ஸெலிலோவிற்கு பிறகு

தமிழாக்கம்: முகின்

நான் கிளம்பியதற்கு என்ன காரணமாகவிரு்ந்தது என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. வாலிபத்தின் கிளர்ச்சியாக இருந்திருக்கலாம். அறிவையும், படைப்பூக்கத்தையும் குறித்த தேடல் காரணமென நான் நினைக்க விரும்புகிறேன். மின்னலை வழிகாட்டியாகவும், நிலவைப் பாதுகாவலனாகவும் கொண்டு, என் பெருவிரலை உலகத்தை நோக்கி நீட்டி, சாலை ஓரத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். அது 1964ஆம் ஆண்டின் வசந்தம், கல்லூரியின் கைப்பந்து விளையாட்டில் கிடைத்த பெருமைகளெல்லாம் முடிந்து,  ஒளியிழந்த எதிர்காலம் தான் என்னெதிரே நின்றது. கொலம்பியா ஆற்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அங்கு சென்றிருந்த பல சமயங்கள் நினைவிற்கு வந்தன. அந்த ஆறு, பதில் விருந்துபசாரத்தை எதிர்பார்க்காது, என்றும் வரவேற்கும் நண்பனாக இருந்தது.

Kinbasket_Lake,_Columbia_River,_British_Columbia

பேஸ் பால் தொப்பி, வைக்கோல் குல்லாய், இரும்புத் தொப்பி அணிந்து கொண்டு வரும் வெள்ளையர்களை ஸெலிலோ அருவி, சுற்றுலாப் பயணிகளாக ஈர்த்தது. அவர்களில் சிலர் வழுக்கைத் தலையர். சாரக்கட்டில் நின்று பழங்குடி இந்தியர்கள் மீன் பிடிப்பதை வேடிக்கை பார்க்க வந்தார்கள். வெயிலால் கன்றிச் சிவந்த கழுத்தில் கருப்புக் கண்ணாடியைத் தொங்க விட்டுக் கொண்டும், பெர்முடா கால்சட்டைக்கு கீழே வீங்கிய உருண்டை முழங்கால்களுமாக வரும் சுற்றுலாப் பயணிகள். அவர்களுடைய பிள்ளைகளுடனும், பேரப்பிள்ளைகளுடனும் சேர்ந்து நின்று படம் எடுத்துக் கொள்வதற்காக எங்களுக்குக் கால் டாலர் கொடுப்பார்கள். சின்னஞ்சிறு வெள்ளைக்கார பெண் பிள்ளைகளுக்கு அருகில் நிற்க ஆசைப்பட்டிருக்கிறேன். அவள் என்னைப் பார்த்து பயந்தால், அவளருகில் மேலும் நெருங்கி நிற்பேன், கண்களில் கண்ணீர் பொங்கி வரும் பொழுது நான் எட்டி அவளை இறுக்கமாகப் பிடித்துக் குலுங்கிச் சிரிப்பேன். அசல் இந்தியர்கள் அருகில் நிற்பது நிஜமாகவே பயம் தரும் அனுபவம் தானே! ஆறு அமைதி தருவதாயிருந்தது. நான் அதன் இதம் தரும் நீரோட்டத்தைப் பார்த்துக் கொண்டே, வெள்ளி நிற அலைகளில் சூரியனின் பிரதிபலிப்பைக் காண்பேன்.

1957இல், அரசாங்கம் டால்ஸ் அணையைக் (The Dalles Dam) கட்டி, பாரம்பரியமாக இநதியர்கள் மீன்பிடிக்கும் பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி எங்களை வெளியேற்றியது.  அப்பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை ஆனால் அவர்கள் அதை வளர்ச்சி என அழைத்தார்கள். எங்கள் மக்களின் வீடுகளில் அவர்கள் கூட்டங்கள் நடத்தியது எனக்கு ஞாபகம் உள்ளது. அந்த நேரத்தில் எங்களுடைய எதிர்காலத்தைக் குறித்துக் கவலைப்பட்டு, நமக்கும்  என்ன ஆகுமோ  என யோசிப்போம்.

oldcelilo

என் அப்பா  டால்ஸ்  வர்த்தகக் குழுமத்தில் திட்ட வரைபடங்களைப் பார்த்திருந்தார், அதனால் ஸெலிலோவின் மக்களை எச்சரிக்க முயன்றார். ஆனால் அவர்கள் என் அப்பாவை கிழட்டுச் சீனாக்காரன் எனக் கேலி செய்தார்கள், ஏனென்றால் அவர் மற்ற கிராமத்தினரைப் போலத் தலைமுடியைப் பின்னிக் கொள்வதில்லை. பொறியாளர்கள், யூனியன் பாஸிஃபிக் ரயில் நிறுவனத்தின் புது ரயில்பாதைக்காக பூமியைத் தகர்த்துச் சமன்படுத்த ஆரம்பித்த பிறகே, கிராமத்து இந்தியர்கள் அரசாங்கம் தன் திட்டங்களைச் செயல்படுத்த முனைப்பாயிருக்கிறது என்பதை அறிந்தார்கள். 1930களில் போனெவில் அணை கட்டப்பட்ட போது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட ஹெர்மென் நீரோடைப் பகுதி இந்தியர்களின் அழிக்கப்பட்ட மீன் பிடிப் பகுதிகளுக்கோ, வீடுகளுக்கோ இழப்பீடு ஏதும்கொடுக்கப்படவில்லை என்பதைப் பலர் மறுபடி நினைவு கொண்டனர்.

என் அப்பா ஸெலிலோ கிராமத்தாரை ஒருங்கிணைத்து, அவர்கள் தொடர்ந்து கூடிப் பேசுவதற்கு ஏற்பாடு செய்தார். அரசாங்கம் எங்களைச் சட்டை செய்யாமல் வெளியேற்றி விட்டு, மீன் பிடிக்கும் தொழிலுக்கும், வீடுகளுக்கும் இழப்பீடு தராமல் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்கக் கூட்டரசின் மக்களவையின் உயர் மன்றத்தில், ஓரெகன் மாநிலத்தின் செனட்டரான  நியூபெர்கருக்கு அப்பா கடிதம் எழுதினார்.  அவரும் மக்களவையில் அரசாங்கம் எங்கள் மீன்வளங்களுக்கு இழப்பீடு கொடுப்பதோடு, புது வீடுகளும் கட்டித் தர வேண்டும் என்று கோரும் ஒரு மசோதாவை முன்வைத்தார். அந்த நேரத்தில் இழப்பீட்டு தொகை குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.  எங்கள் சமூகத் தலைவரின் மகன், “எங்களுடைய உலர்த்தும் கூடத்தில் உள்ள ஒவ்வொரு பலகைக்கும் நீங்கள் 50 டாலர் இழப்பீடாகக் கொடுக்க வேண்டும், ஏனென்றால் இது எங்களுடைய வாழ்க்கை முறை,” என்று கூறினான். அரசாங்கத்து மனிதனுக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. அவர்கள் கொடுக்க வரும் “நியாயமான”  தொகையை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் அல்லது வாஸ்கோ மாவட்ட நீதிபதியிடம் போய் எங்களுடைய பூமியைப் புறம்போக்கு நிலமாக அறிவிக்கச் சொல்லி, எந்த இழப்பீடும் கொடுக்காமல் எல்லாவற்றையும் புல்டோஸர் வைத்து தரை மட்டமாக்கி விடுவோம் என இந்தியர்களாகிய எங்களிடம் சொன்னான்.

1678-linda-photo-at-celilo

வேலையாட்கள் ஒரு நாளின் நில அளவைச் செய்து முடித்தவுடன், எங்களில் சில பையன்கள் அளவைக்குப் பயன்படவெனப் புதைக்கப்பட்ட சிறு கம்புகளை பூமியில் இருந்து உருவி எடுத்து விட்டு, அந்தக் குழிகளை மூடிவிட்டு, குச்சிகளைப் பற்ற வைத்து சிறு தீயில் எரிய விடுவோம். மற்றவர்கள் முகடுகளில் ஏறி சிறு குழலுள்ள துப்பாக்கிகளால் மண்ணைச் சுமந்து செல்லும் பெரிய லாரிகளை நோக்கி சுடுவார்கள். ஏதாவது ஒரு ஓட்டுனர் லாரியை நிறுத்தினால் நாங்கள் மகிழ்ந்து சிரிப்போம். எங்களுக்கேயான சிறு வழிகளில், அணை கட்டுவதை நிறுத்த முயன்றோம்.

இறுதியில், நாங்கள் வெளியேற்றப் பட்ட போது, எங்களுடைய வீடுகளை நாங்கள் எரிக்க வேண்டி வந்தது. நான் எதை எடுத்துச் செல்வது, எதை எரிய விட்டுச் செல்வது என முடிவெடுக்க வேண்டியதாயிற்று. அப்பா தீயைப் பற்ற வைக்கப் போகும் கடைசி நேரத்தில் வீட்டிற்குள் மறுபடியும் ஓடிச் சென்று படுக்கையருகில் இருந்த இழுப்பறை மேஜையை எடுத்து வந்தேன். அது பழைய பாணி அலங்காரப் பெட்டி. பின்னாளில் நான் அதை புதுப்பித்த பின், அது மதிப்பு வாய்ந்த பழம்பொருளானது. மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்த மனதோடு வீடு எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுக்கு ஆற்றின் மறு பக்கத்தில் வேறு புது வீடு கிடைக்கவிருந்தது.

முழுதும் வெள்ளையர்கள் மட்டுமே வாழும் சமூகத்திற்கு – வாஷிங்டன் மாநிலத்தின் விஷ்ரம் என்ற ஊருக்கு– நாங்கள் குடி மாறிப் போனோம். ஒரு வருடப் போராட்டத்திற்கு பின் நானும், என் சகோதரனும் பள்ளியில் சேர அனுமதிக்கப்பட்டோம். ஒரு சமயம், வெள்ளைக்காரச் சிறுமி ஒருத்தி, ஏதோ காரணத்திற்காக என்மேல் மிகவும் கோபம் கொண்டாள். என் மேல் துப்பிவிட்டு, என்னை முன்பிருந்த இடத்திற்கே திரும்பிப் போய் விடுமாறு சொன்னாள்.  என் என்னால் அப்படித் திரும்பிப் போயிருக்க முடியாது ஏனென்றால் என் வீடு முன்னமிருந்த இடத்தில் அப்போது ஒரு நெடுஞ்சாலை இருந்தது. . அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என எனக்குப் புரியவில்லை.

———————————————————————————-

நான் கொலம்பியா நதியின் வட கரையில் நின்ற நேரம், பிரகாசமான சூரிய அஸ்தமனமாகவிருந்தது. அப்போது ஒரு நீலநிறக் கார் அருகில் வந்து நின்றது.

“எவ்வளவு தூரம் போகணும்?” வாலிபன் கேட்டான்.

“போர்ட்லாண்ட்”, நம்பிக்கையோடு கூடிய எதிர்பார்ப்புடன் கூறினேன்.

“ஏறிக் கொள்,” என்றான் அவன்.

சிகரெட் ஒன்றை என்னிடம் கொடுத்தான். அந்தப் பயணம் முழுக்க அரட்டையும், அமெரிக்க தென் மாநிலங்களின் நாட்டுப்புற மரபிசையும், சமகாலத் திரளிசையுமாகக் கழிந்தது.  ஹூட் ஆற்றுப் பாலத்தைக் கடந்து, மேற்கு நோக்கிப் பயணித்தோம்.  கேஸ்கேட் லாக்ஸ் நகர் வரை மட்டுமே தான் பயணிப்பதாக அவன் கூறினான். அந்த இலவசப் பயணத்திற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததைச் சொன்னேன். நெடுஞ்சாலையை விட்டு வெளியேறும் இடத்தில் என்னை இறக்கி விட்டான்.

“நல்லது நடக்கட்டும்,” எனக் கூவினான்.

“நன்றி ஐயா,” எனப் பதில் கூறினேன்.

சூரியன் முழுவதுமாக இறங்கி அனேகமாக இருட்டாகி விட்டது. நான் பயப்பட ஆரம்பித்தேன். ஏதாவது போலிஸ்காரன் சிற்றூரிலிருந்து ஓடிப் போன இளைஞனைத் தேடிக் கொண்டிருக்கலாம்.

முகப்பு விளக்குகளின் ஒளி என்மேல்பட ஒரு கார் அருகில் வந்து நின்றது. அது சாமான்களை ஏற்றிச் செல்லும் சிறு ட்ரக் வண்டி. அதன் பக்கவாட்டில் சென்று, உள்ளே எட்டிப் பார்த்தேன். ஓட்டுனர் இடத்தில் உயரமான கருப்பு மனிதன் உட்கார்ந்திருந்தான்.

“உள்ளே ஏறிக் கொள், சின்னப் பையா,” என ஆணையிடுவது போல கூறினான்.

நான் தயங்கினேன்.  ஆனால் அவன் சலிப்போடு கேட்டான், “உனக்கு சவாரி வேண்டுமா, இல்லையா?”

நான் ஏறிக் கொண்டேன், பிறகு போர்ட்லாண்டை அடையும் வரையில்  சிறிது பேசிக் கொண்டோம்.  பர்ன்ஸைட் பாலத்தின் கிழக்குப் பகுதி வரை என்னை கூட்டிச் சென்று – அங்கு தான் வீடற்றவர்களும், ஊர் சுற்றிகளும் தங்குவார்கள் – இறக்கி விட்டான்.

“பாலத்தைக் கடந்து செல் பையா, உன்னுடைய மனிதர்களை அங்கு காண்பாய்,” எதார்த்தத்தைச் சுட்டும் தொனியில் சொன்னான்.

அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு பாலத்தைக் கடப்பதற்காக  நடக்க ஆரம்பித்தேன்.

_____________________________________________________

பதிப்பாசிரியர் குறிப்பு:

எட் எட்மோ (1946- ) ஷோஷான் – பான்னாக் சமூகக் குழுவைச் சேர்ந்த அமெரிக்கப் பழங்குடியினர். அனேக அமெரிக்கப் பழங்குடியினத்து எழுத்தாளர்களைப் போலவே இவரும் தம் மக்களின் அழிந்து வரும் சமூகப் பழக்கவழக்க்ங்கள், பண்பாட்டின் அரிய தன்மைகள் பற்றி எழுதவும், பேசவும் செய்கிறார். குறிப்பாகச் சிறு குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வதன் மூலம் தத்தமது சமுதாயங்களின் தொன்மை மேலும் அருமை பற்றிய விழிப்புணர்வைக் கொடுக்க முயல்கிறார்.
இங்கு மொழி பெயர்க்கப்பட்ட கதை ‘Talking Leaves: Contemporary Native American Short Stories- An Anthology’ என்கிற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. ‘After Celilo’ என்கிற இக்கதை 1991 ஆம் வருடம் எழுதப்பட்டது. இந்தத் தொகுப்பு வெளியான வருடம் 1991. பிரசுரகர்த்தர் டெல் பப்ளிஷிங்.

************************************


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.