காலத்தின் கட்டணம்

ஐராவதம் என்ற ஆர். சுவாமிநாதன் அவர் ‘கோணல்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையிலிருந்து எனக்கு அறிமுகமானார். அவரை ஒரு பையன் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் முன்னுரையில் நல்ல மனமுதிர்ச்சியை உணர முடிந்தது. அப்போது அவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு சென்னை தியாகராயநகர் நடேசன் தெருவில் வசித்துவந்தார். ரிசர்வ் வங்கியில் வேலை கிடைத்தது. ஒரு கட்டத்தில் அவருக்கு வங்கித் தொகுப்பு குடியிருப்பில் வீடு கிடைத்தது. அது வரையில் நாங்கள் வாரம் இருமுறை மூன்று முறை சந்திப்போம். அவர் என்னை விட குறைந்தது பதினைந்து ஆண்டுகள் சின்னவர். ஆனால் அவர் எனக்கு எது எது படிக்க வேண்டும், எந்தத் திரைப்படம் பார்க்கவேண்டும் என்று யோசனை கூறுவார். அவர் தேர்ந்தெடுத்துக் கூறிய எதுவும் தவறான தேர்வாக இருக்காது. க.நா.சு டில்லி விட்டு மீண்டும் சென்னை வந்த போது முதலில் அவரை ஐராவதம் வீட்டில்தான் தங்க வைத்தது. சில நாட்கள் இன்னொரு நண்பர் வீட்டில். மயிலை டி.எஸ்.வி கோவில் தெருவில் இரு அறைகள் கிடைத்தவுடன் அங்கு சுமார் பத்து ஆண்டுகள் இருந்தார். அதோடு அவர் வாழ்க்கை முடிந்தது.

ஐராவதத்தின் படைப்புகளில் உள்ள கூர்மையும் தெளிவும் அவர் பிறரிடம் பழகும் முறையிலும் இருந்தது. என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும் நட்பில் எந்த பாதிப்பும் இருக்காது. உலகம் கொண்டாடத் துவங்கப் பத்து ஆண்டுகள் முன்னரே அவர் லத்தீன் அமெரிக்கப் படைப்புகள் பற்றி அறிந்திருந்தார். திடீரென்று ஒரு நாள், “ஆனந்த் கொட்டகையில் ஓடும் படத்தைப் பார்” என்றார். அப்படம் பற்றி உலக மதிப்பு வர ஆறு மாதங்கள் ஆயின. அது ‘பிளோ அப்” என்ற படம். எனக்கு ஆச்சரியமாக இருந்த்து. எவ்வளவு துல்லியமான ரசனை! அவர் சிறுகதைகளுடன் கவிதைகளும் எழுதினார். எனக்குக் கவிதையில் அதிக ஈடுபாடு இல்லாதபோதிலும் ஐராவதம் கவிதை எழுதத் தேர்ந்தெடுத்த விஷயங்கள் பற்றி வியந்திருக்கிறேன். உஷா ஐயர் 1970 அளவில் ஒரு நவீன பாணியில் பாடத்தொடங்கினார். இன்று அவர் உலகப் புகழ் பெற்ற பாடகர். ஆனால் 1970லேயே ஐராவதம் உஷா ஐயர் பற்றிக் கவிதை எழுதினார்! கலைப் போக்குகளை முன்னோக்கிப் பார்க்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அவருக்குக் கலைஞன் என்பவன் ஏதோ தனிப்பிறவி என்று ஆராதனை செய்யும் போக்கு நகைப்பை எழுப்பும். அவருடைய நகைப்பு என்பது ஒரு புன்சிரிப்புத்தான். அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு அப்புன்சிரிப்பின் எண்ணற்ற சாயல்கள் கொண்ட்து என்று தெரியும்.

அவருடைய மறைவு அகாலமானது என்றாலும் அநாயாசமானது. பேசிக் கொண்டிருக்கும்போதே போய் விட்டார்.

புதன் 5-2-2014.

Iravatham_Story_Writer_Tamil_ICons

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.