ஒரு மாபெரும் தேடல்

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்கிறார் வள்ளுவர் – அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்பது ஒரு ஆறுதல் மொழி போலத்தான் தோன்றுகிறது. “பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை” என்பது இருபதாம் நூற்றாண்டு தமிழ் திரைப்பட கவிஞர் வாலியின் மிகப் பிரபலமான வரி. இதுவும் யதார்த்த உண்மைக்குப் புறம்பான ஒரு ஆறுதல் மொழியாகத்தான் இருக்கிறது.

ஏனெனில், நாமறிந்த ஏறத்தாழ இரண்டாயிர ஆண்டுகால மனிதகுல வரலாற்றில் பத்துக்கு ஒன்பது பேர் மிகக் கடுமையான வறுமையில் வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை. எல்லா சமயங்களும் வறியவர்கள்பால் கருணை காட்டச் சொன்னாலும், வறியவர்களுக்கு தர்மம் செய்வதை மிகச் சிறந்த அறச்செயலாக வலியுறுத்தினாலும், வறியவர்கள் இல்லாத, வறுமை இல்லாத சமூகம் சாத்தியம்தானா என்று எங்கும் யாரும் சிந்தித்ததாகவே தெரியவில்லை. அது ஆன்மீக மதங்களின் வேலையில்லை என்று கூறலாம். அதற்கென்றே ஒரு தனி இயல் தேவைப்படுகிறது.

பொருள், அதன் உற்பத்தி, அதன் பங்கீடு, பங்கீட்டு முறை, உபரிக்கான உரிமையை நிர்ணயிக்கும் அடிப்படை வழிமுறைகள் போன்றவற்றுக்கெல்லாம் தனியான ஒரு இயலின் தேவை பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் அவசியமானதாக உணரப்பட்டது. இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்ட காலகட்ட பொருளாதார மாற்றங்களே இதற்கான காரணமாக இருந்திருக்கிறது. அதற்குமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு பொருள் உற்பத்தி, விநியோகம், பணம், அதன் மதிப்பு போன்றவை அப்போதுதான் விரிவாக விவாதிக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் மனிதனின் பொருளாதார நடவடிக்கைகள் மிக உன்னிப்பாகவும் விரிவாகவும் அவதானிக்கப்பட்டன. தொழிற்புரட்சியைத் தொடர்ந்து இங்கிலாந்தில் நிலவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அதனால் புதிதாய் உருவாகிய மிகத் தீவிரமான சமூக அவலங்களும் சிந்தனையாளர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பின. இவர்களின் தொடர்ந்த உரையாடலில் பொருளியல் சிறப்பு கவனத்தைக் கோரும், தனித்தன்மை கொண்ட, ஆழமான அறிவுத் துறை என்ற கருத்து வலுபெற்றது. இன்றைக்கு ஏறத்தாழ 170 ஆண்டுகளுக்கு முன் துவங்கி, முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார சிந்தனைகள் மற்ற அறிவுப்புல பிரிவுகளோடு போட்டியிட்டு, இன்று ஒரு முதன்மையானஅறிவுத் துறையாகவே விளங்கிவருகிறது.

“A Beautiful Mind” என்ற புத்தகத்தை எழுதிய ஸில்வியா நாஸரின் “The Grand pursuit – Search for an Economic Genius”, இப்பொருளாதாரச் சிந்தனையின் வரலாற்றை மிக சுவாரசியமாக விவரிக்கிறது. பொருளாதார சிந்தனையின் வரலாறு என்று\ சொல்வதுகூட அவ்வளவு சரியில்லை. முதலாம் உலகப்போருக்கு முன் துவங்கி, இரு உலகப்போர்களுக்கு இடையேயான காலகட்டத்தில் சர்வாதிகார அரசுமுறையாலும் த கிரேட் டிப்ரஷன் என்றழைக்கப்படும் பொருளாதார பின்னடைவாலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, இரண்டாம் உலகப்போரின் முடிவையொட்டி மலர்ந்த ஒரு பொற்காலத்தில் முகிழ்ந்த கருத்துருவின் (idea) கதையே இந்த நூல் என்று முகவுரையில் எழுதுகிறார் ஸில்வியா நாஸர். இந்தக் கருத்துரு ஒரு கேள்வி. அதன் தேடல் இதற்கான பதிலையே இலக்காகக் கொண்டுள்ளது – “எப்போதுமே பத்தில் ஒன்பது மனிதர்கள் வறுமையில் உழல விதிக்கப்பட்டவர்கள்தானா?” எல்லாரும் எல்லாமும் பெற வழியுண்டா என்ற கேள்வியும் மனிதகுலத்தின் அரசியல் சவால் என்பது பொருளாதார திறன் (economic efficiency), சமூகநீதி, மற்றும் தனிமனித சுதந்திரம் என்ற மூன்றையும் வெற்றிகரமாக இணைப்பது எவ்வாறு என்ற வினாவுமே இந்தக் கருத்துரு விடை தேடி வளர்ந்த இரு திசைகள் என்கிறார் ஸில்வியா நாஸர்.

nasar

முதலாம் உலகப்போருக்கு முன் என்று ஏகதேசமாகச் சொன்னாலும் உண்மையில் இந்தக் கேள்வி 19ம் நூற்றாண்டின் 30களிலும் 40களிலும் கேட்கப்படத் துவங்கியதை இந்நூல் காட்டுகிறது. இது குறித்த தகவல்கள் வியப்பளிப்பனவாக உள்ளன – பொருளியலின் துவக்கத்துக்கு எந்த ஒரு பொருளாதாரச் சிந்தனையாளரின் பங்களிப்பும் காரணமில்லை. எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் மற்றும் உலகின் முதல் புலனாய்வு இதழாளர் ஹென்ரி மேஹ்யூ ஆகிய இருவரின் விசாரங்களும் செயல்பாடுகளுமே பொருளியலின் அடிப்படை வினாக்கள் உருவாகக் காரணமாக இருந்தன என்று ஸில்வியா நாஸர் கவனப்படுத்துகிறார்.

தொழிற்புரட்சியின் தாயகமான இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனில் 1840களில் ஏழை பணக்காரர்களிடையே நிலவிய மிதமிஞ்சிய ஏற்றத்தாழ்வைத் தன் நாவல்களைக் கொண்டு முதன்முதலில் ஆவணப்படுத்தியவர் சார்லஸ் டிக்கன்ஸ். அவரது ஆலிவர் ட்விஸ்ட், எ கிறிஸ்துமஸ் கரோல் மற்றும் எ டேல் ஆஃப் டூ சிடிஸ் முதலிய நாவல்கள் குறிப்பிடத்தக்க வகையில் இந்த ஏற்றத்தாழ்வைப் பதிவு செய்தன. லண்டனின் ஏழைத் தொழிலாளிகள் எதிர்கொண்ட பசியும் பற்றாக்குறையும் நோயும் நிறைந்த அன்றாட வாழ்வை விவரித்தாலும், இந்நிலைக்கு மாற்று உண்டா என்ற கேள்வியை டிக்கன்ஸ் எழுப்பியதை ஸில்வியா நாஸர் நேர்த்தியாகப் பதிவு செய்கிறார். ஆலிவர் ட்விஸ்ட் அந்த அநாதை விடுதியின் காப்பாளரிடம் கேட்கும் மிக இயல்பான, பசித்த கேள்வி, “எனக்கு இன்னும் கொஞ்சம் கிடைக்குமா?” (“Can I have some more, please?”), இந்தக் கேள்வியையே மனிதகுலம் வரலாறெங்கும் இப்புவியில் இயற்கையினிடத்தில் தொடர்ந்து கேட்டு வருகிறது. டிக்கன்ஸ் வெறும் நாவலாசிரியர் மட்டுமல்ல. அவர் தாம் வாழ்ந்து வந்தகால இங்கிலாந்தின், லண்டனின் சமூக வாழ்க்கையை மிக உன்னிப்பாக கவனித்தவர். மேலும், பிற அறிவுத்துறைகளில், குறிப்பாக அப்போது புதிதாகக் கிளைத்துக் கொண்டிருந்த பொருளியல் சிந்தனைகளைக் கூர்ந்து உள்வாங்கிக் கொண்டு அவற்றுக்கு எதிர்வினையாற்றி வந்தவர். ரிக்கார்டோவின் “பற்றாக்குறை அளவு ஊதியக் கோட்பாடும் (Subsistence Wage Theory) மால்தூஸின் மக்கள்தொகை கோட்பாடும் டிக்கன்ஸை பெரிதும் தொந்தரவுக்குள்ளாக்கியதாகத் தோன்றுகிறது என்றும், இதற்கு பதில் கூறும் வண்ணமே எ கிறிஸ்துமஸ் கரோல் நாவல் அமைந்துள்ளது என்றும் எழுதுகிறார் ஸில்வியா நாஸர்.

ஸில்வியா நாஸர் சித்தரிக்கும் விக்டோரியா காலத்து இங்கிலாந்து சமூகம் ஏறத்தாழ இன்றைய இந்திய சமுதாயச் சூழலை நினைவுபடுத்துகிறது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான மிகக் கடுமையான ஏற்றத்தாழ்வுகள், திருப்பூரை நினைவூட்டும் வியர்வைக் கிடங்குகள் (Sweatshops) என்று நிறைய ஒற்றுமைகள் இருப்பினும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. விக்டோரிய இங்கிலாந்தில் ஓட்டுரிமை சொத்துள்ள பிரிவினருக்கு மட்டுமே இருந்தது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை வேண்டும் என்ற போராட்டத்தையும் அதன் வெற்றியையும், இந்தப் பிரச்சினை அன்றைய இங்கிலாந்தின் சிந்தனையாளர்களை எதிரெதிர் தரப்புகளாகப் பிரித்ததையும் இந்த நூல் விளக்கமாக விவரிக்கிறது.

தீவிரமான போராட்டத்தைத் தொடர்ந்து ஆலைத் தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டபின்னும், அவர்களைவிட பல மடங்கு அதிக எண்ணிக்கையிலுள்ள உதிரி தொழிலாளர்களுக்கு அவ்வுரிமை மறுக்கப்பட்டே இருக்கிறது. இந்த உதிரி தொழிலாளர்களில் ஒரு முக்கியமான பிரிவினரான, தையல் வேலை செய்யும் பெண்கள் (needlewomen) துணி/ ஆடை உற்பத்திசாலைகளின் கடும் உற்பத்தி முறைகளில் (ஸ்வெட்ஷாப்) சிக்கியதோடு,  மிகக் குறைந்த ஊதியத்துக்கும் உழைத்தனர். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த இந்தப் பெண்களின் வாழ்க்கையைதான் ஹென்ரி மேஹ்யூ (Henry Mayhew)  பஞ்ச் பத்திரிகையில் தான் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளில் விவரித்தார். இவரது கட்டுரைகள் இங்கிலாந்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பின. தற்போதைய தமிழ்நாட்டின் ‘சுமங்கலித் திட்டம்’தான் நினைவுக்கு வருகிறது.

அதே சமயத்தில், அதே லண்டனில் இன்னொரு புறம் செயல்பட்டுக் கொண்டிருந்த கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரடெரிக் எங்கல்ஸ் ஆகியோரின் செயல்பாடுகளைக் கணிசமாகப் பதிவு செய்யும் ஸில்வியா நாஸர், மார்க்ஸின் “கம்யூனிஸ்ட் மானிஃபெஸ்டோ” (1847), மற்றும் எங்கல்ஸின் “கன்டிஷன் ஆஃப் தி இங்கிலீஷ் வர்க்கிங் க்ளாஸ்” (1844), ஆகிய நூல்கள் வெளிவந்த பின்னணியையும் விவரிக்கத் தவறுவதில்லை. மரபார்ந்த இடதுசாரிகளுக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கும் வகையில், மார்க்ஸை முக்கியமான ஒரு பொருளாதார வல்லுனராகவே ஸில்வியா நாஸர் கருதுவதில்லை. மார்க்ஸும் எங்கல்ஸும் வறுமை நிலை தொழிற்புரட்சிக்குப் பின் ஏற்பட்ட ஒன்று, அதிலும் குறிப்பாக பணக்கார வர்க்கத்தினரால் உருவாக்கப்பட்ட புதிய ஒரு நிலைமை என்று வாதிட்டதை வலுவாக மறுக்கிறார் ஸில்வியா நாஸர். இவர்கள் இருவரும் முன்வைக்கும் முடிவுகளுக்கு மாறாக, நம்மால் அறிய முடிந்த வரலாறெங்கும் மனிதகுலத்தில் பத்துக்கு ஒன்பது பேர் மிகவும் வறிய சூழலில்தான் வாழ்ந்தனர் என்றும், தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று இருந்ததேயில்லை என்றும் வாதிடுகிறார் ஸில்வியா. இதற்குச் சான்றாக ஜான் ஸ்டூவர்ட் மில், ஆதாம் ஸ்மித் முதலானவர்களின் அவதானிப்புகளை அவர் முன்வைக்கிறார். மார்க்ஸ் இங்கிலாந்திலேயே வாழ்ந்து வந்தாலும், தன் காலகட்டத்தில், தன் கண்முன்னரே ஏற்பட்ட மாற்றங்களை,- உதாரணமாக, தொழிலாளர்களின் ஊதியம் கணிசமாக உயர்ந்து வந்ததை, – தொழிலாளர்கள் வாழும் சூழலிலும், அவர்களது வாழ்க்கைத் தரம், ஆயுட்காலம் போன்றவற்றில் ஏற்படத் துவங்கியிருந்த உயர்வையும், அவர் கவனிக்கவேயில்லை என்றும், மார்க்ஸ் ஆங்கில மொழியைக் கற்க முயற்சித்ததே இல்லை என்றும், தன் வாழ்நாளில் அவர் ஒரு தொழிற்சாலையைகூட உள்ளே சென்று பார்த்ததில்லை என்றும் விவரித்து, அடுத்து வந்த தசாப்தங்களில் ஏற்பட்ட பொதுவான வாழ்க்கைத்தர ஏற்றம் மார்க்ஸின் கணிப்பைத் தவறென்று நிரூபித்தது என வாதிடுகிறார் அவர்.

மார்க்ஸுக்கு மாற்றாக அவர் இந்த நூலில் நவீன பொருளியலின் தந்தையாக மதிக்கப்படும், திறந்த பொருளாதாரக் கொள்கைகளை ஆதரித்த ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் அவர் வழி வந்தவர்களின் வாழ்வையும் சிந்தனைகளையும், அச்சிந்தனைகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்படுத்திய தாக்கத்தையும் முன்வைக்கிறார். ஸில்வியாவின் பொருளியச் சிந்தனையாளர்களின் வரிசை இப்படி அமைகிறது : இங்கிலாந்தின் ஆல்ஃபிரட் மார்ஷல், பியட்ரிஸ் வெப் மற்றும் சிட்னி வெப், ஜே. எம். கெய்ன்ஸ், ஆஸ்திரியர்களான ஜோசப் ஷும்பீட்டர் மற்றும் ஃபிரடரிக் வான் ஹேயக், அமெரிக்கரான இர்விங் ஃபிஷர், ஜோன் ராபின்சன் மற்றும் அவரது மாணவராக அறியப்படும் இந்திய பொருளியல் மேதை அமர்த்யா சென்.

nasar2-square

ஸில்வியா நாசர்

இவர்களின் வாழ்வையும் தத்துவங்களையும் தடுமாற்றங்களையும் விவரிக்கும் அதே சமயம் அவர்கள் சார்ந்த நாடுகளின் சமூக பொருளாதார வரலாற்றையும் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டு வரை) ஒரு குறுக்குவெட்டு தோற்றமாய் அளிக்கிறது இந்நூல். மேற்சொன்ன சிந்தனையாளர்களில் ஆல்ஃபிரட் மார்ஷல் மிகவும் மூத்தவர். ஆனால் அவருக்கு அடுத்த தலைமுறையான ஜெ. எம்.கெய்ன்ஸ், பியட்ரிஸ் வெப் மற்றும் அவரது கணவரான சிட்னி வெப் முதலானோரும் இங்கிலாந்தில் பல சமயங்களில் ஒருமித்தும் சில சமயங்களில் முரண்பட்டும் தங்கள் போருளியல் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டதை விவரிக்கும் இந்நூல் அவர்தம் தனிப்பட்ட வாழ்க்கைச் சித்திரத்தையும் கணிசமான அளவுக்குத் தருகிறது. இந்த ஆங்கிலேய சிந்தனையாளர்களில் பியட்ரிஸ் வெப்பும் அவரது கணவர் சிட்னி வெப்புமே இடதுசாரிகள் என்று சொல்லப்படக் கூடியவர்கள். மக்கள் நல அரசு (Welfare State) என்ற கருத்தாக்கம் முதன்முதலாக பியட்ரிஸ் வெப்பிடமிருந்தே தோன்றியது என்று குறிப்பிடுகிறார் ஸில்வியா நாஸர். இச்சிந்தனையாளர் வட்டத்தில் சர்ச்சில், ஜோசப் சாம்பர்லைன், பெர்னார்ட் ஷா முதலான பிரபல ஆளுமைகள் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஜோசப் சாம்பர்லைன் மற்றும் இளம் சர்ச்சிலின் ஆளுமைச் சித்திரங்கள் இந்நூலில் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், இவர்களுடன் தொடர்ந்து சிந்தனை பரிமாற்றத்தில் பங்கேற்ற அமெரிக்காவின் பல்துறை விற்பன்னரான இர்விங் ஃபிஷரின் வாழ்வும் மிக நேர்த்தியாக விவரிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான விடையின் திறவுகோல் பணப்புழக்கத்தின் அளவே என்று தீவிரமாக நிறுவும் இர்விங் ஃபிஷர் கீழைத் தேய ஆன்மிக மரபில் நாட்டம் கொண்டவராகவும், அதன் அடிப்படையில் சுயமாக மருத்துவ சோதனைகளில் ஈடுபட்டு ஆரோக்கியம் பேணுதலில் கவனம் செலுத்தினார் என்பதும் நமக்கு சுவையான விஷயங்களாகும். ஆஸ்திரியாவில் பிறந்து உலகப் போரில் பங்கேற்ற ஷும்பீட்டரின் வண்ணமயமான காதலும் மணவாழ்வும் அவர் ஆஸ்திரிய அரசருடனும் இங்கிலாந்தின் முன்னணி சிந்தனையாளர்களுடனும் கொண்டிருந்த இணக்கமும் முரணும் நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்களுக்கு அடுத்த காலகட்ட இங்கிலாந்தின் பொருளாதார சிந்தனையாளராகவும் தீவிர இடதுசாரியாகவும் ஜோன் ராபின்ஸனைக் காட்டும் இந்நூல், அவரது மாணவர் என்றறியப்படும் இந்தியர், அமர்த்யா சென் அவரது கருத்துகளை உரத்த குரலில் மறுக்காமலேயே, நலவாழ்வுப் பொருளியம் (Welfare Economics) என்ற புதிய ஒரு கோட்பாட்டை நிறுவியதையும் விவரிக்கிறார் ஸில்வியா நாஸர். மேலும், அமர்த்யா சென், ஒரு தேசத்தின் மக்கள் வாழ்தரத்தை மதிப்பிடும் அளவையாக, ஐ.நா. சபையின் மனித வளர்ச்சிக் குறியீடு (Human Development Index) உருவாகக் காரணமாக இருந்தார் என்பதும் இந்நூலில் கவனப்படுத்தப்படுகிறது. அமர்த்யா சென் தன் கல்லூரிப் பருவத்தில் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததையும் அதனை மிகுந்த தீரத்துடன் போராடி வெற்றி கொண்டதையும் எழுச்சி தரும் வகையில் விவரிக்கிறார் ஸில்வியா.

மேற்சொன்ன பொருளியல் சிந்தனையாளர்கள் அனைவரின் வாழ்க்கைச் சித்திரமும் சிந்தனைகளும் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தாலும் இப்புத்தகம் ஜான் மெய்னார்ட் கெய்ன்ஸையே முதன்மைப்படுத்துகிறது. இரு உலகப் போர்களுக்கு இடையிலான காலகட்டத்தில் மேற்குலகம் சந்தித்த மிகப்பெரிய வீழ்ச்சிக்கும் தேக்கத்துக்கும் (The Great Depression) கெய்ன்ஸின் பொருளாதார திட்டங்களே மாற்றாகவும் மருந்தாகவும் விளங்கியதை இந்நூலில் நாம் காண முடிகிறது. இந்த காலகட்டத்தில்தான் அரசு செலவீடு (Public Spending) என்ற கருத்தாக்கம் கெய்ன்ஸால் முன்வைக்கப்பட்டு, ஏறத்தாழ அனைத்து மேற்குலக ஜனநாயக நாடுகளும் மக்கள் நல அரசுகளாக மாறும் திசைக்குத் திரும்ப வழி செய்து கொடுத்தது என்பதையும் ஸில்வியா நாஸர் மிகத்தெளிவாக விவரிக்கிறார்.

இந்த நூல் பிரமிக்கத்தக்க புள்ளிவிவரங்கள் மற்றும் மேற்கோள்களின் தொகுப்பாக இருக்கிறது. பொதுவாகவே நம் அனைவருக்கும் கடந்துபோன பொற்காலத்தைக் குறித்த ஒரு மயக்கமும் நமக்குப் பின்னால் வருவது ஒரு பேரழிவே என்ற எண்ணமும் உண்டு. இந்த மனநிலையை மிகக் கறாரான புள்ளிவிவரங்களைக் கொண்டு நிராகரிக்கிறது இந்நூல். உதாரணமாக, 1776ல் ஆதாம் ஸ்மித், ஒரு சராசரி ஆங்கிலேயன் பண்ணைத் தொழிலாளி என்றும் அவனது வாழ்க்கைத் தரம் ஒரு ரோமானிய அடிமையின் வாழ்க்கைத் தரத்தைவிட உயர்ந்ததல்ல என்றும் குறிப்பிடுவது இந்நூலில் நினைவு கூரப்படுகிறது. ஆனால் அவர் இப்படி சொன்னதற்கு அடுத்த ஒரு நூறாண்டுகளுக்குள் இந்நிலை மாறி சராசரி தொழிலாளி ஒருவனின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துவிட்டதையும் புள்ளிவிவரங்களைக் கொண்டு இந்நூல் நிறுவுகிறது. மேற்குலகில் வாழும் ஒருவரின் ஆயுட்காலம் 1820களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது 1950களில் இரண்டரை மடங்கு அதிகரித்திருக்கிறது. 1850ல் இருந்து 1950 வரையான ஆண்டுகளில் உலக மக்கள் தொகை ஆறு மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த ஒரு நூறாண்டுகளில் கடும் வறுமையில் உழலும் மக்களின் எண்ணிக்கை ஆறில் ஐந்து பகுதியாகக் குறைந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான உலக வரலாறு என்பது மேலதிக அளவிலான மக்கள் கூட்டம் கடும் வறுமையின் கோரப்பிடியிலிருந்து தப்பி மேலெழுவதே என்ற உண்மையைத் தக்க புள்ளிவிவரங்களோடு விளக்குகிறது இந்நூல்.

இந்நூலில் மிகச் சிறந்த மேற்கோள்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில –

“உலகில் நீராவி இயந்திரத்தால் ஏற்பட்ட தாக்கத்தைவிட பொருளியல் சிந்தனைகளே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” – ஜே. எம். கெய்ன்ஸ்

“இயற்கை வளத்தையும் மக்கள் தொகையையும் தொழில்நுட்ப தலைமையையும்விட பொருளியல் புரிதலே மிகவும் முக்கியமானதாக இருக்கிறது” – ஆல்ஃபிரட் மார்ஷல்.

“முதலியத்துக்கு முந்தைய விவசாய பொருளாதாரச் சமூகத்தில் போல்ஷெவிசம் வெற்றி காண நேர்ந்தது ஒரு குருட்டு அதிர்ஷ்டமன்றி வேறில்லை” – ஷும்பீட்டர்.

“நம்மில் இருக்கும் ஆன்மிகவாதியின் கவனத்தை ஈர்க்கும் மதம்தான் கம்யூனிசம்” – ஜே. எம். கெய்ன்ஸ்.

“செழிப்புநிலை அனுபவங்கள் தேசங்களுக்கு குறுகிய காலமே சாத்தியப்பட்டிருக்கின்றன. அதன் நீண்ட வரலாறு நெடிதும் மானுடம் மிகவும் வறிய நிலையில்தான் இருந்திருக்கிறது” – ஜே. கே. கால்பிரெய்த்.

வெகு உறுதியாகவே நாம் மையத்தின் வலப்புறத்தில் இந்த நூல் நிற்கிறது என்று சொல்ல முடியும். மனிதனின் பொருளியல் முன்னேற்றம் என்பது மிகப் பெரிய அளவில் திறந்த தாராளவாத பொருளாதார கொள்கைகளால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது என்ற முடிவுதான் இந்த நூல் விவரிக்கும் விஷயங்களின் உணர்த்தலாக இருக்கிறது. தீவிர இடதுசாரி சர்வாதிகார அரசுகளின் திட்டமிட்ட பொருளாதார நடவடிக்கைகள் அதிக அளவில் மனிதகுலத்துக்கு தீமையையே விளைவித்தன என்ற முடிவும் இந்த நூலின் வாதமாக இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, சோவியத் யூனியனின் கூட்டுப்பண்ணை திட்டம் நடைமுறையில் 60 லட்சம் உயிர்களை உக்ரெயீனில் கொள்ளை கொண்டதையும், சீனாவில் 1958-1962 வரையான நான்காண்டுகளின் “மாபெரும் முன்பாய்ச்சல்” (Great Leap Forward) என்ற திட்டம் ஏறத்தாழ ஒன்றரை கோடியிலிருந்து மூன்று கோடி உயிர்கள் வரை பலி கொண்டதையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது (இந்தியாவில் வங்காள பஞ்சத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சம்). சீனாவின் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி டெங் சியாவ் பிங்கின் தாராளவாத பொருளாதார கொள்கைகளாலும் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் 1990களில் மன்மோகன் சிங் நடைமுறைப்படுத்திய புதிய பொருளாதார கொள்கைகளுக்குப் பிறகே சாத்தியப்பட்டதையும் இந்நூல் குறிப்பிடத் தவறுவதில்லை.வலதுசாரி பொருளாதார கொள்கைகளில் குறைபாடுகள் ஒப்பு நோக்கக் குறைவாக இருந்தாலும், அவற்றையும் ஸில்வியா நாஸர் சுட்டிக்காட்டுகிறார். உதாரணமாக அமெரிக்காவில் 1920 வருடத்துப் பெரும் வீழ்ச்சி (The Great Depression of 1920) என்றழைக்கப்படும் காலகட்டத்தில் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை பொருளாதார சிந்தனையாளர்களுமே அதைப் புரிந்துகொள்ளவும், அதிலிருந்து மீளவும் வழி காண இயலாதவர்களாகத் திணறியதையும் இந்நூல் பதிவு செய்கிறது. இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களை மீண்டும் அமல்படுத்தும் இந்த காலகட்டத்தில் வெளிவந்திருக்கும் இந்த நூல் பொருளியல் ஆர்வலர்களால் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றே என்று தோன்றுகிறது.

இந்த நூலின் மிக முக்கியமான குறைபாடாக நான் காண்பது இது – இதைக் குறிப்பிடாமல் இந்த புத்தக மதிப்பீடு முழுமையானதாக இருக்காது :

ஐரோப்பாவின், குறிப்பாக இங்கிலாந்தின் பிரமிக்கத்தக்க பொருளாதார வளர்ச்சிக்கு காலனியமும் பிரிட்டிஷ் பேரரசின் ஏகாதிபத்தியமும் அளித்த பங்களிப்பைக் குறித்து ஸில்வியா நாஸர் எதுவும் பேசுவதே இல்லை. இங்கிலாந்தின் தொழிற்புரட்சி இந்தியாவில் சுரண்டப்பட்ட செல்வத்தின் கொடை என்று நேரு தன் டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் குறிப்பிடுவார். இயந்திர புரட்சி முன்னரே ஏற்பட்டிருந்தாலும் தொழிற்புரட்சிக்குத் தேவைப்பட்ட அபரிதமான மூலதனத்தை பிரிட்டன் தன் காலனிய தேசங்களிலிருந்து சுரண்டியது என்பதும் பிரிட்டிஷ் தொழிலாளர்களின் வாழ்க்கை
தரம் உயர்வதற்கு இந்தியத் தொழிலாளர்களும், நெசவாளர்களும் ஓட்டாண்டிகளாக வேண்டியிருந்தது என்பதும் அவர்களின் நிலை இன்னமும் சீரடையவில்லை என்பதும் ஸில்வியா நாஸருக்கு கவனப்படுத்ததத் தக்க அளவுகூட முக்கியமாக இல்லை என்றே தெரிகிறது. அதேபோல், கடந்த நூறு நூற்றைம்பது ஆண்டுகாலத்தின் பிரமிக்கத்தக்க வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடும், முக்கியமாக, வளர்ந்த நாடுகளின் தேவைகளை நிறைவு செய்ய மூன்றாம் உலக நாடுகள் தம் வளங்களை இழந்து தம் மண்ணை மாசுபடுத்திக் கொள்வதையும் ஸில்வியா கருத்தில் கொள்ளவில்லை – இந்தப் புத்தகத்தையும் தாண்டி விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இவை என்று அவர் கருதியிருக்கலாம். ஆனால், பொருளியல் திறன், சமூக நீதி, தனிமனித சுதந்திரம் என்ற மூன்று விழுமியங்களை நோக்கியே பொருளியலின் மகோன்னதத் தேடல் தொடர்ந்திருக்கிறது என்று சொல்லும்போது, ஸில்வியா நாஸர் கண்டுகொள்ளாமல் விட்ட மனிதர்கள், யாருக்காக இவை என்ற கேள்வியை எழுப்புபவர்களாக இருக்கின்றனர்,

இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது டெங் சியாவ் பிங்கின் புகழ்பெற்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது – பூனை கருப்பா வெளுப்பா என்பதைவிட அது எலியைப் பிடிக்கிறதா என்பதுதான் கேள்வி. பொருளியல் ஒரு துல்லியமான அறிவியல் துறையல்ல என்று கூறுவதுண்டு. பொருளாதார வளர்ச்சியில் அரசின் இடையீடு எவ்வளவுக்கு இருக்க வேண்டும் என்பது விடையற்ற விவாதம். இடதுசாரி பொருளாதார கொள்கைகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், முதலிய பொருளாதார கொள்கைகளின் மீதான அதிருப்தி பெருகிவரும் இக்காலகட்டத்தில் பொருளியல் திறன் (economic efficiency), சமூக நீதி, தனிமனித சுதந்திரம் ஆகிய மூன்றையும் வெற்றிகரமாக ஒருங்கிணைப்பது எப்படி என்றும் இது சாத்தியமா என்றும் கேள்வி எழுப்பி விவாதிக்கும் ஒரு முக்கியமான தரப்பாக இந்நூல் விளங்குகிறது.

பொருளியல் துறையில் நோபல் பரிசு பெற்ற ராபர்ட் சாலோ கூறியதாக ஒரு மேற்கோளை ஸில்வியா நாஸர் முடிவுரையில் குறிப்பிடுகிறார் : “புதிய கேள்விகள் தினமும் எழுந்தவாறே உள்ளன, பழைய கேள்விகளுக்கான விடைகளைக்கூட மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமும் உள்ளது”. மனித வாழ்வின் மிக அடிப்படையான பொருளாதார பிரச்சினைகளுக்கு விடை தேடும் பொருளியலின் மகோன்னத தேடல் ஒரு முடிவற்ற பயணம் – இறுகிப்போன கோட்பாடுகள் தேவையற்ற சுமைகளாகவே இருக்க முடியும். ஸில்வியா நாஸரின் இந்தப் புத்தகமும் சில ஆண்டுகளுக்கு முன் பதிப்பிக்கப்பட்ட மாட் ரிட்லியின் ‘எ ரேஷனல் ஆப்டிமிஸ்ட்” என்ற நூலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தொடர்ந்து விவாதிக்கப்படுவது இன்றைய சூழலில் மிக அவசியமாக இருக்கிறது.

One Reply to “ஒரு மாபெரும் தேடல்”

Comments are closed.