கம்போடிய அங்கோர் வாட்டில் இந்தியத் தொல்பொருள் ஆய்வகம்

முப்பது வருடங்களுக்குப் பிறகு சில வருடங்களுக்கு முன் மதுரைக்கு சென்றேன். எதுவும் மாறியிருக்கவில்லை என்றுதான் தோன்றியது. நகரம் முழுக்க எங்கே சென்றாலும் நம்மை தொடரும் ஒரு மல்லிகை மணமும், கோவிலுள்ளும் ஆயிரங்கால் மண்டபத்தினுள்ளும் மிதக்கும் வௌவால்களின் நெடியும் அப்படியே காலத்தில் உறைந்தாற்போல் இருந்தது.
ஆயிரங்கால் மண்டபத்துக்கு சென்றபோது சிற்பங்களும் அந்த நுணுக்கமான வேலைப்பாடும் எப்போதும்போல் பிரமிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அங்கு இருந்த காட்சிப் பெட்டிகளில் இருந்த பல அரும் புராதனப் பொருட்கள் சிதிலமடைந்து, ஒட்டடை படிந்து, கேட்பாரற்று இருப்பதைப் பார்த்து மனம் மிக நொந்தது. புராதனப் பொருட்களை பாதுகாக்கும் விதமே நம் அரும்பொருட்காட்சியகங்களில் இல்லையோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
புராதன சின்னங்களை பாதுகாப்பது ஒரு கலை. இந்திய தொல்லியல் ஆய்வகம் பெரும்பாலான சின்னங்களை பாதுகாத்து வருகிறது. சில இடங்களில் மிக கவனக்குறைவு என்று இருந்தாலும், பல சரித்திர சின்னங்களை சிறப்பான வகையில் பாதுகாத்துதான் வருகிறது இந்த அமைப்பு. நம் நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளிலும் சில சமயம் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் பணிகள் நாடப்படுகின்றன. அப்படி மேற்கொள்ளப்படும் சேவைகள் சில சமயம் பாராட்டுக்கும் சில சமயம் விமர்சனத்துக்கும் ஆளாவதுண்டு.
1992 ம் வருடம் கம்போடிய நாட்டின் புகழ்பெற்ற புராதன கோவிலான அங்கோர் வாட்டில் பழுது பார்த்து சரி செய்யும் பணியை இந்திய தொல்லியல் ஆய்வகம் மேற்கொண்டிருந்தது. ஆனால் அந்த பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்று விமர்சனம் எழுந்தது. அதைப் பற்றி விசாரித்து எழுதும்படி ஒரு தினசரி என்னிடம் கேட்டிருந்தது. அந்தக் கதை இங்கே:

வருடம் 1992. டில்லி.

அங்கோர் வாட்டில் புனர் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருக்கும் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பிய வண்ணம் இருக்கும் மேற்கத்திய விமர்சகர்கள், பிடிக்காத மருமகள் எதைச் செய்தாலும் குற்றம் என்ற மனோபாவத்துடன் நடந்து கொள்கிறார்களா? அல்லது அவர்களது குற்றச்சாட்டுகளில் சிறிதேனும் உண்மை இருக்கிறதா?
மில்லியன் ரூபாய் கேள்வி. ஆனால் ஒரு சர்ச்சை என்னவோ முளைத்துவிட்டதும் அது உலகளவில் பேசப்படுவதும் உண்மைதான்.
கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவில் 12 ம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மன் என்ற அரசரால் கட்டப்பட்டது. நம்மூர் கோவில்களுள் பல சன்னிதிகள் இருப்பதுபோல், சின்னதும் பெரிசுமாக 70 கோயில்கள் அடங்கிய பெரிய கோவில் வளாகம் இது. கம்போடியாவில் பல காலம் அரசாண்ட கோமர் – Khmer – என்ற அரசுப் பரம்பரையின் உன்னதமான கட்டிடக் கலையின் உச்சம் இந்த அங்கோர் வாட்.
கொமேர்களின் தலைநகரம் அங்கோர்வாட். இந்து மதமும் புத்த மதமும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தொன்மையான கலாசாரம் மிக்க மக்கள் வாழ்ந்த இடம் இது. நாளடைவில் பலவித போர்களுக்கு பின் மக்கள் இந்த ஊரை கைவிட்டுவிட்டு இடம் பெயர்ந்து போய்விட்டார்கள். முடிவில் 1860 ல் இது பிரான்ஸ் காலனியாக மாறிற்று.
மொத்தம் 400 சதுர கிலோ மீட்டர். பரப்பளவு உள்ள இந்த வளாகத்தின் நடுவே பெரிய கோவிலும் ஆங்காங்கே சிறிய கோவில்களுமாக அமைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய கோவில் வளாகம் என்று யுனெஸ்கோ அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலின் சுவர்கள் முழுவதும் Sand stone எனப்படும் மணற்கலால் கட்டப்பட்டுள்ளது. இயற்கையிலேயே அமைந்த வித வித வர்ண மணற்கல் கட்டிடங்கள் இவை.
1816 ல் முதன் முதலில் பிரெஞ்ச் காரர்கள் இந்த இடத்தைக் கண்டுபிடித்தபோது இதைப புதுப்பிக்க ” அங்கோர் வாட் பாதுகாப்பு இயக்கம் ” என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். 1953 ல் கம்போடியா பிரான்ஸ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றாலும் 1970 வரை இந்த அமைப்பு அங்கோர் வாட்டைப்பாதுகாத்து வந்தது. பிறகு பிரெஞ்ச்காரர்கள் முழுவதுமாக இந்நாட்டை விட்டு வெளியேறியதும் மீண்டும் அங்கோர் வாட் கவனிப்பாரற்று போயிற்று.
அப்போது நொரொடோம் மன்னர் தலைமையில் தலைநகரான பெனாம் பென்னில் இருந்த அரசு, அங்கோர் வாட்டை வருங்கால சந்ததியினருக்கு பாதுகாக்க உலக அரங்கில் அழைப்பு விடுத்தது. விரிவான ஆய்வுக்குப் பிறகு இந்திய தொல்லியல் ஆய்வகம் 1986 ல் அங்கோர் வாட் கோவில் வளாகத்தைப் புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டது.
நமது கோவில்களைப் போல் அற்புதமான சிலைகளும், சுவர்களில் செதுக்கிய சிற்பங்களுமாக அமைந்திருக்கும் இந்தக் கோவிலில் பிரம்மா விஷ்ணு மற்றும் புத்தர் கடவுள் சிலைகள் உள்ளன. தொன்மையான கம்போடிய கலாசாரத்தைப் பறைசாற்றும் இந்தக் கோவிலின் பழுது பார்க்கும் பணி இந்திய தொல்லியல் ஆய்வகத்துக்கு ஒரு சவால். 130 வருடம் தொன்மையான சின்னங்களைப் பாதுகாக்கும் பணியில் இருக்கும் தன் திறமை அனைத்தையும் இதில் செலுத்தியது இந்த அமைப்பு.
” ஒவ்வொரு வேலையிலும் எங்கள் பணியாட்கள் மிகுந்த சிரத்தையுடன் கவனத்துடனும் ஈடுபட்டுள்ளனர்.” என்கிறார் தற்போது இந்தப பணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பி. நரசிம்மையா. ” தோல் பொருள் சின்னக்களின் பாதுகாப்பு பணியில் கவனமாக செய்ய வேண்டிய அனைத்து குறிப்புகளையும் பின்பற்றி இந்த வேலை நடந்து வருகிறது. முகியமாக மேலும் இந்தக் கோவில் சிதிலமடையாமல் தடுப்பது மிக முக்கியம். அந்தப் பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் அடிப்படையில் எப்படி உருவமைப்பு இருந்ததோ அதே நிலைக்கு மீண்டும் கவனமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படி வேலைகள் மேற்கொள்ளும்போது அடிப்படை வேலைப்படுகளிலிருந்து எந்த வித மாற்றமும் இல்லாமல் இருக்குமாறும் பார்த்துக்கொள்கிறோம். ” என்று இவர் ஆய்வகத்தின் பணியை விளக்குகிறார்.
ஆனால் இந்த ஆய்வகத்தின் பணியைப் பற்றி விமர்சனம் ஆரம்பத்திலேயே எழுந்தது. புதுப்பிக்கும் பணியில் மானாவாரியாக சிமெண்ட் உபயோகிப்பதால் அது அந்தப் பழைய கட்டிடங்கள் மேல் ஒரு வித இரட்டை நிறத் தோற்றத்தை உருவாக்கும் என்பது முக்கிய விமர்சனம். தவிர உபயோகிக்கப்படும் சில கெமிகல்கள் மற்றும் இப்படிப்பட்ட வேலைகளில் தேர்ச்சியிராத கொமர் ஆட்களைவிட்டு செய்யும்போது அவர்கள் விவரமறியாது சுரண்டும் வேலைகளை செய்வதால் சிற்பங்கள் தங்கள் மூல வடிவை இழக்க நேரும் என்பதும் விமர்சனங்களில் அடக்கம்.
Angkorwat(rear)
ஆனால் நரசிம்மையா அனைத்து விமர்சனங்களையும் மறுக்கிறார். “எங்கே மிகத் தேவையோ அங்கே மட்டும்தான் சிமெண்ட்டை – அதுவும் ஆர் சி சி வகையை உபயோகிக்கிறோம்.” என்கிறார் இவர். ” உதாரணமாக ஒரு தூண் பழுது பார்க்கவே இடமில்லாமல் சிதலமாக இருக்கும்போது, இப்படி சிமெண்ட் உபயோகிப்பது அவசியமாகிறது. தவிர, அடிப்படையான மணற்கல் குவாரிகள் மூடப்பட்டுவிட்டன. கெமர் ரூஜ் போராட்டக்காரர்கள் அந்த குவாரிகள் இருக்குமிடம் முழுவதும் கண்ணி வெடிகள் வைத்துள்ளதால் அந்தப் பக்கம் போகவே முடியாது. இதற்கு முன்னால் அங்கோர் வாட்டின் பாதுகாப்பு பணியை மேற்கொண்ட பிரெஞ்சுக்காரர்களும் சிமெண்டைத்தான் உபயோகித்தனர். இரட்டை வகை கலர்கள் தெரியும் என்கிறார்கள். புதிதாக மணற்கல் உபயோகித்து இருந்தாலும் அப்படி இரட்டை கலர் தெரியத்தான் செய்யும். ஏனென்றால் சீதோஷ்ண மாறுதல்களுக்கு ஏற்ப நாள் பட நிறம் மாறியிருக்கும் பழைய கல்லுடன் புதுக் கல் இணைத்து செய்யும்போது சிறிது வித்தியாசம் தெரியத்தான் செய்யும். தவிர நாங்கள் செய்யும் சிமெண்ட் வேலை எப்போது வேண்டுமானாலும் எடுத்து விடலாம் என்ற வகையில்தான் இருக்கின்றன. மணற்கல் குவாரிகள் நமக்கு மீண்டும் கிடைக்கும்போது இந்த சிமெண்டை எடுத்துவிட்டு மீண்டும் மணற்கல் இணைத்து சரி செய்யலாம்.” என்று இவர் விளக்குகிறார்.
இந்தத் துறையில் விவரமறிந்த பலர் இவர் சொல்வதை ஏற்றுக்கொள்கின்றனர். ஏ.ஜி.கே மேனன் என்ற டில்லியைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் சொல்கிறார்: “வாஸ்தவம்தான். சிமெண்ட் வேலையை எப்போது வேண்டுமானாலும் அகற்றி விடலாம். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல.”
அதுபோல், ரோமி கோஸ்லா என்கிற வல்லுநர்.”சிமெண்ட் உபயோகிக்கிறார்கள் என்பதை பெருங்குற்றமாக எடுத்துக்கொள்ள முடியாது. பல தொல்பொருள் பாதுகாப்பு பணியில் சிமெண்ட் எடுத்துக்கொள்வது தவிர்க்க முடியாதது” என்கிறார்.
சிமெண்ட் உபயோகம் ஒரு புறம் இருக்க, அங்கே உபயோகிகப்படும் கெமிகல்ஸ் பற்றியும் விமர்சகர்கள் ஆட்சேபிக்கின்றனர். பாட்ரிக் மாதிசன் என்கிற கலை பொருட்கள் விற்கும் வணிகத்தில் இருப்பவரும், எலினார் மன்னிகா என்கிற கலை சரித்திர வல்லுனரும் நியுயார்க் டைம்சின் வார இதழில் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் அங்கோர் வாட் பணியை வெகுவாக விமர்சித்துள்ளனர். உபயோகிக்கப்பட்ட கெமிகல்ஸ் காரணமாக பல சிற்பங்கள் தங்கள் பொலிவை இழந்து விட்டன; மற்றும் கற்கள் கரைந்து போயுள்ளன என்பது அவர்கள் குற்றச்சாடடு. ஏஜென்ட் ஆரஞ்ச் எனப்படும் ஒரு வகை ஆபத்தான கெமிகல்ஸ் உபயொகிக்கப்பட்டுள்ளன் என்றும் சிலர் கூறுகின்றனர்.
“இவையெல்லாம் ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகள்” என்கிறார் நரசிம்மையா. அங்கோர் வாட் ஒரு வெப்ப மண்டல பிரதேசம். கற்கட்டிடங்க்கள் மேல் பச்சைப் பாசி முதலிய நுண் வளர் பயிர்கள் படறுவது இயற்கை. இவை அந்தக் கட்டிடங்களின் அழகை மறைப்பது மட்டுமல்ல, அவை வெளிப்படுத்தும் ஆசிட் வகைகள் கட்டிடத்தையே பாழ் படுத்தும். இதை ஈடுகட்டவே நாங்கள் எங்கள் முறைகளை பயன்படுத்துகிறோம். அவையும் சர்வ தேச முறையில் அங்க்கீகரிக்கபப்ட்ட பாதுகாப்பு முறைகள். நாங்கள் செய்வதெல்லாம் மிகச் சாதாரணம். கட்டிட வேலையின் மேல் முதலில் தண்ணீர் அடித்து ஈரம் செய்து கொள்கிறோம். பின்னர் ஒன்று அல்லது 2 சதவிகிதம் அமோனியாவும் டீபால் என்கிற பாதுகாப்பான சலவை பவுடரும் கலந்த தண்ணீர் வைத்து சுத்தம் செய்கிறோம். இதுவும் பாசிகளால் ஆன சேதத்தை துடைத்து எடுக்க மட்டுமே. அதுவும் மெலிய நைலான் பிரஷ்கள், பல் விளக்கும் பிரஷ்கள், அல்லது தேங்காய் நார் என்று மட்டுமே உபயோகிக்கிறோம். மீண்டும் தண்ணீர் விட்டு கழுவுகிறோம். இதன் பிறகு 2 சதவிகிதம் பொலிசிட், பயோசைட், மற்றும் ஜின்க் சிலிகோ ப்ளொரைட் கலந்த திரவம் உபயோக்கிறோம். எல்லாம் காய்ந்த பிறகு கடைசியாக 2 சதவிகிதம் பொலிமெதில் மெதகிரைலேட் கலந்த டொலுன் வைத்து மேல் பூச்சு செய்கிறோம்.” என்று தங்கள் பாதுகாப்பு முறைகளை விவரமாக விவரிக்கிறார் இவர்.
பல கெமிகல் வல்லுனர்கள் உபயோகிக்கப்படும் கெமிகல்கள் மிகக் குறைந்த விகிதத்தில் நீர்க்க உபயோகிக்கபப்டுவதால் எந்த மோசமான பாதிப்பையும் விளைவிக்காது என்கின்றனர். “எத்தனை சதவிகிதம் உபயோகித்துள்ளார்கள் என்று திட்டவட்டமாக தெரியாமல் என்ன விளைவுகள் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் 2 சதவிகிதம் என்பது மிகக் குறைவான அளவு என்பதால் எந்தவித சேதமும் ஏற்படுத்தாது என்பதென்னவோ நிச்சயம்.” என்று கூறுகிறார் டில்லி ஐ. ஐ. டி யைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர்.
இந்த விவகாரத்தில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் யுனெஸ்கோவே, தென்னமெரிக்கா நாடான பெருவில் தன் ப்ரொஜெக்ட் ஒன்றில் கெமிகல்ஸ் உபயோகித்து இருப்பது சரிதான் என்று கூறியுள்ளது.
முன்பு ஒரு காலத்தில் உபயோகித்த கெமிகல்ஸை விட தற்பொது தொல்பொருள் சின்னங்கள் பாதுகாப்பு துறையில் உபயோகிக்கப்படும் கெமிகல்ஸ் ஆபத்தானவை அல்ல என்று மேனன் கூறுகிறார்.
இந்திய தொல்பொருள் ஆய்வகம் இந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தவேயில்லை. “கலாசாரபடியும், சீதோஷ்ணப படியும் – சொல்லப்போனால் எல்லாவிதத்திலும் நமக்கும் கம்போடியாவுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. நம் நாட்டிலேயே அங்கோர் வாட் போன்ற பல தொன்மையான் சின்னங்களை பாதுகாத்துள்ளோம்; இன்னும் 5000 க்கும் மேற்பட்ட பல சின்னங்களைப் பாதுக்த்துக்கொண்டிருக்கிறோம். ஏஜென்ட் ஆரஞ்ச் போன்ற கெமிகல்ஸ் உபயோகிக்கவில்ல என்று பல முறை நாங்கள் எடுத்துச் சொல்லியும் மேலை நாடுகளின் பத்திரிகைகள் தொடர்ந்து எங்களைக் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று புரியவில்லை” என்று வருந்துகிறார் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் தலைவர் எம்.சி. ஜோஷி.
“இந்த விமர்சனக்கள் சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம். அவரவர் பார்வையைப் பொறுத்தது. ஆனால், தொல்பொருள் சின்னங்கள் பாதுகாப்புக்காக இய்ற்றப்பட்ட வெனிஸ் சார்ட்டர் படி, சீரமைக்கப் பழங்கால பொருட்கள் கிடைக்காவிட்டால், விஞ்ஞானப்படி ஆபத்தில்லாத முறைகளைப் பயன் படுத்தலாம். இதைதான் இந்திய தொல்பொருள் ஆய்வகம் செய்து வருகிறது. மற்றபடி, பல் விளக்கும் பிரஷ் உபயோக்கிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டுவது சரியில்ல. இதில் அரசியலும் இருக்கலாம்” என்கிறார் மேனன்.
இப்படி பலவித விமர்சனங்கள் இருந்தாலும் யாரும் இதுவரை நேரடியாக இந்திய தொல்பொருள் ஆய்வகத்தை அணுகவில்லை. “கம்போடிய தேசிய அருங்காட்சியகத்தின் தலைவர் பிச் கியோவுக்கு எங்கள் வேலை சரியல்ல என்று தோன்றினால் எங்களிடம் நேரடியாக முறையிடலாமே. அவர் அப்படி சொல்லவில்லையே?” என்று கேட்கிறார் நரசிம்மையா.
இரு பக்கமும் நியாயம் இருக்கலாம். விமர்சனங்கள் ஆதாரமில்லாமல் இருக்கலாம். ஆனால் இந்திய தொல்பொருள் ஆய்வகமும் தங்கள் பணிகளை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக்கொள்வது தவறில்லைதான்.

வருடம் 2014

Angkor-Wat-Gods-Murti-Temple
யுனெஸ்கோ அமைப்பின் தளத்தில் தற்போது பார்த்தேன். அங்கோர் வாட் பற்றி இருந்த பக்கத்தில், அந்தக் கட்டிடங்களின் அடிப்படைத் தன்மை மாறாமல் இருப்பதைக் குறுப்பிட்டு, முக்கியமாக இரண்டு வரிகள் உள்ளன.
“இந்த வளாகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளினால் – குறிப்பாக பிரெஞ்ச் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வகம் – மேற்கொண்ட பணிகளால் இந்த கட்டிடங்களின் அடிப்படை அமைப்புகளில் எந்தவித சேதமோ பாதிப்போ ஏற்படவில்லை.”
1992ல் எழுந்த விமர்சனங்களுக்கு விடை இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.