அஞ்சலி: கர்நாடக சங்கீதக் கலைஞர் அனந்தலக்ஷ்மி சடகோபன்

Anantha_lakshmi_Sadagopan_Carnatic_Classical_Singers_Anjali_1928_2013

அனந்தலக்ஷ்மி சடகோபன்  தமிழகத்தின்  திறமை வாய்ந்த மூத்த கர்நாடக சங்கீதப் பாடகியாக அறியப்பட்டவர்.  ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் அரும்பணி செய்த அவர், 15 மே, 2013 அன்று இயற்கை எய்தினார். அவரின் இசைவாழ்க்கையை அறிமுகப்படுத்தும் கட்டுரை இது. நினைவாஞ்சலி என்றும் கொள்ளலாம்.

சுதந்திரத்திற்குச் சற்றே முற்பட்ட காலந்தொட்டு வீட்டுப் பெண் குழந்தைகள் ஓரிரு கலைகளைப் பழகிக்கொள்வது நன்று என தென்னிந்திய மத்ய வர்கக் குடும்பங்கள் கருதின எனலாம். அக்காலங்களில் திறனுள்ள இசைக்கலைஞர்கள் தினப்படி வீட்டிற்கு வந்து கற்பிப்பதற்குத் தயாரென்கையில் பெண்களும் தன்னிச்சையாய் பயில்வதற்கு இசைக்கலையைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், வீட்டில் பாடுவதற்குப் பழகிக்கொள்ளவே, மேடையேறுவதற்கு அல்ல. 1930-களின் இறுதியில் அவரது கிராமத்துச் சனத்தின் கடும் விமர்சனத்தைக் கடந்தே டி. கே. பட்டம்மாள் மேடையேற முனைந்தார். நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டில் வீட்டில் பாட்டு கற்றுக்கொள்வது தேயத்துவங்கியது. குடும்ப மருத்துவருக்கு இணையாக வீடுவரை வரும் குடும்ப இசைக்கலைஞரும் வழக்கொழியத் துவங்கியதால்.

சிறந்த கர்நாடக சங்கீதக் கலைஞரான விருதுநகரைச் சேர்ந்த சாத்தூர் சுப்ரமணியன், ஆரம்ப நாட்களில் பலரின் அழைப்பிற்கிணங்கி வீட்டிற்கு வந்து இசை பயில்வித்தார். அப்படி 1930-40 களில் உருவாகிய ’சாத்தூர் பள்ளி’யிலிருந்து பல சிறந்த மேடை மற்றும் வானொலி இசைக்கலைஞர்கள் வெளிப்பட்டனர். அவர்களில், மூன்று பெண்மணிகள் குறிப்பிடத்தக்கவர்கள்: சீதாமணி ஸ்ரீனிவாசன், சுலோசனா பட்டாபிராமன், மற்றும் அனந்தலக்ஷ்மி சடகோபன்.

அனந்தலக்ஷ்மி சடகோபன் 1928இல் மதுரையில் ஏ. ஆர். நாராயணன் மற்றும் அலமேலு தம்பதிகளுக்குப் பிறந்தவர். சாத்தூர் சுப்ரமணியன் தவிர கணேச பாகவதர், செம்மங்குடி சீனிவாச ஐயர், நேதனூரி கிருஷ்ணமூர்த்தி, டி. முக்தா, வி. வி. சடகோபன் என்று பல வித்வான்களிடம் குருகுலம் பயின்றவர். வாமன் ராவ் ஸ்தோலிகர் என்பவரிடம் முறையாக ஹிந்துஸ்தானி இசைவடிவையும் கற்றுத்தேர்ந்தவர். பாடுகையில் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசைவடிவங்களை கலந்துகட்டாமல் இருப்பதற்கு இப்பயிற்சி அவருக்கு உதவியது எனலாம். அனந்தலக்ஷ்மி கணீரென்ற காத்திரமான குரலமைந்தவர். கச்சேரியில் ராகங்களை நேர்த்தியாக வெளிக்கொணர்வது ரசிகர்கள் உணர்ந்த அவரது பலம். இசை வாழ்க்கையில் முதல் சில வருடங்களுள் வானொலியில் பாடுவதில் பிரபலமடைந்து, சி. ஆர். சுப்புராமன், வி. வி. சடகோபன் ஆகியோர் இசையமைத்த பாடல்களை இசைத்தட்டுக்களில் வழங்கி வரவேற்பைப் பெற்றார்.

ஹிந்து நாளிதழில் விமர்சகர் ‘ஆரபி’ தன் பத்தியில் மெட்ராஸ்-ஏ, மெட்ராஸ்-பி நிலையங்களில் ஒலிபரப்பாகும் கச்சேரிகளில், முக்கியமாக மேடைகளில் ப்ராபல்யமடைந்திராத திறனுள்ள பெண் கலைஞர்களை தேர்ந்தெடுத்து அறிமுகம் செய்வார். அனந்தலக்ஷ்மி உட்பட சாத்தூர் சுப்ரமணியனின் சிஷ்யைகள் மூவருமே ‘ஆலிந்தியா ரேடியோவில்’ பாடியபொழுதில் ’ஆரபி’யால் மிகவும் பாராட்டப்பட்டவர்கள்.

கேள்வி ஞானத்தில் பாடத்துவங்கிய அனந்தலக்ஷ்மி, எம். எஸ். சுப்புலட்சுமியின் திரைப்பாடல்களை வீட்டில் பாடிக்காட்டுகையில், “பாப்பா அப்படியே குஞ்சம்மாவைப் போலவே பாடுகிறதே” என்று சண்முகவடிவு உச்சிமுகர்வாராம். ஹிந்து நாளிதழில் 2006இல் அளித்த பேட்டியில் அனந்தலக்ஷ்மி இதைக் குறிப்பிட்டுள்ளார். 1939இல் தன் முதல் மேடைப்பாட்டை வழங்கிய அனந்தலக்ஷ்மி, தொடர்ந்து பன்னிரெண்டு வயதில் சென்னை வானொலியில் முதன்மையான பாடகியாய் ஸ்தாபித்துக்கொண்டார். 1943இல் ‘மியூசிக் அகடெமி’ நடத்திய போட்டியில் நடுவர்களான ஜி. என். பாலசுப்ரமணியன் மற்றும் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பதினைந்து வயதான அனந்தலக்ஷ்மிக்கு எச். எம். வி. நிறுவனத்தின் தங்கப்பதக்கத்தை பரிசளித்தனர்.

1940 – 50 வருடங்களில் எம். எஸ். சுப்புலட்சுமி, டி. கே. பட்டம்மாள், என். சி. வசந்தகோகிலம் வரிசையில் ரசிகர்களிடையே அமோகமான வரவேற்பைப்பெற்ற எச். எம். வி. நிறுவனத்தின் இசைத்தட்டுக்கள் கொடுத்தவர்களுள் அனந்தலக்ஷ்மி சடகோபனும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எச். எம். வி. நிறுவனத்தின் முதல் தமிழ் இசைக்கச்சேரி இசைத்தட்டு அனந்தலக்ஷ்மியினுடையது என்பது ஆச்சர்யமளிக்கும் தகவல். அவரைப் பற்றிய பாராட்டுமுகமான குறிப்புகளை, ‘ஆனந்த விகடனுக்கு’ உப வெளியீடாக 1940 – 50 களில் (விகடனின் ‘பகுத்தறிவு போட்டியில்’ வென்றவர்களின் பட்டியலை அறிவிப்பதற்காகவே பிரதானமாய்) பிரசுரமான ‘நாரதர்’ பத்திரிகையில், ‘ராவுஜி’ என்றறியப்பட்ட சீனிவாஸ ராவ் எழுதியுள்ளார். இதை அசோகமித்திரன் தன் ’சபாஷ் சரியான போட்டி’ (2000) கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இக்காலகட்டத்தில் அனந்தலக்ஷ்மி வழங்கிய இசைத்தட்டில் சி. வி. சுப்புராமன் இசையமைத்த இரண்டு பாரதியார் பாடல்களுடன், மிகவும் பிரபலமடைந்த ‘கான மழை பொழிகின்றான்’ பாடலும் உள்ளது. அம்புஜம் கிருஷ்ணா இயற்றிய இப்பாடலுக்கு இசைவடிவம் கொடுத்தவர் வி. வி. சடகோபன். இவரது அம்மாவும் அனந்தலக்ஷ்மியின் அம்மா அலமேலுவும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனந்தகிருஷ்ணாபுரத்துக்காரர்கள். இவ்விசைத்தட்டில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பிரபலப்படுத்திய ‘சங்கராபரணனை அழைத்தோடிவாடி கல்யாணி, தர்பாருக்கு’ என்கிற சதுர்ராகமாலிகை பல்லவியை எல்.பி. ரெக்கார்டின் காலவரயறைக்கு ஏற்பத் திறமையாக அனந்தலக்ஷ்மி சுருக்கி வரைந்துள்ளார்.

நான்கு ராகங்களின் சாரத்தையும் சுருக்கமான ஆலாபனைகளில் வெளிப்படுத்துவதிலாகட்டும், அதிசுருக்கமான அதிரசமான நிரவல்கள், ஸ்வரக்கோர்வைகள் என்று சுறுசுறு காலப்பிரமாணத்தில் அமர்களப்படுத்தியுள்ளார். தர்பார் ராகத்தை “ககாரிஸ” பாடித்தான் காட்டவேண்டும் என்றில்லை என்பதும் வெளிப்பட்டிருக்கும்.

காம்போதி ராகத்தில் ஸ்வரங்கள் பாடுகையில், ‘கமபாமக ரிகஸாரிக’ என்கிற ரம்மியமான ஸ்வரக்கோர்வை (மெலடி) உள்ளது. மதுரை மணி ஐயர் காம்போதியில் அடிக்கடி மேல்ஸ்த்தாயியில் பிரயோகித்து, பக்கவாத்தியத்தில் வயலின்காரர் கீழ்ஸ்தாயியில் உடன் அதையே வாசிக்கவும், ரசிகர்களைச் சிலிர்ப்படைய வைத்துள்ளார். இந்த ஸ்வரகோர்வையை அனந்தலக்ஷ்மி மேற்படி ராகமாலிகை பல்லவியைப் பாடுகையில், சங்கராபரணம் ராக வடிவில் உபயோகித்துள்ளார். அழகாய் இருந்தால், கேட்பதற்கு இனிமையாய் இருந்தால், அதே ஸ்வரக்கோர்வைகளை ராக வடிவம் கெடாமல் அக்காலப் பாடகர்கள் பல ராகத்திலும் எடுத்து உபயோகிக்கத் தயங்கவில்லை என்பதுடன் அதற்கான இசைத் தேர்ச்சி பதினைந்து வயதில் அனந்தலக்ஷ்மியிடம் இருந்ததும் கவனிக்கத்தக்கது.

பொதுவாக நினைப்பதற்கு மாறாக, கட்டுப்பாடுகள் சிலவிதமான படைப்பூக்கங்களை விருத்தியே செய்யும் என்பதைக் காலவரயறைக்குட்பட்ட தங்கள் எல்.பி.ரெக்கார்டிங் வெளிப்பாடுகளில் அரியக்குடியாரில் துவங்கி, எம். எஸ். சுப்புலட்சுமி, ஜி. என். பாலசுப்ரமணியன் என்று அனந்தலக்ஷ்மி உட்பட பலரும் ஆவணப்படுத்தியுள்ளனர்.

oOo

மேலே குறிப்பிட்ட ‘மியூசிக் அகாடெமி’ பரிசை வென்ற கையோடு 1943இல், பதினைந்து வயதில் அனந்தலக்ஷ்மிக்கு கல்யாணம். கணவர் சடகோபனின் (வி. வி. சடகோபனுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது) இடமாற்றங்களடங்கிய வேலைக்கேற்ப டெல்லி சென்று விட்டதால் தமிழ்நாட்டில் வளரும் கலைஞராய் கச்சேரி மேடைகளில் முழுநேரமாய் அனந்தலக்ஷ்மியால் நிறுவிக்கொள்ள இயலவில்லை. தன்னால் வரும் அழைப்பைத் தவிர, மேடையேறுவதற்குத் தாமாக முனையக்கூடாது என்கிற நெறிமுறையை அனந்தலக்ஷ்மி பிடிவாதமாய் கடைப்பிடித்ததாலும் இருக்கலாம். ஆனால் டெல்லி ‘ஆல் இந்தியா ரேடியோவில்’ பாடிப் பிரபலமடைந்தார். டெல்லி மற்றும் மெட்ராஸ் வானொலி இசையரங்கங்களில் விதூஷியாகவும், நடுவராகவும் கடந்த அறுபது வருடங்கள் தொடர்ந்து பணியாற்றியுள்ளது அவரது கொடை.

பிரதான சிஷ்யை, மகள் சுஜாதா விஜயராகவன் தவிர, அனந்தலக்ஷ்மியிடம் அதிகம் பயின்றது அவரது மருமகன் மதுரை சுந்தர். பிறகு மதுரை டி. என். சேஷகோபாலனின் பிரதான சிஷ்யராய்த் திகழ்ந்து இன்று அமேரிக்காவில் இசைப்பள்ளி துவங்கி நடத்தவும், தொடர்ந்து அமேரிக்காவிலும், சீசனில் சென்னையிலும் இசைக்கச்சேரிகள் அளித்தும் வருகிறார் மதுரை சுந்தர். அனந்தலக்ஷ்மியைத் தன் முதல் குருவெனக் கருதுகிறார். ரசிகர்கள் அதிகம் அறிந்திராத விஷயம், அனந்தலக்ஷ்மி குமரகுருபரரின் மீனாக்ஷியம்மை பிள்ளைத் தமிழிலிருந்தும் சிலவற்றுக்கு இசைவடிவம் கொடுத்திருக்கிறார். இவ்வாக்கத்தின் வர்த்தக ஒலிவடிவங்கள் வெளியிடப்பட்டதாய் நான் அறியவில்லை. ‘ஆல் இந்தியா ரேடியோ’ களஞ்சியத்திலோ, அவரது குடும்பத்தாரிடமோ இருக்கலாம்.

oOo

1960 – 70 களில் அனந்தலக்ஷ்மியால் அவ்வப்போது சென்னைக்கு வந்து மேடைக் கச்சேரிகள் செய்ய முடிந்தது. சிஷ்யை சுஜாதா விஜயராகவன் இக்கச்சேரிகள் பலதில் உடன் பாடியுள்ளார். கணீரென்ற குரல்வளம், இலக்கணச் சுத்தமாய் பாடுவது, ராக ஆலாபனைகளில் முதிர்ச்சி என்று அனந்தலக்ஷ்மி தன் பலங்களை அன்றைய கச்சேரிமேடைகளில் அதிகம் புழக்கமில்லாத ராகங்களைப் பாடுகையிலும் வெளிப்படுத்தினார். இவ்வகையில் ‘பஜனசேயராதா’’ எனும் தர்மவதி ராகக் கீர்த்தனையை அவர் ஆரவாரமாய் பாடியதைக் குறிப்பிடவேண்டும். செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரால் நாட்டைக்குறிஞ்சி ராகத்தில் இசைவடிவம் கொடுக்கப்பட்ட ‘கோலம் காண வாரீரோ’ எனும் அம்புஜம் கிருஷ்ணாவின் கிருதி அன்றைய மேடைக்கு அனந்தலக்ஷ்மி அளித்த மற்றொரு ‘புதிய பாடல்’. சட்டென்று பழகாத ராகங்களில் புதிய கிருதிகளை மெருகேற்றி மேடையில் பாடி அப்ளாஸ் வாங்குவதற்கு வித்வத்தும், மனோதிடமும் அனந்தலக்ஷ்மியிடம் இருந்தது. ஆதி தாளத்தில் அமைந்த அவரது கல்யாணி ராகப் பல்லவி ‘தாரக ப்ரும்ஹ ஸ்வரூபிணி, தாம ரச விலோசினி’ இக்காலக்கட்டத்தில் கச்சேரி ரசிகர்களிடையே பிரசித்தம்.

மூத்த நண்பர் டி. டி. என். (அடிக்குறிப்பை பார்க்கவும்) அனந்தலக்ஷ்மி இசையின் பரம ரசிகர். மேல் பத்தியில் குறிப்பிட்டுள்ள பல கச்சேரிகளை நேரில் ரசித்தவர். ஒரு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அனந்தலக்ஷ்மியின் வீட்டுக்குழந்தை ஒன்றின் நாட்டிய அரங்கேற்றத்தில், இடைவேளையில் வந்திருப்போருக்கு அலுக்காமலிருக்க அனந்தலக்ஷ்மி பாடத்துவங்கினாராம். காம்போதி ராக ஆலாபனை விறுவிறுக்க நேரம் போனது தெரியவில்லை. அடுத்து நடந்த அறங்கேற்ற நிகழ்ச்சிகள் சம்பிரதாயமாகிப்போயின. நினைவுகூறும்வகையில் நின்றது அன்றைய அனந்தலக்ஷ்மியின் ‘எக்ஸ்டெம்போர்’ காம்போதி ஆலாபனைதான் என்றார். காம்போதி ராகத்தில் சாத்தூர் சுப்பிரமணியனின் படைப்பூக்கம் இன்றளவும் மெச்சத்தக்க உச்சம். அவரது சிஷ்யையும் அந்த ராகத்தில் ரசிகர்களின் மனதில் நின்றது நிறைவே. அனந்தலக்ஷ்மி கச்சேரிகளில் பாடியுள்ளதாய் கருதப்படும் காம்போதி ஆலாபனைகள் ஒலிப்பதிவுகளாய் கிடைப்பதில்லை. நானறிந்து காம்போதி ராகத்திலமைந்த பத்ராசலம் ராமதாஸரின் ‘ஏமய்ய ராமா’ கிருதி மட்டும் ‘கர்நாடிகா’ வெளியிட்டுள்ள சுகானுபவம் கச்சேரி ஒலிப்பதிவில் உள்ளது. முரணாய், அவரது குரு சாத்தூர் சுப்ரமணியனின் பிரமிக்கவைக்கும் காம்போதி ஆலாபனைகள் சில தெய்வாதீனமாய் பிழைத்து இணையத்தில் ‘மறையொலியாய்’ ரசிகர்களிடையே உலவுகின்றன. பல தலைமுறைகளாய் கலை மற்றும் அறிவுத்துறைகளில் நம்முடைய பொக்கிஷங்களை ஆவணப்படுத்துவதில் அசிரத்தை மற்றும் அக்கறையின்மையை இன்றளவும் பண்பாட்டுக்கூறாய்ப் பழகி வந்துள்ளோம்.

oOo

நண்பர் டி. டி. என். உடன் 2006இல் ‘காலைக் கச்சேரி’ கேட்ட ஆயாசத்தில் மியூஸிக் அகடெமி வெராண்டாவில் உலாத்திக்கொண்டிருந்தேன். என்னை நிறுத்தி ஓரமாக அமர்ந்திருந்த முதியவளிடம் “இவனுக்கு உங்கள் பாட்டு என்றால் ரொம்ப பிடிக்கும்” என்று நண்பர் அறிமுகப்படுத்தினார். ” எப்பவோ பாடியது அதெல்லாம்; இன்னுமா கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள், ரொம்ப சந்தோஷம்” என்று பட்டுபுடவை தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்டு கைகூப்பியவரிடம், ‘இதை நான் செய்ய வேண்டும்’ என்று கூறினேனே தவிர பதற்றத்தில் கை எழவில்லை. ஏனென்றால், என்னை அறிமுகப்படுத்திய நண்பர் என் பக்கமும் அதற்குள் திரும்பி “இவர்தான் அனந்தலக்ஷ்மி சடகோபன்” என்று கூறியிருந்தார்.

Anantalakshmi_Satagopan_Cutchery_Vijayaragavan_Sujatha_Kanniyakumari_Concert_Performance

என் கல்யாணத்தில் இவர் பாட்டுதான் அன்று, என்று சந்தோஷமாக கூறினார் நண்பர். காதில் புஷ்பராகம் மின்ன இன்னமும் குனிந்துகொண்டார் அனந்தலக்ஷ்மி, வெட்கமாகச் சிரித்துக்கொண்டே. வேறு எதுவும் பேசத்தோன்றாமல் சிறிது நேரம் யானை கட்டிய மரமாய் இருந்துவிட்டு ‘கிளம்பறோம்’ என்று முறுவலித்து விடை பெற்றோம். அதுதான் நான் அனந்தலக்ஷ்மி சடகோபனை முதலும் கடைசியுமாகச் சந்தித்தது.

சென்ற நூற்றாண்டில் அரியக்குடியார் முன்னோடியாய் மேடைக் கச்சேரியின் வடிவை வழங்கிய முப்பதுகளுக்கு அடுத்து வந்த சில பத்தாண்டுகளில் கர்நாடக இசையுலகில் பல ஜாம்பவான்கள் தோன்றிச் சிறந்தனர். இக்காலகட்டத்தில் இவர்களைக் கடந்து மேடையேறி பிரபலமடைவதென்பது திறனுள்ள இசைக்கலைஞர்களுக்கே மிகக் கடினமாகியது. ஒன்று போட்டிகளைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் முதல் தர வரிசையிலிருந்து வழுவினர், இல்லை முதல் வரிசைக்கே எழும்பமுடியாமல் உதாசீனப்பட்டனர். பல நல்ல இசைக்கலைஞர்கள் இக்காலகட்டத்தின் குடவிளக்குகளாயினர். வேறு காலகட்டத்தில் பிறந்திருந்தால் அவர்கள் திறமையை மட்டுமே முன்னிறுத்தி மேடைக்கச்சேரிகளில் கிடைக்கவேண்டிய புகழையும் அங்கீகாரத்தையும் அடைந்திருக்கக்கூடிய சுமார் இருபது கலைஞர்களை என்னால் பட்டியலிட முடியும். அனந்தலக்ஷ்மி சடகோபன் அப்பட்டியலில் இருப்பார்.

கர்நாடக இசைச் சாகரத்தில் திளைத்து ஏதேதோ நிர்பந்தங்களில் என்போன்ற பேண்ட் போட்ட கத்துகுட்டிகளின் கேள்விஞானத்தில் சிறைப்படாத குடவிளக்காய் சிறந்துகொண்டிருப்பவர்கள் அனந்தலக்ஷ்மி போல் இன்னும் எத்தனை பேர்களோ. அரை வேக்காட்டு வியாபாரக் கச்சேரிகளில் ‘ராகம் தானம் பல்லவி’ பாடினாலே “oh ful hev matr u kno” என்று எஸ்ஸெம்மெஸ்ஸி, தியாகராஜருக்கு பேஸ்பால் கேப் அணிவித்த டீ-ஷர்ட்டில், புல்லரித்து நுனிநாக்கு ஆங்கிலத்தில் மாருதிகாரில் வீடுவரை கச்சேரியைச் சிலாகித்துக்கொண்டுவரும் என் போன்றோரை குடத்தினுள் இருந்தபடியே முடிந்தால் மன்னிப்பார்களாக.

oOo

அடிக்குறிப்பு: கட்டுரையில் இடம்பெறும் சில கருத்துகளை உரையாடல்களில் பகிர்ந்தும், 1979இல் தன் திருமணத்தில் பாடிய அனந்தலக்ஷ்மி சடகோபனின் கச்சேரி புகைப்படத்தை உபயோகிப்பதற்கு அனுமதி அளித்தும் உதவிய பேராசிரியர் நரேந்திரனுக்கு (டி. டி. என்.) நன்றி.

சுட்டிகள்
அனந்தலக்ஷ்மி கச்சேரியின் பகுதி:

மேலும் வாசிக்க:
1. ஹிந்து நாளிதழில் அனந்தலக்ஷ்மியின் பேட்டி (15 டிசெம்பர், 2006)
2. ஹிந்து நாளிதழ் இரங்கல் செய்தி (17 மே, 2013)
3. ஹிந்து நாளிதழ், வி. ஸ்ரீராம் குறிப்பு (21, மே, 2013): Musical Steps in the 40s

0 Replies to “அஞ்சலி: கர்நாடக சங்கீதக் கலைஞர் அனந்தலக்ஷ்மி சடகோபன்”

  1. i was amazed at the in- depth analysis of my mother’s career and music in your columns.I was also happy that these ideas could be so effectively communicated in Tamil with felicity of language, diction and style. While I salute the writer and the web magazine for a remarkable Anjali ,I cannot but regret that my mother is not there to read it.
    One small correction.My mother’s father A.R.Narayanan and V.V.Sadagopan’s mother Lakshmi alias Muthamma hailed form the village of Ananthakrishnapuram and were related.My mother’s mother Alamelu was the daughter of Ramiah, a great connoisseur of Madurai, who was a patron for several musicians of his time.
    Thank you once again.
    Sujatha Vijayaraghavan

  2. My wife, Sakuntala was singing from Tiruchi station of AIR (under her maiden name of T H Sakuntala). She had received training from SS Paramasivam Pillai of Tiruchi AIR station. Her performance was commended by Kumbakonam Rajamanikkam Pillai, Naradar magazine etc. among others. She was given an opportunity to perform at the Tiruvayyaru aradhana ceremony also.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.