kamagra paypal


முகப்பு » சமூகம், பொருளாதாரம்

தாது வருஷப் பஞ்சம்

1876 ஆம் ஆண்டிலிருந்து 120 ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ள இரண்டாவது தாது வருஷம் இது. 1

தமிழகத்தில் தோன்றிய பஞ்சங்களில் 1876 ஆம் ஆண்டின் தாது வருஷப் பஞ்சம் முக்கியமான ஒன்று. 1896 இலும் இன்னொரு பஞ்சம் தமிழகத்தைத் தாக்கியது. அதிலிருந்து நூறாண்டுகள் கழித்து இந்தத் தாதுவருஷம் வருகிறது.

சில வருடங்கள் முன்பு வரை சினிமாக் கொட்டகைகளில் முக்கியப் படம் துவங்குமுன் காட்டப்படும் மத்திய அரசின் செய்திப்படங்களில்தான் பஞ்சம் பற்றிய காட்சிகள் கிட்டியிருக்கும். ‘பீஹாரில் பஞ்சம்’ என்று உணர்ச்சி ததும்பும் ஆழமான குரலில் வருணனை துவங்கியவுடன், இளவட்டங்கள் அனேகமாக எழுந்து வெளியே போய் புகை பிடிக்கத் துவங்குவார்கள். வெடித்துப் பாளம் பாளமாகக் கிடக்கும் வயல்கள், மெலிந்து குச்சியாகி, ஒட்டிய வயிறுடன் இருக்கும் விவசாயிகள் என்று அவலக் காட்சிகளை அவர்கள் பார்க்க வாய்ப்பில்லை, பார்த்தாலும், ‘மெயின் படத்தை ஓட்டாம வெட்டியா லொள்ளு பண்றானுவ,’ என்று குறை சொல்வார்கள். நிஜ உலகத்திற்கு ஏது கவர்ச்சி?

இத்தகைய பஞ்சங்களில் மடிந்த கோடானு கோடி இந்தியர்களின் அவல வாழ்வு குறித்து அன்று அவர்களுக்கிருந்த அக்கறையின்மை போலவே பரந்த சமூகத்தில் இன்றும் அக்கறையின்மைதான் இருக்கிறது. இந்தப் பஞ்சங்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் தேடுவாரற்று, ஆவணங்களில் உறைந்து, மறைந்து கிடக்கின்றன.

கிழக்கிந்தியக் கம்பெனி சென்னை நகரை உருவாக்கிய பின் அதன் வரலாறு நெடுகப் பஞ்சங்களாகக் காண முடியும். 1640 இல் துவங்கி 1907 வரை சுமார் 17 முறை அன்றைய சென்னை மாகாணத்தை உணவுப் பஞ்சங்கள் தாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் குடித்திருக்கின்றன.

பஞ்சங்களை நினைவு கூரும் ஒரு சில அடையாளங்களை இன்றும் சென்னையில் காணலாம். ஒரு உதாரணம், இன்றைய சென்னை நகரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் – இதன் பெரும்பகுதி தாது வருஷப் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே வெட்டப்பட்டது. பல ஆண்டுகள் தமிழகம், ஆந்திரம் ஆகிய பகுதிகளிடையே போக்குவரவுக்குப் பயன்பட்ட இந்தக் கால்வாய் இன்று சர்வ ரோகச் சாக்கடையாகச் சுருங்கி விட்டது.

கொள்ளை நோய்களும், லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்பும் பஞ்சங்களின் உடனடி விளைவுகள். குறிப்பாக, பஞ்சத்தின் முக்கிய விளைவு மனித மதிப்பீடுகளின் வீழ்ச்சி. பஞ்சத்தைத் தொடர்ந்து சென்னையில் அடிமை வாணிபம் பல ஆண்டுகளுக்கு நிலை கொண்டது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? [கட்டமிட்ட செய்தியைப் பார்க்கவும்.]

இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சில ஆகியவற்றைத் தமது கப்பல் படைகள் மூலம் வெற்றி கொண்ட தமிழர்கள், பஞ்சம் பிழைக்க இந்த நாடுகளுக்குக் கூட்டம் கூட்டமாகக் கப்பல்களில் சென்றார்கள். வரலாற்றின் குரூர நகைச்சுவை இது. இப்பஞ்சம் தாக்கிய (1876-77) வருடங்களில் சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலங்கைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை 3.30 லட்சத்துக்கும் அதிகம். தமிழ் இலக்கியத்திலும் இப்பஞ்சம் தன் சுவடுகளைப் பதித்து, இறவாப் புகழ் பெற்றிருக்கிறது. [பார்க்க கட்டம் கட்டிய செய்திகள்]

famine_1

துவாதசப் பஞ்சம், தாதுப் பஞ்சம், குண்டூர்ப் பஞ்சம், ஒரிஸ்ஸா பஞ்சம் என்று பஞ்சங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டது. இதில் தாது வருஷப் பஞ்சம் நம் தாத்தா பாட்டிகளால் நினைவு கூரப்பட்ட பஞ்சம். இதற்குப் பிறகும் சென்னை மாகாணத்தில் பஞ்சங்கள் வந்துள்ளன. ஆயினும், கடைசியாகச் சென்னையைத் தாக்கிய மிகப்பெரும் பஞ்சமாக இது கருதப்படுகிறது.

பருவமழை தவறியதையடுத்து 1876-77 காலகட்டத்தில் சென்னை மாகாணம் வறட்சியில் சிக்கியது. அன்றைய சென்னை மாகாணம் இன்றைய ஆந்திரம், ஒரிஸ்ஸா மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. பஞ்சத்தின் துவக்கம் இந்த ஆண்டு நவம்பர் என்று அதிகாரப் பூர்வமாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த அதிகாரப் பூர்வ அறிவுப்புக்குக் காத்திராமல், விலைவாசி தாறுமாறாக ஏறி, குறிப்பாக சேலம், வடாற்காடு, கோவை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்து நிலமற்ற விவசாயிகளின், வறியோரின் கழுத்துகளை நெரித்தது.

அந்த வருடம் மே மாத நிலவரப்படி 5 கிலோ (அன்றைய கணக்கில் சுமார் 28 சேர்) கேழ்வரகின் விலை ஒரு ரூபாயாக உயர்ந்தது. [அன்றைய ரூபாய்க்கு வாங்கும் சக்தி அதிகம் என்பது நினைவிலிருக்கட்டும். ’ஒரு ரூபாய்க்கு எட்டு படி அரிசிடா, அதுவும் எட்டு பட்டணம் படி’ என்று பெரிசுகள் புலம்புவதை நினைவு கூருவோர் நம்மிடையே இருக்கக் கூடும்.]  அதே ஆண்டு அக்டோபரில் நிலைமை இன்னும் மோசமடைந்தது. ஒரு ரூபாய்க்குக் கிடைத்த கேழ்வரகின் அளவு 1.5 கிலோவாகக் குறைந்தது. நாட்கள் செல்லச் செல்ல தானியத்தைக் கண்ணில் காண்பதே அரிதாயிற்று. பட்டினிச் சாவுகள் அதிகமாகி விட்டன.

இந்தப் பஞ்சத்தில் மடிந்தவர்களின் எண்ணிக்கை பற்றி உறுதியான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ஆயினும், இறந்தவர்கள் தொகை பற்றி, ‘பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் சென்னையின் வளர்ச்சி’ என்ற நூலை 1890 வாக்கில் எழுதிய ஸ்ரீநிவாச ராகவய்யங்கார் தரும் தகவல் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது. சுமார் 40 லட்சம் பேர் பட்டினிச் சாவுக்கு இரையாகி இருக்கக் கூடும் என்று அவர் தெரிவிக்கிறார். இந்தப் பஞ்சம் பற்றி ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர், டேவிட் ஆர்னால்ட் என்பார் கொடுக்கும் தகவலும் ஸ்ரீநிவாச ராகவய்யங்காரின் கணக்கைக் கிட்டத் தட்ட உறுதி செய்கிறது. இப்பஞ்சத்தில் இறந்தவர்களின் மொத்தத் தொகையை உறுதியாகச் சொல்ல முடியவில்லை எனினும், குறைந்த பட்சம் 35 லட்சம் பேர் இறந்திருக்கக் கூடுமென,  இந்தப் பஞ்ச காலத்தில் வாழ்ந்தவர்கள் தரும் தகவல்கள் சுட்டுகின்றன என்கிறார் ஆர்னால்ட்.

இந்த இரண்டாண்டுப் பஞ்சத்தில் கோவை மாவட்டத்திலுள்ள கவுண்டர் இனத்தவரில் 1.9 சதவீதம் பேரும், வன்னிய இனத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகளில் 23.0 சதவீதம் பேரும், நெசவாளர்களான கைக்கோலார்களில் 10.1 சதவீதம் பேரும், தாழ்த்தப்பட்ட மக்களில் 8 சதவீதம் பேரும் பலியாகினர். இதுவும் ஆர்னால்டின் தகவல்.

தாது வருடக் கரிப்புக் கும்மி

தமிழின் சிற்றிலக்கிய வகைகளில் ‘கும்மி’ என்பதொன்று. பக்திக் கும்மி, சண்டைக் கும்மி, கதைக் கும்மி என்று பல உண்டு. இந்தப் பிரிவில் ‘கரிப்புக் கும்மி’ அடக்கம். பஞ்சத்தை மக்கள் கருப்பு, கரிப்பு என்ற சொற்களால் அழைக்கின்றனர்.

தமிழகத்தின் சமூக ஆவணங்களாகத் திகழும் இலக்கியங்களில் கும்மிக்கு முக்கிய இடம் உண்டு. தாது வருஷப் பஞ்சத்தில் ஏற்பட்ட கொடும் விளைவுகளைத் தாது வருஷக் கரிப்புக் கும்மி எடுத்துக் காட்டுகிறது. பஞ்சகாலத்தில் காஞ்சிபுரத்தைச் சுற்றிய பகுதிகள் பாதிக்கப்பட்ட விதங்களையும், மக்கள் பட்ட அல்லல்களையும், அறநெறிகளின் வீழ்ச்சியையும் இந்தக் கும்மி விவரிக்கிறது. இதைப் பருவத சஞ்சீவி என்னும் மலைமருத்தன் என்ற புலவர் 1877இல் எழுதியதாகத் தெரிகிறது.

ஓலைச் சுவடியாக இருந்த இந்த நூலைத் தஞ்சை சரஸ்வதி மஹால் நிலையம் 1985இல் பதிப்பித்துள்ளது. பஞ்சம், அதைத் தொடரும் காலரா சாவுகள், நீண்ட நாள் பட்டினிக்குப் பின் திடீரென உணவு உண்டவர்கள் இறந்த விதங்கள், குடும்பப் பெண்கள் பசியிலிருந்து தப்ப விபச்சாரத்தில் ஈடுபட்டது, கொள்ளைகள் உள்ளிட்ட பல அவலங்கள் இந்த நூலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்படுகின்றன.

மக்கள் உணவு தேடி அலைந்த பாடுகளைக் காட்டும் பகுதி இது. மக்கள் தானியம் கிடைக்காமல் எறும்பு வளைகளைத் தோண்டி அங்கிருந்த தானியத்தை எடுத்துப் பசியாற முற்பட்டனராம்.

எறும்பு வளைகளை வெட்டியதில் இருக்கும் தானியம் தானெடுத்து,
முறத்தால் கொழித்துக் குத்திச் சமைத்து
உண்ணுகிறார் சிலர் பாருங்கடி
பட்டினியிருந்து சாப்பிட்டவர்க்கு,
பருத்த மேல்மூச்சுண்டாகி
அட்டியில்லாமல் களையை அடைந்து
அப்போதே சாகிறார் பாருங்கடி

அக்காலத்தில் விற்ற தானியங்களின் விலை பற்றி நூலில் காணப்படும் குறிப்புகள்:

ஒரு ரூபாய் கேவறுகள், ஒன்றேகால்
மரக்கால் விற்குறார்கள்
ஒரு ரூபாய்க்கு பதக்கு நெல்லை
உண்மையாய் விற்குறார் பாருங்கடி

பஞ்சம் பிழைக்க வந்த மக்கள் பற்றி இந்த நூல் தெரிவிக்கும் விவரங்கள்-

வாணியம்பாடி திருப்பத்தூர், சேலம்
மற்றும் மாமூர் குழியம் முதல்
வேளாவூரிலுள்ள ஆட்டக்காரரெல்லாம்
மேவி வந்ததைக் கேளுங்கடி
வடக்கிலுள்ள தாழ்ந்த சாதிகள்,
வகையுடன் கையில் சட்டிகளை
எடுத் தூரூராய் போய் கூழை
இரந்து குடிக்குறார் பாருங்கடி.

சொத்துக்கள் குறைந்த விலையில் விற்கப்படுதல், சென்னை நகரத்திலிருந்து வந்த வணிகர்கள் அங்கு கொள்ளை வர்த்தகத்தில் ஈடுபட காஞ்சியிலிருந்து நெல்லை வண்டி வண்டியாகக் கடத்திச் சென்ற சம்பவங்கள் உள்ளிட்ட, பஞ்சத்தின் அத்தனை விவரங்களும் கொண்ட நூல் இது. சென்னை நகரின் சரித்திரம், அதன் சமூகம் பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த நூலில் பல தகவல்கள் கிட்டும்.

famine_3

தாது வருடத் தராதலத்தோர் வாழ்ந்திருப்பர்
வேதனை யுமில்லை விளைவுண்டு- சீதமழை
பெய்யும் பரிவாரம் பேருடனே யெந்நாளும்
உய்யும் படியுல கிலுண்டு.

தமிழ் ஆண்டுப் பலன்கள் குறித்து வருஷாதி நூல் என்ற புத்தகத்தில் தாது வருஷம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள பாட்டு இது. இதன் பொருள், தாது வருடத்தில் உலக மக்கள் வேதனையில்லாமல் வாழ்வார்கள். குளிர்மழை பெய்யும் உற்றார் உறவினருடன் புகழோடு எப்போதும் வாழும் நிலை உலகில் பலருக்கு ஏற்படும்.

தானியப் பஞ்சம் ஏற்பட்டதும் பீதியின் பிடியில் சிக்கிய மக்களிடையே அவர்களின் பயத்தை அதிகரிக்கச் செய்யும் வதந்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இதன் விளைவு, தானியக் கொள்ளைகளும், கலவரங்களும்.

கலவரங்களுக்கு வதந்திகள் மட்டுமே காரணமல்ல. வியாபாரிகள் தானியங்களைப் பதுக்கியதும், விலையைச் சுமார் பத்து மடங்கு அதிகரித்ததும் காரணங்களே. மனம் கொதித்த மக்கள், அரசு வியாபாரிகளின் கொள்ளை லாப நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்குமென எதிர்பார்த்து ஏமாந்தனர். அரசு வழக்கம்போல வியாபாரிகளின் கொள்ளையைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போன போது மட்டுமே அரசு தலையிட்டது.

இத்தகைய தானியக் கலவரங்களுக்குச் சென்னையிலும், நெல்லை மாவட்டத்திலும் நடந்த இரு சம்பவங்கள் உதாரணங்களாகும். 1876 டிசம்பர் 17ஆம் தேதியன்று கல்லிடைக் குறிச்சியின் பிரதான சந்தைப் பகுதியில் சுமார் 500 பேர் கொண்ட கூட்டம் தானியக் கடைகளைச் சூறையாடியது. கொள்ளை நடப்பது பற்றிய வதந்தி பரவியதும், வர்த்தகர்கள் கடைகளை மூடத் தொடங்கினர். அரை வயிற்றுக்காவது கஞ்சி கிடைக்காதா என்று காத்திருந்த மக்கள் இக்கடையடைப்பைக் கண்டு ஆத்திரமுற்றனர். கலவரத்திலிறங்கினர். அரசு நடவடிக்கை எடுத்து வர்த்தகர்களின் கொள்ளையைத் தடுக்காததால் எழுந்த சீற்றமே கலவரமாகியிருக்கிறது. இக்கலவரத்தில் பெண்களும் பங்கெடுத்தனர் என்று தெரிகிறது.

சென்னை நகரிலும் மொத்த தானிய விற்பனை நடக்கும் இடமொன்றில்- இது எந்த இடமென்று இப்போது தெரியவில்லை- தானியம் வாங்க வந்த மக்கள் கூட்டத்தினூடே, கொள்ளை என்று கத்தியபடி ஒரு இளைஞன் ஓடவும், மக்கள் கூட்டம் தாக்குதலில் இறங்கியதாகத் தெரிகிறது.

இப்படிக் கலவரங்களில் ஈடுபட்டவர்களில் நிறைய பேர் நகரத் தொழிலாளர்கள், வறிய விவசாயிகள், ரயில் தொழிலாளர்கள் போன்றவர்கள். 1877 இல் விசாகப்பட்டணத்தில் ராணுவத்தின் இந்தியச் சிப்பாய்களே தானியக்கலவரங்களில் ஈடுபட்டனர். ஒரு நூறாண்டுக்கு முன்பு, 1728இல் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த துருப்பினர் போதிய உணவு கிட்டாததால் இரு முறை ஆயுதங்களைக் கீழே போட்டு நிர்வாகத்துடன் ஒத்துழைக்க மறுத்ததாக பிரிட்டிஷ் ஆவணங்களே தெரிவிக்கின்றனவாம்.

பஞ்சம் தாக்கிய பகுதிகளில் தானிய வண்டிகளையும், தானியப்படகுகளையும் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்தன. இதையடுத்து, பாதுகாப்புக்காக மாநில நிர்வாகம் கூடுதலாக 3000 போலிஸாரைப் பணியில் ஈடுபடுத்தியது. தானிய வண்டிகள், படகுகளுக்குப் பாதுகாப்பளித்தல், சந்தைகளில் தானிய வியாபாரிகளுக்குக் காவலாக இருப்பது ஆகியன அவர்களது முக்கிய கடமைகள்.

குற்றங்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்தது. சென்னையின் அன்றைய போலிஸ் இலாக்கா கணக்குப்படி 1877 இல் கொள்ளைச் சம்பவங்கள் 1695. அதற்கு முந்தைய ஆண்டை விட இது இருமடங்கு.  எதிர்பாராத விபத்து என்ற பெயரில் பதிவான கொலைகள், மற்றும் தற்கொலைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில்  13 ஆயிரத்துக்கும் அதிகம். பசியால் தவிக்கும் தன் குழந்தைகளுக்குப் பட்டினித் தீயிலிருந்து நிரந்தர விடுதலை தர அவற்றின் கழுத்தை நெரித்தும், விஷமிட்டும் கொன்ற பெற்றோர் ஏராளம். அந்தக் காலத்தில் கிராமப்புறத்துக் குற்றங்கள் போலிஸாரிடம் புகார் செய்யப்படுவதில்லை என்பதால் அவற்றையும் சேர்த்தால், குற்றங்களின் எண்ணிக்கை நம்ப முடியாத அளவைத் தொட்டிருக்கும்.

பஞ்ச நிவாரண முகாம்கள் பல இக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டன. சென்னை நகரத்தில் இந்தப் பஞ்சத்தின் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு பிரபல ஆங்கில எழுத்தாளர் ரட்யார்ட் கிப்ளிங் கதைகள் எழுதியுள்ளார். இத்தகைய நிவாரண முகாம்களில் தன் குழந்தைகளை ஒப்படைத்த தாய்மார்கள், பஞ்சம் நீங்கிய பின்பு தங்கள் குழந்தைகளை அடையாளம் சொல்லிப் பெற்றுக் கொள்ள அவற்றின் கழுத்தில் பல்வேறு மணிகள் மற்றும் துணி மாலைகளை அணிவித்ததாக அவர் கதை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஓர் தட்டிலே பொன்னும் ஓர் தட்டிலே நெல்லும் ஒக்க விற்ற இந்தப் பஞ்சகாலத்தில் உயிரைப் பேண சென்னை மாகாண மக்கள் பட்ட அவதிகள் துக்க சாகரம். நிலமற்ற வறிய விவசாயிகள் சாதாரண காலங்களிலேயே ஒரு வருஷத்தில் பாதி நாள் ஒரு வேளைக்  களி தின்று உயிரோம்பி வருபவர்கள். பஞ்சகாலத்தில் எலிகள் முதல் ஊர்வன, பறப்பன அனைத்தையும் அவர்கள் உண்ணத் துவங்கினர். வயிற்றைப் புண்ணாக்கி எரிச்சல் ஏற்படுத்தும் காட்டுக் கிழங்குகளைக் கூட விட்டு வைக்கவில்லை. பசியாலும், தாகத்தாலும் இறந்த கால்நடைகளை அவர்கள் உண்டனர். கால்நடைத் திருட்டுச் சம்பவங்கள் மும்மடங்கு அதிகரித்தன. கால்நடைச் சந்தைகள் உடல் வற்றித் தோல்பைகள் போல இருந்த மாடுகளால் நிரம்பியிருந்தன. கோவை மாவட்டத்தில் கொள்ளேகால் தாலுக்காவில் 60 சதவீதம் கால்நடைகள் இறந்ததாக 1877 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

கால்நடைகளை மட்டும் மக்கள் விற்கவில்லை. ‘குழந்தைகளைக் கூவி விற்கவும் தொடங்கினர். அன்றைய சென்னை மாகாணத்தில் பெல்லாரியைச் சேர்ந்த ஒரு பெண் தன் குழந்தையை 12 அணாவுக்கு விற்ற சம்பவம் ஆவணத்திலுள்ளது. கிருஷ்ணா மாவட்டத்தில் குளம் தோண்டும் தொழிலாளி தன் மூன்று பெண்களை தேவதாசி சமூகத்தினரிடம் விற்றாராம். பெல்லாரியில் மனைவிகளையும், குழந்தைகளையும் அடகு வைத்த கணவன்மார்கள் பலர்.

சென்னையில் நடந்த அடிமை வர்த்தகம்

”உங்களிடம் நூறு ரூபாய் இருக்கிறதா? ஒரு நல்ல அடிமையை எளிதில் வாங்கலாம். பெண் அடிமைகளுக்குச் சற்றுக் கூடுதல் விலை.” ஏதோ ஆஃப்ரிக்காவில் அல்ல, தமிழகத்தில்: அதுவும் சென்னை கோட்டையில். 350 வருடங்களுக்கு முன்னால் சென்னையில் இப்படி ஒரு நிலை இருந்தது என்றால் இப்போது நம்ப முடியாமல் இருக்கும். ஆனால் இந்த உண்மைக் கதை நடந்தது 1646 இல். அந்த ஆண்டிலிருந்து சென்னையின் சாந்தோமும், கோட்டைப்பகுதியும் அடிமை வர்த்தகத்தின் முக்கியக் கேந்திரமாக இருந்தன. எட்டணாவில் டீ குடிக்க முடியாத காலத்தில் இன்று வாழ்கிறோம், இதே சென்னை நகரில் அன்று ஒரு அடிமையைப் பதிவு செய்ய எட்டணா, வெறும் எட்டணாதான் ஆயிற்று. அடிமை வர்த்தகம் தொடர்பாக கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் ஆவணங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் இவை.

1646 ஆம் ஆண்டுப் பஞ்சம்தான் இந்த அடிமை வர்த்தகம் சென்னையில் செழித்து வளர்வதற்கான மூல காரணம். சென்னை ஒரு நகரமாகிய பிறகு அதைத் தாக்கிய முதல் பஞ்சம் இதுதான். இந்தப் பஞ்சம் சென்னையை மட்டுமன்றி, இதர மாவட்டங்களையும் தாக்கியது, பசியின் கோரப்பிடியிலிருந்து தப்ப தமிழக மக்களில் பலர் தங்களை அடிமைகளாக விர்றுக் கொண்டனர்.

இன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்திலுள்ள சௌல்ட்ரி கேட் பகுதியில் அடிமைகள் சகாய விலையில் பதிவு செய்யப்பட்டனர். அடிமை வர்த்தகர்கள் அவர்களைக் கப்பலில் ஏற்றி போர்ச்சுகீஸிய, டச்சு காலனிகளுக்கு அனுப்பினர். தமிழ்நாட்டு அடிமைகள் ஜாவா, சுமத்திரா போன்ற அன்றைய டச்சுக் காலனிகளின் வயல்வெளிகளில் உழைத்து உயிர் விட்டனர்.

நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 400 அடிமைகள் பசியால் குற்றுயிரும் குலையுயிருமான நிலையில் போர்ச்சுகீஸிய கப்பல் ஒன்றில் பயணம் செய்ததை பிரிட்டனின் அருங்காட்சியகக் கையெழுத்துப் பிரிவிலுள்ள ஒரு ஆவணம் தெரிவிக்கிறது.

சென்னையில் நெடுங்காலம் வசித்த வெனிஸ் நகர வர்த்தகன் நிகோலாய் மனூச்சியின் ‘ஸ்டோரியா டொ மொகொர்’ என்ற புத்தகத்தில் சென்னையின் அடிமை வர்த்தகம் பற்றி நெஞ்சை உருக்கும் தகவல்கள் உள்ளன. அடிமைப் பெண் ஒருத்தி தன்னை வாங்கிய டச்சுக்காரர்களிடமிருந்து தப்பி சாந்தோம் பிஷப்பின் இல்லத்தில் அடைக்கலம் புகுந்தாள், அவளை அவர் காப்பாற்றி அடிமை வர்த்தகர்களிடமிருந்து மீட்டார் என்று அப்புத்தகம் தெரிவிக்கிறது.

இந்த வர்த்தகத்தில் பல இடைத்தரகர்கள் இந்தியர்களே என்பது ஒரு கொடூரம். அதை விட, இந்த வர்த்தகத்துக்காகக் குழந்தைகளையும், பெண்களையும் அவர்கள் கடத்தி விற்றது கொடுமையின் உச்சம்.

1653இல் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஒரு அபிமான வர்த்தகன் வெங்கட்டி, அவன் தம்பி கண்ணப்பா ஆகியோர் இப்படிக் கடத்தல் செய்தவர்கள். டச்சு, போர்ச்சுகீஸியக் காலனிகளில் உழைக்க மக்கள் கூட்டங்கள் தேவை என்பதால் பஞ்சம் விலகிய பின்னும் இந்த வர்த்தகம் தொடர்ந்தது. இதனாலேயே சென்னையில் வசித்த பல குழந்தைகளைக் கண்ணப்பா கடத்தினான். பழவேற்காட்டிலிருந்த டச்சுக்காரர்கள் இவர்களிடம் வாங்கியவர்கள். கிழக்கிந்தியக் கம்பெனி இந்த வியாபாரத்தைக் காணாதது போலிருந்து கொண்டது. அப்படியும் அவர்கள் நடுவே சில மனிதாபிமானிகள் இதைக் கண்டித்தனர். ஜான் லெ என்கிற அதிகாரி கம்பெனியின் மேலதிகாரிகளுக்குக் கடிதம் எழுதி இதைத் தடுக்கக் கோருகிறார்.

நடந்ததென்னவோ, வேறு. கண்ணப்பாவும், கிழக்கிந்தியக் கம்பெனியின் உயர் பதவியிலிருந்த வெள்ளைக் கொள்ளையனான பேக்கர் என்பவனும் நெருங்கியவர்கள். ஆகவே கண் துடைப்பாக, கண்ணப்பாவுக்கு ஒரு தண்டனை விதிக்கப்பட்டது. 16 பகோடாக்கள், அதாவது சுமார் 56 ரூபாய் அபராதம்.

பிற்காலத்தில் விக்டோரியா ராணியின் காலத்தில்தான் அடிமை முறை யை ஒழிக்கச் சட்டம் பிறந்தது.

பராரிகள் கூட்டம் பஞ்சப்பகுதியிலிருந்து சோறு தேடிக் கூட்டமாக வெளியேறத் துவங்கியது. பலர் பயண வழியிலேயே இறந்தனர். பிழைத்தவர்கள் நிவாரணம் தேடி அண்டையிலிருந்த பெரு நகரங்கள், தரும காரியங்கள் நடக்கும் புண்ணியத் தலங்கள் ஆகியவற்றை நோக்கிச் சென்றனர். காளஹஸ்தி, மற்றும் புங்கனூர் ஜமீன்தார்கள் குடிபடைகளைக் காக்கும் ‘ராஜதர்மத்தை’ நிலை நிறுத்தக் கஞ்சித் தொட்டிகளைத் திறந்தனர். இந்தப் பஞ்சைகளுக்குத் தீனி போட்டுக் கட்டுபடியாகாது எனக் கருதிய பெரும்பாலான மற்ற ஜமீன்தார்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.

பஞ்சம் தாக்கிய பகுதிகளில் வட ஆர்க்காடு மாவட்டமும் ஒன்று. அம்மாவட்டத்தின் கிராமப்பகுதியிலிருந்து வந்த பட்டினிக் கூட்டத்தால் வேலூர் நகரமே திணறியது. பஞ்சம் தாக்கிய சேலம், கோவை, மதுரையைச் சேர்ந்த மக்கள், காவிரிப் படுகையை நோக்கிச் சென்றனர். 1876 அக்டோபர் முதல் மே மாதம் வரை தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறத்திலிருந்த 15 அன்னச் சத்திரங்களில் சுமார் 5 லட்சம் பேருக்கு இலவச உணவு அளிக்கப்பட்டதாக அம்மாவட்டத்தின் அன்றைய கலெக்டர் தாமஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லங்கர்கானாவில் ஒரு நிவாரண முகாம் நடத்தப்படது. இது தவிர இங்கு வெங்கடசாமி நாயுடு மார்க்கெட் உள்ளிட்ட இரு பகுதிகளிலும் மயிலை, ராயப்பேட்டை, வேப்பேரி, ராயபுரம் ஆகிய இடங்களிலும் நிவாரண முகாம்கள் நடந்தன.

கிராமங்களிலிருந்து சென்னைக்கு வந்த மக்களால் நகரம் நிரம்பியது. இதன் விளைவாகக் கழிப்பிடங்கள் உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினை ஏற்பட்டது. எனவே, கிராம மக்கள் நகருக்குள் நுழைவதைத் தடுக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உத்தரவிட்டனர். இதையடுத்து நகருக்குள் நுழையாமல் தடுக்கப்பட்ட மக்கள் சென்னைப் புறநகரான சாத்தான் காட்டில் உருவாக்கப்பட்ட நிவாரண முகாமில் உதவிகள் பெற்றனர்.

பிரிட்டிஷ் அரசுத் தரப்பில் மட்டுமில்லாமல், தனியாரும் இது போன்ற பஞ்ச நிவாரண நடவடிக்கைகளில் இறங்கினர். இலவச உணவு அளித்தவர்களில் சிலர் மனிதாபிமான அடிப்படையில் உணவளித்தனர், வேறு சிலர் குறிப்பாகச் சென்னையில் தானிய வர்த்தகர்கள் கொள்ளை லாபமடிக்கிறார்கள் என்று கிட்டிய அவப்பெயரை நீக்கவும், பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஜனங்களின் ஆத்திரத்திலிருந்து தப்பவும் இப்படி உணவளிப்பதைச் செய்தனர். சிலர் பிராம்மணர்களுக்கு மட்டும் உணவளித்துப் ‘புண்ணியம்’ தேடினர். சிலர் இஸ்லாமியருக்கு மட்டும் உணவளித்தனர். இவ்வாறு ஜாதி மதம் பார்த்தும் உணவு வழங்கப்பட்டது.

பஞ்சம் பேரழிவைக் கொண்டு வந்தது உண்மைதான். ஆயினும் தாது வருஷப் பஞ்சத்துக்குப் பின், 1883 இல் பஞ்சத்தின் பேரழிவைக் கட்டுப்படுத்தும் நிவாரண, நிர்வாக முறைகள் திட்டமிடப்பட்டு வகுக்கப்பட்டன. இந்திய கவர்னர் ஜெனரல் லார்ட் லைட்டன்  பிறப்பித்த உத்தரவின் பேரில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளினடிப்படையில் பஞ்ச நிவாரண நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவருக்கு உணவு தருவதோடு, வேலை வாய்ப்புகளளிப்பது, கடன் நீக்கம் ஆகியனவும் இதிலடங்கும்.

இன்றும் நாட்டில் வறுமை தொலையவில்லை. ஆனால் சென்ற நூற்றாண்டின் கொடும் பஞ்சங்கள் போன்றவை தாக்கி அழிக்கும் வாய்ப்பு குறைவு எனலாம்.

oOo

குறிப்புகள்

இக்கட்டுரையாசிரியர்: எஸ்.சிவகுமார்

இந்தக் கட்டுரை தினமணி கதிர் பத்திரிகை இணைப்பில், 14-4-1996 ஆம் ஆண்டு வெளியான கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. தழுவல் என்றாலும் இது கிட்டத் தட்ட மூலக் கட்டுரையேதான். சிறிதே சுருக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையை வெளியிட உதவியாக இருந்த கட்டுரைக்காக, தினமணி கதிர் பிரசுரத்துக்கு சொல்வனம் நன்றி தெரிவிக்கிறது.

1. கட்டுரை வெளியான ஏப்ரல், 1996 இல் துவங்கிய தமிழ் வருடத்தைத் தாது வருஷம் என்று கட்டுரை குறிக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கொரு முறை தாது வருடம் எனப்படும் வருஷம் வரும் என்பது இந்தியப் பஞ்சாங்க முறை.

oOo

அப்போதும் அடிமை முறை ஒன்றும் ஒழிந்து விடவில்லை. யூரோப்பிலேயே அடிமை முறை கிட்டத் தட்ட 20 ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை தொடர்ந்தது. அமெரிக்காவில் அடிமை முறை ஒழிந்த பின்னும் பல விதங்களில் இன வெறி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. இன்னும் அது பல மேலை நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. [மேலும் விவரங்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Abolition_of_slavery_timeline]

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்த நிலப்பகுதிகளில் 1843 இல் சட்ட பூர்வமாக ஒழிக்கப்பட்ட அடிமை முறை அடுத்த நூறாண்டுகள் வரை கூடப் பல வடிவங்களில் தொடர்ந்து உலகின் பல நாடுகளில் இருந்திருக்கிறது.

5 Comments »

 • lavanya said:

  நல்ல கட்டுரைத் தேர்வு. இந்த தலைமுறையினருக்கு மனிதர்கள் இப்படியெல்லாம்
  துன்ப்பட்டிருக்கிறார்கள் எனபது தெரியவேண்டியது அவசியம்

  # 13 March 2014 at 12:07 am
 • Velmurugan said:

  வன்னிய இனத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகளில் 23.0 சதவீதம் பேரும், நெசவாளர்களான கைக்கோலார்களில் 10.1 சதவீதம் பேரும், தாழ்த்தப்பட்ட மக்களில் 8 சதவீதம் பேரும் – வெள்ளை யானை என்ற புனைவு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினோர் தாழ்த்தப்பட்டவர்கள் எனச் சொல்கிறது. இந்தக் கட்டுரை இப்படிச் சொல்வதை யாரேனும் சரி பார்த்தார்களா?

  # 13 March 2014 at 9:36 am
 • அரங்கா said:

  அன்று வன்னியர் நாடார் சாதிகள் நிலமற்ற , தலித்துகளை விட ஒரு குன்றிமணி அளவு மேலே இருந்த சாதிகள் , அடிமை வணிகம் மூலம் விற்கப்பட தமிழர்களில் பெரும்பாலானவர்கள் வன்னியர்களும் தலித்துகளுமே (மேற்கு ஆப்ரிக்கா , மலேசியா , இலங்கை )

  பொதுவாக கோவை 300 வருடத்துக்குட்பட்ட குடியேறிகளால் ஆனது , எனவே தலித்துகள் இங்கே குறைவே – அன்றும் இன்றும் , எனவே இறப்பு குறைவாக இருக்கலாம்.

  # 15 March 2014 at 12:28 am
 • Siva said:

  படிக்கும் போதே நெஞ்சமெல்லாம் வலிக்கிறது. இத்தனைக் கொடிய காலத்தைக் கடந்துதான் என் முன்னோர்கள் என்னைக் காப்பாற்றி இன்றைக்கு நல்ல வசதியாக வாழ வழி செய்துள்ளார்கள் என நினைக்கும் போது அவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என என்னை நானே கேள்வி கேட்கிறேன். இந்த நன்றி உணர்வைத் தூண்டிய ஆசிரியருக்கு நன்றி.

  # 24 March 2014 at 3:05 am
 • perumalswami said:

  இன்றைய கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் கஞ்சி தொட்டி வைத்து பஞ்சம் பாதித்தவர்களுக்குக் கஞ்சி வழங்கி இருக்கிறார்கள். அதனாலேயே அதனை `கஞ்சி தொட்டி ஆஸ்பத்திரி` என்று சொல்வது சென்ற நூற்றாண்டில் இருந்துள்ளது.

  # 16 July 2014 at 3:55 am

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.