வம்ச விருக்ஷா – எஸ் எல் பைரப்பா

மானுட இருப்பு குறித்த சில அடிப்படை கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் தேவை தத்துவங்கள் தோன்றக் காரணமாயிருந்திருக்க வேண்டும். ஆனால் காலப்போக்கில் தத்துவவியல் தன் உள்ளுறை தர்க்க முறைமைகள் குறித்த விசாரணையில் ஆழப்புதைந்த பிற்பாடு அது மானுட அனுபவம் குறித்த கவலைகளைவிட்டு விலகலாயிற்று. மானுட அனுபவத்தில் தன் வேர்களைக் கொண்ட மரபு, எத்தகைய  மாற்றத்தையும் மிகத் தீவிரமாக எதிர்க்கிறது என்ற ஒரு எதிர்மறை விமரிசனமுண்டு. எனவே, தத்துவவியலாளர்கள் அல்ல, சமகால மானுட அனுபவத்தைப் பேசும் எழுத்தாளர்களே தத்துவச் சிந்தனைகளை வாழ்வனுபவத்துடன் ஒருங்கிணைத்து, அதன் வெளிச்சத்தில் மரபார்ந்த விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்தும் கடப்பாட்டுக்கு உரியவர்களாகின்றனர். எஸ். எல். பைரப்பாவின் ‘வம்ச விருக்ஷா’ தொடர்ந்து மாற்றங்களைக் காணும் உலகச் சூழலில் இந்து தத்துவச் சிந்தனைகளும் மரபார்ந்த விழுமியங்களும் மானுட அனுபவத்தோடும் தமக்குள்ளும் முரண்படுதலில் ஏற்படும் கொந்தளிப்பைத் தன் விவாதப் பொருளாக எடுத்துக் கொள்கிறது.

SL_Bhyrappa_Kannada_Karnataka_Authors_Covers_Read_Library_Vamsa_Vruksha_Book

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழும் இரு குடும்பங்களைப் பற்றிய நாவல் இது. ஸ்ரீநிவாஸ ஷ்ரோத்ரி, சதாசிவ ராவ் – இந்த   இருவரின் குடும்பங்களும் திருமண உறவால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்ரீநிவாச ஷ்ரோத்ரியின் குடும்பம் கபில நதிக்கரையில், மைசூருக்கு தெற்கே உள்ள நஞ்சன்கூட் என்ற ஊரில் வசிக்கிறது. இந்த ஆறுதான் பருவமழைக்கால வெள்ளப்பெருக்கில் ஸ்ரீனிவாச ஷ்ரோத்ரியின் மகனைக் கொண்டு சென்று அவரது மருமகளையும் சிறு பிள்ளையையும் துணையின்றி விட்டுச் செல்கிறது. சதாசிவ ராவின் குடும்பம் மைசூரில் வசிக்கிறது. லண்டனில் உயர்கல்வி படித்து முடித்த அவரது இளைய சகோதரன் ராஜா ராவ் இந்தியா திரும்புகிறான். இளம் விதவையான ஷ்ரோத்ரியின் மருமகளும் ராஜா ராவும் காதல்வயப்படுகின்றனர். ஷ்ரோத்ரிக்கு இதில் வருத்தம் இருந்தாலும், ராஜா ராவை மணந்து இல்லற வாழ்வை மீண்டும் புதிதாகத் துவக்கலாமா வேண்டாமா என்று அவரது மருமகளே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்ற சுதந்திரமாக விட்டு விடுகிறார்.

தன் முடிவைத் தானே தீர்மானித்துக் கண்டடைய வேண்டும் என்ற நிர்பந்தம் ஷ்ரோத்ரியின் மருமகள் காத்யாயனியின் மன அமைதியைக் குலைக்கிறது. அவள் முதலில் ராஜாவைத் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருப்பது என்று முடிவெடுக்கிறாள். அதன் பின் அவனது பிரிவைத் தாளமாட்டாதவளாக, துணிந்து தன் மகனைப் பிரிந்து ராஜாவை மணந்து புது வாழ்வைத் துவக்குகிறாள்.

இதற்கிடையில், மைசூர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றும் சதாசிவ ராவ் ஒரு மாபெரும் செயல்திட்டத்தைத் துவக்குகிறார் – பல தொகுப்புகள் கொண்ட இந்திய கலாசார வரலாற்றை எழுதத் துவங்குகிறார் அவர். இதற்கான ஆராய்ச்சிப் பயணம் ஒன்றில் அவர் கருணா என்ற பெண்ணைச் சந்திக்கிறார். கருணா இலங்கையைச் சேர்ந்த ஒரு வரலாற்று மாணவி. ராவுக்கு கருணாவின் அர்ப்பணிப்பு பிடித்துப் போகிறது, அவளது குறிப்பெடுக்கும் திறன் அவரது பணிக்கு உதவுவதாக இருக்கும். மேற்கத்திய உலகின் கவனத்தைப் பெறத் துவங்கியிருக்கும் ராவின் பாண்டித்யம் குறித்து கருணாவுக்கு பெரும் மதிப்பு இருக்கிறது. ராவின் அறிவுத் திறனும், வரலாற்றிலும் பண்பாட்டிலும் அவருக்குள்ள ஆழ்ந்த புரிதலும் அவளை வசீகரிக்கின்றன.

கருணாவை இந்தியா வருமாறு அழைக்கிறார் ராவ். அவரது ஆய்வுகளுக்கும் பல நூல்கள் கொண்ட தொகுப்பை அச்சேற்றவும் அவளது உதவி துணை செய்யும் என்ற நோக்கத்தில் கருணா தன் இரண்டாம் மனைவியாக வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறார் ராவ். தன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கருணா இந்தியா வரச் சம்மதிக்கிறாள். அவள் ராவை மணந்து, அவரது தொகுப்பு நூல் வெளிவரத் துணையாக இருப்பாள். இதன்பின்னான நிகழ்வுகளும் அவை இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீது செலுத்தும் தாக்கமும் நாவலின் மையமாக இருக்கின்றன.

‘சிந்தனைகளின் மோதல்’ என்றுகூட இப்புத்தகத்துக்கு தலைப்பு வைத்திருக்கலாம். ஸ்ரீனிவாச ஷ்ரோதிரி, சதாசிவ ராவ், காத்யாயனி என்ற மூன்று மையப் பாத்திரங்களைக் கொண்டு இந்த மோதலை நாவல் உருவாக்குகிறது.

Indian_Book_Author_Kannada_Writer_SL_bhyrappa-vamsavruksha

ஸ்ரீனிவாச ஷ்ரோத்ரி பீஷ்ம பிதாமகர் போன்ற ஒரு பாத்திரம். தன்னைச் சுற்றிலும் துன்பகரமான நிகழ்வுகள் அரங்கேறக் கண்டும் கலங்காமல் சமநிலை காக்கும் மனத்தெளிவு அடைந்த ஆதர்ச பாத்திரம் இவர். சாஸ்திரங்கள் பயின்ற, மிகவும் மதிக்கப்படும் சம்ஸ்கிருத பண்டிதர், இந்து மரபில் ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர். சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டு வாழப்பட வேண்டியதே வாழ்க்கை என்று அவர் நம்புகிறார் – வாழ்வின் இறுதி லட்சியமான, அனைத்து பற்றுகளையும் விட்டொழித்த சந்நியாசத்தைத் தன் நோக்கமாகக் கொண்டே கணப்பொழுதும் வாழ வேண்டும். தன் சிக்கல்களுக்கான விடைகளைக் காண அவர் எப்போதும் பண்டைய சாஸ்திரங்களைத் தேடிச் செல்கிறார். சாஸ்திர அறிவே அவரது அறவுணர்வாக இருக்கிறது. அவர் தன்னை ஒரு தனியனாகக் காண்பதில்லை – காஷ்யப ரிஷியில் துவங்கி ஒவ்வொரு மூதாதையர் வழியாக வளர்ந்து விரிந்த ஒரு மாபெரும் விருட்சத்தின் அண்மைய கிளையாகவே அவர் தன்னை உணர்கிறார். தன் வம்சம் அழியாமல் தொடர்வதையும் காஷ்யப ரிஷி வம்சத்தில் வந்த ஷ்ரோத்ரி குடும்ப கௌரவத்தைக் காப்பதையுமே அவர் தன் கடமைகளாகக் கருதுகிறார். ஷ்ரோத்ரி எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இந்த இரு நோக்கங்களை மனதில் கொண்டே செயல்படுத்தப்படுகின்றன.

ஸ்ரீனிவாச ஷ்ரோத்ரியின் பீஷ்மத் தன்மை கதையில் மேலும் வலுவாக உணர்த்தப்படுகிறது – அவர் ஒரு தர்ம சங்கடமான நிலையில், உடலுறவைப் பரிபூரணமாகத் துறக்கும்போது. முதல் குழந்தைப் பேற்றையடுத்து இனி ஒரு மகப்பேறு ஏற்பட்டால் அது அவரது மனைவியின் உயிருக்கே ஆபத்தாக இருக்கும் என்று  மருத்துவர் அவரை எச்சரித்திருக்கிறார். அவரது இல்லத்தில் இருக்கும் பணிப்பெண்ணிடம் தன் காமத்தைத் தணித்துக் கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைகிறது. காமப் பெரும்புனலை நுகர்வைக் கொண்டு எதிர்கொள்ளத் தூண்டும் தாபத்துக்கும் அது அறச்செயலாக இருக்குமா என்ற கேள்விக்குமிடையே அவர் தவிக்கிறார். இத்தனைக்கும் மனைவியும் பணிப்பெண்ணும் இத்தகைய ஒரு உறவை அனுமதிக்கத் தயாராக இருக்கின்றனர். உறக்கமற்ற ஒரு இரவுக்குப் பின் ஷ்ரோத்ரி அந்தத் தேர்வை நிராகரிக்கிறார். தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற என்றும் மணம் புரிவதில்லை என்ற சத்தியப்பிரக்ஞை செய்த பீஷ்மரைப் போல் அல்லாமல், தனது தர்மம் அனுமதி மறுப்பதால் அனைத்து உடலுறவையும் துறக்கிறார் ஷ்ரோத்ரி. இந்த தர்மமே அவரை அறவழியில் அழைத்துச் செல்வதாக இருக்கும். ஷ்ரோத்ரி ஒரு தீவிரமான அகப்போராட்டத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றவராகிறார்.

சதாசிவ ராவ் அர்ஜுனனைப் போன்றவர், அவர் எப்போதும் பறவையின் கண்களை மட்டுமே பார்க்கிறார் – மற்றவையனைத்தும் அவரது கவனத்தை விட்டு காணாமல் போகின்றன. இந்திய பண்பாட்டு வரலாற்றின் ஐந்து நூல்களுமே சதாசிவ ராவ் ஒருமனதாகச் சிந்திக்கும் பறவையின் கண்களாக இருக்கின்றன. அந்த அச்சைச் சுற்றியே அவரது வாழ்வு சுழல்கிறது. அவர் எப்போதும் புத்தகங்களால் சூழப்பட்டிருக்கிறார், தனது ஆய்வுக் கட்டுரையில் மட்டுமே அவரது ஆர்வம் இருக்கிறது – தனது புரிதல் குறித்து அவர் எப்போதும் விவாதித்தபடி இருக்கிறார், அல்லது தன் ஆய்வுக் குறிப்புகளைச் சேகரித்து, தொகுப்பதில் ஈடுபட்டிருக்கிறார். மானுட உணர்ச்சிகள் கடமைக்குக் குறுக்கே வருவதால் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது. கருணாவின் உதவி இல்லாமல் தன்னால் பாரதப் பண்பாட்டு வரலாற்றை எழுத முடியாது என்று திட்டவட்டமாக உணர்ந்திருக்கும் காரணத்தால்தான் அவர் அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். கருணாவை இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொள்ளும் முடிவெடுக்கும்போது அவர் தன் முதல் மனைவியைக் கலந்தாலோசிப்பதில்லை, அவருக்கு அவளுடைய உணர்வுகள் ஒரு பொருட்டல்ல. அவர் இவ்வாறு நடந்து கொள்வதைச் சுயநலம் என்று சொல்ல முடியாது, தன்னலம் சார்ந்த முடிவல்ல இது. இந்த முடிவு மிகத் தீவிரமான ஒற்றை லட்சியம் கொண்ட ஒரு மனதின் தீர்மானம் – அவர் தனக்கென்று புகழ் தேடும் நாட்டம் கொண்டவரல்ல, மானுட அறிவுச் செல்வத்தின் நிரந்தரக் கொடையாகத் தன் ஆய்வை விட்டுச் செல்ல விரும்புகிறார். இதனால் கிடைக்கக்கூடிய புகழ் அவரது இலக்கல்ல. அறிவைப் பரவலாகப் பகிர்ந்தளிப்பதே அவரது லட்சியம். தன் லட்சியத்திலேயே குறியாக இருப்பது சதாசிவ ராவின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கிறது. அவரது ஒவ்வொரு அடியும் அவரது மகோன்னதமான பயணத்தின் விசையால் செலுத்தப்படுகிறது.

சதாசிவ ராவின் சகோதரன் ராஜா அவருக்கு முற்றிலும் மாறானவன். சதாசிவ ராவ் தனிமை விரும்பி, எவருடனும் அதிகம் பேசிப் பழகாதவர். ராஜா அனைவருடனும் சகஜமாகப் பழகுகிறான், மனித உறவுகளை நாடுகிறான், அவை அவனுக்கு மனநிறைவளிக்கின்றன. எப்போதும் தன் அண்ணியுடன் பேசிக் கொண்டிருப்பவன் அவன், தன் அண்ணன் மகனுடன் விளையாடுவதை விரும்புகிறான். ராஜா, தன் கல்லூரியில் நாடகக்குழு ஒன்றைத் துவங்குகிறான், நாடகங்கள் எழுதுகிறான், அவை மாணவர் மத்தியில் வரவேற்பும் பெறுகின்றன. அடிப்படையில் அவன் ஒரு நவீன இந்தியன், விதவை மறுமணம் பலத்த எதிர்ப்பைச் சந்தித்த நாட்களிலேயே காத்யாயனியை மணம் புரிய முடிவெடுக்கிறான்.

.

SL_Byrappa_Vamsa_Vruksha_Writers_Kannada_India_Authors

தலைப்பைப் பார்த்தாலே தெரிகிறது – நாவலில் இந்த ஆண்கள்தான் பிரதான பாத்திரங்களாகக் குறிக்கப்படுகிறார்கள். ஆனால் கதையென்னவோ இதன் பக்கங்களை நிறைக்கும் மூன்று பிரதான பெண் பாத்திரங்களுக்கே உரியதாக இருக்கிறது. மரபுவாதியான ஷ்ரோத்ரிக்கும், அறிவுஜீவியான சதாசிவ ராவுக்கும் மாற்றாக. உணர்ச்சிகளின் வேகத்தால் அலைக்கழிக்கப்படும் காத்யாயனியை நம்முன் நிறுத்துகிறார் பைரப்பா. அவளை ப்ரக்ரிதியின் குறியீடாக நாம் கொள்ளலாம். தனது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவள் மரபையோ அறிவையோ தேடிச் செல்வதில்லை – தன் உணர்ச்சிகளைக் கொண்டே எந்த ஒரு பிரச்சினையையும் அணுகுகிறாள். அவளுக்கு மரபைக் காக்கும் லட்சியம் இல்லை, வாழ்விலும் மகத்தான லட்சியம் என்று எதுவும் கிடையாது. நம் எல்லாரையும் போலவே அவளும் சந்தோஷமாக வாழ விரும்புகிறாள். எந்த ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போதும் அவள் தனக்கான விடைகளை உணர்ச்சிகளின் வேகத்தைக் கொண்டு கண்டு கொள்கிறாள். உணர்வுகளே எந்த ஒரு பிரச்சினைக்கும் இயல்பான அணுகுமுறை என்று அவள் நினைக்கிறாள். இந்த வகையில் அவளை ப்ரக்ருதியின் வெளிப்பாடு என்று சொல்லலாம்.

சதாசிவ ராவின் முதல் மனைவி நாகலட்சுமி பாரம்பரியமானவள், தன் குடும்பத்துக்கு அப்பால் அவளுக்கு எதுவும் சுவாரசியப்படுவதில்லை. தன் கணவனுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்வதும் தன் மகனை ஒழுக்கமானவனாக வளர்ப்பதுமே அவளது வாழ்வின் நோக்கமாக இருக்கின்றன. சதாசிவ ராவ் மகிழ்ச்சியாக இருக்க அவள் என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்கிறாள். சதாசிவ ராவ் மறுமணம் செய்து கொண்டு கருணாவுடன் பிரிந்து சென்றதும் அவள் உடைந்து போகிறாள். அவளுக்கு சமயப் பற்று மட்டுமே ஒரே ஆறுதலாக இருக்கிறது, அவளால் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிவதில்லை.

இலங்கையைச் சேர்ந்த கருணா சதாசிவ ராவின் பிரதி பிம்பம். அவள் அறிவாளி, சுதந்திரமானவள், சதாசிவ ராவின் கனவுகளைத் தனதாக்கிக் கொள்கிறாள். சதாசிவ ராவ் தன்னை மாணவியாகச் சேர்த்துக் கொள்ளப் போவதை அறியும்போது முதலில் அவளுக்கு அது மிகுந்த ஆனந்தமளிக்கிறது. பின்னர் அவள் இல்லாமல் மிகக் கடினமான தன் ஆய்வுகளைச் செய்ய முடியாது என்று கடிதம் எழுதி அவளை மைசூருக்கு வருமாறு சதாசிவ ராவ் எழுதும்போது அவள் சுயவிருப்பத்தின் பேரிலேயே இந்தியா வருகிறாள். அதன் பின் அவள் தன் லட்சியம் ஒன்றே ஒன்றுதான் என்று தெளிவாக இருக்கிறாள். பின்னர் அவளுக்கு தான் செய்வது சரியா தவறா என்ற சந்தேகங்கள் ஏற்பட்டாலும் அவளது பிரச்சினைகளுக்குத் தேவைப்பட்ட தீர்வைத் தருவதற்கு அவளது லட்சியம் போதுமானதாக இருக்கிறது. வேறொரு கோணத்தில் பார்த்தால் அவளும் நாகலட்சுமி போன்றவள்தான் – தன் வாழ்வையே சதாசிவ ராவுக்கு அர்ப்பணித்து விடுகிறாள் அவள். சதாசிவ ராவின் உணர்வுகளைத் தாங்கி ஆதரிப்பவளாக தான் இருக்க வேண்டும் என்று நாகலட்சுமி விரும்பினால், கருணா அவரது அறிவுத் துணையாக இருக்கிறாள். அவளது துணையும் உதவியும் இல்லாமல் சதாசிவ ராவின் லட்சியங்கள் அனைத்தும் நொறுங்கிப் போகும்.

இந்த நாவல் நெடுக வரும் கருத்துகளின் மோதலுக்கான முதுகெலும்பாக இந்தப் பாத்திரங்கள் இருக்கின்றன. முதல் முக்கியமான மோதல் ஷ்ரோத்ரியின் மரபு சார்ந்த வாழ்க்கைப் பார்வைக்கும் காத்யாயனியின் நவீன பார்வைக்குமிடையே ஏற்படுகின்றது. ஷ்ரோத்ரியின் வாழ்வும் இளம் காத்யாயனியின் வாழ்வும் ஒப்பீட்டில் ஒருமை கொண்டவை. மருத்துவ காரணங்களினால் தன் மகன் பிறந்த பின் இல்லற இன்பங்களைத் துய்க்க முடியாதவராக இருக்கிறார் ஷ்ரோத்ரி. மகன் பிறந்ததும், காத்யாயனியும் விதவையாகிறாள். ஷ்ரோத்ரிக்கு தத்துவமும் மரபும் இதனால் ஏற்படும் குழப்பங்களை எதிர்கொள்ள உதவுகின்றன. இறுதியில் அவர் தன் பாலுணர்வை முழுமையாக வெற்றி கொள்கிறார். காத்யாயனியோ வாழ்வைப் புலனின்பம் உட்பட அதன் அத்தனை இன்பங்களோடும் அனுபவிக்க விரும்புகிறாள். அவள் தன் பெண்மை மலர வேண்டும் என்று  ஆசைப்படுகிறாள். ஷ்ரோத்ரியோ வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்றும் அது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுவிட்டது என்றும் நம்புகிறார். ஒரு சம்சாரியின் கடமை தன் வம்ச விருட்சத்தின் தொடர்ச்சியைத் தன் வாரிசைக் கொண்டு உறுதி செய்வது மட்டுமே, அதன்பின் அவன் துறவை நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால் காத்யாயனியால் இந்தத் தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. பகவத் கீதையைப் படித்தும் தன்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அவள் தன் மாமனாரிடமே ஒப்புக் கொள்கிறாள். அவளுக்கு உடலின் இன்பங்கள் மெய்யானவையாக இருக்கின்றன. தன் உணர்வுகளுக்கு ஆதரவாக ஒரு துணை வேண்டும் என்ற தேவையும் அவளுக்கு மெய்ம்மை கொண்டதாக இருக்கிறது. ஒரு விதவையாக வாழ்ந்து அழியத் தான் பிறக்கவில்லை என்று அவள் நினைக்கிறாள், தன் முன்வினையின் காரணமாகவே தான் விதவையானதாகச் சொல்லப்படுவதை அவள் நிராகரிக்கிறாள். அக்கால வழக்கப்படி அவள் தன் தலையை மழித்துக் கொள்வதில்லை. மாறாக அவள் கல்லூரியில் மேற்படிப்பு படிக்கிறாள், அங்கு அவளது ஆசிரியர் ராஜா ராவைக் காதலிக்கிறாள்.

காத்யாயனி வீட்டைவிட்டு வெளியேறும் விருப்பத்தைத் தெரிவிக்கும்போது ஷ்ரோத்ரி சாஸ்திரங்களில் இருந்து மேற்கோள் காட்டுகிறார், மரபின் பெருமையும் பரம்பரை கௌரவமும் பேசுகிறார். சமூகம் அவளிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதைக் கூறுகிறார். தர்மத்தை அடித்தளமாகக் கொண்டு அவளது வாழ்வு எப்படி வாழப்பட வேண்டும் என்றும் சொல்கிறார். இறுதியாக அவள் தன் விருப்பப்படி எதுவும் செய்யலாம் என்று முடிவை அவளிடமே விட்டுவிடுகிறார். இது காத்யாயனிக்கு ஒரு பெரும் தர்மசங்கடமான நிலையை உருவாக்குகிறது. ஒரு பக்கம் குடும்ப கௌரவமும் அவளைத் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக நடத்திய புகுந்த வீட்டு மனிதர்கள். மறுபக்கம் ராஜா ராவ் மீது அவள் கொண்ட காதலும், அவளது வாழ்வில் உள்ள வெற்றிடத்தை நிரப்பக்கூடிய எதிர்கால சாத்தியங்களும் அவளை அலைக்கழிக்கின்றன. முதலில் அவள் மறுமணம் வேண்டாம் என்றுதான் தீர்மானிக்கிறாள், அதை ஷ்ரோத்ரியிடம் சொல்லவும் செய்கிறாள். ஆனால் அவளது காதலை அவளால் துறக்க முடிவதில்லை, புது வாழ்வின் அழைப்பையும் அவளால் நிராகரிக்க முடிவதில்லை. இறுதில் அவள் ராஜா ராவுக்காக வீட்டை விட்டு வெளியேறுகிறாள். நவீன வாழ்வின் கவர்ச்சிகள் வலுவாக இருக்கின்றன. இதையே வேறு சொற்களில் சொல்வதானால், மரபு அவளுக்கு மூச்சை அடைக்கும் இறுக்கம் கொண்டதாக இருக்கிறது. தன் இயல்பை இன்னும் சுதந்திரமாக வெளிப்படுத்த இடம் கொடுக்கும் புதுவாழ்வைத் தேர்ந்தெடுக்கிறாள். தத்துவ விசாரணைகளையும் மரபுப் பிடிப்பையும் தீவிர உணர்ச்சிகள் வெற்றி கொள்கின்றன.

ஆனால் துரதிருஷ்டவசமாக இதே தீவிர உணர்ச்சிகள் அவளைக் கைவிடவும் செய்கின்றன. தன் மகனைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டு ஷ்ரோத்ரியிடம் வரும்போது ஷ்ரோத்ரி, பெற்றவர்களுக்கு மட்டும் உரியதல்ல குழந்தை என்று சொல்கிறார். அது ஒரு மாபெரும் வம்ச விருட்சத்தின் இன்னொரு கிளையாகத் துளிர் விட்டிருக்கிறது. காத்யாயனி வேறொரு குடும்ப அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டதால் அவளுக்குத் தன் குழந்தையைக் கோரும் உரிமை கிடையாது. அவன் இப்போது ஷ்ரோத்ரியின் வம்ச விருட்சத்துக்கு உரியவனாக இருக்கிறான். காத்யாயனி இந்த வாதத்தை ஒப்புக் கொள்வதில்லை. அவளது உணர்ச்சிகள் மகனைத் தனக்குரியவனாகக் காட்டுகின்றன. ஷ்ரோத்ரி மீண்டும் அவளைச் சிந்திக்கச் சொல்கிறார். மாடியில் தூங்கிக் கொண்டிருக்கும் அவளது மகனைக் கொண்டு செல்வதானால் அவள் செய்யலாம் என்றும் சொல்கிறார். காத்யாயனி தன் மகனைக் காணச் செல்கிறாள். ஆனால் அவள் மனம் தன் பிள்ளையை அவனது குடும்பத்திலிருந்து பிரித்துக் கொண்டு செல்ல ஒப்புவதில்லை. அவள் தன் விதியை நோக்கித் தனியாகவே செல்ல வேண்டும், அதன் கடுமையான பின்விளைவுகளை அவள்தான் எதிர்கொண்டாக வேண்டும். இங்கேயும் தனிமனிதனைக் கொண்டாடும் நவீனத்துவத்துக்கு மாறாக அவனை ஒரு நீண்ட பாரம்பரியத் தொடரின் சிறு கண்ணியாகக் காணும் மரபார்ந்த பார்வையை நாம் காண்கிறோம். சமுதாய அமைப்பில் தனி மனிதனின் இடம் என்ன என்பதும் அவனுக்கு எத்தகைய தனித்தன்மை அனுமதிக்கப்படலாம் என்பதும் எப்போதும் முடிவற்ற கேள்விகளைத் தோற்றுவித்துக் கொண்டேதான் இருகின்றன.

கருத்துகளின் மோதல் என்பது மட்டுமே நாவலின் மையக் கரு என்று சொல்லிவிட முடியாது. நம்பிக்கையின் பின்விளைவுகளை விசாரிக்கும் நாவலாகவும் இதை வாசிக்கலாம். ஒருவன் கொண்ட நம்பிக்கை பொய்க்கும்போது என்னாகிறது என்ற கேள்வியை இந்நாவல் எழுப்புகிறது. ஷ்ரோத்ரி எப்போதும் மரபில் நம்பிக்கை கொண்டவராக இருந்திருக்கிறார். பரம்பரை கௌரவத்தைக் காப்பாற்றுவது ஒரு மனிதனின் கடமை என்று அந்த மரபு சொல்கிறது. பிறப்பின் நோக்கமும் இதுவாகவே இருக்கிறது. மனிதன் தன பரம்பரை கௌரவத்தை உயர்த்தும் வகையில் வாழ்ந்தாக வேண்டும். இந்த லட்சியமே மனித நடவடிக்கைகள் அனைத்தையும் ஆட்டுவிக்கிறது. ஷ்ரோத்ரி இந்த நம்பிக்கைகளுக்கு ஏற்ப தன் வாழ்வின் பெரும்பகுதியை வாழ்ந்து விட்டவர். ஆனால் துரதிருஷ்டவசமாக பித்ரு கர்மாவுக்கு முந்தைய நாள் தன் பிறப்பு குறித்த உண்மையைக் கண்டறிகிறார் – அவர் வேறொருவனுக்குப் பிறந்தவர், ஷ்ரோத்ரி பரம்பரைக்கு உரியவரல்ல. இதுவரை அவர் கட்டமைத்திருந்த நம்பிக்கைகள் அனைத்தும் இப்போது நொறுங்கிப் போகின்றன, அவரது வாழ்வு அர்த்தமற்றுப் போகிறது. அவர் ஒரு ஷ்ரோத்ரியாக இல்லாதபோதும் அந்தப் பரம்பரைக்கு கௌரவம் சேர்த்திருக்கிறார், அது போதும் என்ற வாதத்தை முன்வைக்கிறாள் பணிப்பெண் லட்சுமி. ஷ்ரோத்ரி அதை ஏற்பதில்லை. ஆனாலும் மரபை விட்டு விலகாமல், மரபை ஒட்டியே தன் பிரச்சினைக்கு விடை தேடுகிறார். எந்த தர்மத்தை இதுவரை கடைபிடித்தாரோ, அந்த மரபே இப்போதும் அவருக்கு வழிகாட்டியாக வேண்டும் – அவரும் அதன் வழியே நடக்கிறார்.

ஒரு தனிமனிதனின் நம்பிக்கையிழப்பு வேதனையான அனுபவம் என்பது உண்மைதான். ஆனால் அதைவிட முக்கியமான கேள்வி ஒன்றுண்டு – சமூகத்தில் பரவலாக நிலவும் நம்பிக்கைகள் பிறர் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன? அவருக்கு உண்மை முன்னரே தெரிந்திருந்தால் வேறு வகை வாழ்வை வாழ்ந்திருப்பாரா? காத்யாயனியின் முடிவை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?  அவளது மகளை அவளோடு அனுப்பி வைத்திருப்பாரா? இவற்றுக்கெல்லாம் கதையின் முடிவில் பதில் கிடைக்கிறது, ஆனால் அதற்குள் இழப்புகள் அனைத்தும் நிகழ்ந்து முடிந்துவிடுகின்றன. ஒருவனது தீவிர நம்பிக்கை மற்றவர்களின் வாழ்வை பாதிப்பதாகவே எப்போதும் இருக்கிறது. இது புரிந்து கொள்ளக்கூடியதுதான். ஆனால் அவனது நம்பிக்கைகளின் அடிப்படைகள் அனைத்தும் நொறுங்கும்போது அந்தப் பேரழிவை எதிர்கொள்ளும் ஆற்றல் அவனுக்கு இருக்கலாம், இல்லாது போகலாம்.

தன் குடும்பமும் கணவனின் மகிழ்ச்சியுமே தன் நோக்கம் என்ற நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு நாகலட்சுமி வாழ்ந்து வருகிறாள். அவள் ஒரு பேதை என்று சொல்லலாம், அவளுக்கு வீடே உலகமாக இருக்கிறது. சதாசிவ ராவ் இன்னொரு பெண்ணை மணப்பதாக முடிவு செய்யும்போது அவளது நம்பிக்கைகள் அனைத்தும் பொய்க்கின்றன. தனக்குள் ஒடுங்கிக் கொள்கிறாள். தனக்கு ஏற்பட்ட பேரிழப்பை அவளால் இப்படிதான் சமாளிக்க முடிகிறது. இப்போது அவள் மதநம்பிக்கையைத் தீவிரமாகப் பற்றிக் கொள்கிறாள். தினமும் ராம நாமம் எழுதுகிறாள். பத்து லட்சம் நாமங்களை எழுதி முடித்ததும் ராமன் அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்குவான் என்று அவள் நம்புகிறாள். மக்கள் தங்கள் நம்பிக்கைகளை இழக்க விரும்புவதில்லை, அதன் சாத்தியமும்கூட அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த பீதிதான் தீவிரரவாதமாக வெளிப்படுகிறது – இவர்கள் என்ன விலை கொடுத்தும் தங்கள் நம்பிக்கைகளைக் காத்துக் கொள்ள தயாராக இருக்கிறார்கள், அதற்காக உண்மையைக்கூட களப்பலி கொடுக்கத் தயங்குவதில்லை.

Uprooted_Vamsha_Vriksha_S_L_Byrappa_authors_Kannada_Writers_Indian_Karnataka_Books_Translations

பைரப்பாவின் கூறுமொழி மிகப் பிரமாதமாக உள்ளது. பாத்திரங்களின் அகப்போராட்டங்களை விவரிப்பதும், அற்புதமாகச் சித்தரிக்கப்பட்ட உணர்ச்சி வேகம் மிகுந்த காட்சிகளை விவரிப்பதுமாக மாற்றி மாற்றி அகம் புறம் சார்ந்த விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். கபில நதியாகவும் சாமுண்டி மலையாகவும் இங்கொரு குளமும் அங்கொரு தோட்டமுமாக புறவுலகம் தோற்றம் பெறுகிறது. ஆனால் பைரப்பாவின் நோக்கு அவரது பாத்திரங்களின் அகவுலகின் வரைவியலுக்கு உருவம் கொடுப்பதாகவே இருக்கிறது. புறச்சித்தரிப்புகளை மிகக் குறைந்த அளவில்தான் செய்திருக்கிறார் – பாத்திரங்களின் உள்ளக் கொந்தளிப்புகளை விவரிப்பதில்தான் அவரது கவனம் இருக்கிறது. அகத் தடுமாற்றங்கள் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. என்றாலும், அவர் தன் கதையினூடாக உருவாக்கும் தீவிரமான நிகழ்வுகள்தான் புனைவுக்குள் நம்மை இழுத்துக் கொள்கின்றன. இந்த விஷயத்தில் பைரப்பா உண்மையாகவே ஒரு பேராசான்தான்.

காத்யாயனி ஷ்ரோத்ரியிடம் தான் ராஜாவைக் காதலிப்பதாகச் சொல்லும் இடமாகட்டும், அவள் தன் மகனைத் தேடி வரும் இடமாகட்டும் கதை உணர்ச்சி மிகுந்த நிலைகள் பலவற்றைக் கொண்டிருக்கிறது. உக்கிரமான உணர்வுகள் கதையெங்கும் நிறைந்திருந்தாலும் அது எப்போதும் மிகையுணர்ச்சியாகவோ மெலோடிராமாவாகவோ மாறுவதில்லை. அதேபோல் கதையில் உரையாடல்களைக் கொண்டு நிகழ்த்தப்படும் விவாதங்கள் ஒருபோதும் அர்த்தமற்ற வெற்று பாண்டித்ய வாதங்களாக மாறுவதில்லை. சில இடங்களில் தத்துவ விசாரணை, மரபு விளக்கம் போன்றவை கொடுக்கப்பட்டாலும் அவை கதைக்கு வெளியே நிகழ்த்தப்படும் கோட்பாட்டு விவாதங்களாக ஆவதில்லை. கதையில் பேசப்படும் விஷயங்கள் அனைத்தும் கதையின் நிகழ்வையொட்டித் தொடர்கின்றன என்பதால் நம் ஆர்வத்தில் தொய்வு ஏற்படுவதில்லை, கதையே எப்போதும் முன்நிற்கிறது – அதன் பின்புலத்தில் உள்ள தத்துவ விசாரணை அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டே பேசப்படுகிறது.

அனைத்து மாபெரும் புனைவுகளைப் போலவும் இந்த நாவலும் பல்வகைப்பட்ட வாசிப்புகளுக்கு இடம் கொடுப்பதாக இருக்கிறது. ஒவ்வொரு வாசிப்பிலும் நம் பார்வைக்கு பல அடுக்குகள் விரிந்து கொடுக்கின்றன. இந்த நாவல் தீர்வுகளை அளிப்பதில்லை, அதைவிட அதிக அளவில் கேள்விகளை எழுப்புகிறது. இந்தக் கேள்விகள் முக்கியமானவை, நம் சிந்தனைக்குரியவை. இவை குறித்த தொடர்ந்த சிந்தனை இருந்தால் மட்டுமே, நம் வாழ்வின் பொருள் என்ன என்ற கேள்விக்கு விடை காண நாம் தொடர்ந்து முயற்சித்த பின்னரே,  நம்மால் மெல்ல மெல்லவாயினும் நம் மரபை மீட்டெடுக்க முடியும். இந்த ஒரு காரணத்துக்காக மட்டும்கூட பைரப்பாவின் வம்ச விருட்சாவை மாபெரும் இந்திய நாவல்களில் ஒன்று என்று சொல்லலாம்.

0O0