச்சியே முத்துக்கள் போன்ற ஆபரணங்கள் அணிவதும் என்று சொல்லுவார்கள். இப்படி அணிகலன்கள் அணிவது திருஷ்டி கழிக்க என்றும் சொல்லப்படுவதுண்டு. ஜோதிட சாஸ்திரப்படி  முத்துக்கள் நிலவைக் குறிக்கும் என்றும், அதன் எதிரொலியாக முத்து அணியும் பழக்கம் ஆரம்பித்தது என்றும் சிலர் கூறுவார்கள். காரணம் எதுவானாலும்,  நீரின் ஆழத்திலிருந்து கிடைக்கும் கண்ணுக்கு குளிர்ச்சியான சாத்வீக வெண்மையுடன் மிளிரும் முத்து காலம் காலமாக  நம்மைக் கவருகிறது என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.