என்றுதானே சொன்னார்கள் – கவிதைத் தொகுப்பு

samதற்கால சமூக யதார்த்தங்களை கவிதை உலகிற்குள் கொண்டுவந்திருப்பதாலேயே இக்கவிதைத் தொகுப்பு எனக்கு முதலில் பிடித்திருக்கிறது. இப்போதும் பசியும் வறுமை சார்ந்த அவலங்களும் இருக்கின்றன, ஆனால், மொத்த சமூகமே மிகச் சிக்கலானதொரு வலைப்பின்னலுக்குள் வந்துவிட்டிருக்கிறது. தற்காலத்தின் மிகப் பெரிய அவலமே, இப்புதிய யதார்த்தத்தை உணர்ந்துகொள்வதற்கான அவகாசத்தையோ அவசியத்தையோ அளிக்காத பிழைப்புச் சூழல்.இன்று எத்தனைக் கவிஞர்களால் புல்வெளிகளைப் பற்றியோ நதிகளைப் பற்றியோ மலைகளைப் பற்றியோ எழுத முடியும்? பெரும்பாலும், பூச்சட்டிகளும் கட்டிட விரிசலில் முளைத்திருக்கும் செடிகளுமே நம்மிடம் எஞ்சியிருக்கும் அன்றாட இயற்கை. இயற்கையைவிட இயற்கை “இன்மை”யே நம்மை இப்போது அதிகம் பாதிக்கின்றது.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள், இப்படி நாம் வந்து சேர்ந்திருக்கும் ஒரு அபத்தமான சமூக இயக்கத்தின் பல முகங்களை, நுண்ணிய கவனிப்புகள் வழி சுட்டிக்காட்டுகிறது.

‘இரண்டாம் ஆட்டமும் முடிந்துவிட்டது’ கவிதை ஒரு நகரத்தின் விடியலைச் சித்தரிக்கிறது. மின்சார ரயிலின் ‘கூவலில்’ விழித்தெழுகிறது அந்த நகரம். உண்மையில் பாதி நகரம் அதற்கு முன்பே விழித்துக்கொண்டிருக்கிறது. கைவிடபட்ட வளாகத்தின் முன் ஒரு பைத்தியக்காரன் நின்றுகொண்டிருக்கிறான். பலரும் சிறு நீர் அவதிகளால் தூக்கம் வராது விடியலுக்காக காத்திருக்கிறார்கள். ஒரு இளம்பெண் விஸ்பரைக் குப்பைக் கூடையில் வீசியெறிகிறாள். நகரத்தின் குப்பைகளும், நகர வாழ்க்கையின் மன அழுத்தங்களும் காட்சிகளாக வந்து சேர்கின்றன.

இதே பின்னிரவின் இன்னொரு படிமமாக விரிகிறது “நல்லோர் ஒருவர் உளரேல்‘. மார்கெட்டில் ஐஸ்பெட்டியில் காத்திருக்கின்றன மீன்கள். இங்கும் ஒரு பைத்தியம் நடுத்தெருவில் நிற்கிறான். கழுதைகள் கடப்பதற்கென்று சிக்னல்கள் மாறுகின்றன. சுவரொட்டிகளை முகர்ந்துகொண்டிருக்கின்றன மாடுகள்.விளம்பரப் பலகையின் டிஜிடல் வாசகம் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது. யாருமற்ற அந்த பின்னிரவிலும், நகரம் யாருக்காகதான் இயங்கிக்கொண்டு இருக்கிறது? அங்கு ஒரு அடுக்ககத்தில், அந்த பனியிலும் ஒரு ஜன்னலில் விளக்கெரிந்துகொண்டிருப்பதாக கவிதை முடிகிறது.

எத்தனை வேகமாக நமது வாழ்க்கை முறை மாறிக்கொண்டிருக்கிறது. நம் உணவுகளிலிருந்து நம் கழிவறை வரை! இதைப் பற்றியும் ஒரு கவிதை,
‘மேற்கின் காகிதச் சுருளும் கிழக்கின் கூழாங்கற்களும்’.

முதன்முதலாக நீங்கள் எப்பொழுது
மேற்கத்திய கழிப்பறையை உபயோகித்தீர்கள்

மூன்று நட்சத்திர உணவகத்திலா
தோழமையின் திருமணத்தில் மணமகன்(ள்) அறையிலா
சுற்றுலாவின் பொழுதா
பன்னாட்டு பெட்ரோல் நிலையத்திலா

என ஆரம்பிக்கும் கவிதை, இப்போது எங்கும் வியாபித்துவிட்ட இந்த மாற்றத்தின் தொடக்கத்தைப் பற்றி யோசிக்க வைக்கிறது. உலகமயமாதலின் இன்னொரு முகத்தை ‘கீதாசாரம்‘ விவரிக்கிறது.

நகரத்தை
மேலிருந்து கண்ணாடி வழி
காண்பது இதமானது.

“நேரடியாக இங்கிருந்தே அமெரிக்காவிற்கு விமானம்”
விளம்பரப் பலகையின் நிழலில்
நின்று கொண்டிருக்கிறீர்கள்
இந்த மதியத்தை எப்படிக் கடப்பது என்று தீர்மானிக்க முடியாமல்.

இன்னும் எத்தனையோ மாற்றங்கள். தான் ஆட்சி புரிந்த அரண்மனை வாசலிலேயே, செயலற்று நிற்கிறார் மன்னர், சிலையாக. தன் வீட்டைப் பத்து ரூபாய் டிக்கெட்டிற்கு திறந்துகாட்டிக்கொண்டிருக்கிறார் (மன்னருக்கு குறிகாட்டுபவர்கள்). அரசியல் மாற்றங்களைவிடவும், அவற்றின் விளைவான சூழியல் மாற்றங்களே நம்மை இன்னும் அமைதியிழக்க செய்வன. சிறு வயதில் அறிமுகமாகும் ஆறு, வளர்வதற்குள் பெரும் சாக்கடையாகிப்போகும் அவலம் (குறுக்கு வழியில் கடப்பவர்கள்). அதில் ‘மெல்ல மிதந்து போகிறார்கள் துர்பாக்கிய பித்ருக்கள்’.

இது போல பல கவிதைகளிலும் நாம் மறந்துகொண்டிருக்கும் பித்ருக்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஒரு வகையில், இப்போது நடந்துகொண்டிருக்கும் சமூக சூழியல் மாற்றங்கள், நமது பித்ருக்களுக்கும் நாம் இழைக்கும் அநீதியைப் போல சொல்லப்பட்டிருக்கிறது.

விவேகானந்தர் நீந்தி‘ என்ற கவிதையில்,

விவேகானந்தன்
நீந்தியே அடைந்தான்
பாறையை.
இருபது ரூபாய் பயணச்சீட்டில்
ஸ்ட்ரிமர் படகில்
போய்கொண்டிருக்கிறோம் நாம் அங்கே.

கூடவே நீந்தி வருகிறார்கள்
நெய்தல் நிலத்து சிறுவர்கள்.
எல்லோருக்கும்
எல்லாவற்றிற்கும் முன்பே
அங்கேயிருக்கிறது அப்பாறை.

இங்கு அப்பாறை, என்றும் மாறாத ஞானத்தின் குறியீடாக வருகிறது. ஞானத்தேடல் என்பதும்கூட ஸ்ட்ரீமர் படகில் சென்று கண்டுவருமளவு சந்தைப்படுத்தபட்டுவிட்ட நிலையில், நமக்கு பயம் தருவது என்னவென்றால், இனியும் எத்தனை நாள் அந்த பாறை அங்கு இருக்குமோ!

இது என்ன வகையிலான மாற்றம்? ஆயிரமாயிரம் வருஷங்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் கரப்பான்பூச்சிக்கு பயப்படும் குழந்தைகள், வீடியோ கேம்ஸ்-இல் டினோசர்களைத் துரத்திக்கொண்டிருக்கிறார்கள் (பெரிப்ளனேட்டா அமெரிக்கானா).

இந்த மாற்றங்களும் எல்லோருக்குமானதாக இருக்கவில்லை. பெண்களின் வெளிகளைப் பற்றிய பல கவிதைகளில், என்னை மிகவும் பாதித்தது, ‘வயிற்றில் சூலம்‘. பக்கத்து தெருவில் இரு குழந்தைகள் தீயைப் பொருத்திக்கொண்டு இறக்கிறார்கள். அக்கா என்றுமே வீட்டைவிட்டு அங்கே இங்கே என வெளியே போனதில்லை.

..நாற்பத்திமூன்று வயதில்
வடக்குத் தெருவைப் பார்க்கிறாள்.
எல்லாத் தெருவையும் போலவே இருந்தது
அந்த தெருவும்,
பத்து நிமிட தூரத்தைக் கடக்க
அப்பாவின் ஆத்மா சாந்தியடையவும்,
கணவன் ரொட்டிக்காக கடல் கடக்கவும்,
இரண்டு பிள்ளைகள் தீயில் மரிக்கவும்,
வெயில் சற்று குறைவாகவும்
இருக்கவேண்டியுமிருக்கிறது.

நம் சிற்றூர்களில் கே.எஃப்.சி வருவதற்குக்கூட இத்தனைக் காலம் ஆகவில்லை (சங்கறுப்பவர்கள் அருகி வருகிறார்கள்). ஆனால், நம் அக்காக்கள் பக்கத்து தெரு வரை செல்ல எத்தனை வருடங்கள் ஆகியிருக்கின்றன!

இத்தகைய முன்பின்னான மாற்றங்களைப் பற்றிய நுட்பமானப் பதிவுகளாக இருக்கின்றன இக்கவிதைகள். பெரும்பாலும், ஒரு முட்டு சந்தில் வந்து நின்று எழும் ஆற்றாமையின் கோபங்களாக வெளிப்பட்டிருக்கும் இக்கவிதைகள், தம் நுண்ணிய கவனிப்புகளாலும் சொற்கோர்வைகளினாலும் பலவிதமான விஷயங்களைப் பற்றியும் பேசுகின்றன. ஆச்சரியமாக, குழந்தையுலகைப் பற்றியும்.

ஸ்ரீகுட்டிக்கு எனும் கவிதையில்,

இடவபாதி மழை
ஐந்து நிமிடத்துக்கொருமுறை பெய்வதும் நிற்பதுமாக
சின்னப் பிள்ளையாய் விளையாடுகிறது.
பாவனையாக அதைக் கவனியாத மாதிரி
ஸ்ரீகுட்டி குடை பிடித்துக்கொண்டு
பள்ளிக்குப் போகிறாள்.

இங்கு மழையின் குறும்புத்தனமும், குழந்தையின் பொறுப்பான பாவனையும் விளையாட்டுகளால் நிறைந்த குழந்தைகளின் உலகிற்குள் நம்மை எட்டிப் பார்க்க வைக்கின்றன.

கீழே உள்ள இரு கவிதைகள், இக்காலத்தின் ஆவணங்கள் என்பதையும் தாண்டி சிறிய கதைகளாக (சற்றே யோசித்தால் மாயக் கதைகளாகவும்கூட) தன்னில் தொடங்கி தன்னில் முடிகின்றன.

காணாமல் போனவர்கள் பற்றி சுவரொட்டிகள்

பேருந்து நிறுத்தத்திலும் மின்சார ரயில்களில் மட்டுமே
ஒட்டப்படுகின்றன.
கறுப்பு வெள்ளையிலேயே இருக்கின்றன
அச்சுவரொட்டிகள்.
புகைப்படத்தில்
அவர்கள் ஒரே திசையிலேயே பார்க்கின்றனர்.
மந்த புத்திகளாக,
வண்ண பேண்டும் வெள்ளைச் சட்டையுமாக,
ஆண்களே பெரும்பாலும் தொலைகின்றனர்.
ஆளற்ற பேருந்துகளிலும்
காலியான மின்சார ரயில்களிலும்
இறங்காது பயணிக்கின்றனர்.

தொலைந்துபோனவர்களின்
சுவரொட்டிகள் மீது
எட்டு தினங்களுக்குள் ஒட்டப்படுகிறது
மற்றுமொரு தொலைந்து போனவரின் சுவரொட்டி.

மலைகள் யுகங்களாய்

அன்றாடம் மொட்டை மாடியில்
துணிகளைக் காயப்போடும் சொற்ப அவகாசத்தில்
தூரத்தே தெரியும் மலையின்
நீல விளிம்புகளுக்கு பறந்து செல்வாள் மரிய புஷ்பம்

அதன் உச்சியிலிறங்கி சறுக்கிக் கொண்டு போவாள்
தன் பால்யத்தின் தோட்டத்திற்கு
அன்றொரு நாள்
நேரமாகிவிட்ட பதட்டத்தில்
படிகட்டுக்குப் பதில் புகைக்கூண்டு வழி
வீட்டினுள் நுழைந்தாள்
அன்றிரவு அவளே உணவு மேசையில் பறிமாறப்பட்டாள்

எதுவுமறியா மலைகள் காத்திருக்கின்றன
யுகங்களாய் மரிய புஷ்பத்துடன் விளையாட.

நான் இங்கு, இத்தொகுப்பின் அத்தனைக் கவிதைகளையும் பற்றி பேசவில்லை. அதிலிருந்து ஒரு எண்ணச் சரடை மட்டுமே அளித்திருக்கிறேன். இதன் பிற கவிதைகளியும் சேர்த்து, ஒட்டுமொத்தத்தில் இத்தொகுப்பு தனிமனிதர்களின் புராதன விழைவுகளும், அவர்கள் அணியும்/அணிய விரும்பும் நவீனக் கொள்கைகளும் முரண்படும் தருணங்களைப் பற்றி பேசுகிறது. இந்த முரண்கள் சில சமயம் நுட்பமாக வெளிப்பட்டிருக்கின்றன. சில சமயம், நம்முடைய சில இயல்பான அப்பாவித்தனங்களையும் சந்தேகிக்க முனைகின்றன. ‘என்று தானே சொன்னார்கள்?’ என்ற வியப்பும் விரக்தியும் கலந்த நம்பிக்கையிழப்புகளின் வெளிப்பாடுகள் என்று இவற்றை சொல்லலாம்.

சாம்ராஜ் அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பான இதற்கு, இவ்வருடத்திற்கான ராஜமார்த்தாண்டன் கவிதை விருது கிடைத்திருக்கிறது.

என்றுதானே சொன்னார்கள்
சாம்ராஜ்
சந்தியா பதிப்பகம்
சென்னை.
விலை : ரூ.40/-

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.