சிறகு விரித்து எழுந்த பறவை – அம்பையுடன் உரையாடல்

அம்பை, தமிழ் புனைவிலக்கியத்தில், தனித்ததொரு குரலாக, கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஒலித்துக் கொண்டிருப்பவர்.   நயமான அங்கதமும், பெண்ணிய முனைப்பும், தெளிந்த அழுத்தமான பாணியும் கொண்ட எழுத்து மூலமாக சமகால வாழ்க்கையின் உறவு நிலைகளைப் பற்றி சிறப்பான அவதானிப்புகள் கொண்ட புனைவுகளை உருவாக்கிக் கொண்டிருப்பவர். தற்போது பெண்கள் பற்றிய ஆய்வுக்கான ஒலி மற்றும் ஒளி ஆய்வக அமைப்பு (SPARROW – Sound & Picture Archives for Research on Women) ஒன்றை நிறுவி அதன் இயக்குநராக ஊக்கமுடன் செயல்பட்டு வருகிறார். அவருடன் சில மணித்துளிகள்.

20140604_174129

தங்களது இலக்கிய ஈடுபாடு மிக இளவயதிலிருந்தே தொடங்கியது எனலாம். கலைமகள், ஆனந்த விகடன் சிறுகதை போட்டிகளில் பல பரிசுகள் பெற்றிருக்கிறீர்கள். அன்றிலிருந்து தங்கள் எழுத்து எந்தவிதத்தில் மாற்றம் அடைந்திருக்கிறது என நினைக்கிறீர்கள்? தங்களின் அக்கால சிறுகதைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அம்பை: இலக்கிய ஈடுபாடு சிறு வயதிலிருந்தே தொடங்கியது என்பது சரிதான். ஆனால் ஆரம்பத்தில் (ஒரு பதினாறு வயதில்) முதலில் எழுதியது கண்ணன் பத்திரிகையில்தான். கண்ணன் பத்திரிகை குழந்தைகளுக்கானது. கலைமகள் குழுமத்தைச் சார்ந்தது. அதன் நாவல் போட்டி ஒன்றில் கலந்துகொண்டேன். நந்திமலைச்சாரலிலே என்ற இளம் வயதினருக்கான துப்பறியும் சாகசங்கள் உள்ள நாவல். அதற்கு முதற் பரிசு கிடைத்தது. முதற் பரிசை நான் ஒரு பள்ளி ஆசிரியருடன் பகிர்ந்து கொண்டேன். அதுவே உற்சாகமாக இருந்தது. பரவாயில்லையே என்று வீட்டிலும் மகிழ்ந்துகொண்டார்கள். அதன் பிறகு என்னைச் சற்று வளர்ந்துவிட்டவளாகவே நினைத்துக்கொண்டேன். ஏனென்றால் அடுத்து எழுதியது குழந்தைகளுக்காக இல்லை. ஞானம் என்ற சிறுகதை ஆனந்தவிகடனில் வந்தது. வாழ்க்கையின் நிரந்தரம் இல்லாத் தன்மை பற்றியது. அதன் பிறகு சில கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தன. கலைமகள் பத்திரிகையில் நான் அப்போது எழுதவில்லை. ஆனந்தவிகடன் கதைகள் உறவுகளில் உள்ள ஏய்ப்புகள் பற்றியும், உடலை மையப் படுத்திய உறவுகளில் உள்ள ஏமாற்றங்கள், சோகங்கள் பற்றியுமான கதைகள். வாழ்க்கையைப் பற்றி மெத்தவும் அறிந்த ஒரு பெண் எழுதுவது போன்ற கதைகள். ஆனால் இளம் வயதில் வாழ்க்கையை முற்றிலும் உணர்ந்து விட்டதுபோல் நினைப்பதும் ஒரு வித முதிர்ச்சியற்ற குழந்தைத்தனம்தான். என் பாட்டி வெகு சரியாக, “ஏதோ பிஞ்சிலேயே பழுத்த மாதிரி கதைகள்” என்று இவற்றை பற்றிக் கூறினாள். இந்தக் கதைகள் பிரபலமான பத்திரிகைகளின் நடையை ஒட்டியே இருந்தன. கருத்துகள் சிறிதே மாறுபட்டிருக்கலாம். ஆனால் நான் வளரும்போது இருந்த இலக்கியத்திலும் சினிமாவிலும் படித்த, நாகரீகமான பெண், படித்த ஆனால் பழமை விரும்பியான, பண்பாட்டைக் காப்பாற்றும் பெண்ணுக்கு எதிர்மறையாகவே பார்க்கப்பட்டாள். அந்த வகையில் என் கதையின் பெண்கள் தங்கள் மனத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுபவர்களாகவும், குரல் இழக்காதவர்களாகவும் இருந்தாலும் அவர்களுக்குள் பெண்களை ஒடுக்கும் பல விஷயங்களுக்கான ஆதரவு இருந்தது. அவர்கள் அறச் சீற்றம் உள்ளவர்களாகவும், துணிந்து சில முடிவுகளை எடுப்பவர்களாகவும் இருந்தாலும், சில எல்லைகளை அவர்கள் தாண்ட முயலவில்லை எனலாம். அவர்கள் சாதாரணப் பெண்ணை உயரே இருந்து துச்சமாகப் பார்க்கும் காவிய நாயகிகள்போல் இருந்தனர்.
உடல் என்ற விஷயம் பெரிதும் என்னைப் பாதித்திருப்பதை இக்கதைகளில் காணலாம். உடல் என்பது வீட்டில் பேசப்படாத ஒன்று. அது இச்சைகளைத் தோற்றுவிக்கும் ஒன்று. பெண்ணின் இச்சைகள் வெளியிடப்படாதவை; வெளியிடக்கூடாதவை. நான் இன்னொரு பேட்டியில் கூறியிருப்பதுபோல், உடலே இல்லாதவர்கள்போல், உடலே இல்லாத ஒரு வெளியில் மிதந்துகொண்டிருந்தோம். ஆகவேதான் நான் கலைமகள் பத்திரிகையில் எழுதிய அந்திமாலை என்ற முதல் நாவல் உடலே இல்லாத காதல் பற்றிப் பேசியது. நான் நடனம் கற்றுக்கொண்டதால் சிருங்காரம் பேசும் பாடல்களை ஆட வேண்டி வந்தது. வீட்டிலேயே அதிகம் இருக்கும் பெண்ணுக்கு, “தெருவில் வாரானோ, என்னைச் சற்றுத் திரும்பிப் பாரானோ?” பாடலுக்கு அபிநயம் பிடிக்க முடியாது இல்லையா? வெகு காலம் சிருங்கார பாவம் எனக்கு வர மறுத்தது. ரௌத்திரம் வெகு சுலபமாக வந்தது! மேலும் அப்போது வெகு பிரபலமான பாடல் ’நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி’தான். இந்தப் பெண்மணி தாய்நாட்டு நாகரீகத்தைப் பேணுபவள். ஒரு நாட்டின் பிரஜையாக இருக்க அவள் செய்ய வேண்டிய கடமை அது. அவள் கோலம் போடுவாள். வீட்டு வேலை செய்வாள். கல்வி கற்பாள். இனிமையாகப் பாடுவாள். நல்ல பழக்க வழக்கத்துடன் இருப்பாள். புகுந்த இடத்தைச் சிறக்க வைப்பாள். வீட்டிலும் வெளியிலும் இந்தப் பாட்டு பின்னணியில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அப்போது அடிக்கடி இந்த நல்ல பெண்மணி எப்படி இருப்பாள், ஆடும்போது நல்ல பெண்மணிக்கு எந்த பாவத்தைக் காட்டுவது போன்ற ஐயங்கள் இருந்தன.
அதே சமயம் கற்பு போன்ற விஷயங்கள் குறித்து மாறுபட்டக் கருத்துகளும் இருந்தன. எதிர்ப்பும், பணிவும், கோபமும், தாழ்ந்து போகும் குணமும், துணிச்சலும் இயலாமையும் எல்லாமும் சேர்ந்து இருந்த ஒரு நிலை அது. கதைகளும் அதை ஒட்டியே இருந்தன. நா.பாவின் குறிஞ்சி மலர் வேறு அப்போது வெளிவந்து தெய்வீகக் காதல் பற்றிப் பேசியது. உடல் இச்சைகளை மீறிய காதல். இந்தப் பருவத்தின் இறுதிக் கதையாக அந்திமாலை இருந்தது எனலாம். அந்திமாலைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது கலைமகள் நாவல் போட்டியில். அது கலைமகளில் வெளிவந்தபோது நான் வெகுவாக மாறியிருந்தேன். ஒரு சிற்றூரில், சிறு பள்ளியில் ஆசிரியையாக இருந்தேன். வீட்டை விட்டு வெளியே வந்து மூன்றாண்டுகள் ஆகியிருந்தன. அந்திமாலை வேறு யாரோ எழுதியது போல் தோன்றியது. கலைமகள் ஆசிரியர் அது ஒரு காவியம் என்று எழுதியிருந்தார். ஆனால் அந்த நாவல் குறித்த என் கருத்து தெளிவாக இருந்ததால் அந்தப் புகழ்ச்சி என்னைப் பாதிக்கவில்லை. பிறகு அது புத்தகமாக வெளிவந்தபோதும், பலருக்கு அது பிடித்திருந்தபோதும் என் நிலைபாட்டில் நான் உறுதியாக இருந்தேன். இப்போதும் அது இரண்டு ரூபாய் ஐம்பது பைசாவுக்கு விற்கிறது என்கிறார்கள். அதை விட அதிக விலை அதற்குத் தர முடியும் என்று தோன்றவில்லை!
அன்றிலிருந்து இன்று என் எழுத்து எப்படி மாறியிருக்கிறது என்பதைச் சொல்ல மிகவும் நீண்ட பதிலைச் சொல்ல வேண்டி வரும் ஸ்ரீதர் நாராயணன்! மாறியிருக்கிறது கட்டாயம்; உள்ளடக்கத்திலும், தொனியிலும், நடையிலும், பால்தன்மை குறித்த புரிதலிலும், உலக நோக்கிலும், வாழ்க்கையை உள்வாங்கியிருக்கும் விதத்திலும் என்று மட்டும் சொல்லலாம்.

நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப் போல உங்கள் கதைகளில் protagonistஆக வரும் பெண் பாத்திரங்கள், துணிச்சலான செயல்பாடு கொண்டவர்களாக இருந்தாலும், பெரும்பாலும் தாங்கள் இடம்பெற்றிருக்கும் சூழ்நிலை தொகுப்பிற்கு (ecosystem) அதிகம் ஊறுவிளைவிக்காமல் இருப்பதை கவனித்திருக்கிறேன். அந்த காலகட்டத்திற்கு அதுவே பெரும் பாய்ச்சலாக இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். என்றாவது, அம்பையின் எழுத்து இன்னமும் காத்திரமாக, கலகக்குரலாக இருந்திருக்க வேண்டும் என்று எண்ணியிருந்திருக்கிறீர்களா?

அம்பை: என் கதையில் வரும் பெண் பாத்திரங்கள் காத்திரமானவர்களாக இல்லை, கலகக்குரலாக இல்லை என்று siragugal_muriyumஉங்களைப் போல பலர் நினைப்பதற்குக் காரணம் நான் எழுதும் பாத்திரங்கள் எதையும் உரத்து, முழக்கமிட்டுச் செய்வதில்லை. கலகக் குரல் என்பது எல்லாவற்றையும் முறிப்போம் என்ற கூக்குரல் இல்லை. நான் விளக்கமாகக் கூறியிருப்பது என் ஆரம்ப கால கதைகளில் வரும் பெண்கள் பற்றி. சிறகுகள் முறியும் தொகுப்புக் கதைகளையும் அதற்குப் பின் வந்த தொகுப்புக் கதைகளையும் நீங்கள் படிக்க வேண்டும். இன்னொரு விஷயமும் இருக்கிறது. பலர் என்னிடம் மஞ்சள் மீன் கதையில் என்ன பெண்ணியச் செய்தி இருக்கிறது என்று கேட்டார்கள். பெண்ணியச் செய்திகளை உரத்துச் சொல்லிக்கொண்டே இருப்பது ஒரு பெண்ணிய எழுத்தாளர் வேலை அல்ல. வாழ்க்கையில் சில நொடிகளில் வெளிச்சம் பெறும் உணர்வுகள், உறவுச் சிதறல்கள், இயற்கையுடன் தொடர்ந்து ஒன்றியும் விலகியும் வரும் வாழ்க்கை இவை எல்லாமும் மொழியும், எழுத்தின் தன்மையும். வாழ்க்கையும் மாறும் பதிவுகள்தாம். பெண், ஆண் என்று விளக்கம் பெறும் நபர்களை நான் தொடர்ந்து கேள்விக்குட்படுத்தியவாறு இருக்கிறேன். எல்லாவித எல்லை மீறல்களும் சாத்தியம் என்று சொல்ல நினைக்கிறேன். வரையறைகளை அழித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். மேலும் நண்பரே, என் கதைகளில் பெண்கள் மட்டும்தான் இருக்கிறார்களா என்ன? ஆண்களும் இருக்கிறார்கள்; மீன், பெண் பன்றி, வனம், அசரமானவை, ஆறு என்று பலவும் இருக்கின்றன. இப்படித்தான் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை தொகுப்பின் பின் அட்டைக் குறிப்பு எழுதும்போது, மொத்தத் தொகுப்பில் மூன்று நான்கு கதைகளிலே மட்டும் பெண் protagonist என்று சொல்லும் சில பாத்திரங்கள் வருவதால் மற்றக் கதைகள் சோதனைக் கதைகள் என்று குறிப்பிட்டுவிட்டார் க்ரியா ராமகிருஷ்ணன்!

நீங்கள் எழுத்தாளராகாமல் இருந்திருந்தால், வேறு எந்த துறையில் ஈடுபட்டிருப்பீர்கள்? வரலாற்று துறையில் ஆய்வாளர் தகுதி பெற்றிருக்கும் நீங்கள், ஒருவேளை ஏதாவது பல்கலையில் நல்ல பேராசிரியராக, மாணவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருந்திருப்பீர்களா?

அம்பை: நான் எழுத்தாளர் என்று மட்டுமே என்றும் இயங்கவில்லை. எழுத்துடன் வேலையும் செய்துகொண்டுதான் இருந்தேன். எல்லாவற்றையும் விட சுதந்திரமான ஆய்வாளராக இருப்பது பிடித்திருந்தது. பிடிக்கிறது. அதனால் ஆராய்ச்சி என்பது தொடர்ந்து செய்யும் ஒன்றாகவே இருக்கிறது. கல்லூரியிலும் வேலை செய்திருக்கிறேன். அது அவ்வளவு உவப்பாக இருக்கவில்லை.

அப்படி இல்லாமல், எழுத்தாளர் ஆனது என்ன மாறுதல்களை ஏற்படுத்தியது? இதுவே மேலான தேர்வு என சொல்வீர்களா? தமிழில் எழுதும் எழுத்தாளராக தங்கள் வாய்ப்புகளும் சவால்களும் என்ன? இங்கு என்ன மாதிரியான மாற்றங்கள் தேவை என நினைக்கிறீர்கள்?

அம்பை: எழுத்தாளராக மட்டுமே நான் இல்லை என்பதை மேலே தெளிவுபடுத்தியிருக்கிறேன். எழுத்தாளராகவும் இருப்பது ஒரு நல்ல தேர்வுதான். ஆனால் நான் அப்படி எதுவும் யோசித்துத் செய்த தேர்வு இல்லை அது. தமிழில் எழுதும் எழுத்தாளராக மட்டுமே இருந்தால் வரும் வாய்ப்புகளும் சவால்களும் வேறு, ஒரு பெண்ணாக அதைச் செய்யும் போது வரும் சவால்களும் வாய்ப்புகளும் வேறு. அதுவும் பத்திரிகைகளின் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் ஏற்காமல், சமரசம் செய்துகொள்ளாமல் எழுதுவதைத் தேர்வு செய்யும் பெண்ணாக இருக்கும்போது வரும் சவால்கள் வேறு. தனிப்பட்ட வாழ்க்கை, நடத்தை பற்றிய கொச்சையான பல வகைப்பட்ட விமர்சனங்களையும், கதைகளுக்கு எந்தவித எதிர்வினையுமே இல்லாத மௌனத்தையும், புறக்கணிப்புகளையும், ஆபாசமான சமிக்ஞைகளையும் எதிர்கொள்ள வேண்டிவந்தது. நான் சென்னையில் இல்லாததால் இவை என்னை அதிகம் பாதிக்கவில்லை. ஆனால் ஒரு பத்து ஆண்டுகள் சீழ் வடியும் ஆறாத புண்ணாக மனத்தில் அச்சொற்களும் செயல்களும் இருந்தன. பிரக்ஞை குழுவில் என்னை நான் இணைத்துக்கொண்டபோதுதான் நான் நானாக ஓரளவு இருக்க முடிந்தது எனலாம். வாய்ப்புகள் பற்றிச் சொல்ல வேண்டுமானால் சில சக எழுத்தாளர்களுடன் அமைந்த நல்ல நட்பு பற்றிச் சொல்லலாம். ஆரம்பத்தில் வெங்கட் சாமிநாதன், இந்திரா பார்த்தசாரதி, கஸ்தூரி ரங்கன், வண்ணநிலவன், வண்ணதாசன், பிறகு சுந்தர ராமசாமி, க்ரியா ராமகிருஷ்ணன் இவர்களுடன் இருந்த நட்பு மனத்துக்கு இதமான நட்பாக இருந்தது. சூடாமணியுடன் எனக்கு ஏற்பட்ட நட்பு இந்த நட்புகள் அமைவதற்கு முன்னாலேயே ஏற்பட்டது. அதை வெறும் நட்பாக மட்டுமே நினைக்க முடியவில்லை. என் வாழ்க்கையின் மிக முக்கியமான ஓர் அங்கமாக அவள் இருந்தாள். எழுத்தினால்தான் அந்த நட்பு ஏற்படும் வாய்ப்பு அமைந்தது. அதேபோல் ராஜம் கிருஷ்ணன், ஜோதிர்லதா கிரிஜா இவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும், நட்பு பேணும் சந்தர்ப்பங்களும் எழுத்தினால் ஏற்பட்டவைதான்.
இலக்கியச் சூழலில் என்ன மாதிரியான மாற்றங்கள் தேவை என்று கேட்கிறீர்கள். எந்த மொழியிலும் இலக்கியச் சூழல் ஆரோக்கியமாக அமைந்திருப்பதாகத் தெரியவில்லை. பொறாமையும், காழ்ப்பும், தற்பெருமையும், கவனம் பெறும் முயற்சிகளும், அவதூறுகளைப் பரப்புவதும், போட்டியும், மற்றவர் முதுகில் குத்துவதும் எல்லா மொழிகளிலும் இருப்பதைப் பார்க்கலாம். பெண் வெறுப்பை மனத்திலிருந்தும் இலக்கியச் சூழலிலிருந்தும் நீக்கினால் ஆரோக்கியமான விமர்சனங்களும், பகிர்தல்களும் சாத்தியமாகலாம். எதைச் சொன்னாலும் தொட்டார் சிணுங்கியாக இருக்காமல் கொஞ்சம் நகைச்சுவை உணர்ச்சியை வளர்த்துக் கொண்டால், மனம் விட்டுப் பேசவும் வாய்விட்டுச் சிரிக்கவும் இடம் ஏற்படும். அவரவர் எழுத்தை ஏதோ உலகையே உய்விக்க வந்த எழுத்துபோல் நினைக்காமல் இயல்பாக, சாதாரணமாக எடுத்துக்கொண்டால் பிம்பங்களை ஏற்படுத்தும் தேவையும், பிம்பங்களுக்காக வாழும் அவசியமும் இல்லாமல் போய்விடும்.
 

இலக்கிய சூழலின் மாற்றங்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருந்தது மிகவும் நிதர்சனமான உண்மை. பிம்பமயக்கமில்லாமல் எழுத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். பல்வேறு சமூக வலைத்தளங்கள் பெருகி, எழுதுவதற்கும், அது பலரை போய்ச்சேருவதற்கும் பெருமளவு வசதிகள் கூடியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இலக்கிய சூழல் தானாகவே மாறிவருகிறதா?

அம்பை: மாறித்தான் வருகிறது. ஆனால் அது கவனத்தைப் பெறவும், உடனடியான எதிர்வினைகளை அறியும் ஒன்றாக இருக்கும்போதே தன்னைப் பற்றிய மிகவும் பிரம்மாண்டமான பிம்பங்களை உருவாக்கிக்கொள்ளும் ஒன்றாகவும் ஆகிவிடுகிறது என்பதுதான் உண்மை. அது பல கட்டங்களில் பொது வெளியில் நாடகத் தன்மையுடன் பேசவும், செயல்படவும், அதீத கர்வத்துடன் மற்றவர்களை எதிர்கொள்ளவும் வைக்கிறது. அதன் உடனடித்தன்மையால் பிறக்கும் பல நன்மைகளை இத்தகைய செயல்கள் குலைத்துவிடுகின்றன. “நான்” என்பது மிகவும் உரக்க ஒலிக்கும்போது சொல்லின் சில நயங்கள் சிதைந்துபோகின்றன.

கருத்தியல் (ஐடியாலஜி), அரசியல் ஆகியனவற்றின் பாதிப்பு இல்லாத இலக்கிய என ஒன்று உண்டா என்பது குறித்து ஐயம் எழுந்தவண்ணம் இருக்கிறது. இது இவற்றின் தாக்கத்தின் அளவு குறித்த ஐயம் மட்டுமே என்று சொல்லலாமா? அல்லது குறிப்பிட்ட கால கட்டங்களில் இவை மேல் தூக்கியும், சில கட்டங்களில் குரலடங்கியும் இலக்கியத்தில் காணப்படுமா? உங்கள் படைப்பு வாழ்வில் இவை என்ன பங்கு வகிக்கின்றன? இந்தப் பங்களிப்பு வெவ்வேறு வருடங்களில் வெவ்வேறு விதமாக வெவ்வேறு அளவு தீவிரத்துடன் உங்கள் படைப்பில் வெளிப்படுகின்றன என்று சொல்வீர்களா?

அம்பை: கருத்தியல், அரசியல் இவை நம் வாழ்வின் வெளியே இருப்பவை இல்லை இல்லையா? நாம் என்ன செய்தாலும் அவை அவற்றில் கலக்கத்தான் செய்யும். எந்தப் படைப்புக்கும் குறிக்கோள் இருக்க வேண்டும், அது மக்கள் வாழ்க்கையை உயர்த்த வேண்டும் அவர்கள் வாழ்க்கையை உய்விக்கும் ஒரு செய்தியைத் தர வேண்டும், சமூகத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற கருத்தாக்கத்துக்கு எதிராகவும், பிற்காலத்தில் ஒரு படைப்பு யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்க வேண்டும் என்ற கம்யூனிஸ நோக்குக்கு எதிராகவும்தான் கலை கலைக்காகவே என்ற முழக்கம் எழுந்தது. ஒரு படைப்புக்கான காரணம் அதன் அழகியலினுள்ளேயே அடங்கியுள்ளது, அது யாரையும் வலிந்து சென்றடைய வேண்டியதில்லை என்ற வாதம் எழுந்தது. இது குறித்து எழுதும்போது ஆஸ்கார் வைல்ட், ”ஒரு கலைப்படைப்பு என்பது ஓர் அபூர்வமான மனநிலையிலிருந்து அபூர்வமாக வரும் ஒன்று. அதன் அழகு அதைப் படைப்பவர் எப்படி இருக்கிறாரோ அதை ஒட்டி இருக்கிறது. மறறவர்களுக்கு என்ன தேவை என்பதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பார்க்கப்போனால், ஒரு கலைஞர் மற்றவர்களுக்கு என்ன தேவை என்பதைக் கவனிக்க ஆரம்பித்து அந்தத் தேவைக்கு ஏற்ப வழங்க முயலும் கணத்திலேயே கலைஞர் அல்லாமல் போய், ஒரு சாதாரண அல்லது மகிழ்வூட்டும் கைவினைஞராக, நேர்மையான அல்லது நேர்மையற்ற வியாபாரியாகிவிடுகிறார். ஒரு கலைஞர் என்று மற்றவர் அவரைக் கருத அவருக்கு எந்த உரிமையும் இல்லாமல் போகிறது…” என்கிறார். எந்த விதத் தேவையையும் பூர்த்தி செய்ய எழுத முடியாது என்றுதான் நானும் நினைக்கிறேன். வாசகர்களைக் கிளுகிளுப்பூட்ட எழுதுவது, அல்லது அவர்களைப் புரட்சிப்பாதையில் நடை போட வைப்பது ஒரு படைப்பாளியின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் அது இலக்கியமா என்பதைத் தீர்மானிப்பது அந்த நோக்கம் மட்டுமே அல்ல. ஆனால் நாம் யார் என்பதும் அதன் அரசியலும் என்றுமே நம் படைப்பில் இல்லாமல் போகாது. ஒவ்வொரு கதை எழுதும்போதும் “இது பெண்ணியக் கதை. இதில் ஆணாதிக்கம் குறித்து எழுதுவேன்” என்று நினைத்துக்கொண்டு எழுத முடியாது. ஆனால் வாழ்க்கையிலேயே ஊறிப்போயிருக்கும் ஒன்று ஏதோ ஒரு வகையில் கதைகளில் கசிந்தபடிதான் இருக்கும். எந்தவிதப் பொருளும் தர விரும்பவில்லை என்று உருவமற்ற கோடுகளையும், நிறங்களையும் வரைந்தபோது கூட அதனின்றும் பல அர்த்தங்கள் பார்ப்பவரின் வாழ்க்கையின் கண்களுக்கு ஏற்ப அமைந்துகொண்டேதான் இருக்கும். மிகவும் ஆழமாகத் தன் வாழ்க்கையினுள் புகும்போது அந்தரங்கமும் அரசியல் வெளிக்கு வந்து உலகளாவிய ஒன்றாகிவிடுகிறது.

iyal

எனக்குக் கனடாவின் இலக்கியத் தோட்டம் வாழ்நாள் விருது அளித்த போது நான் பேசிய ஏற்புரையில் சில விஷயங்களைக் கூறியிருந்தேன். அது உங்கள் கேள்வியிலிருந்து கிளைபிரியும் வேறு சில வினாக்களுக்குப் பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏற்புரையில் இவ்வாறு கூறியிருந்தேன்:

”எழுத்தில் எது உண்மை எது போலி என்று பாகுபடுத்துவது எளிதான காரியம் இல்லை. மேலும், உண்மை என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. எதற்கு உண்மையாக இருப்பது எழுத்து? எண்ணங்களுக்கா, வாழ்க்கைக்கா, சுற்றியுள்ள யதார்த்தத்துக்கா, எதற்கு? எழுத்து என்பது இதற்கு எல்லாம் உண்மையாக இருப்பதுதானா? என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள ”உண்மைகளை”ப் பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த “உண்மை”யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம். நம் உணர்வுகளின் வெளிப்படை சில சமயங்களிலும், அவற்றின் மறைப்பு சில சமயங்களிலும், உணர்வுகளை இலக்கியமாக்குகிறது. இந்த வெளிப்படை-மறைப்பு இவற்றின் கண்ணாமூச்சிதான் இலக்கியம்.
தான் நினைப்பதை, உணர்வதை அப்படியே வெளிப்பாடாக்கலாம். ஆக்கியிருக்கிறார்கள் சிலர். அதைப் படிக்க முடியவில்லையே! அனுபவத்துக்கும் வெளிப்பாடுக்கும் இடையே, அனுபவத்திலிருந்து பிறந்த, அதன் பொழிவாக, ஆனால் முற்றிலும் வேறு தோற்றத்தில் மாறும் ஓர் உரு மாற்றம் நேர்கிறது—நவீன ஓவியம் மூலத்தைச் சுட்டிக்காட்டி ஆனால் மூலத்தினின்றும் முற்றிலும் மாறுபட்டு இருப்பதைப்போல. அதை அவரவர் புரிதலுக்கு ஏற்ப அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அத்தகைய அனுபவத்தை ‘உண்மையான” இலக்கியம் என்று நாம் அடையாளம் காட்டும் இலக்கியம் செய்யும். நவீன ஓவியத்தில் நுழைய பல கதவுகள் இருப்பது போல இதற்கும் உண்டு. வண்ணம், கீற்று, கோடு எதையாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு ஓவியத்தினுள் நுழைந்துவிடலாம். இசையிலும் அப்படித்தான். ஆதார ராகம் பற்றி எதுவும் தெரியாமலே கூட அதனுள் முங்கலாம். சுருதியின் சுத்தம், ஸ்வரங்களின் விஸ்தரிப்பு என்று பல உண்மைகளை அது உருவாக்கிக் கொண்டே போகிறது. இலக்கியமும் அதைச் செய்கிறது. இப்படித்தான் நான் அதைப் புரிந்துகொள்கிறேன்.
இதனால்தான் இலக்கியத்தில் பெண் எழுத்து ஆண் எழுத்து என்று சிலர் குறிப்பிடும்போது அவர்கள் மனத்தில் இருப்பது பால் நிலை பற்றிய விளக்கம் இல்லை என்பது புரிந்துவிடுகிறது. அவர்கள் பெண் என்று கூறும்போது அது இலக்கியத்தரம் பற்றியது. அது ஓர் அளவுகோல். பெண் என்ற அடிப்படை ஒன்றை உருவாக்கி அதில் ஏற்றப்பட்ட தர அளவுகோல். அடிப்படை என்பது நேராக உடலைப் போய் முட்டும் ஒன்று. ஒரு வகை உடல் இருப்பதால் ஒரு வகை மொழி பிறக்கிறது என்று வலியுறுத்துவது. இவைதான் வித்தியாசங்கள் என்று நாம் பட்டியலிட்டால் அந்தச் செயல் இரு வகை வெளிப்பாட்டை மட்டுமல்ல, இரு வகை உடல்களையும் குறுக்குகிறது என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில், ஒவ்வொரு காலத்தில் வேறுவேறு வகையில் உணரும் உடல் என்ற ஒன்றை, ஓர் இலக்கணத்திற்கு, ஒரு விளக்கத்திற்கு உட்பட்டுத்துவது எனக்கு உடன்பாடில்லை. ஆனால் பெண்ணாக வாழ்வதால், பெண் என்ற நிலையிலிருந்து உலகை எதிர்கொள்ள நேர்வதால் ஒரு வித மொழி, ஒரு வித வெளிப்பாடு உருவாகலாம். அது உடல் சார்ந்தது அல்ல. உடல் பற்றிய பட்டுணர்வைச் சார்ந்தது. உடல் சமுதாயத்தில் ஆக்கிரமிக்கும் இடத்தைச் சார்ந்தது. காலம், சரித்திரம் இவற்றால் தொடப்படாத உடல் இல்லை. ஒற்றை விளக்கம் உள்ள உடல் இல்லை பெண் உடல். பெண் உடலை மறுவாசிப்பு செய்வதும் அவரவர் பட்டுணர்வை ஒட்டியே இருக்கும். பல்லாயிர யோனிகளிலிருந்து வந்தவள் நான் என்று அக்கமகாதேவி கூறும் போது, பல்லாயிரப் பிறவிகளை மட்டுமல்ல பல்லாயிர உடல்களுக்கு அவர் அர்த்தமூட்டுகிறார். யோனி என்பது ஒரு ஜனனத் துளை மட்டுமல்ல பல்வேறு சரித்திர கால கட்டங்களில் பல அர்த்தங்களைப் பெறும் ஓர் அங்கம். உடலை அதன் விளக்கங்கள், குறுகல்கள், இலக்கணங்கள் இவற்றிலிருந்து வெளியே எடுத்து ஒரு வெளியாக்கி, அதன் மேல் நின்று எழுதும்போது வரும் இலக்கியம் எல்லாவித அடிப்படையையும் மீறியதாக இருக்கும். உடலை ஓர் இயற்கைக் காட்சியாகத் தீட்டி அதை விஸ்தரிப்பதுதான் அதன் லட்சக்கணக்கான அர்த்தங்களையும் அழகுகளையும் மட்டுமல்ல அவலங்களையும் வெளிக் கொண்டுவரும்.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலம் எழுதியிருக்கும் போது எழுத்து பல வெளிகளைக் கடக்கிறது. பல மலைகளைத் தாண்டி, பல கடல்களில் முங்கி, பல அரக்கர்களைக் கடந்து, பல போர்க்களங்களில் வென்றும் தோற்றும் அது உருப்பெறுகிறது. ஒரு ஜென் முனிவர் பல ஆண்டுகள் குகை ஒன்றில் இருந்துவிட்டு வந்தார். அந்த ஊர் அரசன் அவர் பெற்ற ஞானம் பற்றி அறிய விரும்பினான். அவரைச் சபைக்கு அழைத்து அவர் உணர்ந்த உண்மை பற்றிக் கூறுமாறு வேண்டினான். அதற்கு அவர் தன் இடுப்பில் இருந்த புல்லாங்குழலை எடுத்து ஒரு சின்னஞ்சிறு ஸ்வரக்கோர்வையை வாசித்துவிட்டுப் போனார். இலக்கிய வாழ்க்கை பற்றிய உண்மையும் அவ்வளவு எளிதானது; அவ்வளவு சிக்கலானது. என்னிடம் ஒரு புல்லாங்குழல் இருந்து, வாசிக்கவும் தெரிந்திருந்தால் நானும் ஒரு சில ஒலிகளை எழுப்பி விட்டுப் போயிருப்பேன். ஆனால் அப்படிச் செய்பவர்களுக்கு விருதுகள் கிட்டுமா என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் சொற்களில் கட்ட வேண்டியிருக்கிறது. காலத்தால் அழிக்க முடியாத இலக்கிய உண்மைகள் இருக்கலாம். அது பற்றி எனக்குத் தெரியாது. அது எனக்குப் பரிச்சயம் இல்லாத பிரதேசம். அதற்கான கடவுச் சீட்டும் என்னிடம் இல்லை. இந்தக் காலகட்டத்தில் கட்டப்பட்டச் சொற்கள் இவை. இன்றைக்கு, இப்போதைக்கு, இவைதான் நான் உணர்ந்த உண்மை.”

தாங்கள் தமிழில் எழுதும் பெண்களுக்கு ஒரு முன்னோடியாக இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தங்களுக்கு முன்னோடி என்று யாரையாவது நினைக்கிறீர்களா?

அம்பை: பெண்களுக்கு முன்னோடி என்று கூறி நீங்களும் என்னைக் குறுக்குகிறீர்கள் ஸ்ரீதர் நாராயணன்! எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் சொல்வார்: உங்கள் எழுத்து என் வீட்டுப் பெண்களுக்குப் பிடிக்கும்” என்று. அதாவது அவர் ஓர் உயரிய வாசகர். அவர் இலக்கிய தளத்துக்கு நான் உயரவில்லை என்கிறார். இன்னொரு நண்பர் “நீங்கள் வீட்டுக்கு வந்தது பிடித்திருந்தது. உங்கள் பேச்சு முக்கியமாகப் பெண்களுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது” என்று கூறினார். உங்கள் கேள்வியும் அப்படித்தான் இருக்கிறது! ஆண்களுக்கு ஆண்கள் முன்னோடியாகவும் பெண்களுக்கு பெண்கள் முன்னோடியாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் போலும். எனக்கு முன்னோடி என்று சொல்லும்போது பெண்களைச் சொல்ல வேண்டும் என்றால், கி. சாவித்திரி அம்மாள், கி. சரஸ்வதி அம்மாள், குமுதினி, குகப்ரியை, கௌரி அம்மாள், ஆர். சூடாமணி என்று பலர் இருந்தனர். ஆண் எழுத்தாளர்களிலும் பிரபல எழுத்தாளர்களும், இலக்கிய எழுத்தாளர்களும் பலர் இருந்தனர்.

முந்தைய கேள்வியின் நோக்கம் உங்களை குறுக்குவதல்ல என்பதை தெளிவுபடுத்திவிடுகிறோம். நீங்கள் முன்பு குறிப்பிட்டிருந்ததைப் போல சமரசம் செய்துகொள்ளாமல் எழுதுவதை தேர்வு செய்யும் பெண்ணாக, தலைக்கு மேலே அழுத்தும் பாலினக் கண்ணாடிக்கூரையை (glass ceiling) கடந்து வந்தவராக உங்களை தன் முன்னோடியாக பார்க்கும் மற்றொரு சகா ஒருவரின் கேள்விதான் அது. இது போன்றதொரு சங்கிலியில் இடம்பெறும் எழுத்தாளர்கள் வரிசை பற்றிய அறிதலின் பொருட்டே அடுத்த கேள்வியும் அமைந்துவிட்டது.

தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதாக நினைக்கிறீர்களா? இளம் பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களம் தற்போது என்ன மாதிரியான மாற்றங்களை அடைந்திருக்கின்றன? அவை இன்னும் பரந்த விஷயங்களைப் பற்றி பேச துவங்கியிருக்கின்றனவா? தங்களுக்கு பிடித்தமான இளம் பெண் எழுத்தாளர் யார்?

அம்பை: பெண் எழுத்தாளர்களைப் பற்றித்தான் கேட்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்கள் போலும்! பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. உற்சாகம் அளிக்கும் விஷயம் அது. அவர்கள் எழுத்துக் களமும் பலவகையில் மாறியிருக்கிறது. இன்னும் மாறும் என்றே நினைக்கிறேன். இன்னும் பரந்த விஷயங்கள் என்று கூறும்போது என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை. முன்பு அவர்கள் பரந்த விஷயங்கள் பற்றி எழுதவில்லை என்ற தொனி அதில் இருக்கிறது. இது எனக்கு உடன்பாடில்லை. பல இளம் பெண் எழுத்தாளர்களையும் ஆண் எழுத்தாளர்களையும் நான் ரசித்துப் படிக்கிறேன். ஒருவர் பெயரைக் குறிப்பிட முடியவில்லை.

உங்களின் எழுத்துகளின் அடுத்த பரிணாமமாக SPARROW அமைப்பை சொல்லலாமா?  இப்படியான ஒரு சமூக பங்களிப்பை நோக்கித்தான் உங்கள் எழுத்து பயணத்தை நீங்கள் வடிவமைத்துக் கொண்டீர்களா? ‘ஸ்பாரோ’ அமைப்பின் மிக முக்கியமான சமூக பங்களிப்பு என எதை கருதுகிறீர்கள்?

அம்பை: SPARROW பெண்கள் குறித்த என் ஆராய்ச்சியிலிருந்தும் பெண்கள் இயக்கத்தில் என்னைப் போன்ற சிலர் எடுத்த நிலைபாடுகளையும் ஒட்டி எழுந்தது. SPARROW பெண்கள் வாழ்க்கையையும், சரித்திரத்தையும் பொது தளத்திற்குக் கொண்டுவருவதன் மூலம் சமூகப் பங்களிப்புச் செய்கிறது என்று நம்புகிறேன். என் எழுத்தை நான் ஒரு பயணமாகவே வடிவமைத்துக் கொள்ளவில்லை. அது என்னுடன் இருக்கிறது.

தங்களை கவர்ந்த எழுத்தாளர் அல்லாத பெண்ணியர்கள் யார்?

அம்பை: ஆரம்பத்தில் மிக விரும்பிப் படித்தவர் ஷீலா ரௌபாதம். (Woman’s Consciousness, Man’s World) ரசித்துப் படித்தது Germaine Greer (Female Eunuch). பிறகு அமெரிக்காவின் பெட்டி ஃப்ரெய்டன், ஆட்ரியன் ரிச் போன்றவர்கள். மற்றும் என் தோழியும் வரலாற்றுப் பேராசிரியையுமான ஜெரால்டின் ஃபோர்ப்ஸ். இந்தியாவில் வீணா மஜூம்தார், நீரா தேசாய், மைத்ரேயி கிருஷ்ணராஜ், ஸூஸி தாரு, ஊர்வசி பூடாலியா, உமா சக்ரவர்த்தி போன்ற பலர். பெண்ணியவாதிகள் என்றறியப்படாத பல பெண்கள் கூட என்னைக் கவர்ந்திருக்கிறார்கள். அது ஒரு மிகப் பெரிய பட்டியல். சாவித்திரிபாய் ஃபுலேயில் ஆரம்பித்து என் அம்மாவில் முடியும் ஒன்று.

கவிதை வடிவத்தைப் பற்றிய தங்கள் மதிப்பீடு என்ன? தங்களுக்கு பிடித்த கவிஞர் யார்?

அம்பை: கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆனால் அது குறித்து எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. கவிஞர்களுடன் கவிதை பற்றிப் பேசப் பிடிக்கும். குட்டி ரேவதி, சல்மா, மாலதி மைத்ரி, தேன்மொழி, சுகிர்தராணி, சே.பிருந்தா, பெருந்தேவி, தமிழச்சி, கனிமொழி, அ.வெண்ணிலா, அவ்வை, அனார், சேரன், சுகுமாரன், நகுலன், தேவதச்சன், ஞானக்கூத்தன், சி.மணி, எஸ்.வைத்தீஸ்வரன், சுந்தர ராமசாமி, ஆத்மாநாம், தேவதேவன், வண்ணதாசன், மீரா, கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன், பா.வெங்கடேசன், கவை.பழனிசாமி, ரவிக்குமார் என்று பலரையும் பிடிக்கும்.

சமீபத்தில் வெளிவந்த நூல்களில் தங்களை மிகவும் கவர்ந்தது?

அம்பை: நிறைய நூல்கள் உள்ளன. ஜோ டி க்ரூஸின் கொற்கை எனக்குப் பிடித்திருந்தது. ஷர்மிலா செய்யதின் உம்மத் மிகவும் பிடித்திருந்தது. அ வெண்ணிலாவின் பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும் மற்றும் தமயந்தி நிழலின் ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் மிகவும் நம்பிக்கை அளிக்கும் சிறுகதைத் தொகுதிகளாக இருந்தன. கே. என் செந்திலின் அரூப நெருப்பு பிடித்திருந்தது. தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் மிகவும் வித்தியாசமான கருத்து ஒன்றைக் கையாண்டிருந்தது.

தங்களின் கதைகளில் தங்களுக்கு மிகவும் பிடித்தது எது? ஏன்?

அம்பை: ஒரு குறிப்பிட்ட கதையைக் கூற முடியவில்லை.

உங்களின் படைப்புகளில் பொதுவாக மையப்படுத்தப்படும் உழைப்பு சுரண்டல், ஒடுக்கப்படுதல், நுண்ணிய அடக்குமுறை, பாலியல் பேதங்களால் ஏற்படும் முரண்கள், போன்றவைகளின் தோற்றுவாயாக எதைக் கருதுகிறீர்கள்? இந்த நாற்பதாண்டுகாலத்தில் ஏதும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அடைந்திருக்கிறோம் என்று எண்ணுகிறீர்களா?

அம்பை: நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களுக்கான தோற்றுவாய் வாழ்க்கையை நான் நோக்கும் விதத்திலிருந்தும் அதில் செயல்படும் விதத்திலிருந்தும்தான். தனிப்பட்ட முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பற்றிக் கூறுவதானால் மனித உறவுகளில் உள்ள சிக்கல்களை ஒரே விதத்தில் பார்க்காமல் அதில் உள்ள அடுக்குகளையும், பன்முகத் தன்மையையும் தொடர்ந்து பார்த்தபடி இருப்பதுதான். அதனால்தான் பிரச்சினைகளுக்கும், சிக்கல்களுக்கும் ஒரே ஒரு தீர்வு இருக்கும் என்ற ஒரே காரணம்-ஒரே காரியம் ரீதியில் என்னால் பார்க்க முடியவில்லை. இதுதான் என் எழுத்தையும் தொடர்ந்து செலுத்திவருகிறது என்று நினைக்கிறேன்.
 


 

“இன்னும் அதிகம் பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது.” என்ற பிரியாவிடையுடன் தன்னுடைய சரளமான உரையாடலை முடித்துக் கொண்டார். “இதை முன்னுரையாக வைத்துக்கொண்டு வாய்ப்பு கிடைக்கும்போது தொடர்ந்து உரையாடுவோம்” என்ற யோசனைக்கு சம்மதம் தெரிவித்தார். இந்த பேட்டி முழுமைக்கும் அவர் காட்டிய ஆர்வமும், ஊக்கமும், வழிநடத்துதலும் மிகவும் போற்றுதலுக்குரியது. இது போன்ற வாசகர் உரையாடல்கள் மூலம் அம்பை என்னும் ஆளுமையின் பல பரிமாணங்கள் எதிர்கால சந்ததியினரை சென்றடைந்ததில் மகிழ்ச்சி. அவரைப் போலவே SPARROWவும் சிறகு விரித்து பறந்து செல்ல மனங்கனிந்த வாழ்த்துகள்.

0 Replies to “சிறகு விரித்து எழுந்த பறவை – அம்பையுடன் உரையாடல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.