பகுதி 04 – பெருகிப் பிதுங்கும் நகரங்கள்

இக்கட்டுரைத்தொடரின் முந்தைய பகுதிகள்: சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்

நகரங்கள்

பழங்காலச் சீன நகரம் இயல்பாக உருவாகிப் பரிணமித்தது. கடற்கரைக் கிராமங்களும், மலைக் கிராமங்களும் தம் பொருட்களான தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியனவற்றைக் கொடுத்து, உலர்ந்த சமவெளிகளில் வளர்க்கப்பட்ட பண்ணை விலங்குகளை மாற்றாகப் பெற்றனர். கடலோர, நதியோரக் கிராமங்களும் ஊர்களும் விவசாயமும் வணிகமும் கைகோர்த்ததில் உருவாகி வளர்ந்தன. கைவினைஞர்களும் வணிகர்களும் சமூகப்பங்காற்றும் அளவிற்கு இந்த வளர்ச்சி முன்னேறியது. இந்தப் போக்கு வளர்ந்து, பண்பட நகரங்கள் உருவாகின. சுற்றிலும் இருந்த விளைநிலங்கள் ஏராளமாக உற்பத்தி செய்தது, கூடி வந்த நகர மக்கள் தொகையின் தேவைகளைச் சமாளிக்கப் போதுமானதாக இருந்தது.

இன்றைய சீன நகரமும், நகரமயமாதலும் உயர்மட்டத் தீர்மானங்களுக்கு ஒப்ப, வலுவில் ஏற்படுத்தப் பட்டவை. அதன் விளைவுகள் நகரங்களில் சீக்கிரமே தெரிகின்றன.

பேய்ஜிங்கில் நான்கில் ஒருவர் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து நகருக்கு வந்திருக்கும் தொழிலாளி. இன்றைய மாநகரை நிர்மாணிக்க மொத்தம் 3 மில்லியன் விவசாயத் தொழிலாளிகள் தேவைப்பட்டிருக்கிறார்கள். 1949க்குப் பிறகு நகரங்களின் வளர்ச்சியை மட்டும் அரசாங்கம் வற்புறுத்தியதன் விளைவாக நகர/பெருநகரங்களில் சீரற்ற மக்கள் தொகை சிதறல் ஏற்பட்டது. இன்று வரையிலும் அது சீரற்றே இருந்து வருகிறது.

1985ல் சீனத்தின் ஆகப் பிரபலமான 22 நகரங்களின் கூட்டு மக்கள்தொகை 47.5 மில்லியனாக இருந்தது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 12%தான்.

குறைந்தது 100,000 பேர் கொண்ட ஊர்களின் எண்ணிக்கை 1976ல் இருந்த 200லிருந்து 1986ல் 342டாக உயர்ந்தது.

அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் வசிக்கும் நகரங்களின் எண்ணிக்கை 9 தான். சீனாவிலோ அதுபோன்ற நகரங்கள் 100க்குக் குறையாமல் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை 1989ல் 50க்கும் குறைவாகவே இருந்திருக்கிறது என்பது வளர்ச்சியின் வேகத்தைச் சொல்கிறது. 1996ல் சாங்ஜூ நகரில் 700,000 பேர் இருந்திருக்கிறார்கள். அந்த எண்ணிக்கையோ 2006ல் 4 மில்லியனாக உயர்ந்தது. சிறுநகரங்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 50,000. இது இன்னும் 15 ஆண்டுகளில் 70, 000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு பெருமளவில் இடம்பெயரும் சீன விவசாயத் தொழிலாளர்கள் குறித்த தெளிவை இதிலிருந்து நாம் எளிதில் பெறலாம்.

முன்பெல்லாம் பெரிதாக, முன்முற்றமும் கொல்லைப்புறமும் கொண்ட வீடுகள் கட்டப்பட்டன. ’சிவப்பாட்சி’ காலத்தில் இடம்பெயர்ந்து நகருக்குள் வரும் தொழிலாளிகள் பெருகி வந்த போது அந்தப் பெரிய வீடுகளும் மாளிகைகளும் ஏழெட்டு குடும்பங்களுக்குப் பிரித்து விடப் பட்டன. முற்றங்களில் குடிசைகளும் கூடாரங்களும் போடப்பட்டன. காரண காரியமில்லாமல் நெளிந்தும் வளைந்து போகும் இந்தக் குறுகிய தெருக்களுக்கும் சந்துகளுக்கும் பெரும்பாலும் பெயர்களே பெரும்பாலும் இருப்பதில்லை. ஒளிந்துபிடித்து விளையாடவும் தொலைந்து போகவும் மிக ஏற்றவை. சீன நகரில் முகவரிகளைக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். பெரும்பாலும், தெருவின் பெயரோ எண்ணோ இல்லாமல் அந்தத்தெரு அல்லது சந்து இருக்குமிடத்தில் உள்ள மிக முக்கிய தலத்தைச் சொல்லியே எழுதுவது கல்வியறிவு குறைந்த எளியோர் வழக்கம். சின்னச்சின்ன தெருக்கள் கண்டமேனிக்கு உருவாகின. ஆகவே, ஷாங்காய் போன்ற பெருநகரங்களின் இன்றைய தெருக்களும் சந்துகளும் கூட மிகவும் குழப்பக் கூடியவை.

தொழிலாளிகள் வசிக்கும் இடங்களில் பெரும்பாலானவை, மூச்சுத் திணறல் வரும் அளவு நெரிசலாக இருப்பதோடு, அகதிகள் முகாம்கள் போலிருக்கின்றன. பூச்சு இல்லாத சாம்பல் நிறக் கற்களால் நீள கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புப்பகுதி நீண்ட பொதுத் தாழ்வாரத்தை ஒட்டி இருக்கின்றது. கணப்புக்கு இவர்கள் நிலக்கரியைத் தான் பயன்படுத்துவர் இதுபோன்ற ஒண்டுக் குடித்தனத்தில் பொதுக் கழிவிடம் மற்றும் குளியலறை சந்து முடிவில் இருக்கும். சில இடங்களில் நூறடிக்கு அதிக தொலைவில் கூட இருக்கும். இதனால் இரவில் வீடுகளில் குடுவைகளில் சிறுநீர் கழிப்பது இங்கு வழக்கம். காலையிலேயே சிறுநீர் நிறைந்த அவரவர் குடுவையைத் தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறி கழிப்பிடம் நோக்கி விரைவர்.

பகல் வேளைகளில் வீட்டுக்கு முன்புறத்தில் முதிய ஆண்கள் காய்கறி விற்பது சிறு பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வது போன்ற பணிகளில் ஈடுபடுவர். மூதாட்டிகளோ வீட்டுக்குள் வேலைகளைக் கவனிப்பர். பள்ளிப் பிள்ளைகள் வீட்டுக்கு வெளியில் போடப்பட்டிருக்கும் மேசையில் படிப்பார்கள். பழவியாபாரி, செருப்பு தைப்பவர் போன்றவர்கள் வருவதும் போவதும் காணக்கூடிய காட்சி. இடிந்து விழுவது போன்ற நிலையில் இருக்கும் பழங்கால மாளிகை முற்றங்களில் உருவான சேரிகளில் அழகுச் சாதனங்கள் விற்போரும் அழகுச் சேவைகள் செய்பவரும் அறிவிப்புகள் ஒட்டியிருப்பதைக் காணலாம்.
மாலைகளில் வீடு திரும்பிய தொழிலாளிகள் கூடியிருந்து உண்பதும் அரட்டையடிப்பதும் விளையாடுவதும் வழக்கம். நல்ல பனிக்காலத்திலும் நண்பர்கள் வெளியே வந்து கணப்பைச் சுற்றி அமர்ந்து பேசுவதையும் சிறுவியாபாரிகள் சிறிய தள்ளு வண்டிகளில் தின்பண்டங்கள், கரி, காகிதம் போன்ற பொருட்களைக் கூவி விற்பர். சில சமயம் பழைய காகிதம், ப்ளாஸ்டிக் போன்றவற்றை வாங்கும் ஆட்களும், கத்திக்கு சாணம் தீட்டும் ஆளும் வருவார்கள்.

தொழிலாளர் குடியிருப்புகளில் பெரும்பாலான சந்துகள் மிகவும் குறுகியவை. வாகனங்கள் போகவே முடியாது. மனிதர்கள் நடக்கலாம், அவ்வளவு தான். அதிக பட்சம் ஒரு மேசை நாற்காலி போடலாம்; அல்லது பெட்டிக்கடை போடலாம். சில இடங்களில் இருக்கும் சிறிய பூங்காக்களுக்கு அருகில் முதியோர் பயன்படுத்தக்கூடிய சில உடற்பயிற்சிக் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும். இவ்விடங்களில் தான் முதியோர் கூடியிருந்து பேசுவதும் பயிற்சி செய்வதும்.

உள்ளடங்கிய மாகாணமான ஆன்ஹுவேய்யைச் சேர்ந்த வாங் சுவாங்லீ, “கிட்டத்தட்ட, எல்லா ஆண்பிள்ளைகளும் நிலத்தை விட்டுவிட்டு நகரத்துக்கே வந்திடறாங்க. எல்லாரும் கட்டிடத் தளத்துல தான் வேல பாக்கறாங்க,” என்கிறார். “ஜூன் மாசம் பெரும்பாலான ஆட்கள் ஊருக்குப் போவாங்க. ஸோயா பீன்ஸோ, சோளமோ, இல்ல வேற ஏதாச்சும் விதைக்கற வரைக்கும் அங்க வேல செய்வாங்க. சீக்கிரமே அக்டோபர் மாசமும் வந்துரும். மறுபடியும் கிளம்பி மூணு மாசத்துக்கு நகரத்துல வேலைக்கி வந்துருவாங்க. தண்ணி மாதிரி தான் கிராமத்துலயிருந்து எங்காட்கள் நகரத்த நோக்கி வழிந்தோடறோம்.” அழுக்கும் பிசுக்கும் புழுதியும் படிந்து சடையாகிப் போன கேசத்துடன் அமர்ந்திருக்கும் வாங்கிற்கு 43 வயது. அவரைச் சுற்றி வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.

சுற்றிலும் ஷாங்காயின் புதிய வானுயர் கட்டங்கள் மிரட்டும் உயரமும், வசீகரிக்கும் அழகுடனும் நிற்கின்றன. கட்டத்தொழிலாளிகளான இவர்களுக்கு ஒருமணிநேர ஊதியமாக $0.60 தரப்படுகிறது. ஷாங்காயின் அத்தனை செழிப்பிலும் இம்மக்களுக்கு எந்தப் பங்குமில்லை. வாங்கைப் போலவே மற்ற யாருக்கும் குறையாகச் சொல்ல புகார்கள் ஒன்றுமில்லை. “வெவ்வேற கட்டும் இடத்தில வெவ்வேற முதலாளிக்குக் கீழ வேலை செய்யறப்ப, ஒருத்தர ஒருத்தர் சந்திச்சுப்போம். இன்னொருத்தன் இருக்கான். அவன நா மூணு வருசத்துல மூணு தடவ வேலையிடத்துல சந்திச்சிருக்கேன்.”

இவரது மனைவி மற்றும் 15 வயது மகனும் 13 வயது மகளும் கிராமத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் அவர்களுக்குப் பணம் அனுப்புகிறார். குழந்தைகளுக்கு மேம்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க நினைக்கிறார். உயர்நிலைப் பள்ளிக்குப் போயிருந்தாலும் வாங் தேர்வில் வெற்றி பெறவில்லை. அழுக்கேறிய விரல்களை விரித்து கையாட்டி, “எல்லோருக்கும் சிறுவயது முதலே கனவுகள் இருக்கும் தானே,.. ஆனா, வயசாகும் போது வாழ்க்கை நிலையை ஒட்டி கனவுகளக் கொஞ்சம் மாற்றி அமைச்சுக்க வேண்டியதா இருக்கு. அதான், நா கட்டட வேலையக் கத்துகிட்டேன்.”
வெளிச்சம் மங்கி இருள் கவியும் நேரத்தில் எல்லோரும் உணவருந்தவென்று கலைகிறார்கள். மூட்டையைத் தோளில் சாய்த்தெடுத்துக் கொண்டு அவரைப் போலவே உருவமும் உடையும் கொண்ட தொழிலாளர் கூட்டத்தில் நடந்து கலந்து மறைகிறார் வாங்.

தொழிலாளர் சந்தை தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வந்தும் கூட அதிகாரிகளின் கெடுபிடிகளையெல்லாம் மீறி, ‘நடக்கும் பாதங்களும் மாயக் கரங்க’ளும் கொண்ட விவசாயத் தொழிலாளிகள் நகரத்தில் பெருகிவிட்டனர். சீனாவின் முக்கிய பெருநகரங்களான பேய்ஜிங், ஷாங்காய், தியான்ஜின் மற்றும் ஷென்யாங் ஆகியவற்றின் மக்கள்தொகை முறையே 5.9 மில்லியன், 7மில்லியன், 5.4 மில்லியன் மற்றும் 4.2 மில்லியன் (ஒரு மிலியன்= பத்து லட்சம்). தொழிற்பெருக்கம் தான் பொருளாதார மற்றும் வேலை வாய்ப்புத் துறைகள் வளர உதவும் என்று அமைக்கப்பட்ட சட்டங்கள், அரசு வி்திகள் நகரங்களில் இம்மக்களின் எண்ணிக்கையைக் கூட்டியதுடன், ஏழை -பணக்காரர்களிடையே இருந்த பொருளாதார இடைவெளியை மேலும் கூட்டின. விவசாயத் தொழிலாளிகளே பெருமளவான இக்கூட்டத்தில், வேலையில்லாதவர்களும், மிகச் சிறு தொகை ஓய்வூதியமே பெற்று வாழும் முதியோரும்-இவர்கள் உறவினர் ஆதரவற்றவரும் கூட- முக்கிய பிரிவினர்.

நகர ஏழைகளில் ஆதரவற்றோருக்கு அரசு உதவித் தொகை அளிக்கிறது, அதற்குத் தகுதி பெற பல விதிகளுண்டு.

தொழிலாளர்களுக்கான வசிப்பிடம், கழிவறை வசதிகள், மின்சாரச் சேவை, வேலைவாய்ப்புகள் என்று எல்லாமே நகரில் பிரச்சினை தான். இவர்கள் பிழைப்போ சிரமம் தான். பாலங்களுக்குக் கீழேயும் தனியே நிற்கும் வணிகவளாகங்களின் வாகன நிறுத்தங்களிலும் கிடந்துறங்கி வாழும் தொழிலாளிகள் குறைவான எண்ணிக்கையினர்தான், ஆனால் இருக்கிறார்கள். வேலை கிடைக்காவிட்டால் அன்றாடக் கஞ்சிக்கே வழியில்லாத ஆட்களும் இருக்கிறார்கள்.

பேய்ஜிங்கில், குண்டர் கும்பல்கள் அநாதையாகத் திரியும் தொழிலாளிகளின் குழந்தைகளைக் கடத்தி வேறிடத்திற்குக் கொண்டு போய் பிச்சையெடுக்க விடுகின்றன.

ஹூ என்பவர் காவ்சாங்தி என்ற ஊரில் பணியாற்றுகிறார். “இங்க கட்டிட வேலை ஆரம்பிச்சதுலயிருந்து, ஒருமாசமா இருக்கேன்,” என்று கூறும் இவர் ஒரு சமையற்காரர். மூன்று வேளையும் 20 தொழிலாளிகளுக்கு உணவு சமைப்பதே இவரது வேலை. “ரொம்ப கஷ்டமான வேல தான் கட்டட வேல. நாங்க விவசாயத் தொழிலாளிகள் தானே, எங்களுக்கெல்லாம் எளிதா செய்யற நாசூக்கு வேல கெடைக்காதே,” என்று சொல்லும் இவர் தினமும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்துகொண்டு காலையுணவு தயாரிப்பார். ஆறரைக்கு வேலை துவங்குகிறார்கள் தொழிலாளிகள். பகல் பன்னிரண்டு மணிக்கு மதிய உணவுக்கு ஏழுமணியிலிருந்து பம்பரமாகச் சுற்றுவார். மதியச் சாப்பாடு முடிந்ததும் ஒன்றரை மணிநேரம் மற்ற தொழிலாளிகளோடு சேர்ந்து ஓய்வெடுப்பார். பிறகு, எழுந்து இரவுணவுக்கு தயார் செய்வதில் ஈடுபவார். இரவுணவு ஏழு மணிக்கு.

ஷாங்காய் போன்ற பெருநகரங்களில் இப்படி மிக எளிய வாழ்க்கை வாழ்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். பெரும்பாலோர், ஆன்ஹூய், ஜியாங்ஸு போன்ற மாகாணங்களிலிருந்தும் அதை விடத் தொலைவிலிருந்து இடம்பெயர்ந்து வரும் விவசாயத் தொழிலாளிகள் தான். ஸார்ஸ் ((SARS) நோய் பரவி வந்த போது தனக்கும் நோயிருப்பதாக பாவனை செய்து இலவச உணவைப் பெற்ற, வேலையில்லாத ஹீபேய் தொழிலாளியின் கதை இணையவெளியில் உலவியதைப் பலரும் அறிந்திருக்கலாம். வசதிவாய்ப்புக்கள் கொண்ட உள்ளூர் நகரவாசிகள் இவர்களை எப்போதுமே அந்நியராகவே பார்க்கிறார்கள். இவர்களை மட்டுமல்ல, தொழில் திறன் கொண்ட வெளியூர்க்காரர்களையும் தான்.

தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கும் குபோ என்றவருக்கு மூன்று தலைமுறையாகத் தொடருகிறது ஹூகோவ்(குடியுரிமை அட்டை) பிரச்சினை. பேய்ஜிங்கில் வாழும் இவரது ஹூகோவ் ஹுன்னன் மாகாணத்தினது. ரூசெங் மாவட்டம் தான் இவரது பூர்வீகம். மிகச் சிறிய வயதாக இருக்கும் போதே இவரது தந்தை கட்டாயக் ‘கூட்டு’ இடப்பெயர்வில் குவாங்தோங்கிற்குச் சென்று பணியாற்றினார்.
குவாங்தோங்கின் ஹூகோவ் அட்டை பெறத் தகுதியான முதல் குழுவில் இருந்தார். 1992ல், குவாங்தோங் விவசாயி என்ற அவரது அடையாளம் குவாங்தோங் தொழிலாளி என்று மாறியது. அதற்கு அவர் கொடுத்த விலையோ 6000 யுவான்கள். 1994ல், 7200 யுவான்கள் செலவுக்கு இவர்களின் ஹூகோவ் மாற்றம் நிகழ்ந்தது. 1998ல் குபோ பேய்ஜிங் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

2002ல் பட்டம் பெற்ற பின்னர் எல்லோரும் பதைபதைப்புடன் பேய்ஜிங் ஹுகோவிற்காக, அரசாங்கப் பொதுத்தேர்வுக்குப் படித்து வேலை வேட்டையில் இறங்கியபோது குபோவிற்கு இரண்டு வேலைத்தேர்வுகள் கிட்டின. ஒன்று, 3000 மாத வருவாயில் சொத்து விற்பனை நிறுவனத்தின் ஊழியராகப் பணியாற்றுவது. மற்றது, 900 மாத வருவாய்க்கு பேய்ஜிங்கின் புறநகரப் பகுதி ஊர் ஒன்றில் அரசாங்க வேலையில் சேர்வது. நகர ஹூகோவுக்கு முக்கியத்துவம் தராமல், அதிக வருவாயையே தேர்ந்தெடுத்தார். திருமணம் செய்த பிறகு தான் தலைவலியே ஆரம்பித்தது. மனைவிக்கும் பேய்ஜிங் ஹூகோவ் இல்லாத நிலையில் சொந்த ஊருக்குப் போய் ‘ஜுன்ஷெங்ஜென்’ என்ற -குழந்தை பெறுவதற்காக ஒவ்வொரு சீனப்பெண்ணும் பெறும்- முன் அனுமதியைப் பெற வேண்டி வந்தது. மனைவி அதை வாங்கிய பிறகும் குபோ மகிழ்ச்சியாக இல்லை. பிறக்கப் போகும் குழந்தையின் நிலையை நினைத்து வருந்தினார். நகர ஹூகோவ் இல்லாதது மூன்றாவது தலைமுறையைப் பாதிக்கப் போகிறதே என்று மிகவும் கவலைப்பட்டார். குபோவின் குழந்தைக்கு அடுத்த சில ஆண்டுகளுக்குப் பிறகேனும் பேய்ஜிங் ஹூகோவ் கிடைத்ததா இல்லையா என்று தான் தெரியவில்லை.

கிராமத்தினர் கூடிவாழும் இயல்புடன் இருக்கின்றனர். 4 சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவு கொண்ட கிராமத்தினர் அனைவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருக்கிறார்கள். அயல், நட்பு மற்றும் உறவு வட்டங்களில் வாய்வழி செய்தியறிந்து வேலையில் சேர்வர். ஒரு கிராமத்திலிருந்து குறிப்பிட்ட நகருக்குப் போகும் சிலரைத் தொடர்ந்து, அந்த கிராமத்திலிருந்து இடம்பெயர நினைப்போர் எல்லோருமே அதே நகருக்குப் போகிறார்கள். பெரும்பாலும், அந்தக் கூட்டத்தினர் செய்யும் தொழிலும் ஒன்றாகவே அமைந்து விடுகிறது. நகரவாழ்க்கையிலும் குழுவுணர்வும், சகோதரத்துவமும் இவர்களிடம் இன்னமும் மிஞ்சியிருப்பதால் சமூக வலைப்பின்னல் இவர்களிடையே தொடர்ந்தும் உறுதியாகவே இருக்கின்றது. நகரங்கள் குறித்து இருக்கும் பதட்டங்களும், பாதுகாப்பில்லாத உணர்வும் இவர்களைப் புது இடங்களில் இவ்வாறு கூடி இருக்கச் செய்கிறது.

பேய்ஜிங் ஹூகோவ் இருந்தால் அதன் பலமே தனி தான். அதை வைத்திருப்பவருக்கு பல்வேறு சௌகரியங்களுண்டு. பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது மிக எளிது. சில பத்தாயிரங்கள் செலவிட்டுக் குறுக்கு வழியில் பெய்ஜிங் ஹூகோவை வசதியுள்ள சிலர் வாங்குவர். மத்திய அரசு அதிகாரிகளில் பெரும்பாலோர் வசிப்பதும் பெய்ஜிங்கில் தான். இவர்கள் வைத்திருப்பதோ பேய்ஜிங் ஹூகோவ். ஒவ்வொரு சட்டத் திருத்தத்தின் போதும் ‘பேய்ஜிங் ஹூகோவ்’ தனி கவனம் பெறுவது வழக்கம்.

எதிர்காலத்தில் நகரைவிட்டு வெளியேறி கிராமத்துக்கே திரும்பிப் போவோர் இருப்பார்களா? இல்லை கிராமததிலிருந்து நகரம் வருவோர் எண்ணிக்கை பெருகுமா? கையிலிருக்கும் ஹூகோவை வைத்துக் கொண்டே மேலும் சில சலுகைகளுக்கு விண்ணப்பிக்க எதிர்காலத்தில் முடியுமா? விவசாயிகளால் நகர காப்பீடுகள் வாங்க முடியுமா? வருடக்கணக்கில் நகரவாசிகளாக ‘பாவனை’ செய்ததை விட்டு விட்டு அவர்கள் சட்டப்படி நகரவாசியாக முடியுமா? இப்படி ஏராளமான கேள்விகள் சமூகத்தில் அடிக்கடி எழுப்பப்பட்டே வருகின்றன. ‘நடந்து கொண்டிருக்கும் உள்நாட்டு இடப்பெயர்வுகள் ஹூகோவ் அறிவியல் பூர்வமாகவும் இல்லை. தர்க்க பூர்வமாகவும் இல்லை என்று தொடர்ந்து நிரூபிக்கின்றன.’ என்று சில ஆண்டுகளுக்கு முன்னால் சீன நாளேடு ஒன்று சொன்னது.

பணக்காரர்களுக்குரிய பேய்ஜிங் முற்றிலும் வேறு மாதிரியானது. காதைப் பிளக்கும் அதிர்விசைக்கு இடையில் ஆங்காங்கே நடக்கும் ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம், கோலாகலம், அட்டகாசம், டிஸ்கோதே, ராக் அண்ட் ரோல், கராவோக்கி, மதுபானக் கடை, பார், பப், என்று இரவில் சீன நகரம் தூங்குவதே இல்லை. மேலைக் கலாசாரத்தை ஏற்று வாழும் இந்தப் பணக்காரச் சமூகம் மகிழ்ச்சியைத் தொலைத்து தான் விட்டது. பணத்துக்கும் வசதிகளுக்கும் இவர்கள் கொடுக்கும் விலை வேலைப்பளு, அதன் காரணமாக உருவாகும் மன அழுத்தம். ஈட்டிய பணத்தைக் கொண்டு மகிழ்ச்சியை வாங்கவே இவர்கள் முயல்கிறார்கள்.

இவ்விடங்களில் காவல் துறையில் அதிரடிச் சோதனைகள் அவ்வப்போது நடக்கும். சீருடையில்லாமல் கமுக்கமாக வந்து போகும் போலிஸ் இடம்பெயர்ந்து உழைக்கும் தொழிலாளிகளிடம் காட்டும் கடுமையையும் நெருக்கடியையும் காட்டாமல் தேவைப்பட்டால் மட்டுமே பணக்கார சமூகத்தை நாசூக்காக விசாரிக்கிறது. நகரவாசிகளின் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து விட்டு போலிஸ்தனத்தின் தீவிரத்தை வலுவில் குறைத்துக் கொண்டவராக ஏதேனும் கேள்விகள் கேட்டுவிட்டு துளைக்கும் பார்வையைப் பார்த்து விட்டுப் போய்விடுகிறார். வெளிநாட்டினரென்றால், ‘பாஸ்போர்ட்டின் பிரதியெடுத்து கையில் வைத்துக் கொண்டாலே போதுமே,” என்று சொல்லிவிட்டு, வழக்கமான சாதாரண கேள்விகளைக் கேட்டு பதிலைக் கேட்டது போன்ற பாவனையைக் காட்டி விட்டு நகர்கிறார்கள். பழைய செஞ்சீனத்தில் நடந்த காவல்துறையின் கடுமையான அணுகுமுறையெல்லாம் தற்காலத்தில் மறைந்து போயிருக்கிறது.

பாதசாரிகள் நடக்கும் பாதையும், சைக்கிள் பாதையும் இரு மருங்கிலும் இருக்க, மிக அகலமான சாலைகள் நகரங்களில் காணக்கூடியவை. பல பல்கலைக்கழகங்கள், தொழிற்கல்விக்கூடங்கள், பெரிய மருத்துவமனைகள், விரைவுச் சாலைகள், விமானநிலையம், மருத்துவக் கல்லூரிகள், விண்ணைத் தொடும் கட்டங்கள் எல்லாமே இருக்கும். பணக்காரர்கள் வசிக்கும் நவீன உயர்தர வீடுகள் இருக்கும் வட்டாரங்களிலிருந்து தூரத்தில் தான் தொழிற்பேட்டைகள் இருக்கும். தொழிலாளிகள் வசிக்குமிடங்களும் தூரம்தான்.

விதிமுறைக்குப் புறம்பாகக் குறிப்பிட்ட ஊர் ஹூகோவைக் கையில் வைத்துக் கொண்டு இன்னோர் ஊரில் வசிப்போர் அவ்வப்போது அரசுச் சலுகைகளை ஒழுங்கு செய்து கொள்ள சொந்த ஊருக்குப் போய் வருவார்கள். பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கவும் படிக்கவும் சொந்த ஹூகோவைப் பயன்படுத்துவதே உசிதம். குறுக்கு வழிகள் சட்டச் சிக்கலில் தான் தள்ளிவிடும். பேய்ஜிங் ஹூகோவ் இருந்தால் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துப் படிக்கப்போவது மிகச் சுலபம். கிராமங்களிலும் விவசாயத்துறையிலும் குடிமக்களைத் தக்க வைக்க உருவான ஹூகோவ் முறை அதில் தோற்றதே உண்மை.

முதலாளிகளும் அரசாங்கமும் பயனடையும் வேளையில் இடம்பெயர்ந்து உழைக்கும் ஊழியர்களும் பயன்பெறுகின்றனர். நகரங்களிலெல்லாம் ஒருவரின் வெற்றி இன்னொருவருக்கும் வெற்றி என்பதே நடைமுறை சூத்திரமாக இருந்து வருகிறது. ஏற்கனவே சில ஆண்டுகளாக நகரில் வாழ்ந்திருக்கும் பல்கலைக்கழக பட்டதாரிக்கும் பல ஆண்டுகள் உழைத்திருக்கும் தொழிலாளிக்கும் நகர ஹுகோவ் கொடுப்பதில் இருக்கும் நியாயம் அரசுக்கு உறைத்தது. 2002ல் ‘தற்காலிக ஷாங்காய் வசிப்புரிமை’ திட்டம், பரீட்சார்த்த ரீதியில் மூன்றாண்டுகளுக்கு மட்டும் அறிமுகப் படுத்தப்பட்டது,. ஏதேனும் தொழிற்கல்வி பெற்றிருக்க வேண்டும், குடும்பக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுத்ல், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாமலிருத்தல் என்பன போன்ற தகுதிகள் நகர ஹுகோவுக்கு விண்ணப்பிப்பவர்களிடம் வழக்கமாக எதிர்பார்ப்பவை . இருந்தாலும், இந்த முறையில் ஏழாண்டுகளுக்கேனும் நகரில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது கூடுதல் விதி. ஏழு ஆண்டுகளும் வருமான வரி ஒழுங்காகக் கட்டியிருக்க வேண்டும். அதிகாரிகள், “தகுதிகள் இருந்தாலே யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்,” என்றனர். ஆனால், உச்சபட்ச நகரவாசவுரிமை அனுமதி எண்ணிக்கை என்று எதுவும் நிர்ணயிக்காத நிலையிலும் அப்போது விண்ணப்பித்தோர் குறைவு. அதற்குத் தகுதி பெற்றோர் வெறும் 3000 பேர் தான்.

“ஷாங்காய் ஹூகோவ் கெடச்ச சந்தோஷத்துல இருக்கேன்,” என்றார் ஜூ ஸ்யூச்சின். ஜியாங்ஸு மாகாணத்திலிருந்து ஷாங்காய் வந்து 14 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். காவல் நிலையத்தில் வைத்து ஷாங்காய் ஹூகோவ் கொடுக்கப்பட்ட அன்றைக்கு லீ யிங் என்ற பெண்மணி அழுதே விட்டார். இவர் ‘மிகச் சிறந்த ஊழியர்கள்’ என்றடையாளம் காணப்பட்டு ஷாங்காய் ஹுகோவ் வழங்கப்பட்ட 40 பேரில் ஒருவர். இருந்தும், “இப்போதைக்கு அவருடைய ஹூகோவை நாம் நிறுத்தி வைப்போம். அவருக்கு நகரில் வீடு இல்லை. உற்றார் உறவினரும் இல்லை,” என்று தேசிய தொழிலாளர் விருது அளிக்கும் போது ‘திறன் சேவை மைய’த்தின் அதிபர் ஷென் ஜோங்ஹே சொன்னார்.

ஜியாங்ஸு மாகாணத்தின் கிராமத்திலிருந்து நகருக்கு வந்து கழிவுக்கால்வாய்கள் சுத்திகரிப்புத் துறையில் பத்தாண்டுகளாக வேலை செய்தவர் இந்தப்பெண்மணி. அதில் 21 பேர் ஹூக்கோவைப் பதிவேடுடன் பெற்றுக் கொண்டனர். இப்படி நாடு முழுவதும் மொத்தமாக 1000 பேர் கண்டறியப்பட்டனர். இவ்விருது பெற்றவர்கள் எல்லோருமே வேலைசெய்யும் நகரிலோ மாநகரிலோ அந்த ஹூகோவை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம். “இந்த உழைப்பாளிகளுக்கும், குடும்பத்தினருக்கும் நகர ஹூகோவ் கொடுப்பதே தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற ஒரு ஊக்குவிப்பு தான்,” என்கிறார் பல்கலைக்கழகத் துணைப் பேராசிரியர் வாங் சிஸின். “கிராம நகர மக்களிடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்க இது போன்ற திட்டங்கள் கண்டிப்பாக உதவும்.”

இதே போல பேய்ஜிங்கில் 63 தொழிலாளிகள் சிறந்த ஊழியர்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் நகரின் நிரந்தர வாசத் தகுதி பெற்றவர். இருப்பினும், 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 16 வெளியூர்காரர்களுக்கு பேய்ஜிங் ஹூகோவ் வழங்கப்பட்டது. பேய்ஜிங் ஹூகோவ் கொடுத்த பிறகும் தொழிலாளிகளில் நல்ல மாற்றங்கள் வருவது சிரமமாகவே இருக்கிறது. வழங்கப் படும் ஹூகோவ் அவர்களது பைகளின் அடியில் பத்திரமாகத் தூங்கும். தொடர்ந்தும் அவர்கள் மிக மோசமான சூழலில் தான் தங்குகிறார்கள். தொடர்ந்து இரண்டாம் குடிமகனாகவே இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
இந்தத் தொழிலாளிகளை வேற்றுமையுணர்வோடு தான் நகரவாசிகள் பார்க்கிறார்கள். என்றென்றைக்கும் நகர ஹூக்கோவால் இதை மாற்ற முடியாதென்றே அனைவரும் நம்புகிறார்கள். விதிகளில் திருத்தங்கள் எல்லாமே தொழிலாள வர்க்கத்தின் வாயை அடைக்கவென்று செய்யப்படும் வெறும் கண்துடைப்பு தான்.
நகர ஹூகோவைக் கொடுப்பதைவிட இந்தத் தொழிலாளிகளுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் சமூகம் கொடுப்பது தான் இடைவெளிகளையும் வேற்றுமைகளையும் களைய வழி வகுக்கும் என்பது அறிஞர்கள் கருத்து. அதில்லாமல் நகர ஹூகோவைக் கொடுப்பது வெறும் பாவனை தான் என்கிறார்கள்.
ஹூகோவ் சட்டங்களை இயற்றுவோரும் மாற்றித் திருத்துவோரும் மிகுந்த குறுகிய மனப்பான்மையும் பழமைவாதமும் கொண்டவர்கள் என்று சொல்லும் இன்றைய நவீன கணினி யுக இளையர், “இந்த ஹூகோவ் முறையே கிராமத்திலிருந்து வரும் ஏழைகளுக்கு எதிரான பாரபட்சப் போக்கு,” என்கிறார்கள். நன்கு படித்த நகரவாசிகளான இவ்விளைஞர்கள், “நகரின் பிரமாண்ட வளர்ச்சிக்குக் கைகொடுத்து வியர்வை சிந்தி உழைத்த, ஷாங்காயின் மீதம் 6 மில்லியன் இடம்பெயர்ந்த கிராமத் தொழிலாளிகளுக்கு எப்போது கிடைக்கும் நகர ஹூகோவ்?,” எனக் கேட்கிறார்கள். பெங் லீ என்ற 29 வயது பட்டதாரி புகழ்பெற்ற பேய்ஜிங் பல்கலைக்கழகத்திலிருந்து சட்டத் துறையில் பட்டம் பெற்றவர். இந்தப் பெண்மணிக்கு நல்ல நிறுவனத்தில் சிறந்த வேலை கிடைத்தும், அவர்கள் பேய்ஜிங் ஹூகோவ் வாங்கிக் கொடுப்பதாக உறுதியளிக்காததால் அதை ஏற்கவில்லை. பேய்ஜிங் ஹூகோவ் கிடைக்கும் என்கிற காரணத்தால் நகரின் விளிம்பில் இருக்கும் சிற்றூரில் அரசு வேலையை ஏற்றார்.

“இது எனக்கான வேலையே இல்ல. சம்பளமும் கம்மி. ஆனா, பேய்ஜிங் ஹூகோவ் கெடைக்கும்னு உறுதியாத் தெரியறதால ஏத்துகிட்டேன்,” என்கிறார் வேறொரு வெளியூர் பெண்மணி. இணையம் வழி நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி 88% பேர், ‘ஷாங்காய் மாநகரம் மேலுமதிக மக்கள் தொகையைத் தாங்காது’, என்று சொல்லியிருக்கிறார்கள். ஷாங்காய் நகரவாசிகளில் நிறைய பேர் வேறு விதத்தில் வேறொரு காரணத்துக்காக அதிருப்தியுற்றிருக்கின்றனர். “10 ஷாங்காய் வாசிகளில் 8 பேருக்கு வேலையில்லை. மற்றவர்கள் மாதம் வெறும் 1000 யுவான்கள் மட்டுமே சம்பாதிக்கின்றனர்,” என்று கூறும் இவர்களும் ஹூகோவ் விதிகளை எதிர்க்கின்றனர். “மற்ற மாகாணத்துலயிருந்து வரவங்க தான் நல்ல திறனுள்ள ஆட்கள, உழைப்பாளிகளுன்னு நெனைக்கிறது சரியா? சம்பளம் குறைவுன்னாலும் பரவால்லன்னு இவங்கள்ளாம் வந்து கிடுகிடுன்னு வேலைகள ஏத்துக்கறதனால இப்ப எங்களுக்கு வேலையில்ல,” என்று எரிச்சலாகிறார்கள் நகர வாசிகள். தொழில்நுட்பத்துறையில் உயர்திறன்கள் கொண்டவர்கள், அரிய திறன்கள் கொண்டவர்கள், அதிக தேவையிருக்கும் திறன்கள் கொண்டவர்களுக்கு நகர ஹூகோவ் கிடைப்பதில் பிரச்சினையே வருவதில்லை. வேலை கிடைப்பதிலும் தான்.
சமீபத்தில் வேலையிழந்த பேய்ஜிங் நகரவாசி ஷாங்காய் நகரவாசியைச் சந்தித்தாராம். “பாக்க நல்லா தான் இருந்தான். ஆனா, பெரிய மன்மதனொண்ணுமில்ல. பளிச்சுன்னு இருந்தான். ஷாங்காய் நகர மையத்துல வீடு வச்சிருக்கான். வீடு சின்னதாம். அதனால ஒரு பெண்ணும் அவன கல்யாணம் கட்ட முன்வர மாட்டேன்றாங்கன்னு ரொம்பத் தான் புலம்பினான். ஷாங்காய்ல பொண்ணுங்கள்ளாம் எக்கச்சக்க கண்டிஷன்ஸ் போடறாங்களாம். இதுக்கு பெத்தவங்களே தூண்டி விடறாங்களாம். பொண்ணும் மாப்பிள்ளையும் தேடற பெத்தவங்களப் பார்த்துக் கேக்கப் போறானாம், உங்க மக என்ன அவளோட முத்துப் பல் வரிசைய ஏலத்துல விடப் போறாளான்னு,..,” என்கிறார் பட்டதாரியான இவர். “நானும் வெளியூர் காரானா இருக்கக் கூடாதான்னிருக்கு. மாசத்துக்கு 10,000 சம்பாதிப்பேன். நானும் மணமகள் தேவைனு விளம்பரம் கொடுப்பேன். வெண்பற்கள், இயற்கையான மார்பகங்கள், குழந்தைகளிடம் பிரியம், ஆங்கில அறிவு, நாசூக்காக உணவுண்ணும் நளினம், நல்ல உடையுடுத்து அழகுணர்வு,. இப்டி என்னென்னவோ பட்டியலிட்டுக் கேப்பேன்,” என்று படித்த வெளியூர்காரர்களைப் பார்த்துப் பொருமுகிறார்.

shenzhen

அரசின் 2010-2015 ஐந்தாண்டுத் திட்டம், மாகாணங்களுக்கிடையில் இடப்பெயர்வுகளை ஊக்குவிப்பதுடன் உள்ளடங்கிய கிராமங்கள், மற்றும் ஊர்களில் எளியோருக்கு ஏற்ற வசதிகள் செய்து தரவிருக்கிறது என்பது நற்செய்தி தான். ஹூகோவ் முறையை இரவோடிரவாக ஒழித்து விடுவது கடினம். படிப்படியாகத் தான் அழிக்கப்படவேண்டும். வேலை சார்ந்த அதிருப்திகள் ஒருபுறமிருக்க, வாழ்க்கைத் துணையைத் தேடும் போதும் இளைஞர்கள் சிரமப் படுகிறார்கள். பேய்ஜிங் ஹூகோவ் பெறுவதற்கு திருமணம் கூட குறுக்குவழியாக அமைந்து விடுகிறது. வாழ்க்கைத் துணையின் கல்வி என்ன, வேலை என்ன, ஆரோக்கியம் எதுமாதிரி போன்றவற்றைக் கணக்கிலெடுப்பதுடன், அவர் வைத்திருப்பது ஹூகோவ் நகர ஹூகோவா என்பதும் முக்கிய மாகிறது.

இணையதளங்களில் வாழ்க்கைத் துணையைத் தேடுவோர் செய்யும், ‘161 செமீ உயரம், 26 வயதுப் பெண் எனக்கு, 1976 க்கும் 1983க்கும் இடையில் பிறந்த ஆண் வாழ்க்கைத் துணையாக வேண்டும். மூன்றே ஆண்டுகளில் மணமுடிக்க நினைக்கிறேன். முக்கியமாக, எனக்கு நகர ஹூகோவ் இல்லாத காரணத்தால் நான் மணக்கவிருக்கும் ஆணுக்கு பேய்ஜிங் ஹூகோவ் கண்டிப்பாக இருக்க வேண்டும்’, என்பது போன்ற அறிவிப்புகளைக் காணலாம். பலர் முகப்பிலேயே ‘பேய்ஜிங் ஹூகோவ் வைத்திருப்போர் மட்டுமே விண்ணப்பிக்கவும்’ என்றே போட்டு விடுகிறார்கள்.

திருமணம் செய்யும் போது தான் ஹூகோவ் முன்னால் வந்து பெரிய விஷயமாக நிற்கிறதென்றால் மணவிலக்கு பெறுவதிலும் அதே ஹூகோவ் பெரும்பங்காற்றுகிறது. அமெரிக்க குடிமகனான லீ, ஷாங்காயில் சில ஆண்டுகள் பணியாற்றினார். 2006வாக்கில், கலிஃபோர்னியாவிலிருக்கும் தன் தாயின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டதால் அவரைக் கவனித்துக் கொள்ளப் போய்விட்டார். ஷாங்காயில் இருந்த காலங்களில் இவருக்கு மணமான ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக இருந்தனர். மணவாழ்வு சதா சண்டையும் பூசலுமாக இருந்ததால், கணவனைப் பிரிந்து வாழ்ந்த அந்தப் பெண்மணியுடன் சிலகாலம் வாடகை அடுக்ககத்தில் வசித்த லீ, அமெரிக்கா திரும்பிய பிறகோ இணையம் வழி தனது காதலைத் தொடர வேண்டியதாயிற்று. அந்தப் பெண்ணை மணம் முடிக்க விரும்பும் லீக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. கணவனிடமிருந்து சட்டப்படி பிரியாத பெண்ணை மணம் முடிப்பது எப்படி?

மணவிலக்குக்கு விண்ணப்பிக்க அந்தப் பெண் மிகத் தயங்கினார். அதற்கும் வலுவான காரணம் உண்டு. கணவனும் சொந்த வீட்டில் தன் போக்கில் வாழ்ந்தார். அந்தப்பெண்ணுக்கு ஷாங்காய் ஹூகோவ் வழங்கப்பட்டதே அந்தத் திருமணத்தின் அடிப்படையில். மணம் முறிந்தால், அவர் நகர ஹூகோவை இழப்பார். இது தான் அவருக்கு இருக்கும் அச்சம். நகர ஹூகோவ் இல்லாவிட்டால் அமெரிக்கா போக விஸா விண்ணப்பிக்கும் போது கிடைக்க வழியில்லை. மணவிலக்கானால் மறுமணம் செய்யலாம்; மறுமணம் செய்தாலும் விஸா கிடைப்பதில் பிரச்சனை வரும் என்பதால் அமெரிக்கா போக முடியாது; ஷாங்காய்யிலேயே அந்தப்பெண்ணுக்கு வேறு வேலை கிடைப்பதிலும் பிரச்சனை வரும். சொந்தமாக வீடிருந்தால் ஷாங்காய் ஹூகோவைத் தக்க வைக்கலாம் என்ற யோசனை லீக்குத் தோன்றியது. அது சரிவருமா என்று ஆராய்ந்தார். விவாகரத்தான பிறகு, ஷாங்காய் ஹூகோவ் வைத்திருக்கும் அறைத் தோழி இருந்தால் ஷாங்காய் ஹூகோவைப் பிடுங்க மாட்டார்களா? பேய்ஜிங்கில் வாங்குவது போல ஷாங்காய் ஹூகோவைப் பெரும்பணம் கொடுத்து வாங்குவது சாத்தியமா? என்றெல்லாம் பலவாறாக யோசித்துக் குழம்பிய லீக்கும் அவரது காதலிக்கும் இறுதியில் என்ன ஆனதென்று தான் தெரியவில்லை.
சொத்துகளிலும் தொழில்களிலும் முதலீடு செய்வோருக்கு 1990களில் நகரங்களில் ஹூகோவ் கொடுத்த போது ஆரம்பித்த விதிமுறைகள் மீண்டும் திருத்தம் கண்டன. ஆயினும், பணத்தால் சாதிக்கும் புத்தி மக்களிடையே மறையவில்லை. பேய்ஜிங் ஹூகோவைக் குறுக்குவழியில் பணம் கொடுத்து வாங்குவது கிட்டத்தட்ட யானை வாங்குவதற்குச் சமம். அப்படியும் வாங்குவோர் உளர். அவர்கள் பணவசதி படைத்தவர்கள். அப்படி வாங்குவோரில் பெரும்பான்மையினர் பிள்ளைகளின் கல்விக்காகவே அதைச் செய்கிறார்கள். பள்ளிகளில் பேய்ஜிங் ஹூகோவ் வைத்திருப்போருக்கென்றே இட ஒதுக்கீடு வைத்திருக்கிறார்கள். சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடும் போய்விட்டால், பல்கலைக்கழகங்களிலும் சிறந்த பள்ளிகளிலும் இடம் கிடைப்பது மிகக் கடினம். அதே போல பேய்ஜிங் ஹூகோவ் வைத்திருப்போருக்கு தான் அரசாங்க வேலை வாய்க்கும். அரசு நிறுவனம் மற்றும் இராணுவம் போன்ற துறைகளில் வேலைக்குச் சேரவும் பேய்ஜிங் ஹூகோவ் அவசியம் வேண்டும்.

ஜெங்ஜோவ்விலிருந்து ஏழாண்டுகளுக்கு முன்பு நவீன வசதிகள் கொண்ட நாளிதழ் நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்து பேய்ஜிங் வந்த வாங் 42 வயதானவர். “எனக்குப் பிடிச்ச துறைல வேல செய்யணும்னு தான் இந்த வேலையவே ஏத்துகிட்டு இங்க வந்தேன்,” என்பவருக்கு இதழியல் துறையில் நல்ல வேலை இருந்தும் பேய்ஜிங் ஹூக்கோவ் கிடைக்கவில்லை. “ஏழெட்டு ஆண்டுகள்ள சீன ஹூகோவ்வில் திருத்தங்கள் வரும்னு ரொம்பவே நம்பிட்டேன்.” பன்னாட்டுப் பள்ளியில் பெரிய தொகையைக் கட்டி மகனைப் படிக்க வைக்கும் இவரைப் போலவே பலர் நல்ல கல்வி பொருளாதார வசதியிருந்தும் சரியான ஹுகோவ் இல்லாததால் வாழ்க்கையில் பல இக்கட்டுகளைச் சந்திக்கிறார்கள். “இரண்டாம் நிலைக் குடிமகனாகவே உணர்கிறேன்.”

இன்றைய நிலையில் 22மில்லியனுக்கும் அதிகமானோர் பேய்ஜிங் ஹூகோவ் இல்லாமல் இருக்கிறார்கள். தற்காலிக வசிப்புரிமை வைத்திருப்போர் 8 மில்லியன் பேர். “ஹூகோவ் என்பது பிராணவாயு போன்றது. நாம நம்ம போக்குல மூச்சு விட்டுகிட்டு இருக்கற வரைக்கும் அதைப்பத்தி நாம நினைக்கவே மாட்டோம். ஆனா, அது இல்லாததால பிரச்சனை வரும் போது தான் அதன் பலமே நமக்குப் தெரியும். முன்னாடியும் போக முடியாம பின்னாடியும் போக முடியாம பொறியில எலி சிக்கினாப் போல ஆயிடும். தப்பிக்கணும்னா குறுக்கு வழி தான். தள்ள வேண்டிய எடத்துல வேண்டியதைத் தள்ளி வேலைய முடிக்க முடிஞ்சா, வெற்றி தான்,” என்கிறார் வாங். “நானும் தானே மத்த நகரவாசிகளப் போல வருமான வரி உள்ளிட்ட எல்லா வரிகளையும் கட்டறேன். ஆனா, என் மகனுக்கு பேயிஜிங் பொதுப்பள்ளியில இடம் கெடைக்காது. அதுமட்டுமா? அடுக்ககம் வாங்கும் போது எனக்கு அரசு மான்யம்லாம் கிடையாது. ஏழு வருஷமா பேய்ஜிங்க்ல வேல பார்த்துட்டு வரேன்ல நானும். ஆனா, என் குடும்பத்தினருக்கான மருத்துவக் காப்பீடுகள் எனக்குக் கிடைக்காது. தொலைபேசி அல்லது இணைய சேவைகளுக்கு நா பணத்தை முன்கூட்டியே கட்டியாக வேண்டும். சில நகரப் பூங்காக்களுக்குள்ள போக மற்றவரை விட நான் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஏன் இந்த வேறுபாடு? எல்லாத்துக்கும் ஒரே பதில், அந்தக் குதிரை கொம்பான ‘பேய்ஜிங் ஹூகோவ்’ என்கிட்ட இல்லன்றது தான்.”

ஊழியர்களுக்கு நிறுவனங்கள் நகர ஹூகோவ் ஏற்பாடு செய்து கொடுக்கவென்று குறிப்பிட்ட ஒதுக்கீடுகள் இருக்கும். நல்ல கல்வியும், திறனும் அனுபவமும் கொண்டோரை ஈர்க்க நிறுவனங்கள் நகர ஹூகோவ் விண்ணப்பித்து வாங்கிக் கொடுப்பதாக உறுதியளிக்கிறார்கள். அதற்கு பதிலாக அதே நிறுவனத்தில் சில ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்று ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். சமீப ஆண்டுகளில் பேய்ஜிங் ஹூகோவ் பெறுவது மேலும் கடினமாக இருக்கிறது.

‘இடப்பெயர்வுகள் தவிர்க்க முடியாதவை. வருடங்கள் கடந்துருளும் போக்கில் ஏழை-பணக்காரர்களிடையே ஹூகோவ் ஏற்படுத்தியிருக்கும் இடைவெளியில் மாற்றமே இல்லை. மோசமாகத் தான் போகிறது,’ என்கிறார்கள் விமரிசகர்கள். திருமணப்பதிவு, பாஸ்போர்ட் விண்ணப்பம், தேசியப்பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு என்று எதாக இருந்தாலும் நகரத்தில் வசிக்கும் வேற்றூர்காரர்கள் சொந்த ஊருக்குப் போக வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரியான பாடநூல் பாவிக்கப்படுவதால் பொது நுழைவுத் தேர்வெழுதப் போகும் மாணவன் வினாத்தாளுக்கு பதில் எழுத முடியாமல் விழிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

ஷாங்காய், ஷென்ஜென், குவோங்ஜோவ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் சோதனை முயற்சியாக சமூகநலச் சேவைகளை வெளியூர்காரர்களுக்கும் அளிப்பதென்று முடிவானது. “இந்த மாற்றங்கள் மகிழ்ச்சியக் கொடுத்தாலும் ஹூகோவால பாதிக்கப்பட்ட ஆட்கள் தான் எல்லா எடத்துலயுமே இருக்காங்க. அடிப்படைச் சட்டத்தை மாத்தினா மட்டும் தான் குடிமக்களுக்கு மட்டுமில்லாம சீனப் பொருளாதாரத்துக்குமே நல்லது நடக்கும். குடிமக்களோட கோணத்துலயிருந்து பாக்கற வாய்ப்புகளும் அதிகரிக்கணும். அப்பதான், இடைவெளிகள் கொறஞ்சி சமத்துவம் வருவது சாத்தியம்,” என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஹென்னன்னில் இருக்கும் காய்ஃபெங்கிலிருந்து பேய்ஜிங் வந்து பணிபுரியும் முக்கியப் பொறியாளர் கு ரோங் என்ற 46 வயதானவர், 2000ல் தன் மகனைச் சொந்த ஊருக்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டியிருந்த போது மிக வருந்தினார். 2004ல் விண்ணப்பித்துப் பெற்ற வாசவுரிமைப் பதிவட்டையான ‘பச்சை அட்டை’யை வருடாவருடம் புதுப்பிக்கிறார். நிரந்தரவாசவுரிமை தோற்றது போலவே இந்த பச்சை அட்டை முறையும் படிப்படியாகத் தோற்றுக் கொண்டு தான் இருக்கிறத் என்கிறார். “என் மனைவியும் நானும் 10 வருஷமா தவறாம வருமான வரி கட்டறோம். பெத்தவனோட ஆதங்கத்தைப் புரிஞ்சிக்க அரசாங்கத்துக்கு முடியும்னு எனக்குத் தோணல்ல. சரி, அத விட்ருவோம். ஆனா, நியாயம், சம உரிமை, சமத்துவம்னெல்லாம் பிரசாரம் செய்யறத உண்மையாவே நடைமுறைப்படுத்த அரசு விரும்புதுன்னா இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கொண்டு வரணுமா, வேணாமா?”

ஷான்ஸியிலிருந்து பேய்ஜிங் வந்த லீ ஹுய் என்பவர் மின்சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றுபவர். சென்ற ஆண்டு வந்த போது தலைநகரின் விலைவாசியும் இளம்பட்டதாரிக்கு இருக்கக்கூடிய செலவுகள் பற்றியும் அவருக்குக் கவலை இருந்தது. வாடகைக்கு இடம் பிடித்த பிறகு பேய்ஜிங் ஹூகோவுக்கு விண்ணப்பிக்க நினைத்து வேண்டிய கோப்புகள் சேகரித்தவர் வீட்டுரிமையாளரிடம் வாடகை முறையான ஒப்பந்தப் பத்திரம் பதிவு செய்வது குறித்துப் பேசினார். அவரோ அது போன்ற ஒப்பந்தம் போடுவதென்றால் வாடகை கூடும் என்று சொல்லிவிட்டார். அப்போது நகரில் கூட்டு வாடகையில் இருப்போரை அதிரடியாகப் பிடித்து தண்டித்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, வேறு நண்பர்களோடு சேர்ந்து தங்கவும் அவருக்கு பயமாக இருந்தது. அறைகளைப் பிரித்து வாடகைக்கு விடுவதையும் வாகனம் நிறுத்துமிடத்தை வாடகைக்கு விடுவதையும் அரசாங்கம் தடை செய்திருப்பது பற்றிய கடுமையான விமரிசம் அவருக்கு இருக்கிறது. “மேம்பட்ட திறன் இல்லாதோரை நகரைவிட்டுத் துரத்தும் வழி தான் இது. அப்ப, எங்களப் போன்ற ஆட்களுக்கு வாழவே தகுதியில்லைனு பொருளா?”

மாத வருமானம் 3000. அதில் 650 வாடகைக்கும் 1500 உணவுக்கும் போய்விடுகிறது. பொதுப் போக்குவரத்து வாகனக் கட்டணம், மின்சாரம், குடிநீர் போன்றவை எல்லாவற்றையும் கட்டிவிட்டால் கையில் மிச்சம் ஒரு காசு கூட இருப்பதில்லை. பெருநகரத்தை விட்டு விட்டு சிறிய நகரத்துக்குப் போய்விடலாமா அல்லது சொந்த ஊருக்கே திரும்பி விடுவதா என்றெல்லாம் மிகவும் குழம்பினார். “மிகச் சிறந்த கல்வித் தேர்ச்சியோ அல்லது பெரும்பணக்காரப் பெற்றோரோ இருக்க வேண்டும். அல்லது அதிகாரிகளை நட்பு கொண்டிருக்கும் தந்தையாக இருந்தாலும் போதும். என்னைப்போன்ற ஆட்கள், கிடைப்பதை ஏற்று வாழவேண்டியது தான். அடுத்த மாதம் ஒரு வருட வாடகை ஒப்பந்தம் புதுப்பிக்கப் பட்டால் வீட்டுரிமையாளர் வாடகையை ஏற்றிவிடாமல் இருக்க வேண்டுமே என்பது தான் என்னுடைய இப்போதைய கவலை.,” என்று கூறும் இவர், “இயற்கை வளங்கள் மிகக் குறைவென்ற காரணத்தாலும் மக்கள் தொகை ஏற்றத்தாலும் பேய்ஜிங் தாக்குப்பிடிக்க மிகவும் சிரமப்படுகிறது என்பதென்னவோ உண்மைதான். அதுக்காக, வசதி குறைந்தவர்களை இப்படி நெருக்குவது என்ன நியாயம்? மாநகரமே உச்சபட்ச நுண்திறன் கொண்டோருக்கென்று ஒதுக்கப் பட்டிருக்கிறதா என்ன?,” என்று பொருமுகிறார்.
அரசாங்கத்தின் நேர்மறையான மாற்றங்களுக்கான முயற்சிகளைப் பயன்படுத்தாதவர்களும் நகரில் இருக்கிறார்கள். 2005ல் 20,000 யுவான் கட்டினால் வழங்கப்பட்ட ஷாங்காய் ஹூகோவை வாங்கத் தவறியதை நினைத்து எப்போதும் வருந்துகிறார் லியூ ஸின்னிங் என்ற ஆடவர். ஷாங்காய் வாசவுரிமைக்கு விண்ணப்பித்து ‘பச்சை அட்டை’யைப் பெற்றிருந்தவர் அதுவே எதிர்காலத்தில் தன்னைப் போன்ற பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுக்கப் போதுமானதாக இருக்கும் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டார். ஆனால், இப்போது, உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கவென்று 14 வயது மகனை ஹேலோங்ஜியாங் என்ற தனது சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டியதாகி விட்டது. அங்கே தான் அவன் அரசாங்கப் பொதுத் தேர்வையும் எழுத வேண்டும். “இப்டினு தெரிஞ்சிருந்தா நா ரெண்டாவது தடவை யோசிச்சிருக்கவே மாட்டேனே. 50,000 செலவானாலும் போகட்டும்னு ஷாங்காய் ஹூகோவை வாங்கியிருப்பேன். என்னோட ரத்தத்தை வித்தாச்சும் கட்டியிருப்பேன்,” என்று அங்கலாய்க்கிறார். “காசு கொடுத்து ஹூகோவ் வாங்காம வாசவுரிமை வாங்கியதுல இப்பவும் எனக்கு எந்த வருத்தமும் இல்ல. ஆனா, என்னோட தவறுக்கு என் மகன் தண்டனை அனுபவிக்கிறானேன்றத நெனச்சா தான் ரொம்ப வருத்தமா இருக்கு.”

பழஞ்சீனச் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட ஹூகோவ் இன்றைய சீனத்துக்குப் பொருந்துவதில்லை. மக்கள் இடம்பெயர்ந்து வேறிடம் போவதை ஹூகோவால் தடுக்க முடியாது. நகரில் போராட நினைப்போர் வேறு ஊர் ஹூகோவ் இருப்பதால் ஏற்படும் சிக்கல்களை நேரடியாக எதிர்கொள்ளவும் குறுக்குவழியில் சமாளிக்கவும் எளிதில் கற்றுக் கொள்கிறார்கள்.

சுற்றுச் சூழல் நோக்கில் சீன நகரம் ஒன்றும் அத்தனை கவர்ச்சியாக இல்லை. எங்கு பார்த்தாலும் சிமெண்ட் வாசனையுடன் புதிதுபுதிதாக முளைக்கும் கட்டடங்களுக்கிடையில் நெரிசல் மிகுந்த அடுக்ககப் பேட்டைகளும், பொலிவிழந்து பல்லிளிக்கும் தொழிற்சாலைகளும், புகையும் தூசுமான காற்றும் நகரங்களில் ரசிக்கும்படி இல்லை என்பதே சூழியல் வல்லுனர்களின் கருத்து. மின்சாரத்தைக் கடத்தும் மின்கம்பிகள் ஒன்றின் மேல் ஒன்றாக மிக கூட்டமாக இருப்பதைப் பார்த்தால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை நினைத்துப் பார்க்காமல் யாராலும் இருக்க முடியாது. நகரில் பூங்காக்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன. பெரும்பாலும் அவை சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை. சாலையோரங்களிலும் நகர நிலப்பரப்பிலும் மரங்களைத் தேட வேண்டியுள்ளது. இடிக்கப்படும் கட்டடங்கள் ஏற்படுத்தும் குழப்பங்களும் தூசும் சொற்களால் விவரிக்கக்கூடிய அளவில் இருப்பதில்லை.
சீனப் புத்தாண்டு முடிந்த பிறகு நகரக்குத் திரும்ப வேண்டிய 100 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் அனைவரும் நகருக்குத் திரும்பவில்லை. “உன் பசிக்கு தோசை வேணுமா? நீயே சுட்டுத் தின்னுக்க,” என்று சொல்வதைப் போல நகரைப் புறக்கணித்துவிட்டடனர். நிறுவனங்களில் புதிதாக ஆள் எடுக்கும் பணி முடுக்கிவிடப்பட, 100 பணியிடங்களுக்கு வெறும் 10 விண்ணப்பங்களே வந்தன. இத்தனைக்கும் 20% ஊதிய உயர்வை அறிவித்திருந்தன நிறுவனங்கள்.

பத்தாண்டுகளாக தலைநகரில் அடுமனையில் வேலைசெய்யும் சென் யூமேய் என்ற 46 வயது தொழிலாளி , பேய்ஜிங்கிற்கு அருகில் ஹீபேய் மாகாணத்தைச் சேர்ந்த தனது நகர அனுபவத்தைப் புகழ்ந்து சொல்லியிருக்கிறார். காலை ஐந்தரை முதல் மாலை ஆறு வரை வேலை செய்கிறார். கணவரும் பெருவணிக வளாகத்தில் சுத்திகரிப்பு ஊழியர். முதலாளியே தங்குமிடம் மற்றும் உணவு போன்ற செலவுகளுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்கிறார். சிறுவயது முதலே பாட்டி தாத்தா, அத்தை சித்திகளிடம் வளர்ந்த மகனைப் பார்க்க முடிவதில்லை என்பது மட்டுமே வருடக்கணக்கில் பிரச்சனையாக இருந்து வந்தது. “நிரந்தர வசிப்புரிமை வாங்கிக் கொடுக்கலன்னு எங்கள ரொம்பவே கோவிச்சுகிட்டான்.” விழாக்கால விடுப்பின் போது கூட அவனைப் போய்ப் பார்க்க முடியாதிருந்தது. இன்றைக்கு 22 வயதான மகன் பெற்றோருடன் வசிக்கிறான்.

இளமையுடனும் பிள்ளைகுட்டி இல்லாதவர்களாகவும் இருப்போருக்கு ஹூகோவ் பற்றிய கவலைகள் எதுவுமே இல்லை. “ஹூகோவப் பத்தி நா கவலப்படறதில்ல,” என்று சொல்லும் லீ ச்சியாங் என்ற 21 வயது இளைஞர் , பேயிஜிங்கிற்கு தென்கிழக்கிலிருக்கும் ஷான்தோங் மாகாணத்தைச் சேர்ந்தவர், இதற்கு மிகச் சிறந்த உதாரணம். கிராமத்திலிருக்கும் கோதுமை மற்றும் பூண்டுத் தோட்டவயல்களைப் பற்றி, “ரொம்ப போரடிக்கிறவை,” என்கிறார். இது போல 1980-1990களில் பிறந்த தலைமுறையைப் ‘புதிய தலைமுறை இடம்பெயர்ந்தோர்’ என்கிறார்கள் சீனத்தில். இவர்களுடைய பெற்றோர்களைச் சேர்ந்த தலைமுறை, உழைத்துச் சம்பாதித்து குடும்பத்துக்கும் உறவினருக்கும் பணமனுப்புவதில் திருப்தியடைந்திருக்கலாம். ஆனால், விவசாயம் சார்ந்த உழைப்பைப் பற்றியறியாத இந்த இளஞர்களுக்கு வாழ்க்கையில் பெரிய லட்சியங்கள் இருக்கின்றன. “நகரத்துல வசிக்கறதுல எந்தச் சிரமமும் இல்ல. எனக்கு இளமை இருக்கு. வாய்ப்புகளும் இங்க அதிகம்.’

அவரைப் போலவே ஜியாங்ஸியிலிருந்து பேய்ஜிங்கில் கணினி நிறுவனத்தில் வேலை பார்க்கும் கே ஃபாங் எனும் 22 வயதுப் பெண், “வேற எங்கயும் இவ்ளோ சம்பளம் கெடைக்கறது கஷ்டம்,” என்கிறார். “போன தலைமுறை ஆட்களுக்கு நிரந்தர வருமானம் வந்தாலே போதும். பெரிய இலட்சியங்களே இல்லாம இயந்திரம் போல வாழ்ந்தாங்க. பேய்ஜிங்ல இருக்கறது அவங்களுக்கு சிறைல இருக்கறதப்போலன்னு சொல்லிட்டிருந்தாங்க.” இவரைப் போன்ற இளைஞர்கள் நகரவாசிகளையும் அவர்களது பல உரிமைகளையும் பார்த்துப் பொறாமைப் படுவதில்லை. வாழ்க்கையை பாரமாகப் பார்க்காமல், கொண்டாடும் இவர்கள் வாழ்க்கையைத் தமது திருப்திக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் வாழத் தெரிந்து கொள்கிறார்கள். உலகப் பொருளாதாரச் சரிவையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில் இவர்கள் சமர்த்தர்கள்.

பேய்ஜிங் ஹூகோவ் வைத்திருப்போர் இரண்டு வீடுகள் கூட வாங்க முடியும். ஐந்தாண்டுகள் தொடர்ந்து வருமானவரி கட்டியிருக்கும் வெளியூர்க்காரர்கள் ஒரு வீடு வாங்கலாம். அதேபோல ஒரு கார் மட்டுமே வாங்கலாம். பேய்ஜிங் ஹூகோவ் வைத்திருந்தால் எத்தனை வாகனங்கள் வேண்டுமானாலும் வாங்கலாம். பேய்ஜிங் ஹூகோவ் இல்லாதோர் பேய்ஜிங்கின் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாது. வெளியூர்காரர்கள் எந்த முக்கியப் பத்திரங்களைப் பதிய வேண்டுமானாலும் சொந்த ஊருக்கு தான் போக வேண்டியிருக்கும். ஊழல்களையும் திருகுதாளங்களையும், குறுக்குவழிகளையும் ஏற்படுத்தியபடியே இருந்து வரும் ஹூகோவ் குறிப்பிட்ட பிரிவினருக்குக் காட்டியே ஆக வேண்டிய நியாயமான பரிவைக் காட்டுவதில்லை என்பது தான் மிக வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது. உடலின் கீழ்ப்பாகம் பாதிக்கப்பட்டிருக்கும் நகரவாசி இலவச ஸ்கூட்டருக்கே விண்ணப்பிக்கலாம். ஆனால், நகர ஹூகோவ் இல்லாதவர்கள் வாகன உரிமத்துக்கு கூட விண்ணப்பிக்க முடியாது.

சமீப வருடங்களில் உடற்குறைவுற்றோர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருகிறதென்று அவர்களுக்கான சங்கம் சொல்லி வருகிறது. இவர்களது குடும்பங்களின் ஆண்டுச் சராசரி வருமானம் 9,365.8 யுவான்னாக உயர்ந்துள்ளதாம். இது சென்ற ஆண்டை விட 9.2% அதிகம். ஆனால், இதெல்லாம் சாதாரண மக்கள் வாழ்க்கைக்குப் பொருந்தாத புள்ளி விவரங்கள் என்பது தான் உண்மை. “கடந்த ஆறு வருஷத்துல வாழ்க்கைத் தரம் கீழிறங்கி தான் போச்சு,” என்கிறார் 31 வயது லீ ச்சோங் என்பவர். ஹென்னனிலிருந்து நகருக்கு வந்து பிழைக்கும் இவரது உடல் இடுப்புக் கீழே செயலற்றிருக்கிறது.

கணிப்பொறி பழுது பார்க்கும் பணியில் இருக்கும் லீ என்பவர் நடக்க முடியாதவர். கடந்த அக்டோபர் 7 வரை வாகனப்பதிவு செய்யாமலே மூன்று சக்கர மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி வந்தார். பெட்ரோல் நிரப்பும் இடங்களில் சட்டப்படி பதிவாகி இலக்கம் ஒட்டப்படாத வாகனங்களுக்கு பெட்ரோல் கொடுக்கக்கூடாது என்ற அறிவிப்பை முனிஸிபல் பொதுப்பாதுகாப்புத் துறை வெளியிட்டது. “என் குடும்பத்த நா எப்பிடி காப்பாதுவேன்னே தெரில. வெளியிடங்கள்ள திரிஞ்சலஞ்சி தானே நா கணினிக்கான உதிரிபாகங்கள வாங்கிட்டு வரணும்,” என்று பரிதாபமாகச் சொல்லும் இவருக்கு நகர ஹூகோவ் இல்லை. 2004ல் கிடைத்த தற்காலிக வசிப்புரிமை மட்டுமே வைத்திருக்கும் இவருக்கு வாகனப்பதிவுக்கு விண்ணப்பிக்கவே முடியாது என்ற நிலை. இதே போல உடற்குறைபாடுடைய நிறைய பேர் நகரில் தவிக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

“எனக்கும் அவரோட உடல்குறையவும் குடும்ப நெலமையைவும் பார்க்க ரொம்பப் பரிதாபமா தான் இருக்கு. ஆனா, ஹூகோவ் விதிமுறைகளின் படி பேய்ஜிங் ஹூகோவ் இல்லாத ஒருத்தருக்கு உரிமம் கொடுக்க முடியாதே,” என்கிறார் அதிகாரி. “இவங்களப் போலவே இருக்கற, ஆனா பேய்ஜிங் ஹூகோவ் வச்சிருக்கறவங்களுக்குக் கெடைக்கற சலுகைகள் எதுவும் இவங்களுக்குக் கெடைக்காதுன்றது தான் இன்றைய நெலமை. அதுக்கு நா ஒண்ணுமே செய்ய முடியாதே.”

ஹூகோவ் இவர்களைப் போன்றோருக்கு கூட எந்த விதி விலக்கையும் அளிப்பதில்லை என்பது பலருடைய விமரிசனமும் அதிருப்தியும். ஊழலை வளர்க்கும், ஊழலுக்குப் பணியும், இடம் கொடுக்கும் ஹூகோவ் இந்தச் சிறிய அனுமதியை மறுப்பது நகைமுரண் தான். ஹூகோவின் இது போன்ற அபத்தங்கள் அடிப்படைச் சட்டங்களில் திருத்தங்களும் மாற்றங்களும் அவசியம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்கின்றன.

இயல்பாக வளர்ந்து பெருகிய பண்டைச் சீன நகரங்களில் பலவித ஏற்ற தாழ்வுகளும் சிறுமையும் இருந்திருக்கலாம். ஆனால் அங்கு மனிதருக்குத் தம் முயற்சியால் தம் விருப்பத்துக்கு ஏற்ப, நுழைவும், விட்டு நீங்குவதும், வாழ்வும், வளம் பெறுவதும் சாதிக்கக் கூடியவையாக இருந்திருக்கும். நவீன நகரங்களில் இன்றோ, அப்படி ஒரு உரிமையோ, திறப்போ சாதாரண மனிதருக்குக் கிட்டுவதில்லை, ஒரு சிறு சதவீத மேல்தட்டினருக்கோ, அல்லது லாட்டரிச் சீட்டு போல உரிமைகளை வென்றவருக்கோதான் கிட்டுகின்றன என்பது ‘செஞ்சீனத்தின்’ பெரும் முரண்களில் ஒன்று..

கூட்டு இடப்பெயர்வு என்பது சீனாவில் சில பத்தாண்டுகள் பலமுறை நிகழ்த்தப்பட்ட கட்டாய உழைப்புத் திட்டம். நகரங்களில் இருந்த மத்திய வர்க்கத்தினரும், கிராமங்களில் இருந்த பல படித்த, சிறு உடைமையாளர்களும் வலுக்கட்டாயமாக பல நூறு மைல்களிலிருந்து ஆயிரம் மைலகள் தள்ளிக் கூட அனுப்பப்பட்டு, உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். அப்படி அனுப்பப் பட்டவர்களில் ஏராளமானோர் உணவும், இருப்பிடங்களும் இல்லாது கடும் பட்டினிக்கு உள்ளாகி இறந்தனர். இது மாவொயிசத்தின் பெரும் களப்பலி. இந்தக் களப்பலிகளில் சுமார் 300 லட்சம் பேர் (30மிலியன்) இறந்ததாக இன்று பன்னாட்டு மக்கள் தொகை நிபுணர்களால் கணக்கிடப்படுகிறது.