ஆழி பெரிது – ஒரு மதிப்புரை

aazhi perithu

 

ஞானமெனும் அஞ்ஞானம்

ஈரோடு புத்தகத் திருவிழாவின் போது, நண்பர் எழுத்து பதிப்பகம் அலெக்ஸ் வந்திருந்தார். அவருடன் உரையாடியபடி சந்தையைச் சுற்றிவந்தேன். அலெக்ஸ் வழியில் ஒரு நண்பரை சந்தித்தார். வெள்ளை யானை குறித்துப் பேசி, ‘வாசித்துவிட்டீர்களா?’ என்று வினவினார். அந்த நண்பர் [தலித்தியச் செயல்பாடுகளும் கொண்ட] வேறு கருத்துத்தளத்தை, இயக்கத்தை  சேர்ந்தவர். அவர் சங்கோஜத்துடன்  இல்லை என்றார். ‘ஏன்?’ என்று வினவ. இல்ல அது “ஜெயமோகன் எழுதுனதுல்ல!” என்றார். அலெக்ஸ் சிரித்தபடி அதனால என்ன வாசிச்சுப் பாருங்க என்று சொல்லி, நிறையப் பேசி அந்த நண்பருக்கு வெள்ளை யானை நூல் ஒன்றினை அளித்தார்.
பின்னர் பேசுகையில் அலெக்ஸ் சொன்னார் ‘’அந்த நண்பர் நல்ல வாசகர். கருத்தியல் நிலைப்பாடுகள்கொண்ட பிறரைப்போலவே ஜெயமோகனின் பெயர்தான் அவருக்கும்  தடை. அந்தத் தடையைத் தாண்டிவிட்டால் நாவல் முன்வைக்கும் அறச்சீற்றம் அவரைத் தீண்டிவிடும். இந்தப் பெயர்த் தடையை அவர் தாண்டிவிடுவார் என நம்புகிறேன். தாண்டவேண்டும் என விரும்புகிறேன். அது ஆக்கப் பூர்வமான சில விளைவுகளை உருவாக்கும். அதனால்தான் அவ்வளவு பேசி அவரிடம் நூலைத் தந்தேன்’’ என்றார்.
எந்தக் கருத்தியல் மற்றும் தத்துவச் சட்டகமும், புரிந்து கொள்ள இயலாத பல்வேறு விசைகளின் சுழிப்பால் இயங்கும் இந்த வாழ்வெனும் பெரும் பரப்பில், நாம் எங்கு இருக்கிறோம் என்று தர்க்க பூர்வமாக வகுத்துக் கொண்டு, நமது இருப்பை இங்கு இயங்கும் பல்வேறு விசைகளுடன் முரண்படாமல், நம்மைப் பொருத்திக் கொள்ள, செயல்பட, அமைந்து கொள்ள உதவ வேண்டும். தத்துவமும் கருத்தியல்களும் அதற்கான கருவிகள்தானே அன்றி, நாம் அக் கருவிகளின் அடிமைகள் அல்ல. கணம் தோறும் உயிர்த் துடிப்புடன் பிரவாகமாகப் பொங்கிப் பெருகும் இந்த வாழ்வில், அதே உயிர்த் துடிப்புடன் நாம் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் எனில், நமது கருவியை அதை வளம் செய்யும் சமகாலச் சிந்தனைகளுடன்  பொருந்தச் செய்வதை  நமது அன்றாடச் செயல்பாடுகளில் ஒன்றாக வைத்திருக்க வேண்டும். அன்றேல் நாம் ஏந்தும் ஞானமே, நம் மீது கவிந்த அஞ்ஞானமாக மாறிவிடும்.
நாஞ்சில் நாடன்  எழுதிய வரி

’’என்னுடன் கருத்து வேறுபடுகிறார்கள் என்பதால், அல்லது இன்னார் இப்படித்தான் என்ற முன்முடிவால் அவர்களின் நூலை நான் வாசிக்காமல் போனேன் எனில், அது எனது பார்வை விசாலத்தைக் குறுக்கிவிடும். இதை யார் செய்தாலும் பிழையே.’’

இதுவே அறிவுடைமை.  ஆசிரியர் பெயரே அவரது நூலை வாசிக்கத் தடையாகும் மற்றொரு பெயராக அரவிந்தன் நீலகண்டன் அவர்கள்  பெயரை அறிகிறேன். இந்த வாழ்வை அறிய,சிந்தனைகளைப் பயிலும் மாணவனாக, ஒரு வாசகனாக,  இந்த எதிர்ப்புகள் அதன் பின்புலங்கள், அதன் நியாய அநியாங்கள், என மயிர்பிளக்கும் வாதங்களைக் கடந்துவந்து நோக்குங்கால் அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் சமீபத்திய நூலான ‘’ஆழி பெரிது’’ அறிவுத் தேட்டமும், சிந்தனை இயக்கம் மீது நம்பிக்கையும் கொண்டோரிடையே, குறிப்பாக இளைய மனங்களிடையே கவனம் பெறவேண்டிய முக்கியமான நூல். கச்சிதமான அத்தியாயப் பகுப்புகளுடன், வாசிப்பின்பம் கூடிய மொழிநடையில், செறிவான உள்ளடக்கம் கொண்ட நூல்.

நமது பண்பாடு

நூலின் பேசுபொருள் வேதப்பண்பாடு.  வேதப் பண்பாடு எனும்போது என்றோ, எங்கோ என்பதுபோன்ற அர்த்தம் தொனிப்பதால், நமது பண்பாடு எனும் பதத்தைப் பயன்படுத்துகிறேன். நமது பாரதப் பண்பாட்டின், அனைத்துக் கூறுகளும், விழுமியங்களும் விதைகொண்டு வேர் விட்ட காலம் வேதகாலம். அன்றைய சமுதாயத்தின் பண்பாட்டின் சிகரமுகமாக விளங்குபவை வேதங்கள். வேதங்கள் எனும் இலக்கியத் தரவுகளைக்கொண்டு, அதன் உள்பரிமாணங்கள், பன்மைத்தன்மை ஆகியவற்றை  பல்வேறு அறிஞர்களின், ஆய்வுகளின் முடிவுகளைக்கொண்டு, அன்றைய வேத சமுதாயம் எத்தன்மையதாக உள்ள ஒன்று என்ற சித்திரத்தை முதல் அத்தியாயத்தில் அளிக்கிறார் அரவிந்தன் நீலகண்டன். இந்த அத்தியாயத்தை இப்படி தொகுத்துக் கொள்ளலாம்.
உண்மைக்கு முடிவிலாப் பரிமாணங்களும், வெளிப்பாடுகளும் இருக்க முடியும் என்பதை உணர்ந்து பன்மையைப் பேணிய சமுதாயம். [ஓடிசாவின் பழங்குடி தரிசனங்களை  அடிப்படையாகக் கொண்டு உருவான வேதப் பகுதிகள் குறித்த ஆய்வு நூல் பற்றிய செய்தி ஒன்று நூலுக்குள் பெட்டிச் செய்தியாக வருகிறது]
தயை தாட்சண்யம் அற்ற கேள்விகள் மூலமாகவே உண்மையை அறியமுடியும் என அறிந்த சமுதாயம்.
கேள்விகள் கேட்பதையே ஆத்மீகப் பண்பாடாகப் பதிய வைத்த சமுதாயம்.

ஆத்மீக அடிப்படைகள்

என்னளவில் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை இவ்வாறு வகுத்துச் சொல்வேன். சமுதாய வளர்ச்சியில் நிகழும் நல்லது கெட்டது, என வளர் சிதை மாற்றத்தின் முழுப் பின்னணியும் கலாச்சாரம்.
என்றென்றும் எல்லைகள் அழிந்து மானுடத்தை, அதன் உள்முக மலர்ச்சியை நோக்கி எடுத்துச் செல்லும் நேர்நிலை ஆற்றல் எல்லாம் பண்பாடு.
நமது பண்பாட்டின் ஆணி வேறான வேதங்களின் சாரம் தனிமனித ஆத்மீக விடுதலையே. வேதங்களின் இந்த ஆத்மீக விழுமியங்கள் மீது, இன்றும் உயிரோட்டத்துடன் இயங்கும் இந்த விழுமியங்கள் மீது கவனம் குவிக்கிறது இரண்டாவது அத்தியாயம்.
இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பொதுவாக ஆத்மீகம் விவாதமுகமாக மாறும்போது கருத்து முதல்வாதம், பொருள்முதல்வாதம் எனும் இருமை நிலைக்குள் வைத்தே அணுகப்படுகிறது. இந்த நோக்கு மிக மிகப் பிற்காலத்தில் மேலைச் சிந்தனையில்  உருவாகி இங்கு வந்த குறுகல் நோக்கு. [சிறந்த உதாரணம் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா நூல்கள்]. இப்படி கருப்பு வெள்ளையாக அணுகுவதே ஏதேனும் முன்முடிவுக்குள் விஷயங்களை அடக்க  வசதி. விஞ்ஞானவாத பௌத்தம் தனது தர்க்கத்தில் பொருள்முதல்வாதம். மகாதர்மமெனும் தரிசன உச்சத்தில் தூய கருத்துமுதல்வாதம்.  நமது பண்பாட்டில், நமது ஆத்மீக விழுமியங்கள் பேசியது ‘’துக்க நிவர்த்தி’’ எனும் நிலை குறித்து.
பௌத்தம் மூன்று வித துக்கத்தை விவாதிக்கிறது. யோகம் நான்கு வித துக்கம் குறித்து பேசுகிறது. சைவம் மூன்று வித மாயையை துக்கம் என்கிறது. இந்த துக்கம் மீதான ‘முதல்’ அவதானம் வேதங்களில் பயின்று வரும் சித்திரத்தை அரவிந்தன் இந்த அத்தியாயத்தில் அளிக்கிறார்.

  • அதே போல நமது பன்மைத்தன்மை கூடிய  வரலாற்றை தொகுக்க மேலைச் சிந்தனை முன்னெடுத்த ஆரிய திராவிட முரண் எனும் பிழையான இருமைவாதக்  குறுகல் நோக்கு,
  • நமது வண்ணமயமான  தொன்மங்களைப்  புரிந்துகொள்ள கோசாம்பி கைக்கொண்ட போதாமை கொண்ட தாய்வழிச் சமுதாயம், தந்தைவழிச் சமுதாயம் என்ற இருமை நோக்கு,
  • உளவியலில் பயன்படுத்திப் பார்த்த உடல் மனம் எனும் இருமை நோக்கு

என நமது பண்பாட்டை வகுத்துக்கொள்ளப் பயன்படுத்திப் பார்த்த அனைத்து  இருமைவாத குறுகல் நோக்குகளையும் இந்நூல் ஆதாரப்பூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் மறுப்பது இந்நூலின் தலையாய தனித்தன்மை.

சடங்குகள்

ஒரு ஒட்டுமொத்தமான இயற்கைப் பேரொழுங்கு, அதிலிருந்து வாழ்வு குறித்த ஒரு முழுமைப் பார்வை. அதைக் குறியீடாக மாற்றி, உருவான சடங்குகள். இந்தப் பின்புலத்தில் வேள்விமேடை துவங்கி, அவிஸ் வரை அனைத்தும் இந்த அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது.
உதாரணமாக நீல் ஆம்ஸ்ட்ராங்  விசும்பிலிருந்து கண்ட புவி. வேத கவிகள் கண்ட தரிசனம். நாம் கையில் வைத்து உருட்டும் க்ளோப் உருண்டை சடங்குகள். அதுவே இது.
அடுத்த பகுதி வேதகாலம் துவங்கி, [இதை விதை என்று கொள்ளலாம்] இன்றுவரை விரிந்து பரவிய, தொடரும் வேதப்பண்பாட்டின் கிளைகளின் சித்திரத்தை அளிக்கிறது. இத்தனை கலாச்சார வித்தியாசம் கொண்ட ஒரு நிலப்பரப்பில் ஒரு பண்பாட்டு விழுமியம் ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கிறது எனில் இது ஒரு நிலைச் சக்தி எனத் தெளிவாகிறது.

வேதத் தொன்மங்கள்

வேதத் தொன்மங்களான, அக்னி, சோமம் போன்றவற்றின்மீது விவாதங்களைத் திறக்கின்ற்ன, இத் தொன்மங்களைத் தனித் தனியாக அணுகி ஆராயும் அத்தியாயங்கள். மானுடமனங்களுக்கெல்லாம் பொதுவான ஆதித்தொன்மம் தீ. அந்தப் புள்ளியில் துவங்கி, கோவில்களின் யாகமேடை, அக்னி போன்ற கோபுர வடிவங்கள் குறித்த ஆய்வுகள் வரை ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தைச் சுருக்கமாக அளிக்க முயல்கிறார் ஆசிரியர்.
இரும்பைத் தங்கமாக மாற்றும் ரசவாதம் குறித்த மர்மங்கள் உலகின் அனைத்து ஆத்மீக தொன்மங்களுடனும் இணைந்த ஒன்று. ஒரு மூலிகை, அதைக் குறிப்பிட்ட பக்குவத்தில் கொண்டுவந்து, அதன் சாற்றை இரும்பிலிட்டால், இரும்பு பொன் ஆகும்.
இப்படி அந்தச் சாறு அதை நிகழ்த்தினால் அந்தச் சாறே, இந்த உடலை அதன் வளர்சிதை மாற்றத்திலிருந்து தடுக்கும் காயகல்பம் என்று கொள்ளப்படுகிறது. அனைத்து ஆத்மீக மரபுகளிலும் ஏதேனும் ஒரு வடிவில் உழலும் இந்த ரசவாதச் சாறுதான்  [உதாரணம் அகிலத்திரட்டு நூலின் முப்பூ] வேதங்களில் விதந்தோதப்படும் சோமபானம் என்றொரு புதிய பரிமாணத்தை சோமத்திற்கு சேர்க்கிறார் ஆசிரியர்.
எது எவ்வாறாகிலும், தாவரங்களுக்கும் நமது பண்பாட்டுக்குமான பாரம்பரியத் தொடர்பு ஆயுர்வேதம் வரை, இங்கிருந்து தொடங்கியது என்பதை எளிதில் யூகிக்கலாம்.
இன்று நாஞ்சில் எழுதிய ‘பிரண்டைக் கொடி’ [உயிர் எழுத்து செப்டம்பர் இதழ்] சிறுகதை வாசிக்கும்போது ஒரு சாத்தியம் தென்பட்டது. நாஞ்சில் எத்தனை விதமான தாவரங்கள், மரங்கள், பயிர்கள் பற்றி எழுதுகிறார். நாளை ஏதேனும் வெளிநாட்டு முதலாளி பிரண்டை போன்ற கொடிகளுக்கு காப்புரிமை கொண்டாடினால் [பிரண்டை மூலத்தை குணமாக்கும்] அது நமது பாரம்பரியம் என்று உரிமை கொண்டாட நம்மிடமுள்ள ஒரே ஆதாரம், எதிர்காலத்தில் இத்தகு இலக்கியப் பிரதிகளாகத்தான் இருக்கும்.
இந்த நோக்கில் பார்த்தால் பண்டைய இலக்கியங்களான வேதங்களின் பயன்மதிப்பின் மற்றொரு தளம் விளங்கும்.
அர்த்தநாரி குறித்த வேதஇலக்கியத் தரவுகளை அனேகமாக அரவிந்தன் நீலகண்டன் தான் முதன் முதலாக முன்னெடுக்கிறார். வேறு எந்த நிலப்பரப்பைக் காட்டிலும், பால்சமம் கொண்ட கடவுளர்களுக்கு ஒரு தனித்த இடம் அளித்தது பாரதம்தான். யோக நிலையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், ஆணின் இடதுபாகம் முற்றிலும் பெண்ணாக மாறும் நிலை,  ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல், யு ஜி கிருஷ்ணமூர்த்தி வரை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வேதத்தின் தரவுகள் துவங்கி கூவாகம் வரை தொடரும் ஒருபெரும் சரடின் மீது இந்நூல் கவனம் கொள்கிறது.
சிந்துப் பண்பாட்டை சிந்து சரஸ்வதி பண்பாடாக விரித்து முன்வைக்கிறார் ஆசிரியர். வேதத்தின் சரஸ்வதியில் துவங்கி, அதன் ஆய்வு நிலைகள் தொடர்ந்து, நேரு அதன் ஆய்வுக்கென செய்த முன்முயற்சி வரை, ஒரு நீண்ட பின்புலத்தைச் சுருக்கமாகவும் செறிவாகவும் முன்வைக்கிறது இந்நூல்.
பிரளயம் குறித்து உலகின் ஒவ்வொரு பண்பாட்டிலும் அதன்  வேரிலும் ஒரு தொன்மம் இருக்கும், நோவா போல. வேதத்திலும் ஒரு தொன்மக்கதை உண்டு. மனு ஒரு மீனுக்கு உதவ, [இவர் ஸ்மிருதி எழுதிய மனு அல்ல] அந்த மீன் பின்னாளில் மனுவுக்கு உதவி, மனுவை பின்தொடரும் மனிதகுலத்தைக் காக்கிறது. இந்தத் தொன்மத்தைக் கொண்டு, நமக்கும், உலகின் பிற பண்பாடுகளில் விளங்கும் தொன்மத்துக்குமான அடிப்படை பேதத்தை ஆசிரியர் நிறுவும் பகுதி இந் நூலின் முக்கியமான பகுதிகளில் ஒன்று.
பிற பண்பாட்டில் மனிதனுக்கும் கடவுளுக்குமான உறவு வேறு. நமது பண்பாட்டில் நமக்கும் கடவுளுக்குமான உறவு முற்றிலும் இசைவு கூடிய ஒன்று.

அகழ்வாய்வுகள்

முற்றிலும் பிரிவினை நோக்குடனும், மட்டம் தட்டும் கீழ்மை நோக்குடனும் உருவான ஒன்றே ஆரியப் படையெடுப்பு எனும் வாதம். அம்பேத்கர் முதல் விவேகானந்தர் வரை பாரதத்தின் முக்கிய சிந்தனையாளர்கள் ஆதாரபூர்வமாக இவற்றை மறுத்தாலும், இந்தக் கருத்தியல் தொடர்ந்து தூக்கிப் பிடிக்கப்பட்டது ‘’திராவிடச்‘’ சதிக்குள் வருமா தெரியவில்லை.
சிந்துப் பண்பாட்டு  மக்களுக்கு கடல் என்றால் என்னவென்றே தெரியாது என்பது ஒரு வாதம். மாறாக சிந்துப் பண்பாடான லோத்தலில் கப்பல் வந்து ஒதுங்குவதற்கு ஒரு துறை கட்டப்பட்டு இருக்கிறது. அது அம் மக்கள் நீர் சேகரிக்க பயன்படுத்திய பெரிய தொட்டி என்றே ‘’மேலை’’ ஆய்வாளர்கள் மீண்டும் மீண்டும் நிறுவப் போராடினர். ஆனால் ஆராய்ச்சித் துறையின் இன்னொரு பிரிவான நுண்ணுயிர் சார்ந்த ஆய்வுப் பிரிவு  துணைக்கு வந்தது. அந்தத் துறையில் படிந்த நுண்ணுயிர்களின் படிவத்தை ஆய்ந்து வந்த முடிவு அது கடல்நீரில் மட்டுமே வாழ முடிந்த உயிரி. ஆக அந்தத் துறை கடல்தான்.
இதே படையெடுத்து வந்த ஆரியர்கள் கொண்டுவந்ததே அக்னிவழிபாடு  என்றொரு வாதம். இதுவும் தகர்ந்தது லோத்தல் ஆய்வில். ‘’வந்த’’ஆரியர்கள் கொண்டு வந்ததே குதிரைகள். அதற்குமுன் பாரதத்தில் குதிரைகள் கிடையாது என்றொரு வாதம். உண்மை நிலையோ வேறு. ஆய்வாளர் சர்மா 1974இல் இந்தியாவின் உள் பகுதியில் கண்டுபிடித்த குதிரை எலும்பு. மேலை ஆய்வாளர்கள் முன்வைக்கும் வந்தேறிகளின் காலத்திற்கு முற்பட்டது. அது காட்டுக் குதிரை அல்ல வளர்ப்புக் குதிரை. அன்றைய அவரது கண்டுபிடிப்பு 1990இல்   மேலை நாட்டிலிருந்து வந்த மற்றொரு ஆய்வாளரால் ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகே ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இது குறித்து சர்மாவின் குமுறல்

‘’நாம் என்றுதான் தன்னம்பிக்கை பெறுவோம்? நாம் முன்வைக்கும் உண்மையை, உண்மைதான் என மேலை நாடுகள் ஒப்புக்கொள்ள என் இத்தனை பிரயத்தனப் படுகிறோம். மேலும் இந்த கண்டுபிடிப்பு ஒரு ‘’உண்மை நிலை’’. ஆனால் இந்த உண்மை நிலை இங்கு வலதுசாரிக்கு ஆதரவாக பார்க்கப் படுகிறது’’

நூலின் மிக முக்கியப் பகுதிகள் இவை. இங்கு பிழை ‘அங்கும்’ ‘இங்கும்’ மனோபாவத்தில்தான்.
சிவி ராமன் – காலனிய ஆட்சியில் சுதேசி அறிவியலாளர்கள் இயக்கம் ஒன்றையே உருவாக்கி இத்தகு மனநிலைக்கு  எதிராகப் போராடிய வரலாறும் நம்மிடம் உண்டு.

அஸ்வமேதம்

ஒரு முறை கரூரில் சித்தி வீட்டில் தங்கி இருந்தேன். சித்தியின் மாமியார் தீவிரப் பகுத்தறிவுவாதி  பரபரப்பாக அன்று நக்கீரன் இதழில் வெளிவந்திருந்த தொடரின் ஒரு பகுதியைக் காட்டினார்.
அக்னிஹோத்ரம் எதோ ஒரு ஆச்சாரியர் எழுதிய ஹிந்துமதம் எங்கே செல்கிறது எனும் தொடரில் வேதங்களில் வரும் அஸ்வமேதம் அதன் சடங்குகள் குறித்த பகுதி.
முகத்தில் ‘’பாத்தேளா! அவாளே ஒத்துனுட்டா. அவாள்லாம் அக்யூஸ்ட்தான்’’ எனும் பாவனை. நான் புன்னகையுடன் சொன்னேன் ‘’பாட்டி எந்தக் காரணமும் இல்லாமல் மனித மனத்தால் பிற மனிதனை வெறுக்க முடியாது. மனிதன் தனது கூட்டு நனவிலியால், உயிரியல் இயல்பால் கூடி வாழும் இயல்பினான். நீங்கள் இத்தனை காலம் வாழ்ந்த இயற்கைக்குப் புறம்பான நிலையை, அதன் விளைவான குற்ற உணர்வை  இந்தக் காகிதத் தகவல் சமன் செய்துவிடும் என்றா எண்ணுகிறீர்கள்?’’ என்றேன்.
மனித குலத் தொன்மங்களையும் பாலியல் சடங்குகளையும் இப்படியெல்லாம் இன்றைய ஒழுக்கவாத நோக்கில் வைத்து விமர்சித்து எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது.
எத்தனையோ பாலியல் சடங்குகள்  அதன் வேர்கள் எது என்று அறியா காலாதீதத்தில் உறைந்த மண் நம்முடையது.  பாலியல் அடிப்படயிலான ஆத்மீக மரபை முன்னெடுத்த தாந்த்ரீகம் எதோ ஒரு வரலாற்று காலத்தில் படிப்படியாக முற்றிலும் பல்வேறு பெரு மத வழிபாடுகளுக்குள் கரைந்துவிட்டது.  நமது கோவிலில் இருக்கும் பல சிற்பங்களுக்கு அதன் தாத்பர்யம் விளங்காத நிலை உள்ளது. காரணம் அவற்றில் பல தாந்த்ரீக மரபை சேர்ந்தவை.
மாறாக பௌத்தத்திற்குள் சுவீகரிக்கப்பட்ட தாந்த்ரீகம் திபெத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. கூகுள் தேடுபொறியில் தாந்த்ரிக் புத்தா என உள்ளிட்டுப் பார்த்தால், கிடைக்கும் சித்திரங்களில் கலாச்சார மனம் அதிர்ந்துவிடும்.
இதன் முதல் விதையே அஸ்வமேதயாகத்தில் நமக்கு காணக் கிடைக்கிறது. இந்த யாகம் குறித்தும் இந்நூல் கவனம் கொள்கிறது.

Aravindhan_Neelakandan_Authors_Tamil_Hindu_Writers

பலி

எனது தாத்தா தீவிரப் பகுத்தறிவாளர், எனது சித்தப்பாவுக்கு ராவணன் என்றெல்லாம் பெயரிட்டு பீதியைக் கிளப்பினார். [பின்னாளில் தாத்தா, அதி தீவிர முருக பக்தராக மாறிவிட்டார்]
தாத்தாவிடமிருந்து வேதகாலம் குறித்து நானடைந்த முதல் பதிவு. வேத ரிஷிகள் எக்காலமும்  சோமமும் சுராவும் மாந்தி, மாட்டுக்கறி கெளவி, கசவாளித்தனம் புரிந்துவிட்டு மல்லாந்து கிடப்பர் என்பதே.
இந்த முதல் பதிவை ஆக்கப்பூர்வமான நேர்நிலை அம்சத்தால் நான் கடந்துவர எத்தனை அவகாசம் பிடித்தது என்று இன்று எண்ணிப் பார்க்கிறேன்.
பௌத்தம் முன்வைத்த சீலங்களில் ஒன்று கொல்லாமை. புலால் உண்ணாமை. இவை ஒரு சீலமாக வேத காலத்துக்கு மிகப் பிந்தித்தான் மாறுகிறது. அதை பிராமணர்கள் கைக்கொள்ளும் வரை அவர்களின் உணவில் மாமிசம் ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கலாம்.
தலாய் லாமா மாமிசம் உண்பார் என்று அறிகிறேன். ஆகவே இவற்றின் ஒழுக்க நியதிகள் கால வர்த்தமானங்களுக்கு உட்பட்டது.
யாகங்களின் பலி குறித்து சுவத் சேனன் விஸ்வாமித்திரன் கதையை முன்வைத்து ஆசிரியர் விரிவாக ஆராய்கிறார். பசுவதை கூடாது என்பதை வேதம் தீர்க்கமாகவே முன்வைக்கிறது
பௌத்தம் பழங்குடி இடையே பரவியபோது அப் பழங்குடிகள் இடையே நிலவிய வன்முறையை நீக்கி அவற்றைத் தொகுத்தது. [எனது குலதெய்வத்தின் கையில் இப்போது பாசாங்குசத்திற்குப் பதில் பூச்செண்டு உள்ளது.] இந்தப் பண்பை அவை வேதப் பண்பாடு ‘தொகுக்கப்பட்ட’ விதத்திலிருந்தே அடைந்திருக்கக் கூடும்.
ஜே சி குமரப்பா முன்வைத்த பசுப்பொருளாதாரம், காந்தி முன்னெடுத்து இன்றுவரை வெற்றிகரமாக இயங்கும் அமுல் ஆகியவற்றை இவற்றுடன் இணைத்து வாசகர்கள் யோசிக்கலாம்.

ஆரிய பூமி

ஆரிய பூமி எனும் பதம் பாரதி பயன்படுத்தியது. அந்தப் பதத்திற்கான விளக்கத்தை அவரே அளித்திருக்கிறார் என்பதைக் கருத்தில் கொண்டால் அன்றே இப் பதம் விவாதத்திற்குரிய ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.
நூலில் ஆரிய பூமி என்றொரு அத்தியாயம் வருகிறது. அது அன்றைய வேத  சமுதாயத்தில் வர்ணாசிரமம் என்னவாக இருந்தது என்று துலக்குகிறது.
அம்பேத்கர் இந்துமதத்தை எதிர்த்தார் என்று ஒற்றை வார்த்தையை மட்டும் விடாமல் பிடித்துத் தொங்குபவர்கள், அவர் இஸ்லாம் கம்யுனிசம் ஆகியவற்றையும்  எதிர்த்ததை  வசதியாக மறைத்து விடுகிறார்கள். மேலும் அம்பேத்கார் வழக்கறிஞர் ஆகையால் எந்த ஆய்வையும் வாதப் பிரதிவாதங்களுடன் கூடிய சமநிலைப் பார்வையில்தான் முன்வைக்கிறார்.
அம்பேத்கரின் ‘சூத்திரர்கள் என்போர் யார்’ எனும் நூல் வேத கால சமூக நீதி எவ்வாறு இருந்தது என்பதற்கான மறுக்க இயலா ஆதாரம்.
இவைகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் அன்றைய பண்பாட்டின் வர்ண அடுக்கை விளக்குகிறார். வர்ணம் உறுதியான ஒன்றாக என்றும் இல்லை. இந்த அடுக்கு வர்நாந்திரம் எனும் செயல் மூலமாக ஒவ்வொருமுறையும் கலைத்து அடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் சித்திரத்தை  சுட்டிக்காட்டுகிறார்.
இந்த வர்நாந்திரம் எனும் நடைமுறையைத்  தொடர்ந்தால் சோழர்காலம் வரை நடைமுறையில் இருந்த இடங்கை வலங்கை பகுப்பு வரை வந்து சேர முடியும். ஒரு கட்டத்தில் வலங்கைப்பிரிவில் இருந்த சாதிகள் வேறொரு கட்டத்தில் இடங்கைப் பிரிவில் இருக்கக் காண்கிறோம். [பார்க்க தமிழினி வெளியீடான பத்திரகாளியின் மைந்தர்கள்]  ஆக இந்த அடுக்கு கலைக்கும் முறை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றாக இருந்திருக்கிறது.
சாதி அடுக்கின் சமூகப் பரிணாம விதிகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் விரிவான பல கட்டுரைகள் உள்ளன.
ஜெயமோகன் அவரது  நேரடி உரையாடலில் மிக சமீபத்தில் உருவாகி வந்த லிங்காயத்து எனும் பிரிவை முன்வைத்து சமூக ஆய்வு ஒன்றினை அளித்தார்.
புதியதாக உருவான அப்பிரிவில் படிப்படியாக வெவ்வேறு சாதி  மக்கள் இணைய, அதன் ஆத்மீக சடங்குப் பிரிவை கவனிக்கும் ஒரு பிரிவு அதற்குள்ளாக எழுந்துவந்தது. அவர்கள் லிங்காயத்து பிராமணர்கள் என அறியப்பட்டார்கள்.
எனது குல தெய்வ கோவிலின் அக்தரின் பாட்டனார் ஏகாலி வகுப்பை சேர்ந்தவர். அவரது மகன் பிராமணப் பெண்ணை மணந்தார். அவரது மகன் இப்போது பிராமணர். மோகனையர் என்று என்னிடம் விசிட்டிங் கார்டு தந்தார்.
வேதங்களில் காயத்ரி மந்திரத்தின் ஆசிரியரான விஸ்வாமித்ரர் பிராமணராக மாறிய சத்ரியர்தான்.
அடிப்படையில் சாதி அடுக்கு கீழிருந்து கிளைத்து மேல் நோக்கி நகரும் ஒன்று. மேலிருந்து கீழே சுமத்தப்பட்டது அல்ல.
ஐயாயிரம் வருட கலாச்சார சமூகப் பொருளாதார விளைவான சாதியமைப்பின் உட் சிடுக்குகளை, வரலாற்றின் இயங்கு திசையை,  பிராமணச் சதி என்று கொள்வதைக்காட்டிலும் மேலான நகைச்சுவை இருக்க இயலாது.
பகுத்தறிவு எனும் ‘ஆயுதத்தைக்’ கையில் எடுத்தோர், மெய்யாகவே  சமூக நீதிக்கு பிராமணர்கள்தான், இந்துமதம்தான்  முட்டுக்கட்டை என்று நினைத்தால், அதற்கு மாற்றாக  பௌத்தத்தைத்தானே கையில் எடுத்திருக்க வேண்டும்? அதுதானே முறைமை! சமூக நீதிக்கான களப்பணியில் பௌத்தத்தைக் காட்டிலும் பெரிய கருவியா பகுத்தறிவு?
நேர் எதிராக அம்பேத்கர் நவயான பௌத்ததத்தை தழுவினார். அம்பேத்கர் இந்துமதத்தை எதிர்த்தார் என்றுதான் திரும்ப திரும்ப பேசப்படுகிறதே அன்றி அம்பேத்கர் தனது எதிர்ப்பை இந்துமதத்தின் எந்த அம்சத்தை நோக்கி குவித்தார் என்று கவனிப்பதே இல்லை.
ஒரு மதம் விவாதத்தை முதலிலும், சடங்கு ஆசாரங்களை இரண்டாவதாகவும், நம்பிக்கைகளை மூன்றாவதாகவும் வைத்தால் அதுவே வளர்முகம் . இந்த அடுக்கு மாறும் போது சமூக அநீதிகளும் தலை எடுக்கிறது. [பார்க்க ஜெயமோகனின் அம்பேத்கரும் அவரது தம்மமும்]. இந்தத் திரிபு நிலை நோக்கிதான், அதை மாற்றி அமைக்கவே  அம்பேத்கர் போராடினார்.
இந்த அடிப்படையில்தான் அவர் சார்ந்த நவயான பௌத்தத்தைப் புரிந்துகொள வேண்டும்.
இவற்றைக் குறித்த விவாத முகத்தை திறக்கிறது ஆரிய பூமி எனும் அத்தியாயம்.

சிவசங்கல்பம்

சிவசங்கல்பத்தின் பாடல்கள் வழியே இன்று நவீன உளவியல் கண்டடைந்த பல தரவுகளை, அன்றே மனித மனதை விசாரித்து கவிகள் அடைந்ததை இப் பகுதி சுவையுடன் விளக்குகிறது.
குறிப்பாக, காலம், வெளி குறித்த கேள்விகளை முன்வைக்கும் சிவசங்கல்பப் பாடலானது, இந்த உலகம் உடையும் மட்டும் மானுடத்துக்கான ஆதாரக் கேள்வி.

தவளைப் பிரார்த்தனை

வேதங்களின் தவளைப் பிரார்த்தனை பாடல்கள் துவங்கி, மன்டூக்கிய உபநிஷத் தொடர்ந்து, ஆந்தனி டி மேலோ வரை தொடரும் ஒரு பார்வையை விரித்துரைகிறது இந்த அத்தியாயம்.
அது இயற்கையுடன் மனிதன் பிறழாத உறவு கொண்ட நிலை.
சமூகத்தின் வளர்ச்சி பிரமிட் போல அன்றி நீர்வட்டம் போல இருக்க விழைந்த வேத கால சமூகப் பார்வை குறித்து ஒரு அத்தியாயம் பேசுகிறது.

உண்டி கொடுத்தோர்

வேதப் பண்பாட்டின்  இன்னார் இனியார் என்று பாராது உணவளிக்கும் மாண்பை இந்த அத்தியாயம் பேசுகிறது.
1877 தாதுவருடப் பஞ்சத்தில் பஞ்சம் முடியும் வரை, அண்டியவர்க்கெல்லாம் உணவளித்த வளவனூர் கோவிந்தையர் முதல் மதிய உணவு திட்டம் கொண்டுவந்த காமராஜர் வரை தொடரும் நமது பண்பாட்டின் அடிப்படை மாண்பை, அதன் வேர்களை அரவிந்தன் நீலகண்டன் வேதப் பண்பாட்டுடன் இணைக்கிறார்.
தர்ம ஞான சபை அமைத்து பசிப்பிணி தீர்த்த வள்ளலார் போல இயங்கிய கோவிந்தையர் குறித்த மூத்த காந்தியர் ராஜகோபாலன் அவர்களின் பதிவு மிக முக்கியமான ஒன்று.
இறுதி அத்தியாயங்கள் சங்ககாலம் துவங்கி, சுதந்திர வேட்கையின் புத்தெழுச்சி காலம் வரை வேதப் பண்பாட்டின் தாக்கம் குறித்து பேசுகிறது.
இந்திய விடுதலை எழுச்சிக்கு தளம் அமைத்துத் தந்த இந்து மறுமலர்ச்சிப் போக்குகளின் முக்கியக் கூறான ஆர்யசமாஜம், அதில் 1920களிலேயே தலித் கல்விக்காக தலித்தோத்பன் உருவாக்கிய சுவாமி சிரத்தானந்தா போன்றோர் குறித்துச் சிறு அறிமுகம் அளிக்கிறது.
1920இல் ஆங்கிலேய அரசாங்கம் எடுத்த கணக்கின்படி 20,000 விதவைகளில் 600 பேரின் வயது ஒன்று. ஆம் ஒரு வயதுப் பெண்ணின் திருமண வயதை நிர்ணயிக்கும் சட்டத்தைக் கோரி, வேத அறிஞர் ஹர்பிலாஸ் சாரதா தொடர்ந்து போராட்டம் நடத்தியதன் வாயிலாக 1930இல் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் வருகிறது.[ அச்சட்டத்தின் பெயரே சாரதா சட்டம் என்று இன்று வழங்குகிறது.(ப-கு) } பின்னும் சாரதா விடவில்லை வேதத்தில் வரும் கணவனில் மனைவி சரி பாதி எனும் கருத்தைப் பிரச்சார ஆயுதமாகக் கொண்டு பெண்களுக்கு சொத்தில் உரிமை வேண்டி தொடர் போராட்டம் நிகழ்த்துகிறார்.
இந்தியப் பெண்களின் கண்ணீரை அம்பேத்கரின் கரங்கள் துடைத்தது வரலாறு.

வேத அறம்

வேதப் பண்பாட்டின் அறமாக, மேலெழுவது வலிமையற்றோரும் வாழவேண்டும் எனும் சமநோக்கே. இந்த அத்தியாயத்தின் சாரம் இதுவே.

அறிதல் சட்டகம்

எந்த ஒரு சிந்திக்கும் பழக்கம் கொண்ட இளைய மனமும் வாழ்வுக்குள் அடி வைக்கும்போது, இன்று தான் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள, தொகுத்துக்கொள்ள ஒரு அறிதல் சட்டகத்தைத் தேடுகிறது.
விவேகானந்தர் கைக்கொண்ட வேதாந்தம், நாராயணகுரு கைக்கொண்ட அத்வைதம், சாஸ்வத காந்தியம் என இன்றும் பயனளிக்கும் அறிதல் சட்டகங்களை இவர்களிடமிருந்து உருவாக்கிக் கொள்ளலாம்.
இந்த வரிசையில் ‘பகுத்தறிவு’ வராது காரணம், தமிழகத்தில் உருவான இந்த பகுத்தறிவு வாதம் அடிப்படையில் எந்த ஆத்மீகப் பார்வையும் அற்றது. எந்த வரலாற்றுப் பிரக்ஞையும் அற்றது. அனைத்துக்கும் மேலாக மனிதர்களை ‘வெறுக்கவே கற்றுத் தந்தது. வெறும் அரசியல் சுயலாபக் கருவியாக எஞ்சி, சமகால பிற அறிவுத் துறைகளுடன் எந்தத் தொடர்பும் அற்றுத் தேங்கிவிட்டது.
அரை  நூற்றாண்டு காலம் வந்தேறிகள், பிராமண சதி, இந்துத்துவ பாசிசம் என்று மட்டையடித்துப் பிரிவினை சக்திகளுக்கு வலு சேர்த்தது.
இளம் மனங்கள் எதையும் நம்ப இயலாச் சூழல் இன்று. இதன் விதையும் விருட்சமும் ‘பகுத்தறிவே’. அந்தக் காலம் அஸ்தமித்து விட்டது இனி ‘தொகுத்தறியும்’ காலம். எதிர்மறை அம்சத்தால் தேங்கி நின்றிருக்கும் இன்றைய சூழலை நேர்நிலை அம்சத்தால் இயங்கச் செய்ய வேண்டிய காலம். இது இயங்கியல் விதி. இந்த நேர் நிலை அம்சத்தின் இயங்கியலின் ஒரு விசை இந்த ஆழி பெரிது.
முன்பே சொன்னதுபோல இளம் மனங்கள் தங்களைத் தொகுத்துக்கொள்ளப் பல அறிதல் சட்டங்கள் இருப்பினும், இந்த நூல் நமது பண்பாட்டின் விதையாக அன்று  துவங்கி இன்றுவரை  வளரும்  வேதப் பண்பாட்டை அறிதல் சட்டகமாகப் பயன்படுத்திப் பார்க்க ஒரு அழைப்பை விடுக்கிறது.
பூமி சூக்தத்தில் ஒரு பாடல்வரி வருகிறது நான் பூமியின் மைந்தன்.பூமிதான் என் தாய் மழைதருவோன் என் தந்தை. இந்த வரிக்கு உங்களது அகம் ஆம் என்று உறைக்கிறதா?
எனில் இது உங்களுக்கான நூல்.
விவேகானந்தரின் பேராண்மையோடு, நமக்கான சுயப் பார்வையில் உருவான, வாழ்வியல் அறம் துவங்கி, சமூக அறம் தொடர்ந்து ஆத்மீக அறம் என, முழுமையான  அறிதல் சட்டகத்தை இளையமனங்களுக்கு முன் வைத்தவகையில் அரவிந்தன் நீலகண்டனின் இந்த நூல் தனித்துவத்தின் சங்கநாதம்.

[ ஆழி பெரிது  – அரவிந்தன் நீலகண்டன் – மதிநிலையம் – 044-28111506 ]

 

0 Replies to “ஆழி பெரிது – ஒரு மதிப்புரை”

  1. A good review but it comes from a stakeholder. Rather another review should come from someone not knowing the author of the book. If such a review has been written anywhere, I would like to read it. Link please !
    I don’t mean to say a stakeholder like Kadalur Seenu should not write a favorable view. I only mean to say that reviews on such a book should come from all kinds of people in order to give us a broad view inclusive of all shades of opinions. Otherwise, the reader is pinned up like a butterfly by Kadulur Seenu to love what he loves and to hate what he hates 🙂

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.