என் பங்கு

Family_Houses_Marriages_Weddings_Divorce_Husband_Wife_Home_Kids_Pregnancy_Children

நான் ஒரு வழக்கறிஞர். என்னிடம் ஒரு பெண் விவாகரத்து கோரி வந்திருந்தாள்.
பொதுவாக வந்த முதல் நாள் எல்லாருமே தான் பட்ட கஷ்டங்களை மட்டுமே சொல்லி அழுது, புலம்புவார்கள். அவர்கள் தெளிய சில நாட்கள் அவகாசம் வேண்டி இருக்கும்.
ஆனால் இந்தப் பெண் அப்படி எந்த குழப்பமுமே இல்லாமல் இருந்தாள். தெளிவாக எந்தப் புலம்பலும் இல்லாமல் பேசினாள்.
அவள் சொன்னதை இங்கே அப்படியே பகிர்கிறேன்.
“என்னுடையது காதல் திருமணம். காதலுக்கு இரு வீட்டிலும் ஏற்கவில்லை. மெல்ல மெல்ல சமாதானம் செய்து பிறகுதான் ஏற்றார்கள். அவர்கள் விருப்பப்படி, ஏற்கனவே காதலித்துக் கல்யாண முடிவில் இருந்த எங்களில், என்னை அவர்கள் மறுபடி பெண் பார்த்து, என் அப்பா செலவில் திருமணம் முடித்து, நான் அவர்கள் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தேன்.
இருவருமே ஒரே காலேஜ் ஒரே கம்பெனி. வேலைக்குப் போய்க் கொண்டிருந்தோம். நான் கருவுற்றதும் வேலையைவிட வேண்டியதாயிற்று. பிள்ளை பெற என் வீட்டிற்குப் போய் வந்தேன். என் பெற்றோர்தான் எல்லாமும் பார்த்துக் கொண்டார்கள். பிள்ளை பிறந்ததும் கணவரின் வீடடு பெரியவர் பெயரை குழந்தைக்குச் சூட்டி பின் என்னையும் அழைத்துப் போனார்கள். குழந்தைக்குப் பால் கொடுத்தல் போன்ற அத்தியாவசிய காரணங்களால் நான் வேலையை விட வேண்டியதாயிற்று. அதில் பெரிதாக பிரச்சனை ஏதும் இல்லாமல்தான் இருந்தது எனக்கு.
ஆனால், ஒவ்வொரு முறையும் என் அத்தியாவசியத் தேவைகளுக்கு நான் கணவனிடம் காசு கேட்பது என்னை நானே அவமானப்படுத்திக் கொள்வதாகத் தோன்றியது.
நான் பெற்றது என் குழந்தையை அல்ல. அவனது குழந்தையையும் தானே? நான் வேலையை விட்டது எங்கள் இருவரின் குழந்தையைப் பார்த்துக் கொள்ளவும்தானே? எனில் எனக்கான மற்ற பொறுப்புகளை கணவரும் பகிர்ந்து கொள்ளத்தானே வேண்டும்?
அதன் பிறகு, வீடு வாங்கினோம். அதாவது, நான் வேலையை விட்டதால் வீட்டு வேலையை மட்டும் செய்வதால் வீடு வாங்கினோம் எனச் சொல்ல இயலாது. கணவர் வீடு வாங்கினார். அத்தனை பணமும் கணவரின் சம்பாத்தியம்தான். ஆனால், எங்கள் இருவரின் குழந்தையைப் பார்த்துக்கொள்ள நான் வேலையை விட்டதால், அது அவரின் வீடு. அவரின் வீட்டில் நானும் இருக்கிறேன். கோவம் வந்தால் வீட்டை விட்டு வெளியேறச் சொல்லலாம். சட்டம் அப்படிச் சொல்ல முடியாது என்று சொல்லி இருந்தாலுமே, கோவத்தில் வரும் வார்த்தைகளுக்கு, மனதை ஒடிக்கும் அந்த வார்த்தைகளுக்குச் சட்டம் தெரியாதே.
இப்போது என் மகனுக்கு என் உதவி தேவை இல்லை. வீட்டில் இருந்ததால் வீட்டு வேலையைச் செய்தேன் எனச்சொல்லி அதை எக்ஸ்பீரியன்ஸாக கணக்குக் காட்டவும் இயலாது.
வீட்டில் பெண்கள் செய்யும் வேலைகளுக்கு என விவாகரத்து மாதிரியான சந்தர்ப்பங்களில் அரசு எதோ தொகை நிர்ணயம் செய்திருக்கிறதை நான் அறிவேன்.
ஆனால் இந்த வீட்டு வேலைக்காக மட்டுமே நான் இழந்த என் எக்ஸ்பீரியன்ஸ் பீரியடுக்கு யார் பதில் சொல்வார்கள்?
ஆணோ, பெண்ணோ, எல்லாருமே எதாவது ஒன்றை இழந்துதான் வேறொன்றைப் பெற முடியும் என்பது தெரிந்தே இருக்கிறேன்.
ஆணுக்கு சம்பாதிக்கும் ஒரு வழியை இழந்து வேறொரு வழிதான் கிடைத்திருக்கலாம். ஆனால் எனக்கு..பெண்ணுக்கு சம்பாதிக்கும் எல்லா வழியையுமே அடைத்துவிட்டு, என் தொழின்முறை அனுபவம் எல்லாவற்றையும் இழந்துவிட்டு, அடுப்படி மட்டுமேதான் என்றால் எனக்குத் தேவை இல்லை. எல்லா பெண்களுமே இதை சிந்திக்கும் முன்பே இதில் விழுந்துவிட்டு, காலம் போனபின் புலம்பலோடு வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்.
சரி எல்லாம் இருக்கட்டும். பிள்ளை பெற்று அதை வளர்க்கும் என் வேலை முடிந்துவிட்டது, இனி என் தொழிலை மட்டுமே பார்க்க நினைக்கிறேன். விவாகரத்து கிடைக்குமா?”
இவள் பேசுவதில் என் கவனத்தை ஈர்த்தது…
1. இந்த குடித்தனத்தின் மூலம் கிடைத்த குழந்தை எங்கள் இருவருடையதும் என்றால், இதே குடித்தனத்தின் மூலம் கிடைத்த பணம் பொருள் எல்லாமும் எங்கள் இருவருடையதும் தானே? அது எப்படி ஆணுடையது மட்டும் ஆகும்?
2. இருவருமே ஒரு தொழிலை விரும்பி வேறொன்றைச் செய்யும்படி ஆனதுதான். ஆனால் ஆணுக்கு சம்பாதிக்கும் ஒரு வழி அடைபட்டு வேறொரு வழி. பெண்ணுக்கு சம்பாதிக்கும் வழி மொத்தமுமே அடைபட்டு, வீட்டு வேலை எனும் ஒரே வழி.
3. சரி இவை எல்லாம் பிரச்சினை என்றால் பிறகு ஏன் திருமணம் செய்தாய்? எனும் கேள்விக்கு…ஆமாம் அதனால்தான் என் கடமை முடியும் வரை பொறுமை காத்துவிட்டு இப்போது விலகுகிறேன்.
இது சுயநலம் போலத்தோன்றினாலும், இப்போதுதான், அவள் நிறையவே இழந்த பின் தான் சுயமாகச் சிந்திக்கிறாள் கடமையை முடித்துவிட்டு, எனவே இது சுய நலமில்லை.

oOo

தே போலவே சட்டம் குறித்த சந்தேகத்தோடு ஒரு பெருங்கடை முதலாளி வந்திருந்தார். அவரது ஒரே கேள்வி… சட்டத்தின்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே வேலைக்கு ஒரே சம்பளம்தான் தர வேண்டும் என இருக்கிறதாமே? அது உண்மையா? ஆனால் அது நியாயம் இல்லை தானே? செய்யும் வேலைக்கு ஏற்பத்தானே கூலி தர முடியும்.? இப்படிச் சட்டம் இருந்தால் என்னைப் போன்றவர்கள் பெண்களை வேலைக்கு வைக்கத் தயங்குவோம்தானே?
அந்தக் கேள்வியில் நியாயம் இருக்கிறது. அவர் கேள்வியை அவர் வாசகத்திலேயே..” நான் ஒரு கடை முதலாளி. என் கடையில் பத்து இளைஞர்களும், பத்துப் பெண்களும் வேலை பார்க்கிறார்கள்.
சட்டம் இருவருக்குமே சமமான வேலைக்கு சமமான சம்பளம் தர வேண்டும் என்றெ சொல்கிறது.நானும் சட்டத்தை மதிப்பதனால், அதற்கு உடன் படுகிறேன்.
ஆனால் பாருங்கள்… ஒரு முதலாளியாக நான் கவனித்ததில், ஆண்கள் வேலை செய்யும் அளவுக்குப் பெண்கள் வேலை செய்வதில்லை. மாதத்தில் குறைந்தது இரண்டு நாள் திடீரென லீவு போட்டு விடுகிறார்கள். இது போக, பிள்ளைக்கு உடம்பு சரி இல்லை. மாமியாளுக்கு நெஞ்சு வலி என ஏகப்பட்ட காரணங்கள்.
இங்கே வந்த சமயத்திலாவது வேலை செய்கிறார்களா? …ம்ஹும்..உயரத்தில் இருக்கும் ஒரு பெட்டியை இறக்க வேண்டுமெனில் கூட வேலை செய்யும் ஆணைக் கூப்பிடுகிறார்கள். கனமான உருளையை உருட்ட வேண்டுமா? கூப்பிடு ஆண்பிள்ளையை…
வேலை நேரத்தில் சட்டென ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இடத்திலிருந்து எதையேனும் எடுத்துவர வேண்டுமா? இந்த இளைஞர்களில் எவனிடமாவது வண்டிச்சாவியைக் கொடுத்தால் போதும் கொண்டு வந்து இறக்கி விடுவான். இந்தப் பெண்களும் இருக்கிறார்களே…
சும்மா இருக்கும் நேரத்தில் இந்தப் பெண்கள் சமையல் குறிப்பு பற்றிப் பேசுவார்கள். அல்லது மாமியாரையோ ஒட்டுமொத்த ஆண்கள் சமூகத்தையோ திட்டிக் கொண்டிருப்பார்கள்.
மாலை 7 மணிக்கு மேல் இவர்கள் யாரையுமே நான் வேலை சொல்ல முடியாது. ஏனெனில் காலை 6 மணி முதல் வேலை.. என்பதால் 7 மணி வரைதான் இவர்களை வேலை வாங்க முடியும். இதுவே பசங்களாக இருந்தால் அவர்களுக்கான வேலை நேரமும் 11 மணி நேரம்தான் என்றாலும் அதை மதியத்திலிருந்து ஆரம்பித்து ஷிஃப்ட் முறையில் இரவில் இவர்கள் வேலை செய்யப் பயன்படுத்த முடியும்.
பெண்களை வேலைக்கு வைத்ததால் எனக்கு நட்டம்தான். அந்த இடத்தில் ஆண்களை வைத்திருந்தால் இன்னும் கூட வேலை ஆகி இருக்கும். அடுத்த வருடம் முதல் இரண்டு பெண்களை மட்டும் வேலைக்கு வைத்துக் கொண்டுவிட்டு மற்றவர்கள் இடத்தில் ஆண்களையே நியமிக்கலாம் என்றே இருக்கிறேன். அந்த இரண்டு பெண்களையும் கூட கடையைக் கூட்ட, மெழுக, இதற்குத்தான் பயன்படுத்த முடியும்.
ஆனால் இப்போது ஆண்கள் பெண்கள் இவர்களுக்கு எப்படி நான் சமச் சம்பளம் தர முடியும்? உண்மையில் சொல்லப்போனால் எனக்குக் கூச்சமாக இருக்கிறது. ஆண்களை ஏமாற்றுவது போலவே எனக்கொரு உணர்வு. சரி தானே நான் சொல்வது?’
(இப்போதெல்லாம் இந்த பெண்களுக்கு அவர்கள் வேலைக்கேற்றார் போல சம்பளத்தைக் குறைத்துதான் கொடுக்கிறேன். ஆனால் முழு சம்பளத்திற்கு கையெழுத்து வாங்கிக் கொள்கிறேன். சட்டத்திற்கு ஒரு போதும் என் கஷ்டம் புரியாது. பெண்களுக்கு எதற்காக எல்லா சட்டங்களுமே ஆதரவாக இருக்கிறதென்றுதான் புரியவில்லை. வேலைக்கேத்த கூலி தானே நியாயம்?)
ஆமாம் இவர் கேள்வியில் நியாயம் இருப்பதே போல இருந்தாலும்… வேறொரு உதாரணத்தின் மூலம் விளக்கினேன் அவருக்கு…
ஒருவருடைய தொழிலுக்கு, நிறைய மரங்கள் தேவைப்படுகிறது. இதற்காக அவர் தன்னுடைய ஐம்பது ஏக்கர் நிலத்தில் அதுவரை வளர்ந்திருந்த மரங்கள் அனைத்தையும் வெட்டுகிறார். ஆனால் சட்டமோ அப்படி வெட்டக்கூடாது என்கிறது. ஏன்? ஏனெனில் அந்த மரங்கள் அவருடைய சொந்த மரங்கள் என்றாலுமே கூட இதைச் செய்வதால் அவருக்குமே இடையூறாகக்கூடிய ஒன்றையே செய்கிறார். இயற்கையை அழிப்பது என்பது அவருக்கும் இந்த சமூகத்துக்குமே கேடு விளைவிக்கும். அதே போலவே, பெண்களுக்கு சமச் சம்பளம் தராதிருத்தல் என்பதும். ஒரு வேளை இவர் சமச் சம்பளம் தராதிருந்தால் அந்தப் பெண் வேறென்ன முடிவுகளுக்குச் செல்வாள்? அந்த முடிவுகள் சமுதாயத்தை என்ன விதத்தில் பாதிக்கும் என்பதை எல்லாம் சிந்தித்துப் பார்க்கச்சொன்னேன். அரசு என்பது போலிஸிங் ஸ்டேடாக மட்டும் இருப்பதில்லை. இது வெல்ஃபேர் அரசு. ஆக அந்தச் சட்டம் நியாயமானதே.
இந்தப் பெண்கள் வேறு பல வேலைகளையும், இவரின் கடை ஆண்கள் செய்யாத வேலைகளையும் செய்துவிட்டே இந்த வேலையையும் செய்கிறார்கள்.
ஆகவே அந்தப் பெண்களின் சமூகப் பங்களிப்புக்காக இவர் சமச் சம்பளம் தருவதும் அவர்களுக்கு விடுப்பு தருவதுமே நியாயம் அல்லவா?

oOo

நாங்கள் ஆறு பேர் தோழர் தோழியர் வழக்கறிஞர்கள் இருக்கிறோம். ஒரு முறை பேச்சு வாக்கில், அறுவரும் வாரா வாரம் ஒவ்வொருவர் வீட்டுக்கும் போக வேண்டும் என முடிவெடுத்திருந்தோம். எங்களில் நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள்.
முதல் வாரம் ரவி வீட்டிற்குப் போயிருந்தோம். அவன் மனைவி எங்களை நன்கு உபசரித்து காஃபி போட்டுக்கொடுத்து பேசிக்கொண்டிருந்தாள். அத்தோடு சில சிறு தீனிகளும்…
அடுத்தவாரம் காதர் வீட்டுக்குப் போயிருந்தோம். அவர் அம்மா தூத்துக்குடியிலிருந்து தருவித்திருந்த மக்ரூன்கள் கொடுத்து உபசரித்தார்.
இப்படி வாரா வாரம் நாங்கள் போவதும். அவர்கள் வீட்டில் எங்களுக்கு உபசரணை நடப்பதுமாக நான்குவாரங்கள் கடந்தது.
அடுத்ததாக நானோ, இன்னொரு தோழியோதான் அழைக்க வேண்டும். அவள் அழைப்பாள் என நானும் நான் அழைப்பேன் என அவளும் காத்திருந்தோம். பிறகு நான் அவளிடம் கேட்டே விட்டேன். “..ம்ச்..” என்றாள். எனக்குமே எல்லாரையும் அழைப்பதில் பெரும் விருப்பம் ஏதும் இல்லை. ஏன் என இருவரும் பேசியதில் ..
“ஆமா, இவங்க எல்லாரும் வந்தப்ப, அவங்க வீட்டு அம்மா, அண்ணி, மனைவின்னு தீனி செஞ்சு கொடுத்து விருந்தோம்பல் செய்றாங்க. இப்ப நம்ம வீட்டுக்கு வரச்சொன்னா நாமதான் கிச்சனுக்கும் ஹாலுக்குமா அல்லாடணும். ஆம்பளங்கள ஹால்ல உட்கார வச்சிட்டு அவங்களோட நம்ம வீட்டு ஆம்பளைங்களப் பேச விட்டுட்டு, நாம அடுப்படிக்கு ஓடணும். அங்க கிண்டி, ஹாலுக்கு வந்து ஈன்னு விருந்தோம்பணும் அப்றம் எல்லாரும் போன பிறகு தட்டு கழுவரதுலருந்து எல்லாம் வேல இழுக்கும். அவங்களுக்கு என்ன வீட்ல ஒரு பொண்டாட்டி வச்சிருக்காங்க. விருந்துக்கு நெனச்சப்ப கூப்பிடறாங்க. நாம என்ன பொண்டாட்டி வச்சிருக்கமா?” கிண்டல் கேள்வியை புன்னகையோடுதான் கேட்டாள். ஆனால் புன்னகைக்க வைக்கும் கேள்வி அல்லதானே?
இவை எல்லாமே ஆரம்ப கேள்விகள் மட்டுமே.

0 Replies to “என் பங்கு”

  1. ஹன்ஸா அவர்களுக்கு,
    பெண்களின் உரிமை பற்றி பேசும் போது உங்கள் தோழர்களின் மனைவி/அம்மாக்களின் உரிமைகளை மறந்து விட்டீர்களா? வார இறுதியில் அவர்களின் விருந்தோம்பலை ஏற்றுக்கொள்வதில் தங்களுக்குத் தயக்கம் ஏதுமில்லை என்றே கருதுகிறேன். அப்படியென்றால், அந்த பெண்களுக்கு வேலை ஏதுமில்லையா? உங்களை விட அவர்களைக் கீழானவர்களாக கருதுகிறீர்களா? வீட்டு வேலைக்கு ஒருவரை அமர்த்துவதிலோ, வெளியிலிருந்து உணவு வரவழைப்பதிலோ எந்த கெளரவக்குறைபாடும் தங்களுக்கு ஏற்படப்போவதில்லை.
    அப்படி இருக்க, நீங்கள் தோழர்களை அழைக்கத் தயங்குவதற்கு வேறு ஏதோ காரணங்கள்தான் இருக்குமோ என நினைக்கிறேன்.

Leave a Reply to NaveenCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.