கவிதைகள்

புதிய ஏற்பாடு

வனத்திலிருப்பதாய்
இந்தக்
கணத்திலிருந்து நான்
மலரோடும்
காய்கனிகளோடும்
செடிகொடிகளோடும்
விலங்குகளோடும் இனி
புலித்தோல் அணியாமல்
ஒரு
புதுத்தோற்றம்
அவ்வளவு எளிதானது
ஆனால் எளிதல்ல
அவ்வளவு அரியது
ஆனால் அரிதானதல்ல
ஆயுதபாணிகள் எல்லாம்
இனி
நிராயுதபாணிகள்
மீட்டெடுக்கமுடியாததைத்
தவிர்க்கிறேன்
சிந்தாமல்
சிதறாமல் காக்கிறேன்
இப்போதுதான்
எல்லாரும் சிந்திக்கிறார்கள்
காத்துக்கொண்டிருப்பவர்கள்
ஏமாற்றமடைகிறார்கள்
நொய்மனக்காரர்கள்
குற்றவாளியாகாமல்
காப்பாற்றுகிறேன்
வன்முறையாளர்கள்
ஏமாறுகிறார்கள்
அவரவர்விருப்பம்போல்
ஓவியம்தீட்டுகிறார்கள்
அவசரக்காரர்களின்
ஆழ்மனத்தில் கனம்
சாதாரணமானவர்களையும்
ஞானிகளாக்கியிருக்கிறேன்
நான் இப்போது
பாடுபொருளும்
பார்க்கும்பொருளும்
பிச்சினிக்காடு இளங்கோ

oOo

வீடுகள்

நெடுநாட்களுக்கு முன்பு
எங்கள் எல்லோருக்காகவும்
கட்டப்பட்டது
ஒரு வீடு

Homes_Castle_Houses_Lakes_Scenic_Serene_Dwelling_Stay_Places_Towns_Quaint_Residenceஅதிலிருந்து
எங்கள் ஒவ்வொருவருக்குமான
தனித்தனி வீடுகளைப்
பிரித்தெடுத்து
நாங்களே கட்டிக்கொண்டோம்

ஒரு கார் நிறுத்துமிடமும்
ஒரு புத்தக அலமாரியும்
ஒரு மர நாற்காலியும்
வெண்ணிறக் கம்பிகள் கொண்ட
ஒரு ஜன்னலும்
அதன் வழி தெரியும்
ஒரு மரமல்லி மரமும்
மூன்று செம்பருத்திச் செடிகளும்
மட்டுமே கொண்டது
என் வீடு

கார் நிற்குமிடதிற்கருகில்
சிறு கோலமிடும் வாசலும்
இருபத்து நான்கு புட்டிகள் அடுக்கிய
மூன்றடுக்கு அலமாரி கொண்ட
சமையலறையும்
நான்கு தொலைக்காட்சித் தொடர்களில் வரும்
தொண்ணூறு பேர் வசிக்கும் வீடு
என் மனைவியுடையது

காருக்கு அருகில்
ஒரு சைக்கிள் நிறுத்துமிடமும்
மாடிப்படிக்குக் கீழே
கிரிக்கெட் மட்டை
வைக்கும் இடமும்
பேட்மேனும் சச்சினும்
அவனுடன் வசிக்கும் உள்ளறையும்
கொண்டது
என் மகனின் வீடு

பெரிய கார் நின்று சென்ற இடத்தில்
தன் மூன்று கார்களை ஓட்டும் இடமும்
பளபளப்பான வெண்ணிறத் தரையும்
ஒரு விமானம்
ஒரு புலி
இரண்டு மான்கள் மற்றும்
ஒரு ரப்பர் பந்து
எல்லாவற்றையும் வைக்கும் அலமாரியின்
அடிப்பகுதியும் கொண்டது
என் மகளின் வீடு

மூன்று வாழை மரங்களும்
ஒரு தென்னையும்
தினம் காய்ந்துகொண்டே இருக்கும் தோட்டமும்
எப்போதும் பிள்ளைகளின்
கூச்சல் கேட்டுக்கொண்டே இருக்கும்
உள்வீடும் கொண்டது
என் தந்தையின் வீடு

பண்டிகை வரும்தோறும்
ஒருவர் மற்றவர் வீட்டை
முற்றாகக் கலைத்து
ஒரே வீடாக்குவோம்

மறுநாள் தொடங்கி
அடுத்த வருடம் வரை
எல்லோருக்குமான வீட்டிலிருந்து
எங்களுக்கான தனித்தனி வீடுகளைப்
பிரித்து எடுத்துக்
கட்டிக்கொண்டே இருப்போம்.

சோழகக்கொண்டல்

oOo

0 Replies to “கவிதைகள்”

  1. தொண்ணூறு பேர் வசிக்கும் பெரிய வீட்டில், ஆவலதி, நாத்தனார், மாமியார் கொடுமைகள் குறைகள். ஆனால் இன்று தனிக் குடித்தன வாழ்வில் பெண்களுக்கு சிறந்த கல்வி. எனவே 2010 களை வரவேற்போம், 1980 களை மறப்போம்.

  2. “நான்கு தொலைக்காட்சித் தொடர்களில் வரும்
    தொண்ணூறு பேர் வசிக்கும் வீடு என் மனைவியுடையது”.
    தொண்ணூறு பேர் வசிக்கும் பெரிய வீட்டில், ஆவலதி, நாத்தனார், மாமியார் கொடுமைகள் குறைகள் இருக்கும் என்று கவிதை சொல்லவில்லை. இங்கு தொலைக்காட்சியும் அது இருக்கும் இடமும் மட்டுமே சொல்லப்படுகிறது.
    Thank you.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.