ஹெமிங்வேயிற்கு அஞ்சலி

ஸ்விட்சலாந்தை போற்றுதல்‘ பற்றி ஜூலியன் பார்ன்ஸ்
நான் ஹெமிங்வேயை தேர்தெடுத்தது ஏனென்றால் அவருடையது தற்காலத்துக்கு-ஒவ்வாத-பாணி என்றாலும், இலக்கிய பொம்மை-பிரிய-பையன்கள் பட்டாளத்தால் அதீதமாக மெச்சப்பட்டார். மாச்சோ (macho) புனைவுகளால் பெண் வாசகர்களால் வெறுக்கப்பட்டார்.  அவருடைய பாணி எளிமையான சுலபமாக பிரதியெடுக்கக் கூடியதாக தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அது அப்படியல்ல.

அவருடைய நாவல்கள், சிறுகதைகளை விட அதிகம் அறியப்பட்டிருந்தாலும், பின்னதில்தான் அவருடைய மேதமை முழுமையாக வெளிப்பட்டு அவருடைய பாணி ஆக சிறப்பாக பொருந்துகிறது.  நான் வேண்டுமென்றே பிரபல கதைகளில் ஒன்றையோ, எருது சண்டையிடுபவர்கள், துப்பாக்கிகள், அல்லது ஆப்பிரிக்கா சம்பந்தப்பட்டதையோ தேர்ந்தெடுக்கவில்லை.  ‘ஸ்விட்சலாந்தை போற்றுதல்‘ ஓர் அமைதியான, வஞ்சகமான, வேடிக்கையான  கதை (ஹெமிங்வேயின் அங்கதமும் குறைவாகவே மதிப்பிடப்பட்டது) கூடவே முறையான நவீனத்துவம் வாய்ந்த்து.

அது மூன்று பகுதிகளை கொண்டு, ஒன்றுக்கொன்று மேவிய வடிவமைப்போடு, அவற்றில் மூன்று அமெரிக்கர்க்ள் வெவ்வேறு ஸ்விஸ் ரயில் நிலைய உணவகத்தில், தங்களை பாரிசுக்கு திரும்பிப் கொண்டு போகும் ரயிலுக்காக காத்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு நபரும், செல்வந்தனாக, அதனால் அதிகாரமிக்க வெளிநாட்டவன்,  உள்ளூர் ஏவலாட்களான பணிப்பெண், போர்ட்டர்கள், ஓய்வுபெற்ற கல்விசெருக்குடைய ஆசிரியர்க்ள் போன்றவர்களுடன் விளையாட தூண்டப்பெற்றது போல விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்.  ஆனால், கதை வளர வளர, சமூக அதிகாரமும், அறமும் ஒரே பக்கத்தில் இருப்பதில்லை என்று தெளிவாகிறது.

‘ஸ்விட்சலாந்தை போற்றுதல்’ உங்களை அலைக்கழிக்கும் ‘மூத்த’ ஹெமிங்வே என்னும் நம்பிக்கையை மறக்கடித்து உண்மை கலைஞனை கண்டடைய வைக்கும்.

Julian_Barnes_Shorts_Fiction_Switzerland_New_Yorker_Homage_To-hemingway

1. நாட்டுப்புறத்தில் நாவலாசிரியர்

மெருகுபூச்சு உரிக்கப்பட்டு, பைன் மரத்தாலான சமையலறை மேஜையைச் சுற்றி  சாதாரணமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.  அவனுக்குப் பின்னே மேஜையுடன் பொருத்தமாக இருந்த ஒரு பீரோ , எதிரே வரையப்பட்டது போலிருக்கும் ஒரு ஜன்னல். ஜன்னலின் வழியே ஈரம் சொட்டும் செம்மறியாட்டுக் கூட்டத்தையும், அவற்றின்பின்னால் உயர்ந்து தாழ்மேகங்களில் மறையும் மேய்ச்சல் நிலத்தையும் அவனால் பார்க்க முடிந்தது. குறிப்பு வெளியீடுகளில் சமவுரிமைத்தனமாகவும் மகிழ்ச்சியூட்டுவதாகவும் தொனித்த இவ்வகையான கூட்டு வாழ்க்கை ஒத்து வருமா என்று அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை.  இவ்வளவிற்கும், சமைப்பது, பாத்திரம் கழுவி இடத்தைச் சுத்தமாக வைத்திருப்பது போன்ற அலுவல்களை மாணவர்களே செய்து முடித்துவிடுவார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் பாதிக்கும்  மேற்பட்டவர்கள்  தன்னை விட வயதில் மூத்தவர்கள் எனபதால் அவன் பங்களிக்காமலிருப்பது மேட்டுக்குடித்தனமாகவும் கொள்ளப்படலாம். அதனால் அவனும்  உணவுத்தட்டுக்களை அடுக்குவது,  ரொட்டியை சூடுபடுத்துவது போன்ற காரியங்களில் தன்னை  ஈடுபடுத்திக் கொண்டான். மேலும் இறுதி நாளன்று இரவுணவிற்காக  மெல்லவித்த ஒரு பெரிய ஆட்டிறைச்சிப் பதார்த்தத்தை தான்  சமைக்கப் போவதாகவும் உறுதியளித்திருந்தான்.  இரவுணவிற்குப் பிறகு தங்கள் வாட்டர்பிரூப் ஆடைகளை அணிந்து கால்தடப்பாதையில் ஒரு மைல் தூரம்  கடுநடை நடந்து பப்பிற்குச் செல்வார்கள். ஒவ்வொரு மாலையும் முன்னதை விட சற்று அதிகமாகவே அவனுக்குக் குடி தேவையாக  இருந்தது,  சுதாரித்துக் கொள்ள.

நன்நம்பிக்கையுடன் ஆவலாய் இருந்த மாணவர்களை அவனுக்குப் பிடித்திருந்தது. தன்னை பெயர் சொல்லி அழைக்கும்படியே அவர்களைக் கேட்டுக்கொண்டான்.  அவர்களும் அப்படியே அழைத்தார்கள் பில்லைத் தவிர.  முரட்டுத்தனமான  மாஜிமிலிட்டரிக்காரனான பில் அவனை ‘காப்டன்’ என்றழைக்கவே  ஆசைப்பட்டான். அவர்களுள் சிலர் இலக்கியத்தை விரும்பிய அளவிற்கு அதை புரிந்துகொள்ளவில்லை என்பதென்னவோ உண்மைதான். அவர்கள் புனைவை சுயசரிதையின் ஓர் திரிபாகத் தான் கற்பனை  செய்து கொண்டிருந்தார்கள்.

‘ஏனதைச் செய்தாள் என்று எனக்கு புரியவில்லை’

‘அனேகமாக ,மனிதர்கள் தாங்கள் செய்ததை எல்லாம் புரிந்து கொள்வதில்லையே’

‘ஆனால் கதையில் வரும் அவளுக்குப் தெரியவில்லை என்றாலும் வாசகர்களாகிய நமக்கு தெரிந்திருக்க வேண்டும்  அல்லவா ‘

‘அப்படியொரு அவசியமில்லை’

‘நான்  ஒப்புக் கொள்கிறேன்.  நமக்கு தான் நம்பிக்கை இல்லையே, இந்த.. அதுக்கொரு பேர்கூட உண்டே, காப்டன்?’

‘அனைத்தும் அறிந்த கதைசொல்லி, பில்’

‘அதே தான்’

‘ நான் சொல்வதெல்லாம் , எல்லாமறிந்த கதைசொல்லியை நம்பாததற்கும், கதாபாத்திரத்தின் தலைக்குள் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாததற்கும்  நிறைய வித்தியாசமிருக்கு என்று தான்..’

‘நான் தான் சொன்னேனே , மனிதர்கள் தாங்கள் செய்ததை எல்லாம் புரிந்து கொள்வதில்லையென்று’

‘விக்கி, நீ இரண்டு குழந்தைகளுக்குத் தாயாய் இருக்கும் பெண்னைப் பற்றி எழுதுகிறாய்.  சாமானியமாகவே தோன்றும்  அவள் கணவன்  திடீரென்று தன்னைச் சுட்டுக் கொள்கிறான் என்றால் ..’

‘அதானால ?’

‘அதனால், ஒரு வேளை – மே பீ  நம்பகத்தன்மை என்ற கேள்வி எழுவதற்கு வாய்ப்பிருக்கிறது’

கோபங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்திருந்தாலும்  அதில் குறுக்கிடுவதை அவன் விரும்பவில்லை.  நம்பகத்தன்மையைப் பற்றி சிந்திப்பதையே  அவன் விரும்பினான். அவன் கதையையே, இன்னும் சரியாக சொல்லவேண்டுமென்றால் , ஆஞ்சி மற்றும் அவனுடைய கதையையே எடுத்துக் கொண்டால்…ஏழு வருடங்கள் சேர்ந்திருந்தார்கள், எழுத்தாளராகவேண்டியதற்கான அவனது போராட்டத்தின் ஒவ்வொரு நாளையும் அவள் பகிர்ந்து கொண்டாள். அவன் தனது முதல் நாவலை எழுதினான், அது பதிப்பிக்கப்பட்டு நன்றாக விமர்சிக்கப்பட்டதையும் அவள்  அருகிலிருந்தே பார்த்திருக்கிறாள். எனினும் அது ஒரு பரிசையும் பெற்றுவிட்ட நிலையில் தான் அவனை விட்டுப் பிரிந்தாள்.  தோற்றுப் போனவர்களை  பெண்கள் விட்டுச் செல்வதை அவனால் புறிந்துகொள்ள முடிந்தது, ஆனால் அவன்  வெற்றிபெற்றிருக்கையில் அவனைப் பிரிவது ? அதற்கு என்ன உள்நோக்கம் இருந்திருக்க முடியும் ?  அதில் என்ன நம்பகத்தன்மை  இருக்கிறது ?  பல முடிபுகளில் ஒன்று : உன் வாழ்க்கையை புனைவில்  எழுதுவதற்கு முயற்சிக்காதே. அது வேலை செய்யாது.

‘என் கதை நம்பும் படியாக இல்லையென்று கூறுகிறாயா ?’

‘இல்லை, அப்படிக் கூறவில்லை, நான் என்ன சொன்னேன் என்றால்..’

‘இப்படிப் பட்ட பெண்களும்  இருக்கிறார்கள் என்பதை உன்னால் நம்ப முடியவில்லை, இல்லையா ?’

‘அப்படி என்று..’

“சரி, நான் உன்னிடம் கூறுகிறேன், அவர்கள் இருக்கிறார்கள் என்று. (விக்கியின் குரல் இப்போது தழுதழுக்கத் தொடங்கியது). அந்தப்  பெண், உன்னால் நம்பவே முடியாத அந்தப் பெண், அந்தப் பெண்  என் அம்மா .  உயிருடன் இருக்கையில் , நிஜவாழ்வில் அவள் எனக்கு மிகவும் நம்பும்படியாகவே இருந்தாள் என்பதையும் என்னால் கூற முடியும்”

நீண்ட மௌனம் நிலைத்தது. அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள், அவன் பொறுப்பேற்றுக் கொள்வதை எதிர்பார்த்தபடி. நிச்சயமாக, அவன் ஏற்றுக் கொள்வான், ஆனால் உட்கார்ந்தபடி  தீர்ப்பு வழங்கிக் கொண்டிருப்பதற்கு பதிலாக அவர்களிடம்  கதையொன்றைக் கூறத் தொடங்கினான். முதல் நாள் காலையிலேயே இப்படியொரு திட்டத்தை அவன்  தீட்டிவிட்டான் :  துண்டுத் தகவல்,  நினைவு, நீண்ட நகைச்சுவைத் துணுக்கு , ஏன் கனவும் கூட, இவற்றில் ஏதாவது ஒன்றை ஒவ்வொரு கூட்டத் தொடர்வின் போதும்  எதேச்சையாக அவிழ்த்து விடுவது. ஏன் அதைச் செய்கிறான் என்பதை அவன் விளக்கியதே இல்லை. ஆனால் ‘இது புனைவா ?” என்ற கேள்வியை அவர்கள் கேட்க வேண்டும் என்ற நோக்கத்துடனே ஒவ்வொரு முன்னேர்பாடில்லா இடையீடும்  அமைக்கப் பட்டிருந்தது. அது கதையில்லையெனில் அதை எப்படிக் கதையாக்குவது ?  எதை விடுக்கலாம், எதைத் தக்க வைத்துக்  கொள்ளலாம், எதை விரிவாக்கலாம் ?

ஆக, அறுபதுகளில் , பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் கிரீஸிற்குச் சென்றதைப் பற்றி அவர்களிடம் கூறினான். மொழியை அறியாமலே ஒரு நாட்டிற்கு சென்றிருந்தது அதுவே முதல் முறை. நண்பர்கள் நாக்ஸோஸில் ஒரு வீட்டை மூன்று வாரகாலம் வாடகைக்கு எடுத்திருந்தார்கள். கோடைக் காலத்தின் உச்சம், பிராயெஸ்ஸிலிருந்து திரும்புகையில்  கப்பலின் மேல் தளத்தில் ஆறு மணி நேரம் பயணித்ததில்  உடல் கன்றிச் சிவந்து, குமட்டவும் செய்தது. இதனாலேயே அவன் முதல் இரண்டு நாட்கள் உள்ளே இருக்க நேர்ந்தது. அத்தீவிலிருந்த மற்ற அயல் நாட்டாரும்  அந்த சிறு ஆங்கிலக் குழுவைப் போலவே விசேஷமாகவே தோற்றமளித்தார்கள். குறிப்பாக,  அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நரைத்த  தலையும்,  ஒட்ட வெட்டப்பட்ட  வெண்தாடியுடனும் இருந்த  பருமனான  ஆசாமி ஒருவனை அவன் நினைவுகூர்ந்தான்; தளர்வான  வெள்ளைச்  சட்டையை  இடைவாரிட்ட  அரைக் காற்சட்டை மீது அணிந்து, கடற்கரை மணல், கடலையொட்டிய சாலை இரண்டிலுமே அனாயசமாகச் செல்லும் பக்கி என்றழைக்கப்படும் வெள்ளை  ஜீப்பொன்றில் வலம் வருவான். நடைப்பலகையில் ஒரு காலும், ஆலிவ் நிறத்த, கரும்கேசத்தில் நம்பவே இயலாத ஓர் இளம்பொன் சாயம் பூசியிருக்கும், முற்பது வயது பெண்னைச் சுற்றியிருக்கும் ஒரு கையுமாக,  உருமும் பக்கியில் கடந்து செல்வான். அவள்  அத்தீவில் வசிக்கும் பெண் என்பது தெளிவாகத் தெரிந்தது. மேலும்  அவன் அப்போது  முறை பிசகாத ஆங்கிலேயனாக இருந்ததால் ( இப்போது அப்படி இல்லை என்ற  உள்ளர்த்தத்துடன்) அவளைத் தீவின்  வேசியாக பாவித்தான். ஜீப்பின் வார வீதமே அவளது வீதம்  அல்லது ஜீப்புடன்  சேர்த்து அவளையும் ஒரு  கூட்டு ஒப்பந்தமாக வாடகைக்கு அமர்த்திக் கொள்ள  முடியும்  போன்ற  முன்முடிவுகளுக்கும் வந்திருந்தான்.  எப்போதாவது, அவ்விருவரையும் பாரிலோ, உணவகத்திலோ அவர்கள் பார்க்க நேர்ந்தது. ஆனால் அனேகமாக அவர்கள்  பகட்டாரவாரத்துடன் எங்காவது சென்று கொண்டிருந்தார்கள். நிச்சயமாக, ஹெமிங்வேயை  முன்மாதிரியாகக் கொண்டே அந்த ஆசாமி தன்னை உருவமைத்துக் கொண்டிருந்தான். அந்த மாச்சோத்தனத்தின்  ஆணவப்போக்கால் ஒரே சமயத்தில் கவர்ச்சி மற்றும் அருவருப்பு இரண்டையுமே உணர்ந்த  முறை  நெறிகளில் கவனமுள்ள ஆங்கிலேயனுக்கு அவனைப் பார்க்கும் போதெல்லாம்  வெறுப்பு உண்டாயிற்று. கடற்கரையில் ஜீப் அவர்களைக் கடந்த போதெல்லாம், அது தூரத்தில் விலகி இருந்தாலும் கூட , தன் முகத்தில்  மணலை வீசியெறிவதைப் போல் அவனுக்குப் பட்டது.

அத்துடன் விவரிப்பதை அவன் நிறுத்திக் கொண்டான்,  மற்றவர்களைப் பற்றி அனிச்சையாக நாம் கொள்ளும் அனுமானங்களைப் பற்றி  –  அவ்விருவரும் திருமணமான மகிழ்ச்சியான சுற்றுலாப் பயணிகள் என்றும், கணவன் எப்போதுமே அவ்வாறே உடையணிந்து, தாடி வைத்திருப்பான் என்ற சாத்தியம் வரையிலும் கூட – மாணவர்கள்  சிந்திப்பார்கள் என்ற நம்பிக்கையில். கலையும் வாழ்க்கையும் ஒன்றையொன்று பாதித்துக் கொள்வதைப் பற்றியும் கூட. மேலும், அவனிடம் அவர்கள் கேட்க நேர்ந்தால், அவன் இவ்வாறே பதிலளித்திருப்பான் : அவனைப் பொருத்தமட்டில்  ஹெமிங்வே என்ற நாவலாசிரியர்   ஸ்டீராய்டுகள் ஏற்றப்பட்டு உடல் வலுவான ஒரு ஓட்டப்பந்தய வீரரை ஒற்றவர்.

‘சரி சரி, அனைவரும்  கவனியுங்கள், இப்போது நான் கூறப்போகும் வரியில் எது சரியாக இல்லை என்பதைக் கூறுங்கள்  : “ பாப்லோ கஸால்ஸின் செல்லோ வாசிப்பைப் போல்  அவளது குரல் அழகாக இருந்தது.” ?’

ஹெமிங்வேயின் மிக மோசமான  இயல்புகளின்  சிற்றுருவ மாதிரியாக விளங்கும்  Across the River and into the Trees என்ற நாவலிலிருந்து  தான் அவ்வரி எடுக்கப்பட்டது என்பதை அவர்களிடம் அவன் கூறவில்லை. பல்கலைக் கழகத்தில் அவனும் அவனது நண்பர்களும் மற்ற செல்லோ  பிரபலங்களின் பெயர்கள்,  மற்ற இசைக் கருவிகள் மற்றும் இதர உடற்கூறுகளை  அவ்வரியில்  நுழைத்து அதை கேலி செய்வார்கள்.  ஸ்டெஃபான் கிராப்பெல்லி ஜாஸ் வயலின் வாசிப்பதைப்  போல் அவள் மார்புகள் அழகாக இருந்தன…. இப்படிப் பல..   முடிவே இல்லாமல்  ஓடிக் கொண்டே இருந்தது  இந்த விளையாட்டு.

‘ நன்றாகத் தான் இருக்கிறது, என்று நான் நினைக்கிறேன்’

‘நம் தலைகளை மேட்டுக்குடி  கலாச்சாரத்தைக் கொண்டு  அறைந்து , அவன்  தற்பெருமை கொள்வது போலிருக்கிறது’

‘இதை எழுதியது ஓர் ஆண் என்று  கூறினேனா என்ன ?’

‘அதில் என்ன சந்தேகம். எந்தப்  பெண்ணாலும் இதை சுலபமாக கண்டுகொள்ள முடியும்’

நெத்தியடி  என்பது போல் அவன் தலையை ஆட்டி ஆமோதித்தான்.

‘ “பாப்லோ”  என்று  எழுத்தாளர் ஏன் கூறுகிறார்,  வெறும் “கஸால்ஸ்” என்று கூறினால் போதாதா ?’

‘ரோசி கஸால்ஸிடமிருந்து வேறு படுத்துவதற்காக இருக்கலாம்’

‘ரோசி கஸால்ஸ் யார் ?’

‘அவள் ஒரு டென்னிஸ்  வீராங்கனை’

‘புரியவில்லை, அவள் செல்லோவும் வாசித்தாளா  ?’

இப்படியே காலையும் கழிந்தது. அக்குழுவிலிருந்த எட்டு பேருமே இனிமையானவர்கள் : ஐந்து பெண்கள், மூன்று ஆண்கள். எழுத்துத் திறனை மேம்படுத்துவதற்கான படைப்பாக்க  வகுப்புகள் அனைத்துமே வகுப்பாசிரியருக்கு முதலிரவிற்கான  முன்னுரிமை அளிக்கும்  காமக் கழகங்கள்  என்று அவனது கவிதை எழுதும் நண்பனொருவன்  ஒரு முறை ஜாடைமாடையாகக்  கூறியிருந்தான். ஒருகால்  கவிஞர்களாவதற்கு விழைபவர்கள் அவர்களுக்கு  நிகரான  உரைநடை விரும்பிகளிலிருந்து வித்தியாசமானவர்கள் போல. வகுப்பிலிருந்த ஒரு பெண்ணிற்கு மட்டும் அவன்  சந்தோஷமாகவே தனிப்பாடம் எடுத்திருப்பான், ஆனால் அவள்,  தான் எப்போதுமே பிரயோகிக்கும் தேழ்வழக்கை  வட்டார வழக்கென்று பிரதிவாதம்  செய்யும் “திறனற்ற டிம்முடன்”,  ஒரு நாள் கைக்கோர்த்துக் கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்ததால் அவ்வெண்ணத்தைக்  கைவிட்டான்.

அவர்கள் நாற்காலிகளை  ஒன்று திரட்டி அமர்ந்து கொண்டிருக்கையில்  பில் தனது உள்ளங்கையால் மேஜையை  பலமாகத் தட்டினான்.

‘காப்டன், எனக்கு இப்பொது தான் ஒன்று தோன்றியது,  உங்க தீவிலே வந்திருந்தது  ஹெமிங்க்வேயாகவே இருந்தால்  ? ‘

‘தற்கொலை செய்து கொண்டவர்கள்  மரணத்திலிருந்து மீண்டு வந்தாலொழிய இதற்கு  சாத்தியமே இல்லை’

“ஓ ஷிட்” என்று  நினைத்துக் கொண்டான்,  தான் கூறியதை விக்கி  கேட்டிருக்கக் கூடுமோ என்பதை  உறுதி செய்வதற்காக சுற்றிலும் பார்த்துக் கொண்டே.  அதிர்ஷ்டவசமாக அவள் பாரில் தனது  “ரவுண்டை” வாங்கிக்  கொண்டிருந்தாள்.  இயல்பாக  இருப்பதற்கு முனைந்து கொண்டு, தற்செயலாகக் கேட்பதைப் போல், அவர்களில் எவரேனும் ஹெமிங்வேயைப் படித்திருக்கிறார்களா என்று கேட்டான். பதில்களில்  இரு ‘ஆமாம்’-களே  இருந்தன, இரண்டுமே ஆண்களிடமிருந்து. ஆனால் எல்லோருக்குமே எழுத்தாளரின் வாழ்க்கையைப் பற்றி  ஏதேனும் தெரிந்திருந்தது – எருதுச்சண்டை, பெருவிலங்குகளை வேட்டையாடுதல், பாரிசில் குடிபெயர்ந்தவராக இருந்தது, போர்முனைச் செய்தியாளர், பல மனைவிகள், குடிப்பழக்கம், தற்கொலை – ஆக எல்லோருமே இவற்றைப் பற்றிய அறிவினாலேயே அவரது படைப்பை  பற்றிய ஒரு  அபிப்பிராயத்தையும் வைத்துக் கொண்டிருந்தார்கள். அவற்றின்  கூட்டுத் தொகை இதுவே : கழிந்து முடிந்துவிட்ட ஒரு சகாப்தத்தின் எழுத்தாளர், இப்போது  காலம் கடந்து நீர்த்துப் போயிருக்கும் கருத்துக்களையுடைய முற்றுப்பெற்ற  ஒரு சகாப்தத்தின் எழுத்தாளர். விக்கி விலங்கினத்தின் மீது இழைக்கப் படும் கொடூரத்தைப் பற்றி நீண்ட பிலாக்கணத்தை  ஆரம்பித்தாள். அதற்கு, சொல்லி வைத்தாற்போல, அவளது காலணிகள் தோலால் செய்யப்பட்டதா  என்று பில் கேட்டான்.

‘ஆம், ஆனால் அவை எருதுச்சண்டை மைதானத்திலிருந்து வரவில்லை’

அவன்  கேட்டுக் கொண்டிருந்தான், புன்னகைத்தான், இன்னம் சிறிது குடித்தான். பப்பில் அவன் வாத்தியாக இருப்பதைத் துறந்தான்;  அவர்கள் விருப்பப்பட்டு,  எதை வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்

இறுதி நாளன்று, மாலையில்  கணிசமான ஆட்டிறைச்சி  ஸ்டூவொன்றை சமைத்தான். மேலும் போதுமான அளவு  வைன்  போட்டோல்களையும் அவன்  படைத்திருந்ததால் அவர்கள் பப்பிற்குச் செல்வதற்கான  அவசியமும் இல்லாமல் போனது. அவர்களின் புகழ்ச்சிக்கு பதிலளிப்பது போல் எழுத்தாளர்களையும் சமையலையும் பற்றிய அவனது கோட்பாட்டை அவர்களிடம் கூறினான். தொலை நோக்குள்ள நாவலாசிரியர்களின் மனநிலை  இயல்பாகவே, பல மூலப்பொருட்களை மெதுவாக ஒன்றிக்கலக்கும் மெல்லவிப்பு மற்றும் பொரித்தவிப்பு போன்ற காரியங்களுக்கு  ஏற்றதாக இருக்கிறது. ஆனால் வறுத்தல் வகைகளே கவிஞர்களுக்குப்   நன்றாக  பொருந்தும் போலிருக்கிறது. சிறு கதை எழுத்தாளர்கள் ? என்று யாரோ கேட்டார்கள்.  மாட்டிறைச்சியும் சிப்சும் . நாடக ஆசிரியர்கள் ? ஆ, நாடகாசிரியர்கள், அவர்கள் அதிர்ஷ்டக்கார  ஆசாமிகள். அடிப்படையில் மற்றவர்களின் திறமைகளையே அவர்கள்    ஒருங்கிணைத்து  கொண்டிருப்பதால், சமையலறை வேலையாட்கள்  பரபரப்பாக  உணவைத்  தயார்படுத்திக் கொண்டிருக்கையில், சாவகாசமாக  கதம்பப்பானகங்களைக்  கலக்குவது  கூட  அவர்களுக்கு நிறைவை அளித்திருக்கும்.

அனைவருக்கும்  இது உவப்பாக இருந்ததால், எந்தப் பிரபல  எழுத்தாளர் எந்த  உணவைப் படைத்திருப்பார் என்ற பகற்கனவில்  ஈடுபடத் தொடங்கினார்கள். ஜேன் ஆஸ்டன்னும் பாத் பன்களும். பிராண்டே சகோதரிகளும் யார்க்க்ஷைர் புடினும் வெர்ஜீனியா உல்ஃபையும் வெள்ளரிக்காய் சாண்ட்விச்சுகளையும் இணைத்த போது ஒரு விவாதமே எழுந்தது. ஆனால் கொண்டாட்டங்கள்  சூழ, ஒரு கையில் பீர்  கேனும், மற்றொரு கையில் பெரிய கரண்டியுமாக   “மார்லின் ஸ்டேக்குகளும்” , மாட்டிறைச்சித் துண்டங்களும்  குவிந்திருக்கும்  மிகப்பெரிய பார்பெக்யூ அடுப்பிற்கு  முன்   சர்ச்சைகள் ஏதுமின்றி அவர்களால் ஹெமிங்வேயை நிறுத்த முடிந்தது.

மறுநாள் காலை  உள்ளூர் ரயில் நிலையத்திற்குச் செல்வதற்காக ஒரு மினிபஸ்ஸை அவர்கள்  அமர்த்திக்  கொண்டார்கள். மழை இன்னமும் பெய்து  கொண்டிருந்தது. ஸ்வான்சீயில்  கைகுலுக்கல்களும், சில கூச்சமான கன்ன–முத்தங்களும் இருந்தன. அவன்  விரும்பிய பெண்ணின் பார்வை அவனை நாடி ஏதோ கூறுவது போல் இருந்தது : இல்லை, உன்னால்  புரிந்துகொள்ள முடியவில்லையா, நான் விரும்பி அடைந்திருக்கக் கூடிய நபர் டிம் அல்ல, அவன் மீதுள்ள பரிதாபத்தால் தான்  அவனுடன்  கைகோர்த்துக் கொண்டேன்.  ஒரே ஒரு பார்வை அல்லது சமிக்ஞையை  நீ செய்திருந்தால்  கூட போதும்..  இது தன் பரிவான கற்பனையின் சரியான யூகமா அல்லது  வெறும் மமதையின் மடமையா  என்று அவன் யோசித்தான். அது எப்படி இருந்தாலும், அவள் இப்போது வேறு ரயிலில்  இருக்கிறாள், வேறொரு வாழ்க்கையை நோக்கி சென்றுகொண்டு, நானோ எனது ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்திருக்கிறேன், ஈரமான வேல்சை பார்த்தபடி.  டிரைவரை ஒதுக்கி விட்டால், வெள்ளை  பீச் பக்கியிற்கு கேள்விக்கிடமின்றி ஒரு வசீகரம் இருக்கத் தான் செய்கிறதென்று அவன் நினைத்துக் கொண்டான். லண்டனில் அதில் வலம் வந்தால் அனேகமாக, உங்களை வெறும் உரை நடையாசிரியராக அல்லாது ஒரு ராக்கிசைக் குழுவின்  நபராகவே  மக்கள்  உருவகித்துக்  கொள்வார்கள். இதில் பரிதாபம் என்னவென்றால் அப்படி ஒரு பக்கி அவனுடைய வசதிக்கு அப்பாற்பட்டது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒரு பழைய மோரிஸ் மைனரைத் தான் அவனால் வாங்க முடிந்திருந்தது.

2. ஆல்ப்ஸ் மலைகளில் பேராசிரியர்

நீளமான, கரிய மேஜையின் இருபக்கங்களிலும் துல்லியமான இடைவெளிகளில் ஆறு மாணவர்களை அமர்த்தியபடி பேராசிரியர் தலைமை வகித்திருந்தார். மறுமுனையில் பதினைந்து அடிகள் தள்ளி பளிச்சிடும் ஸ்வெட்டருடன் தன் பரந்த தோள்களால், வெளியே காடு, சுருண்டிருக்கும் வடங்கள் மற்றும் உயர்ந்த மலைகள் நிரம்பிய காட்சியை மறைத்தபடி, அவரது பயிற்சி உதவியாளர் குண்டெர் அமர்ந்திருந்தான்.  ஜூலை மத்தியில்  ஸ்கீ கடைகளும், வாடகை இடங்களும் பாதிக்கு மேற்பட்ட உணவகங்களும் மூடிக்  கிடந்தன. ஒரு சில சுற்றுலா பயணிகள், நீள்வழி நடைக் குழுக்கள் மற்றும் பயிற்றுவிப்பதற்காக (அதிர்ஷ்டவசமாக, ஆங்கிலத்தில்) தன்னை ஆறு நாட்களுக்கு அழைத்திருந்த இந்த கோடைப் பள்ளி, இவை மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்தன. வணிக வகுப்பு பிரயாணம்,  கணிசமான சம்பளம் மற்றும் தினப்படிகள்,  உபயோகத்தில் இல்லாத வேளைகளில் பள்ளி மினிவேனை  பயன்படுத்திக்கொளவ்தற்கான உரிமை போன்ற சலுகைகள் அவனுக்கு வழங்கப்பட்டிருந்தன. இவற்றிற்கு பதிலாக  ஒரே ஒரு கூடுதல் கடமையையே அவன் ஆற்றவேண்டியிருந்தது :இறுதி நாளிரவு  ஒரு பொது நிகழ்ச்சியில் அவன் வாசித்தாக வேண்டும். அவன் இதை ஆசையுடனே எதிர்பார்த்திருந்தான்: அவனுடைய தலைமுறையில், பொதுவில் வித்தைக்கார்களாகவும் ,சொந்த வாழ்க்கையில் தனித்த உண்மை-நாடுபவர்களாகவும் உண்மை-கூறுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிற்கு எழுத்தாளர்கள்  நன்றாகவே தங்களை  பொருத்தமாக்கிக் கொண்டுவிட்டார்கள்.  பேட்டி எடுப்போர்களுடன் சகஜமாகவும் (அனேகமாக புதுப் புத்தகம் வெளிவரும் சமயங்களில் பயன்படும் வகையில் அரசியல் விஷயங்களில்  சீண்டுவதற்கான விஷமத்துடன்), ஒலிபெருக்கியில் சற்று வேசித்தனமாகவும் இருக்க பழகியிருந்தான். ஆகா, தயார்ப்படுத்தப்பட்ட முன்னேற்பாடற்ற பேச்சின் வசீகரம்! இத்தருணங்களில்  வெளியில் கொணரப்பட்ட தனது அம்சங்கள்  அவனை ஆச்சரியப்படுத்தி மகிழ்வித்தன. அண்மையில் அவனை விட்டுப் பிரிந்த அவனது மனைவி லின்னை அவை பெரிதாகக் கவரவில்லை. அண்மை காலம்  அவனுக்கு  அவ்வளவாக உகந்ததாயில்லை. அவள்  பிரிந்து செல்கையில்  கூறிய பல வரிகளிலொன்று :‘ஆஞ்சிக்கு இழைத்ததைப் போல் நம்மிருவரைப் பற்றியும் ஒரு புத்தகத்தை எழுதி விடாதே’  . தான் ஒரு போதும் அப்படிச் செய்யமாட்டானென்ன்றும், முதல் முறை செய்ததே தவறு என்பது போலும்  உள்ளங்கை  முன்னே தெரியும்படி கைகளை உயர்த்தினான்.  நாவல் இரண்டு குறும்பட்டியல்களில் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் கூட. அவர் விரும்பிக் கூறுவதைப் போல் புனைவென்பது  அடிப்படையில்  எந்த ஒழுக்கத்தையும் சாராது, அனைத்தையும் உட்கொள்ளும் பண்புடையது என்றாலும் கூட….

‘ஆனால் ஹெர்  பிரொபஸர் (Herr Professor) இதைப் பற்றி என்ன நினைக்கிறார் ?’

‘ முதலில் நீங்கள் எல்லோரும் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் கேட்க  விரும்புகிறேன் – மாரியோ ? டீடெர் ? ழான்-பியெர் ?’

சிந்திப்பதற்கு அவருக்கு மேலும் நேரம் தேவைப்பட்டது. இன்னம் விரிவாக அலசும் நோக்கத்துடனேயே பிற்பகல் வகுப்பு அமைக்கப்பட்டிருந்தது. மாணவர்கள்  பரீட்சிக்கப்படும் நூல்களை காலையில் அலசுவார்கள். பிற்பகல் அவர் அவர்கள் சிந்தனையை விரிவுபடுத்தி, பரவலான கலாச்சாரத் தொடர்புகளை  கண்டறியச் செய்து, சமூக மற்றும் அரசியல் தொடர்பான விஷயங்களை  கலந்துரையாடச் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது.  இது சுலபமாகத்தான் இருந்திருக்க வேண்டும், ஆயினும் சில வேளைகளில்  அருவமானதையும், கோட்பாடு சார்ந்தவற்றையும் இயல்பாகவே எளிதாக எதிர்கொள்ளும் அவர்களின் பெருநிலப்பகுதி மனங்கள் அவரது ஆங்கிலேய நடைமுறை நோக்கை  சிந்தனை கவனக்குறை போலக் காட்டியது. இருந்தும் கூட, அவரை அவர்களுக்குப் பிடித்திருந்தது. அவரும் அவர்களை விரும்பினார்-  விதிமுறைகளைக் கடைபிடிக்காத அவரது ஒழுங்கின்மைக்கு  அவரது துடிப்பான கற்பனையை அவர்கள் காரணம் காட்டியது அதற்கு முக்கியமான காரணம்.   ஆனால்  அவர் புத்தகங்களை எழுதிய “ஹெர்  பிரொபஸர்” என்பதை அவர்கள் ஒரு போதும் மறக்கவில்லை. மற்ற யுத்திகளனைத்தும் தோல்வியடைந்தாலும், துண்டுத் தகவல், கனவு, நினைவு, பரட்டை-நாய்க் கதை… இவற்றில் ஏதாவது ஒன்றை  அவர்களிடம்  கூறும் யுத்தி  எப்போதுமே  அவர் கைவசமிருந்தது. அவர்கள்  மிகப் பணிவாகவே  இருந்தார்கள். மேலும்  ஆங்கிலேயர்களின் பிரசித்தம் பெற்ற நகைச்சுவையுணர்வைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருந்ததால் அவர்  விசித்திரமாக அல்லது முன்பின் தொடர்பில்லாமல் எதையாவது  கூறினால் கூட அதை அடக்கமான சிரிப்புடன் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் ழான்-பியெர், மாரியோ மற்றும் டீடர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துவிட்டார்கள். அவரது கருத்துரைக்காகவே அனைவரும் காத்திருந்தார்கள்.

‘உங்களில் எவருக்கேனும் சைபீலியஸ்ஸின் இசையைப் பற்றி தெரியுமா ?’

இருவருக்கு மட்டும்…  சரி தான்..

‘சரியான இசையியல் மொழியில் என்னால் இதை விளக்க முடியாமல் போனால், என்னை நீங்கள் மன்னித்து விட வேண்டும்.  இசையில் நான்  வெறும்  கத்துக்குட்டியே. சரி விஷயத்திற்கு வருகிறேன்.. சைபீலியஸ்  தோராயமாக்  1865 –இல்  தொடங்கி   தோராயமாக 1957  வரையிலும்’ (அவனுக்குச் சந்தேகமின்றித் தெரியும் அவை சரியான வருடங்களென்று… இதைத்தான் அவன் ‘வேசித்தனம்’ என்று குறிப்பிடுவான்)  ‘ஏழு சிம்ஃபனிகள், ஒரு வயலின் கான்சர்டோ, பல்லியத் தொனிக் கவிதைகள், பாடல்கள், நால்வர்  நரம்பிசைப் படைப்பான Voces Intimae, அன்னியோன்னியமான  குரல்கள். சிம்ஃபனிகளை எடுத்துக் கொள்வோம் (மற்ற படைப்புகளைப் பற்றிக் கூறுவதற்கு அவனிடம் ஒன்றுமில்லை என்பதால்)  அவை (முதலிரண்டும்)  பெரும் இன்னிசை விரிவுடன் தொடங்குகின்றன.  பெரும்பாலும் ஷைகோவ்ஸ்கி, கொஞ்சம் பிரூக்ணர் மற்றும் திவோஷாக், அனேகமாக மாபெரும் பத்தொன்பதாம் நூற்றண்டு யூரோப்பிய சிம்ஃபனி மரபை அதில் கேட்கலாம். அதன் பிறகு மூன்றாவது சிம்ஃபொனி – சுருக்கமாக, அதே இன்னிசைத் தன்மையுடன், ஆனால் இன்னமும் அதிகமான கட்டுப்பாட்டுடன், அனைத்தையும் வெளிக்காட்ட தயங்குவதைப் போல், புதிய திசையில் போய்க்கொண்டு.. அதற்குப் பிறகு மாபெரும் நான்காவது, ஆடம்பரமற்று, அச்சுறுத்தும், பாறையின் கடுமையுடன், அவர் நவீனத்துடன் மிக அதிகளவில் ஈடுபடுத்திக் கொண்ட படைப்பு.’ (ஆஸ்டிரிய பியானிஸ்ட் ஒருவரின் ரேடியோப் பேட்டி ஒன்றிலிருந்து இச்சொற்றொடரை அவன்  திருடியிருந்தான், ‘இல்லை, சைபீலியஸ்ஸின் மீது எனக்கு பெரியளவில் அக்கறை ஒன்றுமில்லை,  அவர் நவீனத்துடன் மிக அதிகளவில் ஈடுபடுத்திக் கொண்ட நான்காவதைத் தவிர.’) ‘பின்னர்  ஐந்தாவது, ஆறாவது மற்றும் அடர்த்திக்கே உதாரணமாக விளங்கும் ஏழாவது சிம்ஃபொனி. சந்தேகத்திற்கு இடமின்றி தவறு செய்யக்கூடிய என் காதுகளுக்கு, மூன்றாவதிலிருந்து ஏழாவது சிம்ஃபொனி வரையிலும் சைபீலியஸ் இந்தக் கேள்வியையே கேட்பாதாகத் தோன்றுகிறது: மெலடி என்றால் என்ன ? அதை எவ்வாறு சுருக்குவது, ஒரு இசைச் சொற்றொடரின் வரையிலும்கூட. மேலும் சுருக்கப்பட்ட அத்தொடரை  அருமையான கடந்த நாட்களின் பெரும் டியூன்களைப் போல் மின்னூட்டத்துடன் நினைவில் வைக்கத்தக்கதாக ஆக்குவது? நம்மை வசீகரித்துக் கொண்டிருக்கையிலேயே தன்னையும், தனது அடிப்படை ஆதாரத்தையும் கேள்விக்கு உட்படுத்திக் கொள்ளும் இசை. உங்களுக்கு அதில் சிலதை வாசித்துக் காட்ட முடிந்தால்  நன்றாக இருந்திருக்கும்’

‘ஹெர் பிரொபெசர் கருத்தரங்கில் ஒரு பியானோ இருக்கிறது’

‘நன்றி, குண்டெர்’

தனது சிந்தனைச் சங்கிலி உடைபட்டது போல் முகத்தை சுளித்தார். அவரது பயிற்சி உதவியாளன் எப்போதும் அவருக்கு உதவி செய்வதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருப்பது தர்க்க  ரீதியாக சரியாகவே இருப்பினும்   சில சமயங்களில் அவரை எரிச்சலடைய வைத்தது. ஆனால், குண்டெர்  வரிசைகளில் வெட்கமில்லாமல் முந்தியடித்துக் கொண்டு ஹெர் பிரொபெசருக்கு காப்பி  கொண்டுவருவதில்  கில்லாடி.

‘ நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் : இந்த பழமைவாய்ந்த, அற்புத – நாம் கதை என்றழைக்கும் –  பொருள் என்பது என்ன ? இந்தக் கேள்வியைத் தான் நவீனத்துவமும் கேட்டது, சொல்லப் போனால் நாம் எல்லோருமே இன்னமும் கேட்க வேண்டிய கேள்வி இது. நான் இந்த எளிமையான, அடிப்படையான – கதைக் கூற்று என்றால் என்ன? – கேள்வியைப் பற்றி சிந்திக்கையில், அனேகமாக மாபெரும்  ஃபின்லண்டு நாட்டவரான சைபீலியஸிடமே விடைகளைத் தேடுகிறேன் (இசையமைப்பாளர் ஃபின்லண்டு நாட்டைச் சேர்ந்தவர் என்பதை அவர்கள் அறிந்திராத பட்சத்திற்காக, இந்தத் தகவலைச்  சேர்த்துக் கொண்டான்). ‘ஆம், சைபீலியஸ். சரி, ஓர் இடைவெளி எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. நன்றி குண்டெர் , எனக்கு காப்பியில் பால் வேண்டாம்.’

இருபது நிமிடங்கள் கழித்து மீண்டும் தொடர்கையில் பயிற்சி உதவியாளன்  ரிக்கார்டு பிளேயரும், பல பழைய LP இசைத்தட்டுகளுடனும் வந்தான்.

‘முதல் சிம்ஃபொனி, நான்காவது, மற்றும் ஏழாவது  சிம்ஃபொனிக்கள் என்னிடம் இருக்கிறது, ஹெர் பிரொபஸர்.’

‘குண்டெர் நீ ஒரு மந்திரவாதி, எப்படி உன்னால் இதைச் செய்ய முடிந்தது ?’

அவரது உதவியாளன் கூச்சத்துடன் சிரித்தான். ‘கிராமத்தில் வசிக்கும் ஒரு இசைப் பேராசிரியரின் பெயரைக் கண்டுபிடித்தேன்.  இசைத்தட்டுகளை உங்களுக்கு இரவல்கொடுத்தது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவரது வணக்கங்களை உங்களிடம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.  ரிக்கார்டு பிளேயர்  பள்ளிக்குச்  சொந்தமானது.’

மாணவர்கள் தன்னை எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்ததை  அவனால் உணர முடிந்தது.

‘சரி, அப்படியானால் நான்காவது சிம்ஃபொனியின் முதல் மூவ்மெண்டைப் போடு, உனக்கு ஆட்சேபணை ஏதுமில்லையென்றால்’

அவர் உட்கார்ந்தபடி யோசித்தார், சைபீலியஸ்ஸைக் கேட்பதற்காக -எட்டு நிமிடம் நாற்பத்தி ஏழு நொடிகள் தான் என்றாலும் கூட –  சம்பளம் அளிக்கப்படுவது எவ்வளவு அருமையான விசயமென்று. அந்த இசையும்தான்  எவ்வளவு அருமையாக இருக்கிறது, சுத்தமான காற்று, நீலவானம் மற்றும்  உயர்ந்த மரங்கள் நிரம்பிய இந்த நிலக்காட்சியில் ஆர்பியசின் இருண்ட மறைபுதைவான தன்மையுடன். அவன் வாழ்க்கையே ஒரு குளறுபடியில் இருந்தது, அவனது கடைசி நாவலின் மீது லண்டனிலிருந்த பொறுக்கிகள் பெரும் உயரத்திலிருந்து குப்பையை வாரி இறைத்திருந்தார்கள், இனிமேலும் நிலைக்கும்படியாக அவன் எதையாவது எழுதுவானா என்பதே  சந்தேகத்திலிருந்தது, எனினும் – நரம்பிசைக்கருவிகள் அச்சத்துடன் மேலே எழ , பித்தளைக்கருவிகள் ஏதோ பெரும் அறிக்கையொன்றை வெளியிடப்போவதைப் போல் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, இறுதி வரை அதை வெளியிட முடியாமல்… –  நம் ஏழை வாழ்வுகளில் ஆழ்நிலைக் கணங்களைக்  கண்டறிவதற்கான வாய்ப்பு இன்னமும்  இருக்கத் தான் செய்கிறது.

மூவ்மென்ட் முடிந்தவுடன் ரிகார்டு பிளேயரின் பிக்கப் ஊசியை உயர்த்தும்படி குண்டெரிடம் தலையசைத்தார். என் வாதத்தை நிரூபிப்பதற்கு நான் இனி எதையுமே  கூற வேண்டியதில்லை என்பது  போல் ஒன்றுமே பேசாமல் , அங்கு அமர்ந்திருந்தான். பின்னர், இரவுணவின் போது, அனைவரும் ஒழுங்குமுறையின்றி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சில மாணவர்கள் தாங்கள் அவ்விசையை மிகவும் விரும்பியதாக அவனிடம் கூறினார்கள். வேறொரு மனநிலையில் அவன் இதைத் தவறாக அர்ததம்  பண்ணிக்கொண்டு, மற்றது ஏதோ ஒன்று – அவன் பயிற்றுவிக்கும் விதம், அவனது உடை, கருத்துக்கள், புத்தகங்கள், வாழ்க்கை – அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று யூகித்திருப்பான். ஆனால் இசை  பேரமைதியை அளிக்கவில்லை என்றாலும் ஒரு மோனமான இடைநிறுத்தத்தை அவன் இருப்பிற்கு வழங்கியது. மேலும்  மேலும் இதைப் பற்றி சிந்திக்கையில் அதிகபட்சம்  ஒரு வகையான  இடைநிறுத்தத்தை மட்டுமே  வாழ்க்கையிலிருந்து நாம் எதிர்பார்க்க முடியும் என்ற முடிவிற்கு வந்தான் .

மறுநாள் பிற்பகல், அவர்களிடம் ஹெமிங்வேயைப் பற்றிக் கூற முடிவு செய்தான். நாக்ஸோஸில் வெள்ளை ஜீப்பிலிருந்த ஆளிலிருந்து தொடங்கினான். காலப்போக்கில் எழுத்தாளனின் வாழ்க்கை அவனது கலையை விட முக்கியத்துவம்  பெற்றால் என்ன ஆகுமென்பதற்கு ஒரு சின்னமாகவே அவன் ஆகி இருந்தான்.  ஹெமிங்வேயைப் போல் பாசாங்கு செய்து திரிவதை யார் தான் விரும்புவார்கள் ? என்று கேட்டான். இங்கிலாண்டில் போலி ஷேக்ஸ்பியர்களும், ஜெர்மனியில் மலிவான (ersatz) கத்தேக்களும், பிரான்சில் சுற்றிக்  கொண்டிருக்கும் கள்ளத்தனமான (faux) வால்டேர்களும்  இருப்பதை  நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை  என்று அவன் கூறியதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள். மேலும்  ‘போலி’ என்பதற்கு சரியான இத்தாலிய வார்த்தையை அவன் அறிந்திருந்தால், டாண்டேயையும்  இதில் சேர்த்திருப்பான், மாரியோவை மகிழ்விப்பதற்காக.

நீண்ட காலமாக ஹெமிங்வேயை புறக்கணித்து விட்டு, அன்மையில் சில ஆண்டுகளாகதான் அவரை  பெரிதும் மெச்சுவதாக  அவர்களிடம் கூறினான். நாவல்களைக் காட்டிலும் கதைகளை : அவனைப் பொருத்தவரையில் ஹெமிங்வேயின் முறை சிறு தொலைவில் நன்றாக வேலை செய்தது. ஜேம்ஸ் ஜாய்சிடமும் நாம் இதைக் காணலாம். டப்லிணர்ஸ் ஒரு பெரும்படைப்பு. ஆனால் அதன் தொடக்கம் எவ்வளவு தான் அற்புதமாக இருந்தாலும் யுலிசெஸ் அடிப்படையில் ஸ்டீராய்டுகளால் விகாரமாக பருமனாக்கப்பட்ட ஓர் சிறுகதையே. யுலிசெஸ் ஒலிம்பிக்ஸில் போட்டியிடுவதற்கு நுழைந்தால் போதைப் பொருள் சோதனையைக் கூட அதனால் கடக்க இயலாது.  இக்கருத்தும், அது எப்போதுமே ஏற்படுத்திய அமைதியின்மையும் அவனுக்குப் பிடித்திருந்தது..  வழக்கத்தை விட அதிகமான கலவரத்தை அது இங்கு ஏற்படுத்தியதை அவன் உணர்ந்தான்.

ஆனால் அவர்களை  “ஸ்விட்ஸர்லாண்டிற்கு அஞ்சலி” என்று பொருத்தமாகப் பெயரிடப்பட்ட கதையின்  பக்கம் திசைதிருப்பவே அவன் விரும்பினான்.  இது ஹெமிங்வேயின் பிரசித்தம்  பெற்ற கதைகளில் இல்லை என்றாலும், முறையாகவே எழுதப்பட்டிருந்தாலும் அதிகப் புனைவுத் திறனை வெளிப்படுத்தும் கதைகளிலொன்று. மூன்று பாக கட்டமைப்பைக் கொண்டது. ஒவ்வொரு பாகத்திலும், குடிபெயர்ந்த அமெரிக்கன் ஒருவன் வெவ்வேறு ஸ்விஸ் ரயில் நிலையங்களில் ரயிலிற்காக காத்துக் கொண்டிருக்கிறான். ஒரே  ரயிலிற்காகத் தான் அவர்கள் எல்லோருமே காத்துக்  கொண்டிருக்கிறார்கள். மேலும் வெவ்வேறு பெயர்களிருப்பினும் அவர்கள் அனைவருமே ஒருவரையொருவர் நகலித்துக் கொள்ளும் பிரதிகளே. அல்லது அனேகமாக, நேர்பொருளில் இல்லை என்றாலும் உருவகத்திலும், புனைவிலும், அவர்கள் ஒரே ஆளாகவே இருக்கலாம்.  ரயிலின் தாமதத்தால் அவன் ரயில் நிலைய காப்பி அருந்தகத்தில் காத்துக் கொண்டிருக்கிறான். குடிக்கிறான், பணிப்பெண்ணை உடலுறவு கொள்ள அழைக்கிறான், உள்ளூர் ஆசாமிகளைக் கேலி செய்கிறான். அந்த அமெரிக்கனது வாழ்வில் ஏதொ ஒன்று நடந்திருக்கிறது என்ற முடிவிற்கு நாம் வர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருகால் சோர்வால் அவனது வாழ்வுச்சுடர் அணைந்து போயிருக்கலாம். ஒருகால் அவனது மணவாழ்க்கை   சிதிலமடைந்திருக்கலாம். ரயிலின் இலக்கு பாரிஸ் : ஒரு வேளை அவன் எதனிடமிருந்து ஓடி சென்றானோ அதனிடமே  திரும்ப சென்று கொண்டிருக்கலாம்.  அல்லது அவனது இறுதி இலக்கு அமெரிக்காவாக இருக்கலாம். ஆக  அது விட்டோடி மீண்டும் வீடு தரும்புவதைப் பற்றிய கதை – மேலும் சுயத்தையே விட்டோடி மீண்டும் அதனிடமே சேர்வதற்கான நம்பிக்கையைப் பற்றியதாகவும் இருக்கலாம். கதையின் மூன்று பகுதிகளும் ஒன்றின் மேலொன்று கவிந்திருந்தன. ஆட்கள், பார்கள் மற்றும் ரயில் அனைத்துமே ஒன்றோடொன்று கவிந்திருந்தன , நம் வாழ்க்கைகளும்  எப்படி அவ்வாறே ஒன்றின் மேலொன்று பொருந்தி இருக்கின்றன என்பதைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டியது.  நாமெல்லோருமே தொடர்புபடுத்தப் பட்டிருப்பதைப் பற்றி, நாமெல்லோருமே உடந்தையாக இருப்பதைப் பற்றி..

அவன் பேசி முடித்ததும்  மௌனம் நிலவியது.  நீண்ட காலம்  மீள்வாசிப்பே செய்யாத படைப்புகளைப் பற்றிப் பேசுவது சுலபமாகவே இருந்தது  அவனுக்கு விசித்திரமாக இருந்தது.  நுணுக்க விவரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருந்ததால், புனைவின் விரிவான உண்மைகள் இயல்பாகவே அவன் பேசிக்கொண்டிருக்கையிலேயே இயல்பாகத் தோன்றியது.

இறுதியில் அமைதியான ஆனால் உறுதியுடனிருந்த ஆஸ்டிரியப் பெண்ணொருத்தி மௌனத்தை உடைத்தாள்.

‘ஆக ஹெர் பிரொபசர் , ஹேமிங்வே அப்படியே சைபீலியஸை  ஒத்திருக்கிறார் என்று  நீங்கள் கூறுகிறீர்கள் ?’

அவன் பூடகமாகச் சிரித்துவிட்டு, காப்பி கொண்டுவரும்படி குண்டரிடம்  சமிக்கை செய்தான்.

3. மத்தியமேற்குப் பகுதிகளில் மேஸ்டிரோ

வகுப்பறைகளும், ஆபீசுகளும்  மட்டுமே நிறைந்த ஒரு காட்சி, ஆனால் ஜன்னல் மீது அழுத்திக்கொண்டு  நோக்கினால் கீழே ஊக்கங்கெடுக்கப்பட்ட  புல்லையும், மேலே வானத்தையும் பார்க்க இயலும். முதலிலிருந்தே திருகாணியால் தளர்வாக இணைக்கப்பட்ட மூன்று உலோக மேஜைகளில் எதிர்பார்க்கப்பட்ட தலைமை இடத்தில் உட்கார அவன் மறுத்துவிட்டான். எந்த மாணவனின் படைப்பு விவாதிக்கப் படுகின்றதோ அவனை  தலைமை இடத்திலும்,  பிரதான விமர்சகர் அல்லது மறுமொழியரை எதிர்முனையிலும் அமரச் செய்தான். மேஜையின் ஒருபுறம் மூன்றில் ஒரு பங்கு தூரத்தில் அவன் தன்னை அமர்த்திக் கொண்டான். நான் உண்மையை நிர்ணயிப்பவன் அல்ல ஏனெனில் இலக்கியத் தீர்ப்புரையில் அறுதியான உண்மை என்பது கிடையாது. நிச்சயமாக பல நாவல்களைப்  பதிப்பித்த நான் தான் உங்கள் பிரொபசர் என்றாலும்,  கல்லூரிச்சிற்றிதழ்களில் மட்டுமே உங்கள் படைப்புகள் இடம்  பெற்றுள்ளன என்றாலும் கூட உங்கள் படைப்புகளை விமர்சிப்பதற்கு நானே தகுதியானவன் என்று கூறிவிட முடியாது. உங்கள் படைப்புகளை பயனளிக்கும் வகையில் மதிப்பிடக் கூடியவர் உங்களுடன் படிக்கும் சகமாணவராகவும் இருக்கலாம்.

இது போலித் தன்னடக்கமல்ல. அவனது மாணவர்களை அவனுக்குப் பிடித்திருந்தது, அனைவரையுமே.  அவர்களும் பதிலுக்கு அவன் மீது அன்பு கொண்டிருந்தார்கள்  என்று அவன் நம்பினான் ; திறமை எப்படி இருப்பினும்  அவர்கள் அனைவரும் தங்கள் தனிப்பட்ட குரல்களில் எழுதியதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். ஆனால் விமர்சனப் பரிவிற்கும் ஒரு எல்லை இருக்கிறது. துப்பாக்கி-பையனையே எடுத்துக் கொண்டால் சிகாகோவின் மோசமான பகுதிகளைக் களமாகக் கொண்டிருக்கும் ஜென்-எக்ஸ் கதைகளைத் தவிர எதையுமே அவன்  வகுப்பில் திருத்தப்படுத்துவதற்காக கொடுத்ததில்லை. மேலும்  மற்றவர்களின்  படைப்புகள் ஏதேனும் அவனுக்கு பிடிக்காமல் இருந்த பட்சத்தில், கையைத் துப்பாக்கியை போல் வைத்துக் கொண்டு அதைச் சுடுவது போல் பாவித்து, காட்சியின் அழுத்தத்திற்காக  துப்பாக்கியின் பின்னுதைப்பையும் கூடச் சேர்த்துக் கொள்வான். இல்லை, எப்போதுமே அவனால்  துப்பாக்கி-பையனின் தலைசிறந்த வாசகனாக ஆகவே முடியாது.

அமெரிக்காவின் இயல்பான நிலையையும் சாதாரணத்துவத்தையும் நினைவு படுத்திக்கொள்வதற்காகவே இந்த மத்தியமேற்கு வளாகத்திற்கு வந்த்திருந்தது நல்ல திட்டமாகவே அவனுக்குத் தோன்றியது. தொலைவிலிருந்து நோக்குகையில், அமெரிக்காவை அவ்வப்போது அதிகாரத்தால் வெறியேற்றப்பட்டு, ஸ்டீராய்டுகளை துஷ்பிரயோகம் செய்பவரின் வன்செயல்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு நாடாகவே பார்ப்பதற்கான ஆசை எப்போதுமே இருந்தது. அதன் கெட்ட பெயருக்கு காரணமான இடங்களையும் அரசியல்வாதிகளையும் விட்டு விலகியிருந்த இவ்விடத்தில் , வாழ்க்கை மற்ற இடங்களில் இருப்பதைப்  போலத் தான்  இருந்தது. எப்போதும் போல் தங்களுக்கு மட்டுமே பூதாகாரமாகத் தோன்றிய சின்ன விசயங்களைப் பற்றித் தான் இங்குள்ள மக்களும்  கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவனது புனைவில் வரும் மக்களைப் போல. இங்கு அவன் ஜாதி நீக்கம் செய்யப்பட்டவனைப் போல் அல்லது வாழ்க்கையில் தோல்வியுற்ற்வனைப் போல் கருதப்படாமல் வரவேற்கப்படும் விருந்தாளியாகவே நட்த்தப்பட்டான்.  அவ்வப்போது  புரிந்துகொள்வதில் பெரிய இடைப்பள்ளங்களும் ஏற்ப்பட்டன : நேற்று மதிய உணவு சேவை முகப்பில் அவன் உட்கார்ந்திருந்த போது “ யூரோப்பில் எந்த மொழியை இப்போது பேசிக் கொள்கிறார்கள்?” என்று  பக்கத்து இருக்கையிலிருந்தவர் கேட்டார். ஆனால் இம்மாதிரியான தகவல்கள் அவனது அடுத்த அமெரிக்க நாவலுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அவன் அதை எப்போதாவது எழுதுவான் ஆனால்.  இல்லை, நிச்சயமாக அவன்  அதை  எழுதுவான்.  யாராவது அதைப் பதிப்பிப்பார்களா என்பதே கேள்வி. “ஒரு விதமான இடைநிறுத்தம்” என்ற அவனது கடைசி நாவலை பன்னிரண்டு பதிப்பாளர்கள் நிராகரித்துவிட்ட அவமானத்திலிருந்து தப்பிப்பதற்காகவே இந்தப் பணியை அவன் ஏற்றுக் கொண்டான்.  இருந்தாலும் கூட அது மோசமான புத்தகமல்ல என்பதை அவன் அறிவான்.  அவனது மற்ற எல்லா புத்தகங்களின் அளவிற்கு இதுவும்  நன்றாக இருக்கிறது என்று அனைவரும் கூறினார்கள். ஒருவகையில் இது தான் பிரச்சனையும் கூட.  கடந்த சில ஆண்டுகளாகவே அவனது புத்தகங்களின் விற்பனை அதிகரிக்காமல்  தட்டையாகவே இருந்துகொண்டிருந்தது. நடுவயதடைந்த வெள்ளைக்காரன் என்பதைத் தவிர வேறெந்த அடையாளமும் – உதாரணமாக தனது வாழ்க்கைக் குறிப்பை மற்றொரு தளத்திற்கே எடுத்துச் செல்லக்கூடிய தன்னிறைவே உருவான தொலைக்காட்சி  நிருபர்  என்ற அடையாளம்-  அவனிடமில்லை.  அவனுடைய பார்வையில் நாவல் – சொல்லப்போனால் நாவல் என்று வலியுறுத்திக் கூறவேண்டும் –அன்னியோன்யமான குரல்களை கலைத்திறத்தோடு கலந்து தனது அரிய உண்மைகளை வழங்குகிறது. ஆயினும் தற்காலத்தில் மக்கள் அதை விடச் சத்தமான ஒன்றையே விரும்புகிறார்கள்.  ‘ஒருக்கால், என் மனைவியைக் கொன்றுவிட்டு, அதன்பிறகு அதைப் பற்றி ஒரு நாவலை எழுதியிருக்கவேண்டும்’, என்று தன் கழிவிரக்கக் கணங்களில் அவன் நொந்துகொள்வான். ஆனால் அவனுக்குத் தற்போது மனைவி என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை, மாஜி மனைவி ஒருவள் மட்டுமே இருந்தாள். அவளைப் பற்றி நினைக்கையில் உணர்ச்சிவசப் படுவானே தவிர கொலைவெறி ஏதும் அவனுக்கு வரவில்லை. இல்லை, அவனது நாவல்கள் நன்றாகவே இருந்ததென்றாலும் அவை பெருமைப்படுமளவிற்கு நன்றாக இல்லை என்பதே உண்மை. ‘ “ஒரு விதமான இடைநிறுத்தம்” செம்மையான, திறமையுடன் எழுதப்பட்ட ஒரு நடுப்-பட்டியல் (mid-list) புத்தகம். நடுப்-பட்டியல் என்றொரு வகை இப்போது இல்லாமல் ஆகிவிட்டதே பிரச்சனை’ என்று ஒரு பதிப்பாளர் அவனது ஏஜெண்டிடம்  எழுதியிருந்தார். ஏஜெண்டும்  அத்தீர்ப்பை வெளிப்படையாகவே அவனிடம் தெரிவித்தார்.

‘மேஸ்டிரோ?’

அவனது மாணவர்களிலேயே மிக புத்திசாலியான ( அவளது கதைகளில் அளவுக்கதிகமாகவே நாய்கள் இடம்பெற்றிருந்தாலும் கூட)  கேட்  குரலெழுப்பினாள். ஒரு முறை சிகப்பு பீரோ பேனாவால் ‘நாயைக் கொன்றுவிடு’ என்று பக்கத்தின் விளிம்பில் எழுதியிருந்தான். வகுப்பில் படிக்கப்பட்ட அவளது அடுத்த கதையின் பெயர் ‘அழிவற்ற டாஷுண்ட்’. அவனுக்கு அது பிடித்திருந்தது. காதலின் அளவிற்கு, சில சமயம்  காதலைவிட  அதிக சுவாரசியமாகவும்  கேலியாகவும்  இருக்க முடியும் என்று அவன் எண்ணினான்.

‘நான் சுட்டிக்காட்டியது அனைத்தையும் பேசி முடித்துவிட்டீர்கள்’ என்று அவன் கூறினான்.  ஆயினும் அவன் கறாராக இருந்திருந்தால் ஒரு மையக்  கருத்தை வலியுறுத்தியிருப்பான் : நீங்கள் திருத்துவதற்காக என்னிடம் கொடுத்த மற்ற எல்லா படைப்புகளையும்  நினைவுபடுத்தும்படியாக , இருப்பைப் பற்றிய  பதற்றம் ஆண்களின் பார்வையிலேயே இதிலும் வருகிறதே, ஏன் ? ஆனால் அவன் அந்த மாதிரி எப்போதுமே பேசியதில்லை; மாணவர்களின் எளிதில் காயப்படக் கூடிய மன நிலையை தன்னுடய தாகவே உணர்ந்தான்.  அதற்கு பதிலாக, மூன்று மணி நேரக் கலந்துரையாடல் அனேகமாக  பாதியளவு முடிந்துவிட்டதால் , ‘புகைபிடிப்பதற்கான இடைவெளி’ என்று மட்டும் அறிவித்துவிட்டு  நிறுத்திக் கொண்டான்.

குப்பைத் தொட்டியைச் சுற்றி கும்பலாக புகைபிடிப்பதற்காக வகுப்பிலிருந்த மூன்று மாணவர்களுடன்  பலமுறை  இவனும் சேர்ந்து கொள்வான். ஆனால் இன்று முக்கியமான வேலைக்காக வேறெங்கோ செல்வது போல்  வேகமாக நடந்து சென்றான். உயர் நிலத்தில் கட்டப்பட்டிருந்த அருகாமையிலிருக்கும் வளாகத்தின் எல்லைக்குச் சென்று உணர்ச்சியற்று தட்டையாக காட்சியளித்த விவசாயப் பெருவெளியை நோக்கினான்.  சிக்ரெட்டைப் பற்ற வைப்பதற்கான தேவையே அவனுக்கு எழவில்லை. கண்முன் இருந்த காட்சியும் அதன் பரந்த சாமான்யமும் நிக்கோட்டின் அளவிற்குத் திருப்தி அளித்தது. சிறு வயதில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு, தான் பிரத்தியேகமாக  இருப்பதைப் போல் கற்பனை செய்துகொள்வது அவனுக்கு நிறைவளித்தது.ஆனால் இப்போதோ  அவனுடைய – மற்றும் நம்முடைய – முக்கியமின்மையின் நினைவூட்டல்களே அவனுக்கு  ஆறுதலாக இருந்தது. அவனை அமைதிப்படுத்தியது.

மேஸ்டிரோ.  தனக்குத் தானே சத்தமின்றி  உறுமிக்கொண்டான்.  முதன் முறையாக வகுப்பை சந்தித்தபோது ஒருவர் மட்டும் அவனை  ‘பிரொபசர்’ என்று அழைத்தார். இது அவனுக்கு எரிச்சலையே அளித்தது – தன்னை கல்விமானாக அல்லாது சக ஏழுத்தாளர்கள் மத்தியில் இருக்கும் எழுத்தாளராக  நினைத்துக் கொள்வதே அவனுக்குப் பிடித்திருந்தது. அதே சமயம்  தனது கிறித்தவப்  பெயரைக்  கொண்டு அவர்கள் தன்னை அழைப்பதையும் அவன் விரும்பவில்லை.  சிறிது இடைவெளி  தேவைப்பட்டது.  மேலும் “மிஸ்டர் ________”   என்பதும்  அவ்வளவு  சரியாக இல்லை என்று அவனுக்குப் பட்டது.

‘உங்களை நாங்கள் மேஸ்டிரோ என்றே அழைத்தாலென்ன”  என்று கேட் யோசனை கூறினாள்.

அவன் சிரித்தான்.  ‘நீங்கள் அதை முரண்நகையுடன் செய்தால் மட்டுமே…’

இப்போது , மீண்டும் உறுமினான்.  சில சமயம், அந்த அடைபெயர்  காயப்படுத்தியது.  வருடா வருடம் தலைப்பு பக்கத்திலும் , புத்தக அட்டையிலும் தனது பெயரை  பார்க்கும் போது அவனுக்கு எவ்வளவு பெருமையாக இருந்தது. அவளது வாழ்நாளில் இரண்டு முறையே ஜேன் ஆஸ்டெனின்  பெயர்  அச்சமைக்கப் பட்டிருக்கிறது – அதுவும் கூட மற்றவர்களின் புத்தகங்களிற்கான சந்தா பட்டியல்களில். போதும்! போதும்!.

அவ்வப்போது வகுப்பின்  திட்டவுணவை மாற்றுவதற்காக அவர்களுக்கு உதவியளிக்கக் கூடிய அல்லது குறைந்த பட்சம் புதிய பார்வையையேனும்  வழங்கக்கூடிய சிறுகதையொன்றை அவர்களுக்குக் கொடுப்பான்.  அதன்படி பிற்பகலில்  ‘ஸ்விட்சர்லாண்டிற்கு அஞ்சலி’  என்ற கதையின் செராக்ஸ் நகலிகளை  வகுப்பில் பகிர்ந்தளித்தான்.

‘அய்யோ மேஸ்டிரோ’ கேட்  கூறினாள், ‘அடுத்தவாரம் நான் உடம்பு சரியில்லாமல் நோய்விடுப்பில் சென்று விடுவேன் என்று தோன்றுகிறது’

‘உனக்கு முன்யூகக் கருத்துக்கள் இருக்கிறது என்று கூறுகிறாயா?’

‘அவற்றை பின்விளைவுக் கருத்துக்கள் என்று கூறலாம்’

அவள் தன் நிலைப்பாடுகளில் ஸ்திரமாக இருந்தது அவனுக்குப் பிடித்திருந்தது.

‘உதாரணமாக ?’

அவள் பெருமூச்சு விடுத்து ‘ஓ, கடைமுடிவான  இறந்த வெள்ளைக்காரன். “பபா  ஹெமிங்வே”. மாச்சோத்தனத்தை கொண்டாடுதல். விளையாட்டுப் பொருட்களை ஏந்திய பயல்கள். வேண்டுமென்றே துப்பாக்கி-பையனை நோக்கினாள். அவனும் பதிலுக்கு அவளைக்  குறிவைப்பது போல் பாவித்து சுட்டான்.

‘சரி சரி, கதையைப் படி’. அவள் தவறாக எடுத்துக்கொண்டுவிடுவாளோ  என்று எண்ணி, ‘நாய்-கொல்லி’ என்பதையும் சேர்த்துக் கொண்டான்.

அதற்கடுத்த வாரம் கிரேக்க தீவின் ஹெமிங்வே நகலியைப் பற்றி அவர்களிடம் கூறத் தொடங்கினான். அதன் பிறகு ஸ்விஸ் ஆல்ப்ஸைப் பற்றியும்  ஹெமிங்வேயையும் சைபீலியஸையும் அவன் ஒப்பிடுகிறானா என்று கேட்கப்பட்டதைப் பற்றியும் பேசினான். ஆனால் இதற்கு எதிர்வினை அதிகமில்லை – அவர்கள் சைபீலியஸைப் பற்றி கேள்விப்படாமலே இருந்திருக்கலாம் அல்லது அனேகமாக, அவன் சரியாக விளக்காததே இதற்கு காரணமாக இருக்கலாம்.  சரி, அவர்களே பேசட்டும்.  எப்போதும் போல் விரைவிலேயே பால்வகையில் வகுப்பு பிரிந்துவிடுவது அவனுக்கு மனச்சோர்வை அளித்தது. வினையெச்சங்களை வெறுத்த ஸ்டீவிற்கு ஹெமிங்வேயின் நடைச்சிக்கனம் பிடித்திருந்தது.  விசயம் அதிகம்  தெரியாததை முறைசார்ந்த வார்த்தை ஜாலங்களில்  மறைக்க முனையும் மைக்  அவரது கட்டமைப்பை அங்கீகரித்தான்.  துப்பாக்கி-பையன்  கதையில் சுடுகலங்கள் இடம்  பெறாததை நொந்துகொண்டு கதை மோசமில்லை என்றாலும்  பெரிதாக மதிக்குமளவிற்குத் தன்னை கவரவில்லை என்றான்.  லிண்டா ஆணின் பார்வையைப் பற்றி பேசிவிட்டு பணிப்பெண்களுக்கு ஹெமிங்வே ஏன்  பெயர்களே தரவில்லை என்பதைப் பற்றி வியப்புற்றாள். ஜுலியனிற்கு கதை சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வது போல் இருந்தது. அவன் மலைபோல் நம்பிக்கொண்டிருந்த கேட் கூட புகழ முனைந்து இறுதியில்  அலுப்புடன் :

‘ நம்மிடம் சொல்வதற்கு அவரிடம் என்ன இருக்கிறது என்றே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று கூறினாள்.

‘அப்படியென்றால் இன்னும் கவனமாக கேட்பதற்கு முயற்சி செய்’

அதிர்ச்சியில் தோய்ந்த இடைவெளி ஒன்று நிலவியது. தனது அபிபான மாணவிக்கு எதிராக அவன் திரும்பிவிட்டான்; அதைவிட மோசமானது , அவனது இயல்பு நிலையை விட்டு அவன்  வெளிவந்தது.  மாணவர்களின் கவிதைகளை வரி வரியாக குற்றம் கண்டுபிடித்து அவர்களை அவமானம்  செய்து பிரபலமாகிய உயரமான கவிஞரொருவர்  வளாகத்திலிருந்தார். கவிஞர்கள் கிறுக்குத்தனமாக நடைகேடாக நடந்துகொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் உரைநடை ஆசிரியர்கள் ,குறிப்பாக அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தால், பண்புடன் நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டார்கள்.

‘மன்னிக்கவும். தவறுக்காக வருந்துகிறேன்.’

ஆனால் கேட்டின் முகத்தில் தோன்றிய இறுக்கம் அவனுக்குள் குற்றவுணர்வை  ஏற்படுத்தியது. இது உங்கள் பிரச்சனையல்ல, என்னுடையதே என்று கூற விரும்பினான்.  அண்மையில் தன்னில் கவனித்த ஒன்றை தனக்கே விளக்க முனைவதப் பற்றி யோசித்தான்: எவரேனும் அவனையோ அவனது நண்பர்களையோ அவமானப்படுத்தினால் அவன் அதிகமாக பாதிக்கப்படுவதில்லை. ஆனால் அவன் விரும்பிய நாவலையோ, கதையையோ, கவிதையையோ அவமானப்படுத்தினால் எரிமலையின்  இயக்கத்தை ஒத்த ஏதொவொன்று அவனது உள்ளுறுப்புகளில் நிகழ்வதை அவனால் உணரமுடிந்தது. வாழ்க்கையையும் கலையையும் முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாக குழப்பிக்கொண்டிருக்கிறான் என்பதைத்  தவிர  இதிலிருந்து வேறெதையுமே அவனால் அர்த்தம் பண்ணிக் கொள்ள முடியவில்லை.

ஆனால் அவர்களிடம்  இதைப் பற்றி  அவன் கூறவில்லை. அதற்கு பதிலாக முதல் முறையாக பேசுவதைப் போல் மீண்டும் தொடங்கினான். எழுத்தாளனைச் சுற்றி வளரும் தொன்மத்தைப் பற்றியும், அத்தொன்மத்தில் வாசகன் மட்டுமின்றி எழுத்தாளனும் சில சமயங்களில் சிக்கிக் கொள்வதைப் பற்றியும் பேசினான். இதனால் அவன் மீது நாம் அனுதாபப்பட வேண்டுமேயொழிய அவனைக் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கக் கூடாது என்று வாதாடினான். எழுத்தாளனை  வெறுப்பது பற்றியும் பேசினான். அவனது கருத்துக்களுக்காக கிப்லிங்கை காலம்  மன்னிக்கும் – ‘மேலும் பால் கிலொடெல்லையும் மன்னிக்கும் /  அவன் நன்றாக எழுதியதால் ‘ என்று ஆடனின் வரிகளை எடுத்துக்கூறினான். முன்னாளில் ஹெமிங்வேயிடம் தனக்கிருந்த வெறுப்பையும், ஆளையே பார்க்காமல் வார்த்தைகளை மட்டும் படிப்பதற்கு தனக்கு நெடு நாட்களானதையும் ஒப்புக்கொண்டான் – தொன்மம் உரைநடையை மறைப்பதற்கு இதுவே மிகத் தீவிரமான உதாரணமாகவும் இருக்கலாம். மேலும் அந்த உரைநடை மேற்போக்கான தோற்றதிலிருந்து எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்பது பற்றியும்.. எளிதாகவும், ஏன், மிகவுமே எளிமை படுத்தப்பட்டதாகவும் அது தோன்றினாலும் கூட, ஹென்றி ஜேம்ஸ் எழுதிய எதற்கும் நிகரான ஆழத்தையும் நுணுக்கத்தையும் உடையது. நாம் பலமுறை கவனிக்கத் தவறும் ஹெமிங்வேயின் நகைச்சுவையுணர்வைப் பற்றிப் பேசினான். தம்பட்டம் அடித்துக்கொள்வது போல் தோன்றுவதற்குப் பக்கத்திலேயே ஆச்சரியமளிக்கும் விதத்தில் தன்னடக்கமும் பாதுகாப்பின்மையும் இருந்ததை சுட்டிக்காட்டினான். சொல்லப்போனால் இதுவே இவ்வெழுத்தாளனின் முக்கிய அம்சமாகவும், அவனைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலாகவும் இருக்கலாம். ஆண்களின் துணிச்சல், மாச்சிஸ்மோ மற்றும் கஹோனெஸ் போன்றவற்றால் மட்டுமே அவர் ஆட்கொள்ளப்பட்டார் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தோல்வியும் பலவீனமுமே அவரது உண்மையான உரிபொருள் என்பதை அவர்கள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. கொறீடா எனப்படும் எருதுச்சண்டையின் நாயகன் அல்ல, கத்திகள் பிணைக்கப்பட்டிருக்கும் சமையலறை நாற்காலி[1] என்ற எருதால் குத்திக் கொள்ளப்படும், எருதுச்சண்டையைப் பற்றி கனவுகாணும் சாமானியனைப் பற்றியே அவர் எழுதினார். பெரும் படைப்பாளிகள் பலவீனத்தை புரிந்துகொண்டார்கள்  என்று அவர்களிடம் கூறினான்.

சற்று இடைவெளி விட்டு, மீண்டும் ‘ஸ்விட்சர்லாண்டிற்கு அஞ்சலி’ என்ற் கதைக்கே திரும்பிச் சென்றான். மூவர் ஒருவராக இருக்கும் குடிபெயர்ந்த அமெரிக்கனைப் பாருங்கள். கூரறிவு, நுணுக்கம் மற்றும் பணம் இவை யாவையும் அவனிடம் இருந்தாலும் கூட தார்மீக அடிப்படையில் எளிமையான ஸ்விஸ் பணிப்பெண்கள் மற்றும் பாருக்கு வழக்கமாகச் செல்லும் சாதாரண மக்களை விட குறைந்தவனாகவே காட்சியளிக்கிறான். அவர்களோ யதார்த்தத்தைக் கண்டு பயந்தொளியாமல், உறுதியுடன் உண்மையைக் கடைபிடிக்கிறார்கள். தார்மீக இருப்பு நிலைக்குறிப்பைப் பாருங்கள், தார்மீக இருப்பு நிலைக்குறிப்பைப் பாருங்கள் என்று அவர்களை தூண்டினான்.

‘அப்படியானால்  அவர் ஏன்  பெண்களின் பெயர்களைத் தரவில்லை’ என்று லிண்டா கேட்டாள்.

மேலே எது வருகிறது எரிச்சலா, மனச்சோர்வா ? தவறான அதே காரணங்களுக்காகவே எப்போதும்  படிக்கப்பட்டு, தவறாக புரிந்துகொள்ளப்படும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் போலும். உண்மையில் அவர்களை காப்பாற்றவே முடியாது. வாழ்க்கையின் பிந்தைய பகுதியில் தனது படைப்புகளை திருத்தி எழுதுகையில் ஆடன் கிப்லிங் மற்றும் கிலொடெல்லைப் பற்றிய பிரபலமான வரிகளை நீக்கிவிட்டார். அவை உண்மையல்ல என்றும் காலம் இறுதியில் மன்னிப்பதில்லை என்ற முடிவிற்கும் அவர் வந்திருக்கக் கூடும்.

‘அவர்கள் பணிப்பெண்கள். கதை வெளியிலிருந்து வரும் அமெரிக்கனின் பார்வையில் கூறப்படுகிறது’

‘உடலுறவு கொள்வதற்காக அவர்களுக்கு பணமளிக்க அவன் விரும்புகிறான் – அவர்கள் ஏதொ வேசிகள் போல.’

‘பெண்கள் தான் உயர்நிலத்தில் இருக்கிறார்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா’

‘பிறகு ஏன் அவர்களில் ஒருவருக்காகவாவது அவளது சொந்தப் பெயரையே அவர் கொடுக்கவில்லை’

ஓரு கணம், தன்னுடைய வாழ்க்கைக் கதையையே அவர்களிடம் கூறலாமா என்று யோசித்தான்: தான் வெற்றிபெற்றதாலேயே ஆஞ்சியும், தோல்வியுற்றதாலேயே லின்னும் அவனை விட்டுச் சென்றதை. ஆனால் அவர்களிடம் அவன் அதைக் கூறவில்லை. அதற்கு பதிலாக என்னவென்று அறியாமலேயே, எதையாவது செய்யும் இறுதி முயற்சியாக கேட் பக்கம் திரும்பி

‘இங்கு நடந்த்தைப் பற்றி நானே ஒரு கதை எழுதி உன் பெயரைக் கொடுக்காமல்  என் பெயரை மட்டுமே கொடுத்துக்கொண்டால், அது உண்மையிலே மோசமான தவறாகிவிடுமா என்ன?’

‘ஆமாம்’ என்று பதிலளித்தாள். இப்போது அவள் தன்னை குறைவாக எண்ணுவது போல் அவனுக்குப் பட்டது.

‘என் பெயரை விட்டுவிட்டு உன் பெயரை மட்டும் கொடுத்தால், அது எல்லாவற்றையும் சரி செய்துவிடுமா ?’

‘ஆமாம்’ என்று அவள் கூறினாள்

அதைத் தான் அவனும் செய்தான். எல்லாவற்றையும் எளிமையாக, உண்மையாக தெளிவான தார்மீக வரிகளில் எழுத முயன்றான்.

ஆனாலும் கூட, அதை பதிப்பிக்க எவருமே விரும்பவில்லை.

தமிழியாக்கம்: நம்பி கிருஷ்ணன்


[1] ‘The Capital of the World’  என்ற சிறுகதையில் என்றீகே என்பவன் சமையலறைக் கத்திகளை நாற்காலியில் பிணைத்துக்கொண்டு ஒரு  பாசாங்கு எருதுச் சண்டையை நடித்துக் காட்டுகையில் பாகோவை எதிர்பாரா விதத்தில் அவனைக்  கத்தியால் குத்திவிடுகிறான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.