அசோகமித்திரனின் கதையுலகில் பெற்றோரும் பிள்ளைகளும்

1 ஜூன் 7 2014 அன்று சென்னையில் நடைபெற்ற ’அசோகமித்திரனை வாசித்தல்’ கருத்தரங்கின் காலை அமர்வில் வாசித்த கட்டுரை.

அனைவருக்கும் வணக்கம்.

கருத்தரங்கின் தேவை

அசோகமித்திரனை வாசித்தல்” என்ற கருத்தரங்கின் தேவை பற்றிய என் பார்வையிலிருந்து இந்தக் கட்டுரையைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அசோகமித்திரன் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவர்; ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக படைப்புத்தளத்தில் செயல்பட்டுக்கொண்டிருப்பவர். அவர் இயற்றியிருக்கும் புனைவிலக்கியத்தை மட்டும் கருதுவோமேயானால் தோராயமாக 300 சிறுகதைகளையும் பத்து நாவல்களையும் எழுதியிருக்கிறார்; தமிழ்ச் சூழலில் மூன்று தலைமுறை வாசகர்களையும் பெற்றிருக்கிறார். ஆனால், நானறிந்தவரையில் அவருடைய படைப்புகளைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் விமர்சனங்கள் பெரும்பாலும் ரசனையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. சிலர் அசோகமித்திரனின் கதைசொல்லும் பாணியைப் பற்றியும், வேறு சிலர் அவருடைய வாழ்க்கைத் தத்துவம் என்று தாங்கள் புரிந்துகொண்டதன் அடிப்படையிலும் தத்தம் மதிப்புரைகளை எழுதியிருக்கின்றனர். கதை சொல்லும் பாணி, மொழி, நடை இவற்றில் மரபார்ந்த பாணியிலிருந்து விலகி தனக்கென ஒரு புதுப்பாதையை அமைத்துகொண்டிருக்கும் எழுத்தாளர் குறித்து இவ்வகை சிலாகிப்புகள் எழுவது எதிர்பார்க்கக்கூடியதே, எனினும், அசோகமித்திரனை அவர் வாழ்ந்து வருகிற காலத்துடனும் அக்கால இடைவெளியினூடே ஏற்பட்டு வருகிற மாற்றங்களுடனும் தொடர்புபடுத்தி எழுதப்படும் விமர்சனங்கள் அரிதாகவே காணக் கிடைக்கின்றன. விமர்சனமென்பது வாசகனுடைய பார்வையைக் கூர்மைப்படுத்தி அதன் எல்லைகளை விரிவுபடுத்துவது. படைப்புகள் வாசகனுக்களிக்ககூடிய சாத்தியங்கள், விமர்சனத் துறையின் சுணக்கத்தால் முடக்கப்பட்டுவிடலாகாது. எனவே, புதிய விமர்சன அணுகுமுறைகளையும் பார்வைகளையும் முன்வைக்கும் கருத்தரங்குகளின் தேவை இன்று தீவிரமானது. இத்தகைய வாசித்தலுக்கான எத்தனங்கள் அசோகமித்திரனுக்கு மட்டுமல்ல, தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலருக்கும் தேவைப்படுகிறது என்பது எம் எண்ணம். இந்தக் கருத்தரங்கையும் இவ்வகை முயற்சிகளில் ஒன்றாகப் பார்க்கலாம்.

பொதிந்திருக்கும் வரலாறு

ஜெயமோகன் ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பார், அசோகமித்திரனின் கதை சொல்லும் பாணி, வாழ்க்கையின் இயல்பான தருணத்தை மொழியில் கைப்பற்றுவது என்பதாக. இது உண்மைதான். அசோகமித்திரன் மனவோட்டங்களை எழுதினாலும் பொருண்மையான உலகின் இருப்பையே எப்போதும் முதன்மைப்படுத்துவார். இதுதான் நம் உண்மையான அனுபவமும் கூட. நம் மனப்பிராந்தி, அச்சம், பதட்டம், குரோதம், பகற்கனவு இவையனைத்தையும் மீறி இந்த உலகம் சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. இந்த யதார்த்தம் நாம் தவிர்க்கக்கூடியதல்ல. யதார்த்த உலகுடன் அசோகமித்திரனின் கதைகள் கொண்டுள்ள அமைதியான, அசைக்கமுடியாத பிணைப்பின் மூலமே அசோகமித்திரனின் புனைவுலகம் அன்றாடத்துக்கு அப்பால் செல்வதில்லை என்பது போன்ற மனப்பதிவு வாசகனிடம் ஏற்படுகிறது. எதார்த்த உலகின்மீதான கவனத்தை எத்தருணத்திலும் சிதறவிடாமலிருப்பது, படைப்பாளியின் தீவிரமான மனவடக்கமன்றி வேறல்ல. ஆனால் அவர் விவரிக்கும் தருணங்கள் நிகழும் உலகத்தின் மேற்பரப்பை மட்டுமே சுட்டுவது எனும் பார்வை பிழையானது. “Eternity is contained in the moment”என்பார்கள். பயிற்சி பெற்றவர்களுக்கு, அவருடைய கதைத் தருணங்களில் பொதிந்திருக்கும் வரலாறும், சமூக அமைப்பும் அரசியலும் தெரியவரும்.

இதை இன்னொரு வழியிலும் கண்டுகொள்ளலாம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அசோகமித்திரன் தன் கதைகளைப் பற்றி இவ்வாறு கூறியிருக்கிறார்: ’நான் இதுவரை எழுதியுள்ள கதைகளைப் பார்க்கும்போது நான் மாறிவரும் பாத்திரங்களையும் நிகழ்வுகளையும் கொண்ட ஒரு நீண்ட கதையைத்தான் எழுதிவருகிறேனோ என்று தோன்றுகிறது.’ அவருடைய நெடுநாள் வாசகன் என்ற முறையில் இது என்னளவில் உண்மையென்றே உணர்கிறேன். ஒட்டுமொத்தமாக அசோகமித்திரன்னின் புனைவுலகம் அவர் வாழ்ந்துவரும் காலத்தையும் அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களையும் தொடர்ந்து கவனப்படுத்துகிறது. இந்த தொடர்ச்சியில்தான் நாம் அந்த மனிதர்களின் வரலாற்றுப் பின்புலத்தையும் சமூக, பண்பாட்டுப் பின்புலத்தையும், அவற்றிலிருந்து எழும் மனப்பாங்கையும் புரிந்துகொள்கிறோம். இந்தக் கண்ணோட்டத்தில் அசோகமித்திரனின் சில படைப்புகளையும் அவற்றில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையேயான உறவுகளின் சித்தரிப்பையும் முன்வைத்து நமக்குத் தெரியவரும் உண்மைகளை இந்தக் கட்டுரை பேசும்.

பெற்றோர்களும் பிள்ளைகளும் – உறவின் பல்வேறு பரிமாணங்கள்

a.miஅசோகமித்திரனின் புனைவுலகம் கணக்கற்ற மனிதர்களாலும் அவர்களுடைய வாழ்க்கையில் நிகழக்கூடிய சம்பவங்களாலும் ஆனது. இவ்வுலகில் ‘பெற்றோரும் பிள்ளைகளும்’ என்ற திரியை தேர்ந்தெடுத்தது ஏன் என்று உங்களில் சிலர் கேட்கலாம். குடும்ப அமைப்பு என்பது இடம், குழுவுக்கேற்ப வேறுபடக்கூடியது என்றாலும் உலகெங்கும் வாழும் மனிதகுலத்துக்கே பொதுவான அம்சம். இதற்கென்று சில இயல்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஒரு மனிதப் பிறவி சமூக அதிகாரத்துக்கு பழக்கப்படுவதே குடும்பச் சூழ்நிலையில்தான். குடும்பத்தில் தந்தை அதிகாரத்தின் பிரதிநிதியாக இருந்து தன் பிள்ளையான மனித உயிரிக்கு இயல்பாக இருக்கக்கூடிய கட்டற்ற இச்சையை மட்டுப்படுத்தி நாகரிக உலகுக்கு பொருத்தமான நபராக மாற்றுகிறார். ’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ எனும் முதுமொழி இந்த அதிகாரத்தைத்தான் வலியுறுத்துகிறது. அதே சமயம், தன் பிள்ளை சுயமாக பிழைப்பதற்கான திறனை வளர்த்துக்கொள்ளும்வரை அவனுக்கு வாழ்க்கையின் அடிப்படையான தேவைகளையும் உலகில் முன்னேறுவதற்கான ஆயத்தங்களான கல்வி, தொழில் பயிற்சி போன்ற தேவைகளையும் தந்தையே தன்னாலியன்றவரை நிறைவேற்றுகிறார். இதனால்தான் மரபார்ந்த சமூகத்தில் பெற்றோரற்ற அனாதைகள் அனுதாபத்துக்குரியவர்களாக கருதப்படுகின்றனர். அருமையாகவே பெற்று ஒருமையுடன் வளர்த்த தந்தை தாய் இருந்தால் இவ்வுலகத்தில் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா?’என்பது பாடல்.

உடைமைச் சமூகத்தில் தந்தைக்கு இருக்கக்கூடிய பொருண்மை வளங்களும் சமூக அந்தஸ்தும் மகனுக்குரியதாக கையளிக்கப்படுகின்றன. ஒரு சமூகத்துக்குரிய பண்பாட்டுக் கருவூலத்தையும் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய நியதிகளாகக் கருதப்படும் நம்பிக்கைகளின் தொகுப்பையும் அடுத்த தலைமுறைக்கு அளிப்பது பெற்றோர்கள் மூலமாகவே நடக்கிறது. எதற்கும் மேலாக, மன ஆரோக்கியத்துடன் வாழ்க்கையைத் தொடங்கும் நபராக ஒரு மனிதப் பிறவி பரிணமிக்கத் தேவையான அன்பும் ஆதரவும் கிடைக்கப்பெறும் முதன்மையான இடம் குடும்பமேயாகும்.

இறுதியாக, எங்குமே தந்தைக்கும் மகனுக்கும் இயல்பாகவே முரண்பாடுகள் எழுவதைப் பார்க்கலாம். மேற்கத்திய சிந்தனை மரபு இது தொடர்பாக ஈடிபஸ் தொன்மத்தை அடிப்படையாகக் கொள்கிறது. நம் புராணங்களோ நிபந்தனையற்ற கீழ்ப்படிதலையே வலியுறுத்துகின்றன. ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பதும் வழக்கு. தன் தந்தையின் இளமையை நீட்டிக்க, யயாதி தன் இளமையை பலி கொடுக்கிறான். தன் தந்தை மாற்றாந்தாய்க்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற இராமன் காட்டுக்குப் போகிறான். ஒரு நிலவுடைமைச் சமூகத்தில் இந்த கேள்வியற்ற கீழ்ப்படிதல் ஒரு ஆதார நியதியாக தொடர்ந்து வந்தது. இனக்குழுக்களுக்குள்ளும் அவற்றிற்கிடையேயும் நிலவிய அதிகாரப் படிநிலை உறவுகளைப் பேணிவருவதற்கு இவ்வகை குடும்ப நியதிகள் பெருமளவில் உதவின.

இந்த நியதிகளில் பரவலான மாற்றம் நவீனத்துவத்தின் அறிமுகத்தையொட்டி நிகழ்ந்தது. நவீனத்தின் அடிப்படை கோட்பாடான தனி நபரின் செயல்பாடு (agency) குடும்ப தளத்தில் அதிகாரக் கட்டமைப்பை உலுக்கியது. சமூகத்தில் பல பிறழ்வுகளையும் சிதைவுகளையும் உண்டாக்கியது. இவற்றைத்தான் நாம் அசோகமித்திரனின் புனைவுலகில் சந்திக்கிறோம்.

கதை மாந்தர்களின் பின்புலம்

அசோகமித்திரன் தன் வாழ்க்கையை வேளாண்மைச் சமூகத்திலிருந்து புலம்பெயர்ந்து நகர்ப்புறத்தில் உத்தியோகம் பார்த்துப் பிழைக்கும் ஒரு பிராமண குடும்பத்தில்தான் தொடங்கினார். தன் இருபத்தோராவது வயதில் சென்னைக்கு வந்து குடியேறிய பிறகும் இப்படிப்பட்ட குடும்பங்களுக்கு மத்தியிலேயே தன் வாழ்க்கையை நடத்தினார். அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட மனிதர்களும் நிகழ்வுகளுமே அவர் படைப்புகளிலும் இடம்பெற்றன.

ஐம்பதுகளில் சென்னையில் குடியிருந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஆண்களில் கணிசமானவர்கள் பலவிதமான குழப்பங்களுக்கு ஆளாயிருந்தனர். உழைப்பு தேவைப்படாத உடைமைச் சமூகத்தையும் அதன் சிறப்புரிமைகளையும் மட்டுமே அனுபவித்திருந்த அவர்களுக்கு ஒரு அலுவலகத்துக்குப் போய் உத்தியோகம் பார்க்கும் மனக்கட்டுப்பாடு இலேசில் வரவில்லை. பலர் வேறு வழியில்லாமல் ஒழுங்கற்ற வாழ்க்கை முறையை பின்பற்றினார்கள். நிரந்தரமான வேலையின்றி, தங்களுக்கேற்ற உதிரித் தொழில்களைச் செய்யத் தொடங்கினார்கள். உழைக்காமல் பொருளீட்ட இரேசுக்குப் போனார்கள்; சீட்டாடினார்கள். நவீனத்துக்குள் அதன் விதிமுறைகளுக்கு கீழ்ப்பட்டுத்தான் நுழையமுடியும். வேறெங்கோ வளர்க்கப்பட்டு அந்த எச்சத்தை ஏந்திக்கொண்டிருந்தவர்களை நவீன உலகம் பொறுப்பற்றவர்கள் என்று புறக்கணித்து கீழே தள்ளியது.

ஒழுங்காக வேலைக்குப் போகக் கற்றுக்கொண்டவர்களுக்கோ வேறுவிதமான பிரச்சினைகள் எழுந்தன. கூட்டுக் குடும்பத்தின் அரவணைப்பு தந்த பாதுகாப்பை அனுபவித்தவர்களுக்கு நகரத்தில் தன்னந்தனியாகக் குடித்தனம் நடத்தும் பொறுப்பை ஏற்கவேண்டும் என்பது தாங்கமுடியாத சுமையாக இருந்தது. எனவே அடிப்படையான இயலாமை உணர்வு இவ்வகை ஆண்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தது. இந்த இயலாமையை எதிர்த்துப் போராடும் இயல்பு அவர்களிடம் இல்லாதது வியப்புக்குரியதல்ல. தினந்தோறும் வேலைக்குப் போய் பொருளீட்டும் இயந்திர வாழ்க்கைக்கப்பால் இவர்கள் எவ்விதமான முன்னெடுப்பும் இன்றி உயிர்ப்பற்று வாழ்ந்தனர். தாங்கள் விட்டுவந்த கிராமத்தில் நிலபுலன்களை உடைமையாகக் கொண்டிருந்தவர்கள் இன்னும் தெம்புடன் நவீன யுகத்தில் பிரவேசித்திருக்கமுடியும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இந்த குழப்பமும் பிறழ்வும் இயலாமையும் தவிர்க்கமுடியாதவையாக இருந்தன.

கூட்டுக் குடும்பத்தில் ஒரு ஆணின் பொறுப்பின்மையால் அவனுடைய பிள்ளைகளுக்கு ஏற்படும் இழப்புகள் குடும்பத்தின் பொதுச் சொத்தான வளங்களாலும் மற்ற உறுப்பினர்களாலும் ஈடு செய்யப்பட்டன. நகர்ப்புறத்திலோ, அந்த வாய்ப்பே கிடைக்காமல் பல இளைஞர்கள் தங்கள் சாத்தியங்களை இழந்தனர். இது ஒருவிதத்தில் அவர்களை தனிநபர்ச் செயல்பாட்டை மையப்படுத்திய நவீனத்துக்குத் தள்ளியது என்றாலும் இந்த நிலைமை சமனடைய இன்னொரு தலைமுறைக்கால இடைவெளி தேவையாக இருந்தது. ஆண்பிள்ளைகளுக்கு தந்தையின் இருப்பு இன்றியமையாத தேவை. உலகையும் வாழ்க்கையையும் எதிர்கொள்ளும் தெம்பை அவர்கள் தந்தையின் முன்மாதிரியிலிருந்தே பெறுகிறார்கள். தந்தை வழிதவறிப் போகும்போது ஆண்பிள்ளைகளின் இயல்பான மனவளர்ச்சி சிதைந்து போகும் அபாயம் உண்டு.

ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அசோகமித்திரன் எழுதிய கதைகளில் இந்த பரிமாணங்கள் அடிநாதமாக இருப்பதைக் காணலாம்.

பொறுப்பின்மை / இயலாமை

ASOKAMITHTHIRAN-27, PHOTO BY PUTHUR SARAVANAN

மணல்’ எனும் அவருடைய புகழ்பெற்ற குறுநாவலை எடுத்துக்கொள்வோம். இங்கே சரோஜினி குடும்பத்தின் கடைக்குட்டி; இரண்டு அண்ணா, இரண்டு அக்காவுடன் பிறந்தவள். புகுமுக வகுப்பை முடிக்கும் தறுவாயிலிருக்கும் சரோஜினி அம்மாவின் எதிர்பாராத மரணத்துக்குப்பின் தனித்துவிடப்படுகிறாள். அவளுடைய இரண்டு அக்காக்களும் பெறுவதற்குத்தான் பிறந்தவீடு, பங்களிப்பதற்கல்ல எனும் உடமைச் சமூக விதியை நன்றாகவே பேணுகிறார்கள். அவளுடைய மூத்த அண்ணா மணி குடும்பப்பொறுப்பிலிருந்து தப்புவதற்காக திருமணமே செய்துகொள்ளாமல் காலம் தாழ்த்துகிறான். இரண்டாமவன் அப்புவோ வேற்று சாதிப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தை விட்டே வெளியேறுகிறான். சுயநலனுக்கே முன்னுரிமை கொடுத்து இயங்கும் அப்பு நவீன யுகத்தின் முழுப் பிரஜையாகப் பரிணமிக்கிறான்; ஆனால் இரண்டுங்கெட்டான் நிலையில் சிக்கித் தவிக்கும் அவனுடைய குடும்பத்திலிருந்து முற்றாக வெளியேறியபின்னரே இது சாத்தியமாகிறது.

உயிர்ப்பற்று இயலாமையில் உழலும் சரோஜினியின் அப்பாவுக்கு சடங்குகளும் சாதிக் கட்டுப்பாடுகளும் முக்கியமாக இருக்கும் அதே வேளையில் வாழ்க்கையைத் தொடங்கும் நிலையில் இருக்கும் தன் சின்னஞ்சிறு மகளின் ஆசைகளும் அபிலாட்சைகளும் ஒரு பொருட்டாக இருப்பதில்லை. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் அவள் ”வீட்டோடு இருந்து வேளாவேளைக்கு சமைச்சுப் போட்டுக்கொண்டிருப்பது” தேவையாக இருக்கிறது.

உலகச் சுழற்சியில் எதுவும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. கடைத்தெருவில் தன் வகுப்புத்தோழி ரேணுகாவைச் சந்திக்கிறாள். அவளுடைய வகுப்புத்தோழிகள் பெரும்பாலும் கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்துகொண்டிருப்பதும் தான் தனியே விடப்பட்டதும் கண்கூடாத் தெரிகிறது. பொறுப்பற்ற இரண்டு ஆண்களின் சுயநலத்திற்குப் பிணையாகத் தான் சிக்கிக்கொண்டிருப்பதை உணர்கிறாள். அப்போதுதான் அந்த போட்டோகிராபர் ‘ஆறு மணிக்கு சுந்தரம் பார்க்காண்ட நின்னிட்டிருப்பேன்’ என்று சொல்லிவிட்டுப் போகிறான்.

மறுநாள் காலை ‘சரோஜினிக்கு அப்பா, மணி இருவரும் கை கால்களை அசைக்கக்கூடிய உயிரற்ற பொம்மைகள் மாதிரித் தோன்றிற்று. இவர்களால் யாருக்குத்தான் என்னதான் செய்யமுடியும்?’

இந்த நீண்ட கதையை அசோகமித்திரன் வாழ்க்கையின் இயல்பான நிகழ்வுகளின் தொகுப்பாகத்தான் சொல்லிச் செல்கிறார், இருந்தாலும் அன்று மாலை சரோஜினி தன்னையும் மீறி சுந்தரம் பார்க்கை நோக்கிச் செல்வதைத் தெரிவிக்கும் கடைசி பத்தி உண்மையில் இதயத்தைப் பிளப்பதாய் இருக்கிறது. இந்தக் கதையை சரோஜினி என்ற ஒற்றை மனுஷியின் சோகக்கதையாக வாசிக்கமுடியும். பிரதியின் பலதளங்களிலும் ஒருசேரக் கவனம் செலுத்தினால், அவளை வரலாற்றியக்கத்தின் ஒருங்கமைந்த சிதைவாகவும் பார்க்கலாம்.

கணவன், மகள், மகன்” சிறுகதையிலும் மூன்று குழந்தைகளுக்குத் தகப்பனாகியிருக்கும் ஒரு குடும்பஸ்தர் தன் இரண்டாவது மகளின் திருமண தினத்துக்கு முதல்நாள் காணாமல் போகிறார். அவர் அதே ஊரில் இன்னொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்தியிருக்கிறார் என்பது தெரியவருகிறது. பெண்ணுடைய திருமணம் நின்றுபோகிறது; பையனின் படிப்பும். தந்தை இழைத்த துரோகத்தினால் இரு பிள்ளைகளும் தாய்மீதான் நம்பிக்கையை முற்றிலும் இழக்கிறார்கள். பெண் தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் திட்டத்தை தாயிடம் மட்டும் மறைக்கிறாள். பையனோ அப்பாவின் புறக்கணிப்புக்காக தன்னையே தண்டித்துக்கொள்வது போல் குடித்துச் சீரழிகிறான். தாயைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. அவளோ தன்னைப் பராமரிப்பவர்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டுமே தெரிந்த மனுஷி. அது தவிர அவளுக்கென்று தனிப்பட்ட செயல்பாடு ஏதுமில்லை.

குடிக்காதேடா! குடிக்காதேயேண்டா!’ என்று கத்தவேண்டும் என்று மங்களத்துக்கு இருந்தது. ஆனால், ஆயுட்காலப் பழக்கதோஷம் ஒரு சொல் உச்சரிக்க முடியவில்லை. மகனை ஏறிட்டுப் பார்க்க முடியாது இருந்து அவன் தூங்கும்போதுதான் நேராக முழுதாகப் பார்க்க முடிகிறது.

புருஷனிடம் இப்படி இருந்தாயிற்று, மகனிடமுமா என்று அவளுக்குத் துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது. அழத்தான் முடியவில்லை.’

தன் சுயத்தை ஒடுக்கிக்கொண்டு பிறர்மீதான நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே வாழ்வை அமைத்துக்கொள்வதின் அபத்தத்தை, பெருந்துயரை ஒரு நான்கைந்து பக்கங்களில் அசோகமித்திரனால் சொல்லிவிட முடிகிறது. ஒரு குடும்பத்திற்குள் நிகழ்ந்திருக்கும் பேரிடரின் விளைவை, பெற்றோர்=பிள்ளைகள் உறவை அது என்றென்றைக்குமாக மாற்றியமைப்பதை துல்லியமாக வாசகருக்குத் தெரிவிக்கமுடிகிறது.

தன் பெண்ணைப் பாதுகாத்து ஆதரவளிக்க இயலாத அம்மாக்கள் அசோகமித்திரனின் கதைகளில் அடிக்கடி தோன்றுகிறார்கள். மாலதி’ குறுநாவலில் அம்மா கல்யாணமாகாத தன் பெண்ணின் ஊதியத்தில் உயிர் பிழைத்து மாலதிக்கு கல்யாணம் ஆகவேண்டும் என்ற உணர்வே இல்லாமல் வாழ்ந்து வருகிறாள். ஆனால் மற்றவர்களின் ஒழுக்கத்தைப் பற்றியும் சாதியைப் பற்றியும் வம்பு பேசுவதில் ஆர்வமாக இருக்கிறாள். ஊரெல்லாம் கடனை வைத்துவிட்டு கணவன் இறந்தபின் ஒரு விக்டிம்=ஆகத்தான் அவளால் தன்னைப் பார்க்கமுடிகிறது. தன்னையும் விட மோசமாக தன் பெண் பலியாக்கப்படுகிறாள் என்பதை உணரமுடியவில்லை. இப்படிப்பட்ட பொறுப்புணர்வும் செயல்பாடும் அவளுடைய தலைமுறையைச் சேர்ந்த பெண்களிடன் எதிர்பார்க்கக்கூடியதல்ல. மரபான சமூக அமைப்பு அவர்களை அத்திசையில் வளரவிடவில்லை.

தன் பெண் இந்திராவின் வீணை கற்றுக்கொள்ளும் ஆசை நியாயமே இல்லாத முறையில் புறக்கணிக்கப்படுவதைத் தாங்கமுடியாத இந்திராவின் அம்மா இரவு படுக்கும்போது ஓசைப்படாமல் அழுகிறாள். (’இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ளவேண்டும்’) இந்த இயலாமையும் அமைப்பின்வழி உருவாக்கப்பட்டதுதான்.

மானசரோவர் நாவலில், நகரத்தில் முதல் தலைமுறையாகக் குடியேறியிருக்கும் கோபாலசாமி தன் குழந்தைகளை வளர்த்த விதத்தைப் பற்றிய குற்ற உணர்வால் மறுகுகிறான். அனாதை இல்லத்திலிருந்து ஓடிவந்த அகதிகளைப்போல் என் குழந்தைகள் வளர்ந்தன என்று தன்னையே சாடிக்கொள்கிறான். பாவம் டல்பதடோ’ குறுநாவலின் நாயகன் விமானவிபத்தில் இறந்துபோன தன் மகள் லலிதாவை அவள் உயிருடன் இருந்தபோது சரியாக பார்க்கக்கூட இல்லையே என்று அரற்றுகிறான். பெற்றோர்பிள்ளை உறவின் நியாயங்கள், நம்பிக்கைகள், எதிர்ப்பார்ப்புகள் இவற்றைப் பற்றிய துல்லியமான பார்வையுடன் மீண்டும் மீண்டும் இந்த உறவுகள் பிறழ்ந்து துயரத்தைப் பெருக்குவதைப் பற்றி அசோகமித்திரன் ஆழமாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கிறார்.

இருந்தாலும், இப்பிறழ்வுகள் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் ஒரே மாதிரியான விளைவை ஏற்படுத்துவதில்லை. தையற்காரச் சிறுவன் நரசிம்மா தன் தாயை வீட்டுப் பிரிந்துபோய் இன்னொரு பெண்ணுடன் வாழும், தற்போது செயலிழந்து போயிருக்கும், தந்தைக்கு தன் சம்பாத்தியத்தில் கணிசமான பகுதியை கத்தரி பிராண்ட் சிகரெட் வாங்கிக்கொடுப்பதில் செலவழிக்கிறான் (தந்தைக்காக’).

எனக்கு இந்த வழியே பிடிக்கவில்லை’ என்று பாபு சொன்னான்.

எனக்கும்தான்!’ என்று நரசிம்மா சொன்னான். ‘ஆனால் எங்கப்பா இங்கேதானே இருக்கிறார்? அவருக்கு சிகரெட் நான் வாங்கித்தராவிட்டால் வேறு யார் வாங்கித் தரப்போகிறார்கள்? அம்மாவுக்கு தையல் வேலையாவது தெரியும். இந்த இன்னொரு அம்மாவுக்கு ஒழுங்காகச் சமைக்கக்கூடத் தெரியாது.’

நரசிம்மாவுக்கு தன் தந்தையுடன் உணர்வுபூர்வமான அணுக்கம் ஏன் நிகழ்கிறது என்பது சிந்தனையைத் தூண்டக்கூடிய கேள்வி.

முரண்பாடு

அசோகமித்திரன் அதிகாரமுடைய ஆளுமைகளை மையப்படுத்தி அதிகம் எழுதியதில்லை. இதுவும் அவருடைய புனைவுலகில் குறிப்பிடத்தக்க அம்சம். விதிவிலக்காக, கரைந்த நிழல்கள்’ நாவலில் ஒரு பாத்திரமான ஸ்டூடியோ அதிபர் ராம ஐயங்கார். நாவலின் ஒரு அத்தியாயத்தில் ராம ஐயங்கார் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் தன் பங்களாவில் தன்னிடமிருந்து அன்னியப்பட்டுப் போயிருக்கும் தன் மகனைச் சந்திக்கச் செல்கிறார். தன் உடல்நிலை சீர்கெட்டுக்கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது. அவருடைய மகன் எந்தப் பணியிலும் ஆர்வம் காட்டாமல் அவரிடம் தன் எதிர்ப்பைக் காட்ட குறிக்கோளற்ற வாழ்முறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவரிருக்கும் நிலையில் அந்த எதிர்ப்பையும் மீறி அவன் மீண்டு வரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவனோ அவருடைய வாழ்முறையையும் குறிக்கோள்களையும் துச்சமாக மதித்தாலும் அவருடைய செல்வச் சூழலில்தான் சிறைப்பட்டிருக்கிறான். இதுவே அவனுடைய செயலூக்கமில்லாத சீரழிவுக்குக் காரணம். இந்த செல்வத்தைப் பாதுகாக்க முயல்வதுதான் அவன் மீண்டும் பயனுள்ள வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான ஒரே வழி என்று அவர் நினைக்கிறார். தன் மகனிடம் அவர் கடுமையான அன்புடன் பேசுகிறார்:

நான் ஆள்களைச் சரிக்கட்டி வைத்தால் என்ன? இருவது கூத்தியார்களை வைத்துக்கொண்டால் என்ன? நான் துரும்பு பெற்றாலும் அதற்குரிய கட்டணம் கொடுத்துவிடுகிறேன். யாரையும் என்னிடம் ஏமாற்றம் அடைய விடுவதில்லை. அது எங்கள் தலைமுறை. அந்தத் தலைமுறையில் சிக்கெடுத்துப் போகும் புத்தி கிடையாது. பொறுப்புகளைக் கண்டு நாங்கள் ஒடிப்போனது கிடையாது. உன் புத்தி, உன்னைப் போன்றவர்களின் புத்திதான் விநோதமாக இருக்கிறது. அந்தப் புத்தி இன்றிருப்பதை எல்லாம் அப்படியே என்றைக்கும் இருக்கும் என்ற நிச்சயத்தில் உழல்கிறது.

இப்போது உன்னிடமுள்ளதைப் பெருக்க முயற்சி செய்யாவிட்டாலும் பாதுகாக்கப் பிரயத்தனம் எடுத்துக்கொள்ளாவிட்டால் திடீரென்று ஒரு நாளைக்குக் கூரை இருக்காது. அந்த வேலி இருக்காது. உனக்கு நான்கு மைல் நடந்து போய் ரொட்டியும் டீத்தண்ணீரும் வாங்கிவர ஒரு வேலையாள் இருக்க மாட்டான்ஒவ்வொருவனுக்கும் ஒரு சாம்ராஜ்யம் பெரிதோ சிறிதோ இருக்கிறது. அவன் அதை விழிப்போடு கைவசம் வைத்துக் கொள்ளத் தவறும் ஒவ்வொரு கணத்திலும் அதன் மீது இருபது படையெடுப்புகள் நிகழ்கின்றன. நீ என்றாவது திவாலாகப் போனால் இதை நினைவு வைத்துக்கொள். நீ ஒரே நாளில் திவாலாகவில்லை.’

நடைமுறை வாழ்க்கையைப் பற்றிய இந்த எச்சரிக்கை ராம ஐயங்காரின் மகனுக்குத் தேவைப்படவில்லை. அவனுடைய ஒரே நோக்கம் தந்தை என்ற லட்சிய பிம்பத்திலிருந்து பிறழ்ந்திருக்கும் ராம ஐயங்காரை தண்டிப்பதுதான். அவரைத் தண்டிப்பதற்கு அவனிடமிருக்கும் ஒரே வழி, தன்னையே அழித்துக்கொள்வதுதான். தன் மகனை வழிநடத்தவும் இயலாது அவன் மீது அதிகாரத்தையும் செலுத்த இயலாது போய்விட்ட நிலையில் அவனைக் கைவிடுவதுதான் அவருக்கிருக்கும் ஒரே வழி. செல்வமும் அதிகாரமும் படைத்த அப்பாக்கள் இப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்துவதும் உலகமறிந்ததுதான். அசோகமித்திரன் அந்தச் சிக்கலை தான் நன்றாகவே அறிந்த சினிமா உலகில் வைத்து சித்தரிக்கிறார்.

வரலாற்றுச் சுமை

ASOKAMITHTHIRAN-16-MOTHER-DERASA-1 (1)

பெற்றோர் பிள்ளைகள் உறவில் ஒரு முக்கிய பரிமாணம் வரலாற்று நினைவுகள். வரலாற்றுடன் நம் அந்தரங்கமான தொடர்பு நம் பெற்றோர்களிடமிருந்தே தொடங்குகிறது. அவர்கள் மூலம்தான் நாம் உலகை மட்டுமன்றி நாம் கடந்து வந்த பாதையையும் அறிகிறோம். இதைத்தான் மகாகவி பாரதியார்,

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே

அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே’

என்று பாடுகிறார். ஆனால் சுதந்திர இந்தியாவில் நம் காலனிய வரலாறு பற்றிய அறிவும் உணர்வும் குறைவாகவே இருப்பதைப் பார்க்கலாம். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அசோகமித்திரன் இதை ஒரு துன்பியல் நிகழ்வாகவே நினைப்பதாகத் தோன்றுகிறது.

தொப்பி’ சிறுகதையில் ஒரு மனிதன் தான் பிறந்து வளர்ந்த ஒரு நகரத்துக்கு தற்செயலாக, தாற்காலிகமாகத் திரும்புகிறான். அவன் அந்த நகரத்தில் செலவழிக்கப்போவது ஒரு பகல் நேரம் மட்டுமே. அவன் அந்த நகரத்து கட்டிடங்களையும் முகங்களையும் முற்றாக மறந்துவிட்டான். இந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளில் அவன் இந்த ஊரைப் பற்றியும் அங்கு அவனுக்கு அறிமுகமான மனிதர்களைப் பற்றியும் நினைத்தும் பார்க்கவில்லை. எனினும் நினைவுகள் மங்கலாக அவனுக்குள் எழுகின்றன.

அந்த ஊரில் அவன் நிழல் படாத இடம் இருக்க முடியாது. அவனும் அவன் அப்பாவுமாக வெளியே போகும்போதெல்லாம் அப்பா எதையாவது சுட்டிக்காட்டி, ”இது நீ பிறந்த ஆஸ்பத்திரி” “இது நீ பிறந்தபோது நாம் குடியிருந்த வீடு” “உனக்கு இரண்டு வயதில் கட்டி விழுந்தபோது நாம் இங்கேதான் இருந்தோம்” என்று கூறியிருக்கிறார். அவன் பிறந்த ஆஸ்பத்திரியில் வெயில் இருந்தால் அவன் நிழல் அவன் பிறந்தவுடனேயே விழுந்திருக்கும். பிரசவ அறைகளில் வெயில் இருப்பதில்லை. வெளிச்சம் கூட குறைவாகத்தான் இருக்கும். வெளிச்சம் இருந்தால்தான் ஒருவனுக்கு நிழல் விழுமா? இப்போது இவ்வளவு வெளிச்சம் இருந்தும் எனக்கு நிழல் இல்லையே.”

அந்த நகரத்தின் தெருக்களில் கால்போன போக்கில் சுற்றுகிறான். குறிக்கோளற்றுத் திரிந்தாலும் ஏதோ ஒன்று அவனை ஒரு திசையில் இழுத்துப் போகிறது. அத்திசையில்தான் அவன் மாண்ட்காமரி ஹோட்டல் இருக்கிறது. இருபத்திரண்டு ஆண்டுகளுக்குமுன் அந்த ஹோட்டலில் வெள்ளையர் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பெண்கள் தவிர வேறு எவருக்கும் அனுமதி கிடையாது. அந்த ஹோட்டலுக்கு வெளியே தன் அப்பாவுடன் அவன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது நிகழ்ந்த ஒரு சம்பவம் அவன் நினைவுக்கு வருகிறது. உண்மையில் அந்தச் சம்பவம்தான் அவனை மாண்ட்காமரி ஹோட்டல் பக்கம் இழுத்துவந்திருக்கிறது. அந்தச் சம்பவத்தை அசோகமித்திரனின் வரிகளில் பார்ப்போம்.

இரு சோல்ஜர்கள் உள்ளேயிருந்து சாலைக்கு வந்தார்கள்அவர்கள் நேரே அவன் அப்பாவைப் பார்த்து வந்தார்கள். அப்பா அவன் கையைப் பிடித்துக்கொண்டு இன்னமும் ஒதுங்கிப் போனார். ஸோல்ஜர்கள் இருவரும் இரு மனிதக் குன்றுகள் போலப் பக்கத்தில் வந்து நின்றார்கள். அவன் அப்பா என்ன செய்வது என்று தெரியாதவராய் அப்படியே நின்றார். ஸோல்ஜர்களில் ஒருவன் அப்பாவின் தொப்பியைத் தட்டிவிட்டான். அது சாலையின் நடுவில் விழுந்து சிறிது உருண்டு ஓடிற்று. அப்பா அதை எடுக்கப் போனார். அப்போது இன்னொரு ஸோல்ஜர் பாய்ந்து போய் அதை உதைத்தான். அது பந்தாகக் கிளம்பி வேறோர் இடத்தில் இறங்கியது. இம்முறை அப்பா விரையவில்லை. முதல் ஸோல்ஜர் ஓடிப்போய் தொப்பி விழுந்த இடத்தை அடைந்தான். அவனும் ஒரு உதை விட்டான். அவனும் இன்னொரு ஸோல்ஜருமாகச் சில நிமிஷங்களுக்கு நடுச்சாலையில் அப்பாவின் தொப்பியை ஒரு ஃபுட்பால் மாதிரி விளையாடினார்கள். …சில நிமிடங்களுக்குப் பிறகு ஸோல்ஜர்களுக்கு ஆட்டம் அலுத்துப் போய்விட்டது. அப்பாவின் தொப்பியை மாறிமாறி நசுக்கித் துவைத்து உருத்தெரியாமல் அடித்தபின் சீட்டியடித்துக்கொண்டு போய்விட்டார்கள். அப்பா தன் தொப்பியாக இருந்ததைப் பொறுக்கி எடுத்தபோது…’

தன் தந்தைக்கு நேர்ந்த அவமானம் பற்றிய நினைவு அவன் மனதில் துல்லியமாக எழுகிறது. எவ்வளவு சுத்தமாக, எவ்வளவு பூர்ணமாக மறதி போர்த்திக் கொண்டிருக்கிறது! அதைப் போய்க் கலைத்து விட்டேனே!’அவன் மட்டுமல்ல அவனைச் சுற்றியுள்ள அனைவருமே மறந்துவிட்டார்கள்; அவனுடைய நாடே மறந்துவிட்டது. அந்த நினைவிலிருந்து எழும் சினத்தை அவன் தன்மீதே திருப்புகிறான். அந்த இருண்ட காலத்திலிருந்து எழும் இசை இன்னும் அவன் அமைதியைக் குலைத்து தூங்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது. அவனுடைய பெற்றோர் காலத்தில் நாடு அடைந்த அவமானத்தின் சின்னமாக தொப்பி இருந்துகொண்டிருக்கிறது. ஒரு முக்கியமான வரலாற்று அவலத்தை உருவகப்படுத்தும் அசோகமித்திரனின் திறன் பிரமிக்க வைக்கிறது.

எதிர்காலம்

பெற்றோர்கள் மட்டுமே குழந்தைகளை உருவாக்குவதில்லை. குடும்பத்துக்கு வெளியே உலகம் அடைந்துள்ள மாற்றங்களும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள்மீது இவை கொள்ளும் தாக்கமும் பெற்றோர்களையும் மீறி ஒரு சிறுவனை மாற்றியிருப்பதைத்தான் ‘குழந்தைகள்’ சிறுகதையில் சொல்லியிருக்கிறார். வியாபாரத்தில் நாட்டமுள்ள ஒரு மார்வாரி குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கும் பெண், பள்ளிச் சிறுவனான தன் பையனுடன் பிள்ளை பெறுவதற்காகத் தன் பெற்றோர் வீட்டுக்கு ரயிலில் பயணப்படுகிறாள். கால் சற்றே ஊனமான அந்தப் பெண் கொடுத்த சீதனத்தை வைத்து அவளுடைய கணவனின் குடும்பம் வியாபாரம் செய்து செழிப்பதையும், அந்த குடும்பத்தின் மூன்று ஆண்பிள்ளைகளிடையே அவள் கணவன் மட்டுமே பொறுப்பும் நிதானமும் பொருந்தியவனாக இருப்பதையும் அவனுடைய இரண்டு இளைய சகோதரர்களும் அவருடைய மனைவிகளும் உல்லாசப் பிரியர்களாக, சுயநலம் மிக்கவர்களாகத் திரிவதையும் கதைப்போக்கில் அந்தப் பெண் நினைத்துக் கொள்கிறாள்.

ஆனால் அவளுடைய மகன், தன்ராஜ் அம்மாவிடம் இங்கிதமே இல்லாமல் நடந்துகொள்கிறான். உணவுக்குக் காத்திராமல் ’இப்பவே வேணும்’ என்கிறான். தன்னையொத்த ஏழைச்சிறுவனுக்கு அம்மா சொற்படி ரொட்டி கொடுப்பதுகூட அவனுக்கு விருப்பமில்லை. ’பிச்சைக்காரன்’ என்று இழித்துப் பேசுகிறான். இறுதியாக, அம்மாவிடம் சதுரங்க விளையாட்டில் தோற்றுப்போவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. திடீரென்று எல்லாவற்றையும் கீழே தள்ளிவிட்டு அவள் துடையில் ஓங்கிக் குத்துகிறான்.

வந்தனா செஸ் காய்களைப் பொறுக்கி மூடிவைத்தாள். மகன் அடித்த அடியைவிட அவன் கண்ணில் தெரிந்த வெறி அவைளைப் பயமுறுத்தியது. அவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தை பற்றி ஒருகணம் நினைத்தாள். எல்லாப் பெண்களுக்கும் இனி பிறக்கப்போகும் குழந்தைகளைப் பற்றியும் நினைத்தாள்.’

இளைஞர்களின் கையில்தான் உலகத்தின் எதிர்காலம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்த உலகத்தைப் புதிதாகப் படைக்கும் ஆற்றல் இந்த புதிய பிறவிகளுக்கு இருப்பதாக ஒரு நம்பிக்கை. ஆனால், இவ்வுலகம் இழுத்துச் செல்லும் திசையில்தான் இவர்களும் இவர்களுடைய எதிர்காலமும் உருவாக்கப்படும் என்பதுதான் ‘குழந்தைகள்’ சிறுகதை நமக்கு உணர்த்தும் உண்மை.

மற்ற எழுத்தாளர்களின் படைப்புகள்

இதுவரை பேசப்பட்ட பெற்றோர்களும் பிள்ளகளும் – சில விதிவிலக்குகள் நீங்கலாக – சமூகத்தில் நடுத்தர வகுப்பினர் என்று அழைக்கப்படும் பிரிவைச் சேர்ந்தவர்கள். எல்லாச் சமூகப் பிரிவுகளும் அவர்களுடைய பொருளாதார நிலைக்கேற்ப, பண்பாட்டுக்கேற்ப, பெற்றோர்பிள்ளை உறவுகளைப் பேணி வருகின்றனர். இந்த உறவுகளைப் பற்றியும் சில சிறந்த படைப்புகள் எழுதப்பட்டுள்ள்ன. பூமணியின் ’வெக்கை’யில் தன் குடும்பத்தை பலவழிகளில் துன்புறுத்தி அவமானப்படுத்தியவனை வெட்டிவிட்டு தப்பியோடிய பதினாலு வயது மகனுக்கு துணையாய் அவனுடன் காடுமலையெலாம் பதுங்கி வாழும் தந்தையைக் காணலாம். காலம் காலமாக தன் குடும்பத்துக்கு ஒரே வாழ்வாதாரமாக இருந்த நிலத்தை காலனி கட்டுவதற்காக அரசுக்கு விற்றுவிட்டு நிலைகொள்ளாமல் தடுமாறும் தந்தையை பெருமாள் முருகனின் ஏறுவெயில் புதினத்தில் சந்திக்கலாம். ஏதொவொரு துன்பியல் நிகழ்வைப் போன்று பெற்றோர்களிடமிருந்து சிறுவயதில் அன்னியப்பட்டு தந்தையுடன் அவர் இறக்கும்வரை ஒரு சொல்கூட பேசாமல் இருக்கும் தனையனை ராஜ் கவுதமனின் ’சிலுவைராஜ் சரித்திரம்’ எனும் நூலில் காணலாம். தன் இறுதிப்படுக்கையில், புலன்கள் மங்கிவிட்ட வேளையில் தன் சினங்களையும் நிராசைகளையும் எண்ணி மறுகும் கிழத் தந்தையை ஜெயமோகனின் ’ரப்பர்’ நாவலில் காணலாம். நம் சமூகத்தில் பெற்றோர்பிள்ளை உறவுகள் சமூக மாற்றங்களால் சிதைக்கப்படுவதையும் வரப்போகும் மாற்றங்களுக்கு முன்அறிகுறியாக இருப்பதையும் நாம் தற்காலத் தமிழிலக்கியம் மூலமாகவே உணர்ந்தறிய முடியும்.

நாமெல்லோருமே குணமடைந்துவரும் சிறுவர்கள்தான்’ என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹனீஃப் குரேஷி. அவரவர் பார்வையில் இது உண்மையாகவே இருக்கும். மாறிவரும் உலகத்தில் அதனுடன் மாறிவரும் பெற்றோர்பிள்ளை உறவுகளைப் பற்றிய அறிதலும் புரிதலும் இன்று நம்முடைய அத்தியாவசியத் தேவை. வாழ்நாள் முழுவதும் ஒருவருடைய சிந்தனையையும் செயலையும் பாதிக்கக்கூடிய விளைவுகள் இந்த உறவுகளிலிருந்து எழுகின்றன. Tout comprendre, c’est tout pardonner. அனைத்தையும் புரிந்துகொள்ளுதல் அனைத்தையும் மன்னித்துவிடுவதற்குச் சமம் என்பார்கள். எனவே, இலக்கியத்தின் துணையுடன் மனிதவாழ்வின் அடிப்படையான இந்த உறவுகளைச் சீர்ப்படுத்த முற்படுவோமாக.

இலக்கியம் என்பது எல்லையற்ற பெருவெளி. நம் சிந்தனையையும் அறிவையும் மேம்படுத்தும் சாத்தியங்கள் கொண்டது. எந்நேரத்திலும் எம்மொழியிலும் அது பலரின், பல தலைமுறையினரின் கூட்டு முயற்சிதான். அனைத்துச் சமூகத்திற்குமான கோட்பாடு என்று ஏதோ ஒன்றை முன்வைத்து அதுவே ஆகச் சிறந்தது என்று ஒரு அரசியல் இயக்கம் சாதிக்கலாம்; அது எழுத்தாளானால் இயலாத காரியம்; அவனுக்குத் தேவையற்றதும் கூட. சமூகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து உருவாகும் கதையாடல்களின் வழியாகத்தான் சமூகத்தைப் பற்றிய நம் அறிவு வளர்ச்சியடையும். எனவே, அசோகமித்திரனை வாசித்தலின் நோக்கம் முழுமையடைய, நாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் மற்ற சிறந்த படைப்புகளையும் வாசித்து சமூக வாழ்வு பற்றிய ஒருங்கிணைந்த பார்வையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இதுவே அவருடைய பங்களிப்புக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை என்று கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

==முற்றும்==

0 Replies to “அசோகமித்திரனின் கதையுலகில் பெற்றோரும் பிள்ளைகளும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.