கதைக்களன் – ஓர் உரையாடல்

தனிப்பட்ட வேலையாக பெங்களூர் வந்திருந்த ஜெயமோகனோடு பேசிக்கொண்டிருந்தபோது கதைக்களன்களைக் குறித்த ஒரு உரையாடல் நடந்தது. இந்த உரையாடலின் தொகுப்பு வடிவம் இது. யதார்த்தப் புகைகதைகளின் முக்கியமான கூறு கதை நடக்கும் களம். உலகெங்கிமிருக்கும் பல எழுத்தாளர்களின் படைப்புகளில் மனிதர்களைக் காட்டிலும் கதைக்களமே ஆன்மாவாக இருந்திருக்கிறது. ஜெயமோகன் தன்னுடைய படைப்புகளில் கதைக்களனின் முக்கியத்துவத்தையும், பிற எழுத்தாளர்களின் கதைக்களன்களையும் குறித்து இந்த உரையாடலில் பகிர்ந்து கொள்கிறார்.

ஜடாயு: ஜெயமோகன்,  உங்கள் அபுனைவுகள் (non-fiction) பரந்த வீச்சு கொண்டதாக இருக்கின்றன.  உங்களது பற்பல அனுபவங்கள்,  பயணங்களின் சுவடுகள் அவற்றில் தென்படுகின்றன.. ஆனால் உங்கள்  புனைவுப் படைப்புகளை ஏன் திரும்பத் திரும்ப நாஞ்சில் நாட்டுப் பகுதியிலே அமைக்கிறீர்கள்? ஒரு கட்டத்துக்கு மேல் படித்ததையே மீண்டும் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறதே?  நாவல் என்ற பெரும் கதை மட்டுமல்ல, உங்களது பல சிறுகதைகளும் கூட  அப்படித் தான் இருக்கின்றன.

jemo-in-dharasuramஜெயமோகன்: நான் ஒரு கட்டுரை எழுத வேண்டுமென்றால் வெறும் தகவல்கள் மட்டுமே போதும். என் வாழ்க்கையோடு நேரடியாகத் தொடர்பில்லாத பல விஷயங்களைப் பற்றி, ஆழமான, செறிவான கட்டுரைகளை வெறும் தகவல்கள் மூலமாகவே எழுதி விட முடியும். ஆனால் புனைவெழுத்து அப்படிப்பட்டது அல்ல. வாழ்பனுபவம் அதற்கு மிக முக்கியமான தேவை. அந்த வாழ்பனுபவத்தை என்னுடைய சொந்த வாழ்க்கையிலிருந்து மட்டுமே நான் பெற்றுக் கொள்ள முடியும். அப்படிப் பார்க்கையில், என் வாழ்வோடு கலந்துவிட்ட என் மண்ணிலிருந்தே என் படைப்புகள் உருவாகின்றன. அப்படியிருப்பதே நேர்மையான படைப்பாக இருக்க முடியும் என நான் நினைக்கிறேன்.

உதாரணமாக என் படைப்புகளில் பனைமரத்தைப் பற்றிய குறிப்பையே பார்க்க முடியாது. திரும்பத் திரும்ப தென்னைமரங்களைப் பற்றித்தான் பேசுவேன். அதனால் எனக்குப் பனைமரத்தைக் குறித்து எதுவும் தெரியாது என்ற அர்த்தம் இல்லை. எவ்வளவோ விஷயங்கள் பனைமரத்தைக் குறித்து என்னால் எழுத முடியும். ஆனால் என்னுடைய களச்சூழலில் பனைமரத்தை நுழைத்தால் அது சரியாக வராது. செயற்கையாக இருக்கும்.

தஸ்த்தாவெஸ்கியும், டால்ஸ்டாயும் திரும்பத் திரும்ப ஒரே இடத்தைப் பற்றியே எழுதியிருப்பார்கள். தஸ்தாவெஸ்கி திரும்பத் திரும்ப St.Petersburg-ஐயே களனாகக் கொண்டு எழுதினார். அதிலும்  ஆறு தெருக்களைத் தாண்டிச் செல்லவேயில்லை. இப்படி இருக்கும்போது சில படிமங்கள் மீண்டும், மீண்டும் வருவது தவிர்க்க முடியாதது. உதாரணமாக இந்த ரஷ்ய மேதைகளின் பல படிமங்கள் மீண்டும், மீண்டும் வருபவை. டால்ஸ்டாய் குதிரைகளைக் குறித்து திரும்பத் திரும்ப எத்தனையோ எழுதியிருக்கிறார். இந்தப் படிமங்கள் ஒரு செவ்வியல் படைப்பின் முத்திரைகளாக அமைந்துவிடுகின்றன. அந்த எழுத்தாளனின் ஆன்மக்கூறுகள் என்று கூட சொல்லலாம். என்னுடைய கதைக்களனும், படிமங்களும் திரும்பத் திரும்ப வந்தாலும் கதைகள் வெவ்வேறு.

சேதுபதி: உண்மைதான். இந்த விஷயத்தில் நான் உங்களுடன் பெரிதும் ஒத்துப் போகிறேன். வெ.சா தன் விமர்சனங்களில் திரும்பத் திரும்பச் சொல்வதும் ஒரு படைப்பனுபவத்தின் நேர்மை, உண்மையைக் குறித்துதான். அப்படி சொந்த வாழ்விலிருந்து எழும் படைப்புகளையே அவர் உண்மையான கலைப்படைப்புகள் என்கிறார். உதாரணமாக, சா.கந்தசாமியின் சாயாவனம் வெறும் எழுத்துத்திறனைத்தான் முன்வைக்கிறதே ஒழிய, அதில் வாழ்வனுபவம் இல்லை என நிராகரிக்கிறார்.

ஜடாயு: உங்கள் கூற்றுப்படி பார்த்தால், படைப்புகளின் களங்கள் இருப்பிடங்களாகவே ஆக முடியும் என்றாகிறதே? பயணங்கள், புதிய இடங்கள் தரும் அனுபவங்களை வைத்து படைப்புகளை எழுத முடியாதா? பெரிய பயணியான உங்கள் படைப்புகளில் நீங்கள் பார்க்க நேர்ந்த புதிய இடங்களையோ, அனுபவங்களையோ குறித்து எதுவும் படிக்க முடிவதில்லையே?

ஜெயமோகன்: இந்தப் பயண அனுபவங்களை, புதிய சந்திப்புகளை என் படைப்புகளில் நிச்சயம் நீங்கள் பார்க்கலாம். ஆனால் அது நிகழும் களனாக என் சொந்த மண்ணையே, எனக்கு நன்கு பரிச்சயமான இடத்தையே வைத்துக் கொள்கிறேன். புதிய இடங்களைக் களனாக வைத்து வெகு அரிதாகத்தான் நல்ல படைப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.

சேதுபதி: பயண எழுத்தாளரான பால் தெரோ (Paul Theroux) அப்படிப்பட்ட அரிதான சில நல்ல நாவல்களை எழுதியிருக்கிறார். ஆனால் சிறந்த பயண எழுத்தாளரான பிகோ ஐயர் எழுதியிருக்கும் Abandon என்ற ஒரே ஒரு நாவல், பயணியின் அனுபவத்தைக் காட்டுவதாக அமைக்கப்பட்டிருந்தாலும் படு செயற்கையாகவும், தட்டையாகவும் அமைந்திருந்தது. ஜான் அப்டைக் தன்னுடைய ”பெக்” தொடர்களில் ஒரு குறுநாவலை யூகோஸ்லோவியாவில் அமைத்திருந்தார். சமீபகால பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை பிற ஐரோப்பிய நாடுகளில் நடப்பதாக அமைத்துக்கொள்வது ஒரு ஃபாஷனாக இருக்கிறது. மார்ட்டின் அமிஸின் சமீபத்திய நாவல் ‘The Pregnant Widow’ இத்தாலியிலும், டைபர் ஃபிஷரின் ‘Under the frog’ கிழக்கைரோப்பாவிலும் நடைபெறுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

ஜடாயு: ஆனால் அசோகமித்திரன், தன் வாழ்வின் சிறு பகுதியை மட்டுமே கழிக்க நேர்ந்த செகந்திராபாத்தைக் களனாகக் கொண்டு, ’பதினெட்டாவது அட்சக்கோடு’ என்ற சிறந்த நாவலை எழுதியிருக்கிறாரே?

ஜெயமோகன்: இதைக் குறித்து தமிழினி வெளியீடாக வந்திருக்கும் என்னுடைய அசோகமித்திரன் திறனாய்வுப் புத்தகத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். அசோகமித்திரனின் மனம் இங்கே மிகவும் வித்தியாசமாக இயங்குகிறது. சென்னையின் மத்தியதர வாழ்க்கையில் வெறும் துயரங்களையும், கசப்புகளையும் மட்டுமே எழுதும் அவர், செகந்திராபாத் வாழ்க்கையை ருசியுள்ள, சுவையான ஒன்றாகச் சித்தரிக்கிறார். செகந்திராபாத்தின் சந்திரசேகரனுக்கு வாழ்க்கையில் பல விஷயங்களில் உற்சாகம், நகைச்சுவை உணர்வு எல்லாமே இருக்கிறது. ஆனால் சென்னை வாழ்க்கை அப்படிப்பட்டதாக இருக்கவில்லை. வயதான மனிதர்கள், சிறு குழந்தைப் பிராயத்தை நினைத்து ஏங்குவதைப் போன்ற விஷயம்தான் இது. இதைக்குறித்து அசோகமித்திரனிடமே பேசியிருக்கிறேன்.

சென்னையில் இருந்து எழுதும்போதும் அவரும் ஒரு சிறிய எல்லைக்குள்ளிருந்துதான் எழுதுகிறார். அவருடைய கதைக்களம் திநகர், மாம்பலம், போன்ற பகுதிகளையே மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறது. ரங்கநாதன் தெரு மிகப்பெரிய நிகழ்வாக உருமாற்றம் அடைந்தபோதும் அவர் அவற்றைத் தொடவேயில்லை. சிறந்த சங்கீத ரசிகராகவும், நுணுக்கங்களைக் குறித்து அறிந்தவராக இருந்தாலும் அவற்றைத் தன் படைப்புலகில் கொண்டுவரவேயில்லை.

ஜடாயு: இல்லை, அவருடைய திரையுலகம் தொடர்பான படைப்புகளில் வடபழனியைச் சுற்றி எழுதுகிறாரே?

ஜெயமோகன்: திரையுலகம், ஸ்டுடியோ போன்றவற்றைத்தான் அங்கு அமைத்துக் கொள்கிறாரே ஒழிய, தன் படைப்புகளில் பிற சென்னைப் பகுதிகளில் சந்துகள், பூங்காக்கள் குறித்து எழுதியதைப் போல, வடபழனிப்பகுதியைக் குறித்து அவர் எழுதவில்லை.

சேதுபதி: மீண்டும் வெ.சாவைத்தான் சுட்ட வேண்டியிருக்கிறது. “தி.ஜானகிராமன் டில்லிக்குப் போனபோது தன் கையோடு கும்பகோணத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார். தன் மனதிலிருந்த அந்தக் கும்பகோணத்தில்தான் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார், அதைக் குறித்துதான் எழுதினார்” என்று சொல்லியிருப்பார் வெ.சா.

ஜடாயு: ஆனால் தி.ஜா சென்னையிலும் சில கதைக்களன்களை அமைத்திருக்கிறாரே?

சேதுபதி: இல்லை. அவருடைய சென்னை கதைக்களன் வெறும் கதை நடைப்பதற்கான ஒரு இடம்தான். அது அவருடைய கும்பகோணம், தஞ்சைக் கதைக்களன்கள் போல ரத்தமும், சதையுமாக சித்தரிக்கப்படுவதில்லை. இப்படிக் கறாராகப் பார்த்தால் இரு கலைஞர்கள், உற்று நோக்கும் பறவை, பத்ம வியூகம் போன்ற ஜெயமோகனின் சில சிறுகதைகள் நாஞ்சில்நாட்டில் அல்லாமல் வேறு கதைக்களன்களில் நிகழ்பவை.

அர்சுலா லெகுவின் போன்ற எழுத்தாளர்கள், முழுக்க முழுக்க கற்பனையான ஒரு நிலப்பரப்பை உருவாக்கி, புராணத்தன்மையான புனைவுகளை எழுதுகிறார்கள். லா.ச.ரா கூட ஒரு சிறுகதையை (‘பச்சை’ என நினைக்கிறேன்) கொஞ்சம் கூட சுய அனுபவம் இல்லாமல் முற்றிலும் கற்பனையாக புராணத்தன்மையோடு எழுதியதாகக் கூறுகிறார். அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? இப்படிப்பட்ட படைப்புகளில் கதைக்களன் என்பதின் முக்கியத்துவம் என்ன?

கங்கை கொண்ட சோழபுரத்துக்கருகில் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு
கங்கை கொண்ட சோழபுரத்துக்கருகில் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு

ஜெயமோகன்: நீங்கள் சொன்ன உதாரணத்தில் என் ‘கொற்றவை’ நாவலையும் வைக்கலாம். அது முழுக்க முழுக்க மித்தாலஜிக்கலான இடத்தில் நடப்பது. அது எந்த நிஜ நிலப்பரப்பையும் பிரதிபலிக்கவில்லை. விஷ்ணுபுரத்தைக் கூட எனக்கு அறிமுகமான பொதிகை மலை, தென் தமிழ்நாட்டில்தான் வைக்கிறேன். ஆனால் கொற்றவை முழுக்க முழுக்க படிமங்கள், ஏற்கனவே சொல்லப்பட்ட உருவகங்களைத் (images) தொகுத்து அதிலிருந்து ஒரு புனைவைக் கட்டியெழுப்பும்  ஒன்று.  இப்படி உருவகங்கள், குறியீடுகள் வழியே புராணத்தன்மையோடு சொல்லப்படும் கதைகளுக்கு, நிஜமான கதைக்களன் அவசியமில்லை. அர்சுலா லெகுவின் கதைகளும் இப்படிக் குறியீடுகள் வழியே சொல்லப்படும் படைப்புகளே.

சேதுபதி: பயணங்கள் வழியே கதை சொல்லுவது சாத்தியமில்லை என்றீர்கள்.

ஜெயமோகன்: இல்லை. எனக்கு அது உவப்பானதாக இல்லை என்றுதான் சொல்கிறேன். முழுக்க முழுக்க சுவாரசியமான வாசிப்புக்குத் தேவையான எழுத்துகள் பயணங்களை முன்வைத்து எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் என் படைப்புகளில் அதைத்தாண்டிச் செல்ல வேண்டும் என்பதை முக்கியமான விஷயமாக முன்வைக்கிறேன்.

சேதுபதி: நாஞ்சில்நாடனின் எழுத்துகள், முக்கியமாக ‘எட்டுத்திக்கும் மதயானை’ நாவலைக் குறித்து உங்கள் கருத்து என்ன?

ஜெயமோகன்: ‘எட்டுத்திக்கும் மதயானை’யில் தென் தமிழ்நாட்டிலிருந்து பம்பாய் வரை பல பகுதிகள் வந்தாலும், அவர் அந்த புதிய நிலப்பகுதிகளைப் பற்றிப் பேசுவதில்லை. புதிய இடத்தில் ஒரு மனிதன் சந்திக்க நேரும் அகச்சிக்கல்கள், அவன் வழியாகத் தெரியும் உலகைக் குறித்துமே அவர் எழுதுகிறார். அவருடைய பிற படைப்புகள் அவருக்கு நன்கு அறிமுகமான பம்பாய், நாஞ்சில் நாடு இவற்றைக் கதைக்களனாகக் கொண்டவை.

மனிதர்கள் புலம்பெயரும்போது வெகு தீவிரமான அகச்சிக்கலுக்கு ஆளாகிறார்கள். திடீரென்ற தனிமை, புதிய சூழல் இவை, அதுவரை மனிதனின் மனதில் மூடிக்கிடந்த புனைகதையின் வாசலைத் திறந்து விடக்கூடும். ஏற்கனவே க்ரியேட்டிவ் எழுத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் புலம்பெயரும்போது எழுதமுடியாமலும் போகலாம்.

சேதுபதி: சில எழுத்தாளர்கள், அசோகமித்திரனின் மனதிலிருந்த செகந்திராபாத், தி.ஜாவின் மனதிலிருந்த கும்பகோணம் போல, தங்கள் மண்ணுடனான உறவை, ஊரை மனதிலேயே வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் பாரதிமணியை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, ‘உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் நான் போய்விடுவேன். ஆனால் நான் பிறந்து வளர்ந்த பார்வதிபுரத்துக்கு மட்டும் செல்லும் தைரியம் எனக்கில்லை. என் மனதிலிருக்கும் அந்த இயற்கையின் செழுமையோடு கூடிய பார்வதிபுரம் வேறு. இப்போது ப்ளாட் போட்டு விற்கப்பட்டுக் கொண்டிருக்கும் பார்வதிபுரம் வேறு. என் மனதிலிருக்கும் பார்வதிபுரத்தின் பிம்பம் கலைவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது’ என்றார்.

ஜெயமோகன்: ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய தண்டனை அவன் வாழும் இடத்திலிருந்து இடம்பெயர்க்கப்படுவதுதான். அப்படி இடம்பெயரும்போது, படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண் திடீரென்று அடைக்கப்பட்டதுபோல் பெரும்பாலான படைப்பாளிகள் உணர்வார்கள். ரஷ்யாவில் கம்யூனிஸ சர்வாதிகாரத்தின் கீழ் பல எழுத்தாளர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும் பலர் நாடு கடத்தப்பட்டார்கள். நிறைய பேர், “அப்படி என்ன எழுத்தாளர்களை சித்திரவதைப்படுத்திவிட்டோம், வெறுமனே நாடு கடத்தினோம். அவ்வளவுதானே?” என்று கேட்பார்கள். ஒரு எழுத்தாளனை நாடு கடத்துவது அவனைக் கொல்வதை விட சித்திரவதையளிக்கும் தண்டனை. இதனால்தான் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த பல எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி போன்ற வெகு சிலரே தொடர்ந்து எழுதியபடி இருக்கிறார்கள்.

(புகைப்படங்கள்: சேதுபதி அருணாசலம்)

One Reply to “கதைக்களன் – ஓர் உரையாடல்”

Comments are closed.