ஓநாய் குலச்சின்னம்– அனுபவமும் வாசிப்பும்

நம்மில் எத்தனை பேருக்கு விவசாயத்தின் பரிணாமம் தெரியும்? உண்மையில் விவசாயம் என்பதுதான் மனிதன் இயற்கைக்கு எதிராகச் செய்ய ஆரம்பித்த முதல் விஷயம். காட்டில் கிடைக்கும் பொருட்களை மட்டும் சாப்பிட்டு, கிடைக்காவிட்டால் பட்டினி கிடந்து, உணவை மற்ற உயிரினங்களுடன் பங்கிட்டு வாழ்ந்த ஆதிமனிதனுக்கு இயற்கை வெறும் நண்பன் மட்டுமே. அதே மனிதன் என்று ஓரிடத்தில் தங்கிப் பயிரிட ஆரம்பித்தானோ அன்று முதல் தன்னை முன்னிறுத்தி, இயற்கையைத் தன் “எதிரியாகவும்” பார்க்க ஆரம்பித்தான். இயற்கையுடன் இயைந்த வளர்ச்சி மட்டுமே சரியானது. எல்லா உயிர்களையுமே ஓர் அளவுடன் தன்னை மீற, இயற்கை அனுமதித்தே வருகிறது. ஆனால், திரும்பச் சரி செய்ய முடியாத அளவிற்கு, நாம் செய்யும் எந்த விசயமும் மோசமானதே.

இன்று நாம் வாழ்வை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், மரபணு மாற்றப்பயிர்கள், அணு உலைகள், நீராதாரங்கள் அழிப்பு என்று இயற்கைக்கு எதிரான பெரும் போராக மாற்றி இருக்கிறோம். அதனால் உயிரினச் சமநிலை, முன் எப்போதையும் விடப் பெரும் சமநிலைக் குறைவை அடைந்து வருகிறது. கண்முன் மறையும் ஒவ்வொரு விசயம் மூலமும் நம்மை விழிக்கச்செய்ய இயற்கை முயல்கிறது, ஆனால் எதையுமே புரிந்து கொள்ளத் தயாரில்லாத, விரும்பாத உயிரினமாக நாம் வாழ்கிறோம்.

நாவலைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு, என் முன் நிகழ்ந்த நிகழ்வொன்றைச் சொல்லிவிடுகிறேன். நான் தமிழகத்தின் அரைப்பாலை நிலமான சிவகங்கையைச் சேர்ந்தவன். எங்களுக்கு என்று தனித்த விவசாயக் கலாச்சாரம் உண்டு. நாங்கள் தஞ்சையை, மதுரையைப் போல ஆற்றையோ, வடதமிழகத்தைப் போல ஏரிகளையோ நம்பி விவசாயம் செய்பவர்கள் அல்ல.வானம் பார்த்த பூமியில், முற்றிலும் மழையை நம்பி விவசாயம் செய்பவர்கள். பெரும்பாலும் மழை பொய்க்கும். ஆனாலும் எங்கள் நிலத்தில் இன்றுவரை விவசாயம் இருக்கிறது, அவற்றில் மழையை நம்பி வருடத்தில் ஒரு முறையேனும் உழப்படும் நிலங்கள் நஞ்சை என்றும், மழையே பெய்தாலும் நீர் நிற்காத வரல் நிலம் புஞ்சை என்றும் அழைக்கப்படுகிறது. நஞ்சை விவசாயம் என்றுமே எங்கள் மக்களின் உணவுத்தேவைக்காக மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. கிணறுகள் வெகு அபூர்வம். நிலத்தடிநீரை உபயோகப்படுத்தி விவசாயம், உற்பத்திப் பெருக்கம், தொழில்முறை விவசாயம் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. சில பதிற்றாண்டுகளுக்கு ஒருமுறை மிதமிஞ்சிப் பெய்யும் மழையின் போது மட்டும் புஞ்சையில் ஒருமுறை உழுது, நீர்த்தேவை குறைந்த பயறுகளை விதைப்பார்கள். மற்ற நேரங்களில் ஆடு மாடுகளின் மேய்ச்சல் நிலமாக புஞ்சை இருக்கும். புஞ்சையில் விவசாயம் செய்வதை யாரும் வரவேற்கமாட்டார்கள். ஒருமுறை கூட உழப்படாத புஞ்சை நிலங்கள் கூட உண்டு. அவை வெறும் சொத்துக்கணக்குகளில் மட்டுமே இருக்கும். இது எங்கள் பகுதியின் விவசாயமுறை.

வானம்_பார்த்த_பூமி

1990களில் எங்கள் பகுதிக்கு, தருமபுரி மற்றும் சேலத்தில் இருந்து மக்கள்குடும்பம், குடும்பமாக வரத் தொடங்கினர். அவர்கள் பகுதியில் 1000 அடிக்கும் மேல் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்தும் தண்ணீர் இல்லாததால் சொத்துக்களையெல்லாம் விற்றுவிட்டு எங்கள் பகுதிக்குக் குடி பெயர்ந்தனர். வந்த உடன் அவர்கள் செய்தது, அதுவரை கைபடாமல் இருந்த புஞ்சைகளை எல்லாம் மொத்தமாக வாங்கியதுதான். ஒரு ஏக்கர் புஞ்சை நிலம் 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை (ஆம் வெறும் சல்லிசான விலையில்) தந்து அவர்களால் வாங்கப்பட்டது. எதற்கும் பயனில்லாத, யாரும் வாங்க விரும்பாத கள்ளிகள் வளர்ந்த, சரலைகள், அரளைக் கற்கள் நிறைந்த நிலத்தை அவர்கள் விலை கொடுத்து வாங்க வாங்க எங்கள் மக்கள் விற்றுத் தள்ளினார்கள்.

கடும் உழைப்பாளிகளான அம்மக்கள் பெரும் எந்திரங்களால் நிலங்களை ஒழுங்குபடுத்தி 120 அடிவரை கிணறுகளைத் தோண்டி, அதனுள் 400 அடிவரை ஆழ்துளைக்கிணறுகளை அமைத்து விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். பொட்டல் காட்டில் சிறுது சிறிதாக பசுமையான நிலம் உருவாகத் தொடங்கியது. சரளையில் கரும்பு, காய்கறி ஏன் பழமரங்களையும் கூட வளரச்செய்தார்கள். அவர்களின் விவசாய முறைகள் எங்களுடைதைப் போல சமநிலை கொண்டதல்ல. ரசாயன உரங்களை, தடை செய்யப்பட்ட பூச்சிமருந்துக்களைப் பயன்படுத்தி லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்படும் தொழிலாக அதை அவர்கள் செய்தார்கள்.

கடந்த இருபது ஆண்டுகளில் 50 முதல் 150 ஏக்கர் கொண்ட பெரும் தோட்டங்களை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதித்தனர். விளைவு – இப்போது நிலத்தடிநீர்மட்டம் பாதாளத்தில் இருக்கிறது. இப்போது எஞ்சி இருப்பது நீரற்ற, மலட்டு மண் கொண்ட, நரிகள், கீரிகள், மான்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலப்பகுதி. அதன் தொடர் விளைவாக, தங்கள் தோட்டங்களை சில கோடிகளுக்கு விற்றுவிட்டு, இதே போல குறைவான பணத்திற்கு நிலம் கிடைக்கும் தமிழகத்தின் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றனர். இப்போதுதான் ஏன் புஞ்சைக் காடுகளை எங்கள் முப்பாட்டன்கள் விவசாயம் செய்யாமல் வைத்திருந்தார்கள் என்று எங்களுக்குப் புரிகிறது. அவை சில ஆயிரம் ஆண்டுகளாக, நீர்ப்பிடிப்புப் பகுதியாக, மெய்ச்சல் நிலமாக, எரிபொருள் உற்பத்திப் பகுதியாக, சிற்றுயிர் வாழிடமாக இருந்துள்ளன. இது புரியாத எங்களுக்கு இன்று எஞ்சி நிற்பது மீட்டுருவாக்கவே முடியாத, முழுப்பாலை. இவ்வளவும் வெறும் இருபத்தைந்தே வருடத்தில் நடந்துவிட்டது.

முக்கியமாக இங்கே புரிந்து கொள்ள வேண்டியது, நிலம், விவசாயம், அதன் முறைகள், விளை பொருட்கள் குறித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு அறிவியல் சார்ந்த பாரம்பரியம் இருக்கிறது. அது திடீரென ஒரே நாளில் உருவானதல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக, பல்லாயிரம் மனிதர்களின் ஒட்டுமொத்த சிந்தனையில், உழைப்பில் உருவாகி வந்தது. அதை அறியாத வேறு பகுதி மனிதர்களோ, அவர்களின் சிந்தனைகளோ, ஏன் மற்றொரு விவசாயியோ கூட அந்தக் கருத்தாக்கத்தை குறுகிய காலத்தில் (குறுகிய என்பது சில தலைமுறைகளாகக் கூட இருக்கலாம்) புரிந்து கொள்ள முடியாது. எந்த மனிதனும் தன்னால் புரிந்து கொள்ள முடியாத உண்மைகளைக் காலாவதி ஆனது என்று சொல்லி அழித்தொழிப்பான். அதுவே எங்கள் நிலத்திலும் நடந்தது, இதன் பின்னணியில்தான் இந்த நாவலை வாசிக்க ஆரம்பித்தேன்.

Wolf

நாடோடிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான சிந்தனை முரண்கள் எப்படி இயற்கை மேல் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்நாவல் ஒவ்வொரு நிகழ்வாக விவரிக்கிறது. மாபெரும் மங்கோலியப் புல்வெளியைத் தலைமுறை தலைமுறையாக நாடோடிகள், ஓநாய்களுடன் பங்கிட்டு வாழ்கின்றனர். ஓநாய்கள் புல்வெளி உயிரினங்களான மான்களை, மர்மோட்களை, எலிகளை வேட்டையாடி உண்கின்றன. அவை வேட்டையாடிக் கொன்ற உயிரினங்கள் “சிலவற்றை”” நாடோடிகள் எடுத்துக் கொள்கின்றனர். அதே போல எப்போதாவது நாடோடிகளின் ஆடுகளை, குதிரைகளை ஓநாய்கள் கொன்று திண்றுவிடுகின்றன. எப்போதாவது மனிதர்கள் சிலரை ஓநாய்களும், அவ்வப்போது ஓநாய்கள் சிலவற்றை மனிதர்களும் கொன்றுவிடுகின்றனர். ஓநாய்களின் தோல் மனிதருக்கும், மனிதர்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடல் ஓநாய்க்கும் வழங்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட, மேய்ச்சல் நிலத்தின் பேருயிர் புல் என்றே நாடோடிகள் நினைக்கின்றனர். அதனால் எதுவும் மிதமிஞ்சி நடப்பதில்லை. இவற்றையெல்லாம் மேய்ச்சல் நிலத்தின் கடவுளான டெஞ்ஞர்(இயற்கை) சரியான கணக்குடன் செய்து வருகிறது. இதன் மூலம் உயிர்ச்சமநிலை மேய்ச்சல் நிலத்தில் தொடந்து பேணப்படுகிறது.

அந்த விரிந்த நிலத்தின் உயிர்ப்பை உணர்ந்தபடி வாழும் மங்கோலிய நாடோடிக் குறுங்குழு ஒன்றின் தலைவர் பில்ஜியும்- அவரது குழுவும், கலாச்சாரப் புரட்சியின் ஒரு பகுதியாக அங்கே வந்திருக்கும், ஆனால் இந்த நிலம் பற்றி எதுவுமே அறியாத சீன மாணவர்களும் தங்கள் வாழ்வைப் பகிர்ந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அவர்களில் ஜென்சென், பெரியவர் பில்ஜியுடன் தன் கேள்விகள் மூலம் நெருக்கமாகிறான். மங்கோலியனாக எப்படி இருப்பது? என்று அவனுக்குள் ஒரு கேள்வி இருக்கிறது. ஒரு மங்கோலியனாய் இருக்க ஒருவன் ஓநாயாய் இருக்க வேண்டும் என்பதை பில்ஜியிடமிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்கிறான். பில்ஜி ஒரு ஓநாய்தான். ஆண்டாண்டு காலமாக ஒநாய்களிடம் இருந்து அவர் மூதாதேயர்களும், அவரும் பெற்ற அறிவு, அவரை ஒரு ஓநாயாகவே மாற்றியுள்ளது. ஒரு தலைமை ஓநாய் எப்படித் தன் குழுவைக் கட்டியமைக்குமோ, உணவைப் பங்கிட்டுக் கொள்ளுமோ, ஒரு தாக்குதலைத் திட்டமிடுமோ, ஒரு தாக்குதலில் இருந்து தன் குழுவைக் காப்பற்றுமோ, தியாகம் செய்யுமோ அப்படியே பில்ஜியும் செய்கிறார். எப்படிச் செங்கிஸ்கானை இந்த ஓநாய்களும் புல்வெளியும் ஒரு பேரரசனாக உருவாக்கியதோ அதைப் போல. ஜென் சென் அவரிடமிருந்து ஓநாய்க் குணங்களைக் கற்றுக் கொள்ளாமல், ஓநாய் குறித்த சாகசங்களை மட்டும் பெற்றுக் கொள்ள நினைக்கிறான். ஓநாய் ஒன்றை வளர்ப்பது மட்டுமே அவன் குறிக்கோள். ஆனால் ஒரு ஓநாய்த் தாக்குதலில் இருந்து மீளும் அவன் உண்மையிலேயே ஓநாய்களைப் புரிந்து கொள்ள முயல்கிறான்.

இந்நிலையில் புரட்சியின் ஒரு பகுதியாக, கட்டாயமாகப் பணியமர்த்தப்படும், விவசாயச் சீனர்களால் இந்தச் சமநிலையைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. அவர்கள் ஓநாய்களை எதிரிகளாகப் பார்க்கின்றனர். ஓநாய்களை ஒழித்துக் கட்டிவிட்டால், இந்த புல்வெளி முழுவதும் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் செய்யலாம் என்று முடிவு செய்கின்றனர். திட்டத்தின் ஒரு பகுதியாக அவற்றின் எஞ்சிய உணவைத் திருடுவதில் சற்றும் மனசாட்சி இன்றி வழித்துத் துடைப்பதுடன், அவற்றின் குட்டிகளைத் திருடுவது, தோலுக்காக ஓநாய்களை வேட்டையாடுவது, விஷம் வைப்பது என்று சமநிலையைக் குலைக்கின்றனர்.அச்செயல்களுக்குப் பதிலடியாக ஓநாய்கள் மனிதரை மிஞ்சிய அறிவு ஒருங்கமைவுடன் பதிலடி தருகின்றன. அவர்களின் குதிரை மந்தைகள் நிர்மூலமாக்கப்படுகின்றன. அது ஒரு எதிர்வினை என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கும் சீனர்கள், அழித்தொழிப்பில் ஈடுபடுகின்றனர். சமநிலையின் ஒரு பகுதியாக ஓநாய் வேட்டையை ஆதரிக்கும் பில்ஜி, ஒரு ஓநாய் வேட்டையை நடத்துகிறார். அதன் பின், அவர் ஓநாய்களை மேலும் மேலும் வேட்டையாட உதவுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார். அதன் பின் எவ்விதக் காரணமும், கணக்கும் அற்று ஒட்டு மொத்த ஓநாய்களும் அழித்தொழிக்கப்படுவதை வேதனையுடன் பார்க்கிறார். இவற்றைப் பில்ஜி என்ற அந்த நாடோடிக் கிழவனால் தடுக்க முடியாமல் போக, இறுதிவரை சீனர்களால் இந்தப் புல்வெளியைப் புரிந்து கொள்ளவே முடியாது என்று ஜென் சென்னிடம் சொல்கிறார்.

நாய்களையும், ஓநாய்களையும் சமமாகக் கருதும் ஜென்சென், அந்த அறியாமையில் ஒரு ஓநாய் குட்டியைத் திருடி அதை நாயைப் போல வளர்க்கிறான். ஆனால் அதை வீட்டு விலங்காக்கும் அவன் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிகிறது. இறுதியில் அவன் அதைத் தன்னிடமும் வைத்துக் கொள்ள முடியாமல், ஓநாய்க் கூட்டத்திடமும் சேர்க்க முடியாமல் போக, குற்ற உணர்ச்சி மேலிட அதைக் கொலை செய்கிறான். இதன் மூலம் இயற்கைக்கு எதிராக ஒரு துரும்பளவு மாற்றம் கூட சாத்தியம் இல்லை என்பதை உணர்கிறான். சீனர்களோ, பெரும் ஆயுதங்களைப் பயன்படுத்தி, ஓநாய்களை மட்டுமல்லாது, மான்கள், மர்மோட்டுகள், அன்னங்கள், வாத்துகள் என அனைத்தையும் அற்றுப் போகச்செய்கின்றனர். மனிதர்கள் உயிர்களை அழிப்பது எந்த ஒரு காரணத்திற்காகவும் அல்ல, தங்களின் பேராசைக்காக மட்டுமே என்பதை ஜென் சென் உணரத் தொடங்குகிறான்.

wolf totem

ஜென்சென் என்னும் அந்தச் சீன மாணவனும், ராணுவத்தலைமையும், சீன விவசாயிகளும் அவரவர் பார்வையில் பார்க்கின்றனர். பில்ஜி மட்டுமே ஓநாய்களை இயற்கையின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார். தன் படைப்பின் ஒரு கண்ணியை அறுத்த மனிதர்களுக்கு, டெஞ்ஞர் அதன் வழியில் மேய்ச்சல் நிலத்தின் மாபெரும் உயிரான புல்லின் வழியே பதில் சொல்கிறது. அந்தப் பதில், இயற்கையைச் சுரண்டும் நாம் எல்லோருக்குமான பாடம்.

இயற்கையை ஒருபோதும் நாம் முற்றிலும் புரிந்து கொள்ள முடியாது. நாவலில், ஓநாய்களின் தாய்ப்பாசம் குறித்து வருவது, ஒவ்வொரு உயிரும் தன் சந்ததிகளின் மூலம் தங்கள் இன நீட்டிப்பை உறுதி செய்ய முயல்வதைத்தான் காட்டுகிறது. ஆனால் நாம் நம் சந்ததிகளுக்கு என்ன மாதிரியான சூழலை வழங்கப் போகிறோம்? இன்று நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய கருத்தாக்கத்தினால் முடிந்த அளவு, இந்த உலகத்தைச் சுரண்டி வாழ்கிறோம். இயற்கையை வெல்ல முடியாது என்று புரிந்து கொள்ள ஜென் சென்னிற்கு ஒரு ஓநாய் வளர்ப்பு போதுமானதாய் இருக்கிறது. அவன் ஓநாயை வளர்ப்பதைப் போலவே நாம் அணுவை பிளக்கிறோம், அணுவின் சக்தியைப் பெற்றுக் கொண்டு அணுக்கழிவுகளை சில ஆயிரம் வருடங்களுக்கு பாதுகாக்க முடியும் என்று அறியாமையுடன் நம்புகிறோம். சுனாமி, அணு உலை வெடிப்பு, மனித உயிர் அணு உற்பத்திக் குறைவு, நோய்கள் இவற்றில் இருந்து நாம் என்ன மாதிரியான பாடத்தைப் பெற்றுள்ளோம்? மேல் சொன்ன எல்லா விசயங்களும் இயற்கையின் சிறிய எதிர்வினைகள் மட்டுமே. உயிர்க்கண்ணிச்சூழலின் ஒரு முனையில் இருக்கும் மனித இனம் மற்ற எல்லாவற்றையும் அழித்துவிட்டால் மனித இனம் வாழ்தலின் தேவை என்ன? தேவை அற்ற நாம் இயற்கையின் இணைப்புக்கண்ணியில் இருந்து தானாகவே நீக்கப்படுவோம் இல்லையா?.

Wolf_Totem_Jiang_Rong_Books_Authors
ஜியாங் ரோங்

எழுதி இருப்பவரின் (ஜியாங் ரோங்) அனுபவங்களே புனைவாக இருப்பதாலும், நாடோடிகள், விவசாயிகள், குதிரைகள், நாய்கள், ஓநாய்கள், மான்கள், மர்மோட்டுகள், அன்னங்கள், வாத்துகள் என்று ஒவ்வொரு உயிரினத்தின் பழக்கவழக்கங்களையும் துல்லியமாகச் சொல்லி இருப்பதாலும் படைப்பின் மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது. பில்ஜி முற்றிலும் இயற்கை சார்ந்த மனிதன். இயற்கையுடன் முற்றிலும் அனுசரித்துச் செல்லும் அவருக்கு இயற்கை மேல் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. சீனர்களோ பில்ஜிக்கு எதிர்நிலையில் இயற்கையை மறுத்து, அதை முற்றிலும் புறக்கணித்து வாழ முயல்கின்றனர். இந்த இரு வேறு புள்ளிகள் ஏற்படுத்தும் முரண்களின் இடையே இயற்கையைப் புரிந்துகொண்டு அதைத் தன் போக்கில் மாற்றி அமைக்க முயலும் ஜென்சென்னின் மனப்போராட்டம் நாவலில் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல கம்யுனிசம் தட்டையான ஒற்றைப்பார்வையில் செயலாக்கப்பட்டதை நாவலில் பல இடங்களில் ஜியாங் விமர்சிக்கிறார். அது இப்போதைய இந்திய ஒற்றைப்பார்வை முதலாளித்துவத்திற்கும் அப்படியே பொருந்துவதை நாம் உணரலாம்.

இந்த நாவலை ஒரு கருத்தாகப் புரிந்து கொள்ள, காந்தியின் வரி ஒன்றே போதுமானது. இயற்கையால் ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும், ஆனால் ஒற்றை மனிதனின் பேராசையை கூட அதனால் பூர்த்தி செய்ய முடியாது. இங்கே ஒற்றை மனிதன் என்பதை, ஒற்றைப்பார்வை கருத்தியல் (visone dimensional ideology) என்று கூட இட்டு நிரப்பலாம்.

வாசகன் தன் வாழ்வை ஏதோ ஒரு புள்ளியில் படைப்புடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தால், அது ஒரு நல்ல இலக்கியம். இந்த நாவல் உங்களை அப்படி உணரச் செய்யும் அளவிற்கு நம்மைச் சுற்றிக் காரணங்கள் நிரம்பி இருக்கின்றன. ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் ஜென்சென்னைப் போல, இயற்கையைப் புரிந்துகொள்ள நினைத்தோ, சீன விவசாயிகளைப் போல புரிந்து கொள்ள மறுத்தோ/முயலாமலோ அதைச் சுரண்டி, அழிக்கும் வேலையையே செய்கிறோம். நம்மிடையே இயற்கையை உணர்ந்த பில்ஜிகள் குறைவு, அதனால் – டெஞ்ஞருக்கு வேலை அதிகமிருப்பதாகவே தோன்றுகிறது.

c_mohan_Authors_Tamil_Writers_Translations_Onaai_Kula_sinnam

மொழிபெயர்ப்பைப் பற்றி இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சி.மோகனின் இந்த மொழிபெயர்ப்பு ஒரு சாதனை. வெகு சில எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து உள்ளடக்கம் சிறப்பாக உள்ளது. எந்த ஒரு வாசகனும் வாசிக்கும்படியான வேலையைச் செய்திருக்கும் அவருக்கும், இந்தப் புத்தகத்திற்காகவே பதிப்பாளரான இயக்குனர் வெற்றிமாறனுக்கும் என் அன்பு.

***

onai_kula_chinnam_Novels_Translation_Books_Tamil
ஓநாய் குலச்சின்னம்,
ஜியாங் ரோங் (எ) லூ ஜியாமின் – தமிழில் சி.மோகன்,
வெளியீடு: அதிர்வு பதிப்பகம்.
பக்கங்கள்: 671.
விலை: 500 ரூபாய்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.