தவளைகளின் பாடல்

அது ஒரு சிலேடையான பகடியாக இருக்கலாம். அல்லது மழை வருவதற்காக செய்யப்பட்ட பழமையான சடங்கின் நினைவாக இருக்கலாம். ‘தவளை பாடல்கள்’ என அவை அழைக்கப்படும் அந்த பத்து பாடல்களும் ரிக் வேதத்தின் ஏழாவது மண்டலத்தில் உள்ளன. அவற்றில் முதல் ஏழு பாடல்கள் இவை:

ஆண்டு முழுவதும் மௌனம் பூண்டு இதோ
விரத பூர்த்திக்கு தயாராகும் பிராமணர்
மழையொலியால் மகிழ்ச்சியுற்றே இதோ
ஒலியெழுப்பத் தயாராகின்றன தவளைகள்
 
சுருங்கிய தோலென வறண்ட நீர்நிலைகள்
விசும்பினின்றும் வழிந்து நிரப்பிடும் நீர்
கன்றுகளுடன் செல்லும் பசுக்களையொத்து
இணைந்தே ஒலி எழுப்புகின்றன தவளைகள்
 
மழையைத் தேடி வாடி தவித்திருந்தோர்
அனைவர் மீதும் பொழிகிறது மழை அதில்
நனைந்து ஆனந்தித்து ஆரத்தழுவிடும்
தந்தை மகன் என பரவசத்திலாடும் (தவளைகள்).
 
அனைவரிலும் அன்பு ததும்பிடும் ஆனந்தம்
மழை நீரதில் நனைந்து முன்னெழுந்திடும்
பச்சை நிறத்தது ஒன்று புள்ளிகள் கொண்டது மற்றொன்று
இணைந்தே எழுப்பிடும் ஒலிகளை அந்த தவளைகள்
 
ஒன்றின் ஒலி போலவே அடுத்தடுத்த ஒலிகளும்
ஆசிரியரை அப்படியே திரும்பச் சொல்லும் மாணவர்
நீர் பரப்பதனை ஒலிகளால்  நிரப்பிடும் தருணங்களில்
ஒவ்வோர் அங்கமும் துடித்தே விரிந்திடப் பாடும் தவளைகள்.
 
பசு போல ஒன்றின் ஒலி ஆட்டினது போல் மற்றொன்று 
பச்சை நிறத்ததொன்று புள்ளிகள் கொண்டது மற்றொன்று
ஒன்றே பெயரென்றாலும் பலபல வகைகளில் பன்மை
ஒலிகள் பல எழுப்பி கதைத்து உறவாடும் தவளைகள்
 
அதிராத்திரத்தின் சோமரசம் பெருங்கலத்தில் ததும்ப
அதைச் சுற்றி துதி பாடிடும் அந்தணர் குழாம் போல
வானின் மழை நீர்நிலையதனில் நிரம்பியே ததும்ப
ஆண்டின் முதல்மழையின் புகழ் பாடும் தவளைகள்
 

பிராம்மணர்கள் உச்சாடனம் செய்யும் வேத ஒலிகள். வேத சமுதாயத்தின் முதன்மையான சடங்குகள். இருந்தாலும் தவளைகளின் ஒலிகளுடன் இணைத்து சிலேடையாக காட்டுகின்றன இப்பாடல்கள். ஏன்? இதை இயற்றியவர்களின் நோக்கம்தான் என்ன? தவளைகளின் ஒலிகள் ஒரு பழங்கால சமுதாயத்தில் மழையின் காரணமாக கூட நினைக்கப்பட்டிருக்கும். அத்தகைய ஒரு சமுதாயத்தின் மிக பழமையான ஒரு மழை சடங்கா இது? இருக்கலாம். வளமை (fertility) குறித்த சடங்காகவும் இருக்கலாம். கூடவே ஒரு சிலேடையான பகடியையும் உள்ளடக்கியதாக இது அமைந்திருக்கலாம்.

h-166_harappan
H-166 ஹரப்பா பண்பாட்டு இலச்சினை

இப்பாடல் அதிராத்ரம் எனும் ஒரு வேள்வியை குறிப்பிடுகிறது. அதிராத்ர அக்னிசாயனம் என்னும் வேள்வி பருந்து வடிவ வேள்விமேடை அமைத்து செய்யப்படுவது. ஹரப்பா பண்பாட்டு இலச்சினை ஒன்று (H-166) ஒரு பருந்தினைக் காட்டுகிறது. அந்த இலச்சினையின் மறுபக்கம் ஒரு ஆண்டினை குறிக்கும் நான்கு கோடுகள் கொண்ட சூரிய சின்னம் உள்ளது. சதபத பிராமணம் (12:2:3:7) ஒரு ஆண்டினை பருந்தாக உருவகப்படுத்துகிறது. அதிராத்ர அக்னிசாயன வேள்வி குறித்த மிக பழமையான முத்திரை இதாகவே இருக்கலாம். புறநானூற்றில் பருந்து வடிவிலான வேத வேள்வி குறித்து சொல்லப்படுகிறது.


பருதி உருவின் பல்படைப் புரிசை

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்(புறம். 224:7-9)

 

Athirathram_stage
பருந்து வடிவ அதிராத்ர வேள்விமேடை

உலக சடங்குகளிலேயே மிகப் பழமையானத் தொடர்ச்சி கொண்டதாக அதிராத்ரம் கருதப்படுகிறது. இன்றும் கேரளாவில் நம்பூதிரிகளால் செய்யப்பட்டு வரும் இந்த வேதச்சடங்கு விமரிசையான பலவித ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சடங்கு மேடையில் மரத்தாலான ஒரு தவளை வைக்கப்படுகிறது. பொதுவாக அக்னிசாயன வேள்வி ரிக்வேதத்தில் சொல்லப்படவில்லை எனும் கருத்து நிலவுகிறது. ஆனால் ரிக் வேதத்தின் தவளைப் பாடலில் அதிராத்ரம் சொல்லப்பட்டிருப்பதும் அது சோம வேள்வியாக காட்டப்படுவதையும் காண்கிறோம். இன்று நாம் காணும் அக்னிசாயன வேள்வியில் இந்த தன்மைகள் இணைக்கப்பட்டுள்ளன. அக்னியை மையப்படுத்தும் அக்னிசாயனத்தையும் சோமத்தை மையப்படுத்தும் அதிராத்ரத்தையும் இணைப்பது எது? மழை என்பது சரியான பதிலாக இருக்கலாம். அக்னி வேள்வியின் புகைகளே மழையின் கருவாக அமைகின்றன என்பது பாரத பண்பாட்டில் நிரம்பி இருக்கும் ஒரு படிமம். சிலப்பதிகாரத்தின் ‘நாடு காண் காதை’ மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில் மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை’ என கூறுகிறது. அதிராத்ர அக்னிசாயன வேள்வி அடிப்படையில் ஒரு ஆதி சமன்வய இயக்கம் என சொல்லலாம். சோம = அக்னி வழிபாட்டு மரபுகளை மழை எனும் வாழ்வியல் தேவை மூலமாக இணைக்கும் ஒரு சடங்கு வழிமுறை. அந்த இணைப்பின் ஒரு இயற்கை ஒலி உருவகமாக தவளைகள் அதில் இணைகின்றன.

 

athirathram
மரத்தாலான தவளை

முனைவர் வனூச்சி (Dr.M.Vannucci) சுற்று சூழலியலாளர். சூழலியலுடன் இணைந்த பண்பாட்டு மதிப்பீடுகள் குறித்தும் ஆழமான அறிதல் உடையவர். மாங்க்ரூவ்கள் (Mangroves) எனப்படும் சதுப்புநில/அலையாத்திக் காடுகளை பேணும் இயக்கத்தை இந்தியாவில் வழி நடத்துவதில் அவரது பங்கு முக்கியமானது. அவர் ரிக் வேதத்தின் தவளைப் பாடல்களை விரிவாக பேசுகிறார்:

 

இயற்கை குறித்தும் சுற்றுப்புற சூழலுக்கும் மானுடத்துக்குமான உறவு குறித்தும் நல்ல அறிதலை இந்த பாடல்கள் காட்டுகின்றன. தவளைகளின் வாழ்க்கை சுழற்சியினை வெளிப்படுத்துகின்றன இந்த பாடல்கள். மழை, நீர், நிலம், மண், இயற்கை பூதங்கள் ஆகியவற்றுக்கிடையேயான உறவுகளை இவை வெளிக் கொண்டு வருகின்றன. இதே தொனி அதர்வ வேதத்திலும் உள்ளது (அதர்வம் IV.14). பல பண்பாடுகளில் தவளை கருவுறும் திறனின் குறியீடு ஆகும். ஏனெனில் எப்படி நீர் பொழியாமல் வயல்கள் சூலுற முடியாதோ அதே போல தவளைகளின் வாழ்க்கை சுழல் நீரின்றி நடைபெற இயலாது. தென் சைபீரிய துருக்கிய தொன்மங்களில் தவளைகள் பாதாள உலகில் வாழ்பவை. ஏனெனில் கோடையின் வெப்பத்தை சகிக்க அவை அங்கே செல்ல வேண்டியிருக்குமென கருதினர். கிரேக்க நாடக ஆசிரியரான அரிஸ்டோபேனஸ் தமது ’தவளைகள்’ நாடகத்தில் கிரேக்க பூசகர்களின் ஓதுதலை தவளையின் ஒலிகளுடன் ஒப்பிட்டு பகடி செய்திருந்ததும் ஒரு சுவாரசியமான இணைத்தன்மை கொண்டது. … இங்கு சொல்லப்பட்டுள்ளதாக இரண்டு தவளையினங்களை (species) கருதலாம். அவை நீர்நிலைகளில் கூட்டம் கூட்டமாக காணப்படும் ரானா டைக்ரினா (Rana tigrina). இது மிக அதிகமாகவே உணவு உண்ணும். மற்றொன்று ரானா சையனோபிலைசெட்டஸ் (Rana cyanophlyctes) – இது பொதுவாக நீர்நிலைகளில் காணப்படும் சாதாரண தவளைகள். சின்ன சின்ன தாவல்களை நீர் பரப்பின் மீது நிகழ்த்தும் தவளைகள் பொதுவாக இந்த இனத்தைச் சார்ந்தவை. தவளைகள் பொதுவாக சுற்றுச்சூழலில் உள்ள வெப்பநிலை, புழுக்கம், ஈரப்பதம் ஆகியவற்றை மிகக் கூர்மையாக உணர்ந்து எதிர்வினையாற்றும் தன்மை கொண்டவை. உயிருள்ள அழுத்தமானி என்றே தவளைகளை சொல்லலாம். சூழல் மாசினால் மிகவும் பாதிக்கப்படும் உயிரினங்கள் அவை. எந்த கிராம குழந்தைக்கும் தெரிந்த ஒரு உண்மைதான்: அவற்றின் ஒவ்வொரு நடத்தையும் சுற்றுப்புற சூழல் மாற்றங்களால் தூண்டி நடத்தப்படுபவை…. தவளைப் பாடல்களின் ரிஷியான வசிஷ்டர் இயற்கையை கூர்ந்து அவதானிப்பவராக இருந்திருக்க வேண்டும்…. வசிஷ்டர் மேக தெய்வமான பர்ஜன்யனை மழை பொழிய வேண்டினார். அதனால் மகிழ்ச்சியடைந்த தவளைகள் அவரை பாராட்டின. அதற்கு நன்றியறிவித்தலாக அவர் தவளைகளைப் பாடினார் என ஒரு ஐதீகம் வழங்குகிறது. ஐதீகம் எதுவாயினும் தவளைகளின் சூழலியல் உயிரியல் இலக்கணங்களை இந்த பாடல்கள் சரியாகவே காட்டுகின்றன. அதற்கு மேலும் பல விஷயங்களை இப்பாடல்களில் இருந்து பெற முடியும்தான். … தலைப்பிரட்டையிலிருந்து தவளையாகும் உருமாற்றம், பருவ சுழற்சிகள், பருவ மாற்றங்களுடன் இணைந்த தவளைகளின் செயல்பாடுகள், வெவ்வேறு தவளையினங்களின் நடத்தைகள், அவற்றின் இனப்பெருக்க சுழற்சி, மழையின் உயிர்ப்பிக்கும் ஆற்றல், … இப்பாடல்களின் சுவாரசியமே பூமி, நீர், தட்ப வெப்பம், பருவ சுழற்சி ஆகியவற்றுக்கிடையே உள்ள உறவுகளை உயிரின் செயலாக்கத்தன்மையுடன் இணைத்து காட்டுவதுதான்.

 

தவளைகளின் ஒலியுடன் இது நின்றுவிடவில்லை. தம்மைச் சுற்றியுள்ள இயற்கை மற்றும் விலங்குகளின் ஆகியவற்றை உள்வாங்கி அவற்றையே ஆழப்படுத்தி அக குறியீடுகளாக வேத சமுதாயம் மாற்றியுள்ளது. என சுட்டிக் காட்டுகிறார் பெல்ஜிய இந்தியவியலாளரான கொன்ராட் எல்ஸ்ட்.  பாரத பண்பாட்டின் மிகப் பெரிய கண்டடைதலான ஓங்காரமே அவ்வாறு இயற்கையிலிருந்து பெறப் பட்ட வேத வேர்களை கொண்டது என கூறுகிறார் அவர்.

பிராம்மணர்களின் ஓதுதலை தவளைகள் எழுப்பும் ஒலிகளுடன் ஒப்பிடுவது (வேதங்களில் தொடங்கி) தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பகடி. ஆனால் இங்கு அது இகழ்ச்சியான பகடி அல்ல. ஏனெனில் இந்த பாடல்கள் இத்தவளை ஒலிகளால் வளம் பெருகுவதை கூறி முடிக்கின்றன. சில வேத ஓதுதல்கள் மனிதமற்ற இயற்கை ஒலிகளை பிரதி எடுக்கின்றன. புகழ் பெற்ற வேத சப்தமான ஓங்காரம் அத்தகைய ஒரு தொடக்கத்தை கொண்டிருக்கலாம். அவ்வாறு கருத இடமிருக்கிறது. மிகவும் ஆழமான தத்துவ விசாரம் செய்யும் ஒரு வேத பாடல் (ரிக் வேதம் 1:164) இத்தகைய ஒரு அசையொலி குறித்து மீண்டும் மீண்டும் பேசும் போது பசுக்களும் கன்றுகளும் வாத்சல்யத்துடன் எழுப்பும் சப்தங்களைக் குறிப்பிடுகிறது. பின்னாட்களில் மாண்டூக்ய உபநிடதத்தில் தன்னுணர்வின் மூன்று பரிமாணங்களில் ஒலிக் குறியீடாக ஓங்காரம் வளர்த்தெடுக்கப்பட்டது. எனினும் அது தன் தொடக்கத்தில் புனித பசுவின் ஒலிகளை பிரதியெடுத்து எழுப்பப்பட்ட மானுட ஒலி. பண்டைய ஹிந்து பார்வையில் இது ஓங்காரத்தின் ஆன்மிக முக்கியத்துவத்தை குறைக்கவில்லை. இயற்கை வேர்களும் ஆன்மிக முக்கியத்துவமும் ஒன்றுக்கு ஒன்று புறம்பானதல்ல.

ஆக இவை அனைத்தையும் உள்ளடக்கியதாக தவளைகளின் பாடல்கள் இருந்திருக்கக் கூடும். வனூச்சி கூறுகிறார்: ”அந்தணர்களின் ஓதுதலுக்கும் தவளைகள் எழுப்பும் ஒலிகளுக்கும் வசிஷ்டர் கண்ட இணைத்தன்மை அனைத்திலும் ஊடுருவியிருக்கும் பொருள் பொதிந்த தன்மையையும் அனைத்து இயற்கையிலும் உள்ளுறையும் அற்புத புனிதத்தன்மையையும் வெளிப்படுத்துவதாகும்.

தவளைகளின் ஒலிகள் அவற்றின் வேத மந்திரங்கள்? 1980களில் ஒரு நிகழ்வு.

ஆன்டனி டி மெலா ஏசு சபையைச் சார்ந்த பாதிரியார். இறையியலாளர் மட்டுமல்ல மனநலவியலாளரும் கூட. ஒரு வித்தியாசமான பாதிரியார். கோவாவிலிருந்து மும்பையில் வந்து வாழ்ந்த குடும்பத்தில் பிறந்தவர். ஹிந்து ஞான மரபினை இந்திய கத்தோலிக்க சபையில் கொண்டு வந்தார். வெளிப்புறச்சடங்குகளையும் பண்பாட்டுத் தோற்றங்களையும் மட்டும் எடுத்துக் கொண்டு மதமாற்றம் செய்யும் உக்தியாக அல்ல. மாறாக உண்மையான ஆன்ம விழிப்புணர்வை தான் இயங்கிய சபையில் கொண்டு வர அவர் உழைத்தார். அவரது சாதனா நிறுவனம் இந்த ஆன்மிக இணைப்புறவில் ஒரு பெரும் பங்கு வகித்தது. அவருக்கு வியாசனும் புத்தனும் யூத ரபாய்களும் முல்லா நஸுருத்தீனும் கபீரும் மோசஸும் அவரது ஏசுவும், ஆன்மிக இன்னிசையை அளிக்கும் ஒரே புல்லாங்குழலின் பல துவாரங்கள். தனது 56 ஆவது வயதில் 1987 இல் நியூயார்க்கில் மாரடைப்பால் காலமானார் டி மெலா. 1998 இல் கத்தோலிக்க திருசபையின் அதிகாரபீடமான ரோமாபுரி அவரது நூல்கள் குறித்து எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது. டி மெலாவின் எழுத்துகள் அவரது இனிய கதைகளும் தியான முறைகளும் ‘கத்தோலிக்கத்துக்கு புறம்பானவை’ அவை ‘ஊறு செய்பவை’.

இவருக்கும் ரிக் வேதத்தின் தவளைப் பாடல்களுக்கும் என்ன தொடர்பு? இதோ அவரது கதைகளில் ஒன்று.

ஒரு மழைக்கால நள்ளிரவின் ஆழத்தில் பாதிரியார் ப்ரூனோ தனது அறையில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார். இரவின் அழகிய நிசப்தம். ஆனால் இடையிடையே வெளியே கேட்டுக் கொண்டிருந்த தவளையின் ’க்ரொக்’ ‘க்ரொக்’ ஒலி அந்த நிசப்தத்தில் வழக்கத்தை விட ஓங்கி ஒலிப்பதாகத் தோன்றுகிறது. இரவின் மௌனத்தில் தமது பிரார்த்தனையின் இனிமையை குலைப்பதாக அந்த ஒலியை உணர்கிறார் ப்ரூனோ. தனது அறையின் பலகணி வழியாக தலையை இரவின் ஆழத்துக்குள் எட்டிப் பார்க்கிறார். இருளின் போர்வையில் மெல்லிய தூறல்கள் விழ ஆங்காங்கே தவளைகள். ‘மௌனமாக இருங்கள்’ என்கிறார் பாதிரியார். ப்ரூனோ தூயவர். எனவே அவரது வார்த்தைகளுக்கு மந்திர சக்தி இருக்கிறது. தவளைகள் மௌனமாகின்றன. இப்போது மீண்டும் தன் பிரார்த்தனையைத் தொடங்குகிறார் ப்ரூனோ. ஆனால் அவரால் இயலவில்லை. அந்த தவளைகளின் ஒலியும் இறைவனுக்கு உன் பிரார்த்தனை கீதங்களைப் போலவே உகந்ததென ஒரு தெளிவு அடியாழத்தில் தோன்றி உறுத்துகிறது. தவளைகளின் குரலில் என்ன இனிமை இருக்கமுடியுமென அந்த உறுத்தலை உதறித்தள்ள முயன்று தோற்றுப் போகிறார் ப்ரூனோ. மீண்டும் வெளியே எட்டிப் பார்க்கிறார். தவளைகளிடம் ‘உங்கள் கீதங்களை பாடுங்கள்’ என சொல்கிறார். இப்போது மன எதிர்ப்பின்றி அந்த ஒலிகளுடன் ஒன்றுகிறார். அவை இடையூறுகள் அல்ல. தனது இரவு பிரார்த்தனையின் மௌன சூழ்நிலையை இன்னும் இனிமையாகவும் ஆழமாகவும் ஆக்குகின்றன அந்த தவளைகளின் குரல்கள் என உணர்கிறார் ப்ரூனோ. உலகனைத்துடனும் எதிர்ப்பற்ற ஒத்திசைவில் முதன் முறையாக பிரார்த்தனையின் பொருளை உணர்கிறார் அப்புனிதர்.

டி மெலா தொகுத்த  ஆன்மிக குட்டி கதைகள் தொகுப்பின் முதல் கதை இது. இந்த கதையின் பெயரேதான் அந்த முழு தொகுப்புக்கும். பெயர்? ‘தவளையின் பிரார்த்தனை’. (The Prayer of the Frog’). அந்தோனி டி மெலா.

frog_prayer

அதிராத்திரி யக்ஞமெனும் பிரபஞ்ச மகத்துவத்தை பிரதியெடுக்கும் மானுட சடங்குக்கும் தவளைகளின் மழைக்கால ஆனந்த ஒலிகளுக்கும் இடையே ஓடும் அந்த ஆன்மிக ஒருமையை உணர்ந்து சித்தரித்தனர் வேத கவிகள். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் டி மெலாவின் கதைகளில் அந்த ஒருமை மீண்டும் வெளிப்படுகிறது. வேத ரிஷிகளின் மரபில் டிமெலா ஒரு நீட்சி. தவளைகள் குரலெழுப்பும் மழைக்கால இரவுகள் தோறும் வேதத்தின் ஆன்மிக ஒருமை இம்மண்ணின் மணமாக மலர்ந்து கொண்டே இருக்கும். இந்த மண்ணுக்கு வெளியிலும்.

பழைய குளம்
குதித்தது தவளை
சிதறும் நீர் ஒலி.
பாஷோ (ஜப்பானிய ஸென் ஹைகூ, 1686)

மேலதிகம் அறிய:

  • Wendy Doniger, The Rig Veda, Penguin UK, 31-Mar-2005
  • M. Vannucci, Common Roots for Transfer of Culture, in Man in Nature (Ed Baidyanath Saraswati, IGNCA, 1995)
  • Koenraad Elst, Humour in Hinduism, in Humour and Religion: Challenges and Ambiguities, (Ed. Hans Geybels & Walter Van Herck), Continuum, 2011.
  • Anthony de Mello, The Prayer of the Frog (Vol-1),Gujarat Sahitya Prakash, 1988

குறிப்பு : வேத கால பண்பாடு குறித்து அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு இந்த மாத இறுதியில் மதி பதிப்பகத்தாரால் வெளியிடப்படுகிறது. இந்தக் கட்டுரை அந்தப் புத்தகத்தின் ஒரு பகுதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.