kamagra paypal


முகப்பு » இயற்கை விவசாயம்

மண்புழு உறவு – நம் வழி வேளாண்மை

நம் வழி வேளாண்மைக்கும் மண்புழுவுக்கும் உள்ள உறவு நித்தியமானது. இங்கு நான் குறிப்பிடப்போகும் விஷயம் சென்னையிலிருந்து ஓய்வு பெற்றதும் நம் வழி வேளாண்மை பத்திரிக்கை நடத்தும் திரு பி.விவேகானந்தனிடம் நான் பெற்ற பல பயிற்சிகளில் மண்புழு வளர்ப்பில் அடைந்த வெற்றிக்கதையும் உள்ளடக்கம். சென்னையிலிருந்தபோது மண்புழு மாஸ்டர் முகமது இஸ்மாயில், புதுக்கல்லூரி உயிரியல் பேராசிரியர், மண்புழு வளர்ப்பைப் பற்றிய பயிற்சி வகுப்புக்கு அப்போது திருவான்மியூர் காமராஜ் அவென்யூவில் அமைந்திருந்த இந்திய பாரம்பரிய அறிவியல் மைய அலுவலகத்தின் பின்புறம் தேர்வானது. 
 
1994-95 காலகட்டத்தில் மண்புழுவைப் பார்ப்பதே அபூர்வம். அவர் சொல்லிக் கொடுத்த வழி விவசாயிகளால் கடைபிடிக்கப்படக்கூடியதாக இல்லாவிட்டாலும், 1996-ல் பணி ஓய்வு பெற்றதும் அவரிடம் மண்புழு பெற்று வளர்க்கலாம் என்று சென்றபோது மண்புழு வழங்க மறுத்துவிட்டார். நீங்கள் வாழுமிடங்களில் உள்ள ஏரி, குளங்களுக்குச் சென்று சேகரித்து வளர்க்கவும் என்று புத்திமதி சொன்னார். அவர் பதில் சற்று அவமானமாகவே எனக்குப் பட்டது. பரவாயில்லை, என் ஆர்வத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை. பிற்காலத்தில் ஒரே மேடையில் அவருடன் நானும் உரையாற்றும் காலம் வரும் என்று அப்போது எதிர்பார்க்கவில்லைதான். 
Manpuzhu
 
என் மண்புழு ஆர்வம் அடங்கவில்லை. மண்புழு வளர்ப்பில் நானே மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் நிலை வந்தபோதும் டாக்டர் இஸ்மாயிலிடம் இன்று வரை பழைய விஷயத்தை நினைவுபடுத்தவில்லை. மண்புழு விஷயத்துக்குப் பின்னர் வரலாம்.
 
1991-ல் தொடங்கப்பட்ட நம் வழி வேளாண்மை என்ற காலாண்டு இதழ் இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை வழங்கி வருகிறது. இயற்கை விவசாயம், அடிமட்ட கண்டுபிடிப்பாளர்களின் அறிமுகம், கால்நடை வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்களைத் தொகுத்து வழங்குகிறது. தரிசு நில மேம்பாட்டுத் திட்ட அடிப்படையில் மரவளர்ப்பு, மகளிர் மேம்பாடு போன்ற பணிகளையும் சேவா என்ற பெயரில் மதுரை மாநகரில் ஒரு தொண்டு நிறுவனத்தையும் விவேகானந்தன் நடத்துகிறார். அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் பேராசிரியர் அனில் குப்தா அமைத்துள்ள சிருஷ்டி என்ற அமைப்பின் உதவியையும் விவேகானந்தன் பெறுகிறார். 
 
அனில் குப்தாவின் “ஹனி பீ” காலாண்டு இதழின் தமிழ் வடிவமே நம் வழி வேளாண்மை. மதுரைக்குச் சென்று விவேகானந்தனிடம் எனது பணி பற்றி கேட்டபோது பெரிய தொகையை சம்பளமாக எதிர்பார்க்காமல் பணியாற்றலாம் என்றார். அம்பாத்துரையிலிருந்து மதுரை, பின்னர் மதுரையில் சேவா அலுவலகம் அமைந்துள்ள  விராட்டிப்பத்து வரை வந்து செல்லும் பயணச்செலவு கவனிக்கப்பட்டால் போதும் என்றேன். இரண்டாயிரம் ரூபாய் தருவதாகச் சொன்னார். காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண்மை – கால்நடை வளர்ப்புத் துறையுடன் தொடர்பு கொள்வதும் கிராமங்களில் விவசாயிகள் கடைபிடிக்கும் தொழில்நுட்பங்கள் தொகுப்பதும் பணிகள் என்று கூறினார். 
பேராசிரியர் அனில் குப்தா

பேராசிரியர் அனில் குப்தா

 
இந்த முறையில்தான் காந்தி கிராம பல்கலைகழகத்தின் அப்போதைய விவசாயத்துறை தலைமை பேராசிரியர் டி. ரங்கநாதன் அறிமுகமானார். டி. ரங்கநாதனும் பி.விவேகானந்தனும் ஒன்றாகப் படித்தவர்களும்கூட. டி. ரங்கநாதனிடம் பேசியபோது மக்கள் பங்கேற்பு வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஃபோர்டு அறக்கட்டளை நிதி மிச்சமிருப்பதாகவும் அதை இயற்கை விவசாய மேம்பாட்டுக்குச் செலவிடலாம் என்றும் தெரிவித்தார்.
 
எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நம் வழி வேளாண்மையில் விவசாயத் தொழில்நுட்பம், கால்நடை பராமரிப்பு குறித்த துக்கடாச் செய்திகளை ஒழுங்குபடுத்தி நூலாக வெளியிடலாம் என்று கூறி 1991-லிருந்து 1996 வரை வெளிவந்த நம்வழி வேளாண்மையில் 273 தொழில்நுட்பச் செய்திகளை ஒழுங்குபடுத்தி இயற்கை விவசாயத்தில் 13 தலைப்புகளின்கீழ் (உதாரணம்- மண்வளம், இயற்கை உரம், விதை நேர்த்தி, களை நிர்வாகம், பயிர் பாதுகாப்பு, வன வேளாண்மை, இயற்கை பண்ணைகள் போன்றவை) ஒருங்கிணைத்து வழங்கினேன். கால்நடை பராமரிப்பிலும் அவ்வாறே.
 
இவ்வாறு தொகுக்கும் பணியே ஒரு மாதம் ஆனது. இம்முறையில் வெளிவந்த நூல், “இயற்கை வேளாண்மை உத்திகளும் கால்நடை பராமரிப்பும்“. வெளியீடு, சேவா, விராட்டிப்பத்து, மதுரை 10. அண்டு 1997. இக்காலகட்டத்தில்தான் மாடியில் பூந்தொட்டிகளை வைத்து காய்கறி சாகுபடி தொடங்கப்பட்டது. இதை ஒரு புதிய கண்டுபிடிப்பு என்று பாராட்டிய பி.விவேகானந்தன் ஆண்டுதோறும் புதிய கண்டுபிடிப்பாளர்களை கௌரவிக்கும் அனில் குப்தா கூட்டும் அகமதாபாத் கருத்தரங்குக்குச் செல்லுமாறு தூண்டினார்.
 
அப்போது சில குடும்ப பிரச்சினைகளினால் அகமதாபாத் செல்ல நான் ஒப்புக்கொள்ளவில்லை. மூன்று மாதங்களுக்கு மேல் மதுரை சேவா அலுவலகத்துக்கும் தொடர்ந்து செல்ல முடியவில்லை. விலகிக் கொண்டேன். எனினும், பி.விவேகானந்தனுடன் நம் வழி வேளாண்மையில் இணைந்து பணிபுரிந்ததன் விளைவாக டி.ரங்கநாதன், இயற்கை விவசாயிகளான புளியங்குடி கோமதிநாயகம், அந்தோணிசாமி, சத்தியமங்கலம் சுந்தரராம ஐயர், கொடுமுடி டாக்டர் நடராஜன் ஆகியோரின் நட்பு கிட்டியது. மதுரை நம் வழி வேளாண்மையினால் நான் பெற்ற மற்ற நன்மைகளில் மண்புழு வளர்ப்பு, சுரபாலர் விருட்சாயுர்வேத வெளியீடுகள் முக்கியமானவை. முதலில் மண்புழு வளர்ப்பை கவனிக்கலாம்.
 
1996-97 காலகட்டத்தில் மண்புழுவின் மகிமையைப் பற்றி யாருமே அறிவாரில்லை. கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவில் நார்டெப் விவசாய தொழில்நுட்ப மையத்திடமிருந்து விவேகானந்தன் 50, 60 மண்புழுக்களுடன் 4, 5 கிலோ மண்புழுக் கழிவையும் கொண்டு வந்திருந்தார். ஆர்வமிகுதியால் அவரிடம் அந்தப் புழுக்களில் சிலவற்றைக் கேட்டேன். எப்படி வளர்ப்பது என்றும் அவர் கற்றுக் கொடுத்து 5 புழுக்களுடன் அரை கிலோ கழிவையும் ஒரு சிறு பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டுக் கொடுத்தனுப்பினார்.
 
மதுரையிலிருந்து பெற்ற அப்பரிசை கவனமுடன் பெருக்கி விருத்தியாக்க விவேகானந்தன் கூறியபடி நிழலான இடத்தில் 3’x2’x½’ படுகை அமைத்தேன். ½ அடி ஆழம், 3 அடி நீளம், 2 அடி அகலம் – குழி எடுத்து சாணியை நிரப்பினேன். பின் பரவலாக மண்புழுக் கழிவையும் புழுக்களையும் விட்டு உலர்ந்த இலைச்சருகுகளை மூடி ஓலையுடன் கூடிய தென்னை மட்டையைத் துண்டாக்கி இலைகள் பறக்காதபடிக்கு மேலே போட்டு தினமும் நீரூற்றி வளர்த்து வந்தேன்.15 நாட்களில் குழியில் இட்ட சாணிகள் எல்லாம் மண்புழுக் கழிவுகளாக மாறின. 5 புழுக்கள் 100 புழுக்களாக அதிகரித்தன. கழிவுகளையும் புழுக்களையும் இடமாற்றம் செய்து எடுத்த இடத்தில் பழையபடி சாணியிட்டு சருகுகளால் மூடினேன். கீழே சென்ற புழுக்கள் மேலே வந்து அவ்வளவு சாணிகளையும் தின்றன. ஒரே ஆண்டில் என் வீட்டின் கீழ்ப்பகுதியில் லட்சம், கோடி என்ற அளவில் பெருகின.
 
இரண்டு தென்னை மரம், பன்னீர் என்று கூறப்படும் காட்டுமல்லி, பாரிஜாதம், சந்தனம், சப்போட்டா என்று வீட்டைச் சுற்றியுள்ள அனைத்து மரங்கள், செவ்வரளி, செம்பருத்தி போன்ற குறுமரங்கள் அடியிலும் புழுக்கள், புழுக்கள், புழுக்கள்! ஐந்து வருட சேமிப்பு. ஐந்து லட்சம் புழுக்கள் உள்ள நர்சரியாக என் வீடு மாறியது. மரத்தடிதான் மண்புழுக்களின் புகலிடம்.எனக்கு புழு வழங்கிய விவேகானந்தனுக்கு வெற்றி கிட்டவில்லை. நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில்தான் மண்புழு வளர்ப்பை முயற்சித்தோம்.
 
ஒரு காலகட்டத்தில் நன்கு வளர்ந்த ஒரு மண்புழு ஒரு ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டது. எனக்கு இந்த விவரமெல்லாம் தெரியாது. எல்லாருக்கும் இலவசமாக வழங்கினேன். 2001-ல் சத்தியமங்கலம் சுந்தரராமன் என் வீட்டுக்கு வந்தார். என்னிடமிருந்து புழுக்களைப் பெற்றுக் கொண்டு யாருக்கும் புழுக்களை இலவசமாக வழங்காதீர்கள், அவர்கள் அதன் மதிப்பும் தெரியாமல் வளர்க்கவும் தெரியாமல் அவற்றை சாகடித்து விடலாம் என்றுகூறி எனக்கு பணம் தர முன்வந்தார். இனி எச்சரிக்கையாக இருப்பேன் என்று பதிலளித்தேன்.
 
இந்த காலகட்டத்தில்தான் மதுரை காதி கமிஷன் மண்புழு வளர்ப்பில் கவனம் செலுத்தி அதையும் ஒரு குடிசைத் தொழிலாக அங்கீகரித்து தொழில் ரீதியான மானியம் வழங்க முன்வந்தது. ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் 50000 ரூபாய்க்கு மானியம் உண்டு. தொழிற்கூடம், நீண்ட தொட்டி, மண்புழு, குழாய், ஸ்ப்ரிங்க்ளர் என்று தேவையான சாதனங்கள் பெற குறைந்தவட்டிக் கடனும் வழங்கப்பட்டது. இப்படிப்பட்ட திட்டமெல்லாம் வருவதற்கு முன்பே அதிக முதலீடு இல்லாமல் முட்டுப்படுக்கை மூலம் – அதாவது சாணியை நீண்ட குவியலாகப் போட்டு அதன்மீது புழுக்களை விட்டு தினமும் ஸ்ப்ரிங்க்ளர் மூலம் தண்ணீர் தெளிக்கும்போது மண்புழு எண்ணிக்கை துரிதமாக அதிகரிப்பது கண்டறியப்பட்டது. நிழல் இல்லாத இடத்தில் கொட்டகை அமைக்கலாம். காதி கமிஷன் நெறிமுறைகளுக்காக கட்டுமானம் கட்டியவர்கள் தொட்டி முறையைத் தவிர்த்துவிட்டு நான் கூறியபடி திறந்தவெளியில் முட்டுப்படுக்கை போட்டு உற்பத்தியைப் பெருக்கினர்.
 
காந்திகிராமத்தில் இரண்டு அமைப்புகள் உண்டு ஒன்று காந்தி கிராம அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையின்கீழ் கதர் துணி உற்பத்தி, சோப்பு, கைக்குத்தல் அரிசி, காந்திகிராம அங்காடிகள், குழந்தைகள் விடுதி, கஸ்தூரிபாய் மருத்துவமனை, சித்த – ஆயுர்வேத மருந்துகள் உற்பத்தி செய்யும் லட்சுமி சேவா சங்கம், சேவிகாஸ்ரமம், தம்பித்தோட்டம் உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி எல்லாம் அடக்கம். அறக்கட்டளையின் பொறுப்பில் விவசாய நிலமும் ஆதிலட்சுமிபுரம், செட்டியப்பட்டி ஊர்களில் உண்டு.
 
இரண்டாவது அமைப்பு காந்திகிராம கிராமிய பல்கலைகழகம். எல்லா கல்லூரிகளிலும் உள்ளதுபோல் பி.ஏ., பி.காம்., பி.எஸ்.ஸி., எம்.ஏ., எம்.எஸ்.ஸி. படிப்புகள் உண்டு. காந்தியைச் சிந்தனை, வேளாண் கல்வியும் உண்டு.
 
அம்பாத்துரையில் என் தமையனாருடன் நான் ஒன்றாக வசித்து வந்ததாலும் என் தமையனார் எம்.ஆர். ராஜகோபாலன் காந்திகிராம அறக்கட்டளையின் செயலாளராக இருந்து வந்ததாலும் விவசாய வேலைகளை கவனிக்கும்படி அப்போது காந்திகிராம அறங்காவலராக இருந்த டாக்டர் கௌசல்யா தேவி கேட்டார். கவுரவ வேலைதான். சம்பளம் கிடையாது. சம்பளத்திற்கு வேலை செய்யும் ஆசையும் எனக்கு இல்லை. ஆனால் அங்குள்ள அரசியல் என்னை யோசிக்க வைத்தது. என் மனைவிக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை. பல தடவை வற்புறுத்தப்பட்டேன். என் மனைவியும் சம்மதித்தபின்பு அங்கு இயற்கை விவசாயத்திற்கு அடித்தளமாக மண்புழு வளர்ப்பைத் துவங்கினேன். பின்னர் மண்புழு வளர்ப்பை கிராமங்களில் விஸ்தரிக்கும் கபார்ட் திட்டம் தொடங்கப்பட்டது. கபார்ட் என்றால் Council for Advancement of People Action and Rural Technology. நான் மண்புழு வளர்ப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டேன்.
  
காந்திகிராமத்தைச் சுற்றியுள்ள பத்து கிராமங்களில் நூறு விவசாயிகளுக்கு 10’x3’x2′ அளவில் தொட்டி கட்டித் தரப்பட்டு அதில் சாணி நிரப்பி புழு விடும் பணி தொடங்கியது. என்னிடம் நூறு தொட்டிகளுக்கும் புழு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இலவசமாக வழங்கி வந்திருந்த நான் கபார்ட் திட்டம் வரும் முன்பே சுந்தரராமன் யோசனைப்படி அங்காடியை அனுசரித்து சிறிது குறைந்த விலைக்கு புழு விற்பனை செய்து வந்தேன். காந்திகிராமத்தைச் சுற்றி இருந்தவர்களில் என்னளவுக்கு எவரிடமும் புழு விற்பனை கிடையாது. கபார்ட் திட்டத்திற்கு அங்காடி விலையை அனுசரித்து கிலோ ரூ.600/-க்கு விற்றேன். கபார்ட் திட்டத்திலிருந்து அங்காடி விலையைப் பெற்றுக் கொண்டு இதில் ரூ.300/-ஐ காந்திகிராமம் குழந்தைகள் விடுதி நலனுக்கு நன்கொடை வழங்கினேன்.
 
மொத்தத்தில் கபார்ட் திட்டத்தின்கீழ் சுமார் நூறு கிலோ வரை வாங்கினார்கள். இதில் ரூ.30000/- எனக்கும் என் நன்கொடையாக ரூ.30000/- குழந்தைகள் விடுதிக்கும் சென்றிருக்கலாம். ஆனால் எனக்கு இது மன நிறைவளிக்கவில்லை. 100 பயனாளிகளில் நான்கைந்து நபர்கள் நீங்கலாக மற்றவர்கள் முனைப்புடன் மண்புழு வளர்ப்பில் ஈடுபடவில்லை. திட்டம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது பயனாளிகள் அத்தொட்டிகளை விறகு மற்றும் கண்டா முண்டா சாமான்களை நிரப்பி வைத்துக் கொள்ளவுமே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். சுந்தரராமன் கூறியது சரியே. இலவசமாக வரும்போது மண்புழு வளர்ப்பில் ஆர்வம் ஏற்படாது.
 
எனினும் என்னுடைய வளர்ப்பு முறையை காந்திகிராமத்தில் உள்ள லெட்சுமி சேவா சங்க ஆயுர்வேத மருந்தகத்திலும் ஆதிலட்சுமிபுரத்தில் உள்ள மூலிகைத் தோட்டத்திலும் செயல்படுத்தி அவர்களையே விற்பனையாளர்களாக மாற்றி எனது விற்பனையை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டேன். பின்னர் எனக்கென்று சொந்தமாக ஒரு தென்னந்தோப்பு வாங்கியதும் புழு விற்பனையை முற்றிலுமாக நிறுத்தி விட்டேன். 
 
இதற்கு மது ராமகிருஷ்ணனே காரணம் என்றும் சொல்லலாம். இவருக்கு ஐம்பது ஏக்கர் பண்ணை ஆளியாறுக்கு அருகில் உள்ளது. இவரது பண்ணைக்குச் சென்றபோது அங்கு ஒரு அறிவிப்புப் பலகை தொங்கியது – “மண்புழு, மண்புழு உரம் – விற்பனைக்கு இல்லை” என்று. மது ராமகிருஷ்ணன் பெருமைக்குரிய ஒரு துவக்ககால இயற்கை விவசாயி.
 
மண்புழு வளர்க்கத் தொடங்கிய 1997 முதல் 2006 வரை பலராலும் நான் “மண்புழு” என்று அழைக்கப்பட்டேன். மற்றவர்கள் என்னை அடையாளப்படுத்தும்போது, “யார்? மண்புழுவா?” என்று சொல்லி என்னைப் புரிந்து கொள்வார்கள். இதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. “இயற்கை விவசாயி” என்று கூறிக்கொள்வதில் உடன்பாடு உண்டு. அதற்குத் துணையாக ஆதிலட்சுமிபுர மூலிகைப் பண்ணையில் நான் விவசாயம் செய்த அனுபவத்தை அடுத்து கவனிப்போம்.

One Comment »

  • அசோக் said:

    நான் இந்த செய்தி படித்ததில் மகிழி அடைந்தேன்

    # 10 November 2014 at 3:24 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.