சமீபத்தில் நான் வழக்கமாகச் செல்லும் கலிஃபோர்னியா நெடுஞ்சாலை எண் 880-இல் ஒரு வித்தியாசமான கார் ஒன்றைக் காண்கிறேன். அந்தக் கார் நாம் சாதரணமாகச் சாலையில் காணும் டொயோடாவாகவோ, லெக்சஸ் காராகவோதான் இருக்கிறது ஆனால் அதன் தலையில் ஒரு சிறிய புகைக் கூண்டு போன்ற ஒன்று சுழன்று கொண்டிருக்கிறது. உள்ளே ஓட்டுனர் இருக்கையில் ஒருவரும், அருகில் ஒருவரும் சாவகாசமாக அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னைப் போல ஸ்டீயரிங் பிடிக்காமல், ப்ரேக்கையும், க்ளட்சையும் அழுத்தாமல் ஹாயாக அமர்ந்து வருகிறார்கள். அந்த விட்டலாச்சார்யாக் காரோ அந்த நெரிசலான சாலையில் லாவகமாகப் புகுந்தும், நுழைந்தும், நெளிந்தும் என்னை முந்திச் சென்று விடுகிறது. எந்த விதமான தவறையும் செய்வதில்லை எந்தக் காரையும் இடித்து விபத்தையும் ஏற்படுத்துவதில்லை.
விசாரித்த பொழுது அது கூகுளின் ரோபோ கார் என்றார்கள். கூகுளில் மெயில் உண்டு, மேப் உண்டு, எர்த் உண்டு பஸ் கூட உண்டு ஆனால் இதுவோ சாலையில் ஓடும் நிஜக் கார். ஜேம்ஸ்பாண்டிடம் கூட இந்த வகையான தானியங்கிக் காரைக் கண்டதில்லை நாம். ஆம் அது கூகுள் தற்பொழுது சோதனை செய்து வரும் தானியங்கிக் கார். ஒரு கார் தன்னைத் தானே ஓட்டிக் கொண்டு போக வேண்டிய இடங்களுக்குச் செல்வது, இன்னும் ஒரு பத்தாண்டுகளில் நம் சாலைகளில் சாத்தியமாகப் போகிறது.
எந்தவொரு இடத்துக்கும் நாமாகவே தேடி, வழி கண்டு பிடித்துப் போகும் சுவாரசியமான பயணங்கள் எல்லாம் ஏற்கனவே பழங்கதையாகி விட்டன.
சிறு வயதில் பல முறை நான் தொலைந்து போயிருக்கிறேன். ஒரு முறை தெருவில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சம் உருவாக்கும் நீண்ட நிழல்களுடன் பெரிய கண்ணாடிக் குடுவைக்குள் வைத்து, மணியடித்துக் கொண்டே சோன் பப்டி விற்கும் தள்ளு வண்டிக்காரரைத் தொடர்ந்து சென்றதில் வழி தவறி, பல தெருக்கள் தாண்டி சென்று விட்டேன். பேக்ப்பைப்பர் வாசிப்பவன் பின்னால் சென்ற சிறுவர்கள் போல நானும் சோன்பப்டி வண்டிக்காரர் பின்னால் போய் விட்டு வீடு திரும்ப முயன்றதில் வழி தப்பி இருள் சூழ்ந்த ஊரின் எல்லைக்கே சென்று காணாமல் போயிருந்தேன். காற்று ஊளையிடும் மரங்கள் நிறைந்த ஏதோவொரு தன்னந்தனித் தோப்புக்குள் வழி தவறி சென்று சேர்ந்திருந்தேன். வெகு நேர அழுகைக்குப் பிறகு அந்த வழி வந்த வழிப்போக்கர் ஒருவர் மெயின் ரோடு வரை அழைத்துச் சென்று விட்டு விட்டுப் போனார்.
பின்னொரு முறை, அப்பாவுடன் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் வழியில் செங்கோட்டை ஸ்டேஷனில் அவரது கைப் பிடியைத் தவற விட்டு விட்டு, சற்றே பராக்குப் பார்த்து விட்டுத் திரும்பிய பொழுது நான் கை விடப் பட்டிருந்தேன், தாடியும் மீசையும் காவி வேட்டியுமாக அடையாளம் கண்டு பிரித்தறிய முடியாதபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த ஸ்டேஷனில் நிறைந்திருந்தனர். எல்லோரும் தாடியும் மீசையும் இருமுடிகளுமாக ஒரே மாதிரி இருந்தார்கள். அழுது கொண்டே பயணித்த என்னை அச்சன்கோவில் ஸ்டேஷன் மாஸ்டரிடம் ஐயப்ப சாமிகள் ஒப்படைக்க என் அப்பா சாமி வந்து மீட்டுச் சென்றது தனிக் கதை. ஆனால் இனி சிறு குழந்தைகளுக்கும் சொற்ப நேரம் கூட காணாமல் போய் விடும் தருணங்கள் அமையப் போவதில்லை. இனி எவருமே எங்குமே அவ்வளவு எளிதாகக் காணாமல் போய் விட முடியாது. அந்த சுவாரசியங்கள் எல்லாம் இனிமேல் சிறுவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. நோ மோர் பேபிஸ் டே அவுட்ஸ்.
இந்தியாவில் இருந்த பொழுது டிசம்பர் மாதம் கிறிஸ்த்மஸ் சமயத்தில் ஒரு வாரம் எங்காவது கிளம்பி ஊர் சுற்றி வருவது உண்டு. நண்பர்களுடன் சுற்றிய அந்த அற்புதமான தருணங்களில் தமிழ் நாடு தவிர பிற மாநிலங்களில் செல்லும் பொழுது சரியான வழி கண்டு பிடிப்பதற்காக நண்பர்கள் நம்பகரமான வரைபடம் ஒன்றைப் பயன் படுத்துவது உண்டு. அந்த வரைபடம் மருத்துவர்கள் சங்கத்திற்காக பிரத்யோகமாக உருவாக்கப் பட்ட ஒன்று. அந்தப் பகுதி மக்களுக்குக் கூடத் தெரிந்திராத பாதைகளை பயன் படுத்துவதற்கு அந்த வழித்தடப் படம் பெரும் அளவில் உதவியதுண்டு.
இந்தியாவில் அனேகமாக எந்தவிதமான வழித்தடத் துணைவனும் இல்லாமலேயே சமாளித்து விடலாம். காட்டுப் பகுதிகள் தவிர எந்தவொரு நெடுஞ்சாலையிலும் மனித நடமாட்டம் இருந்து கொண்டேயிருக்கும் அவர்களால் அடுத்த சில கிலோ மீட்டர்கள் தூரத்திற்காவது சரியாகவோ, தப்பாகவோ ஒரு பாதையை நமக்குக் காட்டி விட முடியும். நெடுந்தொலைவுப் பயணங்களின் பொழுது மனிதர்களிடம் வழி கேட்பதும், அவர்களும் உற்சாகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு நமக்கு உதவ முனையும் ஆர்வமும், அவர்கள் முகத்தில் காணப்படும் திடீர் மகிழ்ச்சிகளும், நட்பும், உற்சாகமும் இந்தியப் பயணங்களின் அற்புதமான தருணங்களாகவே இருந்ததுண்டு . சென்னையில் மட்டும் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்- லெஃப்ட் பக்கம் போகவேண்டும் என்று சொன்னால் வலது பக்கம் போக வேண்டும் என்று அவர்கள் அகராதியில் அர்த்தமாகும்.
பின்னர் அமெரிக்கா வந்த பொழுது நீண்ட தூரப் பயணங்களுக்கென சில சடங்குகள் இருந்தன. கூகுள் மேப், மேப் க்வெஸ்ட் போன்ற தளங்கள் வந்திராத காலம் அது. பயணம் துவங்கும் முன்னால் அருகே உள்ள ஏஏஏ (AAA) எனப்படும் அமெரிக்க ஆட்டோமொபைல் அசோஸியேஷனில் ஒரு உறுப்பினராகி ஒரு நாற்பது டாலர்கள் தட்சணை வைத்தால் அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளுக்குமான தனித்தனி மேப்புகளையும் நாம் செல்ல வேண்டிய பிரதேசங்கள் பற்றிய டூர் புக்குகளையும் அள்ளித் தருவார்கள். அதில் தங்க வேண்டிய ஹோட்டல்கள், சாப்பிடக் கூடிய இடங்களுடன் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் ஏராளமான விளம்பரங்களுடன் விவரிக்கப் பட்டிருக்கும். அந்த வரை படங்களை எடுத்துக் கொண்டு உன்னிப்பாகப் படித்துப் பாதையை உள்வாங்கிக் கொண்ட பின்னரே பயணம் துவங்கும். எந்த நெடுஞ்சாலை எந்தப் பிரிவு எந்த உபசாலை என்ற அத்தனை விபரங்களையும் தனியாகக் குறித்துக் கொள்ளவும் வேண்டும்.
இவை தவிர வண்டி ஓட்டும் பொழுது அருகே மனைவியோ நண்பர்களோ அமர்ந்து, மேப்பில் இருக்கும் பாதை வழியாகத்தான் செல்கிறோமா என்பதை உறுதி செய்து கொண்டே வருவார்கள். நடுக்காட்டில் காரின் விளக்கு வெளிச்சத்தில் மேப்புகளைப் பிரித்து மேய்வதும் நடக்கும். இந்தியாவைப் போல செல்லும் இடங்களில் எல்லாம் மனிதர்களைக் காண முடியாத பிரதேசம் அமெரிக்கா. அப்படியே மனிதர்கள் தென்பட்டாலும் நாம் இறங்கிப் போய் எளிதாக வழி கேட்டு விடவும் முடியாது. நெருக்கமான நகரப் பகுதிகள் தவிர பிற பகுதிகளில் நடமாடும் மனிதர்களைக் காண்பதரிது. வழி கேட்க ஒரே வழி அடுத்து வரும் பெட்ரோல் பங்கில் இறங்கி அவர்களிடம் வழி கேட்பதோ, அல்லது அவர்கள் தரும் மேப்புகளை அலசுவது மட்டுமே ஒரே வழியாக இருந்தது.
பின்னர் இணையம் வயசுக்கு வந்திருந்த பொழுது, கூடவே மேப் க்வெஸ்ட் என்றொரு தளம் வந்து வீட்டு அருகாமையில் உள்ள விலாசத்தில் இருந்து, மூவாயிரம் மைல்கள் தள்ளி உள்ள விலாசம் வரை எந்த விலாசத்துக்கும் துல்லியமான வழித்தடங்களை தந்துதவியது. அதை அச்சடித்துக் கொண்டு பயணம் துவங்கும் வழக்கம் துவங்கியது. என்னதான் மேப்க்வெஸ்ட் இணைய தளம் துல்லியமாக கடைசிச் சந்து முனை வரை வழி போட்டுக் கொடுத்தாலும் கூட, அதை நம்பாமல், கூடவே ட்ரிப்பிள் ஏவில் வாங்கிய வரைபடத்தையும் விட்ட குறை தொட்ட குறையாகச் சுமந்து கொண்டு செல்வதும் தொடர்ந்தது.
2000களில் கூகுள் ஒரு புதிய இணையப் புரட்சியை உருவாக்கியது. கூகுள் மேப் அதுவரை பயன்படுத்தப் பட்ட அனைத்து மேப் தளங்களையும் முந்திச் சென்றது. கூகுள் மேப் வெறுமே நாம் கேட்கும் முகவரிக்கான வழித்தடத்தைத் தருவதோடு நின்று விடுவதில்லை. அந்த இடங்களின் நிகழ்கால படங்களையும், முப்பரிமாணப் படங்களையும், தெருவை நாம் நேரடியாகக் காணும் பார்வையையும், அருகேயுள்ள இடங்களையும், அவற்றின் படங்களையும் செயற்கைக் கோள் பார்வையாகவும், நேரடிக் காட்சியாகவும், வரைபடமாகவும், தெருக் காட்சியாகவும் அளிக்க வல்லதானது. கைக்கடக்கமான சமர்த்துத் தொலைபேசிகளும், வழி நடாத்தும் ஜிபிஎஸ் கருவிகளும் வரும் வரையில் கூகுள் புதிய வழித்துணைவனாக மாறியது.
பின்னர் ஜி பி எஸ் என்னும் சின்ன கைக்கடக்கமான வஸ்து ஒன்று வருகை தந்தவுடன், கூகுள் மேப்புகளை ப்ரிண்ட் அடித்துக் கொண்டு பயணிக்கும் வழக்கம் முற்றிலுமாக மாறியது. அப்படியெல்லாம் மேப்பும் கையுமாக ஒரு காலத்தில் நாங்கள் கார் ஓட்டிக் கொண்டிருந்தோம் என்று சொன்னால் என் பெண் சிரிப்பாய்ச் சிரிக்கிறாள். இப்போது, யாருக்கும் எவரும் வழி சொல்லும் வழக்கமோ எவரிடமும் வழி கேட்கும் வழக்கமும் அறவே அருகிப் போனது. ஒரு வித பழைய பழக்க தோஷத்தில் வீட்டு விலாசம் சொல்லி முடித்த பின்னர், வரும் வழியை எவருக்கும் சொல்ல முயன்றால் நம்மை நியாண்டர்தால் மனிதன் போலப் பார்க்க ஆரம்பித்தார்கள். அட்ரஸ் சொல்லி விட்டீர்கள் அல்லவா, இனி நாங்கள் வந்து சேர்ந்து விடுவோம், டோண்ட் வொர்ரி என்பார்கள். ஜிபிஎஸ் சொல்லும் பாதையில் கேள்வி கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு பயணிக்கிறார்கள்.
நினைவுத் திறனிலும் வழி கண்டுபிடிப்பதிலும் அசாத்திய நம்பிக்கையுள்ளவர்களைக் கூட இந்த ஜி பி எஸ் கருவிகள் சோம்பேறிகளாக்கி விட்டன. தனியாக வந்த கருவிகள் இப்பொழுது பெரும்பாலான கார்களில் இணைப்பாகவே வருகின்றன. சகல மொழிகளிலும் நமக்கு வழி சொல்கின்றன. அமைதியான மிருதுவான மென் பெண் குரலில் ஆரம்பித்து கடுமையான கெட்ட வார்த்தைகளில் வழி சொல்லும் சாதனங்களும் மென் பொருள்களும் வந்து விட்டன. அது சொல்லும் வழியை மதிக்காமல் சென்றால், நாயே, பேயே என்று ஆரம்பித்து நான்கு எழுத்துக் கெட்டவார்த்தைகள் வரையில் நம்மை திட்டி திசை நடத்தும் வழிகாட்டிகளும் வந்து விட்டன. தங்களை எவராவது மோசமாகத் திட்டி வழி நடத்துவதை ஆழ்மனதில் விரும்பும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பிரபலமானவர்கள் குரல்களிலும் அவர் பாணியில் திட்டி வழி நடத்தும் வழிகாட்டிகள் கூட வந்து விட்டன. நடிகர்களின் குரல்களில் இருந்து ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் யோடாக்களும், டார்த் வேடர்களும், கார்ட்டூன் படக் காரெக்டர்களும், பாடகர்களும், அழகிகளும் தத்தம் வித்தியாசமான குரல்களில் நம்மை வழி நடத்தக் காத்திருக்கின்றனர். ஒரே விதமான இயந்திர ஆண் பெண் குரலைக் கேட்டுச் சலித்துப் போக வேண்டிய அவசியமேயில்லை.
ஒவ்வொரு பாதைக்கும் நமக்குப் பிடித்தமான குரல்களை இறக்குமதி செய்து கொண்டு அவர்கள் குரல்கள் வழியாக நாம் வழிநடத்தப் படலாம். சென்ற முறை நண்பரது காரில் லாஸ் ஏஞ்சலஸ் சென்ற பொழுது ழகர லகர சுத்தத்துடன் கூடிய அருமையான தமிழ் குரல் ஒன்று எங்களை வழி நடாத்திச் சென்றது. ”அடுத்த ஒரு மைல் தொலைவுக்கு இதே வழித்தடத்தில் நேராகச் செல்லவும், வலது புறம் வெளிச் செல்லும் பாதையில் சென்று இலேசாக இடது புறம் வளைந்து செல்லவும்” என்று அருமைத் தமிழில் அவரது காரில் எங்களுக்கான பாதையின் வழி சொல்லப் பட்டது.
கார்களில் உள்ள ஜி பி எஸ்களைப் போலவே சகல விதமான வசதிகளுடன் நமது கைக்கடக்கமான ஸ்மார்ட் ஃபோன்களிலும் ஏராளமான வழி நடத்தும் பயன்பாட்டு மென்பொருள்கள் வந்து விட்டன. நாம் செல்லும் வழியின் போக்குவரத்து தடைப் பட்டிருந்தாலோ, சாலை வேலைகள் நடந்து தாமதமானாலோ, நமக்கு மாற்றுப் பாதைகளை இந்த நவீன வழிகாட்டிகள் தேர்ந்தெடுத்துச் சொல்லி விடுகின்றன. ”அடுத்த ஐந்து மைல்களில் உனக்குப் பிடித்த சரவண பவன் வருகிறது சிற்றுண்டி உண்டு விட்டுப் போவதை நீங்கள் பரிசீலிக்கலாம்,” என்றோ, ”அடுத்த இரண்டாவது மைல்களில் கொஞ்சம் சகாயமான விலையில் பெட்ரோல் பிடித்துக் கொள்ளலாமே,” என்றோ, ”போகும் வழியில் ஸ்டார் பக்ஸ் காப்பிக் கடை வருகிறது. கொஞ்சம் காப்பி அருந்திக் கொண்டே ஓட்டினால் பயணம் உற்சாகமாக இருக்கும் அல்லவா,”, ”நீங்கள் வரலாற்று நினைவுச் சின்னங்களில் ஆர்வம் உடையவரா? அடுத்த ஐந்தாவது மைல்களில் அமெரிக்கப் பழங்குடியினர் மியூசியம் ஒன்று இருக்கிறது, பார்க்கும் உத்தேசம் உண்டா?” என்றோ நம் தேர்வுக்கு ஏற்ற ஆலோசனைகளை அளிக்கின்றன. போகும் வழியில் தங்கும் இடங்களைப் பற்றிய தகவல்கள் வேண்டுமானால் உடனடியாக விக்கிப் பீடியாவைப் பிடித்து தகவல்களையும் அளிக்கத் தயாராக உள்ளன. நம் நண்பர்கள் தற்சமயம் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலையும் பெற முடிகிறது. இவ்வளவு வசதிகள் வந்த பின்பும் கூட ஓரெகன் மாநிலத்தில் இருந்து கலிஃபோர்னியா வந்து கொண்டிருந்த கொரியக் குடும்பம் ஒன்று கடுமையான பனிப் பொழிவில் வழி தவறி, திரும்ப முடியாத பாதையில் தொலைந்து போய் விட்டார்கள். கடுங்குளிரில் கார் டயர்களை எரித்து குடும்பத்தினர் உயிர் தப்ப, வழி தேடிச் சென்ற கணவர் மட்டும் இறந்து போனார்.
இனிமேல் யாரும் வரும் வழியில் கார் டிராஃபிக் ஜாம் என்று அவ்வளவு எளிதாக ஏமாற்றி விட முடியாது. முக்கியமாக மனைவிகள் கணவன்மார்களின் போக்குவரத்துக்களின் மீது தங்கள் கழுகுப் பார்வைகளை எப்பொழுதும் வைத்திருக்கலாம். நேரடியாக வீட்டுக்கு வராமல் ஏன் அடையார் வழியாகச் சுற்றி வந்தீர்கள், அங்கு உங்களுக்கு என்ன அநாவசிய வேலை என்று வீட்டுக்குத் திரும்பியவுடன் கர்ஜிக்கும் மனைவியை எதிர் நோக்கும் காலம் அதிக தூரத்தில் இல்லை. வழி தவறிப் போய் விடும் நாய்க்குட்டிகளையும் பூனைக் குட்டிகளையும் இப்பொழுதெல்லாம் ஜிபிஎஸ் கட்டித்தான் மேய்க்கிறார்கள்.
கடல்களில் டால்ஃபின்களும், திமிங்கலும் செல்லும் வழிகளைக் கண்டறிவது முதல் பல சதுர மைல் பரப்புள்ள மாட்டுப் பண்ணைகளில் தொலைந்து போகும் மாடுகளைக் கண்டுபிடிப்பது வரை ஜிபிஎஸ் சகல துறைகளிலும் பயன் பாட்டுக்கு வந்து விட்டன. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளிடம் ஜி பி எஸ் ஒன்றை மாட்டி விட்டு விட்டால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிந்து விடுகிறது. தொலைந்து போகச் சாத்தியமுள்ள அனைத்து சாதனங்களிலும் குட்டியாக ஒரு ஜிபிஎஸ் பொருத்தி விட்டால் அவற்றைத் தேடுவதும் கண்டுபிடிப்பதும் எளிதாகி விடுகிறது. இப்பொழுதெல்லாம் இந்தியாவில் தொலைதூரம் செல்லும் லாரிகள் கடத்தப் படுகின்றன. அவற்றைத் தேடுவதற்கு மாட்டும் ஜி பி எஸ் கருவிகளைத்தான் கள்வர்கள் முதலில் களவு செய்கிறார்களாம். கள்ளர்கள்களுக்கு மட்டும் தொழில் நுட்பம் தொலைவிலா இருக்கப் போகிறது?
இவை தவிர முதியோர்கள், நோயுற்றவர்களின் உடல்களில் பொருத்தப் பட்ட ஜிபிஎஸ் மூலம், அவர்களின் இதயத் துடிப்பு முதல் ரத்த அழுத்தம் வரை கண்காணிக்கப் பட்டு, அவர்களின் துடிப்புகள் எல்லை மீறும் சமயங்களில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு ஆம்புலன்ஸ் அனுப்பவோ, பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டால் உடனடியாக உதவிக்கு ஆள் அனுப்பவோ செய்கிறார்கள். வீடுகளில் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகளை அலுவலகத்தில் இருந்து கொண்டே கண்காணிக்கிறார்கள். ஆயாவிடம் விடப் பட்டிருக்கும் சின்னக் குழந்தைகளைக் கண்காணிக்கிறார்கள்.
ஒரு சில மென்பொருள்கள் இந்த வசதிகளை இன்னும் ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. நாம் செல்லும் வழியில் ஒரு விபத்தோ, சாலைத் தடையோ ஏற்பட்டு அதிக நேரம் எடுத்தாலோ, வழியில் போலீஸ்காரர் பிடிப்பதற்குக் காத்திருப்பதாகத் தெரிந்தாலோ, நம் ஜிபிஎஸ்ஸில் ஒரு பட்டனை அழுத்தி விட்டால் அந்த செய்தி உடனடியாக அந்த வழியே பயணித்து, அந்த மென்பொருள் சேவையைப் பயன் படுத்தும் பயனர் அனைவருக்கும் தெரிந்துபோய் விடுகிறது.
காஸ்ட்கோ வரை போய் விட்டு பாலும், பேப்பர் டவலும் வாங்காமல் வந்திருக்கிறீர்களே எத்தனை தடவை நான் சொல்வது, இப்பவே திரும்பிப் போங்க போய் இரண்டையும் வாங்கிட்டு வாங்க என்று மனைவியிடம் வசை வாங்க வேண்டிய தருணங்களையெல்லாம் ஆபத்பாந்தவனாக சில ஜிபிஎஸ் மென்பொருள்கள் காப்பாற்றி விடுகின்றன. நாம் செல்லும் வழியில் நாம் வழக்கமாகச் செய்ய வேண்டிய வேலைகள் இருந்தாலோ அல்லது மனைவியால் ஏற்கனவே அந்த ஜிபிஎஸ்ஸிடம், இந்த மரமண்டைக்கு கொஞ்சம் காஸ்ட்கோ பக்கம் போகும் பொழுது பால் வாங்க நினைவு படுத்தி விடு என்று சொல்லப் பட்டிருந்தாலோ ”ஒழுங்கா காப்பிப் பவுடர் வாங்கிக் கொண்டு போய் விடு இதோ கடை வருகிறது, இல்லாவிட்டால் அந்த ராட்சசியிடம் அநாவசியமாக திட்டு வாங்க வேண்டி வரும்,” என்று கடமையாக நம்மை எச்சரித்து நாம் செய்ய வேண்டிய வேலைகளை நாம் செல்லும் வழிகளிலேயே முடித்து வைக்க உதவி செய்கின்றன.
அவசரமாக நாம் மதுரைக்குச் சென்று கொண்டிருக்கும் பொழுது, நாம் சென்னையில் சந்திருக்க வேண்டிய நண்பர் ஒருவர் திருச்சி அருகே எதிர்ப்புற ஹோட்டல் ஒன்றில் டிஃபன் சாப்பிக் கொண்டிருந்தாலோ, எதிர் சாலையில் சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலோ நம்மை உடனடியாக உசுப்பி விட்டு அவருடன் தொடர்பு கொள்ளச் செய்யும் வசதிகளும் வந்து விட்டன. நம் நண்பர்கள் வட்டாரத்தில், எவரேனும் நாம் செல்லும் வழியில் தென்பட்டால் உடனே நமக்கு ஒரு தகவலை அனுப்பி வைத்து விடுகின்றன. ஏடாகூடமான இடங்களுக்குச் செல்பவர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இல்லாவிட்டால், நேத்திக்கு மூணு மணி வாக்கில் நீ அந்த ஏரியாவில் என்ன செய்து கொண்டிருந்தாய் என்பது போன்ற தர்ம சங்கடமான கேள்விகளை எதிர் கொள்ள வேண்டி வரலாம்.
இந்த கைபேசியில் அமர்ந்து கொண்டு வழி நடத்தும் வழி நடத்திகள் அனைத்துமே நாம் செல்லும் இடங்களின் இரட்டைப் பரிமாண அல்லது முப்பரிமாணப் பார்வையை நமக்கு அளிக்கின்றன. நாம் பல்வேறு இடங்களில் புகைப் படம் எடுத்தாலும் அவற்றின் சரியான இடங்களை இந்த ஜி பி எஸ் கள் பதிந்து வைத்துக் கொண்டு, அந்தப் படங்களுடன் சேர்த்து, அவை எங்கு எடுக்கப் பட்டன என்பதுடன் அதே இடத்தில் எடுக்கப் பட்ட பிற படங்களுடன் தொடர்பு படுத்துகின்றன. நாம் மீண்டும் அதே இடத்திற்குப் போக நினைத்தால் கச்சிதமாக வழி காட்டி உதவுகின்றன.
வழி நடத்தி என்று அழைத்தாலும் கூட அது செய்யும் ஏராளமான பணிகளில் ஒன்றானதாகவே வழி நடத்துவது அமைகிறது. சரியான பாதையில் நம்மைச் செலுத்துவதை விட இவை ஏராளமான உபபணிகளையும் நமக்கு அளித்துக் கொண்டேயிருக்கின்றன. செல்ல வேண்டிய இடங்களின் சீதோஷ்ண நிலைகள், தீடீர் தடைகள், கால தாமதம் என்று எதையுமே இவை விட்டு வைப்பதில்லை.
கூகுளின் அபாரமான சேவைகளில் முக்கியமானது கூகுள் எர்த். நினைத்த நேரத்தில் நாம் உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு உலகின் எந்த மூலைக்கும் பறந்து சென்று பார்த்து விட முடிகிறது. ஊர் நினைவு வருகிறதா உடனே மனவேகத்தில் ஊருக்குப் போய் கூகுள் எர்த் மூலமாக நமது தெருக்களில் நடந்து விட்டு வந்து விடலாம். உலகின் பல இடங்களுக்கும் சமீபத்திய செயற்கோள் படங்களை அளிக்கின்றன. சேவையைப் பொருத்து, உடனடியான நேரடியான படங்களை அளிக்கின்றது. அதன் இலவச சேவையில் இந்தியாவில் பல இடங்களையும் இன்னும் தெளிவின்றி மசமசப்புடன் காட்டினாலும் அமெரிக்கத் தெருக்களையும் காடுகளையும் மலைகளையும் கடலையும் தத்ரூபமாக காட்டி அந்த இடங்களுக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறது. பல ‘முன்னேறிய’ நாடுகளின் இடங்களும் இந்த வகையில் கூகுளால் காட்டப்படுகின்றன.
கூகுள் இந்த தொழில்நுட்பத்தை, அதன் அடுத்தடுத்த பயன் பாட்டுத் தளங்களுக்கு எடுத்துச் சென்று கொண்டேயிருக்கிறது. அவற்றில் ஒன்று கூகுள் கண்ணாடிகள். இந்த கண்ணாடிகளை மாட்டிக் கொண்டு நடக்கும் பொழுது நாம் ஒரு ஹோட்டலைக் காணும் பொழுதோ ஒரு கட்டிடத்தைக் காணும் பொழுதோ அவற்றின் தகவல்களை அந்தக் கண்ணாடியிலேயே நமக்கு காட்சிப் படுத்தி விடுகிறது. சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்லும் பொழுது நாம் ஒரு பொருளைக் கண்டால் உடனே அதன் பார் கோடைப் படித்து அந்தப் பொருள் பற்றிய அனைத்து விபரங்களையும் சேகரித்து நம் கண்ணாடியில் காண்பித்து விடுகிறது கூடவே அதே பொருள் அருகாமையில் ஒரு பத்து மைல் சுற்று வட்டாரத்தில் இதை விட சகாயமான விலையில் கிடைக்கும் விபரத்தையோ அதை எத்தனை பேர்கள் விரும்பியுள்ளார்கள் என்றோ அதன் சாதக பாதகங்கள் குறித்தோ இதை விட குறைவான விலையில் இதை விடத் தரமான இன்னொரு பொருள் இருக்கும் விபரத்தையோ உங்களுக்கு அளிக்கலாம்.
வீடு வாங்குவதற்காக வீட்டைப் பார்க்கப் போனால் அதன் சகல ஜாதகங்களையும் அது உங்களுக்கு அலசித் தரலாம். கண்ணாடியை மாட்டிக் கொண்டு காட்டுக்குப் போனால் இந்த செடி விஷச் செடி இதைத் தொடாதே என்று எச்சரிக்கலாம் அந்தப் பறவை ஆஸ்த்ரேலியாவில் இருந்து வந்த அபூர்வமான ஒரு பறவை என்ற செய்தியையோ கீழே ஊர்ந்து செல்லும் பூச்சிக்கு பத்தாயிரம் கால்கள் இருக்கும் தகவலையோ அது சொல்லிக் கொண்டே இருக்கலாம். மியூசத்தில் ஒரு ஓவியத்தைக் காணும் பொழுதோ ஒரு இயற்கைக்காட்சியைக் காணும் பொழுதோ நமக்குத் தேவையான தகவல்களை அந்தக் கண்ணாடி அள்ளி அள்ளி தந்து கொண்டேயிருக்கலாம். இன்னும் என்னவெல்லாமோ செய்யக் கூடிய சாத்தியங்கள் இந்த மாயக் கண்ணாடியில் உண்டு.
ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தின் எண்ணற்ற சாத்தியங்களில் ஒன்றுதான் நான் 880 நெடுஞ்சாலையில் நான் கவனித்த அந்தக் கூகுள் காரும் கூட. ஏற்கனவே ஆளில்லா ட்ரோன் விமான்ங்கள் மூலமாக பாக்கிஸ்தானிலும், ஆஃப்கானிஸ்தானிலும் அமெரிக்கா குண்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கூகுள் மேப்பில் நாம் பயன் படுத்தி வரும் ஸ்டீரீட் வியூவைச் செயல் படுத்திய செபாஸ்டியான் என்னும் பொறியாளரே இந்த கூகுள் காரையும் வடிவமைத்திருக்கிறார்.
மசாலா நாவலாசிரியர் டெட் பெல்லின் ஸ்பை என்னும் நாவல் ஒன்றில் அமோசான் காடுகளில் இருந்து கிளம்பி வரும் ட்ரெக்குகள் டெக்சாஸ் வழியாக அமெரிக்காவினுக்குள் நுழைந்து தானாகவே வாஷிங்டன் வரை சென்று பேரழிவுகளை ஏற்படுத்த முயலும். அந்த பெரிய டிரக்குகள் எல்லாம் தானாகவே இயக்கப் படும். அவை போன்ற தானியங்கி வாகனங்கள் இனி கற்பனையல்ல, சாத்தியமாகப் போகும் நிஜங்களே. இது வரை ஐந்து லட்சம் மைல்களுக்கு மேலாக ஓட்டுனர் இல்லாத தானியங்கிக் கார்களை, வெற்றிகரமாக எந்தவித விபத்தும் இன்றி, பரபரப்பான சாலைகளில் ஓட்டிச் சோதித்திருக்கிறார்கள்.
இவை போன்ற தானியங்கி கார்களுக்கான சட்டங்களும் விதிகளும் இனிமேல்தான் இயற்றப் படவிருப்பதால் இந்தக் கார்கள் பயன்பாட்டுக்கு வர இன்னும் சில வருடங்கள் ஆகலாம். அந்த வகை தானியங்கிக் கார்களுக்கு நெவ்வேடா மாநிலம் ஓட்டுனர் உரிமையை வழங்கி அதன் சாலைகளில் செல்ல அனுமதி அளித்துள்ளது. பிற மாநிலங்களிலும் கூகுளின் ரோபோ கார்களுக்கு அனுமதி வாங்கவும், ரோபோ கார்களுக்கான விதிமுறைகளை உருவாக்கவும், ஏராளமான அரசாங்கங்க அதிகாரிகளையும் மந்திரிகளையும் சம்மதிக்க வைக்கும் ஏராளமான ராஜதந்திர இடைத்தரகர்களை (லாபியிஸ்டுகளை) கூகுள் அமர்த்தியுள்ளது. அவர்கள் மூலமாக கூகுள் கார்கள் சாலைக்கு வரத் தேவையான சட்டங்கள் நிறைவேற்றப் பட்டு அடுத்த பத்தாண்டுகளுக்குள் சாலையில் தானாகவே ஓடப் போகின்றன.
நாம் செல்ல வேண்டிய விலாசத்தை அந்தக் காரிடம் சொல்லி விட்டு ஹாயாக பேப்பர் படிக்கவோ, செல்ஃபோனில் அரட்டை அடிக்கவோ, ஆபீஸ் மீட்டிங்குகளில் கலந்து கொள்வதோ, சினிமா பார்ப்பதோ அல்லது குட்டித் தூக்கம் போடவோ செய்யலாம். நம் இலக்கை அடைந்தவுடன் அதுவாகவே பார்க்கிங் லாட்டில் தன்னை நிறுத்திக் கொண்டு நம்மை இறங்கச் சொல்லி அன்பாகக் கோரும். கூகுள் தெருப்பார்வையின் உதவி கொண்டும், அந்தக் காரின் முன்னும் பின்னும் பக்கவாட்டுகளிலும் பொருத்தப் பட்ட சென்சார்களின் உதவி கொண்டும், இந்தக் கார்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் அந்தக் கார்களின் அனைத்து சென்சார்களும் பெறும் அனைத்துத் தகவல்களையும் வாங்கி, அலசி ஆராய்ந்து, பத்திரமான பயணத்துடன் சரியான இலக்கிற்குக் காரைத் தானாகவே ஓட்ட வழி செய்கின்றன. கூகுள் நிறுவனம் இந்தக் கார்களை வடிவமைத்துச் சோதனை செய்து வருகிறது.
கூகுள் தனது ஆட்டோகார் மென்பொருளை வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்க இருக்கிறது. கூகுள் தவிர்த்து வோல்வோ, ஜி எம், ஃபோர்டு போன்ற பிற கார் தயாரிப்பு நிறுவனங்களும் இவை போன்ற ரோபோ கார்களை வடிவமைப்பதில் தீவீரமாக இறங்கியுள்ளன. பல்வேறு வகையான தானியங்கிக் கார்களை இந்த நிறுவனங்கள் சோதனை செய்து வருகின்றன. அவற்றுள் கார் ட்ரெயின் என்ற தானியங்கி வாகனமும் ஒன்று. முன்னால் செல்லும் பைலட் போன்ற ஒரு கார் தனக்குப் பின்னால் வரும் ஏராளமான கார்களை தலைமையாக வழிநடத்தி அந்தந்தக் கார்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு வழி நடத்திச் செல்கிறது. பின்பற்றும் கார்களை எவரும் ஓட்ட வேண்டிய அவசியமில்லைத் தலமைக் காரை இந்தக் கார்கள் விசுவாசமாகப் பின் தொடர்ந்து சென்று விடும்.
கூகுளின் ஆட்டோமேடிக் ரோபோ கார்களில் இன்னும் சில பிரச்சினைகள் உள்ளன. மழைக்காலங்களிலும், பனிபெய்யும் பொழுதுகளிலும் மோசமான வானிலைகளிலும் இந்தக் கார்களுக்கு சாலைகளில் போடப் பட்டிருக்கும் கோடுகளையும் இடங்களையும் துல்லியமாக அடையாளம் காண்பதில் பிரச்சினைகள் உள்ளன. கூகுள் மேப் செயல் படாத சில இடங்களில் கார்கள் தானாகவே ஓரம் கட்டி “ஐயா இதுக்கு மேலே எனக்கு வழி தெரியாது இனி நீயே காரை ஓட்டிக் கொள்” என்று ஓட்டுனரிடமே காரைப் பத்திரமாக ஒப்படைத்து விடுகின்றன. அல்லது கூகுள் கார் போகும் விதம் பிடிக்காமல் போனாலோ சும்மா உட்கார்ந்து வருவது போரடித்தாலோ ஓட்டுனரே தானியங்கி மோடில் இருந்து விலக்கி தன் கட்டுப்பாடுக்குள் காரை எடுத்துக் கொள்ளலாம்.
ஜி பி எஸ் மென் பொருள்களின் சாத்தியங்கள் ஏராளமானவை. ஆனால் அவற்றின் பயன்பாடுகளுக்கு நடுவே, அவை தரும் வசதிகளுக்கு நாம் ஒரு கடுமையான விலையைக் கொடுக்க வேண்டி வருகிறது. அது நம் தனி மனித சுதந்திரம். மேற்குறிப்பிட்ட அனைத்து வகை சாத்தியங்களும் நமது தனிநபர் சுதந்திரத்திற்குள் பெரும் அளவு ஊடுருவல் செய்யப் போகின்றன.
நாம் ஒரு இடத்திற்குச் செல்ல அதன் விலாசத்தை அளித்து கூகுளில் தேடும் பொழுதே நாம் விசாரித்த ஊர்களில் உள்ள லாட்ஜுகளின் விளம்பரங்களும், அங்குள்ள உணவகங்களுக்கான கூப்பன்களும், வாடகைக் காருக்கான விளம்பரங்களும் நம்மை வந்து மொய்த்து விடுகின்றன. நாம் இணையத்தில் பரிமாறிக் கொள்ளும் எந்தத் தகவலும், தேடும் எந்த விபரமும், பார்க்கும் எந்தத் தளமும், கேட்கும் எந்த இசையும், படிக்கும் எந்தச் செய்தியும் நாம் மட்டுமே அறிந்தவை அல்ல. அவை உடனடியாகச் சேகரிக்கப் பட்டு நம்மைப் பற்றிய ஒரு உருவகத்தை உருவாக்கப் பயன் படும் தகவல்களாக மாற்றப் பட்டு, நம் தேவைகளை ஊகித்து அவற்றுக்கேற்ற பொருட்களையும், சேவைகளையும் நமக்கு விற்பனை செய்ய உதவும் தகவல் சுரங்கமாகவும், விளம்பரக் கருவியாகவும் கூகுள் மாற்றி விடுகிறது.
ஒரு டீன் ஏஜ் மாணவி கர்ப்பமடைந்து கருத்தடை வழிகளைக் கூகுளில் தேடியதால் அவளது பெற்றோர்களுக்கு விபரம் தெரியும் முன்பாகவே குழந்தை உணவுகளுக்கான கூப்பான்களை அவளது வீட்டு விலாசத்திற்கு அனுப்பி வைத்து சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கிறது வால்மார்ட் லேப்ஸ் என்னும் தகவல் ஆராய்ச்சி நிறுவனம். அமெரிக்க வெளிநாட்டு உளவு நிறுவனமான சிஐஏவுக்காக துவங்கப் பட்ட கீஹோல் என்ற நிறுவனத்தை கூகுள் நிறுவனம் வாங்கியே கூகுள் எர்த் சேவையை அளித்தது. சாட்டிலைட் இமேஜிங், ஜிபிஎஸ் போன்றவையெல்லாம் பொதுப் பயன்பாட்டுக்கு வரும் முன்னால், பல வருடங்களாக அமெரிக்க ராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளதுதான். ஜி பி எஸ் என்னும் சாதனத்தை நாம் கேள்விப் படும் முன்பாகவே ஆஃப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பல வருடங்களுக்கு முன்பாகவே அமெரிக்க ராணுவம் அவற்றைப் பயன் படுத்தியுள்ளது.
எனிமி ஆஃப் தி ஸ்டேட் போன்ற சினிமாக்கள் வந்த பொழுது ஆச்சரியமாகத் தெரிந்த அத்தனை விஷயங்களும், ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நாம் கண்டு வியந்த அத்தனை பொருட்களும், இன்று நம் கைகளில், சாதாரண மனிதர்களின் பயன் பாட்டுக்கு சில டாலர்களில் வந்து விட்டன. கூகுள் எர்த் மூலமாகவோ கூகுள் தேடல் மூலமாகவோ நாம் செய்யும் எந்ததொரு தேடலுமே தொடர்ந்து கைப்பற்றப் பட்டு உடனுக்குடன் நம் தேவைகள் தீர்மானிக்கப் பட்டு ஏராளமான விற்பனை நிறுவனங்களுக்கு விலைக்கு விற்கப் படுகின்றன. நமக்கென்று நம் அந்தராத்மா மட்டுமே அறிந்த ரசனைகள் விருப்பங்கள் என்று எதுவுமே மிச்சமிருக்கப் போவதில்லை.
ஆப்பிள் நிறுவனம் தன் ஐஃபோன் 5 மாடலில் கூகுள் மேப் வசதியை நீக்கி விட்டு தன் சொந்த மேப் வசதியை அளித்திருக்கிறது. இந்த புதிய மேப் கிழக்கை மேற்கு என்றும் வடக்கைத் தெற்கு என்றும் காட்டுவதாக ஏராளமான பயனர்கள் புகார் செய்து வருகிறார்கள். இருந்தாலும் குறைகளைச் சரி செய்து எங்கள் மென்பொருளையே பயன் படுத்துவோம் என்று ஆப்பிள் நிறுவனம் பிடிவாதமாக இருக்கிறது. அதன் காரணம் தன் நிறுவனத்தின் மென் பொருள் பயன் பட வேண்டும் என்பதை விட அதன் மூலமாக சேகரிக்கப் படும் பயனர்களின் முக்கியமான தகவல்களுக்காகவே. அத்தகவல்களின் சந்தை மதிப்பு ஏராளம், அவற்றை சேகரித்து விற்பனை செய்வதற்காகவே இந்த நிறுவனங்கள் அடித்துக் கொள்கின்றன. ஒருவர் எந்தந்த நேரங்களில் எங்கே செல்கிறார், எங்கே வசிக்கிறார், எதை வாங்குகிறார், எதை விரும்புகிறார் என்பதைத் தொடர்ந்து கண்காணித்து சேகரிப்பதன் மூலமாக அவரது நுகர்வு பாணியை அறிந்து கொள்வதன் மூலமாக அவருக்குத் தேவைப் படும் பொருட்களை அவரிடம் எளிதாக விளம்பரப் படுத்தி அவரிடம் விற்பனை செய்ய முடிகிறது. இதற்காகவே கூகுள் மேப், ஆப்பிள் மேப் போன்ற சேவைகளை இலவசமாக அளித்து நுகர்வோர்களின் நடவடிக்கைகளை அறிகின்றன, சேகரிக்கின்றன, விற்பனை செய்கின்றன.
வீடுகளும், அலுவலகங்களும், கார்களும், மனைவிகளும், கணவர்களும், வேலையாட்களும், குழந்தைகளும், கள்வர்களும், காவலர்களும், காதலர்களும், கயவர்களும், காமுகர்களும், விலங்குகளும், பறவைகளும், மீன்களும் தொடர்ந்து ஏதோ ஒரு கருவியினால், ஏதோ ஒரு செயற்கைக்கோளினால் எப்பொழுதும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தக் கண்காணிப்புக்கு ஆட்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெரியண்ணன்கள் எப்பொழுதும் நம்மைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த விதமான தனிநபர் போக்குவரத்துக்களைக் கண்காணிக்கும் செயற்கைக் கோள் இடம் சுட்டும் மென்பொருட்கள் பல்வேறு சமூக உளவியல் சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன. கணவன் மனைவிகளும் காதலர்களும் பரஸ்பரத் துணைகளை வேவுபார்ப்பதற்காக இந்தக் கருவிகளைப் பயன் படுத்துகிறார்கள் என்றும், அதன் மூலம் தங்களது தனி மனித சுதந்திரத்திற்குள் ஊடுருவினார்கள் என்றும் ஏராளமான விவாகரத்து வழக்குகளும், நஷ்ட ஈடு வழக்குகளும் அமெரிக்கா முழுவதுமாக நடத்தப் பட்டு வருகின்றன.
இவை போன்ற மரபில்லாத வழக்கங்களுக்கான சட்டங்களும் இன்னும் பல மாநிலங்களிலும் உருவாகவில்லை. அதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான தீர்ப்புகள் இந்த விவகாரங்களில் உருவாகின்றன. இவை ஏராளமான சட்டச் சிக்கல்களையும் அவற்றுக்குத் தீர்வைக்காகப் புது விதமான சட்டங்களையும் உருவாக்குகின்றன.
நாம் செல்லும் வழித்தடங்களில் நம்மை வழி நடத்திச் செல்ல ஆயிரம் சாதனங்கள் வந்து விட்டன. உலகமே நம் உள்ளங்கையினுள் அடங்கி விட்டது. ஆனால் வாழ்க்கைப் பாதையில் நாம் வழி தவறிச் செல்லும் தருணங்களில் மீட்டு வருவதற்கு நமக்கு மன பலமும் அறவுணர்வும் ஆன்மீக வழிகளும் மட்டுமே துணை நிற்கப் போகின்றன. நம் வாழ்க்கைப் பாதையில் வழி நடத்தக் கூடிய ஒரே மென்பொருள் நம் மனசாட்சியின் குரலாக மட்டுமே இருக்க முடியும். இனி தைரியமாகக் கண் போன போக்கிலே கால் போகலாம். திருப்பி நம் இடம் கொண்டு சேர்க்க ஆயிரக்கணக்கான மென் பொருட்கள் காத்திருக்கின்றன. ஆனால் மனம் போன போக்கில் மனிதன் போனால் அவனை நல்வழி நடத்திச் செல்ல எந்தவிதமான ஜிபிஎஸ் மென்பொருளும் உதவிக்கு வராது. மனிதன் போகும் பாதையை மறந்து போனால் ஆற்றுப் படுத்தி வழி நடத்த கூகுள் கூடவே வரப் போவதில்லை. மனிதனின் ஆன்மாவுக்கான தேடு பொறிகள் வேறு வகையானவை.
One Reply to “உள்ளங்கையில் உலகம்”
Comments are closed.