இப்போது பிரபலமான புகைப்படக் கலைஞராக இருக்கும் என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில், அவர் இதுவரை எடுத்துக்கொண்டதிலேயே கஷ்டமான அசைன்மெண்ட் என்னவென்று கேட்டேன். “1997-இல் கோவை குண்டுவெடிப்புகள் நடந்த சமயம். அப்போது நான் சொந்தமாக ஸ்டுடியோ எதுவும் வைத்திருக்கவில்லை. புகைப்படங்களை விற்பதில்தான் வருமானம் வந்துகொண்டிருந்தது. அதனால் freelance புகைப்பட இதழாளராக வேலை செய்துகொண்டிருந்தேன். கோவையிலேயே இருந்ததால் சம்பவ இடங்களுக்கு விரைவிலேயே சென்றுவிட முடிந்தது. அந்தக் கூச்சலையும், சிதறிக்கிடந்த செருப்புகளையும், ரத்தத் தெறிப்புகளையும், கண்ணாடிச் சில்லுகளையும் பார்த்தபோது என் நெஞ்சே வெடித்துவிடும் போல இருந்தது. என்ன முயற்சித்தும் என்னால் view finder வழியாக அந்தக் காட்சிகளைப் பார்க்க முடியவில்லை. ஒரு குரூரமான மனிதத் துயரத்தை நானே இயக்கிக் கொண்டிருப்பது போல் உணர்ந்தேன். புகைப்படங்களை எடுக்காமலே திரும்பிவிட்டேன்” என்றார்.
குண்டுவெடிப்புகள், போர்கள், இயற்கைச் சீற்றங்கள், பேரழிவைத் தரக்கூடிய விபத்துகள் போன்றவை ஒருவர், இருவர் என்றில்லாமல் பெரும் மக்கள் திரளையே பாதிக்கக் கூடியவை. அதுவரை நடந்து கொண்டிருந்ததொரு அமைதியான வாழ்க்கையைப் புரட்டிப் போடக்கூடியவை. இப்படிப்பட்ட ஒவ்வொரு நாச நிகழ்வுக்கும் பின்னால், ஒவ்வொரு காரணி இருக்கிறது. ஹிரோஷிமா, நாகசாகியைப் போல ஒரு தேசத்தலைமை தன் பலத்தைப் பரீட்சித்துப் பார்க்க விழையும் ஆர்வத்தில் விளைபவையாக இருக்கலாம். ஒரு சில தனிமனிதர்களின் கைப்பிடியில் லட்சக்கணக்கான மனித உயிர்கள் இருக்கும் நிலைக்கு நம் உலகம் வந்திருப்பதை அழுத்தந்திருத்தமாகக் காண்பித்தவை இந்த இரு அணு வெடிப்புகள்.
கொள்கை சார்ந்த காரணங்களுக்காக இல்லாமல் தனிமனிதர்களின் அஜாக்கிரதையால், முன்னெச்சரிக்கையின்மையால் கூட பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாக நேரிடுகின்றது. வாகன ஓட்டுனர்கள், மாலுமிகள், விமான ஓட்டிகள் இவர்களெல்லாம் எந்நேரமும் படு எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள். வெகு சமீபத்தில் கூட, விமான ஓட்டியின் கவனக்குறைவால் நிகழ்ந்த மங்களூர் விபத்து பல உயிர்களைப் பலி வாங்கியது. விபத்து நேர்ந்தால் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் ஒன்றைக் கூட பின்பற்றாத BP நிறுவனத்தின் எண்ணெய்க்கசிவு மூலம் கடல்வாழ் உயிரினங்கள் அடையும் பாதிப்பைக் குறித்துச் சென்ற சொல்வனம் இதழில் கூட படித்திருக்கலாம்.
வேதியியல் தொழிற்சாலைகள், அணுமின் கூடங்கள், கரிப்பொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவை வெகு தீவிரமான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவை. இவற்றில் ‘மனிதப் பிழை’ என்பற்கு வாய்ப்பே இல்லை. சமீபத்தில் நம் ஊடகங்களில் அதிக அளவில் அடிபட்டதொரு ’மாபெரும் இந்திய துயரமான’ போபால் விஷவாயுக் கசிவும் பல்லாயிரக்கணக்கான இந்திய உயிர்கள் மீது கிஞ்சித்தும் மதிப்பில்லாத, படு அசட்டையானதொரு நிர்வாகத்தால், சில தனி மனிதர்களின் அஜாக்கிரதையால் நிகழ்ந்ததுதான்.
1984-ஆம் வருடம் டிசம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு, 3-ஆம் தேதி அதிகாலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரிலிருந்த யூனியன் கார்பைட் என்ற, பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து, மீத்தைல் ஐசோசயனைட் என்ற விஷவாயு கசியத் தொடங்கியது. அந்த விஷவாயுவின் தாக்குதலில் உடனடியாக உயிரிழந்தவர்கள் அரசாங்கக் கணக்குப்படியே கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர். ஒரு கோடி துகளில் ஒரே ஒரு துகள் மீத்தைல் ஐசோசயனைட் இருக்கும் விஷவாயுவை சுவாசித்தாலே நெஞ்சுக்கூடு வலிக்கும்; கண்ணெரிச்சல் வரும்; மூச்சுத்திணறல் ஏற்படும். அந்த துரதிர்ஷ்ட நாளன்று 42000 கிலோகிராம் மீத்தைல் ஐசோசயனைட் விஷவாயு கசிந்து காற்றில் கலந்தது.
“இரவு பன்னிரண்டரை மணிக்கு ரூபியின் இருமல் சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தேன். தெருவிளக்கின் அரைகுறை வெளிச்சத்தில், எங்கள் அறையில் ஒரு வெண்மேகம் நிரம்பிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். வெளியே, மக்களின் ஓலம் கேட்டுக் கொண்டிருந்தது. ‘ஓடு, ஓடு’ என்று அவர்கள் கத்திக்கொண்டிருந்தார்கள். மோசின் இருமத் தொடங்கினாள். நானும் இருமத் தொடங்கினேன். ஒவ்வொரு மூச்சிழுப்பும் நெருப்புக்குள் மூச்சு விடுவதைப் போல இருந்தது…” என்பது இந்த விபத்தில் நேரடியாகப் பாதிப்படைந்த ஆஸிஸா சுல்தான் என்ற பெண்மணியின் வாக்குமூலம்.
கிட்டத்தட்ட 25 வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டதால் ஊடகங்கள் இந்த விஷவாயுக்கசிவை மீண்டும் நினைவு கூர்ந்து பல செய்திப்படங்களையும், ‘இப்போது என்ன செய்ய வேண்டும்?’ என்ற மானுட அக்கறையின் மகத்துவங்களையும் கொட்டிக் கொண்டிருந்தன. அவற்றிலெல்லாம் தவறாமல் இடம்பெற்றிருந்ததொரு புகைப்படம், கழுத்துவரை மூடப்பட்டு, முகம் மட்டும் தெரியும் ஒரு சிறு பெண் குழந்தையின் சடலம்.
இப்புகைப்படத்தை எடுத்தவர் ரகு ராய்.
இன்று இந்தியாவெங்கும் பிரபலமான புகைப்படக் கலைஞர். இவரை ஆதர்சமாகக் கொள்ளாத புகைப்பட இதழாளரே இல்லை எனலாம். சர்வ தேசப் புகைப்படக் கலைஞர் யாரிடமும், ‘உங்களுக்குத் தெரிந்த இந்தியப் புகைப்படக்கலைஞர் யார்?’ என்றால் அவர் சொல்லக்கூடிய பதில் பெரும்பாலும் ‘ரகு ராய்’ என்பதாக இருக்கும். புகைப்படக் கலையில் தன்னிகரற்ற மாமேதையாகக் கருதப்படும் ஹென்றி கார்ட்டியே-ப்ரஸ்ஸனால் பரிந்துரைக்கப்பட்டு சர்வதேச புகைப்பட நிறுவனமான ‘Magnum Photos’-இல் இடம்பிடித்தவர். 1942-ஆம் ஆண்டு பிறந்த இவர் இந்தியாவின் பல பத்திரிகை நிறுவனங்களிலும் தலைமைப் புகைப்படக்கலைஞராகப் பணியாற்றியிருக்கிறார். [அவற்றில் ‘இந்தியா டுடே’ பத்திரிகைக்காகவே இன்றுவரை பொதுவெளியில் அறியப்படுகிறார்.]
அடிப்படையில் இவர் ஒரு புகைப்பட இதழாளர். பல நாட்டு நடப்புகள், அரசியல் நிகழ்வுகள், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் இவற்றைக் காட்சிப்படுத்தியவர். இவருடைய பல புகைப்படங்கள், குறிப்பாக தன்னில் லயித்தபடி கண் மூடிப் பாடும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புகைப்படம், சுருட்டுப்புகைக்கு நடுவே தன்னுடைய மேலாதிக்கம் வெளிப்படும்படி அமர்ந்திருக்கும் பால் தாக்கரே போன்றவை வெகு பிரபலமானவை.
க்ரீன்பீஸ் அமைப்புக்காக போபால் விபத்து நடந்த மறுநாளே, இன்னொரு புகைப்படக்கலைஞருடன் (Pablo Bartholomew) அங்கே சென்ற ரகு ராய் தொடர்ந்து சில நாட்கள் தங்கியிருந்து அங்கே புகைப்படங்களை எடுத்தார். “பத்திரிகையாளர்களும், புகைப்படக்கலைஞர்களும் நச்சுப்புகையாலும், விஷ வேதிப்பொருட்களாலும் பாதிப்படைய நிறைய வாய்ப்புகள் இருந்தன. அப்படிப் பார்த்தால் எந்த அசைன்மெண்ட்டிலுமே ஏதோ ஒரு ஆபத்து இருக்கத்தான் செய்கிறது” என்கிறார் ரகு ராய்.
அதிலும் விஷவாயுக் கசிவுக்கு அடுத்த நாள் அங்கே அதிக அளவில் செய்தியாளர்களும், புகைப்படக்கலைஞர்களும் வரவில்லை. வெகு சொற்பமான பேரே அதைப் பதிவு செய்தனர். பெரிய அளவில் வீடியோ பதிவுகள் கூட செய்யப்படவில்லை. அதனால் ரகு ராய், பாப்லோ இருவரின் பங்களிப்பும் வெகு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. விஷவாயுக்கசிவுக்கு அடுத்த நாள் ஊரெங்கும் குவிந்த சடலங்களைக் கிடைத்த வெட்டவெளிகளில் புதைத்துக் கொண்டிருந்தார்கள். முறையான சடங்குகள் செய்யவோ, இடம் தேடிப் புதைக்கவோ கூட முடியாமல் இடுகாடுகள் நிரம்பி வழிந்தன.
“ஒரு மயானத்தைக் கடந்து கொண்டிருந்தபோது அக்காட்சியைப் பார்த்தோம். பல பிணங்களைப் புதைத்துக் கொண்டிருந்தார்கள். அவற்றுக்கு நடுவே இந்தச் சிறுமியின் சடலமும் புதைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆறேழு படங்கள் எடுத்திருப்பேன். முகத்தை மூடும் முன் கடைசியாக ஒரு முறை ஒரு படத்தை எடுத்துக் கொண்டேன். அந்த முகத்திலிருந்த உணர்ச்சி போபால் துயரத்தின் மொத்த அவலத்தையும் ஒரு கதை போலச் சொல்லும் ஒன்று என எனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அந்தத் தருணம் புதைக்கப்பட்டு, மொத்த நிகழ்வும் என்றென்றைக்கும் மூடப்படுவதை நான் விரும்பவில்லை” என்று சொல்கிறார் ரகு ராய்.
உண்மைதான். இன்று போபால் துயரத்தின் மாபெரும் ஆவணங்கள் ரகு ராயும், பாப்லோவும் எடுத்த புகைப்படங்கள். அதிலும் இந்தச் சிறுமியின் முகம் போபால் துயரத்தின் முகம் போல அறியப்படுகிறது. விஷவாயுக்கசிவின் இருபதாம் ஆண்டு நாளை முன்னிட்டு 2004-இல் இச்சம்பவத்தின் போது எடுத்த புகைப்படங்களை உலகெங்கிலும் காட்சிப்படுத்தினார் ரகு ராய். அதில் கிடைத்த வருவாயின் பெரும்பகுதியை இத்துயர சம்பவத்தில் வீடுகள், உடைமகளை இழந்து அரசாங்க உதவித்தொகையும் கிடைக்காத மக்களுக்குக் கொடுத்தார்.
சென்ற மாதம், இத்துயரம் நடந்த இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து விஷவாயுக் கசிவு குறித்து போடப்பட்ட வழக்குகள் தீர்ப்பு வந்தது. அதன்படி யூனியன் கார்பைடின் எட்டு முன்னாள் அதிகாரிகள் மீது கவனக்குறைவாக இருந்து கசிவுக்குக் காரணமாக இருந்தவர்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்குத் தண்டனை இரண்டாண்டுகள் ஜெயிலில் கழிக்க வேண்டும் என்பது. அதாவது கிட்டத்தட்ட 15,000 பேர் உயிரைப் பலி வாங்கிய நிகழ்வுக்குக் காரணமானவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை இரண்டு வருடங்கள் அவர்கள் ஜெயிலில் இருக்க வேண்டும் என்பது! இத்தனைக்கும் சம்பவம் நடப்பதற்கு சில மாதங்கள் முன்பே இத்தொழிற்சாலையில் இத்தகைய விபத்து நடப்பதற்கான வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டு, சில பரிந்துரைகள் தரப்பட்டன. அப்பரிந்துரைகள் இதே நிறுவனத்தின் அமெரிக்கத் தொழிற்சாலையில் மட்டும் நிறைவேற்றப்பட்டன. இந்திய உயிர்கள் என்றால் அவ்வளவு அசட்டையும், பொறுப்பின்மையும் இருந்திருக்கிறது இவர்களுக்கு!
இவர்களுக்காவது இரண்டாண்டுகள் தண்டனை வழங்கினார்கள். சம்பவம் நடந்தபோது யூனியன் கார்பைடின் சேர்மனாக இருந்த வாரன் ஆண்டர்சன் மீதும் ‘குற்றம் சாட்டப்பட்டுத் தலைமறைவானவர்’ என்றொரு புகார் இருந்தது. ஆனால் தீர்ப்பில் அவரைக் குறித்து எதுவுமே சொல்லப்படவில்லை. இச்சம்பவம் நடந்தபின் இந்தியா வந்த ஆண்டர்சன் மீது பலரும் குற்றம் சாட்டியபோதும், அவரால் அமெரிக்காவுக்கு எளிதாகத் திரும்பிச் செல்ல முடிந்தது. இந்திய அரசிலிருந்தே அவரை உடனடியாக அமெரிக்கா திரும்பிச் செல்லும்படி கேட்டுக் கொண்டதாகவும் சொல்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கைநீட்டி பேச்சை திசைமாற்றினார்கள். இப்போது ஊடகங்கள் ஒரு ஃபாஷன் மாடல் ஒருவரின் தற்கொலையைக் குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றும் யூனியன் கார்பைடின் செயல்படாத தொழிற்சாலையில் இருக்கும் மீத்தைல் சயனைடு கொஞ்ச கொஞ்சமாகக் கசிந்து நிலத்தடி நீரை விஷமாக்கிக் கொண்டிருக்கிறது என்று குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
இப்படி ஊடகங்கள் எளிதில் விலைக்கு வாங்கப்பட்டுவிடும் சூழலில்தான் தேசிய அவலங்களை மலினப்படுத்தாமல், வக்கிரப்படுத்தாமல் பதிவு செய்யும் ஆவணங்கள் முக்கியமான தேவையாகின்றன.
என் புகைப்படக்கலைஞரான நண்பரின் மனத்துயரம், போபால் விஷவாயுக்கசிவு சோகங்களைப் பதிவு செய்யும்போது ரகு ராய்க்கு ஏற்படவில்லையா? அதற்கு அவரே பதில் சொல்கிறார்:
“ இப்படிப்பட்ட துயர நிகழ்வுகளின்போது, நீங்கள் ஒரு மருத்துவராகவோ, சமூக சேவகராகவோ இல்லாமல் வெறும் புகைப்படக்கலைஞராக இருக்கும்போது, அங்கு நடக்கும் துயரத்தையும், வலியையும், பேரிழப்பின் ஒவ்வொரு அங்குலத்தையும் பதிவு செய்வதில்தான் கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் உலகுக்கு உண்மையைச் சொல்ல முற்பட வேண்டும். கேமராவைத் தூக்கிப்போட்டுவிட்டு, ஒரு காயத்தைச் சரி செய்ய ஓட முடியாது. நீங்கள் மருத்துவர் இல்லை. நீங்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது. நீங்கள் செய்யக்கூடிய வேலையை வேறு பலரால் செய்ய முடியாது. நீங்கள் அதைச் செய்தேதான் தீர வேண்டும், ஏனென்றால் வேறு யாரும் அதைச் செய்யப்போவதில்லை!”
இழப்பின் வலியையும், துயரத்தையும் அருகிலிருந்து பார்த்தவர் ரகு ராய். நீதிமன்றத் தீர்ப்பு வந்தபிறகு அவரளித்ததொரு பேட்டியில் அவருடைய துயரமும், மனக்கசிப்பும், தீர்ப்பின் அவலத்தையும் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
“ஒரு அமெரிக்கன் கொல்லப்படுவதைக் குறித்து எனக்குக் கிஞ்சித்தும் கவலை இல்லை. அவர்களால் முதல் வாரத்திலேயே எட்டாயிரம் பேரும், மொத்தமாக 25,000 பேரும் இறந்திருக்கிறார்கள். என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்? தேசிய நலன் கருதி ஆண்டர்சனைத் தப்பிக்க விட்டதாகக் கூறுகிறார்கள். அவர்கள் அடிமைகள். அதனால்தான் அவர்களால் இப்படியெல்லாம் பேசமுடிகிறது. இதை ஒரு பதில் என்று கூட யாராலும் சொல்லமுடியுமா என்ன? காலனிய அடிமையாக இருந்ததின் மனநிலையையே இவர்களுடைய பேச்சு காட்டுகிறது” என்று காட்டமாகக் கூறுகிறார் ரகு ராய்.
ரகு ராய் எடுத்த புகைப்படத்தில் இருப்பவர் (குழந்தையைப் புதைத்துக்கொண்டிருப்பவர்) யாரென்று அவர் கேட்டுவைத்துக்கொள்ளவில்லை. யாரும் அக்குழந்தைக்கு இன்னும் உரிமை கொண்டாடிக் குரலெழுப்பவில்லை. அதனால் அக்குழந்தையும், அதன் குடும்பமும் யாரென்று இன்னும் அடையாளம் கண்டுகொள்ளப்படவில்லை.
“குழந்தைகள் நம் வாழ்வின் மென்மையான பக்கங்கள். வேறெதை விடவும் அவர்களே நம் மனதின் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்புபவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டதொரு அப்பாவிக்குழந்தை, கண்களைத் திறந்தபடி, பாதி உயிருடன் இருப்பது போலவும், பாதி இறந்ததைப் போலவும் இருக்கும் நிலையில் புதைக்கப்படும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. ‘கடவுளே! அக்குழந்தையின் கண்கள் திறந்திருக்கின்றனவே. அக்குழந்தை உயிரோடிருக்கிறதா, இறந்துவிட்டதா?’ என்று அப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் கேட்கத் தோன்றுகிறது” என்கிறார் ரகு ராய்.
இறந்து போன ஆன்மாக்களின் சாட்சியாக ரகுராய் எடுத்த அந்த புகைப்படத்தின் கண்கள் நம்மைப் பார்த்தபடியே இருக்கின்றன.
One Reply to “கண்கள்”
Comments are closed.