அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை – 2

ஓடியாடி உலகம் பார்க்க ஒரு காலம்

ரம்ஸ்ப்ரிங்க (Rumspringa) என்பது ஒரு ஜெர்மன் சொல். அதை தோராயமாக ஊர்சுற்றல் என்று மொழிபெயர்க்கலாம். ஒரு பதினைந்து, பதினாறு வயதை எட்டிப்பிடித்த ஆமிஷ் இளைஞர்களும் இளம்பெண்களும் இந்த பருவத்தை அடைகிறார்கள். அடுத்த 2,3 வருடங்களில் அவர்கள் எப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்பதை ஆமிஷ் சமூகம் கண்டுகொள்ளுவதில்லை. எனவே இந்த கால கட்டத்தில் விதம் விதமான சிகை அலங்காரமோ, வகை வகையான துணிகள் அணிவதோ, சினிமா பார்ப்பதோ, தினசரி/வாராந்திர குடும்ப பிரார்த்தனைகளில் பங்குகொள்ளாமல் ஊர் சுற்றுவதோ, பயணம் செய்வதோ ஆமிஷ் அல்லாத (English) நண்பர்களுடன் நாட்கணக்கில் சுற்றுவதோ, இங்கிலீஷ் ஆண்/பெண்ணை டேட் செய்வதோ எல்லாம் அனுமதிக்கப்படுகிறது.

இதெல்லாம் ஒன்றிரண்டு வருடங்கள் செய்துபார்த்து அலுத்த பின், தன்னிச்சையாக ஒவ்வொரு இளம் ஆணும் பெண்ணும், இது போதும், நான் எனது சமூக தேவாலயத்தின் ஒரு வயது வந்த நிரந்தர உறுப்பினராக சேரத்தயார் என்று முடிவெடுத்து தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கிறார்கள். இதன் பின்னரே அவர்களுக்கு முறையாக ஞானஸ்நானம் வழங்கப்பட்டு அந்த ஆமிஷ் சமூகத்தின் ஒரு நிரந்தர உறுப்பினராக அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த முடிவும், வாக்குறுதியும் சாதாரணமான விஷயம் இல்லை. ஞானஸ்நானம் பெற்று அந்த தேவாலயத்தையம் சமூகத்தையும் சாறும் ஒவ்வொரு உறுப்பினரையும் ஆமிஷ் சமூகம் தங்களில் ஓருவராக பாவித்து வாழ்நாள் முழுதும் வேண்டிய உதவிகள் செய்யும். ஆனால் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்து ஞானஸ்நானம் பெற்றபின் அந்த சமூக வரையறைகளில் (Ordunung) இருந்து வழி தவறுபவர்களை ஆமிஷ் சமூகம் மன்னிப்பதே இல்லை. அத்தகைய மனிதர் அந்த ஆமிஷ் சமூகத்திலிருந்தும் அவருடைய குடும்பத்திலிருந்தும் முற்றிலும் தள்ளி வைக்கப்படுகிறார். ஆமிஷ் மக்கள் யாரும் அவருடன் பேசவோ எந்தவித வணிகமும் நடத்தவோ மாட்டார்கள். மூன்று வேளையும் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுவதும் பிரார்த்தனைகளில் சேர்ந்து ஈடுபடுவதும் ஆமிஷ் பண்வளங்களில் ஒரு முக்கிய பழக்கம். இப்படி ஒரு மகனோ மகளோ ஒரு குடுபத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டால் அந்த குடும்பம் தினசரி மூன்று வேளை சேர்ந்து சாப்பிடும் போதும் அந்த வாழ்க்கை தவறிய மகன்/மகளுக்காக சாப்பிடும் மேஜையில் ஒரு நாற்காலியும் தட்டும் வைத்து அதை காலியாக வைத்துக்கொண்டு சாப்பிடுகிறார்கள்! அந்தக் குடும்பம் உயிரோடு இருக்கும் வரை தங்கள் குடும்பத்திலிருந்து இப்படி ஒருவர் வழிதவறிப்போய்விட்டார் என்று தினமும் மூன்று முறை அவர்களை நினைவுறுத்தும் ஒரு கடினமான அனுஷ்டானம் .இது!

வெளிப்புற வாழ்க்கையை அனுபவித்துப்பார்த்தபின் ஒரு ஆணோ பெண்ணோ அந்த வாழ்க்கைதான் தனக்கு பிடிக்கிறது ஆகவே தனக்கு ஞானஸ்நானம் வேண்டாம், இந்த ஆமிஷ் வாழ்க்கையும் வேண்டாம் என்று முடிவெடுத்தால் அதை ஆமிஷ் சமூகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளுகிறது. அந்த இளைஞரோ, இளம் பெண்ணோ ஆமிஷ் சமூகத்தை விட்டு வெளியேறி வாழலாம், படிக்கலாம், வேலை செய்யலாம், தொலைக்காட்சியோ கைபேசியோ வாங்கி உபயோகிக்கலாம், தங்கள் குடுபத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளளாம், வந்து பார்க்கலாம், வணிகம் செய்யலாம். இதில் ஒரு பிரச்சினையும் கிடையாது. பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் இந்த ஆணோ பெண்ணோ ஆமிஷ் சமூகத்திற்குள் வாழாதது சற்று வருத்தத்தை தரும் என்றாலும் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் உடைக்கப்படாததால் ஞானஸ்நானம் பெறாமல் வெளியேறிய யாரும் குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்படுவதில்லை.

இப்படி ஒரு தப்பிக்கும் வழி இருந்தபோதும், வெளி உலக சவுகரியங்களையும் வாழ்வுமுறையையும் முழுதாக அனுபவித்த பின்பும் தொண்ணூறு சதவீதத்திற்கும் மேலான ஆமிஷ் இளைஞர்களும் இளம் பெண்களும் இந்த பருவத்தின் இறுதியில் ஞானஸ்நானம பெற்று இந்த சமூகத்திற்குள் வாழவே முடிவெடுக்கிறார்கள். ஆமிஷ் குடும்பங்கள் இன்றும் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ளுவதாலும், இழப்பு பத்து சதவிகித்ததிற்கும் குறைவாகவே இருப்பதாலும், ஆமிஷ் மக்கள்தொகை இன்னும் மெதுவாக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

திருமணம்

ஆமிஷ் வாழ்முறை மிகவும் குடும்பம் மற்றும் சமூகம் சார்த்தது என்பதால், திருமணம் ஒரு அதிமுக்கியமான விஷயம். ஒருவரை ஒருவர் தெரிந்தெடுத்தல் சுயம்வரமாகதான் நடக்கிறதெனினும், நம்மூரைப்போலவே சரியான ஜோடி என்று கருதினால் ஒரு பையனையும் பெண்ணையும் சேர்த்து வைக்க குடும்பங்கள் லேசாக முயற்சிப்பதுண்டு. ஆனால் முடிவு என்னவோ பையனும் பெண்ணும் எடுப்பதுதான். ஞானஸ்நானம் பெற்றவர்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும். திருமணம் நிச்சயமான விஷயம் திருமண தேதிக்கு ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்று கிழமை பிரார்த்தனைக்கு பின் சமூகதிற்கு அறிவிக்கப்படும். அதுவரை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்குள் விஷயத்தை ரகசியமாக வைத்துக்கொள்கிறார்கள்,

அறிவிப்பு நிகழ்ந்த பின், புதிய ஜோடி ஒவ்வொரு வீடாகச்சென்று திருமண அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு அழைப்பது வழக்கம். திருமணத்தின்போது அணிந்து கொள்ளும் நீல அல்லது ஊதா நிற உடையை மணப்பெண் தானே தைக்கிறாள். அதே உடை திருமணத்திற்குப் பின் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் பிரார்தனைகளின்போது அணிந்து கொள்ள உபயோகமாகிறது. இறுதியில் ஒரு பெண் இறக்கும்போது அந்த திருமண உடையிலேயே அடக்கம் செய்யப்படுகிறாள். கல்யாணத்தில் மோதிரம் மாற்றிக்கொள்ளும் பழக்கம் கிடையாது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் சமய பாடல்களை வாயால் பாடும் வழக்கம் உண்டு. ஆனால் எந்தவித இசைக்கருவிகளுக்கும் அனுமதிக்கப்படுவதில்லை. இசைக்கருவிகளை வாசிப்பதும் தனியொரு மனிதரை உயர்திக்காட்டி தற்பெருமைக்கு வழி வகுக்கும் என்பது அவர்கள் கருத்து. கல்யாணதிற்க்குபின் தேன்நிலவு என்று பெரிதாக எங்கும் செல்லாமல், திரும்பவும் தங்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று ஆசியும் அன்பளிப்பும் சேகரிப்பது புதுமண தம்பதிகள் வழக்கம். கல்யாணமானதன்பின் கணவர் முன் சொன்னதுபோல் மீசை இல்லாமல் தாடி வளர்க்க ஆரம்பிக்கிறார்.

 

சட்டத்துடன் மோதல்

நூறு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் ஆமிஷ் சமூகம் வாழ்ந்த விதத்திற்கும், மற்ற அமெரிக்கர்கள் வாழ்ந்த விதத்திற்கும் இடையில் பெரிய வித்தியாசம் ஏதும் இருக்கவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் நடந்த உலகப்போர்களும், தொழில்மயமாக்கலும் (Industrialization) கல்விமுறை மாற்றங்களும் கொஞ்சம் கொஞ்சமாக ஆமிஷ் சமூகத்தை நடகால அமெரிக்க சமூகத்திலிருந்து மிகவும் வேறுபடுத்தி காட்டியது. இது பல சமயங்களில் சிறு உரசல்களிலிருந்து பெரும் மோதல்கள் வரை உருவாக காரணமானது. உதாரணமாக ஒரு ஊரில் உள்ள குடிமக்கள் அனைவரும் தொலைபேசி இணைப்புக்கு பணம் கட்டி வாங்கிக்கொள்ளும்போது ஆமிஷ் மக்கள் அதை தவிர்த்ததால், இணைப்பை வாங்குபவர்கள் சற்று அதிகமாக பணம் கட்டி வாங்க வேண்டி இருந்தது பலருக்கும் எரிச்சலூட்டியது. இது போன்றவை சின்ன உரசல்கள். வேறு சில பெரிய மோதல்கள். உதாரணமாக, 1950களில் பென்சில்வேனியா மாநிலம் பள்ளி வருட நாட்களை அதிகப்படுத்திய போதும், உயர்நிலைப்பள்ளி முடிக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என சட்டம் இயற்றிய போதும் ஆமிஷ் குடும்பங்கள் ஒத்துழைக்காமல் அந்த சட்டங்களை எதிர்த்தன. அவர்கள் எட்டாம் வகுப்புக்கு மேல் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திய போது மாநில அரசு அவர்கள் மேல் வழக்கு தொடுத்து பல ஆமிஷ் பெற்றோர்களை சிறையில் அடைத்தது. ஆமிஷ் பெற்றோர்கள் கொடி பிடிக்கவில்லை, ஊர்வலம் போகவில்லை, ஏன் அவர்கள் நீதி மன்றங்களில் வாய்திறந்து வாதாடக்கூட இல்லை. பேசாமல் சிறைக்குச்சென்று திரும்பி வந்தார்கள்.

இந்த விஷயம் பெரிதாக ஆன உடன் அமெரிக்க உச்சநீதிமன்றம் தலையிட்டு ஆமிஷ் சமூகம் பல நூறு வருடங்களாக இதே முறைப்படி வாழ்ந்து வருவதாலும், அவர்கள் தங்கள் குழந்தைகள் நலனில் மிகவும் அக்கறை உள்ளவர்களாக இருந்து அவர்களைப் பேணி வளர்ப்பதாலும் இந்த சட்டங்களிலிருந்து அவர்களுக்கு விதிவிலக்கு அளித்து தீர்ப்பு வழங்கியது. எனவே இன்றும் ஆமிஷ் மக்கள் எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொள்கிறார்கள். ஆமிஷ் மக்கள் தங்களை புகைபடங்களோ வீடியோவோ எடுத்துக்கொள்வதில்லை. தொலைக்காட்சிக்கு பேட்டி எதுவும் கொடுப்பதில்லை. பொது இடங்களில் தூரத்திலிருந்து யாராவது படமெடுத்தால் அதைத்தடுப்பதில்லை. ஆனால் அவர்களிடம் சென்று படத்திற்கு போஸ் கொடுக்கச்சொன்னால் சுத்தமாக மறுத்துவிடுகிறார்கள். சட்டத்துடன் மோதவேண்டிய கட்டாயத்திற்குட்பட்ட போதும், இந்த கொள்கைகளிலிருந்து வழுவாமல் அவர்கள் நடந்து கொண்ட விதமும், அமைதியான போக்கும், அவர்கள் பாதுகாக்க விரும்பிய எளிய ஒற்றையறை பள்ளிக்கூடங்களும் அமெரிக்க சமுதாயத்தின் ஓட்டு மொத்த மனதை வருடி, ஆமிஷ் மக்களுக்கு ஒரு சாதகமான இடத்தையும் மதிப்பையும் பெற்று தந்தது. அப்போதிலிருந்து அந்த சமூகத்தை மற்றவர்கள் ஒரு வினோத மரியாதையுடன் நடத்த ஆரம்பித்தனர்.

வண்டி

ஆமிஷ் குடும்பங்கள் படத்தில் உள்ளதை போன்ற கருப்பு நிற குதிரை வண்டியைத்தான் எங்கும் பயணிக்க உபோயோகிக்கிறார்கள் என்று பார்த்தோம். இரவு நேரத்தில் இத்தகைய வண்டிகளும் நல்ல வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் கார்களும் நாட்டுப்புற சாலைகளை சேர்ந்து உபயோகிக்க வேண்டிய கட்டாயம் விபத்துகளுக்கு வழி வகுத்தது. எனவே சில வருடங்களுக்கு முன் பென்சில்வேனியா மாநிலம் இன்னொரு சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி இரவுநேர விபத்துகளை தவிர்ப்பதற்காக படத்திலிருப்பதை போல பிரதிபலிக்கும் இளஞ்சிவப்பு முக்கோணப் பலகையை குதிரை வண்டிகள் பின் பக்கத்தில் பொருத்திக்கொள்ள வேண்டி இருந்தது. ஆமிஷ் கலாச்சாரப்படி அவர்கள் சிலை, உருவக, பட வழிபாடுகளை தவிர்ப்பவர்கள். மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு உருவகத்தையும் அவர்கள் உபயோகிக்கக்கூடாது. எனவே விபத்தை தடுப்பதற்காக என்பதற்காக இருந்தாலும் இந்த பிரதிபலிக்கும் முக்கோண பலகை உபயோகம் தங்கள் மதகோட்பாடுகளுக்கு ஒவ்வாதது என அவர்கள் முறையிட்டனர். இது ஆமிஷ் மக்களை மட்டுமல்லாது அதே சாலையில் விரைவாக பயணிக்கும் கார்களுக்கும் ஊறு விளைவிக்கும் விஷயம் என்பதால் நீதிமன்றங்கள் ஆமிஷ்தர வாதங்களை ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் பல ஆமிஷ் சமூகங்கள் கீழே இறங்கி வந்து அந்த முக்கோண பிரதிபலிப்பு பலகைகளை வண்டிகளில் பொருத்திக்கொள்ள ஒப்புகொண்டன. இருந்தும் சில சமூகங்கள் இன்றும் இந்த சட்டத்தை ஏற்காது சத்யாகிரகம் செய்து சிறைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்.

சாலை

இதைவிட இன்னொரு சுவையான வழக்கு புதிய வீடுகள் கட்டுவது சம்பந்தமான கட்டிட குறியீடுகள் பற்றியது. சமுதாயத்தின் பொது நன்மை கருதி ஒரு வீட்டின் ஒவ்வொரு தளத்திலும் (each floor) ஒரு புகை கண்டறியும் கருவி (smoke detector) நிறுவப்பட வேண்டும் என்று சில வருடங்களாக இங்கே ஒரு சட்டம் இருக்கிறது. ஆமிஷ் குடும்பங்கள் புதிதாக வீடுகள் கட்டும்போது இந்த சட்டத்தை மதித்து புகை அறியும் கருவி எதையும் நிறுவவில்லை. அவர்கள் வாதம் நெருப்பு பிடித்து எங்கள் வீடு எரிந்து நாங்கள் இறந்தால், எங்கள் விதிமுறைபடி அது கடவுள் எங்களுக்கு எழுதிய விதி; அதை தடுக்க மனிதனால் உருவாக்கபட்ட ஒரு கருவியை நாங்கள் நம்புவது கடவுளின் மேல் உள்ள நம்பிக்கையை புறக்கணிப்பது போலாகிறது என்பதுதான். வழக்கு நீதி மன்றதிற்கு போக, கடைசியில் ஒரு சமரச உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. அதன்படி புதிதாக கட்டப்பட்ட ஆமிஷ் வீட்டை பரிசோதித்து இது மனிதர்கள் வாழத்தகுந்தது என்று சான்றிதழ் தர வரும் ஆய்வாளரே தன்னுடன் புகை கண்டறியும் கருவிகளையும் கொண்டுவந்து அந்த வீட்டில் பொருத்திவிட்டு சான்றிதழ் கொடுத்துவிட்டுச்செல்வார். அதன்பின் அந்த கருவிகளை இயங்கும் நிலையில் வைத்துக்கொள்வதோ பிய்த்து தூக்கி எறிவதோ அந்தந்தவீட்டு சொந்தக்காரரை பொருத்தது..! இந்த உடன்படிக்கையின்படி சான்றிதழ் வழங்கப்பட்டபொழுது கருவிகள் இயங்கிக்கொண்டு இருந்ததால் ஆய்வாளருக்கோ அரசாங்கத்திற்கோ ஏதும் பிரச்சினை இல்லை!

சமகால சிக்கல்கள்

பலவித கலாச்சார, பொருளாதார சமுதாய மாற்றங்களை ஆமிஷ் சமூகம் எப்படியோ சந்தித்து சமாளித்து வந்தாலும், புதுப்புது சவால்கள் வராமலில்லை. காலம்காலமாக ஆமிஷ் குடும்பங்கள் பெரும்பாலும் விவசாயம் செய்துதான் வாழ்ந்து வருகின்றன. இருநூறு வருடங்களுக்குமுன் ஏறக்குறைய எண்பது சதவீத அமெரிக்கர்கள் விவசாயிகளாகத்தான் இருந்தார்கள். போன நூற்றாண்டின் இயந்திரமயமாக்கலுக்கு பின், இன்றைய தேதியில் அமெரிக்க விவசாயிகளின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் வெறும் இரண்டே சதவீதம்தான். இந்த நிலையில் இன்னும் பழைய கால முறைப்படியே விவசாயம் செய்து ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட்டு பொருளீட்டுவது கடினமாகதான் இருக்கிறது. ஆமிஷ் குடும்பங்கள் பிற சமூகங்களில் இருந்து மிகவும் பிரிந்து வாழ்ந்தாலும் அவர்களும் வருமான வரி கட்டுவதில் இருந்து ஆரம்பித்து எல்லா அமெரிக்க சட்டங்களுக்கும் உட்பட்டவர்கள்தான். எனவே பல குழந்தைகளை பெற்ற ஒரு ஆமிஷ் குடும்பம் தகப்பனாரின் நிலத்தை மகன்களுக்கு பிரித்து கொடுக்கும்போது ஒவ்வொரு மகனுக்கும் கிடைக்கும் பங்கு நிலம் ஒரு லாபகரமான பெரிய பண்ணை நடத்தும் அளவுக்கு பெரியதாய் அமைவதில்லை. நிலம், மனை விலை ஏறிக்கொண்டே போவதாலும், ஆமிஷ் குடும்பங்கள் பெரிய பணக்காரர்களாய் இருக்க வழியே இல்லை என்பதாலும் புதிதாக பெரிய நிலங்களை வாங்குவதும் கடினம். எனவே சில ஆமிஷ் சமூகங்கள் நிலம் விலை குறைவாக இருக்கும் வேறு மாநிலங்களுக்கு குடி பெயர்ந்து அங்கே புதிய ஆமிஷ் குடியேற்றங்களை அமைக்க முடியுமா என்று பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். வேறு பல ஆமிஷ் இளைஞர்கள் பரம்பரையாய் செய்துவரும் பண்ணை விவசாயதொழிலை விட்டுவிட்டு ஊரில் இருக்கும் ஆங்கிலேய தொழிற்சாலைகளில் பணிபுரிந்து பொருளீட்டுகிறார்கள்.

ஆமிஷ் குடியிருப்பு

ஆமிஷ் சமூகம் இந்திய சமூகத்தை போல ஆண்களை பிரதானப்படுத்தும் சமூகம்தான். ஆண்கள் அறிவு முதிர்ந்த அன்பான வன்முறையற்ற அப்பாக்களாகவும், பெண்கள் ஆண்களுக்கு அடிபணிந்து வாழ்பவர்களாகவும் அன்பான அம்மாக்களாகவும் இருக்கவேண்டும் என்பது அவர்கள் நியதி. ஆனால் பாதை தவறிய ஒரு கணவன் தன் மனைவியை அடித்தால், அதை தடுக்க ஆமிஷ் சமூகம் விழுந்தடித்துக்கொண்டு வருவதாகத்தெரியவில்லை. அதற்கு பதில் பெண்களை விட்டு கொடுத்து போகுமாறு உபதேசிக்கிறது. ஆனால் நியாயமாக பார்த்தால் அத்தகைய சம்பவங்கள் கேள்விப்பட்டவரையில் மிகவும் குறைவுதான். பொதுவாக ஆமிஷ் சமூகம் எழும் பிரச்சினைகளுக்கு தங்களுக்குள்ளேயே பஞ்சாயத்து பண்ணிக்கொள்ள விரும்பினாலும், நிலைமை மீறி போனால் மனைவி காவல் துறையினரிடம் புகார் கொடுக்கலாம். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வாழும், எல்லா சட்டதிட்டங்களுக்கும் உட்பட்ட சாதாரண குடிமக்கள்தான் என்பதால், காவல்துறை தலையிட்டு பாதுகாப்பு கொடுக்கும்.

மற்றபடி ஆமிஷ் குடும்பங்கள் ஒருவருக்கொருவர் உதவிகொள்வதென்பது மிகவும் பிரசித்தமான விஷயம். உதாரணமாக ஒரு குடும்பத்தின் வீடோ, தானியக் களஞ்சியமோ தீக்கிரையாகி சாம்பல் ஆனதென்றால், மற்ற ஆமிஷ் குடும்பங்கள் உடனே வந்து அடுத்த ஒரு வாரத்திற்குள் புதிய வீடோ தானியக்களஞ்சியமோ கட்டி தந்து விடுகிறார்கள். பெரிய இயந்திரங்கள் எதையும் உபயோகிக்காமல் வெறும் மனிதமுயற்சியால் வெகுவிரைவில் கட்டிடங்களை கட்டும் இவர்கள் முறை பார்பதற்கு வியப்பான ஒன்று.

கட்டுமானம்

ஆமிஷ் சமூகமும் அஹிம்ஸாவாதமும்

வன்முறையை தவிர்ப்பதென்பது ஆமிஷ் வாழ்முறை கொள்கைகளின் ஆணிவேர். எனவே இவர்கள் ராணுவத்தில் எப்பொழுதும் பணி புரிவதில்லை. அரசியலில் ஈடுபடுவதோ, தேர்தல்களில் ஓட்டு போடுவதோ கூட கிடையாது. இங்கே மளிகைக் கடைகளில் கூட துப்பாக்கிகள் விற்பதும், சாதாரணமாக மக்கள் விதம்விதமான துப்பாக்கிகளை வாங்கி வைத்துக்கொள்வதும் சகஜம். பத்து வயது கூட ஆகாத குழந்தைகளுக்கு நிஜ துப்பாக்கியை பிறந்தநாள் பரிசாக கொடுக்கும் பழக்கமும் சில அமெரிக்கர்களிடையே உண்டு. இந்த துப்பாக்கிக் கலாசாரத்தின் பின்விளைவாக உலகிலேயே வேறு எந்த வளர்ந்த செழிப்பான நாடுகளுக்கும் பொருந்தாத சில வருந்தத்தக்க புள்ளிவிவரங்கள் அமெரிக்காவிற்கு பொருந்தும். இந்த நாட்டில் மட்டும் வருடதிற்கு 30,000 மரணங்கள் துப்பாக்கிகளால் நேர்கின்றன. இவற்றில் 19,000க்கு மேற்பட்டவை தற்கொலைகள். மீதமுள்ள 11,000 பூராவும் கொலைகள். இந்த நிலையில் நாடு இருந்தாலும், அமெரிக்க சமூகம் பொதுவாக துப்பாக்கிகளை சுலபமாக வாங்கும், வைத்துக்கொள்ளும் உரிமைகளை விட்டு கொடுக்க தயாராக இல்லை. இத்தகைய ஒரு சமூகத்தில் வாழும் ஆமிஷ் மக்களோ தங்கள் வாழ்வில் வன்முறைக்கு சிறிதும் இடம் தரவிரும்பாதவர்கள்.

இந்த வாழ்முறையை 2006ல் நடந்த ஒரு சம்பவம் அழகாக படம் பிடித்து காட்டி இருக்கிறது. சார்லஸ் கார்ல் ராபர்ட் என்பவன் மனநிலை சரியில்லாத ஒரு இளைஞன். வயது 32. தொழில் லாரி ஓட்டுவது. பென்சில்வேனியாவில் அவன் தனது மனைவியுடன் பார்ட் என்கிற சிற்றூரில் பல வருடங்களாக வாழ்ந்து வந்தான். அருகே நிக்கல் மைன்ஸ் (Nickel Mines) என்கிற ஒரு ஆமிஷ் குடியிருப்பு. அந்த வருடம் காந்தி ஜெயந்தியன்று (அக்டோபர் 2ஆம் தேதி) ஏதோ ஒரு பைத்தியம் பிடித்த நிலையில் ஸிப்ரிங்க்ஃபீல்ட் XD என்ற 9 மில்லிமீட்டர் கைதுப்பாக்கி ஒன்றை எடுத்துக்கொண்டு அந்த ஆமிஷ் குடியிருப்பில் இருந்த ஓர் அறை பள்ளிக்குள் (படத்தில் மாதிரிக்காக ஒரு அருங்காட்சியகத்தில் கட்டி வைக்கபட்டிருப்பது போன்ற ஒரு பள்ளி) நுழைந்தான். அறையிலிருந்த மாணவர்களையும் ஓரிரு ஆசிரியைகளையும் வெளியேறச் சொன்னான். அதன்பின் எஞ்சியிருந்த ஆறு முதல் பதிமூன்று வயதுக்குட்பட்ட பத்து சிறுமிகளை கரும்பலகையை பார்த்து நிற்க வைத்து பின்னாலிருந்து தன் கைத்துப்பாக்கியால் அவர்கள் அனைவரையும் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டு கொண்டு இறந்து விழுந்தான். அவன் சுட்ட பத்து மாணவியரில் ஐந்து பேர் இறந்து போனார்கள். உயிர் பிழைத்த மற்ற மாணவியர் இறந்து போன இரண்டு மாணவிகள் எப்படி அந்த கொலைக்காரனிடம் தங்களை கொன்று விட்டு மற்றவர்களை விட்டுவிடுமாறு மன்றாடினார்கள் என்று விளக்கி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதல்ல பெரிய விஷயம்.

பள்ளி

இந்த குரூரமான சம்பவம் நடந்த அன்று மாலை தங்கள் மகள்களை இழந்த பல ஆமிஷ் பெற்றோர்கள் சார்லஸின் மனைவியையும் பெற்றோரையும் சந்தித்து நாங்கள் அனைவரும் சார்லெஸ்சை மன்னித்து விட்டோம் எனவே நீங்கள் வருத்தப்பட வேண்டாம் என ஆறுதல் கூறி தேற்றி இருக்கிறார்கள்! இறந்து போன ஒரு சிறுமியின் தாத்தா ஆமிஷ் சமூகத்திலிருந்து யாரும் கொலையாளியையோ அல்லது கொலையாளி குடும்பத்தை பற்றியோ அவதூறாக எதுவும் பேசக்கூடாது என்றும் அவர்களை மன்னிப்பதே தங்கள் கடமை, அதற்கு மேல் ஆக வேண்டியதை கடவுள் பார்த்துக்கொள்வார் என்றும் கொலைகள் நடந்த அன்றே கூறினார். பொதுவாக, இத்தகைய சந்தர்ப்பங்களில் மனநிலை சரியில்லாத ஒருவருக்கு எளிதில் கிடைக்கும்படி அந்தக் குடும்பம் துப்பாக்கியை அஜாக்கிரதையாக ஏன் வைத்திருந்தது என்பது போன்ற நியாயமான கேள்விகள் எழும். விவாதங்களை அந்த திசையில் திரும்பவிடாமல், தாக்கப்பட்ட ஆமிஷ் சமூகம், கொலையாளியின் மனைவியும் பெற்றோரும் சட்டத்தினாலும் தங்கள் குற்ற உணர்வினாலும் மிகவும் கஷ்டப்பட போகிறார்கள் என்பதை உணர்ந்து, அந்த கொலையாளி குடும்பத்திற்காக ஒரு தொண்டு நிதியை கூட அமைத்து கொடுத்திருக்கிறது! ஆமிஷ் மக்கள் ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவற்றை நம்புவதில்லை. அவர்கள் யாரிடமும் எதற்கும் நன்கொடையும் கேட்பதில்லை. இதையறிந்த பலர் இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஆமிஷ் குடும்பங்களுக்கென பல தொண்டு நிதிகளை ஏற்படுத்தி அந்த சமூகத்தை வற்புறுத்தி மருத்துவ உதவிகள் செய்தனர். ஏழு வருடங்களுக்கு பின் இன்றும் சார்லஸின் குடும்பத்தினர் அதே ஊரில் அதே ஆமிஷ் குடும்பங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சுமுகமாக நன்றி உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.

கொலைகள் நடந்த அன்று தன்மகன் இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டானே என்று நினைத்து தாங்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுத சார்லஸின் வயதான அப்பாவை ஒரு ஆமிஷ் முதியவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தன் தோளில் அணைத்து ஆறுதல் சொன்ன கதையை கேட்டால், தன் பிறந்த நாளில் நிகழ்ந்த இந்த குரூரம் ஓரளவு கழுவப்பட்டதாக காந்தியடிகள் நிச்சயம் பெருமைப்பட்டிருப்பார்.

0 Replies to “அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை – 2”

  1. நான் அமெரிக்காவுக்கு 2014ல் வந்தபோது பென்சில்வேனியாவில் அமீஷ் குடியிருப்புகளுக்கு சென்று வந்தேன். அமீஷ் வாழ்க்கை பற்றி விரிவாக, என் அமெரிக்க பயண அனுபவங்கள் பற்றிய ‘ஆப்பிள் தேசம்’ நூலில் எழுதியிருக்கிறேன். – ஞாநி

  2. விரிவான அருமையான பதிவு. கட்டுரையாளருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்
    ஆமிஷ் சமூகம் அமெரிக்காவிற்கு ஒரு புதுமையாக இருக்கலாம். நம் நாட்டில் நூற்றுக்கணக்கான பழங்குடி மக்களிடம் இந்த வாழ்க்கை முறை பல நூறு ஆண்டுகளாய் இயல்பாய் நீடிக்கின்றதே. அதை பற்றிய பதிவை கட்டுரையாளர் தொடர்ந்து செய்தால் உதவியாக இருக்கும்.
    கட்டுரையாளர் சுந்தர் வேதாந்தத்தின் தொடர்பு எண் வேண்டும் . அவருடன் மேலதிக விபரங்களுக்காக உரையாட வேண்டும். நன்றி!!

  3. வன்முறைக்கு ஆளானபோதும், அதுவும் “வேற்று சமூகத்தினர்” செய்த வன்முறைக்கு ஆளானபோதும் அமைதியும் அஹிம்சையும் கடைப்பிடித்த, வெறுப்பை வளர்க்காத ஆமிஷ் மக்கள் போற்றப்படவேண்டியவர்கள்.
    எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்துவிட்டு வீடு கட்டி, துணி தைத்துக் கொண்டு விவசாயம் செய்து வாழ அவர்களால் முடிகிறது என்றால் நாம் என்ன மாதிரி வாழ்க்கை வாழ்கிறோம்? நமது படிப்பு நாம் உருவாக்கிச் சிறைப்பட்டுள்ள தொழில்/வணிக ரீதியான செயற்கையான வாழ்க்கைக்குத்தான் தேவை என்று தெரிகிறது. இருபத்தைந்து வயதையும் தாண்டி படித்துக்கொண்டிருந்துவிட்டு ஆசிரியராய்ப் பணியாற்றும் என்னை இது பாதிக்கிறது.

Leave a Reply to சாளை பஷீர்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.