ஆயிரம் வருடங்கள் வாழ்வது எப்படி?

சொல்வனம் நூறாவது இதழ் வெளிவரும் இந்த வேளையில், அடுத்து ஆயிரமாவது இதழ் வரும் நேரம் வெகுதூரத்தில் இல்லை என்று யோசித்தபோது மனிதர்கள் நிகழ்காலத்து நூறு வருட வாழ்நாள் எல்லையை தாண்டி ஆயிரம் வருடங்கள் வாழமுடியுமா என்பது பற்றி எழுதத்தோன்றியது.

பத்தாயிரம் வருடங்களுக்கு முன் கற்காலத்தில் பூமியில் பிறந்த மனிதக்குழந்தைகள் சராசரியாக இருபது வருடங்கள் வரை வாழ முடிந்தது. அப்போது ஆயுள் காலம் அவ்வளவு குறைவாக இருந்ததற்கு முக்கியமான காரணம் பிரசவத்தின்போதே பல குழந்தைகள் இறந்து போனதுதான். பிரசவ அபாயங்களில் இருந்து தப்பித்து ஒரு பத்து வயது வரை வாழ்ந்துவிட்ட குழந்தைகள் இன்னொரு இருபது வருடங்கள் உயிர்வாழ வாய்ப்பு அதிகரித்தது. அந்த பழைய கற்காலத்திலிருந்து ஆரம்பித்து, போன வருடம் வரை சராசரி மனித ஆயுள் காலம் எவ்வளவு நீண்டிருக்கிறது என்பது பற்றி விக்கிபீடியாவிலிருந்து ஆரம்பித்து பல வலைதளங்கள் நிறைய புள்ளிவிவரங்களை அள்ளி வீசிக்கொண்டு இருக்கின்றன.

கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த பல மருத்துவ முன்னேற்றங்களின் காரணமாக பிறப்பின்போதே சிசுக்கள் இறக்கும் பரிதாபத்தை வெகுவாக குறைத்து, பல தொற்றுநோய்களை ஒழித்து சராசரி ஆயுள்காலத்தை நாம் வெகுவாக நீட்டி இருக்கிறோம். மருத்துவத்திற்கு வெளியிலும், உலகம் முழுதும் இயற்றப்பட்ட சட்டங்கள் அடிதடி கொலை குற்றங்களை குறைத்து, விலங்கினங்கள் மற்றும் தட்பவெட்பநிலை மாறுதல்களில் இருந்து மனிதர்களுக்கு பாதுகாப்பு அளித்து, போக்குவரத்து சம்பந்தமான விபத்துக்களை குறைத்து மனித ஆயுள்காலத்தை அதிகரித்து கொண்டு இருக்கிறது. இன்றைக்கு பிறக்கும் ஒரு பெண் குழந்தை சராசரியாக தான் எண்பத்திஎட்டு வருடங்கள் வரையும், ஒரு ஆண் குழந்தை எண்பது வருடங்கள் வரையும் வாழ்வோம் என எதிர்பார்க்க முடிகிறது.

நீண்ட நாள் வாழ விரும்புவோமானால், உடலை ஒழுங்காக வைத்துக்கொள்ள வேண்டியதும், நோய் நொடிகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும், யாராலும் கொல்லப்படாமல் இருப்பதும், விபத்துக்களில் மாட்டிக்கொண்டு இறக்காமல் இருப்பதும் இதற்கு அவசியம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆயிரம் வருடங்கள் வாழ இந்த வெளியுலக விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமா? இதை எல்லாம் தாண்டி வெறுமனே வயதாகி இறக்காமல் இருக்க வேறு என்ன தடைகள் இருக்கின்றன, அத்தகைய தடைகளை நாம் வெற்றிகரமாக தாண்டும் சாத்தியக்கூறுகள் பார்வைக்கெட்டும் தொடுவான தூரத்தில் தெரிகின்றனவா  என்று கொஞ்சம் அலசிப்பார்க்கலாம்.

உயிரணு உயிரியல்

இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் மனித உயிரணு பற்றிய உயிரியில் துறையில் (cell biology) பல புதிய கண்டுபிடிப்புகள்  துரிதகதியில் வந்துகொண்டு இருந்தன. அந்த ஆய்வின் ஒரு பகுதியாக பல ஆய்வகங்கள் உயிரணுக்களை மனித உடலுக்கு வெளியே வளர்க்க முயன்று கொண்டு இருந்தன. இதற்காக பல மனிதர்களின் உடலின் பல பகுதிகளில் இருந்து திசு மாதிரிகளை (tissue samples) சேகரித்து அவற்றை தனித்தனியாக ஆய்வக பீட்ரி தட்டுகளில் (Petri dish) இட்டு, அவை தொடர்ந்து வளர தேவையான ஊட்டச்சத்து மிகுந்த திரவத்தை (culture medium) அதனுடன் சேர்த்து சரியான வெப்பநிலையில் பராமரித்து வந்தார்கள். அந்தக்காலத்தில் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் அனைவரும் சரியான ஊட்டசத்தும் உஷ்ணநிலையும் இருக்கும் வரை உயிரணுக்கள் ஆய்வகக்குடுவைகளில் அதன் பாட்டுக்கு வளர்ந்து கொண்டே இருக்கும் என்று ஸ்திரமாக நம்பினார்கள். ஆனால் எல்லா உயிரணுக்களும் கொஞ்சநாட்கள் குஷியாக ஆய்வகத்தில் வளர்ந்துவிட்டு, பின் வளர்ச்சியை நிறுத்திவிட்டு மடிந்தன. ஆய்வாளர்கள் இதற்கு காரணம் தாங்கள் மனித உடலுக்கு ஈடான சரியான ஊட்டச்சத்தை கொடுக்க தவறியதோ அல்லது வெப்பநிலையை சரியாக பராமரிக்காமல் இருந்ததோதான் காரணம் என்று முடிவெடுத்து தங்கள் செயல்முறைகளில் திருத்தங்கள் செய்து திரும்பத்திரும்ப இந்த முயற்சிகளை தொடர்ந்து கொண்டு இருந்தார்கள்.

அவர்களுடைய அந்த நம்பிக்கைக்கு ஒரு வினோதமான காரணம் இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே, ஜனவரி 17, 1912ல் அலெக்ஸிஸ் காரெல் என்கிற ஒரு ஃபிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணர் தான் ஒரு கோழியின் இதயத்திலிருந்து எடுத்த உயிரணுக்களை வெற்றிகரமாக ஆய்வகத்தில் வளர்த்துக்கொண்டு இருப்பதாக அறிவித்தார். இவருக்கு அதேவருடம் இதற்கு சற்றும்  சம்பந்தம் இல்லாத வேறு கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு வழங்கபட்டது. பரிசு என்னவோ உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் அவர் கொண்டுவந்த முன்னேற்றங்களுக்காக கொடுக்கப்பட்டிருந்தாலும், அவர் புகழ் எங்கேயோ உச்சத்திற்கு போய்விட்டதால் அவர் விட்ட கோழிக்கதையை எல்லோரும் நம்பினார்கள். அவர் உண்மையில், ஹிட்லெரை போல, வெள்ளையர்கள் மட்டுமே மூளை மிகுந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் எனவே வெள்ளையர் அல்லாதோர் குழந்தை பெற்றுக்கொள்வதையே தடை செய்ய வேண்டும், அதுதான் மனிதகுலம் முன்னேற சரியான வழி என்று நம்பிய, வாதித்த யூஜெனிஸ்ட் (Eugenist) கும்பலை சேர்ந்தவர் என்பதெல்லாம் வேறு கதை. வெளிச்சம் ஆய்வகத்தில் வளரும் உயிரணுக்களை கொன்றுவிடும் என்று அவர் தவறாக நினைத்ததால் அவருடைய ஆய்வகம் அவர் மனதைப்போலவே இருண்டே கிடந்தது.

இப்படி கோழி உயிரணுக்களை அவர் இருபது முப்பது வருடங்களுக்கு மேலாக விடாமல் வளர்த்து வருவதாக சொன்னது பலமுறை செய்தித்தாள்களில் செய்தியாக வந்து மக்களை கவர்ந்து இருக்கிறது. ஆனால் அதே முறையில் கோழி உயிரணுக்களை மற்ற ஆய்வாளர்கள் வளர்க்க முயன்றபோது அவர்கள் அனைவரும் தோல்வியையே தழுவ வேண்டி இருந்தது. இப்போதெல்லாம் எந்த ஒரு ஆய்வாளரும் அறிவிக்கும் ஒரு கண்டுபிடிப்பையோ அல்லது செய்முறையையோ வேறு ஆய்வகங்களால் திரும்ப செய்து சரிபார்க்க முடியவில்லை என்றால், உடனே முதலில் அதை அறிவித்த ஆய்வாளரின் சட்டையை பிடித்து தூக்கி விடுவார்கள். உதாரணத்திற்கு தென் கொரியாவின் ஹ்வாங்க் வூ-சுக் என்ற கால்நடை ஆய்வாளர் தான் மனித மரபணுக்களை நகலியல் உத்திகளை (cloning techniques) உபயோகித்து நகல் எடுத்து விட்டதாக 2005இல் அறிவித்து, அடுத்த வருடம் உதை வாங்கிக்கொண்டு ஓடிய கதையை[1] விக்கிபீடியாவில் தேடி வாசிக்கலாம். அந்தக்காலத்தில் காரலை அப்படி கேள்வி கேட்க யாருக்கும் தைரியம் இல்லை. கடைசியில் 1944இல் அவர் தலை சாய்த்தபின் அவர் உதவியாளர்களிடம் பேசிப்பார்த்தபோது, தினமும் அந்த கோழி உயிரணுக்கள் வளர அவர் கொடுத்துக்கொண்டு இருந்த ரகசிய ஜூஸில் புதிய உயிரணுக்கள் இருந்தது தெரிய வந்தது. இந்த விஷயம் தெரிந்தும் முப்பது வருடங்களாக அவர் உலகை ஏமாற்றிக்கொண்டு இருந்தாரா அல்லது அவருக்கும் ஒரிஜினல் கோழி உயிரணுக்கள் எப்போதோ மடிந்து விட்டன என்ற உண்மை புரியவில்லையா என்ற புதிர் கடைசிவரை விடுபடவே இல்லை. மொத்தத்தில் சுமார் நாற்பது வருடங்கள் பல விஞ்ஞானிகள் ஒரு தவறான நம்பிக்கையுடன் தலை சொறிந்துகொண்டு இருந்ததுதான் மிச்சம்.

உயிரணுக்களைப் படைக்கும் மரபணுக்கள்

உயிரணுக்கள் வளரும் விதத்தை பற்றி எட்டாம் வகுப்பில் படித்ததை கொஞ்சம் நினைவு படுத்திக்கொள்ளலாம். 1665லேயே நம்மால் அறிந்து கொள்ளப்பட்ட உயிரணுக்கள் உயிர் வாழும் எல்லா உயிரினங்களிலும் காணப்படும் மிகவும் அடிப்படையான ஒரு செயல்பாட்டு உறுப்பு. ஒவ்வொரு மனிதனிடமும் சராசரியாக ஒரு கோடி கோடி (அதாவது 100 டிரில்லியன்) உயிரணுக்கள் உண்டு என்பதிலிருந்து ஒவ்வொரு உயிரணுவும் எவ்வளவு பெரியது என்பது நமக்கு புரிகிறது.

cell

ஒவ்வொரு மனித உயிரணுக்குள்ளும் படத்தில் மஞ்சளாய் காட்டியுள்ளது போல் ஒரு உட்கரு உண்டு. அந்த உட்கருவுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கும் இருபத்திமூன்று குரோமோசோம் என்கிற டி‌என்‌ஏ மூலக்கூறு ஜோடிகளில் (படத்தில் பழுப்பு நிறத்தில் X போல தோன்றுபவை) நம் ஒவ்வொருவரின் கண் நிறம், உயரம் மாதிரி விஷயங்களில் இருந்து ஆரம்பித்து, பிற்காலத்தில் புற்றுநோய் வரும் சாத்தியக்கூறு வரை விலாவரியான ஜாதகக்குறிப்புகள் ரகசியமாய் பதிவு செய்யபட்டு இருக்கின்றன. டி‌என்‌ஏ என்பது ஒரு ஏணியை நீள வாட்டதில் யாரோ முறுக்கி வைத்தது போன்ற இரட்டை திருகுச்சுழல் தோற்றத்தை கொண்டது. அடுத்த படத்தில் காட்டியுள்ளது போல ஏணியின் படிகளாக இருக்கும் மூலக்கூறுகளில் நமது பரம்பரை சம்பந்தப்பட்ட குணாதிசயங்களை பொதிந்து வைதிருக்கும் மரபணுக்கள் (Genes) அமர்திருக்கின்றன. டி‌என்‌ஏ வின் பங்காளியாய் உட்கருவில் கூட அமர்ந்திருக்கும் ஆர்‌என்‌ஏ சமாச்சாரம் உயிரணுக்களில் இருக்கும் எல்லா விஷயங்களையும் நகலெடுப்பது எப்படி என்பது பற்றிய நிரல்களை கொண்டிருக்கிறது. இந்த உட்கருவை சுற்றி ஒரு மெல்லியதோல், அதற்கு வெளியே ப்ரோடோப்லாஸம் ஏரி. அதைச்சுற்றி உயிரணுச்சுவர். இன்னும் விலாவாரியாக எழுதிக்கொண்டே போனால் இதுவே ஒரு புத்தகமாகிவிடும் என்பதால் உயிரணு என்றால் என்ன என்ற விவரணையை இப்போதைக்கு போதும் என்று நிறுத்திக்கொள்வோம்.

Nucelus chromosome dna

இந்த உயிரணுக்களின் வளர்ச்சி என்பது என்னவோ இனப்பெருக்கம் போல் இல்லாமல் நகலெடுத்தல் போல்தான் நிகழ்கிறது. மைட்டோசிஸ் (Mitosis) என்று சொல்லப்படும் அந்த வளர் முறைப்படி, ஒரு தனி உயிரணு ஆர்‌என்‌ஏ நிரல் மற்றும் பல சமிக்ஞைகளுக்கு உட்பட்டு, தன்வழி வரும் ஊட்டச்சத்தை ஏற்று பெரிதாகி, குரோமோசோம் டி‌என்‌ஏ எல்லாவற்றையும் ஒரு நகல் எடுத்துக்கொண்டு, இரண்டாவது உட்கருவை உருவாக்கி, பின் அந்த இரண்டாவது உட்கருவும் பாதி ப்ரோடோப்லாஸமும் ஒரு பக்கமாக தனி குடித்தனம் துவங்கி, ஒரு உயிரணுச்சுவரையும் இடையே கட்டி முடித்தவுடன், ஒரு காலத்தில் தனியாக இருந்த அந்த உயிரணு, இப்போது இரண்டு உயிரணுக்களாக படத்தில் காட்டியுள்ளது போல் வாழ்க்கையை தொடருகிறது அல்லது தொடங்குகின்றன.

Mitosis

உயிரணுக்களுக்குள் இருக்கும் டி‌என்‌ஏ மற்றும் ஆர்‌என்‌ஏஉக்குள் ஒளிந்துகொண்டு இருக்கும் ரகசியங்களில் பாதியைகூடநாம் இன்னும் அறிந்து கொண்டுவிடவில்லை. நமது தோலையும், தோளையும், இரத்தத்தையும், இதயத்தையும் உருவாக்கும் உயிரணுக்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. ஆனால் அவை அத்தனையும் கருவுறும் ஒரு தாயின் வயிற்றில் முதலில் உருவாகும் தண்டு அணுக்களில் (embryonic stem cells) இருந்துதான் பின்னால் உருவாகின்றன. அப்படி முதலில் உருவாகும், எந்த அவதாரமும் எடுக்கும் திறமையுள்ள தண்டணுக்களுக்குள், எவை எந்த உறுப்பாக மாற வேண்டும் என்ற ஆணைகள் எங்கேயோ ஒளிந்திருக்கின்றன. அவை அந்த ஆணைகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு அவயங்களாக உருவெடுக்கும்போது, அவை எந்த அளவுக்கு வளரவேண்டும் என்ற வரையறைகளும் நியமிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு நம் தோலில் இருக்கும் உயிரணுக்கள் தினம் ஒருமுறை மைட்டோசிஸ் முறைப்படி வளர்ந்து பிரிந்து வளர்ந்து பிரிந்து கொண்டே இருக்க, இதயத்திலும் நரம்புகளிலும் இருக்கும் உயிரணுக்கள் ஒரேஒரு முறை தேவையான அளவு வளர்ந்துவிட்டு நின்று விடுகின்றன! இதுதான் தோலில் பட்ட சிறு காயங்கள் சுத்தமாக ஆறிவிடுவதற்கும், பழுதடைந்த இதயங்கள் திரும்ப வேலை செய்ய மாற்று உறுப்பு சிகிச்சை தவிர வேறு வழி இல்லை என்ற நிலைமை நிலவுவதற்கும் காரணம்.

கருவில் உருவாகும் தண்டணுக்களை இயக்கும் விதிகளை எல்லாம் முழுவதுமாக புரிந்துகொண்டு விட்டோமானால், மரபணுக்களை ஆய்வகக்குடுவைகளில் போட்டு நமக்கு வேண்டிய அவயங்களாக அவற்றை வளரச்செய்து ஓய்ந்துபோன இதயங்களுக்கும், சிறுநீரகங்களுக்கும் மாற்று உறுப்புகள் தயாரித்துக்கொள்ளலாம். கருவில் உருவாகும் தண்டணுக்கள் மட்டுமில்லாமல் வளர்ந்த மனிதர்களுக்குள்ளும் சில தண்டணுக்கள் (adult stem cells) உண்டு. எலும்பு மஜ்ஜை, குடல் போன்ற இடங்களில் காணப்படும் இந்த தண்டணுக்கள், கருவில் உருவாகும் தண்டணுக்களைப் போல் எந்த அவயமாக வேண்டுமானாலும் வளரமுடியாதவை. எனினும், அவை இருக்கும் இடத்தைப்பொருத்து ஒரு சில அவயங்களாக வளரும் வரம் பெற்றவை. இப்படிப்பட்ட தண்டணுக்களில் இருந்து உதிரி பாகங்கள் தயாரிக்கும் முறையில் மாற்று அவயங்கள் தயாரித்து பொறுத்திக்கொள்ள முடிந்தால் ஒவ்வாமை பற்றிய கவலையும் வேண்டாம் என்பதால் இந்தத்துறையில் எக்கச்சக்கமாக இப்போது ஆய்வுகள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

ஹேய்பிலிக் எல்லை

மேற்சொன்ன கதையெல்லாம் இப்போது நமக்குத்தெரிகிறது. ஆனால் 1940களில் உயிரியல் துறை இந்த அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை. முன் சொன்னது போல், மனித உயிரணுக்களை போஷாக்கு நிறைந்த திரவங்களில் சரியான வெப்பநிலையில் வைத்து சீராட்டினால் அவை வளர்ந்து கொண்டே இருக்கும் என்று நம்பி பல பத்தாண்டுகளாக பல ஆய்வகங்களில் முயன்று கொண்டிருந்தார்கள். இந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவில் பிலடெல்பியா நகரில் பணிபுரிந்து கொண்டிருந்த லியோனார்ட் ஹேய்பிலிக் என்ற விஞ்ஞானி ஒரு குண்டை தூக்கிப்போட்டார். அவருடைய ஆராய்ச்சியின் முடிவுகளின்படி உயிரணுக்கள் ஆய்வகங்களில் வளர்க்கப்படும்போது சுமாராக ஒரு ஐம்பது முறைதான் பிரிந்து வளர்ந்து கொண்டு வரும். அதன்பின் வளர்வது நின்றுபோய் கொஞ்சநாள் கழித்து அவை தற்கொலையும் செய்து கொள்ளும் என்று அவர் அறிவித்தார். அதிகப்பட்சமாக ஒரு அறுபது முறை மட்டுமே உயிரணு பிரிதல் சாத்தியம் என்று அவர் நியமித்த உச்சத்திற்கு ஹேய்பிலிக் எல்லை என்று பெயர். இந்த முடிவு அலெக்ஸிஸ் காரெல் நாற்பது வருடங்களாக சொல்லி வந்த கருத்துக்களை மூட்டை கட்டி குப்பை தொட்டியில் தள்ளியது. இந்த புதிய புரிதலின்படி பிறக்கும்போதே உயிரணுக்கள் தங்களுக்குள்ளேயே ஒரு கடிகையுடன் பிறந்து, குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடித்தவுடன் மாய்ந்து போவதுதான் விதி என்றால் மனிதர்கள் ஆயிரம் வருடங்கள் வாழும் சாத்தியம் கிடையவே கிடையாதோ?

(தொடரும்…)

0 Replies to “ஆயிரம் வருடங்கள் வாழ்வது எப்படி?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.