என் ஆன்மாவின் இரட்டையை தேவாலயத்துக்கருகில் இருக்கும் குறுகலான தெருவில் விடியற்காலை சந்தித்தேன். நகரெங்கும் விறகுப் புகையின் வாசம். களிமண் ஓடுகள் மழைத்தூறலில் மினுமினுத்துக்கொண்டிருந்தன. ஐநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலச் சுவர்கள் ஈரப்பசையை ஒழுக்கிக் கொண்டிருந்தன. தேவாலய மணிகள் உரக்க ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. வில்நியஸ் நகரத்துக்குள் நான் நடந்தும் பயணம் இரந்தும் (hitch-hike) நுழைந்திருந்தேன். உயிரோடிருந்தேன். சந்தோஷத்தில் கிட்டத்தட்ட அழுதேவிட்டேன்.
அதற்கு முதல் நாள், ஒரு ரஷ்ய ட்ரக் ட்ரைவர், ஆளற்ற நெடுஞ்சாலையில் ஒரு பாலத்துக்கருகில் என்னைத் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டார். என் ட்ரைவர் பரவாயில்லையாயிருந்தார். கண்ணியமாகவும், அமைதியானவராகவும் அவர் இருந்தார். ஆனால் அவர் வண்டிக்குப் பின்னால் இன்னொரு ட்ரக் பின்தொடர்ந்து வந்தபடி இருந்தது. அந்திக்கருக்கலில், திடீரென்று நீண்ட ஒரு மண் பாதையில் வண்டியைத் திருப்பினார். அப்பாதை நீர்நிலைக்கு அருகிலிருந்த ஒரு கீக்கிடமான பிக்னிக் இடத்துக்கு இட்டுச் சென்றது. “ஓய்வு நேரம்” – என் ட்ரைவர் விளக்கினார். சிறிய உருவம் கொண்ட ஒரு முரடன் இரண்டாவது வண்டியிலிருந்து எகிறிக்குதித்து எனக்கு ‘ஹலோ’ சொன்னான். ஒரு ப்ரொபேன் அடுப்பின் மீது சட்டியை வைத்து, இரண்டு வோட்கா பாட்டில்களையும், மூன்று சிறு சேற்றுக் குழம்பாயிருந்த மதுக்குப்பிகளையும் (எடுத்து வைத்தார்கள். பிறகு ரொட்டித்துண்டுகளையும், இறைச்சித்துண்டுகளையும் தங்களுடைய அழுக்கான நகங்களைக் கொண்ட அசுத்தக் கைகளால் எடுத்து, பெரிய கைப்பிடிக்கத்திகளால் துண்டுபோடத் தொடங்கினார்கள். அவர்கள் இருவரிடமும் கைப்பிடிக்கத்தி இருந்தது.
ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்ற இனம்புரியாத அச்சம் என் நெஞ்சில் பரவியது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ஏதோ நான் எதிர்பார்த்தபடிதான் அங்கே எல்லாம் நடந்துகொண்டிருப்பதைப் போல, அவர்களோடு இயல்பாக அரட்டையடிக்கத் தொடங்கினேன். மாஸ்கோ வழியாக எப்போதாவது வண்டியை ஓட்டிச் சென்றிருக்கிறார்களா, அவர்களுக்குக் குடும்பம் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டேன். என் எட்டு வயது மகனைப் பற்றி அவர்களிடம் கூறினேன். (அவன் அப்போது சிறுவர்களுக்கான சானடோரியத்தில் இருந்தான்.) வழிப்போகும் வாகனங்கள் வழி பயணிப்பது குறித்து ஒரு பத்திரிகைக்காக விபரங்கள் சேகரித்துக்கொண்டிருப்பதாகவும் கூறினேன். (“ஆம். நான் ஒரு வேலையாய் வந்திருக்கும் தொழில்முறை பத்திரிகையாளர். இதோ என் நோட்டுப்புத்தகம்!”) நல்லவேளை, அவர்கள் என்னிடம் அடையாள ஆவணம் எதையும் கேட்கவில்லை. ஏனென்றால் அப்படியெதுவும் என்னிடம் இருந்திருக்கவில்லை. நான் வழிப்போகும் வாகனங்களில் பயணித்ததற்கான உண்மையான காரணம், என்னிடம் வேலையோ, பணமோ இருந்திருக்கவில்லை என்பதே.
நாங்கள் சாப்பிட்டோம். அவர்கள் வோட்கா மொத்தமும் குடித்து முடித்தார்கள். நான் மது அருந்துவதை நிறுத்தியிருப்பதாகச் சொன்னேன். அப்போது அந்த முரடன் (என் ட்ரைவர் மரத்துக்குப் பின்னால் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார்) அவர்கள் இருவரில் யாரோடு நான் படுத்துக்கொள்ளப்போகிறேன் எனக் கேட்டான். ”அலெக்ஸீயுடன்தான், பிறகு வேறு யாரோடு!” என்றேன். (அலெக்ஸீ என் ட்ரைவர்.) அந்த முரடன் பதில் வாதம் செய்யவில்லை. ஏனென்றால் நான் அலெக்ஸீயின் பயணி. அலெக்ஸீ திரும்பிவந்தபின் நாங்கள் வண்டிக்குள் ஏறும்போது, அவர் ஒரு வார்த்தை கேட்டார். என்னால் முடியாது, மன்னிக்கவும் என மறுத்துவிட்டேன். அவர் வற்புறுத்தவில்லை. அவர் களைப்பாகவும், போதையிலும் இருந்தார். நான் மேல் தட்டில் ஏறி, என் ஸ்வெட்டரால் போர்த்துப் படுத்துக் கொண்டேன். அலெக்ஸீ கீழே படுத்திருந்தார். நான் இருந்த இடத்திலிருந்து என்னால் தன் வண்டியிலிருக்கும் அந்த முரடனைப் பார்க்க முடிந்தது. கிளர்ச்சியடைந்த புழுவைப் போல், உடலின் பரிமாணங்களுக்குப் பொருந்தாத தன் சிறு தலையை அசைத்து அசைத்து நாங்கள் என்ன செய்கிறோம் எனப் பார்த்தபடி இருந்தான். இருட்டுவதாகத் தெரியவில்லை. பால்டிக் கோடை இரவின், திகிலூட்டும், முடிவில்லாத அந்திக் கோடையாய்த் தொடர்ந்தது காலம்.
காலை ஐந்து மணிக்கு அலெக்ஸீ நீரோடையை நோக்கி நடந்து சென்றார். நான் பயணியர் இருக்கையில் நகர்ந்தமர்ந்தேன். எங்கே என்னை அங்கேயே விட்டுவிட்டுப் போய்விடுவார்களோ என்ற அச்சத்தில் நான் ட்ரக்கை விட்டுக் கீழே இறங்கவேயில்லை. அலெக்ஸீ திரும்பி வந்து அமைதியாக வண்டி ஓட்டத்தொடங்கினார். நகரம் வந்ததும் நான் அவருக்கு நன்றி சொல்லி இறங்கிக்கொண்டேன். மறுபடி சொல்கிறேன்: அப்போது தூறிக்கொண்டிருந்தது. காற்றில் புகை வாசனை.. நான் பனி படர்ந்திருந்த குறுகலான தெருக்களில் சந்தோஷமாக நடந்தேன். முன்பு கதகதப்பான ட்ரக்கில் இருந்ததால், இப்போது குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தேன்.
அப்போது அவள் எதிர்பட்டாள். தன் தலையைச் சுற்றி கர்ச்சீஃப் கட்டியிருந்தாள், சுமாராக உடையணிந்திருந்த, கிட்டத்தட்ட ஐம்பது வயதிருக்கும் பெண் அவள். நான் அப்பெண்ணிடம், எந்த நம்பிக்கையும் இல்லாமல், காசில்லாத பிச்சைக்காரி ரொட்டித்துண்டை எங்கே வாங்குவது என்று கேட்பது போல் அருகே ஹோட்டல் எதுவும் இருக்கிறதா என்று கேட்டேன். அவள் அதை உடனே புரிந்துகொண்டு, தன் உடைந்த ரஷ்ய மொழியில், ஹோட்டல்கள் அனைத்தும் நிரம்பி விட்டன என்றும், எனக்கு அறை எதுவும் கிடைக்காதென்றும் சொன்னாள், நான் விரும்பினால் அவள் வீட்டிலேயே தங்கிக்கொள்ளலாம் என்றும் கூறினாள்.
நான் திகைப்புற்றேன் விரும்பி உபசரிக்கக்கூடிய ரஷ்யர்களில்கூட இப்படிப்பட்ட அழைப்பு ஒரு விதிவிலக்காகத்தான் இருக்கும். ஒரு குளிர்காலத்தில், துலா (Tula) நகரில் இரு சிறுமிகள் நடந்துகொண்டதைப் போல. நான் அச்சிறுமிகளிடம் இரவு படுத்துக்கொள்ள ஒரு இடம் வாடகைக்குக் கிடைக்குமா என்று கேட்டபோது, விடுதிக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக, அவர்கள் என்னைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். வீட்டில் பாட்டியும், அப்பாவும் இருந்தார்கள். (அவர்களுடைய அம்மா, அந்த வீட்டில்தான், அந்த வறிய அறையில்தான், ஒரு மங்கிய விளக்கொளியில் இறந்திருந்தார்.) அவர்களில் ஒரு சிறுமி தன் சோஃபா படுக்கையை என்னோடு பகிர்ந்துகொண்டாள். அந்த சோஃபாவையும், அச்சிறுமிகள் என் மீது வைத்த எளிய நம்பிக்கையையும் நினைக்கும்போது இப்போதும் என் மனம் வலிக்கிறது.
அந்த அசாதாரண வேளையில் தன்னுடைய சிறிய, மிகத் தூய்மையான அபார்ட்மெண்ட்டுக்கு அழைத்துச் சென்ற அந்த லித்துவேனியப் பெண்ணை நினைக்கும்போதும் எனக்கு அப்படித்தான் இருக்கிறது.அவளது இடம் உண்மையில் ஒரு இருதள வீட்டின் பரணின் ஒரு சிறு பகுதிதான். அவள் வீடு வெகு சில பொருட்களையே கொண்டதாக இருந்தது. அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே அங்கு இருந்தன. தொட்டிச்செடிகள், வழிவழியாக வந்து சேரும் உபயோகமற்ற குடும்பப் பொருட்கள், சட்டமிடப்பட்ட படங்கள் போன்ற எதுவுமே இல்லை. பிறகு எனக்கு அப்பெண் தேநீரும், பிஸ்கட்களும் தந்தாள். (வெண்ணெய்யையும், சர்க்கரையையும் அவள் என் பக்கம் தள்ளியபடி இருந்தாள்.) பிறகு தன் வீட்டுச் சாவியைத் தந்து, வீட்டின் முழு முகவரியையும் சொன்னாள். நான் அந்த வீட்டிலிருந்து கிளம்பி, அழகான பழைய ஊருக்குள், சிறு தொப்பிகளணிந்த நளினமான பெண்கள் கூட்டமாயிருந்த நகரை நோக்கி நடந்தேன்.
அந்நகரில் முக்கியமாயிருந்த ஒரு லித்துவேனிய பத்திரிகையின் தலைமை எடிட்டறைப் பார்க்கச் சென்றேன். ஒரு வார காலமாக – நடைப்பயணம், ட்ரக்குகள், கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள், ஏன் ஒருமுறை ஒரு திருமண வேன், (அவ்வண்டியில் இரண்டு மணி நேரமாக நான் லித்துவேனியப் பாடல்களைக் கேட்டிருந்தபின், ஒரு ஜிப்ஸி பாடலைப் பாடவும் பணிக்கப்பட்டேன்), இப்படி பல்வேறு வாகனங்களில் பயணித்து இங்கே – சௌகரியமான ஒரு அலுவலகத்தில், புத்தகங்கள், டைப்ரைட்டர்கள், சகாக்கள் இடையே அமர்ந்திருந்தேன். எடிட்டர் என்னைக் கனிவாக வரவேற்றார். லித்துவேனிய மொழியின் சிறப்பியல்புகளைப் பற்றி அவர் ஒரு நெடிய உரையாற்றினார். (அவர் சொன்னபடி, லித்துவேனிய மொழி சமஸ்கிருதத்தோடு நேரடித்தொடர்பு கொண்டது என்று அறிந்தேன்.) அப்படி அவர் உரையாற்றியபோதும் அவருக்கு நான் ஒரு வேலையாகத்தான் அங்கு வந்திருக்கிறேன் என்பது தெரிந்திருந்தது. அவர் நினைத்ததும் சரிதான். நான் அங்கு எந்த உபயோகமுமற்ற என் ரஷ்ய மொழிகதைகளின் கையெழுத்துப் பிரதிகளைக் கொடுப்பதற்காகத்தான் சென்றிருந்தேன். அவர் அவற்றை பவ்யமாகப் பெற்றுக்கொண்டார். என் முகவரியும் அதில் இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொண்டார். அடடா, என்ன ஒரு அறியாமை! அது 1973-ஆம் வருடம். இரண்டே இரண்டு பிரசுரங்களுக்குப் பின். என் ஊரில், ரஷ்யாவில் நான் ஒரு பதிப்பிக்கப்படக் கூடாத எழுத்தாளராக (writer non grata) அறிவிக்கப்பட்டிருந்தேன் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை- என்னை எந்தப் பத்திரிகையும் அப்போது தொடத் துணியவில்லை. அடுத்த பதினைந்து ஆண்டுகள் சென்றபின்தான் என் கட்டுரைகளின் முதல் தொகுப்பு வெளியிடப்பட்டது. என் கதைகளைப் பெற்றுக் கொண்ட போது அவருக்கு இது எதுவும் தெரியவில்லை, மூன்று மாதங்களுக்குப் பின் எனக்கு அவரிடமிருந்து 32 ரூபிள்களும் (அப்போது எனக்கு அது பெரிய தொகை) ஒரு கடிதமும் வந்தது. என்னுடைய கதைகள், ஒரு பெண்கள் பத்திரிகையில், லித்துவேனிய மொழியில் வெளியாகியிருக்கின்றன என்று மன்னிப்பு கோரும் பாவனையில் அவர் எழுதியிருந்தார்.
அதன் பின் அந்நாளில், நான் மழையில் வில்நியஸ் நகரைச் சுற்றி வந்தேன். ஒரு உணவகத்துக்குள் தயங்கி நுழைந்தேன். அக்கடையில் வட்டத்தொப்பிகளும், கையுறைகளும் அணிந்த பெண்கள் சிறு காஃபிக் கோப்பைகளுன் அமர்ந்திருந்தார்கள்; சிறு கேக் துண்டுகளை உதடுகளையசைக்காமல் மென்றுகொண்டிருந்தார்கள். நான் விலையைக் கண்டு மிரண்டவளாய் மெனுவை வெறித்திருந்தபோது ஒரு பணிப்பெண் என்னை நெருங்கினாள். எனக்கு ஒவ்வோன்றையும் கணக்கு பண்ணி செலவு செய்தாக வேண்டிய நிலைமை. தினம் உணவுக்காக ஒரு ரூபிளும், தங்குமிடத்துக்காக ஒரு ரூபிளும்தான் என்னால் செலவு செய்யமுடியும். “முகத்தை உயர்த்து! நீ ஒரு ரஷ்ய எழுத்தாளர். அதை மறந்துவிடாதே!” எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
சுத்தமான, கதகதப்பான சிற்றுண்டிச்சாலையிலிருந்து திரும்பவும் சில்லிட்ட மழையில் என் ஈரக் காலணிகளில். இப்போது மாலை நேரம் ஆகிவிட்டிருந்தது… அடர் ஊதா நிற வானம்ம் மினுமினுக்கும் சாலை நீர்த் தேக்கங்கள், கடை ஜன்னல்களின் அபத்த ஆடம்பரம். திடீரென்று திகில் கவ்விய கணம்: இந்த அந்நிய நகரில் அந்தச் சிறிய அபார்ட்மெண்ட்டை எப்படித் தேடிக்கண்டுபிடிப்பேன்? இருள் சூழ்ந்துகொண்டிருந்த வேளையில், எப்படியோ சரியான பாதையைக் கண்டுபிடித்து, முடிவற்ற மலையேற்றங்களையும், சீரான புதர்களையும், இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த தெருவிளக்குகளையும் கடந்து சரியான வீட்டைக் கண்டுபிடித்தேன். அந்த வீட்டின் மாடிப் படிகள் பழைய மரம் மற்றும், புழுதியின் மணம் கொண்டிருந்தன.
இரவுணவோடு நான் வரவேற்கப்பட்டேன். எனக்கு வெட்கமாக இருந்தது. அந்த உணவகப் பணிப்பெண்ணிடம் நான் மதிப்பிழந்துவிடக்கூடாதென்று, என் உணவுக்கான ரூபிளை காஃபியிலும், கேக்கிலும் செலவழித்திருந்தேன். இப்போது என்னிடம் படுக்கைக்குத் தருவதற்கு மட்டுமே பணம் இருந்தது. இதை நான் எனக்கு இடம் தந்திருந்தயத்வீகாவிடம் வெட்கம் படர்ந்த முகத்தோடு விளக்க முற்பட்டேன். அவள் என் மறுப்புகளைப் புறந்தள்ளி, இரவுணவை (dumplings with sour cream) என் தட்டில் கொட்டினாள். ஆஹா… என்ன ஆனந்தம், சூடான தேநீர்! அந்த வீட்டைக் கண்டுபிடிக்க நான் குளிர்மழையில் இரண்டு மணி நேரமாகத் தேடியலைந்திருந்தேன்.
இரவுணவுக்குப் பின், அவள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். ஆம், என் பயணத்தில் நான் பல லித்துவேனிய நகரங்களைக் கடக்க வேண்டியிருந்தது. பனவேஜீஸ்? ஆம், உண்மையில் அந்நகர் வழியாகவும் பயணித்திருந்தேன். அங்கே ஒரு பிரபலமான நாடகக் கம்பெனி இருந்தது, என்றேன். அக்கம்பெனிக்கு என் நாடகத்தைக் கொடுக்க வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் அக்கம்பெனி மூடப்பட்டிருந்தது.
“அது சரிதான். அப்படியொரு தியேட்டர் அங்கே இருக்கிறது. நான் பனவேஜீஸ் நகரைச் சேர்ந்தவள்தான்,” என்றாள் யத்வீகா.
“ஓ! நீ கொடுத்து வைத்தவள். எவ்வளவு அழகான நகரம், கண்ணைக் கவரும் பூங்காக்கள், ஒவ்வொரு ஜன்னலிலும் பூக்கள்…”
“ஆம். நான் பனவேஜீஸ் நகரைச் சேர்ந்தவள்தான்,” என்று மீண்டும் சொன்னபடி, சர்க்கரை, வெண்ணெய், புளித்த க்ரீம் என மேசை மீதிருந்த பொருட்களை செஸ் காய்களை நகர்த்துவதைப் போல நகர்த்திவைத்துக்கொண்டிருந்தாள். “என்னால் அங்கே வசிக்கமுடியவில்லை. அதனால்தான் இங்கே வந்துவிட்டேன். இந்த இடத்தை வாங்கிவிட்டேன்.”
“நல்லது” என்று இயந்திரத்தனமாகச் சொன்னேன், ஏதோ பிரச்சினை இருக்கிறதென்பதை அனுமானித்தபடி.
“நான் அங்கிருக்க முடியாது, என் வீடு எரிந்து சாம்பலாகிவிட்டது.”
நிசப்தம். என் நாக்கு உறைந்துவிட்டது.
”நான் அன்று காலை மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தேன். நான் இல்லாதபோது அவர்களெல்லோரும் தூக்கத்திலேயே எரிந்து இறந்தார்கள். என் கணவர், என் மகள், அவள் மகன், அவள் கணவர். அன்றிலிருந்து என்னால் அழ முடிவதில்லை.”
நிசப்தம். ஒற்றை விளக்கிலிருந்து கசியும் சிறு வெளிச்சம். துலா நகரின் அம்மா இல்லாத வீட்டைப்போல. நான் என்ன சொல்லமுடியும்?
யத்வீகாவுக்குத் தன் மீது அதிருப்தி இருப்பது அவள் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. அவள் தன் ரகசியத்தை அவசரப்பட்டு சொல்லிவிட்டாள். அவள் சரியான தருணத்துக்காகக் காத்திருந்திருக்க வேண்டும். அரட்டையடித்திருக்கவேண்டும், அமைதியாக இருந்திருக்கவேண்டும். ஆனால் அவள் எப்படி அவ்வாறு இருந்ருந்திருக்க முடியும்? அவள் எப்போதும் மௌனமாக இருந்திருக்கிறாள். தன் பக்கத்துவீட்டுக்காரர்களிடம் அவள் எதுவும் சொல்வதில்லை. அவர்கள் இந்தத்துயரத்தை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பனவேஜீஸ் நகரின் பழைய பக்கத்துவீட்டுக்காரர்களைப் போலவே இவர்களும் அவளைத் தவிர்க்கத் தொடங்கியிருப்பார்கள்.
ஒவ்வொருநாள் காலையிலும், ஆறு மணிக்கு – படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தத் தன் அன்பான குடும்பத்தை விட்டுக் கடைசிமுறை வெளியேறிய அதே நேரத்தில் – அவள் தன் புது வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறாள். நான் அவளை முதல் முறையாகப் பார்த்த இடத்துக்கு, அந்த தேவாலயத்துக்குப் போகிறாள். வேறெங்கே போக முடியும்?
ஆனால் மறுநாள், அவ்வளவு சீக்கிரம் அவள் வீட்டை விட்டுப் போகவில்லை. நான் இன்னும் அவளோடு இருக்கிறேன். அவள் உணவு மேசை மீது காஃபி, புதிய ரோல்கள் போன்றவற்றை வைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் காலையில் கடைக்கு விரைந்து சென்று அவற்றை வாங்கி வந்திருக்கவேண்டும். அவளுடைய அந்த சிறு அபார்ட்மெண்ட்டை விறகுப்புகை மற்றும் காஃபியின் நறுமணம்நிறைத்தது.
ஆனால் நான் பயணித்துக்கொண்டேயிருக்கவேண்டும். என் இலக்கான, பால்டிக் கடற்கரையிலிருக்கும் என் ஆதர்ச எழுத்தாளர் தாமஸ் மன்னின் பழைய வீடு இருக்கும் நிடா (Nida) நகரை அடைய இன்னும் பல மைல்கள் பயணம் செய்யவேண்டும். இப்பயணத்தில் நான் எழுதிக்கொண்டிருக்கும் நாடகத்தையும் நான் எழுதி முடிக்கவேண்டும். சீக்கிரம் கிளம்பவேண்டும். இடம் கேட்டு வழிப்பயணம் செய்து வேகமாகப் போக முடியாது. மேலும் ஆகஸ்ட் இறுதியில் நான் மாஸ்கோவுக்குத் திரும்பி, சானடோரியத்திலிருக்கும்என் மகனைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.
என் மகனுக்கு ஆஸ்த்மா நோய் இருக்கிறது. என்னுடைய கணவர், ஒரு வருடம் முன்பு, அக்டோபரில் தன்னுடைய முப்பத்தியிரண்டாவது வயதில் இறந்துவிட்டார். அவருடைய கடைசி ஆறு வருடங்கள் பக்கவாதத்தில் கழிந்தது. இறுதி நாட்களில் அவர் ஏசுவைப் போல் இளைத்திருந்தார்..
யத்வீகா சங்கடத்தோடு என் கையை முத்தமிடுகிறாள். என் அம்மாவும் எப்போதும் என் கையையும், என் மகன்களின் கையையும் முத்தமிடுவாள். நான் யத்வீகாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். நாங்கள் இருவரும் சேர்ந்து அழுகிறோம்.
ட்ராம் வண்டி என்னை நகருக்கு வெளியே நெடுஞ்சாலைக்குக் கொண்டு செல்கிறது. நான் மீண்டும் ஒரு பாலத்துக்கருகில் வழியாய் வருபவர்கள் என்னைக் கூட்டிக் கொள்ளக் காத்திருக்கிறேன். ரயில் பயணம் செய்யுமளவுக்குப் பணம் இல்லை.
சுதந்திரம், ஆறு வருட மருத்துவமனை வாழ்வின்பின் காதைச் செவிடாக்குமளவுக்கு சுதந்திரம். இன்னும் பத்து நாட்கள் இந்த சுதந்திரம் நீடிக்கும். பிறகு மீண்டும் தினப்படி வாழ்க்கை. அப்போது நான் என் குழந்தை, என் மீட்பன், என் செல்வத்த்தைக் கட்டியணைப்பேன். அதேநேரம், யத்வீகா தன் அறையின் வெறுமையில் தனிமையில் இருப்பாள், ஒரு பட்டுப்போன மரத்தின் வாடிய கிளையைப் போல.
18.04.2011 – நியூயார்க்கர் இதழில் பிரசுரமானது.
ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தது – Anna Summers
[இக்கதையை எழுதிய ல்யூட்மிலா பெத்ரூஷெஃப்ஸ்கா குறித்தும், கம்யூனிஸத்தால் ஒடுக்கப்பட்ட எழுத்தாளர்களைக் குறித்தும் ரமேஷ் ராமன் எழுதிய ‘நசுக்கப்படும் குரல்வளைகள்’ என்ற கட்டுரையை இதே இதழில் படிக்கலாம்.]